Skip to content
Home » நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #20 – வீராதி வீரன்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #20 – வீராதி வீரன்

ஒரு கிராமத்தில் மாரப்பா என்பவர் வசித்து வந்தார். அக்கிராமத்தில் வசிக்கும் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த மாடுகளை ஓட்டிச் சென்று மேய்த்துவிட்டு வருவதுதான் அவர் தொழில். அவருடைய அப்பாவும் மாடு மேய்க்கும் தொழிலைத்தான் செய்தார். தாத்தாவுக்கும் அதுதான் தொழில். பரம்பரை பரம்பரையாகவே அவர்கள் அத்தொழிலைச் செய்துவந்தனர்.

அந்தக் கிராமத்தில் வசித்துவந்த விவசாயிகள் அவர்களை மாடு மேய்ப்பவர்கள்தானே என அலட்சியமாக நினைக்காமல் தக்க மதிப்புடன் நடத்திவந்தனர். அந்தக் குடும்பம் வசிப்பதற்கு கிராமத்தின் எல்லையில் ஒரு குடிசையைக் கட்டிக் கொடுத்திருந்தனர். 

மாரப்பாவுக்கு இரண்டு பெண்களும் ஓர் ஆணும் என மூன்று பிள்ளைகள் இருந்தனர். பெண் பிள்ளைகள் பருவ வயதை அடைந்ததும் அடுத்தடுத்த கிராமங்களில் மாடு மேய்க்கிற குடும்பங்களில் பொருத்தமான மாப்பிள்ளையைத் தேடி திருமணம் செய்துவைத்துவிட்டார் மாரப்பா.

அவருடைய மகன் பெயர் கரியப்பா. சின்ன வயதாக இருந்தபோதே அவனைத் தன்னோடு அழைத்துச் சென்று மாடு மேய்ப்பதில் இருக்கும் நுட்பங்களைக் கற்பித்தார். மாடுகளோடு பழகவும் அவற்றின் அசைவுகளைக் கொண்டு அவற்றின் பிரச்சினைகளைத் தெரிந்துகொள்ளும் நுட்பத்தையும் சொல்லிக் கொடுத்தார். அப்பாவோடு சேர்ந்து அவன் நல்ல மாட்டுக்காரனாக வளர்ந்தான். அவனுடைய உலகம் மாடுகளைச் சுற்றியே அமைந்துவிட்டதால் மாடுகளுக்கு அப்பால் அவனுக்கு எதுவுமே தெரியாது. உலக ஞானம் என்பதே அவனுக்கு இல்லாமல் போய்விட்டது.

மாரப்பா முதுமைப்பருவம் எய்தியதும் அவரைக் குடிசையிலேயே ஓய்வெடுக்க வைத்துவிட்டு,  மாடு மேய்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டான் கரியப்பா. காலையில் எழுந்ததும் வீட்டில் இருக்கும் பழைய சோற்றைச் சாப்பிட்டுவிட்டு மாடு மேய்க்கும் கோலை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிடுவான். எல்லா வீடுகளுக்கும் சென்று மாடுகளை ஓட்டிக்கொண்டு ஊர் எல்லையில் இருக்கிற காட்டை நோக்கி அழைத்துச் செல்வான். 

அது ஒரு மலையை ஒட்டிய காடு. கண்ணுக்கு எட்டிய தொலைவு வரைக்கும் ஒருபுறம் வயல்வெளி இருந்தது. காட்டை ஒட்டிய பகுதி என்பதால் அந்த நிலம் மிகவும் செழிப்பாக இருந்தது. கிராமத்தைச் சேர்ந்த பலர் அந்த வயல்வெளியில் தானியங்களை விதைத்துப் பயிரிட்டு அறுவடை செய்வது வழக்கம். இன்னொரு புறத்தில் பெரிய புல்வெளி இருந்தது. அந்தப் புல்வெளியில்தான் கரியப்பா மாடு மேய்த்துவந்தான். 

ஊரைக் கடப்பது வரையில் மாடுகளை ஓட்டிக்கொண்டு பாட்டு பாடிக்கொண்டே அவற்றின் பின்னாலேயே செல்வான் கரியப்பா. அதற்குப் பிறகு மனித நடமாட்டம் இல்லாத இடம் தொடங்கியதும் ஏதாவது ஓர் எருமையின் முதுகில் ஏறி உட்கார்ந்துகொண்டு ’ஹாய் ஹாய்’ என்று ஆனந்தமாக எருமையின் முதுகில் தட்டித் தாளம் போட்டபடி செல்வான்.  எருமையின் முதுகில் உட்கார்ந்து செல்வது அவனுக்கு யானை மீது ஏறி சவாரி செய்வதுபோல இருக்கும். அந்த மாதிரியான நேரங்களில் தன்னை ராஜாவாக நினைத்துக்கொண்டு தோள்களை மிடுக்காக வளைத்து வளைத்து அக்கம்பக்கம் திரும்பிப் பார்த்துக்கொண்டே செல்வான். வாய்க்கு வந்த சொற்களையெல்லாம் இணைத்து பாட்டாகக் கட்டி ஆனந்தமாகப் பாடுவான். இருபக்கங்களில் அடர்த்தியாக வளர்ந்திருக்கும் மரங்களையெல்லாம் தன்னை வரவேற்பதற்காக வணங்கி நிற்கும் மனிதர்களாக நினைத்துக்கொண்டு மானசீகமாக அவற்றுக்கு வணக்கம் சொன்னபடி தனக்குத்தானே புன்னகைத்தபடி செல்வான். 

ஒருநாள் நள்ளிரவில் ஆறேழு யானைகள் கூட்டமாக காட்டைவிட்டு வெளியே வந்தன.  எதிரில் கதிர்முற்றி விளைந்து நிற்கும் நெல்வயலைப் பார்த்துவிட்டு, வயல்களை நோக்கி நெருங்கி வந்தன. ஒவ்வொரு யானையும் ஒவ்வொரு மூலையில் வயல்வெளிக்குள் இறங்கி நெற்கதிர்களை இழுத்துப் பறித்துத் தின்னத் தொடங்கின. ஒரு மணி நேரத்தில் மொத்த வயல்காட்டையும் நாசமாக்கிவிட்டன. 

நிரம்பிய வயிற்றோடு வயலைவிட்டு வெளியேறும் சமயத்தில் ஒரு யானை வயல்வெளியை ஒட்டி மேடாக இருந்த வரப்பில் தடுக்கி பொதேரென்று கீழே விழுந்தது. அந்த வரப்பின் மீது கதிர்கள் சாய்ந்திருந்ததால் யானையின் பார்வைக்கு அந்த வரப்பு தெரியவில்லை. 

அந்த யானை விழுந்த இடத்தில் ஒரு பெரிய கூர்மையான பாறை இருந்தது. அந்தப் பாறையில் யானையின் தலை நேரடியாக மோதியதால் அந்த இடத்திலேயே யானை மயங்கி விழுந்து இறந்தது. யானை விழுந்ததைப் பார்த்ததும் பிற யானைகள் அந்த இடத்துக்கு வந்து, விழுந்துவிட்ட யானையை எழுப்பி நிற்கவைக்கப் பெரிதும் முயற்சி செய்தன. ஆனால் அவற்றின் முயற்சிக்குப் பலன் கிடைக்கவில்லை. கீழே விழுந்திருந்த யானையின் உடலில் அசைவில்லாததைப் பார்த்த பிற யானைகள், அந்த யானை தூங்கத் தொடங்கிவிட்டது என நினைத்துக்கொண்டன. அதனால் அந்த யானையை அங்கேயே விட்டுவிட்டு குளத்துக்குச் சென்று நீரருந்தின. அதற்குப் பிறகு காட்டுக்குள் திரும்பிச் சென்று மறைந்தன. 

மறுநாள் பொழுது விடிந்தது.  வயற்காடு வரைக்கும் ஒரு நடை வந்து சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுத் திரும்புவதைத் தினசரிக்கடமையாகக் கொண்டிருந்த ஒரு விவசாயி வழக்கம்போல வயல்வெளிக்கு வந்தான். அங்கிருந்த வயல்கள் முழுதும் ஏதோ யுத்தம் நடைபெற்ற பூமியைப்போல சீரழிந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான். விளைந்து சாய்ந்திருந்த கதிர்களெல்லாம் நாசமாக்கப் பட்டிருப்பதைப் பார்த்து ’ஐயோ ஐயோ’ என்று வாய்விட்டுக் கூவினான். வயலை நோக்கி வேகமாக ஓடினான். 

அப்போதுதான் வயலுக்கு நடுவில் கதிர்களுக்கிடையில் ஒரு யானை படுத்திருப்பதைப் பார்த்தான். அந்த யானைதான் வயல்வெளியில் புகுந்து எல்லாவற்றையும் நாசமாக்கியிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டான். தின்ன முடியாமல் தின்றுவிட்டு நடக்கமுடியாமல் வயல்வெளிக்கு நடுவிலேயே அந்த யானை படுத்துத் தூங்குகிறது போலும் என அவன் நினைத்தான். அதே நேரத்தில் யானையின் முன்னால் ஒரு தனி ஆளாகச் சென்று நிற்கும் அளவுக்கு அவனுக்குத் தைரியம் இல்லை. அருகில் சென்று  ஆடுமாடுகளை விரட்டுவதுபோல சூசூ போபோ என்று விரட்டவும் அவனுக்கு நடுக்கமாக இருந்தது. எழுந்ததும் வேகம் கொண்டு தன்னைப் பார்த்ததும் தும்பிக்கையாலேயே இழுத்துத் தாக்கினால் என்ன செய்வது என்று நினைத்து நடுங்கினான். அதனால் யானையை நெருங்காமல், சிறிது தொலைவிலேயே நின்று நடுக்கத்தோடேயே அந்த யானையை வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தான்.

அங்கேயே நின்றுகொண்டிருப்பதற்குப் பதிலாக ஊருக்குள் சென்று தெரிவித்து, துணைக்கு ஆட்களை அழைத்துவரலாம் என்றொரு எண்ணம் அவன் நெஞ்சில் எழுந்தது. உடனே காலம் தாழ்த்தாமல் ஊரை நோக்கி ஓடினான். போன வேகத்தில் எல்லோரிடமும் தகவலைச் சொல்லி, பார்வையில் பட்ட ஆட்களையெல்லாம் திரட்டிக்கொண்டு மீண்டும் வயல்வெளிக்குத் திரும்பி வந்தான். எல்லோரும் ஆளுக்கொரு கோலை எடுத்துக்கொண்டு வயல்வெளிக்கு ஓடிவந்தார்கள். அனைவரும் சேர்ந்து யானையை அடித்து விரட்டியடித்து விடலாம் என்றுதான் அவர்கள் நினைத்தார்கள். ஆனால் வயலுக்கு நடுவில்  யானையைப் பார்த்ததும் அவர்கள் கால்கள் தாமாகவே தயங்கி நின்றுவிட்டன.

‘அசந்து தூங்கற யானையை நாம இப்ப எழுப்பினா, அதுக்கு ஆத்திரம் அதிகமாயிடும்.’

‘நெல்ல இழுக்கறமாதிரி நம்மையும் இழுத்து அடிச்சா என்ன செய்யமுடியும்?’

‘நல்லா யோசிச்சிட்டு கிட்ட போகலாம், இருங்க.’

இப்படியே ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு தயங்கித்தயங்கி நின்றார்களே தவிர ஒருவரும் யானைக்கு அருகில் செல்லவில்லை. உயிர்பயம் அவர்களைத் தடுத்தது.

‘ஒரு வேலை செய்யலாம். இப்படி ஒரு யானை வயலுக்குள்ள புகுந்து நாசம் செஞ்சிட்டு நடக்கமுடியாம, எழுந்திருக்கமுடியாம படுத்துக் கெடக்குதுன்னு அரண்மனைக்குப் போய் நம்ம ராஜாகிட்ட தகவல் கொடுக்கலாம்.  ஏராளமான படையும் சேனையும் வச்சிருக்கறவரு அவரு. உடனே அவுங்கள அனுப்பிவச்சி நமக்கு உதவி செய்வாரு.’

யாரோ ஒருவர் அச்சத்தில் நடுங்கிக்கொண்டிருந்த பிறரிடம் ஆலோசனை சொன்னார். உடனே, அந்த ஆலோசனையை மற்ற விவசாயிகளும் ஏற்றுக்கொண்டனர். 

‘சரி, நம்ம எல்லாருடைய சார்பா நீயே போய் ராஜாவைப் பார்த்து தகவலைச் சேர்த்துட்டு வா’ என்று முதன்முதலில் யானையைப் பார்த்துவிட்டு தகவல் சொன்னவனிடமே அந்தப் பொறுப்பை ஒப்படைத்தனர். வேறு வழி இல்லாமல் அவனும் அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டான்.  ‘சரி, என்கூட யாராவது ஒருத்தர் துணைக்கு வந்தா, ரெண்டு பேரா சேர்ந்து தைரியமா போயிட்டு வருவோம்’ என்று அவன் சொன்னான். உடனே ஊர்க்காரர்கள் அங்கிருந்த இன்னொரு இளைஞனைப் பிடித்து அவனோடு சேர்த்து அனுப்பி வைத்தனர்.

அவர்கள் இருவரும் அரண்மனையை நோக்கி வேகவேகமாகப் புறப்பட்டுச் சென்றனர். அதற்குள் பொழுது நன்றாக விடிந்துவிட்டதால், அந்தப் பகுதியில் நடமாட்டம் தொடங்கிவிட்டது. அங்கே நின்றிருக்கும் கூட்டத்தினர் வழியாக விஷயத்தைத் தெரிந்துகொண்டு தொலைவில் படுத்திருக்கும் யானையை வேடிக்கை பார்த்தனர். வேடிக்கை பார்த்துமுடித்த ஒரு கூட்டம் ஊருக்குள் சென்று இன்னொரு கூட்டத்தை அழைத்துவந்து யானையைப் பார்க்கவைத்தது. ஊருக்குள் யானை புகுந்துவிட்டது என்கிற செய்தி மெல்ல மெல்ல ஊர் முழுக்கப் பரவியது. அக்கம்பக்கத்துக் கிராமங்களைச் சேர்ந்த மனிதர்களும் அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு யானையைப் பார்க்கும் ஆவலோடு திரண்டு வந்தனர்.

அரண்மனைக்குச் சென்ற இருவரும் வாசலில் நின்றிருந்த காவலர்களிடம் வந்த விஷயத்தைச் சுருக்கமாகத் தெரிவித்தனர். யானை ஊருக்குள் புகுந்திருக்கும் செய்தியைக் கேட்டதும் அந்தக் காவலர்கள் தாமதிக்காமல் அவர்களே இளைஞர்களை அழைத்துச் சென்று அரசன் முன்னால் நிறுத்தினார்கள்.

அரசனைப் பார்த்ததும் இளைஞர்கள் தலைதாழ்த்தி  வணங்கினார்கள். 

‘என்ன விஷயமா வந்திருக்கீங்க?’ என்று கேட்டான் அரசன்.

‘நேத்து ராத்திரி நேரத்துல ஒரு காட்டு யானை எங்க வயலுக்குள்ள பூந்து எல்லாப் பயிரையும் நாசம் பண்ணிட்டுது அரசே. அறுவடை செய்யவேண்டிய நேரம். எல்லாமே கூழ்கூழா போயிடுச்சி. செஞ்ச நாசம் போதாதுன்னு அந்த யானை இன்னும் அங்கயே படுத்துகிட்டிருக்குது அரசே. அது தூங்கி எழுந்தா, என்னென்ன நாசமாவுமோ தெரியலை. எல்லாரும் உயிரை கையில புடிச்சிட்டு அங்க நிக்கறாங்க அரசே. நீங்கதான் எங்கள இந்த ஆபத்துலேர்ந்து காப்பாத்தணும்.’

கண்ணீரோடு அவர்கள் சொன்னதைக் கேட்டு அரசன் ஒருகணம் நிலைகுலைந்து போனான். ‘கவலைப்படாதீங்க. நம்ம கஜானாவிலிருந்து எல்லாருக்கும் நஷ்ட ஈடு கொடுக்கச் சொல்றேன்’ என்று ஆறுதல் சொன்னான் அரசன். இருவரும் அரசனைக் கையெடுத்துக் கும்பிட்டனர்.

பக்கத்திலிருந்த அழைப்பு மணியை அடித்தான் அரசன். ஒரு சேவகன் ஓடிவந்து நின்றான். ‘உடனடியா சேனைத்தலைவனை அழைச்சிட்டு வா’ என்று சொல்லி அனுப்பிவைத்தான்.  

சிறிது நேரத்திலேயே சேனைத்தலைவன் வந்து அரசனின் முன்னால் நின்றான். வயல்வெளியில் காட்டு யானை புகுந்து நாசம் செய்திருக்கும் தகவலை அவனிடம் சுருக்கமாகத் தெரிவித்தான் அரசன். 

‘உடனே நீங்க நூறு வீரர்களை அழைச்சிகிட்டு இவுங்க ஊருக்குப் போகணும். முடிஞ்சா, அந்த யானையைப் புடிச்சி சங்கிலி போட்டு கட்டி அரண்மனைக்கு இழுத்துகிட்டு வாங்க. நல்லா பழக்கி, நம்ம யானைப்படையில சேர்த்துக்கலாம். ஒருவேளை புடிக்கமுடியலைன்னா, காட்டுக்குள்ள விரட்டியடிச்சிட்டாவது வாங்க.’

அரசனின் கட்டளையைக் கேட்டதும் ‘இப்பவே கெளம்பறோம் அரசே’ என்றபடி சேனைத்தலைவன் அங்கிருந்து வெளியேறினான். 

‘தைரியமா போங்க. உங்க வாழ்க்கைக்கு எல்லாவிதமான பாதுகாப்புகளும் கொடுக்கப்படும்’ என்று செய்தி சொல்லவந்த இளைஞர்களிடம் ஆறுதலாகச் சொல்லி அனுப்பிவைத்தான் அரசன். 

சிறிது நேரத்தில் நூறு வீரர்களை அழைத்துக்கொண்டு சேனைத்தலைவன் புறப்படுவதற்குத் தயாரானான். அவர்களுக்கு வழிகாட்டும் வகையில் இளைஞர்கள் முன்னணியில் நின்றிருந்தனர். இளைஞர்கள் ஓட்டமும் நடையுமாக கிராமத்தை நோக்கிச் செல்ல, வீரர்களும் அவர்களைப் பின்தொடர்ந்தனர். சேனைத்தலைவன் எல்லோருக்கும் பின்னால் குதிரையில் ஏறி உட்கார்ந்துகொண்டு வந்தான். 

அந்த நேரம் மாடுகளை ஓட்டிக்கொண்டு மேய்ப்பதற்குப் புறப்படுவதற்கான நேரம் என்பதால் கரியப்பா வழக்கமான தன் கைத்தடியோடு வீடுவீடாகச் சென்று தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த மாடுகளை அவிழ்த்து ஓட்டிக்கொண்டு புல்வெளியை நோக்கி நடக்க ஆரம்பித்தான். ஊரில் நடைபெற்ற குழப்பம் பற்றி அதுவரை அவனுக்கு எதுவும் தெரியாது. 

ஊரைக் கடந்ததும் மாடுகளை முன்னால் நடக்க விட்டு, ஓர் எருமையின் முதுகில் ஏறி உட்கார்ந்துகொண்டான். அந்த எருமை அசைந்து அசைந்து நடந்தது. வழக்கம் போல ‘ஹாய் ஹாய்’ என்று செல்லமாக அவனும்  அந்த எருமையை அதட்டிக்கொண்டு வந்தான். எருமைச்சவாரியின் ஆனந்தத்தில் மனம் போல ஏதேதோ சொற்களை இணைத்து மனம்போன போக்கில் பாடலாகப் பாடிக்கொண்டே இருந்தான். 

அப்போது ஒருவரும் எதிர்பாராத வகையில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருந்த ஒரு நாய் அந்த எருமையைப் பார்த்துக் குரைக்கத் தொடங்கியது. அந்த எருமை அதைக் கிஞ்சித்தும் பொருட்படுத்தவில்லை. தன் போக்கில் அமைதியாகவே நடந்தது. கரியப்பாவும் பொருட்படுத்தவில்லை. சிறிது நேரம் குரைத்துவிட்டு அந்த நாய் அடங்கிவிடும் என அவன் நினைத்தான். 

மந்தையாக பின்தொடர்ந்து வந்த ஒருசில மாடுகள் அந்த நாயின் குரலைக் கேட்டு வரிசையிலிருந்து சற்றே விலகி ஓர் ஓரமாக ஒதுங்கி நடக்கத் தொடங்கின. இதனால் மாடுகளின் வரிசையில் ஒரு சின்ன குழப்பம் ஏற்பட்டது. அதைப் பார்த்த கரியப்பா, அந்த மாடுகளை அமைதிப்படுத்தும் வகையில் குரலெழுப்பியபடி இருந்தான். 

மாடுகள் ஒதுங்கி நடந்தபோதும் கூட அந்த நாய் குரைப்பதை நிறுத்தவில்லை. ஏதோ வேகம் கொண்டதுபோல  அவன் சவாரி செய்த எருமையைப் பின்தொடர்ந்து நெருங்கிவந்து குரைக்கத் தொடங்கியது. இடைவிடாத குரைப்பொலி ஏற்படுத்திய உணர்வால், எருமை வழக்கத்தைவிட வேகமாக நடக்கத் தொடங்கியது. அந்த வேகம் நாயை மேலும் சீண்டியது. உடனே இன்னும் கூடுதலாகக் குரலெடுத்துக் குரைத்தபடி எருமையைப் பின்தொடர்ந்தது. நாய் குரைக்கும் சத்தம் உச்சத்துக்குச் செல்லச் செல்ல, எருமையின் வேகம் பெருகிக்கொண்டே சென்றது. 

எருமையின் வேகம் கரியப்பாவுக்கு தொடக்கத்தில் உற்சாகத்தை அளித்தாலும் பிறகு சற்றே கலவரத்தை அளிக்கத் தொடங்கியது. குலுங்கிக் குலுங்கி வேகநடை நடக்கத் தொடங்கிய எருமை தன்னை எங்காவது கவிழ்த்துவிடுமோ என நினைத்தான். அதனால் ஒரு பாதுகாப்புக்காக எருமையின்மீது படுத்துக்கொண்டு கைகளை நீட்டி அதன் கொம்புகளை உறுதியாகப் பிடித்துக்கொண்டான். 

ஒரு கட்டத்தில் நாயின் குரைத்தலைத் தாங்கமுடியாமல் அந்த எருமை மந்தையைவிட்டுப் பிரிந்து ஓடத் தொடங்கியது.  அதைச் சற்றும் எதிர்பார்க்காத கரியப்பா அச்சத்தில் மூழ்கினான்.  எந்த நேரத்திலும் எருமையின் முதுகிலிருந்து நழுவி கீழே விழுந்துவிடுவோம் என நினைத்து அவனுக்கு நடுக்கமாக இருந்தது. உடனடியாக கீழே குதித்துத் தப்பித்துவிட வேண்டும் என்றுதான் அவன் ஆழ்மனம் விரும்பியது. ஆனால் குதிப்பதற்கு அஞ்சி எருமையின் கொம்புகளை மேலும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டான். 

அரசனுக்குத் தகவல் அனுப்பிவைத்த ஊர்க்காரர்கள் வயல்வெளியைச் சுற்றி ஆங்காங்கே நின்றுகொண்டு கதை பேசிக்கொண்டிருந்த இடத்தை நோக்கி எருமை ஓடியது. கூட்டத்தில் இருந்த ஒருவன் ‘அதோ பாரு, ஒரு எருமை இந்தப் பக்கமா ஓடி வருது’ என்றான். இன்னொருவன் ‘எருமை தனியா வரலை. எருமை மேல ஒருத்தன் உக்காந்துகிட்டு சவாரி பண்ணிட்டு வரான்’ என்றான். மற்றொருவன். ‘நல்லா பாருங்கப்பா. அவன் வேற யாரும் இல்லை. நம்ம கரியப்பாதான். மாடோட்டி கரியப்பா. யானை நம்ம  வயல்வெளிக்குள்ள பூந்து நாசம் செஞ்சிட்ட விஷயத்தைக் கேள்விப்பட்டுதான் ஆத்திரத்தோடு வரான் போல. அவன் வர வேகத்தைப் பார்த்தா அந்த யானையை அடக்கி தூக்கி வீசிட்டுத்தான் மறுவேலை பார்ப்பான் போலத் தெரியுது’ என்று வேகமாகச் சொல்லிவிட்டு ஒதுங்கி நின்றான். ‘நூறு மாட்டை மேய்ச்சி கட்டறவனுக்கு ஒரு யானையை அடக்கறது பெரிய வேலையா என்ன? அவன் பெரிய வீராதி வீரன்’ என்று சொன்னான் மற்றொருவன்.

அனைவரும் அவன் வந்துகொண்டிருந்த திசையில் திரும்பிப் பார்த்தார்கள். 

‘ஆமாமா. நீ சொல்றது உண்மை. வெறி புடிச்ச மாதிரி ஒரு வேகத்தோடதான் வரான். ராஜா அனுப்பற படைக்கு இன்னைக்கு வேலையே இருக்காதுன்னு நெனைக்கறேன். இவன் ஒரு ஆளே ஒத்தைக்கு ஒத்தையா நின்னு அந்த யானையோடு மோதி அதுங் கதையை முடிச்சிவைச்சிடுவான் போல இருக்குது’ என்று அனைவரும் ஒருமித்த குரலில் பேசிக்கொண்டனர்.

அந்த நொடியில் எருமை அவர்களைக் கடந்து வயல்வெளிக்குள் பாய்ந்தது. எருமையின் கொம்புகளைப் பற்றியிருந்த கரியப்பா அச்சத்தில் கூவினான். தன் ஊர் ஆட்களைப் பார்த்ததும் தன்னைக் காப்பாற்றும்படி முறையிட்டான். ஆனால் அவன் சொல் எதுவுமே அவர்கள் காதுகளில் விழவில்லை. அவன் ஏதோ முழக்கமிட்டபடி செல்வதாக அவர்கள் நினைத்துக்கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் தத்தம் பேச்சே முக்கியமாக இருந்தது. 

‘ஜெய் சாமுண்டி ஜெய் சாமுண்டின்னு கூவிகிட்டு போறான் பார்த்தியா? இன்னைக்கு யானையை பலி வாங்காம திரும்ப மாட்டான்னு நினைக்கறேன்’

‘என்ன இருந்தாலும் கரியப்பா நம்ம ஊரு பையன். அவனுக்கும் ஊரு பாசம் இருக்கும் இல்லயா?’

நிகழ்வது ஒன்றாக இருக்க, அவர்கள் பேசிக்கொள்வது வேறொன்றாக இருந்தது. கண்ணை மூடி கண்ணைத் திறப்பதற்குள் கரியப்பாவின் எருமை படுத்திருந்த யானையை நெருங்கிவிட்டது. அது ஓடிய வேகத்தில் அந்த யானையின் மீது மோதியது. எருமையின் கொம்புகளைப் பற்றியிருந்த கரியப்பா அக்கணமே வெட்டவெளியை நோக்கி தூக்கி வீசப்பட்டான். எருமை மற்றொரு திசையில் நிலைகுலைந்து திரும்பி ஓடியது. 

தூக்கி வீசப்பட்ட கரியப்பா தரையை நோக்கி இறங்கும் நேரத்தில் ஒரு பிடிமானத்துக்காக கையை நீட்டியபோது அவன் கைக்கு யானையின் தும்பிக்கை கிடைத்தது. உடனே அந்தத் தும்பிக்கையை உறுதியாகப் பற்றிக்கொண்டான். அந்தப் பிடியை விடாமலேயே தும்பிக்கைக்கு அருகிலேயே மயக்கம் வந்து விழுந்தான்.

அந்த நேரத்தில் அரண்மனையிலிருந்து புறப்பட்ட படைவீரர்கள் அந்த இடத்தை நெருங்கிவந்தனர். ‘அதோ, அங்கதாங்க யானை இருக்குது’ என்று இளைஞர்கள் சுட்டிக் காட்டும் நேரத்துக்குச் சரியாக தும்பிக்கையைப் பற்றியபடி கரியப்பா மண்ணில் உருள்வது தெரிந்தது. 

‘பரவாயில்லையே, உங்க ஊருல இவ்வளவு பெரிய வீராதிவீரன் இருக்கறானே. எங்களுக்கு வேலை வைக்காம, அவனே யானையுடைய கதையை முடிச்சிட்ட மாதிரி இருக்குது. ஒரு யானைகூட நேருக்கு நேர் நின்று தைரியமா ஒத்தை ஆளா ஒருத்தன் மோதறான்னா, அது எவ்வளவு பெரிய விஷயம், வாங்க, எதுக்கும் கிட்ட போய் பார்க்கலாம்’ என்றான் சேனைத்தலைவன். எல்லோரும் அந்த யானையை நோக்கி நடக்கத் தொடங்கினர். 

‘வாங்க வாங்க. நல்ல நேரத்துக்குத்தான் வந்தீங்க. எங்க ஊரு மாட்டுக்கார கரியப்பா தைரியமா ஒத்தைக்கு ஒத்தை சண்டை போட்டு அந்த யானையை ஜெயிச்சி கீழ தள்ளிட்டான். அங்க பாருங்க, யானை ஒரு பக்கம், அவன் ஒரு பக்கம் கெடக்கறாங்க.’ 

வயல்காட்டை ஒட்டி நின்றிருந்த ஊர்க்காரர்கள் சேனைத்தலைவனையும் படைவீரர்களையும் வரவேற்றனர். அவர்களோடு சேர்ந்து அனைவரும் யானையை நோக்கி நடந்தனர்.

முதலில் அவர்கள் யானையின் அருகில் சென்று பார்த்தனர். அது கிடந்த கோலத்தை வைத்து அவர்களால் எதையும் புரிந்துகொள்ள இயலவில்லை. சேனைத்தலைவன் அந்த யானையின்  பக்கத்தில் சென்று கண்களைத் தொட்டுத் திறந்து பார்த்தான். தந்தத்தைத் தொட்டு அசைத்துப் பார்த்தான். பிறகு சுற்றியிருந்தவர்கள் பக்கமாகத் திரும்பி உதட்டைப் பிதுக்கி ‘கதை முடிஞ்சிடுச்சி’ என்றான். பிறகு கரியப்பாவின் பக்கம் சென்றான். அவன் கைகள் இன்னும் யானையின் தும்பிக்கையைப் பற்றியிருந்தன. 

‘ரொம்ப தைரியசாலிதான் உங்க கரியப்பா. என்னமோ வாழைக்கன்ன புடிச்சி முறுக்குறமாதிரி தும்பிக்கையைப் புடிச்சி முறுக்கியிருக்கான். அவன் முறுக்கின முறுக்கில அதும் உயிரே போயிருக்குதுன்னா, அவன் கை எவ்வளவு சக்தி உள்ள கையா இருக்கணும். அவன் இந்த ஊருல மாடு மேய்க்க வேண்டிய ஆளே கிடையாது. அவன பேசாம அரண்மனைக்கு அனுப்பி வைங்க. சேனையில சேர்ந்தா நல்ல எதிர்காலம் இருக்குது.’

சொல்லிக்கொண்டே சேனைத்தலைவன் கரியப்பாவுடைய கைகளைத் தும்பிக்கையின் பிடிப்பிலிருந்து மெதுவாக விலக்கினான். மயக்கம் தெளிந்ததும் கண்களைத் திறந்த கரியப்பா தன்னைச் சுற்றி கூடியிருப்பவர்களைப் பார்த்து மிரண்டு எழுந்து உட்கார்ந்தான். எருமை தூக்கி வீசியதும் யானைமீது மோதியதும் மட்டுமே அவன் நினைவில் பதிந்திருந்தன. அந்தக் கணம் நினைவுக்கு வந்ததும் ‘ஐயோ, யானை யானை’ என்று முனகினான். 

‘நீ அதும் தும்பிக்கையை புடிச்சி முறுக்கின முறுக்குல அது எப்பவோ உயிரை விட்டுட்டுது கரியப்பா. மெதுவா எழுந்து உக்காருப்பா. சேனைத்தலைவர் உன்னை படையில சேர்த்துக்கறதா சொல்லியிருக்காரு. கெளம்பு கெளம்பு. இனிமே நீ அரண்மனை ஆளு.’

‘அரைக்காசு ஆனாலும் இனிமே அரண்மனை சம்பளம்.’

‘இனிமே நீ சம்பாதிச்சி வீடு கட்டினா, உன் வீட்டு மாடுகளை மேய்க்கறதுக்கு ஒரு ஆளு வருவான்’

மெல்ல மெல்ல  தன் சுயநினைவுக்குத் திரும்பினான் கரியப்பா. நிகழ்ந்ததனைத்தையும் அவன் ஒருமுறை மனத்துக்குள் தொகுத்துப் பார்த்துக்கொண்டான். தன்னைச் சுற்றியிருப்பவர்கள் அனைவரும் ஏன் இப்படி பேசுகிறார்கள் என்பதை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. தான் சொல்ல வருவதையே அவர்கள் ஏன் காது கொடுத்துக் கேட்க மறுக்கிறார்கள் என்பதையும் அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை.

சேனைத்தலைவனும் வீரர்களும் அப்போதே அவனை அரண்மனைக்கு அழைத்துக்கொண்டு சென்றனர். அவன் வாய்திறந்து எதையாவது சொல்லத் தொடங்கினால் ‘எல்லாம் எங்களுக்குத் தெரியும் கரியப்பா. நீ எதுக்கும் பயப்படாத. ராஜா ஒன்னும் சொல்லமாட்டாரு. எல்லாத்தையும் நாங்க பார்த்துக்கறோம்’ என்று பதில் சொல்லி அவன் வாயை அடைத்தனர். ஊர்க்காரர்கள் சிலரும் அரண்மனையில் என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்துகொள்ளும் ஆவலில் அவர்களைப் பின்தொடர்ந்து நடந்தனர். 

ராஜாவின் முன்னால் கரியப்பாவை அழைத்துச் சென்று நிறுத்தினான் சேனைத்தலைவன். 

‘அரசே, இவன் பேரு கரியப்பா. யானையை அடிச்சிப் புடிக்க நாங்க அந்த ஊருக்குப் போவறதுக்குள்ளயே இவன் அந்த யானையை ஒத்தை ஆளா எதித்து நின்னு அடிச்சிக் கொன்னுட்டான். உண்மையிலயே பெரிய வீரன் இவன். இவனை மாதிரி ஒருத்தன் நம்ம சேனையில இருந்தா ரொம்ப அனுகூலமா இருக்கும்’ என்றான்.

அரசன் அதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தான். ‘இந்த மாதிரியான இயற்கையான வீரர்கள்தான் நம்ம நாட்டுக்குத் தேவை. சேனைத்தலைவனே, நீ நினைக்கிற மாதிரி இவனை இப்பவே சேனையில சேர்த்துக்கலாம்’ என்று அனுமதி கொடுத்தான். அந்த அனுமதிக்கு மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் விதமாக தலைகுனிந்து வணங்கினான் சேனைத்தலைவன்.

அரசன் கரியப்பாவின் பக்கம் திரும்பி ‘இப்பவே நீ நம்ம நாட்டு சேனையில் சேர்ந்துக்கலாம். வீரர்களுக்குன்னு இருக்கற குடியிருப்பிலயே உனக்கும் ஒரு வீடு ஒதுக்கிக் கொடுப்பாங்க. அங்க நீ தங்கிக்கலாம். அதுக்கப்புறம் அரண்மனையிலேர்ந்து மாசாமாசம் சம்பளமும் வாங்கிக்கலாம்’ என்று சொன்னான். கரியப்பாவுக்கு பதில் சொல்ல வாய்ப்பே கிடைக்கவில்லை. அவர்களே பேசிக்கொண்டிருந்தனர். அதனால் ‘நன்றி அரசே. நன்றி அரசே’ என்று ஒன்றுக்கு இரண்டு முறையாக குனிந்து தலைவணங்கி கும்பிடு போட்டுவிட்டுப் புறப்பட்டான்.

மறுநாள் கரியப்பா தன் சொந்த ஊருக்குச் சென்று வயது முதிர்ந்த தன்  பெற்றோரை அழைத்துக்கொண்டு வந்து புதிய குடியிருப்பில் குடியிருக்கத் தொடங்கினான். ஒரே நாளில் தன் வாழ்வின் திசை திரும்பிவிட்டதை நினைத்து அவன் ஆச்சரியத்தில் மூழ்கினான்.

அடுத்த நாள் காலையில் வழக்கம்போல அவனுக்கு விழிப்பு வந்துவிட்டது. மாடுகளை ஓட்டச் செல்லவேண்டுமே என்ற எண்ணம்தான் முதலில் எழுந்தது. சில கணங்களுக்குப் பிறகே தான் படைவீரர்கள் குடியிருப்பில் இருப்பதை அவன் உணர்ந்தான். மாடுகளைப் பார்க்கமுடியாததையும் எருமையின் முதுகில் அமர்ந்து சவாரி செய்யமுடியாததையும் பெரிய இழப்பாக நினைத்து வருத்தம் கொண்டான்.

அப்போது குடியிருப்புக்கு வெளியே ஏதோ ஆரவாரம் கேட்டது. என்னவென்று பார்ப்பதற்காக கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தான் கரியப்பா. அதே நேரத்தில் ஒரு வீரன் அவன் வீட்டு வாசலுக்கு வந்து ‘சீக்கிரம் வீரரே, உடனே தயாராகுங்க. பக்கத்து நாட்டு அரசன் நம் நாட்டு மேல படையெடுத்து வர்ரான். சேனைத்தலைவர் செய்தி அனுப்பியிருக்காரு’ என்று அறிவித்துவிட்டுச் சென்றான். ஒவ்வொரு குடியிருப்புக்கும் சென்று அந்த அறிவிப்பைச் சொல்லிவிட்டு அவன் ஓடுவதைப் பார்க்கமுடிந்தது. 

கரியப்பாவுக்கு யோசிக்கக்கூட நேரமில்லை. உடனே படைவீரனுக்குரிய சீருடையை அணிந்துகொண்டு அவனும் கூட்டத்தோடு கூட்டமாக ஓடினான். அவன் சென்று சேர்வதற்கு முன்பாகவே நூற்றுக்கணக்கான வீரர்கள் அங்கே நின்றிருந்தனர். 

கரியப்பா வருவதை தொலைவிலிருந்தே சேனைத்தலைவன் பார்த்துவிட்டான். உடனே அவனை நோக்கி ‘கரியப்பா, இங்கே பக்கத்துல வா’ என்று அழைத்தான். பின்வரிசையை நோக்கிச் சென்ற கரியப்பா ‘இது என்னடா புது வம்பா இருக்குது?’ என்று நினைத்துக்கொண்டே சேனைத்தலைவனுக்கு அருகில் சென்று நின்றான்.

‘உன் வீரத்தைக் காட்ட சரியான ஒரு சந்தர்ப்பம் அமைஞ்சி வந்திருக்குது கரியப்பா. இதுவரைக்கும் உன் திறமை எப்படிப்பட்டதுன்னு இந்த நாட்டுக்குள்ள மட்டும்தான் தெரிஞ்சி வச்சிருந்தாங்க. இனிமேல, உன் பேரும் புகழும் அடுத்தடுத்த நாடுங்களிலும் பரவப் போவுது’ என்று சொல்லிக்கொண்டே மீசையை முறுக்கிக் காட்டி சிரித்தான் சேனைத்தலைவன்.

‘நம்ம பக்கத்து நாட்டு அரசன் ராமையா இதுவரைக்கும் ஆறு முறை நம்ம நாட்டு மேல படையெடுத்து வந்து தோல்வியடைஞ்சி ஓடிப் போயிருக்கான். எத்தனை தரம் தோத்து ஓடினாலும் வெக்கமே இல்லாத முட்டாள் அவன். இப்ப மறுபடியும் ஆளுங்கள சேர்த்துகிட்டு சண்டைக்கு வந்திட்டிருக்கான்னு ஒற்றர்கள் செய்தி வந்திருக்குது. அவுங்கள நம்ம நாட்டு எல்லையிலயே நிக்க வச்சி தோத்தடிச்சி அனுப்பிவைக்கணும். ஒரு யானையையே தனி ஆளா நின்னு போராடி ஜெயிச்ச ஆளு நம்ம படையில இருக்கான்ங்கற சேதி இதுவரைக்கும் அவனுங்களுக்குத் தெரியாது போல. அந்தத் தைரியத்துலதான் இங்க வரானுங்க. நீ உன் திறமையைக் காட்டி அவனுங்களை அப்படியே துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு ஓட வச்சிட்டு வா.’

அவன் சொல்லிமுடிப்பதற்குக் காத்திருந்த மாதிரி அங்கே சுற்றி நின்றிருந்த வீரர்கள் அனைவரும் ‘கரியப்பா வாழ்க, கரியப்பா வாழ்க’ என்று முழக்கமிட்டனர். யானை விஷயத்தில் என்ன நடந்தது என்று உண்மையை எல்லோரும் அறியச் சொல்லிவிட வேண்டும் என்று உள்ளூர அவன் நினைத்தாலும் சூழல் அதற்கு இடம்தரவில்லை. ‘சரி, நடப்பது நடக்கட்டும்’ என்று அமைதியாக இருந்துவிட்டான். வீரர்களின் முழக்கத்தைத் தொடர்ந்து ‘வீரர்களே, இந்தப் போரில் உங்களை நமது புதிய வீரர் தலைவரா இருந்து வழிநடத்துவார்’ என்று அறிவித்தார். அடுத்த கணமே மீண்டும் வீரர்கள் ‘கரியப்பா வாழ்க, கரியப்பா வாழ்க’ என்று முழக்கமிட்டனர். 

கரியப்பாவுக்கு அருகில் ஒரு குதிரையை அழைத்து வந்தனர். அவன் அந்தக் குதிரை மீது ஏறி உட்கார்ந்துகொண்டான். எருமை மீது உட்கார்ந்து தினந்தோறும் சவாரி செய்தவனுக்கு குதிரை சவாரி ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை. குதிரையைத் தட்டியபடி அவன் முன்னால் நடக்க, படைவீரர்கள் அனைவரும் அவனைப் பின்தொடர்ந்தனர். சேனைத்தலைவன் இன்னொரு குதிரையில் வேறொரு அணியை வழிநடத்தியபடி சென்றான்.

அரைநாள் தொலைவு அவர்கள் நடந்தனர். பகலில் உச்சி வேளையில் அவர்கள் அந்தப் பிரதேசத்தின் எல்லைக்கு அருகில் வந்தனர். அந்த எல்லையை ஒட்டி ஒரு ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அனைவரும் அந்த ஆற்றில் இறங்கி குளிர்ச்சியான நீரை அருந்தி புத்துணர்ச்சி பெற்றனர். 

வெகுதொலைவில் எதிரிநாட்டு வீரர்கள் அணிவகுத்து வரும் ஆரவாரம் கேட்டது. உடனே அனைவரும் தயாரானார்கள்.

கரியப்பா தனக்கு அருகில் நின்றிருந்தவனிடம் நீளமான ஒரு கயிறை எடுத்துக்கொண்டு வருமாறு சொன்னான். பிறகு குதிரை மீது ஏறி உட்கார்ந்தான். தன் இரு கால்களையும் குதிரையின் அடிவயிற்றோடு ஒட்டியபடி வைத்துக்கொண்டு குதிரையோடு தன்னை கயிற்றால் கட்டுமாறு சொன்னான். வீரன் அவ்வாறே செய்தான். அந்தக் கட்டு இறுக்கமாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டு திருப்தியோடு தலையசைத்துக்கொண்டான். பிறகு தன் உடலையும் குதிரையின் முதுகின் மீது சாய்த்துவிட்டு குதிரையின் முதுகையும் தன் முதுகையும் இணைத்துக் கட்டும்படி தன் வீரனிடம் கேட்டுக்கொண்டான். அவனும் அவ்வாறே செய்தான். பிறகு இரு வாள்களைக் கொண்டுவரச் செய்து அவற்றை இரு கைகளிலும் ஏந்தினான். வாளைப் பிடித்த கையையும் கயிற்றைக் கொண்டு கட்டும்படி சொன்னான். அந்த வீரனும் அவன் சொன்னவாறே செய்தான்.

‘கரியப்பா மனசுல ஏதோ ஒரு திட்டம் இருக்குது. இன்னைக்கு பறந்து பறந்து தாக்க நினைச்சிருக்கான் போல. எதிரிக்கூட்டத்துல எத்தனை தலை உருளப் போவுதோ தெரியலை.’

‘ஒரு யானையையே தும்பிக்கையை புடிச்சி முறுக்கி கதையை முடிச்ச ஆளுங்களுக்கு இந்த மனுசனுங்கள அடிச்சி விரட்டியடிக்கிறதுலாம் பெரிய வேலையா என்ன. எல்லாரையும் ஊதித் தள்ளப் போறான் ஊதி.’

‘பாத்துகிட்டே இருங்க. சிதறு தேங்காய் மாதிரி ஒவ்வொருத்தன் உடம்பும் ஒவ்வொரு பக்கம் ஓடி விழப் போவுது.’

‘நம்ம பக்கம்தான் வெற்றி. இப்பவே சொல்றேன். பந்தயம் வச்சிக்கலாமா?’

அருகருகே நின்றிருந்த வீரர்கள் பேசிக்கொள்வது அவன் காதில் விழுந்தன. அவன் யாருக்கும் பதில் சொல்கிற நிலையில் இல்லை. எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டுமே என்கிற பதற்றம்தான் இருந்தது.

அந்த நேரத்துக்குள் கரியப்பா காட்டு யானையை தும்பிக்கையை முறுக்கிக் கொன்ற கதையும் அவனுடைய வீரத்தைப் பாராட்டி அரசன் தன் படைக்குள் அவனைச் சேர்த்துக்கொண்ட கதையும் ராமையாவின் படையினரைச் சென்று சேர்ந்துவிட்டது. ஒருவன் காதில் விழுந்த செய்தி அடுத்தடுத்த நொடிகளிலேயே படை முழுதும் பரவிவிட்டது. சேனைத்தலைவனை எட்டிய செய்தி, அருகில் இருந்த அமைச்சரை எட்டி, அதற்குப் பிறகு அரசன் ராமையாவின் காதையும் எட்டிவிட்டது. உடனே அதைப்பற்றி ஆலோசிப்பதற்காக தன் படை முன்னகர்வதை சிறிது நேரம் நிறுத்திவைக்கச் சொன்னான் அரசன்.

‘அரசே, நாம படையெடுத்துவந்த நேரம் சரியில்லை. வாங்க இப்பவே திரும்பி போயிடலாம். வேற ஒரு நாள் பார்த்துக்கலாம். ஒரு யானையையே தும்பிக்கையை புடிச்சி முறிச்சி சாவடிச்சவனுக்கு நாம எல்லாம் எந்த மூலைக்கு? அந்த அரசன் பக்கத்துல அவன் ஒரு பீமசேனன் மாதிரி நிக்கறான். நம்ம சண்டைக்கு இது பொருத்தமான நேரம் இல்லை. வாங்க, இப்பவே சேனையைத் திருப்பிடலாம்’ என்று பேச்சைத் தொடங்கினான் சேனைத்தலைவன்.

‘நாம ஏற்கனவே இவன் கூட சண்டை போட்டு ஆறு தடவை தோத்திருக்கோம். இந்தத் தடவையாவது ஜெயிச்சிடலாம்னு நெனச்சிருந்தேன். இப்படி ஆயிட்டுதே. நாம இப்படியே திரும்பிப் போனா அவமானமா இருக்காதா?’

‘நம்மள நம்பி இவ்வளவு வீரர்கள் கூட்டம்கூட்டமா வந்திருக்காங்க. அவுங்கள பலி கொடுக்கறது நியாயமா சொல்லுங்க. அவுங்க உயிரைவிட மானம் பெரிசா அரசே?’

நீண்ட நேரம் ஆலோசனை நடைபெற்றது. ‘நாம உடனடியா திரும்பிப் போனா நல்லா இருக்காது. இதுக்கு மேல முன்னேறி போகாம இங்கயே நிப்போம். அவுங்க என்ன முடிவெடுக்கறாங்கன்னு பார்த்துட்டு அதுக்கப்புறம் நாம என்ன செய்யலாம்னு யோசிப்போம்’ என்றான் ராமையா.

‘கரியப்பா மாதிரி ஒரு வீராதிவீரனை வச்சிட்டு அவுங்க நம்மை அடிக்கத்தான் நினைப்பாங்க. பழைய காலம் மாதிரி பேச்சு வார்த்தைக்கு வரமாட்டாங்க.’ என்றான் சேனைத்தலைவன்.

‘நீ சொல்றமாதிரி ஒருவேளை சண்டைக்கு வந்துட்டாங்கன்னு வை, இருக்கவே இருக்குது வெள்ளைக்கொடி. அதை அசைச்சிக் காட்டி எங்களுக்கு சண்டை வேணாம், சமாதானம்தான் வேணும்னு தெரிவிக்கலாம். அப்ப சண்டை தானா நின்னு போகும் இல்லையா?’ என்றான் ராமையா.

ராமையா தான் நினைத்தபடி நடப்பதையே விரும்புகிறான் என்பதைப் புரிந்துகொண்டான் சேனைத்தலைவன். அதனால் அவன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. நடப்பதுபோல நடக்கட்டும் என அமைதியாக நின்றான். ‘சரி  அரசே, உங்க விருப்பம்போல நடக்கட்டும்’ என்று சொல்லிவிட்டு உரையாடலை முடித்துக்கொண்டான்.

ராமையாவின் சேனை முன்னேறி வராமல் ஒரு புள்ளியில் நின்றுவிட்டதைப் பார்த்தான் சேனைத்தலைவன். உடனே தன் கையை உயர்த்தி தன் சேனையையும் நிறுத்தினான். எல்லோரும் அப்படியே நின்றனர். 

‘அந்தப் பக்கத்து ஆளுங்க நின்னுட்டாங்க. பயந்துட்டானுங்கன்னு நெனைக்கறேன். ஆறு தரம் தோல்வியடைஞ்சி ஓடினவங்க ஏன் இப்ப மறுபடியும் வரணும்? ஏன் இப்படி பாதியில நின்னு யோசிக்கணும்? சரியான முட்டாள்ங்க’ என்று சலித்துக்கொண்டான் சேனைத்தலைவன்.

‘அவங்க பக்கத்துலேர்ந்து என்ன செய்யறாங்கன்னு பொறுத்திருந்து பார்க்கலாம் தலைவரே. அதுக்கப்புறம் நாம என்ன செய்யலாம்னு முடிவெடுக்கலாம்’ என்றபடி குதிரையிலிருந்து இறங்கி நின்றான் ஒருவன். அவனைத் தொடர்ந்து எல்லா வீரர்களும் ஒவ்வொருவராக குதிரையிலிருந்து இறங்கி நின்றனர்.

‘சண்டை கிடையாது போல. அப்பாடி. நிம்மதி. பேசாம வீட்டுக்கே திரும்பிப் போவலாம்’ என சில வீரர்கள் அடங்கிய குரலில் பேசிக்கொண்டனர். 

சண்டை இல்லை என்பதைக் கேட்டு கரியப்பாவும் மகிழ்ச்சியடைந்தான். அவன் கால்களும் உடலும் குதிரையோடு கட்டப்பட்டதால் மற்றவர்களைப்போல உடனடியாக அவனால் குதிரையிலிருந்து இறங்கமுடியவில்லை. மற்றவர்கள் இறங்கி தமக்குள் ஓய்வாக உரையாடிக்கொள்வதைப் பார்த்தபடி பொழுது போக்கினான்.

அந்த நேரத்தில் கரியப்பாவுக்குப் பின்வரிசையில் இருந்த வீரன் குதிரையிலிருந்து இறங்கியபோது, நிலை தடுமாறி அவனுடைய குதிரை சற்றே முன்னகர்ந்தது. அதனால் இரு கால்களையும் சமமாக தரையில் ஊன்றி நிற்கமுடியாமல் அந்த வீரனும் தடுமாறினான். தரையில் விழுந்துவிடாமல் இருக்கும்பொருட்டு பிடிமானத்துக்கு அவன் கை அந்தரத்தில் அலைந்தது. அப்போதைக்கு அவன் கைக்கு கரியப்பா அமர்ந்திருந்த குதிரையின் வால் மட்டுமே கிடைத்தது. சட்டென அந்த வாலை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு தன் கால்களை உறுதியாகத் தரையில் ஊன்றினான். 

வால் பற்றி இழுக்கப்பட்டதும் தான் விரட்டப்படுகிறோம் என நினைத்த குதிரை அக்கணமே முன்னோக்கி சீறிப் பாய்ந்து ஓடத் தொடங்கியது. அதை எதிர்பார்க்காத கரியப்பா ஆ என்று அலறினான். அதைப் பார்த்து சேனைத்தலைவன் திகைத்தான். ‘ஆறு தடவை தோத்திருந்தும் புத்தி வராம ஏழாவது தடவையும் சண்டைக்கு வந்திருக்கக்கூடிய ஆள இப்ப விட்டா இன்னொரு தடவையும் வரமாட்டான்னு உறுதியா எப்படி நம்பமுடியும்னு நெனச்சிட்டான் போல நம்ம கரியப்பா. அதனாலதான் ஒத்தைக்கு ஒத்தையா நின்னு அவன் கதையை முடிக்க பொறப்பட்டுட்டான்’ என்று கூறினான். மறுகணமே எல்லா வீரர்களும் ஜெய் சாமுண்டி ஜெய் சாமுண்டி என முழக்கமிட்டபடி மீண்டும் தத்தம் குதிரைகளில் ஏறி அமர்ந்து கரியப்பாவின் குதிரையைப் பின்தொடர்ந்து சென்றனர். 

தம்மை நோக்கி கரியப்பாவின் குதிரை முன்னோக்கிப் பாய்ந்து வருவதைப் பார்த்த ராமையாவின் சேனைத்தலைவன் அச்சத்தில் கூவினான். 

‘அவன் சாதாரணமான ஆளு கிடையாது. ஒரு யானையையே தனி ஆளா நின்னு சாவடிச்சவன். நாம அவன் கையில கிடைச்சா எலும்பை ஒடிச்சி எண்ணி நம்ம கையில கொடுத்துடுவான். ஓடுங்க. ஓடுங்க’ என்று தம் வீரர்களை நோக்கிக் குரல் கொடுத்தான். அக்கணமே அவன் வீரர்கள் தத்தம் குதிரைகளைத் திருப்பிக்கொண்டு ஓட்டம் பிடித்தார்கள். 

என்ன நிகழ்கிறது என்பதை ராமையா தாமதமாகவே புரிந்துகொண்டான். உடனே தன்னிடமிருந்த வெள்ளைக்கொடியை எடுத்து உயர்த்திக் காட்டினான். அங்கிருந்த கலவரச்சூழலில் ஒருவரும் அதைப் பொருட்படுத்தவில்லை. ‘வாங்க அரசே, இங்க நிக்க நிக்க நமக்கு ஆபத்துதான்’ என்று அவனையும் அழைத்துக்கொண்டு ஓடத் தொடங்கினான் சேனைத்தலைவன் . அவர்கள் குதிரைகள் பதினாறு கால் பாய்ச்சலில் கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடி மறைந்தன.

உயிர் பயத்தில் அலறிக்கொண்டே வந்த கரியப்பா தன் குதிரை நின்ற பிறகே அமைதி கொண்டு சத்தத்தை நிறுத்தினான். நேருக்கு நேர் மோத வந்தவர்கள் ஏன் பின்வாங்கி ஓடுகிறார்கள் என்பதை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை.

அதற்குள் சேனைத்தலைவனும் பிற படையினரும் அவனை நெருங்கிவிட்டனர். சேனைத்தலைவன் தன் குதிரையிலிருந்து இறங்கி கரியப்பாவை நோக்கி வந்தான். அதற்குள் ஒரு வீரன் ஓடோடி வந்து கரியப்பாவின் கட்டுகளை அவிழ்த்தான்.

‘உன் துணிச்சலை பாராட்டறேன் கரியப்பா. இனிமேல ராமையா நம்ம நாடு இருக்கிற திசையை திரும்பிக்கூட பார்க்கமாட்டான். அப்படி செஞ்சிட்ட நீ.’ 

சேனைத்தலைவன் கரியப்பாவை முதுகில் தட்டிக் கொடுத்தான். 

‘நாம ஜெயிக்கணும்னு கரியப்பா எப்படி வெறியோடு இருக்கான் பாருங்க’ என்று பேசிக்கொண்டனர் வீரர்கள். 

‘கரியப்பா வாழ்க, கரியப்பா வாழ்க’ என்ற முழக்கம் விண்ணைப் பிளந்தது. திடீரென ஒரு வீரன் ‘வீராதி வீரன் கரியப்பா வாழ்க’ என்று உச்சக்குரலில் பட்டப்பெயரோடு முழங்கினான். அதைக் கேட்டு பிறகும் அந்த முழக்கத்தையே தொடங்கினர். 

என்ன நடைபெற்றது என்பதே புரியாமல் ஓர் அசட்டுப் புன்னகையோடு எல்லோரையும் பார்த்து வணங்கிவிட்டு குதிரையில் ஏறி உட்கார்ந்தான் கரியப்பா. படையினர் அனைவரும் ஊரை நோக்கித் திரும்பினார்கள். 

 

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *