முன்னொரு காலத்தில் மலைப்பகுதியை ஒட்டிய ஒரு பிரதேசத்தை ஓர் அரசன் ஆண்டு வந்தான். அவன் பெயர் சோமப்பா. அவனுக்கு நான்கு ஆண்பிள்ளைகள் இருந்தனர். அவர்களுக்கு முனியப்பா, பங்காரப்பா, ஈஸ்வரப்பா, லிங்கப்பா என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தான் அவன். அரசன் மட்டுமன்றி, அரண்மனையில் பணிபுரிந்த அனைவருமே அப்பிள்ளைகளுடன் பாசத்தோடு பழகினர். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து அந்தப் பிள்ளைகள் கல்வி கற்கும் வயதை அடைந்தனர்.
தன்னுடைய நான்கு பிள்ளைகளும் அந்தப் பிரதேசத்திலேயே சிறந்த அறிவாளிகளாகவும் திறமைசாலிகளாகவும் துணிச்சல் மிக்கவர்களாகவும் விளங்கவேண்டும் என்று சோமப்பா விரும்பினான். அதனால் அரசன் தன் பிரதேசத்தில் வசிக்கும் சிறந்த குருமார்களை அழைத்துவர ஏற்பாடு செய்தான். அவர்களோடு உரையாடி, பரீட்சை செய்து, அவர்களில் எழுத்தறிவைக் கற்பிக்க ஒரு குருவையும் பொது அறிவைக் கற்பிக்க இன்னொரு குருவையும் விற்பயிற்சி, வாள்சுழற்றும் பயிற்சி, மல்யுத்தப் பயிற்சி எனப் போர்க்கலைகளைக் கற்பிக்க மற்றொரு குருவையும் என மூன்று சிறந்த குருமார்களை அரசன் தேர்ந்தெடுத்தான். அரண்மனைக்கு நெருக்கமான பகுதியிலேயே மூன்று குருமார்களும் குடும்பத்தோடு வசிப்பதற்கு ஏற்பாடு செய்துகொடுத்தான். அவர்களுடைய உணவுத்தேவைக்கான எல்லாப் பொருட்களும், அரிசி முதல் பால் வரை, ஒவ்வொரு மாதமும் அவர்களுடைய வீடுகளுக்கு அரண்மனையிலிருந்து சென்றன.
ஒரு நல்ல நாளில் இளவரசர்களின் கல்விப்பயிற்சியும் ஆயுதப்பயிற்சியும் தொடங்கியது. நான்கு பேரும் கல்வி கற்பதில் அளவற்ற ஆர்வம் கொண்டவர்களாக இருந்தார்கள். சொல்லிக் கொடுக்கும் குருமார்களுக்கே இவர்களுக்கு இன்னும் கொஞ்சம் சொல்லிக்கொடுக்க வேண்டும் என தோன்றும் அளவுக்கு பிள்ளைகளுடைய ஆர்வம் இருந்தது. தமக்குத் தெரிந்த எல்லாச் செய்திகளையும் இளவரசர்களுக்குச் சொல்லிக் கொடுத்தனர் குருமார்கள்.
அவர்களுடைய பயிற்சிக்காலம் பதினைந்து ஆண்டுகள் நீடித்தது. அதன் விளைவாக அனைவரும் ஞானவான்களாகவும் நல்ல பண்பாளர்களாகவும் சிறந்த போர்வீரர்களாகவும் விளங்கினர்.
ஒருநாள் நான்கு குருமார்களும் ஒன்றிணைந்து அரசனைச் சந்திக்கச் சென்றனர். அரசன் அவர்களை வரவேற்று இருக்கைகளில் அமரவைத்தான்.
‘என்ன செய்தி? எல்லாரும் ஒன்னா சேர்ந்து வந்திருக்கீங்க?’ என்று கேட்டான் அரசன்.
‘அரசே, ஒரு குரு ஒரு மாணவனுக்குக் கற்பிக்கவேண்டிய எல்லா அம்சங்களையும் நாங்க இளவரசர்களுக்குச் சொல்லிக் கொடுத்துட்டோம். கல்வி ஞானத்தைப் பொறுத்த வரையில் இனிமேல அவுங்களுக்கு கத்துக் கொடுக்க ஒன்னுமில்லை. கொஞ்ச காலம் ஊர் உலகத்தைச் சுத்திவந்தா, உலக ஞானமும் தானா வந்துடும்’ என்று மூத்த குரு சொன்னார்.
‘அப்படியா? அதுக்கு நான் என்ன செய்யணும்?’
‘உங்களுக்குப் பிறகு இந்தப் பிரதேசத்தை நாளைக்கு ஆட்சி செய்யப் போறவங்க அவுங்க. கொஞ்ச காலம் நம்ம பிரதேசத்தைச் சுத்திப் பார்த்து எல்லாத்தையும் நேருல பார்த்து தெரிஞ்சிக்கறது நல்லது. அக்கப்பக்கத்துல இருக்கற பிரதேசங்களுக்கும் போய் அலைஞ்சி திரிஞ்சா, அங்க இருக்கக்கூடிய வாழ்க்கைமுறை என்ன, நீதிமுறை என்னங்கற விஷயங்களையும் தெரிஞ்சிக்கலாம். எல்லா அனுபவங்களும் ஒன்னா சேரும்போது கிடைக்கக்கூடிய ஞானம், எதிர்காலத்துல அவங்களே இந்த அரண்மனையில ஆட்சி செய்ய உக்காரும்போது ரொம்ப பயனுள்ளதா இருக்கும்.’
‘நீங்க சொல்றது நல்ல ஆலோசனை குருமார்களே. நான் நாளைக்கே அவுங்க நாலு பேரையும் அனுபவப் பயணத்துக்கு அனுப்பி வைக்கறேன்.’
அரசன் தன் முடிவை மனமலர்ச்சியோடு குருமார்களிடம் தெரிவித்தான். குருமார்கள் அனைவருக்கும் தக்க சன்மானங்களையும் பொற்காசுகள் அடங்கிய பைகளையும் கொடுத்து கெளரவித்தான். மேலும் ‘நீங்க இந்தப் பிரதேசத்திலேயே தங்கியிருக்கணும். எதிர்காலத்துல என் பிள்ளைகள் ஆட்சி செய்யற சமயத்துல அவர்களுக்கு நல்லது கெட்டது சொல்லி சரியான வழியில நடக்கவைக்க உங்களாலதான் முடியும். என்னுடைய கோரிக்கையை நீங்க ஏத்துகிட்டா எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்’ என்று கேட்டுக்கொண்டான். குருமார்கள் தமக்குள் ஒரு கணம் பேசிக்கொண்டனர். பிறகு அனைவரும் ஒருங்கிணைந்த குரலில் ‘சரி, அப்படியே ஆகட்டும் அரசே’ என்று சொல்லிவிட்டு விடைபெற்றுக்கொண்டனர். அரசனும் அவர்களை வணங்கி விடைகொடுத்து அனுப்பிவைத்தான்.
அன்றைய இரவு அரசனும் இளவரசர்களும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். ஏதேதோ பொது விஷயங்களை முன்வைத்து உரையாடியபடி சாப்பிட்டதால், சாப்பாட்டு நேரம் நீண்டது. உண்டு முடித்து எழுந்தபோது இளவரசர்களிடம் ‘கொஞ்ச நேரம் என்னுடைய அறைக்கு எல்லாரும் வாங்க. உங்ககிட்ட ஒரு செய்தி சொல்லணும்’ என்று கூறிவிட்டு முன்னால் நடந்தார்.
அரசனைப் பின்தொடர்ந்து நான்கு இளவரசர்களும் ஒன்றாக இணைந்து நடந்தனர். ‘என்ன விஷயம்? உனக்குத் தெரியுமா?’ என்பது போல ஒருவரிடம் ஒருவர் கண்களால் கேட்டுக்கொண்டனர். ‘எனக்குத் தெரியாது’ என்பது போல எல்லோருமே உதட்டைப் பிதுக்கிக் காட்டியபடி அவர்கள் அரசனின் பின்னால் நடந்தனர்.
அறைக்குச் சென்றதும் அரசன் தன் இருக்கையில் அமர்ந்தான். அவனைச் சுற்றி நான்கு இளவரசர்களும் நின்றார்கள்.
‘உங்களுடைய குருகுலக்கல்வியும் பயிற்சியும் முழுமையா முடிஞ்சிட்டுதுன்னு உங்க குருமார்கள் சொன்னாங்க. உலக ஞானத்துக்காக நீங்க ஒரு வெளியூர்ப்பயணம் செஞ்சி மக்களை நேருக்கு நேர் பார்த்து பழகிட்டு வந்தா நல்லா இருக்கும்ங்கறது அவுங்களுடைய அபிப்பிராயம். என்னுடைய கருத்தும் அதுதான். ஆறு மாசமோ ஒரு வருஷமோ இந்த உலகத்தை நீங்க சுத்தி வந்தாதான் உங்களுக்கு நேரிடையான அனுபவம் கிடைக்கும். இதைப்பத்தி நீங்க என்ன சொல்றீங்க?’ என்று கேட்டான் சோமப்பா. அவன் பார்வை நான்கு பிள்ளைகள் மீதும் மாறி மாறிப் பதிந்தன.
‘நீங்க சொல்ற ஆலோசனைப்படியே செய்றோம் அப்பா’ என்றான் மூத்த மகனான முனியப்பா.
‘ஏட்டுக்கல்வி மாதிரியே நேருக்கு நேர் பார்த்து தெரிஞ்சிக்கக்கூடிய அனுபவக்கல்வியும் முக்கியம்தாம்பா. அதுதான் எங்க கல்வியை முழுமையாக்கும். நாங்க நாளைக்கே கெளம்பறோம்பா’ என்றான் இரண்டாவது மகனான பங்காரப்பா.
‘நீங்களும் சரி, குருவும் சரி, ரெண்டு பேரும் தெய்வத்துக்குச் சமமானவங்க. நீங்க எதைச் சொன்னாலும் எங்க நல்லதுக்குத்தான் சொல்வீங்க. அது எங்களுக்கு நல்லாவே தெரியும். நாங்க போய்வரோம்பா. நாங்க தயாரா இருக்கோம்’ என்றான் மூன்றாவது மகனான ஈஸ்வரப்பா.
‘இரும்பைக் காய்ச்சி உருக்கி இன்னொரு பொருளை உருவாக்கறமாதிரி அனுபவங்கள்தான் நம்மையெல்லாம் உருக்கித் தட்டித்தட்டி நம்மைத் தகுதியுள்ள ஆளா மாத்துது. உலகப் பயணத்துக்கு எப்ப கெளம்பணும்னு மட்டும் சொல்லுங்கப்பா. நாங்க தயாரா இருக்கோம்.’ என்றான் நான்காவது மகனான லிங்கப்பா.
நான்கு பிள்ளைகளும் தம் விருப்பத்தைப் புரிந்துகொண்டதை ஒட்டி அரசனுக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.
‘நாளைக்கு ஜேஷ்ட மாசத்து கார ஹுன்னிமெ நாள். (ஆனி மாசம் பெளர்ணமி நாள்) நல்ல வேலையைத் தொடங்கறதுக்கு பொருத்தமான நாள்தான். ஆனா, இன்னும் ரெண்டுமூனு நாள்ல மழை தொடங்கிடுமே. எங்கனா மழையில சிக்கி கஷ்டப்படுவீங்களோன்னு நெனச்சாதான் சங்கடமா இருக்குது’ என்றான் அரசன்.
‘எந்த சங்கடமும் வேணாம்பா. எது வந்தாலும் நாங்க தைரியமா பார்த்து சமாளிச்சிக்கறோம். ஒரு நல்ல விஷயத்தைச் செய்யணும்னு நெனைக்கும்போது, அதை உடனடியாக செஞ்சிடறதுதான் நல்லது. நாங்க நாளைக்கே கெளம்பறோம்பா’ என்றான் முனியப்பா. மற்றவர்களும் அந்த முடிவை ஏற்றுக்கொண்டனர். கடைசியில் அரசனும் ஏற்றுக்கொண்டான்.
அடுத்த நாள் காலையில் எழுந்து நான்கு இளவரசர்களும் வழக்கம்போல குளித்துமுடித்து பூஜையறைக்குச் சென்று கடவுளை வணங்கினர். பிறகு அரசனோடு சேர்ந்து அமர்ந்து உணவு உட்கொண்டனர். அரசன் ஒவ்வொருவரிடமும் நூறு பொற்காசுகள் கொண்ட ஒரு பையைக் கொடுத்தான். அவர்கள் அதை வாங்கி தம் உடைகளையெல்லாம் அடுக்கிக் கட்டியிருக்கும் மூட்டைக்குள் வைத்து முடிச்சு போட்டுக்கொண்டனர். பிறகு அரசனின் கால்களிலும் குருமார்களின் கால்களிலும் விழுந்து வணங்கினர். பிறகு அரண்மனையில் கூடியிருந்த அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு அரண்மனையை விட்டு வெளியேறி நடக்கத் தொடங்கினர்.
அவர்கள் எளிய உடைகளை உடுத்தியிருந்தனர். வழியெங்கும் அந்த ஊரைச் சேர்ந்த விவசாயிகள் அந்தப் பெளர்ணமித் திருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். பல இடங்களில் மேள இசை ஒலித்தபடி இருந்தது. பலர் அவர்களை அடையாளம் கண்டுகொண்டு அருகில் வந்து பேச்சு கொடுத்தனர். இளவரசர்களும் அவர்களோடு நெருக்கமாக உரையாடி தம்மிடமிருந்த பொற்காசுகளில் ஒன்றிரண்டை எடுத்து அன்பளிப்பாகக் கொடுத்து வாழ்த்தினர்.
ஓரிரு வாரங்களிலேயே அவர்கள் தம்முடைய பிரதேசத்தின் எல்லைப் பகுதியை அடைந்துவிட்டனர். அதன் பிறகு அந்த எல்லையைக் கடந்து புதிய பிரதேசத்துக்குள் ஊடுருவிச் சென்றனர். அடுத்து சில வாரங்களிலேயே அவர்கள் அந்தப் பிரதேசத்தின் எல்லைகளையும் தொட்டுவிட்டனர். அதன் பிறகு அதே திசையில் வரக்கூடிய மற்றொரு பிரதேசத்துக்குள் சென்றனர். இவ்வாறு புதிய புதிய பிரதேசங்களில் ஊடுருவி நீண்ட காலம் நடந்துகொண்டே இருந்தனர்.
எந்த ஊரிலும் அவர்களை இளவரசர்கள் என அடையாளம் சொல்கிறவர்கள் ஒருவரும் இல்லை. அவர்களும் அதை யாரிடமும் தெரியப்படுத்துவதில்லை. அனைவருக்கும் அவர்கள் நாடோடிகளாகவும் வேலை செய்து பிழைக்கவந்தவர்களாகவும் காட்சியளித்தனர். அந்த எண்ணமே நீடித்திருக்கும் வகையில் அவர்கள் சிற்சில இடங்களில் சின்னச்சின்ன வேலைகளைச் செய்து பொருளீட்டினர். நடந்து செல்லும்போது வழியில் தென்பட்ட ஊர்களின் சத்திரங்களில் தங்கினர். அனைவரோடும் இயல்பாகப் பேசிப் பழகி நட்பைச் சம்பாதித்தனர். எந்த ஊரிலும் அவர்கள் இரண்டு நாட்களுக்கு மேல் தங்கவில்லை. அடுத்த ஊர், அடுத்த ஊர் என சென்றுகொண்டே இருந்தனர்.
புதிய பிரதேசம், புதிய மனிதர்கள், புதிய நிலங்கள், ஏரிகள், குளங்கள், ஆறுகள் என அந்தப் பயணத்தில் பார்த்த ஒவ்வொன்றும் இளவரசர்களுக்கு உற்சாகம் அளிப்பவையாக இருந்தன. சத்திரங்களில் தங்குவதும் புதுப்புது மனிதர்களுடன் உரையாடி அவர்களுடைய சுகதுக்கங்களைத் தெரிந்துகொள்வதும் அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஒருநாள் காலையில் தூங்கியெழுந்ததும், காலைக்கடன்களை முடிப்பதற்காகவும் குளிப்பதற்காகவும் சத்திரத்திற்கு அருகில் இருந்த ஆற்றங்கரைக்குச் சென்றனர். அப்போது எப்போதும் இல்லாதபடி ஆற்றங்கரையில் எண்ணற்றோர் சேர்ந்திருப்பதைக் கண்டு அவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஒருபக்கம் சிலர் ஆற்றில் இறங்கி குளித்துக் கரையேறினர். இன்னொரு பக்கம் சிலர் தன் கால்நடைகளை ஆற்றில் ஆழமில்லாத இடங்களில் நிறுத்தி அவற்றின் மீது தண்ணீரை வாரிவாரி இறைத்து வைக்கோலால் தேய்த்து அழுக்கைப் போக்கிக் குளிக்கவைத்தனர். என்ன கொண்டாட்டம் என்று அவர்களுக்கு முதலில் புரியவில்லை. பிறகு அவர்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்கிற எண்ணத்தில் அப்போதுதான் தம் எருதை ஆற்றுத்தண்ணீரில் இறக்கிக்கொண்டிருந்த ஒரு விவசாயியிடம் ‘என்ன விசேஷம் இன்றைக்கு? என்னைக்கும் இல்லாத அளவுக்கு இன்னைக்கு ஏன் இந்த அளவுக்குக் கூட்டமாக இருக்குது?’ என்று கேட்டான் முனியப்பா.
‘இன்னைக்கு கார ஹுன்னிமெ தம்பி. பெரிய பண்டிகை. மாடுகளுக்குப் படையல் வைக்கணும். அதனாலதான் கூட்டம்’ என்று பதில் சொல்லிவிட்டு தம் எருதின் முதுகை தண்ணீரில் நனைத்து அழுத்தித் தேய்க்கத் தொடங்கினான் விவசாயி.
கார ஹுன்னிமெ என்ற சொல்லைக் கேட்டதும் முனியப்பா தன் தம்பிகள் பக்கமாகத் திரும்பி ‘தம்பிகளா, நாம நம்ம ஊரைவிட்டு வந்து ஒரு வருஷம் ஓடிப் போயிடுச்சி. இந்த அனுபவம் போதும்னு நெனைக்கறேன், நீங்க என்ன நினைக்கறீங்க, சொல்லுங்க’ என்று கேட்டான்.
‘ஒரு வருஷம் ஓடிப் போச்சா? நம்பவே முடியலையே. எங்கயும் நிக்காம நாம போயிட்டே இருக்கறதால நமக்கு காலம் போன வேகம் தெரியலை. ஊருக்கே திரும்பிடலாம்ண்ணே. அப்பாவும் நமக்காக அங்க காத்திருப்பாரு’ என்று மற்ற மூன்று பேரும் சொன்னார்கள்.
சகோதரர்கள் அனைவரும் குளித்துமுடித்து சத்திரத்துக்குத் திரும்பினர். வரும் வழியெங்கும் நகரத்தில் நடைபெற்று வரும் பெளர்ணமிக் கொண்டாட்டத்தை நேருக்கு நேர் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். எல்லாருடைய வீட்டு வாசல்களிலும் மாவிலைத்தோரணம் தொங்கிக்கொண்டிருந்தது.
அடுத்த நாள் காலையிலேயே நான்கு பேரும் அந்தச் சத்திரத்திலிருந்து புறப்பட்டு தம் பிரதேசம் இருக்கும் திசையில் நடக்கத் தொடங்கினர். அந்த ஓராண்டு காலத்தில் தாம் பார்த்த அனுபவங்களையெல்லாம் நினைவுக்குக் கொண்டுவந்து பேசிப்பேசி மகிழ்ச்சியில் திளைத்தனர்.
ஒவ்வொரு நகரத்தையும் கிராமத்தையும் கடக்கும்போதும், அவற்றின் நில அமைப்பும் சுற்றுப்புறங்களும் அமைதியும் தோப்புகளின் காட்சியும் மாறிக்கொண்டே இருந்தன. இயற்கையின் விசித்திரத்தைப்பற்றி தமக்குள் பேசிக்கொண்டே நடந்தனர்.
பல வாரங்களுக்குப் பிறகு ஒரு குன்றை ஒட்டிய பாதையில் நான்கு பேரும் நடந்துசென்றார்கள். குருகுலத்தில் இருந்தபோது ஒருமுறை குரு கேட்ட கேள்வியைப்பற்றியும் அக்கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பதிலைச் சொன்னதைப் பற்றியும் நினைவுபடுத்திப் பேசிக்கொண்டே சென்றார்கள். அவர்களைப் போலவே பல வழிப்போக்கர்கள் அவர்களுக்கு முன்னும் பின்னும் நடந்துசென்றார்கள். அவர்கள் பேசிக்கொண்டு செல்லும் உரையாடல் சத்தமும் எல்லாத் திசைகளிலும் எதிரொலித்தது.
‘தம்பிகளா. இந்தப் பக்கத்துல மாடுகள்தான் நிறைய இருக்குதுன்னு நெனச்சேன். ஆனா இங்க ஒரு ஒட்டகமும் இருக்குதுபோல’ என்று சொல்லிவிட்டு நின்றான் முனியப்பா.
‘என்னண்ணே சொல்ற? இந்த ஊருல ஒட்டகமா?’ என்று கேட்டபடி முனியப்பாவை நெருங்கிவந்து நின்றான் பங்காரப்பா.
‘ஆமாம் பங்காரப்பா, ஆனா அது இந்த ஊரு ஒட்டகமா, அல்லது அடுத்த ஊரு ஒட்டகமான்னு எனக்குத் தெரியாது. அது இந்தப் பக்கமா நடந்து போயிருக்குது. அது நடந்துபோன கால்தடம் தெரியுது’ என்றான் முனியப்பா.
அதற்குப் பிறகுதான் பங்காரப்பாவும் தரையில் பதிந்திருக்கும் காலடிச்சுவடுகளைப் பார்த்தான். ‘நீ சொல்றது உண்மைதாண்ணே. ஒரு ஒட்டகம் போயிருக்கற தடம் தெரியுது. அதனுடைய கழுத்துல ஒரு கயிறு போட்டு கட்டியிருக்கணும்னு தோணுது’ என்றான்.
அதைக் கேட்ட பிறகு ஈஸ்வரப்பாவும் நெருங்கிவந்து நின்று காலடிச்சுவடு நீண்டு செல்லும் பாதையைப் பார்த்தான். பிறகு அவன் ‘கழுத்துல கயிறு கட்டியிருக்குதுங்கறது உண்மைதான். அநேகமா அந்த ஒட்டகம் தன்னைக் கட்டிவச்ச கயித்தை அறுத்துகிட்டு ஓடி வந்திருக்கணும்னு நெனைக்கறேன்’ என்றான்.
அவனுக்குப் பக்கத்திலேயே நின்றிருந்த லிங்கப்பா அந்தத் தடம் நீண்டு போகும் பாதையையே சில கணங்கள் பார்த்துவிட்டு அமைதியாக நின்றான். அதைப் பார்த்த பிற சகோதரர்கள் ‘என்னடா, நீ ஏன் பேசாம இருக்கற? உனக்கு என்ன தோணுதுன்னு சொல்லு’ என்று தூண்டினர். உடனே அவன் தன் தொண்டையைச் செருமியபடி ‘என்னால உறுதியா சொல்லமுடியலை. ஆனாலும் நீங்க எல்லாரும் கேக்கறதால சொல்றேன். அந்த ஒட்டகத்துக்கு இடது கண் பார்வை மட்டும்தான் இருக்குது. வலதுபக்கக் கண்ணு தெரியாதுன்னு தோணுது’ என்றான்.
அவர்களுக்குப் பின்னால் நடந்துவந்த கூட்டத்தில் காணாமல் போன தன் ஒட்டகத்தைத் தேடியபடி வந்தவனும் இருந்தான். அவன் முகம் அகலமாக இருந்தது. பெரிய மீசை வைத்திருந்தான். நான்கு இளைஞர்களும் தமக்குள் உரையாடிய செய்திகள் அந்த மீசைக்காரன் காதிலும் விழுந்தன. தன் ஒட்டகத்தைப் பற்றிய தகவல்களை இந்த வெளியூர் இளைஞர்கள் எப்படி அறிந்திருக்கக்கூடும் என்பது அவனுக்குப் புதிராக இருந்தது. அநேகமாக தன் வீட்டுத் தோட்டத்துக்குள் புகுந்து ஒட்டகத்தை அவிழ்த்துக்கொண்டு திருடிச் சென்றவர்களாகவே அவர்கள் இருக்கவேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது.
இவர்களிடம் நாமாகச் சென்று விசாரித்தால் எதையாவது சொல்லி குழப்பிவிட்டு ஓடிவிடுவார்கள் என்று அந்த மீசைக்காரன் நினைத்தான். ஓட்டமாக ஓடிச் சென்று சிறிது தொலைவில் இருக்கும் அரண்மனையில் இருக்கும் அதிகாரிகளிடம் தெரிவிப்பதுதான் நல்லது என்று அவனுக்குத் தோன்றியது. அதிகாரியின் ஆட்கள் வந்து பிடித்துச் சென்று விசாரிக்கிற விதத்தில் விசாரித்தால் யாராக இருந்தாலும், உண்மையைத் தானாகச் சொல்லிவிடுவார்கள் என மனத்துக்குள் நினைத்துக்கொண்டான். அதனால் அந்த இளைஞர்கள் பக்கம் திரும்பாமலேயே எதையும் காதில் வாங்கிக்கொள்ளாதவன் போல வேகவேகமாக அந்த இடத்தைக் கடந்து அரண்மனை இருக்கும் திசையை நோக்கிச் சென்றான் மீசைக்காரன்.
நீண்ட நேரம் ஒட்டகத்தைப்பற்றிய உரையாடலில் மூழ்கியிருந்த இளைஞர்கள் ‘சரி சரி, நடப்போம் வாங்க’ என்று சொன்னபடியே தொடர்ந்து நடக்கத் தொடங்கினர். வெவ்வேறு வேலைகளுக்குச் செல்லும் ஊர்க்காரர்களும் அந்தப் பாதையில் அவர்களுக்கு முன்னாலும் பின்னாலும் நடந்தார்கள்.
எப்போதோ ஒருமுறை குருகுலத்தில் ஒரு வழிப்போக்கனைப்பற்றி கூறிய கதையை நினைவுபடுத்தி விவரித்துக்கொண்டே நடந்தான் முனியப்பா. எல்லோரும் சுவாரசியமான அக்கதையைக் காது கொடுத்துக் கேட்டபடி வந்தனர்.
சிறிது தொலைவு நடந்ததும் சட்டென்று நின்றான் முனியப்பா. தரையையே கூர்ந்து சில கணங்கள் பார்த்தான். பிறகு ‘தம்பிகளா. இந்தப் பக்கமா யாரோ ஒரு பொண்ணு போயிருக்கா’ என்று சொல்லிவிட்டு நின்றான். அதைக் கேட்டு மற்றவர்களும் அந்த இடத்தில் நின்று கால்தடத்தை உற்று நோக்கத் தொடங்கினர்.
சில கணங்களுக்குப் பிறகு பங்காரப்பா உறுதியற்ற குரலில் ‘நீங்க சொன்னமாதிரி ஒரு பொண்ணு இந்தப் பக்கமா போயிருக்கறது உண்மைதான். சந்தேகமே இல்லை. அநேகமா யாரோ ஒரு செருப்பு தைக்கறவன் பொண்டாட்டியா இருக்கணும்னு எனக்குத் தோணுது’ என்றான்.
எதையும் பேசாமல் மெளனமாக எல்லாவற்றையும் காது கொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்த ஈஸ்வரப்பா ‘அவ சாதாரண பொண்ணு கிடையாது. புள்ளைத்தாச்சி பொண்ணா இருக்கணும்’ என்றான்.
மூன்று பேரும் லிங்கப்பாவின் பக்கம் திரும்பினர். அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதைக் கேட்க அவர்களுக்கு ஆவலாக இருந்தது. லிங்கப்பா முன்னாலும் பின்னாலும் பார்வையைத் திருப்பி இன்னொருமுறை கால் தடங்களைப் பரிசோதித்துவிட்டு ‘நீங்க சொல்றது எல்லாமே உண்மை. அதுக்கு மேல ஒரு விஷயம் சொல்றேன், கேட்டுக்குங்க. அவ இந்தப் பக்கம் சும்மா வரலை. புருஷன் கூட சண்டை போட்டுகிட்டு கோவிச்சிகிட்டு வந்திருக்கா’ என்றான்.
அவர்களுக்குப் பின்னால் நடந்துவந்த கூட்டத்தில் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு எங்கோ புறப்பட்டுப் போய்விட்ட தன் மனைவியைத் தேடியபடி வந்தவனும் இருந்தான். அவன் முகம் நீண்டிருந்தது. பெரிய குடுமி வைத்திருந்தான். நான்கு இளைஞர்களும் தமக்குள் பகிர்ந்துகொண்ட தகவல்கள் அவன் காதிலும் விழுந்தன. தன் மனைவியைப் பற்றிய தகவல்களை இந்த வெளியூர் இளைஞர்கள் எப்படி அறிந்திருக்கக்கூடும் என்பதை நினைத்து அந்தக் குடுமிக்காரன் குழம்பினான். ஒருவேளை இந்த இளைஞர்கள்தான் அவளைக் கடத்திச் சென்று எங்கோ பதுக்கி வைத்துவிட்டு இங்கு வந்து நாடகமாடுகிறார்களோ என அவனுக்குத் தோன்றியது.
இவர்களிடம் நாமாகச் சென்று விசாரித்தால் எதையாவது சொல்லி குழப்பிவிட்டு ஓடிவிடுவார்கள் என்று அந்தக் குடுமிக்காரன் நினைத்தான். ஓட்டமாக ஓடிச் சென்று சிறிது தொலைவில் இருக்கும் அரண்மனையில் இருக்கும் அதிகாரிகளிடம் புகார் கொடுப்பதுதான் நல்லது என்று அவனுக்குத் தோன்றியது. அதிகாரியின் ஆட்கள் வந்து பிடித்துச் சென்று விசாரிக்கிற விதத்தில் விசாரித்தால் யாராக இருந்தாலும், உண்மையைத் தானாகச் சொல்லிவிடுவார்கள் என மனத்துக்குள் நினைத்துக்கொண்டான் குடுமிக்காரன். அதனால் அந்த இளைஞர்கள் பக்கம் திரும்பாமலேயே எதையும் காதில் வாங்கிக்கொள்ளாதவன் போல வேகவேகமாக அந்த இடத்தைக் கடந்து அரண்மனை இருக்கும் திசையை நோக்கிச் சென்றான்.
வேகவேகமாக ஓடிய மீசைக்காரனும் குடுமிக்காரனும் அடுத்தடுத்து அரண்மனையை அடைந்தனர். அவர்களுக்கு மூச்சு வாங்கியது. அரண்மனைக் காவல் அதிகாரியைச் சந்திக்க வேண்டும் என்று வாசலில் நின்றிருந்த காவலர்களிடம் அவர்கள் தெரிவித்தார்கள். அந்தக் காவலர்கள் உள்ளே சென்று காவல் அதிகாரியிடம் தெரிவித்து ஒப்புதல் பெற்று வெளியே வந்து இருவரையும் உள்ளே அனுப்பிவைத்தனர்.
காவல் அதிகாரியைப் பார்த்ததும் இருவரும் அவருடைய காலில் விழுந்து வணங்கி எழுந்தனர். மீசைக்காரன் தன் ஒட்டகம் காணாமல் போன விவரத்தைத் தெரிவித்தான். குடுமிக்காரன் தன் மனைவியை யாரோ கடத்திக்கொண்டு சென்றுவிட்டனர் என்று தெரிவித்தான். இரண்டு குற்றச்செயல்களிலும் ஈடுபட்ட திருடர்கள் நகரத்தையொட்டிய பாதையில் போய்க்கொண்டிருக்கிறார்கள் என்ற தகவலையும் இருவரும் தெரிவித்தனர்.
குற்றங்களைப்பற்றிய தகவலைக் கேட்டதும் காவல் அதிகாரி குழப்பத்தில் மூழ்கினார். ஒட்டகத்தைத் திருடியவர்களும் ஒரு கர்ப்பிணிப்பெண்ணைக் கடத்திக்கொண்டு சென்றவர்களும் எப்படி ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கமுடியும் என்று நினைத்து அவர் தடுமாறினார். ஒருவேளை அவர்கள்தான் திருடர்கள் என எடுத்துக்கொண்டாலும் திருடிக்கொண்டு எங்காவது ஓடிச் சென்று பிழைக்கும் வழியைப் பார்க்காமல் அவர்கள் ஏன் மறுபடியும் நகரத்துக்குள்ளேயே சுற்றிவர வேண்டும் என்பது புரியாத புதிராக இருந்தது.
அதிகாரி யோசனையில் மூழ்கியிருக்கும் விதத்தைப் பார்த்தால் அவருக்கு நம்பிக்கை பிறக்கவில்லையோ என ஒட்டகத்துக்குச் சொந்தக்காரன் நினைத்தான். காலதாமதத்தால் காணாமல் போன தன் மனைவியைக் கண்டுபிடிக்க முடியாமல் போய்விடுமோ என அந்தக் கர்ப்பிணிப்பெண்ணின் கணவன் நினைத்தான். இருவரும் சட்டென்று அதிகாரியின் கால்களில் மீண்டும் விழுந்தனர்.
‘ஐயா, அவுங்க எல்லாரும் அதே பாதையிலதான் இன்னும் நிக்கறாங்க. இன்னும் இந்த ஊருலேர்ந்து எதை எதையெல்லாம் திருடிட்டு போகலாம்ன்னு திட்டம் போட்டிருக்கானுங்களோ. சீக்கிரமா உங்க ஆளை அனுப்பிவைங்க ஐயா. நீங்க விசாரிக்கிற விதத்துல விசாரிச்சா உண்மையைச் சொல்லிடுவானுங்க’ என்று மன்றாடினர்.
அதிகாரிக்கு இன்னும் முழுநம்பிக்கை பிறக்கவில்லை. ஆயினும் புகார் கொடுக்க வந்தவர்களை அப்படியே வெறும் கையோடு திருப்பி அனுப்ப அவருக்கு மனம் வரவில்லை. அவர்களுடைய திருப்திக்காகவாவது விசாரிக்கவேண்டும் என்று முடிவெடுத்தார். அதனால் இரு காவல் வீரர்களை அழைத்து விவரங்களைச் சுருக்கமாகத் தெரிவித்து அந்தத் திருட்டுக்கூட்டத்தை அழைத்து வருமாறு சொன்னார். ‘நீங்களும் அவுங்க கூடவே போய் ஆளுங்களை அடையாளம் காட்டுங்க’ என்று மீசைக்காரனிடமும் குடுமிக்காரனிடமும் சொன்னார்.
அக்கணமே இருவரும் காவல் வீரர்களை அழைத்துக்கொண்டு அரண்மனையிலிருந்து உடனடியாக வெளியேறினர். ஓடி வந்த பாதையிலேயே ஓட்டமும் நடையுமாகத் திரும்பி நடந்தனர். நான்கு சகோதரர்களும் தொலைவில் ஒரு மரத்தடியில் பாறையின் மீது உட்கார்ந்துகொண்டு உரையாடிக்கொண்டு இருப்பதைப் பார்த்த பிறகுதான் அவர்களுக்கு மூச்சே வந்தது. தொலைவிலிருந்தபடியே அந்த நான்கு பேரையும் காவல் வீரர்களிடம் அடையாளம் காட்டினர்.
காவல் வீரர்கள் அந்த நான்கு சகோதரர்களை நெருங்கிச் சென்றதுமே வட்டமாகச் சுற்றி வளைத்து நின்றுகொண்டார்கள். ‘யாருடா நீங்க? எந்த ஊருக்காரங்க நீங்க? இந்த ஊருக்கு எதுக்காக வந்தீங்க? இதுவரைக்கும் என்னென்ன திருடியிருக்கீங்க?’ என்று கேள்விகளை அடுக்கினர்.
வீரர்களின் கேள்விகளைக் கேட்டு இளைஞர்கள் அஞ்சவில்லை. முனியப்பா அமைதியான குரலில் ‘நாங்க பக்கத்துப் பிரதேசத்துக்காரங்க. சும்மா ஊர்களைச் சுத்திப் பார்க்கலாம்னு வந்தவங்க. நாங்க திருடர்கள் கிடையாது. யாரோ உங்களுக்குத் தப்பான தகவலைக் கொடுத்திருக்காங்க’ என்றான்.
பக்கத்திலே நின்றிருந்த மீசைக்காரன் ‘இவனுங்கதான் என் ஒட்டகத்தைப் பத்தி பேசிட்டிருந்தானுங்க. நான் என் காதால கேட்டேன். இவனுங்க என் ஒட்டகத்தைத் திருடலைன்னா, அதைப் பத்திய விவரங்கள் எல்லாம் இவனுங்களுக்கு எப்படி தெரிஞ்சிருக்கும்?’ என்று காவல் வீரனிடம் முறையிட்டான்.
உடனே காவல் வீரர்கள் முனியப்பாவிடம் ‘நீங்க ஒட்டகத்தைப் பத்தி பேசிகிட்டது உண்மையா?’ என்று கேட்டனர்.
‘ஆமாம். பேசிகிட்டது உண்மைதான்’ என்றான் முனியப்பா.
‘அப்ப, ஒட்டகத்தை நீங்கதான் திருடினீங்களா?’ என்று கேட்டனர் காவல் வீரர்கள்
‘எங்களுக்கும் திருட்டுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நாங்க அந்த ஒட்டகத்தைப் பார்க்கவே இல்லை’ என்றான் முனியப்பா.
காவல் வீரர்கள் அந்தப் பதிலைக் கேட்டு கோபம் கொண்டனர். ‘இப்பதான் பேசிகிட்டோம்னு சொன்னீங்க. இப்ப பார்க்கவே இல்லைன்னு சொல்றீங்களே. என்னய்யா குழப்பறீங்க?’ என்று சத்தமாகக் கேட்டனர்.
அதுவரை அமைதியாக அவர்களுக்கு அருகிலேயே நின்றிருந்த குடுமிக்காரன் ‘இவனுங்கதான் என் பொஞ்சாதியைப் பத்தி பேசிட்டிருந்தானுங்க. நான் என் காதால கேட்டேன். இவனுங்க என் பொஞ்சாதியைக் கடத்திகிட்டு போகலைன்னா, அவளைப் பத்திய விவரங்கள் இவனுங்களுக்கு எப்படித் தெரியும்?’ என்று காவல் வீரர்களிடம் முறையிட்டான்.
உடனே காவல் வீரர்கள் முனியப்பாவிடம் ‘நீங்க பொண்ணைப் பத்தி பேசிகிட்டது உண்மையா?’ என்று கேட்டனர்.
‘ஆமாம். பேசிகிட்டது உண்மைதான்’ என்றான் முனியப்பா.
‘அப்ப, அந்தப் பொண்ணை நீங்கதான் கடத்தினீங்களா?’ என்று கேட்டனர் காவல் வீரர்கள்.
‘எங்களுக்கும் கடத்தலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நாங்க எந்தப் பொண்ணையும் பார்க்கவே இல்லை’ என்றான் முனியப்பா.
முனியப்பாவின் பதிலைக் கேட்டதும் காவல் வீரர்களின் கோபம் உச்சத்துக்குச் சென்றது. ‘இப்பதான் பேசிகிட்டோம்னு சொன்னீங்க. இப்ப பார்க்கவே இல்லைன்னு சொல்றீங்களே. என்னய்யா குழப்பறீங்க?’ என்று கடுமையான குரலில் கேட்டனர்.
உடனே மீசைக்காரனும் குடுமிக்காரனும் ‘ஐயா, இவனுங்ககிட்ட இப்படி பொறுமையா கேட்டா பதில் கிடைக்காது. கேக்கற விதத்துல கேட்டா, உண்மை தானா வெளியே வந்துடும். இழுத்துட்டு போய் அதிகாரி முன்னால நிறுத்தலாம் வாங்க’ என்றனர். காவல் வீரர்களுக்கும் அதுதான் சரியான யோசனை என்று தோன்றியது. உடனே நான்கு சகோதரர்களையும் அழைத்துக்கொண்டு அரண்மனையை நோக்கி நடந்தனர். மீசைக்காரனும் குடுமிக்காரனும் பின்னாலேயே நடந்துவந்தனர்.
சிறிது நேரத்திலேயே அவர்கள் அரண்மனையை அடைந்தனர். காவல் அதிகாரி தங்கியிருந்த இடத்துக்கு வீரர்கள் அனைவரையும் அழைத்துச் சென்று நிறுத்தினர். புறப்பட்டது முதல் திரும்பி வரும் வரை நடந்த விஷயங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் அதிகாரியிடம் சொல்லி முடித்தனர். அதற்குள் அவர்களுக்கு மூச்சு வாங்கியது.
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட காவல் அதிகாரி நேரிடையாக விசாரணையில் இறங்கினர்.
‘இங்க பாருங்கடா. உங்களைப் பாத்தா வயசுல சின்ன பசங்க மாதிரி தெரியறீங்க. வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய வயசுல வீணா சிறையில கெடந்து அவஸ்தைப்பட வேணாம். ஒழுங்கு மரியாதையா உண்மையை சொல்லிட்டு ஓடிடுங்க. அதுதான் உங்களுக்கும் நல்லது. அவுங்களுக்கும் நல்லது’ என்று மிரட்டும் குரலில் இளைஞர்களைப் பார்த்துச் சொன்னார் அதிகாரி.
‘ஐயா, நாங்க சொல்றதெல்லாம் உண்மைதாங்க ஐயா. நாங்க சொல்றதை நம்புங்க ஐயா’ என்று மன்றாடும் குரலில் சொன்னான் முனியப்பா.
‘அந்தக் குடுமிக்காரன் பொண்டாட்டியை நீங்க எல்லாரும் சேர்ந்து கடத்தினீங்களா? அவளை எங்க வச்சிருக்கீங்க?’
‘ஐயா, நாங்க அவர் பொண்டாட்டியை பார்த்ததுகூட கெடையாதுங்க ஐயா. அவுங்க கருப்பா, சிவப்பான்னு கூட தெரியாதுங்க ஐயா’
‘என்னடா கதை சொல்றீங்க? நீங்க அவன் பொண்டாட்டியை பார்க்கலைன்னா, அவளைப் பத்திய விவரங்களை எல்லாம் எப்படி சொன்னீங்க?’
‘ஐயா, நாங்க உண்மையைத்தான் சொல்றோம். எல்லாரையும்போல நாங்களும் அந்தப் பாதையில நடந்து போயிட்டிருந்தோம். பாதையில தெரியற காலடித் தடத்தைப் பார்த்து அந்தத் தடம் மனுஷனுடையதா, விலங்கினுடையதாங்கறத எங்களால தெரிஞ்சிக்க முடியும். அதுல எங்களுக்கு ஒரு பயிற்சி இருக்குது. அதை வச்சித்தான் அந்தத் தடம் ஒரு பொம்பளையுடைய தடம்னு நான் சொன்னேன். என் முதல் தம்பி என்னைவிட கெட்டிக்காரன். அது யாரோ ஒரு செருப்பு தைக்கிறவன் பொண்டாட்டியா இருக்கலாம்னு சொன்னான். என் ரெண்டாவது தம்பி இன்னும் பெரிய கெட்டிக்காரன். அந்தப் பொம்பளை புள்ளைத்தாச்சி பொம்பளையா இருக்கலாம்னு ஊகிச்சி சொன்னான். நாலாவது தம்பி எல்லாரையும் விட பெரிய கெட்டிக்காரன். புருஷன்காரன் கூட சண்டை போட்டுகிட்டு போகிற பொம்பளையாக இருக்கணும்னு சொன்னான்’ என்றான்.
‘ஆளைப் பார்க்காம, இவ்வளவு நுணுக்கமா எப்படி சொல்றீங்க?’
‘அதுதான் ஐயா காலடித்தடத்தைப் படிக்கிற கலை. அந்தப் பொண்ணு கால்விரல்ல மெட்டி போட்டிருக்கா. அது அந்தக் கால்விரல் தடத்துல தெரிஞ்சிது. அதனால அந்தப் பக்கமா நடந்துபோனது ஒரு பொம்பளைன்னு நான் சொன்னேன்’ என்றான் முனியப்பா.
காவல் அதிகாரிக்கு அந்தக் கோணம் ஆச்சரியத்தை அளித்தது. உடனே பங்காரப்பாவின் பக்கம் திரும்பி ‘நீ எதை வச்சி கண்டுபுடிச்ச?’ என்று கேட்டார்.
உடனே பங்காரப்பா ‘செருப்பு தைக்கிறவங்க பயன்படுத்தற ஆணிகளை வேற யாரும் பயன்படுத்த மாட்டாங்க. அதெல்லாம் ரொம்ப ரொம்ப சின்னதா இருக்கும். உறுதியா இருக்கும். வேலைக்குப் புறப்படற சமயத்துல மடியில பொட்டலமா கட்டி வச்சிருப்பாங்க. அந்தப் பொம்பளை போன தடத்துல அங்கங்க அந்த ஆணிங்களப் பார்த்தேன். அதனாலதான அநேகமா அந்தப் பொம்பளை செருப்புத் தைக்கிறவரு பொண்டாட்டியா இருக்கணும்னு சொன்னேன்’ என்றான்.
அந்தப் பதில் காவல் அதிகாரியை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மெதுவாக ஈஸ்வரப்பாவின் பக்கம் திரும்பி ‘நீ எப்படி அந்தப் பொம்பள புள்ளைத்தாச்சின்னு கண்டுபுடிச்ச, உண்மையைச் சொல்லு?’ என்று கேட்டார்.
‘வயித்துல புள்ளையை சுமக்கிறவங்க எப்பவுமே ஒரு பாரத்தோடு இருக்கறதால, அந்தப் பாரத்தைத் தாங்கமுடியாம காலை அழுத்தி அழுத்தி நடப்பாங்க. அதனால அவுங்க கால்தடம் மற்ற பொம்பளைங்களைவிட கொஞ்சம் ஆழமா பதியும். நான் பார்த்த தடம் அந்த மாதிரி இருந்ததால, எனக்கு அப்படி தோணிச்சி ஐயா’ என்றான் ஈஸ்வரப்பா.
காவல் அதிகாரி ஆச்சரியத்தில் உறைந்துவிட்டார். இவ்வளவு புத்திசாலிகளாக இருப்பவர்கள் அந்தப் பெண்ணைக் கடத்திச் செல்ல வாய்ப்பே இல்லை என்பது அவருக்குப் புரிந்துவிட்டது. இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் முழு உண்மையையும் தெரிந்துகொள்ளும் வகையில் லிங்கப்பாவின் பக்கம் திரும்பினார். ‘அந்தப் பொம்பளைக்கும் அவ புருஷனுக்கும் சண்டை நடந்ததுன்னு உனக்கு எப்படித் தெரியும்?’ என்று மெதுவான குரலில் கேட்டார்.
‘வழக்கமா பிறந்த வீட்டுக்கோ, உறவுக்காரங்க வீட்டுக்கோ பொறப்பட்டுப் போகிற பொம்பளைங்க ரொம்ப சந்தோஷமா போவாங்க. அது மட்டுமில்லாம, சீக்கிரமா போவணும்ங்கற ஆவல்ல வேகவேகமா நடப்பாங்க. அப்ப அவுங்க கால்தடம் கோடு இழுத்தமாதிரி நேராவே இருக்கும். இந்தக் கால்தடம் அப்படி இல்லை. ஒரு பத்து அடி முன்னால போவுது. அப்புறம் ஒரு அடி திரும்பி நிக்குது. அதுக்கப்புறம் இன்னும் ஒரு பத்து அடி முன்னால போவுது. அதுக்கப்புறம் மறுபடியும் நின்னு திரும்பிப் பார்க்குது. புருஷன்காரன்கிட்ட சண்டை போட்டுட்டு போற பொம்பளைங்கதான் வழக்கமா பத்து பத்து அடிக்கு ஒரு தரம் நின்னு, தப்பித்தவறி புருஷன் மனசுமாறி பின்னாலயே வந்து அழச்சிகிட்டு போயிட மாட்டானான்னு நினைச்சிகிட்டே நடப்பாங்க. அந்தக் கால்தடம் அப்படி முன்னால போறதும் பின்னால திரும்பறதுமா இருந்ததனால, அந்தப் பொம்பளை புருஷன்கூட சண்டை போட்டுகிட்டு போறவளா இருக்கணும்னு நெனச்சேன்’ என்றான்.
நான்கு பேர்களும் சொன்ன தகவல்களையும் கேட்ட பிறகு குடுமிக்காரன் மனைவிக்கும் அவர்களுக்கும் ஒரு தொடர்புமில்லை என்பது அந்த அதிகாரிக்குப் புரிந்துவிட்டது. ஆனாலும் அவர் தன் முடிவை உடனடியாகத் தெரிவிக்கவில்லை. மீசைக்காரனின் ஒட்டகம் பற்றிய தகவல்களையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார். அதனால் ‘சரி, அந்த விஷயம் அப்படியே இருக்கட்டும். இப்ப அந்த ஒட்டகம் பத்திய விஷயத்துக்கு வருவோம். நீங்க அந்த ஒட்டகத்தைத் திருடினீங்களா?’ என்று கேட்டார்.
அந்தக் கேள்விக்கு இளைஞர்கள் பதில் சொல்வதற்கு முன்பே ‘ஆமாங்க ஐயா, இவனுங்கதான் திருடனுங்க. என் ஒட்டகத்தைப் பத்தி இவனுங்க பேசிகிட்டத என் காதால நான் கேட்டேன். இவனுங்கதான் ஒட்டகத்தைத் திருடிட்டு போய் எங்கயோ வச்சிருக்கானுங்க’ என்று நின்ற இடத்திலிருந்தே சத்தமாகச் சொன்னான் மீசைக்காரன்.
காவல் அதிகாரி அவனைப் பார்த்து முறைத்துப் பார்த்து ஆட்காட்டி விரலை உயர்த்தி உதட்டின் மீது வைத்து அமைதியாக இருக்குமாறு சைகை செய்தார். அவன் உடனே அமைதியாக கைகளைக் கட்டிக்கொண்டு நின்றான்.
முனியப்பா ‘ஐயா, நான் எந்த ஒட்டகத்தையும் பார்க்கலை ஐயா. ஒட்டகத்துடைய கால்தடத்தைத்தான் பார்த்தேன். ஏராளமான மனிதர்களுடைய கால்தடங்களுக்கு நடுவுல ஒட்டகத்துடைய தடம் எடுப்பா தெரிஞ்சது. அதனால என் தம்பிகள்கிட்ட இந்தப் பக்கமா ஒரு ஒட்டகம் போயிருக்குதுடான்னு சொன்னேன். அதுக்கு மேல எனக்கு எதுவும் தெரியாது ஐயா’ என்றான்.
காவல் அதிகாரிக்கு அந்தக் கோணம் ஆச்சரியத்தை அளித்தது. உடனே பங்காரப்பாவின் பக்கம் திரும்பி ‘நீ எதை வச்சி அது கழுத்துல கட்டப்பட்ட கயிறோடு வந்த ஒட்டகம்னு ஒரு முடிவுக்கு வந்தே?’ என்று கேட்டார்.
‘ஐயா, ஒட்டகமா இருந்தாலும் சரி, மாடா இருந்தாலும் சரி, அதுக்குச் சொந்தக்காரனே பக்கத்துல நின்னு ஓட்டிட்டுப் போறதா இருந்தா, அந்தக் கயிற்றின் ஒரு நுனியை ஒட்டகத்துடைய கழுத்துல கட்டியிருப்பாங்க. இன்னொரு நுனியை அதனுடைய சொந்தக்காரனே கையில புடிச்சிருப்பாங்க. நாங்க பார்த்த சமயத்துல ஒட்டகத்துடைய கால்தடம் பதிஞ்சிருந்த இடத்துக்குப் பக்கத்துலயே ஒரு கயிறுடைய தடமும் கோடு போட்ட மாதிரி கூடவே போச்சி. அதனாலதான் அது கழுத்துல கட்டப்பட்ட கயிறோடு நடந்துபோற ஒட்டகம்னு ஒரு முடிவுக்கு வந்தேன்’ என்றான் பங்காரப்பா.
காவல் அதிகாரிக்கு அவன் சொன்ன பதில் திருப்தியாக இருந்தது என்பதை அவருடைய முகம் உணர்த்தியது. ஒருகணம் ம் ம் என்று உறுமியபடி தலையை அசைத்துக்கொண்டார். பிறகு ஈஸ்வரப்பாவின் பக்கம் திரும்பி ‘நீ என்ன கண்டுபிடிச்சே?’ என்று அவனிடமே கேட்டார்.
அவன் உடனே ‘எனக்கு அந்த ஒட்டகம் கட்டி வச்சிருந்த கயிற்றை அறுத்துகிட்டு வந்திருக்குதுன்னு ஒரு குறிப்பு தோணிச்சிங்க ஐயா, அதைத்தான் நான் எங்க அண்ணன்கிட்ட சொன்னேன்’ என்றான்.
‘அதெல்லாம் சரி, அதை எப்படி கண்டுபுடிச்ச?’ என்று கேட்டார் காவல் அதிகாரி.
உடனே ஈஸ்வரப்பா ‘பங்காரப்பா அண்ணன் சொன்னமாதிரி அந்த ஒட்டகத்துடைய காலடித்தடத்துக்குப் பக்கத்துலயே ஒரு கயிற்றினுடைய தடமும் தெரிஞ்சது. ஒட்டகத்தை ஓட்டிகிட்டு போகிற ஆளு யாரும் வரலை. அதே சமயத்துல கழுத்துல கட்டியிருக்கிற கயிறு தரையில பட்டு இழுபடற அளவுக்குத் தொங்கியிருக்குது. அந்த ரெண்டு விஷயங்களையும் வச்சிப் பார்த்தா, அந்த ஒட்டகம் கட்டியிருந்த கயித்தை அறுத்துகிட்டு ஓடிவந்திருக்கலாம்னு தோணிச்சி. அதனாலதான் அப்படி சொன்னேன்’ என்றான்.
அந்தப் பதிலைக் கேட்டு காவல் அதிகாரி வியப்பில் மூழ்கினான். மெதுவாக லிங்கப்பாவின் பக்கம் திரும்பி ‘அந்த ஒட்டகத்துக்கு வலது கண்ணு இல்லைங்கற விஷயம் உனக்கு எப்படித் தெரிஞ்சிது. என்னமோ நேருல பார்த்தமாதிரி சொல்லியிருக்கியே, அது எப்படி? உண்மையைச் சொல்லு?’ என்று கேட்டார்.
‘அந்தப் பாதையில ரெண்டு பக்கமும் பச்சைப்பசேல்னு நல்லா புல் வளர்ந்து அடர்த்தியா இருக்குதுங்க ஐயா. அந்தப் பாதை நெடுக இடது பக்கத்துல இருக்கிற புல்லை மட்டும் அந்த ஒட்டகம் மேஞ்சிருக்குது. மேஞ்சதுக்கு அடையாளமா எல்லா இடத்துலயும் புல்லுடைய உயரம் குறைஞ்சிருக்குது. அதே சமயத்துல வலதுபக்கத்துல இருக்கிற புல்வெளி பசுமை குறையாம உயரமும் குறையாம தளதளன்னு அப்படியே இருக்குது. அதை வச்சித்தான் அந்த ஒட்டகத்துக்கு வலதுகண் பார்வை கிடையாதுன்னு சொன்னேன்’ என்றான் லிங்கப்பா.
காவல் அதிகாரி ஆச்சரியத்தில் உறைந்துவிட்டார். இவ்வளவு புத்திசாலிகளாக இருப்பவர்கள் அந்த ஒட்டகத்தைத் திருடியிருக்க வாய்ப்பே இல்லை என்பது அவருக்குப் புரிந்துவிட்டது.
ஒருகணம் புகார் கொடுத்தவர்களிடம் என்ன பதில் சொல்வது என்பதை நினைத்து யோசனையில் மூழ்கியிருந்தார். ஒரு தெளிவு கிடைத்ததும் மீசைக்காரனின் பக்கம் திரும்பி ‘உன் ஒட்டகம் நம்ம பிரதேசத்தைவிட்டு வெளியே போயிருக்க வாய்ப்பே இல்லை. புல்வெளி பக்கமா இன்னும் கொஞ்ச தூரம் போய் தேடிப் பாரு. கண்டிப்பா எங்கனா மேய்ஞ்சிகிட்டு இருக்கும். போ’ என்று சொல்லி அனுப்பிவைத்தார். பிறகு குடுமிக்காரனின் பக்கம் திரும்பி ‘நம்ம ஊருக்கு அக்கம்பக்கத்துல இருக்கற உங்க சொந்தக்காரங்க வீடுகளுக்குப் போய் நல்லா விசாரிச்சிப் பாரு. உன் பொண்டாட்டி யாராவது ஒருத்தவங்க வீட்டுலதான் இருப்பாங்க. அங்க போய் தேடிப் பாரு. உன் பொண்டாட்டி காணாம போனதுக்கும் இவுங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீ போகலாம்’ என்று அனுப்பிவைத்தார்.
பிறகு காவலர்களை அழைத்து நாற்காலி கொண்டுவரச் செய்து, அவற்றில் நான்கு சகோதரர்களையும் உட்கார வைத்தார். அவர்களுடைய அறிவாற்றலை மீண்டும் மீண்டும் புகழ்ந்தபடி இருந்தார். இறுதியாக ‘தம்பிகளா, நீங்க எங்க போகணும்?’ என்று கேட்டார்.
‘இந்த இடத்துக்குப் போகணும்னு எந்தவிதமான குறிக்கோளும் இல்லாம ஊரு உலகத்தைச் சுத்திப் பார்க்கணும், உலக ஞானத்தை அடையணும்ங்கற நோக்கத்தோடு மனம் போன போக்குல சுத்திகிட்டிருக்கோம். ஒரு வருஷம் முடிஞ்சி போச்சி. அதனால ஊருக்குத் திரும்பிட்டிருக்கோம்’ என்றான் முனியப்பா.
‘அப்படியென்றால், இன்னைக்கு ஒருநாள் ராத்திரி இங்க அரண்மனை விருந்தாளியா நீங்க தங்கிட்டு போகலாமே. எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்’ என்றார் அதிகாரி.
முனியப்பா பிற சகோதரர்களை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தான். பிறகு ‘சரி ஐயா, உங்க விருப்பம். அப்படியே ஆகட்டும். தங்கிட்டு போறோம்’ என்றான். உடனே அவர்கள் தங்குவதற்கு நல்ல படுக்கைகளோடு ஒரு பெரிய அறையைத் தயார் செய்யும்படி சொல்லி ஆட்களை அனுப்பிவைத்தார் அதிகாரி.
‘ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி. சாப்பிட உங்களுக்கு என்னென்ன வேணும்னு சொன்னா, அதுக்குத் தக்கபடி ஆட்கள் ஏற்பாடு செய்வாங்க’ என்றார் அதிகாரி.
‘எங்க நாலு பேருல நான் மட்டும்தான் ராத்திரியில சோறு சாப்புடற ஆளு. எனக்கு அரிசிச் சோறு, காய்கறி குழம்பு போதும்’ என்றான் முனியப்பா.
‘உனக்கு என்னப்பா வேணும்?’ என்று அதிகாரி பங்காரப்பாவைப் பார்த்துக் கேட்டார்.
‘எனக்கு ஒரு செம்பு பால் மட்டும் போதும்’ என்றான் பங்காரப்பா.
‘உனக்கு என்னப்பா வேணும்?’ என்று அதிகாரி ஈஸ்வரப்பாவைப் பார்த்துக் கேட்டார்.
‘எனக்கு ரெண்டு கோதுமை ரொட்டி மட்டும் இருந்தா போதும்’ என்றான் ஈஸ்வரப்பா.
‘உனக்கு என்னப்பா வேணும்?’ என்று அதிகாரி லிங்கப்பாவைப் பார்த்துக் கேட்டார்.
‘எனக்கு ரெண்டு அவிச்ச முட்டை மட்டும் போதும்’ என்றான் லிங்கப்பா.
அவர்கள் விரும்பும் அனைத்தும் ஏற்பாடு செய்யப்படும் என்று சொல்லிவிட்டு நீண்ட நேரம் அவர்களோடு உரையாடி பொழுதுபோக்கிவிட்டு வெளியேறினார் அதிகாரி. தன் அரசனைச் சந்தித்து அன்று நடைபெற்ற எல்லா விவரங்களையும் தெரிவிக்கவேண்டும் என்று அவர் மனம் துடித்தது. மேலும் நான்கு சகோதரர்களின் புத்திசாலித்தனத்தைப்பற்றியும் தெரிவிக்கவேண்டும் என்றும் அவர் விரும்பினார். என்னென்ன பேசவேண்டும் என்று மனத்துக்குள்ளேயே நினைத்தபடி அரசன் தங்கியிருந்த மாளிகையை நோக்கி நடந்தார்.
நான்கு சகோதரர்களும் தமக்காக ஏற்பாடு செய்யப்பட்ட அறைக்குச் சென்றனர். குளித்து முடித்து உடைமாற்றிக்கொண்டனர். சிறிது நேரத்துக்குப் பிறகு ஒரு வேலையாள் அவர்கள் கேட்டிருந்த உணவுப்பொருட்களையெல்லாம் தனித்தனி பாத்திரங்களில் வைத்து மூடி எடுத்துவந்து மேசையில் வைத்துவிட்டுச் சென்றான்.
மறுநாள் காலையில் அதிகாரி சகோதரர்களைச் சந்திப்பதற்காக அவர்கள் தங்கியிருந்த அறைக்கு வந்தார். ‘வணக்கம் வணக்கம்’ என்று சொல்லிக்கொண்டே கைகுவித்தபடி நாற்காலியில் அமர்ந்தார்.
குளித்து உடைமாற்றிக்கொண்டு தயாராக அமர்ந்திருந்த நான்கு சகோதரர்களும் ‘வணக்கம் வணக்கம் வாங்க’ என்று புன்னகைத்தபடி வரவேற்றனர்.
தனக்கு எதிரிலிருந்த மேசை மீது மூடி வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களின் பக்கம் தற்செயலாக அதிகாரியின் பார்வை திரும்பியது. ஒருவேளை காலை உணவு தயாராகி அதற்குள் அங்கு கொண்டுவரப்பட்டு விட்டதோ என நினைத்தபடி பாத்திரத்தைத் திறந்து பார்த்தார். பாத்திரம் ஜில்லிட்டிருந்தது. நேற்று கொண்டுவரப்பட்ட உணவு அப்படியே இருந்தது. உடனே அதிகாரி எல்லாப் பாத்திரங்களையும் திறந்து பார்த்தார். பால், ரொட்டி, முட்டை எல்லாமே அப்படியே தீண்டப்படாமல் இருந்தன. இரவு வந்த உணவை அவர்கள் ஏன் உண்ணவில்லை என்பது அவருக்குப் புரியவில்லை.
‘எல்லா உணவும் ஏன் அப்படியே இருக்குது? நேத்து ராத்திரி நீங்க சாப்பிடலையா?’ என்று கேட்டார் அதிகாரி.
நான்கு சகோதரர்களும் புன்னகை மாறாத முகத்துடன் சாப்பிடவில்லை என்பதன் அடையாளமாக தலையை அசைத்தனர்.
‘ஏன் சாப்பிடலை? தனித்தனியா ஒவ்வொரு ஆளுக்கும் என்ன வேணும்னு கேட்டுட்டுத்தானே எல்லாத்தையும் செஞ்சாங்க?’ என்று அதிர்ச்சியோடு மூத்தவனான முனியப்பாவைப் பார்த்தார் அதிகாரி.
முனியப்பா அதிகாரியின் அருகில் வந்து அவருடைய கைகளைப் பற்றிக்கொண்டு ‘நாங்க சொன்ன உணவுகளைத்தான் கொண்டு வந்து வச்சாங்க. ஆனாலும் ஒன்னொன்னுலயும் ஒரு சின்ன தோஷம் இருக்குதுங்க ஐயா. அதனாலதான் நாங்க சாப்பிடலை’ என்றான்.
‘தோஷமா? சாப்பாட்டுல என்ன தோஷம்?’ என்று குழப்பத்தோடு கேட்டார் அதிகாரி.
‘எனக்காக சோறு ஆக்கி அனுப்பியிருக்காங்களே. அது எப்படிப்பட்ட வயல்ல விளைஞ்ச நெல் தெரியுமா? ஒரு ஆத்தோட தண்ணீரோ குளத்தோட தண்ணீரோ பாய்ஞ்ச வயல்ல அந்த நெல் விளையலை. செத்தவங்களுடைய எலும்பும் சாம்பலும் கரைக்கக்கூடிய கால்வாய்லேர்ந்து வரக்கூடிய தண்ணீர் பாயக்கூடிய வயல்ல விளைஞ்சது. அந்தச் சோற்றில ஒரு பிணத்தினுடைய மணம் கலந்திருக்குது’ என்று சொல்லிவிட்டு அதிகாரியை அமைதியாகப் பார்த்தான் முனியப்பா.
‘எனக்காகக் கொண்டுவந்த பால் நல்ல பசுவினுடைய பால்தான். ஆனா அந்தப் பசு கன்னு போட்டு அஞ்சிநாள்தான் ஆகியிருக்குது. வழக்கமா ஒரு பசு கன்னு போட்டா, ஒரு ரெண்டு வார காலத்துக்காவது கன்னுக்குட்டி மட்டும்தான் அந்தப் பசுகிட்ட பால் குடிக்கணும். அது ஒரு பசுவுக்கும் கன்னுக்கும் உள்ள பந்தம். ஒரு கன்னுக்குட்டி குடிக்கவேண்டிய பாலை நான் குடிக்கறது பெரிய பாவம் இல்லையா? அதனாலதான் நான் குடிக்கலை’ என்றான் பங்காரப்பா.
‘எனக்காக செஞ்ச ரொட்டிக்காக அரைக்கப்பட்ட கோதுமையில ஒரு பெரிய பாவம் ஒட்டியிருக்குது ஐயா. அது கடையில வாங்கிய கோதுமை கிடையாது. அவன் வீட்டுல விளைஞ்ச கோதுமையும் கிடையாது. வாங்கின கடனைக் கொடுக்கலைன்னு ஒரு நொண்டிக் கிழவியுடைய வீட்டுல புகுந்து தூக்கிட்டு வந்த கோதுமையை அரைச்ச மாவுல செஞ்ச ரொட்டியை நான் எப்படிச் சாப்பிட முடியும்? பாவத்துடைய கறை அதுல படிஞ்சிருக்கும்போது நான் எப்படி அதைத் தொடமுடியும்?’ என்றான் ஈஸ்வரப்பா.
‘எனக்கு வச்சிருந்த முட்டையிலயும் ஒரு பாவத்துடைய கறை இருக்குது ஐயா. அந்த முட்டைகள் வீட்டுல வளர்க்குற கோழிகளுடைய முட்டை கிடையாது ஐயா. வயித்துப்பொழைப்புக்காக கூடைக்குள்ள முட்டைகளை வச்சி வித்திட்டிருந்த ஒரு பார்வையில்லாத கிழவிகிட்ட செல்லாத பணத்தைக் கொடுத்து வாங்கிட்டு வந்த முட்டைகள் அது. பசியைப் போக்கிக்கறதுக்காக அதைச் சாப்பிட்டா, அந்தப் பாவத்துல நானும் பங்கெடுத்துகிட்ட மாதிரி ஆகும். அதனாலதான் நான் சாப்பிடலை’
ஒவ்வொருவரும் சொன்ன காரணத்தைக் கேட்டு திகைப்பில் ஒருகணம் உறைந்து நின்றார் அதிகாரி. அடுத்த கணமே சுயநினைவுக்கு வந்து, அந்த உணவுகளைச் சமைத்தவர்களையும் அந்த உணவுப்பொருட்களை அரண்மனைக்கு விநியோகித்தவர்களையும் அழைத்துவரச் சொன்னார்.
அடுத்த அரைமணி நேரத்திலேயே அனைவரும் அங்கு வந்து வரிசையில் நின்றனர். அவர்களை அழைக்கச் சென்ற ஆட்கள் அவர்கள் அழைக்கப்படுவதற்கான காரணங்களை அவர்களிடம் ஏற்கனவே சுருக்கமாகத் தெரிவித்துவிட்டனர்.
அதிகாரி அரண்மனைக்கு அரிசி விநியோகிப்பவனை முதலில் அழைத்தார்.
‘நீ அரண்மனைக்கு அனுப்பற அரிசி, எலும்பும் சாம்பலும் கரைக்கிற குளத்து நீர் பாயக்கூடிய வயல்ல அறுவடை செய்யப்பட்ட நெல்லைக் குத்திய அரிசியா?’ என்று எதையும் சுற்றிவளைக்காமல் நேரிடையாகவே கேட்டார்.
அவன் உடனே கைகளைக் கட்டியபடி கூனிக் குறுகி நின்றான். ‘ஆமாம் ஐயா’ என்று எதையும் விவாதிக்காமல் அவனும் ஒரே சொல்லில் தன் தவற்றை ஒப்புக்கொண்டான். அதிகாரி அவனை ஒருகணம் முறைத்துப் பார்த்தார். பிறகு ஒதுங்கிப் போ என்பதுபோல சைகை செய்தார். அவன் பின்னாலேயே நகந்ந்து சென்று சுவரோடு ஒட்டியபடி நின்றான்.
அடுத்து அரண்மனைக்கு பால் அனுப்பும் ஆள் வந்து நின்றான்.
‘நீ அரண்மனைக்கு அனுப்பிவைச்ச பாலைக் கொடுத்த பசு கன்னு போட்டு எத்தனை நாளாவது?’ என்று கேட்டான்.
அவன் உடனே விரலைவிட்டு எண்ணியபடி ‘அஞ்சு நாள் ஆவுது’ என்றான். அதிகாரிக்கு அதைக் கேட்டு கோபம் தலைக்கேறியது. ஆயினும் கட்டுப்படுத்திக்கொண்டு ஒதுங்கிப் போ என்பதுபோல சைகை செய்தார். உடனே அவன் பின்னாலேயே நகர்ந்து சென்று சுவரோடு ஒட்டிக்கொண்டு நின்றான்.
அடுத்து அரண்மனைக்கு கோதுமை அனுப்பிய ஆள் வந்து நின்றான். அவனுக்கு விசாரணை செல்லும் திசைவிவரம் புரிந்துவிட்டது. அதனால் அதிகாரி கேட்பதற்கு முன்பே கைகுவித்து வணங்கியபடி ‘ஐயா மன்னிக்கணும். எங்க பக்கத்துவீட்டுல இருக்கற கிழவியாச்சேன்னு பாவம் பார்த்து ஒரு பத்து வெள்ளியை நாலு வருஷத்துக்கு முன்னால கடனா கொடுத்தேன்யா. அந்தக் கிழவி அசலையும் கொடுக்கலை. வட்டியும் கொடுக்கலை. கேட்டுக் கேட்டு எனக்கும் சலிச்சி போயிடுச்சி. அந்தக் கோவத்துலதான் அவ வீடு புகுந்து கோதுமை மூட்டையை தூக்கிட்டு வந்துட்டேன்’ என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தான். அதிகாரி அதைக் கேட்டு ஒரு நீண்ட பெருமூச்சு வாங்கினார். பிறகு ஒதுங்கிப் போ என்பதுபோல சைகை செய்தார். உடனே அவன் பின்னாலேயே நகர்ந்து சென்று சுவருக்கு அருகில் நின்றுகொண்டான்.
யாரும் அழைக்காமலேயே அரண்மனைக்கு முட்டை அனுப்பியவன் வந்து அதிகாரியின் காலில் விழுந்து வணங்கினான். ‘ஐயா, நான் செஞ்சது பெரிய பாவம்தான்யா. என்னமோ பணத்துக்கு ஆசைப்பட்டு கண்ணு தெரியாதவளை ஏமாத்திட்டேன். நான் ஒரு முட்டாளுங்கய்யா, முட்டாள். பெரிய மனசு பண்ணி என்னை மன்னிச்சிடுங்கய்யா’ என்று கண்ணீர் விட்டான். அதிகாரி அதைப் பார்த்து கசப்பான ஒரு புன்னகையை உதிர்த்தார். பிறகு ஒதுங்கிப் போ என்பதுபோல சைகை செய்தார். உடனே அவன் பின்னாலேயே நகர்ந்து சென்று சுவருக்கு அருகில் நின்றுகொண்டான்.
அனைவரையும் அங்கிருந்து கலைந்துபோகும்படி சொன்னார் அதிகாரி. எவ்விதமான கடுமையையும் தம் மீது காட்டாமல் தம்மைத் திருப்பி அனுப்பிய அதிகாரியை மனசுக்குள் பாராட்டிக்கொண்டே அனைவரும் வேகமாக வெளியேறினர்.
எல்லோரும் சென்ற பிறகு நான்கு சகோதரர்களையும் மனம் திறந்து பாராட்டினார் அதிகாரி. அவர்களுடைய அறிவுநுட்பம் அவரை வியப்பில் ஆழ்த்தியது.
‘என் வார்த்தையை மதிச்சி எனக்காக ஒரு ராத்திரி எங்க அரண்மனையில தங்கியிருந்ததுக்கு ரொம்ப நன்றி தம்பிகளா. இனிமேலும் உங்க பயணத்துக்கு தடையா இருக்க விரும்பலை. நீங்க புறப்படலாம்’
நான்கு சகோதரர்களும் அவருக்குத் தலைதாழ்த்தி வணங்கிவிட்டுப் புறப்பட்டனர். வாசல் வரை அவர்களோடு வந்த அதிகாரி, வாசலை ஒட்டிய தோட்டத்தில் நின்றிருந்த மாமரத்தில் பழுத்துத் தொங்கிய நான்கு பழங்களைப் பறித்து ‘இந்தப் பிரதேசத்துடைய ஞாபகமா இதை வாங்கிக்கணும்’ என்று கொடுத்தார். சகோதரர்கள் அனைவரும் அப்பழங்களை வாங்கி தம் பைகளில் வைத்துக்கொண்டனர்.
‘போயிட்டு வரோம்’ என்று கைகூப்பி வணங்கிவிட்டு சாலையில் இறங்கி நடக்கத் தொடங்கினர் சகோதரர்கள்.

