ஓர் ஊரில் ஒரு திருடன் வசித்துவந்தான். அவன் பெயர் ஹனுமப்பா. அவனுக்கு அழகான ஒரு மனைவி இருந்தாள். அவளுடைய பெயர் ரங்கம்மா. அவளும் திருட்டுத்தொழிலில் கை தேர்ந்தவள். ஒவ்வொரு நாளும் இரண்டு பேரும் இருவேறு திசைகளில் சென்று கிடைத்ததைத் திருடுவார்கள். ஆனால் இருவருமே அந்தப் பொருளை வீட்டுக்குக் கொண்டுவர மாட்டார்கள். உடனடியாக அடுத்த ஊருக்குச் சென்று அந்தப் பொருளை விற்று அதற்கு இணையான மதிப்புள்ள வெள்ளி நாணயங்களைப் பெற்றுக்கொண்டு திரும்பிவிடுவார்கள். அவர்களுடைய வீட்டுப் பரணில் எல்லா வெள்ளி நாணயங்களையும் மூட்டைமூட்டையாகக் கட்டி வைத்திருந்தார்கள்.
ஒருநாள் திருடன் காலையிலேயே திருடுவதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டான். காலை முதல் மாலை வரையில் ஆறேழு கிராமங்களில் அலைந்துவிட்டான். பொழுதும் கவியத் தொடங்கிவிட்டது. ஆனால் அதுவரைக்கும் அவன் செய்த எந்த திருட்டு முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை. வெறும் கையோடு வீட்டுக்குத் திரும்பவும் அவனுக்கு மனம் வரவில்லை. அதனால் அளவற்ற சோர்வோடு ஒரு குளத்தங்கரையில் இருந்த ஆலமரத்தடியில் என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்தோடு உட்கார்ந்தான்.
அப்போது அருகிலிருந்த குன்றிலிருந்து ஆடுகள் மேய்ச்சலை முடித்துவிட்டு மே மே என்று சத்தம் எழுப்பியபடி இறங்கிவந்தன. ஆடுகளின் சத்தத்தைக் கேட்டு திருடன் திரும்பிப் பார்த்தான். எல்லா ஆடுகளும் நல்ல சதைப்பற்றோடு பார்ப்பதற்குக் கொழுகொழுவென்று இருந்தன. ஒரே ஒரு ஆட்டைத் திருடினால் கூட போதும். யாரிடமாவது விற்று பத்து வெள்ளிப்பணம் சம்பாதித்துவிடலாம் என்று தோன்றியது.
திருடன் மீண்டும் ஆடுகளின் பக்கம் திரும்பி நோட்டம் விட்டான். எல்லா ஆடுகளும் முன்னால் வரிசையாக நடக்க, ஆடு மேய்க்கும் கிழவன் எல்லாவற்றுக்கும் பின்னால் கோலைச் சுழற்றியபடி வந்துகொண்டிருந்தான். கிழவனின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, எப்படியாவது ஒரு ஆட்டைத் திருடிவிட வேண்டும் என்று ஹனுப்பாவின் மனம் திட்டமிட்டது.
என்ன செய்யலாம் என்று ஆழமாக யோசனையில் மூழ்கியிருக்கும்போதே, குளத்தங்கரையோரமாக நின்றிருந்த ஒரு முருங்கைமரம் அவன் கண்களில் தென்பட்டது. அந்த மரத்தின் எல்லாக் கிளைகளிலும் பச்சைப்பசேலென கீரை அடர்த்தியாக வளர்ந்து செழிப்பாகக் காணப்பட்டது. உடனே வேகமாக அந்த மரத்தை நெருங்கி, கைநீட்டி எட்டிப் பறிக்கிற உயரத்தில் நீண்டிருந்த கிளையிலிருந்து இளந்தளிர்களைக் கொண்ட நாலைந்து கொத்துகளை இழுத்து உடைத்தான்.
எல்லாவற்றையும் ஒரு கொத்தாக கையில் பிடித்துக்கொண்டு மரத்தோடு ஒட்டியபடி மறைவாக நின்றுகொண்டான். மே மே என்று கத்தியபடி எல்லா ஆடுகளும் துள்ளித்துள்ளிக் குதித்துக்கொண்டே குளத்தங்கரையின் வளைவில் ஏறிக் கடந்து சென்றன. அந்த ஆடுகளின் பார்வையில் படும் வகையில் முருங்கைக்கொத்தை அசைத்து அசைத்துக் காட்டியபடி அவன் மறைவாக நின்றிருந்தான். ஒன்றின் பின்னால் ஒன்றென சேர்ந்து செல்லும் அவசரத்தில் ஒரு ஆடு கூட அவன் பிடித்திருந்த இலைக்கொத்தின் பக்கம் திரும்பவில்லை. ஆயினும் மனம் சோர்ந்துவிடாமல் நம்பிக்கையோடு இலைக்கொத்தை அசைத்தபடி காத்திருந்தான் ஹனுமப்பா.
எதிர்பாராத விதமாக, கூட்டத்தோடு கூட்டமாக நடந்துகொண்டிருந்த ஒரு ஆடு சட்டென திரும்பி அந்த இலைக்கொத்தைப் பார்த்தது. இலையின் பசுமை அந்த ஆட்டை ஈர்த்தது. அக்கணமே, அந்தக் கூட்டத்திலிருந்து விலகி ஒதுங்கி அந்த இலைக்கொத்தை நோக்கி முகத்தைத் திருப்பியது. அந்த ஆடு கடித்துத் தின்னுவதற்கு ஏதுவாக ஹனுமப்பாவும் இலைக்கொத்தை நீட்டிப் பிடித்தான். முருங்கையின் கொழுந்தான இலையை இழுத்துச் சுவைத்தது ஆடு.
ஆடு ருசித்துச் சாப்பிடுவதை தன் மறைவிடத்திலிருந்து நேரிடையாகப் பார்த்தான் ஹனுமப்பா. உடனே இலைக்கொத்தை அசைத்தபடி தன்னை நோக்கி ஆடு வருவதற்குத் தோதாக மெல்ல மெல்ல பின்வாங்கினான். ஆடும் தன்னையறியாமல் முருங்கை இலையின் சுவையில் மயங்கி அந்தத் திசையில் நடக்கத் தொடங்கியது. ஹனுமப்பா அந்த இடத்திலிருந்து நகர்ந்து அருகில் புதர்களுக்கிடையிலிருந்த பள்ளத்தை நோக்கி நடந்தான். ஆடும் அவன் பின்னாலேயே சென்றது. பள்ளத்தில் யாருடைய பார்வையும் படாதபடி அவன் நின்றுகொண்டான். கீரையின் ருசியில் தன்னை மறந்த ஆடு கண்ணெதிரில் நீண்டிருக்கும் முருங்கை இலைகளை வேகமாக ருசிக்கத் தொடங்கியது.
அந்த ஆடு விலகிச் சென்ற விஷயம் தெரியாமலேயே ஆடு மேய்த்த கிழவன் எல்லா ஓடுகளையும் ஓட்டிக்கொண்டு சென்றுவிட்டான். இனி அவன் திரும்பிவர வாய்ப்பில்லை என்பதை உறுதி செய்துகொண்டபின் புதர் மறைவில் பள்ளத்திலிருந்த ஹனுமப்பா அந்த ஆட்டை ஓட்டிக்கொண்டு வெளியே வந்தான். அந்த ஆட்டுக்கு முருங்கை மரத்திலிருந்து இன்னும் கொஞ்சம் கீரைக்கொத்துகளை ஒடித்து உண்ணுவதற்குக் கொடுத்தான். கீரைக்கொத்தின் சுவையில் மயங்கிய ஆடு வயிறு நிரம்பும் வரையில் ஆர்வத்தோடு தின்றது. அதற்குள் இருள் படரத் தொடங்கிவிட்டது.
புதரோரமாக வளர்ந்து மண்டியிருந்த ஓணான் கொடியை உருவி எடுத்து நீண்ட கயிற்றைப் போல சுருட்டினான் ஹனுமப்பா. பிறகு அந்தக் கயிற்றின் ஒருநுனியை அந்த ஆட்டின் கழுத்தைச் சுற்றிக் கட்டினான். பிறகு மற்றொரு நுனியை அவனே பிடித்துக்கொண்டான். முற்றிலுமாக இருள் கவியும் வரைக்கும் மறைவிடத்திலேயே காத்திருந்தான். அதற்குப் பிறகு இருட்டிலேயே அந்தக் குளக்கரையிலிருந்து அந்த ஆட்டை ஓட்டிக்கொண்டு அடுத்த கிராமத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான். வழியில் தேவைப்படக்கூடும் என்ற எண்ணத்தில் நாலைந்து முருங்கைக்கொத்துகளை ஒடித்து, அவற்றையும் ஒரு கட்டாகக் கட்டி எடுத்துக்கொண்டான்.
நள்ளிரவுக்குப் பிறகுதான் ஹனுமப்பா அடுத்த கிராமத்தை அடைந்தான். நீண்ட தொலைவு நடந்துவந்ததில் அவனுக்குக் களைப்பாகவும் பசியாகவும் இருந்தது. நடப்பதற்குக்கூட தெம்பில்லை. எதையாவது தின்றுவிட்டு படுத்து உறங்கவேண்டும் என்று நினைத்தான். அப்போதுதான் அவனுக்கு ஆட்டுக்கும் பசிக்கக்கூடும் என்று தோன்றியது. உடனே கைவசம் இருந்த முருங்கைக்கொத்துகளை ஆட்டுக்குக் கொடுத்தான். ஆடும் அவற்றை ஆர்வத்தோடு இழுத்து தின்று முடித்தது.
அந்தக் கிராமத்தின் எல்லையிலேயே ஒரு வெள்ளரித்தோட்டம் இருப்பதைப் பார்த்தான் அவன். உடனே அதற்குள் இறங்கி ஐந்தாறு வெள்ளரிப்பிஞ்சுகளைப் பறித்து வேகவேகமாகத் தின்றான். ஆட்டுக்கும் சில பிஞ்சுகளைக் கொடுத்தான். பிறகு தெளிந்திருக்கும் தண்ணீரை அள்ளிப் பருகி பசியைத் தணித்துக்கொண்டான்.
தொடர்ந்து நடந்து இரவோடு இரவாக தன் ஊருக்கே சென்றுவிடலாம் என்று நினைத்து மீண்டும் நடக்கத் தொடங்கினான். ஆனால் சிறிது நேரத்திலேயே எதிர்பாராத விதமாக மழை பிடித்துக்கொண்டது. ஆரம்பத்தில் நிதானமாக பொழியத் தொடங்கிய மழை நேரம் செல்லச் செல்ல, கடுமையாகப் பொழியத் தொடங்கியது. ஒவ்வொரு மழைத்தாரையும் முகத்தில் அறைவதுபோல இருந்தது.
கடுமையான மழையில் நனைந்தபடி தொடர்ந்து நடப்பதைவிட, எங்காவது கோவில் மண்டபத்தில் படுத்து ஓய்வெடுத்துவிட்டு, விடிந்ததும் செல்வதுதான் நல்லது என்று நினைத்தான் ஹனுமப்பா. அதனால் எங்காவது கோவில் தட்டுப்படுகிறதா என அந்த இருட்டில் சுற்றிச்சுற்றிப் பார்த்தான். எந்தத் திசையிலும் கோவில் தென்படவில்லை. ஆனால் கோவில் போல ஏதோ ஒரு பெரிய வீடு தெரிந்தது. அருகில் சென்று பார்த்தால் தங்குவதற்கு ஏதாவது இடம் கிடைக்கும் என நினைத்தான் ஹனுமப்பா. உடனே ஆட்டை ஓட்டிக்கொண்டு அந்த வீட்டின் பக்கம் சென்றான்.
அந்த வீடு ஹனுமப்பா நினைத்ததைவிட பெரியதாக இருந்தது. இருபுறங்களிலும் தோட்டங்களைக் கொண்ட பெரிய முற்றம். அதைத் தொடர்ந்து ஒரு கூடம். பத்து பேர் தாராளமாகப் படுத்து உறங்கலாம். அந்த அளவுக்குக் கூடம் பெரிதாக இருந்தது. அந்தக் கூடத்துக்குப் பிறகுதான் வீடு தொடங்கியது.
முற்றத்தைக் கடந்து கூடத்தைப் பார்த்ததுமே, அன்றைய இரவு அங்கேயே தங்கி தூங்கிவிட்டு விடிவதற்குள் எழுந்து சென்றுவிடலாம் என்று நினைத்தான் ஹனுமப்பா. யாரிடம் அனுமதி கேட்பது என்பது புரியாமல் சுற்றுமுற்றும் பார்வையை ஒட்டினான். ஒருவரும் தென்படவில்லை. வீட்டுக்குள் எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கக்கூடும் என்று அவனாகவே நினைத்துக்கொண்டான். அதனால் அங்கேயே தங்கி உறங்குவதற்கு முடிவு செய்து, பிடித்துவந்த ஆட்டை அருகிலிருந்த தூணோடு சேர்த்துக் கட்டினான். அந்த ஆடும் களைத்திருந்ததால் அக்கணமே கால்களை மடக்கி உறங்கத் தொடங்கியது.
ஹனுமப்பா தன் வேட்டியையும் சட்டையையும் கழற்றி ஈரம் போக நன்றாகப் பிழிந்து உதறினான். அவற்றை அருகிலேயே ஓர் ஓரமாகத் தொங்கவிட்டான். பிறகு தலையில் சுற்றியிருந்த துண்டை எடுத்து உடலைத் துவட்டிக்கொண்டு, ஈரம் போகும்வகையில் நன்றாகப் பிழிந்து உதறிவிட்டு, அதையே இடுப்பில் கட்டிக்கொண்டு சுவர் ஓரமாக படுத்தான். களைப்பின் காரணமாக படுத்த சில நொடிகளிலேயே அவன் உறங்கத் தொடங்கினான்.
இரண்டுமூன்று மணி நேரங்களுக்குப் பிறகு அந்த வீட்டின் சொந்தக்காரன் சிறுநீர் கழிப்பதற்காக கதவைத் திறந்துகொண்டு வீட்டிலிருந்து வெளியே வந்தான். அப்போது மழையின் வேகம் குறைந்து, சிறுசிறு தூறலாக மழை பொழிந்தபடி இருந்தது. தலைமீது தன் துண்டை விரித்துப் போர்த்திக்கொண்டு முற்றத்தைக் கடந்து சென்று மதிலோரமாக சிறுநீர் கழித்துவிட்டு நிதானமாகத் திரும்பி வந்தான் வீட்டுக்காரன்.
அப்போதுதான் கூடத்தில் யாரோ அறிமுகமில்லாத ஒருவன் படுத்து உறங்குவதையும் அவனுக்கு அருகில் ஓர் ஆடு கட்டப்பட்டிருப்பதையும் அவன் பார்த்தான். முதலில் திருடனாக இருப்பானோ என்று அவன் நினைத்தான். திருடனாக இருந்தால் வீட்டுக்குள் புகுந்து திருடாமல் வாசலில் கிடந்து ஏன் தூங்கவேண்டும் என்றொரு எண்ணம் எழுந்ததால், அடுத்த கணமே தன் சந்தேகத்தை உதறினான். பிறகு, யாரோ ஒரு வழிப்போக்கனாக இருக்கவேண்டும் என நினைத்தபடி அவனைப் பார்த்தான்.
வெளியே குளிர்க்காற்று வீசியது. எங்கு தொட்டாலும் ஜில்லென்று இருந்தது. அப்படிப்பட்ட சூழலில் தரையில் விரித்துக்கொள்ளவும் ஒரு துணி இல்லாமல் போர்த்திக்கொள்ளவும் ஒரு துணி இல்லாமல் ஒரே ஒரு துண்டை மட்டும் இடுப்பில் கட்டிக்கொண்டு அவனால் எப்படி உறங்கமுடிகிறது என்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
அவனுக்கு அருகில் சென்று அவனைத் தொட்டு எழுப்பினான் வீட்டுக்காரன். ‘யாருப்பா நீ? இங்க ஏன் படுத்திருக்க? ஏந்திரு. ஏந்திரு’ என்று தொட்டு பலமுறை அசைத்தான். ஹனுமப்பா சட்டென்று உறக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்தான். அவன்தான் வீட்டுக்குச் சொந்தக்காரன் என்பது அவனைப் பார்த்ததுமே ஹனுமப்பாவுக்குப் புரிந்துவிட்டது. அதனால் வேகமாக எழுந்து உட்கார்ந்தபடி ‘வணக்கம்ங்க. நான் வெளியூர்க்காரன். எங்க ஊருக்கு இன்னும் நாலு கிராமங்கள் தள்ளிப் போகணும். மழை இல்லைன்னா விடியவிடிய ஊருக்குப் போயிருப்பேன். திடீர்னு மழை புடிச்சிக்கும்னு நான் நெனச்சே பார்க்கலை. அதனால இப்படி ஒதுங்கி படுத்துட்டேன். தப்பா நெனச்சிக்காதீங்க. விடிஞ்சதும் கெளம்பிடறேங்க’ என்று சுருக்கமாக தன் கதையைச் சொன்னான்.
‘பரவாயில்லைப்பா. பரவாயில்லை. இடிமின்னலோடு இப்படி மழை பேஞ்சா, நீ என்ன செய்யமுடியும்? பாவம். பரவாயில்லை. படுத்துக்கோ. காலையில விடிஞ்ச பிறகு போவலாம்’ என்றான் வீட்டுக்காரன்.
‘ரொம்ப நன்றிங்க ஐயா’ என்று கைகுவித்துக் கும்பிட்டான் ஹனுமப்பா.
‘அது சரி, இந்தக் குளிர்ல இப்படி வெறும் உடம்போடு படுத்திருக்கியே? இந்தக் காத்தையும் மழையையும் ஈரத்தையும் எப்படி தாங்கிக்கிற? நான் வீட்டுக்குள்ளயே ரெண்டு கம்பளிகளை எடுத்துப் போர்த்திகிட்டு படுத்திருக்கேன். அப்பவும் என்னால இந்தக் குளிரைத் தாங்கமுடியலை. உன்னால மட்டும் இந்தக் குளிரை எப்படி தாங்கிக்கமுடியுது? ‘ என்று கேட்டான் வீட்டுக்காரன்.
‘அது ஒரு ரகசியம்ங்க. உங்களுக்கு மட்டும் சொல்றேன். மனசுக்குள்ளயே வச்சிக்குங்க. என் மேல விழற எல்லாக் குளிரையும் ஈரத்தையும் அதோ அந்த ஆடு தாங்கிக்குது. அதை இப்படி ஒரு தூண்ல பக்கத்துலயே கட்டி வச்சிகிட்டு படுத்தா போதும், எல்லாவிதமான குளிரையும் அது தன் பக்கமா இழுத்து உறிஞ்சி எடுத்துக்கும். நம்ம பக்கம் குளிர்காத்தே அடிக்காது. நிம்மதியா தூங்கலாம்’ என்றான் ஹனுமப்பா.
அந்த வீட்டுக்காரன் ஒருகணம் திரும்பி அந்த ஆட்டையும் அவனையும் மாறிமாறிப் பார்த்தான். ‘நீ சொல்றதெல்லாம் உண்மையா?’ என்று கேட்டான்.
‘சத்தியமா உண்மைதாங்க. நான் எதுக்கு உங்ககிட்ட பொய் சொல்லணும்? இதோ, உங்க முன்னால இப்படி வெத்து உடம்போட படுத்திருக்கேன்னா, அதுக்கு அந்த ஆடுதான் காரணம். நம்பறதும் நம்பாததும் உங்க இஷ்டம்’ என்று தொடர்ந்து தூங்க விரும்புகிறவனைப்போல கொட்டாவி விட்டான் ஹனுமப்பா.
வீட்டுக்காரன் சில கணங்கள் யோசனையில் மூழ்கினான். பிறகு ‘எங்க அம்மாவுக்கு குளிர்காலத்துல மூச்சுப்பிரச்சினை வந்துடும். இருபத்து நாலு மணி நேரமும் இருமிகிட்டே இருப்பாங்க. பெரிய பெரிய ஊருலேர்ந்து பல வைத்தியருங்க வந்து மருந்து கொடுத்து பார்த்துட்டாங்க. ஒன்னும் சரிசெய்ய முடியலை. இப்ப கூட இருமிகிட்டேதா இருக்காங்க’ என்று வருத்தமுடன் சொன்னான்.
‘அதுக்கெல்லாம் கவலைப்படாதீங்க ஐயா. கடவுள் புண்ணியத்துல எல்லாம் சீக்கிரமா சரியாயிடும்’ என்று ஆறுதலாகச் சொன்னான் ஹனுமப்பா.
‘இந்த ஆட்டை எனக்கு வித்துடறீங்களா?. எங்க அம்மாவுடைய வியாதியை குணப்படுத்த கடவுளாவே உங்களை இங்க அனுப்பிவச்ச மாதிரி இருக்குது.’
‘ஐயையோ, என்னங்க இது? கடைசியில அடிமடியிலயே கை வைக்கறீங்க? இந்த ஆட்டை உங்ககிட்ட குடுத்துட்டா, குளிர்காலத்துல நான் என்ன செய்யறது?’
‘உனக்கு வயசு குறைவு. எப்படியாவது சமாளிக்கலாம். வயசுல பெரியவங்களால எப்படி சமாளிக்கமுடியும்? அம்மாவுக்கு இப்படிப்பட்ட வேதனை வந்த பிறகு என்னால தூங்கவே முடியலை. நான் நிம்மதியா தூங்கியே பத்து பதினஞ்சி வருஷத்துக்கும் மேல ஆவுது. அவுங்க பக்கத்துலயே இருக்கவேண்டிதா இருக்குது.’
வீட்டுக்காரன் மன்றாடிக் கேட்பதைப் பார்த்துவிட்டு, சிறிது நேரம் யோசனையில் மூழ்கியிருப்பவனைப்போல தலைகுனிந்திருந்தான் ஹனுமப்பா.
மீண்டும் மறுத்துப் பேசுகிறவகையில் அவனை விட்டுவிடக் கூடாது என்கிற எண்ணத்தில் வீட்டுக்காரன் அவசரமாக ‘இங்க பாரு, ஒன்னும் யோசிக்காத. உனக்கு நான் ஐநூறு வெள்ளிப்பணம் கொடுக்கறேன். இந்த ஆட்டை எனக்குக் கொடுத்துடு’ என்று சொன்னான்.
அந்தத் தொகையைக் கேட்டதும் ஹனுமப்பாவுக்கு மயக்கமே வந்துவிடும்போல இருந்தது. ஆயினும் முகத்தில் எவ்விதமான உணர்வையும் காட்டாமல் யோசனையில் மூழ்கியிருந்தான்.
‘இன்னும் என்ன யோசனை? இப்பவே நான் பணம் கொண்டுவந்து கொடுக்கறேன். தயவுசெஞ்சி இந்த ஆட்டைக் கொடுத்து எங்க அம்மாவைக் காப்பாத்து’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் வேகமாகச் சென்றான். சில நிமிடங்களிலேயே நாணயங்கள் அடங்கியஒரு பையோடு திரும்பி வந்தான்.
‘இந்தா, இதைப்புடி. இதுல ஐநூறு வெள்ளி இருக்குது. வச்சிக்கோ. எல்லாமே உனக்குத்தான்’ என்று சொல்லிக்கொண்டே ஹனுமப்பாவின் கையைப் பிடித்து துணிமுடிச்சைக் கொடுத்தான்.
‘சரி, நீங்க இவ்வளவு சொல்லி கேக்கும்போது மறுத்துப் பேச எனக்கு மனசில்லை. இந்தாங்க என்னுடைய ராசியான ஆடு. இனிமேல இது உங்க ஆடு. வச்சிக்கங்க’ என்று ஆட்டை வீட்டுக்காரனிடம் ஒப்படைத்தான்.
கிடைத்த வாய்ப்பை விடக்கூடாது என்ற எண்ணத்துடன் அக்கணமே ஆட்டை ஓட்டிக்கொண்டு வீட்டுக்குள் சென்றான் வீட்டுக்காரன். உள்ளே சென்றதும் கதவை மூடித் தாளிட்டுக்கொண்டான்.
ஐந்நூறு வெள்ளிப்பணம் கொண்ட பையை தன் கைப்பைக்குள் பாதுகாப்பாக வைத்து மூடினான் ஹனுமப்பா. இனியும் அந்த வீட்டில் தங்கியிருப்பது ஆபத்து என்று அவனுக்குத் தோன்றியது. வெளியேயும் மழை விட்டிருந்தது. அதனால் அப்போதே உலரவைத்திருந்த ஆடைகளை எடுத்து அவசரமாக அணிந்துகொண்டு வீட்டைவிட்டு வெளியேறினான்.
தன் அம்மா படுத்திருந்த அறைக்கு வேகவேகமாக ஆட்டை அழைத்துச் சென்றான் வீட்டுக்காரன். அம்மா படுத்திருந்த கட்டிலின் காலிலேயே அந்த ஆட்டைக் கட்டிவிட்டு நிம்மதியாக மூச்சுவிட்டான். அப்போதும் இருமிக்கொண்டிருந்த அம்மாவைப் பார்த்து ‘இனிமேல நீ எதுக்கும் கவலைப்படவேணாம்மா. உன் குளிரையெல்லாம் இந்த ஆடு இனிமேல பார்த்துக்கும். நீ நிம்மதியா தூங்கலாம்’ என்று சொல்லிவிட்டு தன் அறைக்குச் சென்றான்.
அன்று இரவு மூச்சுப்பிரச்சினையால் அம்மா தொடர்ந்து இருமிக்கொண்டே இருந்தார். மகனை அழைப்பதற்குக்கூட அவர் குரல் எழவில்லை. ஒரு நொடி நேரம் கூட இடைவெளி இல்லாமல் இருமிக்கொண்டே இருந்தார் அவர். அவர் வாயிலிருந்து ஒரு சொல் கூட எழவில்லை. தன் மகன் ஏன் இப்படி ஓர் ஆட்டைக் கொண்டுவந்து தனக்கு முன்னால் கட்டிவிட்டுச் செல்கிறான் என்பதை அவரால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. எதற்கு என ஒரு சின்னக் கேள்வி கூட கேட்கமுடியாதபடி இருமல் அவரைப் படாத பாடு படுத்தியது. இரண்டுமூன்று மணி நேரம் தொடர்ந்து இருமிக்கொண்டே இருந்ததால் அந்த ஆயாசத்திலேயே அவர் உயிர் பிரிந்தது.
அம்மாவின் மூச்சுப் பிரச்சினைக்குத் தக்க சமயத்தில் அந்த ஆண்டவனே தன் கையில் ஒரு மருந்து கிடைக்கும்படி செய்திருக்கிறார் என்பதை நினைத்து நினைத்து அந்த வீட்டுக்காரன் மகிழ்ச்சியில் மூழ்கினான். இனிமேலாவது நாம் நிம்மதியாக தூங்கவேண்டும் என நினைத்தவனாக, படுக்கையில் படுத்து உறக்கத்தில் மூழ்கினான். பல மணி நேர ஆழ்ந்த உறக்கத்துக்குப் பிறகு அவன் படுக்கையிலிருந்து மெதுவாக எழுந்தான். அப்போது விடிந்துவிட்டது. பின்கட்டு பக்கமாக நின்றிருந்த மரங்களிலிருந்து காக்கைகள் கூச்சலிடும் சத்தம் கேட்டது.
கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்து நின்றான் அவன். அம்மாவின் அறையிலிருந்து இருமல் சத்தம் வராததை உணர்ந்து தனக்குள் புன்னகைத்துக்கொண்டான். ஆட்டின் உதவியோடு அம்மா நிம்மதியாக உறங்குவதாக நினைத்துக்கொண்டு, தன் வேலைகளில் மூழ்கிவிட்டான் வீட்டுக்காரன். அம்மாவின் அறைப்பக்கம் செல்லவில்லை. தோட்டத்து வேலை, தொழுவத்து வேலை என எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு நீண்ட நேரம் கழித்த பிறகு அறைக்குத் திரும்பினான். அப்போதும் அம்மாவின் அறையிலிருந்து ஒரு சத்தமும் வரவில்லை.
காலையில் கஞ்சி குடிக்கும் நேரம் வந்துவிட்டதால், ஒரு பாத்திரத்தில் கஞ்சி எடுத்துக்கொண்டு அம்மாவின் அறைக்குச் சென்றான் அவன். அம்மா, அம்மா என அழைத்துக்கொண்டே அவரைத் தொட்டு எழுப்பினான். அவர் உடலை அவன் அசைத்ததுமே அவர் முகம் மறுபுறம் சரிந்தது. அதைப் பார்த்ததுமே அதிர்ச்சியுடன் அவருடைய கையைப் பிடித்து நாடியைச் சோதித்துப் பார்த்தான். துடிப்பு அடங்கிவிட்டிருந்தது. அம்மாவின் உயிர் பிரிந்துவிட்டது என்பதை அவன் அப்போதுதான் உணர்ந்தான்.
அவன் பார்வை தானாகவே கட்டிலின் காலோடு கட்டப்பட்டிருந்த ஆட்டின் மீது பதிந்தது. எல்லாக் குளிரையும் ஏற்றுக்கொண்டு அருகில் இருப்பவரின் மீது வெப்பம் படர்ந்திருக்கும்படி அந்த ஆடு பார்த்துக்கொள்ளும் என அந்த நாடோடி சொன்னதெல்லாம் பொய்யோ என்று அவனுக்குத் தோன்றியது. அவனுக்கு ஐநூறு வெள்ளிப்பணத்தைக் கொடுத்து அந்த ஆட்டை வாங்கியிருக்கிறோம் என்ற எண்ணம் எழுந்ததுமே அவன் உடல் தீப்பற்றியதுபோல எரிந்தது.
அந்தக் கோபத்தையெல்லாம் மனத்தின் ஒரு மூலையில் ஒதுக்கிவைத்துவிட்டு, அம்மாவின் தகனக்கிரியைக்குத் தேவையான வேலைகளைச் செய்யத் தொடங்கினான். அத்தெருவில் வசிப்பவர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவித்தான். எல்லாவிதமான சடங்குகளையும் செய்தான். மாலையில் அவர் உடல் ஊர்வலமாக சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
தன்னை ஏமாற்றியவனைத் தேடிப் பிடித்து தன் கையால் நாலு அடி கொடுக்கவேண்டும் என்று அவன் மனம் கொதித்தது. பார்ப்பதற்கு அப்பாவி மாதிரி இருந்துகொண்டு வெல்லம் மாதிரி பேசி தன்னை இப்படி ஏமாற்றிவிட்டான் என்பதை நினைத்தாலே அவன் உள்ளம் குமுறியது. அவனால் அமைதியாக ஒரு வாய் சோறு கூட சாப்பிட முடியவில்லை. ஒரு ஐந்து நிமிட நேரம் கூட கண்களை மூடி உறங்க முடியவில்லை. எல்லா நேரமும் உளைச்சலாகவே இருந்தது.
மறுநாள் விடிந்ததும் அவனைத் தேடிக்கொண்டு அவன் சென்ற திசையில் நடக்கத் தொடங்கினான் அவன். ஒருநாளில் அவன் வெகுதூரம் சென்றிருக்க வாய்ப்பில்லை என்றும் வேகமாக நடந்துசென்றால் ஒன்றிரண்டு நாட்களிலேயே அவனைப் பிடித்துவிடலாம் என்றும் அவன் நினைத்தான்.
கருக்கலிலேயே வெள்ளிப்பணம் கொண்ட முடிச்சோடு ஊரைவிட்டுப் புறப்பட்ட ஹனுமப்பா அடுத்த ஊரை அடைந்தான். பிறகு தன் திசையை மாற்றிக்கொண்டு வேறொரு கிராமத்துக்குச் சென்றான். அந்தக் கிராமத்தை ஒட்டி ஒரு காடு இருந்தது. அந்தக் காட்டுக்குள் ஓர் ஒற்றையடிப்பாதை நீண்டு சென்றது. அதன் வழியாகச் சென்று அடுத்த ஊரை அடையலாம் என அவன் திட்டமிட்டு நடக்கத் தொடங்கினான்.
சிறிது தொலைவு நடந்ததும் அவனுக்கு ஆயாசமாக இருந்தது. பசியாகவும் இருந்தது. ஒரு குளம் இருக்கும் இடமாகத் தேடிக் கண்டுபிடித்தான். தன் மூட்டையைக் கரையில் வைத்துவிட்டு முதலில் குளத்திலிறங்கிக் குளித்தான். பிறகு உடைமாற்றிக்கொண்டு பக்கத்திலிருந்த மாமரத்திலிருந்து பழங்களைப் பறித்துச் சாப்பிட்டான். வயிறு நிறைந்த பிறகே அவனுக்குத் தெம்பு வந்தது. கைகளைக் கழுவிக்கொண்டு, வயிறு நிறைய தண்ணீர் குடித்த பிறகு கரையேறி மீண்டும் நடக்கத் தொடங்கினான். அப்போது அவன் சற்றும் எதிர்பாராத வகையில் அவனுக்கு முன்னால் ஒரு கரடி வந்து நின்றது.
அவன் ஆழ்மனத்தில் அச்சம் இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் தைரியமானவனைப்போல கையை வீசி ‘போ போ’ என்று கரடியை விரட்டினான். நின்ற இடத்தைவிட்டு நகராமல் நின்ற கரடி, அவனையும் நகரவிடாமல் நிற்கவைத்தது. அதைக் கண்டு வெகுண்ட ஹனுமப்பா சட்டென குனிந்து கீழே கிடந்த உலர்ந்த மரக்கிளையை எடுத்து அக்கரடியை ஓங்கி அடித்தான். தாக்குதலுக்கு இலக்கான கரடி ஆத்திரத்தோடு அவனை நெருங்கி அவனை அடிக்கத் தொடங்கியது. இருவரும் மாறிமாறி அடித்துக்கொண்டனர்.
சரியான தருணம் பார்த்து அவன் அந்தக் கரடியின் கைகளைப் பின்புறமாக வளைத்து மடித்து நெருக்குதலைக் கொடுத்தான் ஹனுமப்பா. அந்த அழுத்தத்தைத் தாங்கமுடியாத கரடி அவன் பிடியிலிருந்து திமிறி தப்பிக்க முயற்சி செய்தது. அப்போது இறுக்கம் தாளாத கரடி தன்னை மீறி சாணம் போட்டது. உருண்டை உருண்டையாக அதன் சாணம் பல இடங்களில் சிதறியது.
ஆனால் அப்போதும் ஹனுமப்பா தன் இரும்புப்பிடியைத் தளர்த்தவில்லை. அவனை எப்படியாவது கீழே தள்ளிவிடவேண்டும் என நினைத்து சுற்றிச்சுற்றி உடலை முறுக்கியது. அப்போது ஹனுமப்பாவின் உடல் குலுங்கியதால் அவன் தோளோடு தொங்கிய பையிலிருந்த ஐநூறு வெள்ளி நாணயங்களும் கீழே சிதறி விழுந்தன. சிதறிய நாணயங்கள் அனைத்தும் ஏற்கனவே சிதறியிருந்த சாணத்தின் மீது சென்று விழுந்தன.
பையிலிருந்து நாணயங்கள் சிதறுவதையும் தடுக்கமுடியாமல், சிதறிவிழுந்த நாணயங்களைத் தேடி எடுக்கவும் முடியாமல் ஹனுமப்பா தவியாய்த் தவித்தான். தன் பிடியை மேலும் மேலும் இறுக்குவதன் மூலம் அந்தக் கரடியைத் துன்புறுத்தினான். பிடி இறுக இறுக அந்தக் கரடியின் ஆத்திரமும் அதிகரித்தது.
அப்போது அந்த வழியாக எங்கிருந்தோ ஒரு குதிரை வரும் டொக் டொக் சத்தம் கேட்டது. நல்ல வேளை என்று சத்தம் வந்த திசையில் திரும்பிப் பார்த்தான் ஹனுமப்பா. அவன் நினைத்ததுபோலவே யாரோ ஒரு அரண்மனை வீரன் குதிரை மீது வந்துகொண்டிருந்தான். சிப்பாய் உடை அணிந்திருந்தான். அவன் நெருங்கி வரும்வரை காத்திருந்த ஹனுமப்பா சத்தம் போட்டு அவனை அழைத்தான். ஒரு கரடியின் முதுகையொட்டி நின்றுகொண்டு கைகளை முறுக்கியபடி நின்றிருக்கும் மனிதனின் தோற்றத்தைப் பார்க்கப்பார்க்க அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவனைச் சுற்றி சாண உருண்டைகள் கிடப்பதையும் அவற்றில் வெள்ளி நாணயங்கள் கிடப்பதையும் பார்த்து அவன் ஆச்சரியம் பல மடங்காகப் பெருகியது. அதனால் அவர்களுக்கு அருகில் சென்று குதிரையிலிருந்து இறங்கினான்.
‘என்ன விஷயம்? கரடி என்ன செஞ்சது? நீ ஏன் கரடி கூட சண்டை போடற?’ என்று கேட்டான் குதிரைவீரன்.
‘நான் ஒன்னும் சண்டை போடலை. இந்தக் கரடிக்கு இது ஒரு பயிற்சி. அதோ அங்க சாண உருண்டைகள் கெடக்குது பாரு, அதுக்கு மேல வெள்ளி நாணயங்கள் கெடக்குது தெரியுதா? அதெல்லாம் கரடி போட்டதுதான். அதுக்கு இது ஒரு பயிற்சி. ஒவ்வொரு முறையும் சாணம் போடும்போதும் இப்படி வெள்ளி நாணயத்தையும் போடும். அதை இன்னும் இன்னும் சாணம் போட வைக்கணும்ங்கறதுக்காகத்தான் இப்படி பிடிச்சிட்டிருக்கேன்.’
அதைக் கேட்டதும் ‘அப்படியா, ஆச்சரியமா இருக்கே’ என்று வாயைப் பிளந்தான் குதிரைவீரன். தன்னைச் சுற்றிச் சிதறிக் கிடந்த வெள்ளி நாணயங்கள் மீது பதிந்த பார்வையை அவனால் விலக்கிக்கொள்ளவே முடியவில்லை.
‘ஆமாம் ஆமாம். எல்லாமே இந்தக் கரடி வேலைதான். இது ஒரு மாயக்கரடி. வழக்கமா ஒவ்வொரு நாளும் ஆயிரம் வெள்ளிப்பணம் போடும். என்னமோ தெரியலை, இதுவரைக்கும் ஐநூறு வெள்ளிப்பணம்தான் போட்டிருக்குது. அதுக்குதான் இன்னும் கொஞ்சம் கூடுதலா பயிற்சி கொடுத்திட்டிருக்கேன்’ என்றான் ஹனுமப்பா

