Skip to content
Home » நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #23 – ரங்கம்மா

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #23 – ரங்கம்மா

ஒரு கிராமத்தில் ஒரு பெரிய பண்ணையார் வசித்துவந்தார். அவர் பெயர் நாராயணப்பா. அவருடைய குணத்துக்கு ஏற்றவகையில் அவருடைய மனைவியும் இருந்தார். அவர் பெயர் லட்சுமியம்மா. அவருக்கு அந்தக் கிராமத்தைச் சுற்றி எல்லாத் திசைகளிலும் ஏராளமான நிலங்கள் இருந்தன

அவருடைய கிராமத்தை ஒட்டி துங்கபத்திரை நதியிலிருந்து  அப்பகுதியின் விவசாய வேலைகளுக்காகப் பிரித்துவிடப்பட்ட கால்வாய் ஓடிக்கொண்டிருந்தது. நீர்ப்பாசனத்துக்குக் குறைவில்லாததால் அவருடைய நிலங்களில் விளைச்சல் நன்றாக இருந்தது. அவருடைய நிலங்களில் ஒரு பகுதியில் நெல் விளையும்போது இன்னொரு பகுதியில் சோளம் விளையும்

அவருடைய நிலங்களில் ஏராளமான குடியானவர்கள் வேலை செய்தனர். அவர்கள் செய்யும் வேலைகளுக்குத் தக்கபடி அன்றன்றே அவர்களுக்குக் கொடுக்கவேண்டிய தொகையை அவர்கள் விரும்புகிறவண்ணம் வெள்ளிப்பணமாகவோ அல்லது தானியங்களாகவோ கொடுத்து அனுப்பிவிடுவார் பண்ணையார். மற்றவர்களுக்குக் கொடுக்கும் விஷயத்தில் அவர் தாராள மனம் கொண்டவராக இருந்தார். அதனால் அந்தக் கிராமத்தில் வசித்துவந்த குடியானவர்கள் மட்டுமன்றி, அடுத்தடுத்த கிராமங்களில் வசித்துவந்த குடியானவர்களும் நாராயணப்பாவுடைய நிலங்களில் வேலை செய்வதற்குப் போட்டி போட்டுக்கொண்டு வந்தனர்.

அந்தப் பண்ணையாருக்கு அடுத்தடுத்து நான்கு ஆண்குழந்தைகள் பிறந்தார்கள். அனைவருக்கும் கடைசியாக ஒரு பெண்குழந்தை பிறந்தது. ஆண் குழந்தைகளுக்கு ஈஸ்வரப்பா, ஜகதீஷப்பா, கோபாலப்பா, சிதானந்தா என்று பெயர் சூட்டினார். பெண் குழந்தைக்கு ரங்கம்மா என்று பெயர் சூட்டினார்

கடைசியாகப் பிறந்த ரங்கம்மா மீது வீட்டிலிருந்த எல்லோரும் பாசத்தோடு இருந்தனர். எல்லோருக்கும் அவள்  செல்லக் குழந்தையாக இருந்தாள். அனைவரும் அவளைரங்கு ரங்குஎன செல்லமாக அழைத்துக் கொஞ்சினர். நான்கு சகோதரர்களும் அவளை மாறிமாறி தோளில் தூக்கிவைத்துக்கொண்டும் மடியில் வைத்துக்கொண்டும் கொஞ்சிக்கொண்டே இருந்தனர்விளையாட்டு காட்டினர். வீட்டுக்கு வெளியே அழைத்துச் சென்று ஏரிகளையும் குளங்களையும் சுற்றி வந்தனர். சுற்றுப்புறங்களில் தெரியும் ஏரிகளையும் மரங்களையும் ஆற்றையும் பறவைகளையும் சுட்டிக் காட்டினர். அவள் துள்ளி விளையாடினால், அவளோடு சேர்ந்து அவர்களும் துள்ளி விளையாடினர். ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் எப்போதும் எல்லோரும் இணைந்தே இருந்தனர்.

எல்லோரும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தனர். அவர்கள் கல்வி கற்கும் பருவம் வந்ததும் ஒவ்வொரு நாளும் வீட்டுக்கே வந்து சொல்லிக் கொடுக்கும் வகையில்  ஒரு குருவை ஏற்பாடு செய்தார். ரங்கம்மாவுக்கு இசையும் பாடலும் சொல்லிக் கொடுக்க தனியாக இன்னொரு ஆசிரியர் வந்து சென்றார்.

எல்லோரும் வளர்ந்து பெரியவர்களானார்கள். தக்க வயதை அடைந்ததும் அவர்களுக்கு பண்ணையார் தனிப்பட்ட முறையில் வணிக உத்திகளையும் சேமிப்பு வழிகளைப்பற்றியும் எளிய வாழ்க்கைமுறைகளைப்பற்றியும் சொல்லிக் கொடுத்தார். விவசாயத்திலும் ஈடுபடுத்தி, தொழிலாளர்களோடு பழகச் செய்து, எல்லா வேலைகளையும் முறையாகத் தெரிந்துகொள்ள வழிவகுத்தார்.

அனைவரும் திருமண வயதை எட்டினர். எல்லோருக்கும் திருமணம் செய்து வைத்த பிறகு தன் மனைவியை அழைத்துக்கொண்டு வடக்கே இமயமலை வரைக்கும் ஒரு யாத்திரை சென்றுவர வேண்டும் என அவர் தன் மனத்துக்குள்ளேயே ஒரு திட்டம் வகுத்துவைத்திருந்தார்

ஒருநாள் இரவு சாப்பிடும் நேரத்தில் எல்லோரிடமும் தம் திட்டத்தைத் தெரிவித்தார். முதலில் அவர்கள் அனைவரும் திருமணத்துக்கு உடன்பட மறுத்தாலும் நாராயணப்பா அளித்த விளக்கங்களைக் கேட்ட பிறகு எல்லோரும் திருமண ஏற்பாட்டுக்குச் சம்மதித்தார்கள்

அடுத்த நாளே நாராயணப்பா தன் நம்பிக்கைக்கு உரிய சில நண்பர்களை மட்டும் தனிப்பட்ட வகையில் அழைத்து அவர்களிடம் தம் நான்கு  பிள்ளைகளுக்கும் பொருத்தமான மணமகள்களைத் தேடி விவரங்களைத் தெரிவிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார்

நாராயணப்பாவின் நண்பர்கள் பெண் தேடும் படலத்தைத் தொடங்கினர். எல்லாத் திசைகளிலும் பயணம் செய்து ஏராளமானவர்களிடம் பேசி பண்ணையாரின் பிள்ளைகளுக்குப் பொருத்தமான பெண்களைப்பற்றிய விவரங்களையெல்லாம் சேகரித்துக்கொண்டு வந்து நாராயணப்பாவிடம் தெரிவித்தனர். தம் பிள்ளைகளை மணந்துகொள்ள இத்தனை பெண்கள் தயாராக இருக்கிறர்கள் என்பதைத் தெரிந்துகொண்டதும் நாராயணப்பா மட்டற்ற மகிழ்ச்சியில் திளைக்கத் தொடங்கினார்

நாராயணப்பா தனக்குக் கிடைத்த மணப்பெண்கள் பற்றிய விவரங்களையெல்லாம் நான்கு பிள்ளைகளிடமும் பகிர்ந்துகொண்டார். அவ்விவரத்தொகுப்பை முன்வைத்து யோசித்து, மனம் கவர்ந்த பெண்களின் விவரங்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அப்பெயர்களை அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொடுத்ததும் ஒரு நல்ல நாளில் அனைவரும் சேர்ந்து பயணம் செய்து அவர்கள் தேர்ந்தெடுத்த  பெண்களுடைய வீடுகளுக்குச் சென்று அவர்களைப் பார்த்துவிட்டு வந்தனர். பெண் வீட்டார்களும் மாப்பிள்ளை வீட்டுக்கு ஒருமுறை தம் உறவினர்களோடு வந்து பார்த்துவிட்டுச் சென்றனர்

இருதரப்பினரும் நல்ல முடிவை எட்டியதால், நான்கு திருமணங்களுக்கும் முகூர்த்தத்தேதிகளை முடிவு செய்வதற்கு அவர்கள் அந்த ஊரில் வாழ்ந்துவந்த ஜோசியரை அணுகினர்

நாலு கல்யாணங்களையும் ஒரே தேதியில் செய்யப் போறீங்களா, நாலு வெவ்வேறு தேதிகள்ல செய்யப் போறீங்களா? அதைப்பத்தி முடிவு செஞ்சிட்டீங்களா?’ என்று கேட்டார் ஜோசியர்.

அந்தக் கேள்விக்கு நாராயணப்பாவால் உடனடியாகப் பதில் சொல்லமுடியவில்லை. அதுவரை அவர் அந்தக் கோணத்தில் யோசித்திருக்கவில்லை. தனக்குப் பக்கத்திலேயே அமர்ந்திருந்த தன் மனைவியிடம்நீ என்னம்மா சொல்ற? எல்லாக் கல்யாணங்களையும் ஒன்னா செய்யலாமா? தனித்தனியா செய்யலாமா?’ என்று கேட்டார்

அவர் மனைவிஎல்லாக் கல்யாணங்களையும் ஒரே முகூர்த்தத்துல செஞ்சிடலாம்ங்க. சட்டுனு ஒரு கடமை முடிஞ்சிடும். நமக்கும் நிம்மதியா இருக்கும்என்றார்.

அதைக் கேட்டு நாராயணப்பா தலையசைத்துக்கொண்டே பக்கத்திலேயே அமர்ந்திருந்த பெண் வீட்டார்களைப் பார்த்துநீங்க என்ன நெனைக்கறீங்க, சொல்லுங்கஎன்றார்

ஒரே நாள்ல எல்லாக் கல்யாணங்களையும் நடத்தறோம்னு வச்சிக்குங்க, கல்யாணக் கொண்டாட்டமும் மகிழ்ச்சியும் அந்த ஒரே நாளோடு முடிஞ்சிபோயிடும். அதுக்குப் பதிலா நாலு கல்யாணங்களையும் தனித்தனியா வேறவேற நாளுங்கள்ல நடத்தினா ஆண்டு முழுக்க கொண்டாட்டமாவும் மகிழ்ச்சியாவும் இருக்கும். தனித்தனியா நடத்தறதுல அப்படி ஒரு வாய்ப்பு இருக்குது. அதைத் தவறவிட்டுடக்கூடாதுன்னுதான் எனக்குத் தோணுதுஎன்றார் ஒரு பெண்வீட்டார். மற்ற பெண் வீட்டார்களும் அதே செய்தியைத்தான் வேறுவேறு கோணங்களில் முன்வைத்தனர்.

எல்லாத் திருமணங்களையும் ஒரே நாளில் வைத்து நடத்துவதில் தம் குடும்பத்துக்குரிய தனித்துவம் எதுவும் இல்லாமல் போய்விடும் என்றொரு எண்ணம் நான்கு பெண்வீட்டார்களிடமும் இருந்தது. ஆனால் அதை நேரிடையாகச் சொல்லாமல், சுற்றிவளைத்து எதை எதையோ பேசி தனித்தனி திருமணத்துக்கான குரலை நிறுவினர்

நாராயணப்பா ஜோசியரைப் பார்த்து, ‘தனித்தனி முகூர்த்தமாவே குறிச்சிடுங்க. எல்லாருக்கும் அதுதான் வசதிஎன்றார்.

நல்லது. அப்படியே செஞ்சிடலாம்என்று ஜோசியர் பஞ்சாங்கத்தை எடுத்து பக்கங்களைப் புரட்டினார். திடீரென எதையோ நினைத்துக்கொண்டவராகதனித்தனி முகூர்த்தம்னா, ரெண்டுமாச இடைவெளி போதுமா, இல்லை மூனு மாச இடைவெளி வேணுமா?’ என மீண்டும் ஒரு கேள்வியை எழுப்பினார்.

நாராயணப்பா தன் மனைவியின் பக்கம் திரும்பினார். அவர் அங்கிருந்த பெண் வீட்டார்களையும் ஒருமுறை பார்த்துவிட்டுரெண்டு மாச இடைவெளியே போதும்ங்க. மூனு மாசம்னு கணக்கு போட்டா, எல்லாக் கல்யாணங்களையும் செஞ்சி முடிக்கறதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிடும்என்றார்

பெண் வீட்டார்கள் பக்கமாக மீண்டும் திரும்பிப் பார்த்தார் நாராயணப்பா. ‘அதனால் என்ன? இருக்கட்டுமேஎன்றார்கள் அவர்கள். அதனால் ஜோசியரைப் பார்த்துரெண்டு மாச இடைவெளியே போதுங்கய்யா. அந்த மாதிரியே தேதியை குறிச்சிக் கொடுங்கஎன்று சொன்னார் நாராயணப்பா

ஜோசியர் மணமக்களின் பிறந்த நட்சத்திர விவரங்களை ஒரு பக்கமாக எழுதிவைத்துக்கொண்டு மனசுக்குள்ளேயே ஏதேதோ கணக்குப் போட்டார். பிறகு தனக்குள் எதையோ முணுமுணுத்தபடி கைவிரல்களை மடித்தும் பிரித்தும் மீண்டும் ஒரு கணக்குப் போட்டார். இறுதியில் நான்கு வெள்ளைத்தாள்களை எடுத்து ஓரங்களில் மஞ்சளும் குங்குமமும் தடவினார். பிறகு ஒவ்வொரு தாளிலும் ஒவ்வொரு ஜோடியின் பெயரையும் அவர்களுக்குரிய முகூர்த்தத்தேதி விவரத்தையும் எழுதி வெற்றிலை பூ பழங்களோடு ஒரு தட்டில் வைத்துக் கொடுத்தார். நாராயணப்பாவும் அவர் மனைவியும் எழுந்து நின்று அதைப் பணிவுடன் வாங்கிக் கொண்டனர். அந்த விவரங்களை அங்கிருந்த பிற பெண்வீட்டுக்காரர்களும் குறித்துக்கொண்டனர்

திட்டமிட்டபடியே முதல் திருமணம் வைகாசி மாத முகூர்த்தத்தில் நடைபெற்றது. இரண்டாவது திருமணம் ஆவணி மாத முகூர்த்தத்தில் நடைபெற்றது. மூன்றாவது திருமணம் கார்த்திகை மாதத்தில் நடைபெற்றது. எல்லாத் திருமணங்களும் திட்டமிட்டபடி நடைபெறுவதை நினைத்து நாராயணப்பாவின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும்  மகிழ்ச்சியில் மிதந்தனர்

எதிர்பாராத விதமாக, சித்திரை மாதத்தில் நடைபெற வேண்டிய நான்காவது திருமணம் நடக்கவில்லைசிதானந்தா ஏமாற்றத்தில் நிலைகுலைந்துவிட்டான். திருமணத்துக்கு ஒரு வாரம் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் சிதானந்தாவுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த மணமகள் தனக்கு அந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என ஒரு கடிதம் எழுதிவைத்துவிட்டு, தன் மனத்துக்குப் பிடித்த ஒருவனுடன் அந்த ஊரைவிட்டே வெளியேறிவிட்டாள்

குடும்பமே நிலைகுலைந்து துயரத்தில் மூழ்கியது. ஒரு வாரம் வரைக்கும் அந்தப் பண்ணையில் எந்த வேலையும் நடக்கவில்லை. நாராயணப்பாவும் சோர்ந்து உட்கார்ந்துவிட்டார். ஒரு வாரத்துக்குப் பிறகு அவர் தன் மனத்தைத் தேற்றிக்கொண்டு வழக்கமான வேலைகளில் ஈடுபடத் தொடங்கினார். சிதானந்தாவை அழைத்துஎல்லாத்தையும் மறந்துட்டு புது மனுஷனா இரு. நாம பொண்ணு பார்த்தது, முகூர்த்தத்தேதி குறிச்சது, பேசனது எல்லாமே ஒரு கனவுன்னு நெனச்சிக்கோ. உனக்குப் பொருத்தமான பொண்ணு வேற எங்கோ பொறந்திருக்கா. அவளை நான் கண்டுபிடிக்கறேன். அதுவரை பொறுமையா இருஎன்று ஆறுதல் சொன்னார்

நிகழ்ந்த துயரத்தை மறந்து கொஞ்சம்கொஞ்சமாக அந்தக் குடும்பம் இயல்பான நிலைக்குத் திரும்பியது

அடுத்த ஒரு வருடத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்துக்குச் சென்று சிதானந்தாவுக்கு ஏற்ற பெண்ணைத் தேடுவதே நாராயணப்பாவின் வேலையாக அமைந்துவிட்டது. யாரோ ஒரு குறிப்பைக் கொடுப்பார்கள். அதை நம்பி, அவரும் அந்த ஊரை நோக்கிச் செல்வார். அங்கு சென்ற பிறகுதான், அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட செய்தி அவருக்குக் கிடைக்கும். அல்லது அந்தச் சம்பந்தத்தில் தனக்கு விருப்பமில்லை என்று நாகரிகமாகச் சொல்லி அனுப்பிவிடுவார்கள். இப்படியாக அவர் எடுத்த எந்த முயற்சியும் வெற்றி அளிக்கவில்லை. அதை நினைத்து நினைத்து அவர் மனம் வாடினார். மூன்று திருமணங்களை வெற்றிகரமாகச் செய்துமுடித்த தன்னால் இந்த ஒரு திருமணத்தை நல்லவிதமாகச் செய்யமுடியவில்லையே என்பதை நினைத்து துயரத்தில் மூழ்கினார்.

ஒருநாள் நாராயணப்பா வயலில் தனியாக இருக்கும்போது அவரைத் தேடி சிதானந்தா வந்தான். ‘என்ன சிதானந்தா, என்ன விஷயம்?’ என்று கேட்டார் நாராயணப்பா. ‘அப்பா, நான் ஒரு விஷயம் சொல்றேன். நீங்க அதைக் கேட்டு அதிர்ச்சியடையக் கூடாது. தப்பா நெனச்சிக்கவும் கூடாதுஎன்றான் அவன்.

நாராயணப்பா தன் மகனை ஒருமுறை ஆழமாகப் பார்த்து புன்னகைத்தார். ‘சொல்லுப்பா, உன் மனசுல இருக்கறதை தயங்காம சொல்லுஎன்றார்.

அப்பா, என் கல்யாணம் நின்னுபோன சமயத்துலேர்ந்து நீயும் அம்மாவும் கஷ்டப்படறதைப் பார்த்துட்டு என்னால சும்மா இருக்கமுடியலை. என் கெட்ட நேரமோ என்னமோ, இந்த ஒரு வருஷமா நீங்க எடுக்கற எந்த முயற்சியும் சரியா அமையலை. அதனால நான் ஒரு யோசனை சொல்றேன். அதும்படி செய்யமுடியுமா, பாருங்கஎன்றான்.

யோசனையா, என்ன யோசனை? சொல்லு பார்ப்போம்என்றார் நாராயணப்பா.

அப்பா, பொண்ணுக்காக நாம இந்த ஊரு, அந்த ஊருனு ஏன் தேடித்தேடி ஓடணும்நம்ம வீட்டுலயே ஒரு பொண்ண வச்சிகிட்டு எங்கயோ கண்காணாத இடத்துல இருக்கற பொண்ணுக்காக ஏன் அலையணும்? நான் நம்ம ரங்கம்மாவையே கல்யாணம் செஞ்சிக்கறேன்ப்பா. அதுக்குத் தேவையான ஏற்பாடுகளைப் பாருங்கஎன்றான் சிதானந்தா.

அதைக் கேட்டு நாராயணப்பா திகைத்து நின்றுவிட்டார். ‘என்னடா சொல்ற நீ? அறிவோடுதான் பேசறியா, அறிவில்லாம பேசறியா?’ என்று கேட்டார்.

அப்பா, நான் அறிவோடுதான் பேசறேன். எனக்குக் கல்யாணம்னு ஒன்னு செய்யணும்னு நீங்க நெனச்சீங்கன்னா, ரங்கம்மாவுக்கும் எனக்கும் கல்யாணம் செஞ்சி வைங்க. இல்லைன்னா, இந்த ஜென்மத்துலயே எனக்குக் கல்யாணம் வேணாம்என்று உறுதி தொனிக்கும் குரலில் சொன்னான்.

தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்கறது  நம்ம வழக்கத்துலயே இல்லாத ஒன்னு. அதை முதல்ல புரிஞ்சிக்கடா. இவ்ளோ காலம் பொறுத்தவன் இன்னும் கொஞ்ச காலம் பொறுத்துக்கக்கூடாதா? இன்னும் ரெண்டுமூனு மாசத்துல அலைஞ்சி திரிஞ்சி உனக்குப் பொருத்தமான பொண்ணப் பார்த்து கல்யாணம் செஞ்சி வைக்கறேன்டா. இப்ப நீ சொன்ன இந்த எண்ணத்தை விட்டுடு சிதானந்தாஎன்று கெஞ்சினார் நாராயணப்பா.

இதுதாம்பா என் முடிவு. கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது ரங்கம்மா கூடத்தான் நடக்கணும். இல்லைன்னா எனக்கு கல்யாணமே வேணாம்என்று சொல்லிவிட்டு வேகவேகமாக அந்த இடத்தைவிட்டு வெளியேறினான் சிதானந்தா.

நாராயணப்பா மனம் சோர்ந்தவராக வீட்டுக்குச் சென்றார். தன் மனைவியிடமும் பிள்ளைகளிடமும் நடைபெற்ற செய்திகளைச் சொன்னார்.

 ‘அவன் ஏன் இப்படி கோணலா யோசிக்கறான்? இருங்க, நான் போய் அவன்கிட்ட பேசிப் பார்க்கறேன்என்று வேகமாக சிதானந்தாவின் அறைக்குச் சென்றாள் லட்சுமியம்மா

எல்லோரும் அந்த அறையிலிருந்து அவள் வெளியே வரும் தருணத்துக்காகக் காத்திருந்தனர். வேகமாக அறைக்குள் சென்ற அவள் சிறிது நேரத்துக்குப் பின் மிகவும் தளர்ந்தவளாக வெளியே வந்தாள். ‘எவ்வளவோ கெஞ்சிப் பார்த்துட்டன். அழுதும் பார்த்துட்டேன். அவனுக்குப் புத்தி வேலை செய்யலை. கட்டினா ரங்கம்மாவைத்தான் கட்டுவேன்னு ஒத்தைக்கால்ல நிக்கறான்என்றாள்.

இருங்க. நான் போய் பேசிட்டு வரேன்என்று சொன்னபடியே அறைக்குள் சென்றான் மூத்த மகனான ஈஷ்வரப்பா. சிறிது நேரத்துக்குப் பின் அவனும் முகம் வாடிய நிலையில் உதட்டைப் பிதுக்கிக்கொண்டு வெளியே வந்தான். ‘அவன் சொல்றதையே திருப்பித்திருப்பி சொல்றானே தவிர, நாம சொல்ற எதுவும் அவன் காதுல ஏறமாட்டுதுஎன்று சலித்துக்கொண்டான்

இரண்டாவது மகனான ஜகதீஷப்பாவும் சிதானந்தாவைப் பார்த்து பேசிவிட்டு வந்தான். ‘பைத்தியம் மாதிரி உளறுறான். என்ன செய்யமுடியும், சொல்லுங்க. கட்டினா ரங்கம்மாவைத்தான் கட்டுவேன்னு சொல்றான்என்றபடி தலையில் அடித்துக்கொண்டான் ஜகதீஷப்பா.

அவசரம் வேணாம். இருங்க. அவன்கிட்ட பேச நானும் ஒருமுறை முயற்சி செஞ்சி பார்க்கறேன். என் பேச்சையாவது கேக்கறானான்னு பார்க்கலாம்என்றபடி மூன்றாவது மகனான கோபாலப்பா  எழுந்து சிதானந்தாவுடைய அறைக்குள் சென்றான். அவனும் போன பத்தாவது நிமிஷத்தில் வெளியே வந்துஉங்ககிட்ட சொன்னதையேதான் என்கிட்டயும் சொன்னான். ஒன்னும் மாத்தமில்லைஎன்று கைவிரித்தான்

அன்று இரவு உணவுக்குப் பிறகு அனைவரும் மீண்டும்  கூடி சிதானந்தா சொன்னதை முன்வைத்து உரையாடினர். நேரம் கடந்துகொண்டே இருந்ததே தவிர, அவர்களால் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. இழுத்துக்கொண்டே போனது.

 அப்போது கோபாலப்பாஎல்லாத்தையும் நாமளா பேசிக்கவேணாம். ரங்கம்மாவைக் கூப்பிட்டு அவகிட்டயும் நாம இந்த விஷயத்தைச் சொல்லி, அதைப்பத்தி அவ என்ன நினைக்கிறான்னு நாம் தெரிஞ்சிக்கணும். அதுதான் ரொம்ப முக்கியம்என்றார்

நீ சொல்றதெல்லாம் சரி. ஆனா இந்த விஷயத்தை அவகிட்ட யாரு நேரிடையா பேசறது?’ என்று கேட்டார் நாராயணப்பா. ‘யாரும் போவவேணாம். நானே போய் கேட்டுட்டு வரேன்.’ என்று சொன்னபடி கோபாலப்பா அந்த வரிசையில் கடைசியாக இருந்த ரங்கம்மாவுடைய அறைக்குச் சென்றான்

சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த அறையிலிருந்து கோபாலப்பா வெளியே வந்தான். அவனைத் தொடர்ந்து ரங்கம்மாவும் படபடப்போடு வந்தாள்

அப்பா, அண்ணன் சொல்றதெல்லாம்  உண்மையா? உங்களுக்கு என்ன பைத்தியமா புடிச்சிகிச்சி? அண்ணன்தான் அறிவுகெட்ட தனமா பேசினான்னா, நீங்க எப்படி அதை வாயை மூடிகிட்டு ஏத்துகிட்டீங்க? வயசுல பெரியவங்கதான நீங்க? ஒரு அண்ணனும்  தங்கச்சியும் கல்யாணம் செஞ்சிக்கறது நம்ம வழக்கத்துலயே இல்லாத விஷயம்டான்னு எடுத்துச் சொல்ல உங்களுக்கு வாய் கிடையாதா?’ என்று நாராயணப்பாவைப் பார்த்துக் கேட்டாள். அவள் முகத்தில் கோபத்தில் வியர்வை பொங்கி வழிந்தது.

ரங்கம்மா, எத்தனையோ முறை அவன்கிட்ட சொல்லிப் பார்த்துட்டோம்மா. அவன் ஏத்துக்கமாட்டேங்கறாம்மாஎன்று பரிதாபமாகச் சொன்னார் நாராயணப்பா.

அவன் ஏத்துக்கலைங்கறதுக்காக, இந்த உலகத்துல இதுவரைக்கும் இல்லாத ஒரு பழக்கத்தை நீங்க புதுசா உருவாக்க நினைக்கிறீங்களா?’ 

இல்லைம்மா. அப்படியெல்லாம் இல்லைம்மா.

அப்போதும் ரங்கம்மாவின் ஆத்திரம் குறையவில்லை. அதனால் அவளே பேசி அமைதியடையட்டும் என அனைவரும் பொறுமையாக அமர்ந்திருந்தனர்.

பொங்கிவந்த எரிச்சலையெல்லாம் கொட்டிய பிறகு ரங்கம்மாவின் மனம் சற்றே அமைதியடைந்தது. அந்த இடைவெளியில் லட்சுமியம்மா கெஞ்சும் குரலில் ரங்கம்மாவைப் பார்த்துப் பேசத் தொடங்கினாள்.

இங்க பாரு ரங்கு. எல்லாப் புள்ளைங்களுக்கும் கல்யாணம் நடந்த மாதிரி அவனுக்கும் அன்னைக்கே நடந்திருந்தா ஒரு பிரச்சினையும் வந்திருக்காது. என்ன குத்தமோ, யாரு கண்ணு பட்டதோ தெரியலை. அந்தக் கல்யாணம் அப்படியே அந்தரத்துல நின்னுபோயிடுச்சி. அதுக்கப்புறம் அவனுக்கு எப்படியாவது ஒரு கல்யாணத்தை பண்ணி அவன் காயத்தை ஆத்தணும்னு நாங்களும் நாய் படாத பாடு படறோம். எந்தத் திசையிலயும் எங்களுக்கு ஒரு விடிவுகாலம் தெரியலை. இப்பவும் முயற்சி செஞ்சிட்டேதான் இருக்கோம். இப்ப விட்டுட்டா, இனிமேல எனக்குக் கல்யாணமே வேணாம்னு போயிடுவேன்னு சொல்லி மிரட்டுறான். அதெல்லாம் தப்புடா, செஞ்சிவைக்க முடியாதுடான்னு சொன்னா, ஒருவேளை எடுக்கக் கூடாத முடிவை எடுத்துடுவானோன்னு ஒவ்வொரு நேரமும் நாங்க கலங்கிகிட்டே இருக்கோம். பெத்த வயிறு நடுங்குதும்மா.’

லட்சுமியம்மாவின் கண்ணீர் ரங்கம்மாவின் மனத்தைக் கரைத்தது. ‘அதுக்கு நான் என்னம்மா செய்யமுடியும்?’ என்று கேட்டாள்

அந்தச் சொல்லையே தன்னை மீட்க வந்த ஒரு கயிறாக எண்ணிக்கொண்டு அதைப் பற்றிக்கொள்ள நினைத்தாள் லட்சுமியம்மா. மெல்லிய குரலில்இப்ப, தற்காலிகமா உனக்கும் அவனுக்கும் கல்யாணம்னு ஒரு பேச்சுக்கு வச்சிக்குவோம். இன்னும் ரெண்டு மாசம் இருக்குது. அதுக்குள்ள எப்படியாவது அவனுக்கு ஏத்த மாதிரி ஒரு பொண்ணைக் கண்டுபுடிச்சி கொண்டாந்து இப்ப குறிக்கிற முகூர்த்தத்துல அவளைக் கட்டிவச்சிடலாம். அவ யாருன்னு காட்டமுடியாததாலதான் இந்த ஏற்பாடு. தயவு செஞ்சி புரிஞ்சிக்கம்மா. அந்தப் புள்ளையை பொழைக்க வைக்கறதுக்கு எனக்கு வேற வழி தெரியலைம்மாஎன்று சொன்னாள்.

அம்மாவின் அழுகை ரங்கம்மாவை உருக்கியது. அம்மாவை எதிர்த்து  அவளால் ஒரு வார்த்தை கூட பேசமுடியவில்லை. ‘எப்படியாவது செய்ங்கம்மா. ஆனா ஒரு விஷயம் ஞாபகம் வச்சிக்குங்க. நீங்க சொல்ற மாதிரி இன்னொரு பொண்ண கண்டுபுடிச்சி கொண்டுவந்து நிறுத்தாம என்னையே மணமேடையில உக்காரவைக்கணும்னு நெனச்சிங்கன்னா, அடுத்த நிமிஷமே நான் உயிரோட இருக்கமாட்டேன். அதை மட்டும் மனசுல வச்சிக்குங்கஎன்று சொல்லிவிட்டு வேகவேகமாக நடந்துபோய் தன் அறைக்குள் சென்று தாளிட்டுக்கொண்டாள். மற்றவர்கள் அனைவரும் பெருமூச்சு விட்டபடி தத்தம் அறைகளுக்குச் சென்றனர்.

அடுத்து வந்த இரண்டு மாத காலங்களில் நாராயணப்பாவும் லட்சுமியம்மாவும் ஒருநாள் கூட வீட்டில் ஓய்வாகத் தங்கவில்லை. வண்டி கட்டிக்கொண்டு ஊரூராகச் சென்று தன் மகனுக்குப் பொருத்தமான பெண் கிடைக்காதா என கண்டுபிடிக்கும் முயற்சியில் அலைந்தார்கள். துரதிருஷ்டவசமாக அவர்களுக்கு எந்த இடத்திலும் வெற்றி கிட்டவில்லை.

திருமணத்தேதி நெருங்கிவந்தது. ரங்கம்மா தினமும்என்ன கண்டுபிடிச்சிட்டீங்களா?’ ‘என்ன கண்டுபிடிச்சிட்டீங்களா?’ என்று கேட்கும் கேள்விக்கு தொடர்ச்சியாக இல்லை என்ற பதிலையே மீண்டும் மீண்டும் சொல்வதற்கு சங்கடமாக இருந்தது. கண்டுபிடிக்காவிட்டால் உயிரை விட்டுவிடுவேன் என்று சொன்ன அவளுடைய சொல் அடிக்கடி நினைவுக்கு வந்து அவர்களுடைய நிம்மதியைக் குலைத்தது. திருமணத்துக்கு இன்னும் இரண்டே நாள் பாக்கி என்கிற நிலையில்இல்லைஎன்னும் பதிலைச் சொல்ல மனமில்லாமல்பாத்துட்டோம்மா, முடிவாயிடுச்சி. சரியா முகூர்த்த நேரத்துக்கு வர்ரதா சொல்லியிருக்காங்கஎன்று பொய் சொல்லிவிட்டனர். அதைக் கேட்ட பிறகுதான் ரங்கம்மாவின் முகம் மலர்ந்தது.

விடிந்தால் திருமணம். வீட்டுக்கு முன்னால் பெரிய பந்தலைக் கட்டி எழுப்பும் வேலை நடந்தது. எங்கெங்கும் மாவிலைத்தோரணங்கள் கட்டினார்கள். வெளியூர்களிலிருந்து சொந்தக்காரர்களும் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். அவர்கள் அனைவரும் தங்குவதற்கும் உணவு உண்ணுவதற்கும் வெவ்வேறு இடங்களில் ஏற்பாடு செய்திருந்தார் நாராயணப்பா.

அன்று அதிகாலை. குளித்துவிட்டு வருவதற்காக மாற்று உடைகளுடன் ஆற்றங்கரைக்குச் சென்றாள் ரங்கம்மா. அவளுக்கு முன்பே அதே ஊரைச் சேர்ந்த வேறொரு பெண் குளித்துக்கொண்டிருந்தாள். கரையிலிருந்து பார்ப்பதற்கு அவள் முதுகு மட்டும் தெரிந்ததால் அவள் யாரென்று அடையாளம் தெரியவில்லைஅதனால்யாரு?’ என்று கேட்டாள் ரங்கம்மா

என்ன கல்யாணப் பொண்ணுக்கு இப்பவே கண்ணு தெரியாம போயிடுச்சா? நான்தான்டி லச்சு. தெரியலையா?’ என்று திரும்பினாள். அதற்குப் பிறகுதான் அவளை அடையாளம் கண்டுகொண்டாள் ரங்கம்மா.

முதுகுப்பக்கமா பார்க்கும்போது அடையாளமே தெரியலைக்கா? எப்படி இருக்கீங்க?’ என்று கேட்டபடி அவளும் ஆற்றில் இறங்குவதற்குத் தயாரானாள்

நல்லா இருக்கேன்டி. கொஞ்ச நேரம் இப்படி வந்துட்டு போயேன். முதுவெல்லாம் ஒரே அரிப்பா இருக்குது. கொஞ்சம் சொறிஞ்சி விடறியா?’ என்று முதுகைக் காட்டினாள்

இதோ வரேன்க்காஎன்றபடி ஆற்றுத்தண்ணீரில் நிதானமாக அடியெடுத்து வைத்து முன்னேறி அவளை நெருங்கினாள். அவள் முதுகில் இரண்டு கையாலும் அழுத்தித் தேய்த்துவிட்டாள். பிறகு எல்லா அழுக்கும் போகும் வகையில் இரண்டு கைகளாலும் தண்ணீரை வாரி அவள் முதுகில் அடித்து சுத்தமாக்கினாள். பிறகு இரண்டடி தள்ளி நின்று தண்ணீரை அள்ளி அள்ளி தன் முகத்தின் மீதும் அடித்துக்கொண்டாள். அது அவளைப் புல்லரிக்கவைத்தது. உடல்முழுக்க ஒரு குளிர்ச்சி பரவியது. அந்தக் குளிர்ச்சியோடு தண்ணீரில் மூழ்கி மூழ்கி எழுந்தாள்

நான் ஒரு விஷயம் உங்கிட்ட கேக்கணும். தப்பா நெனச்சிக்க மாட்டியே?’ என்று உரையாடலை ஆரம்பித்தாள் லச்சு.

என்னக்கா?’

கேக்கக்கூடாதுன்னுதான் நெனச்சேன். ஆனா மனசு அடங்கலை. அதனால கேக்கறேன்.

என்னக்கா, சொல்லுக்கா?’

உலகத்துலயே இல்லாத வழக்கமா உன் அப்பா அம்மா ரெண்டு பேரும் உன் அண்ணனுக்கும் உனக்கும் கல்யாணம் செஞ்சிவைக்க முயற்சி செய்றாங்களே, அது சரியா? அதுக்கு நீ எப்படிடி ஒத்துக்கிட்ட?’

அதெல்லாம் ஒரு பேச்சுதான்க்கா. அண்ணன சமாதானப்படுத்தறதுக்காக அப்படி சொல்லி வச்சிருக்காங்க. அண்ணனுக்கு வேற ஒரு பொண்ணு ரெண்டு நாள் முன்னால பார்த்துமுடிச்சிட்டாங்கக்கா. அந்த பொண்ணுக்கும் அண்ணனுக்கும்தான் கல்யாணம். சரியா முகூர்த்த நேரத்துக்கு வந்து எறங்கிடுவாங்கக்கா.’ 

லச்சு கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் இருந்தாள். பிறகுஎல்லாரும் சேர்ந்து உன்ன ஏமாத்தறாங்கன்னு தோணுது. எதுக்கும் நீ கொஞ்சம் கவனமா இருடி. என் மனபாரத்தை எறக்கிவைக்கணும்ங்கறதுக்காக சொல்லணும்னு தோணிச்சி. சொல்லிட்டேன்என்று சொல்லிவிட்டு பெருமூச்சு விட்டாள்.

தன் அம்மாவே தன்னை ஏமாற்றிவிட்டாளே என நினைத்து அவள் மனத்துகுள்ளேயே குமுறிக்குமுறி அழுதாள். வேகவேகமாக கரையேறி உடலைத் துவட்டிக் கொண்டு மாற்று உடைகளையும் அணிந்துகொண்டு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

வீட்டு வாசலில் பந்தலில் மேளச்சத்தம் முழங்கியதை அவள் கேட்டாள். அவளுடைய கோபம் பல மடங்காகப் பெருகியது. வீட்டுக்குள் நுழைந்ததும் ஈர உடைகளை ஒரு மூலையில் வீசிவிட்டு வேகவேகமாக நடந்து வீட்டுக்குப் பின்பக்கமாக இருந்த தோட்டத்துக்குச் சென்றாள்.

தோட்டத்தில் ஒரு பெரிய கிணறு இருந்தது. அதையொட்டி இரு புறங்களிலும் இரு பெரிய மாமரங்கள் நின்றிருந்தன. அந்தக் கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்ளத்தான் வேகவேகமாக ரங்கம்மா சென்றாள். கிணற்றின் சுற்றுச்சுவர் விளிம்பைத் தொட்டதும் அவள் மனம் மாறிவிட்டது. கிணற்றையொட்டி இருந்த மாமரத்தின் தாழ்வான ஒரு கிளையைப் பற்றி மரத்தில் ஏறத் தொடங்கினாள். அவள் கைகளால் பற்றி ஏறும் வண்ணம் கிளைகளுக்கிடையிலான இடைவெளி குறைவாகவே இருந்தது. சிறிது நேரத்திலேயே ஆறேழு கிளைகளைக் கடந்து உயரமான இடத்துக்குச் சென்றுவிட்டாள். அங்கிருந்து பார்க்கும்போது பந்தலில் நடைபெறும் எல்லா விஷயங்களும் தெரிந்தன

ரங்கம்மா கோபம் கொண்டு மாமரத்தில் ஏறி அமர்ந்துகொண்டிருக்கிறாள் என்னும் செய்தி அதற்குள் திருமணப்பந்தலில் பரவிவிட்டது

நாராயணப்பாவும் லட்சுமியம்மாவும் அழுது புலம்பியபடி அந்த மரத்தடிக்கு வந்தனர். உச்சிக்கிளை மீது அமர்ந்திருக்கும் ரங்கம்மாவைப் பார்த்து அழுதனர். ‘வாம்மா, தயவு செஞ்சி கீழ இறங்கி வாம்மாஎன்று வேண்டினர்

ஒரு பதிலும் சொல்லாமல் அவள் சிறிது நேரம் அவர்களையே வெறித்துப் பார்த்தபடி இருந்தாள் ரங்கம்மா. பிறகுஉண்மையான கல்யாணப்பொண்ணு யாரு? சொல்லுங்கஎன்று கேட்டாள்.

நாராயணப்பாவும் லட்சுமியம்மாவும் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லமுடியாமல் தலைகுனிந்து நின்றனர்.

முகூர்த்த நேரத்துக்குச் சரியா வெளியூருலேர்ந்து பொண்ணு வந்து எறங்கிடும்ன்னு சொன்னீங்களே, பொண்ணு வந்துடிச்சா?’ என்று அடுத்த கேள்வியைக் கேட்டாள்

இருவரும் அந்தக் கேள்விக்கும் பதில் சொல்லமுடியாமல் தலைகுனிந்தபடி நின்றனர்.

என்னால எறங்கிவர முடியாது. போங்க. இது கல்யாணமே கிடையாது. நீங்க எல்லாரும் சேர்ந்து செய்யற சதிஎன்று திட்டவட்டமான குரலில் தெரிவித்தாள் ரங்கம்மா.

ரங்கம்மாவை அண்ணாந்து பார்த்து நாராயணப்பாவும் லட்சுமியம்மாவும் கண்கலங்க கைகுவித்து வணங்கினார்கள்.

சொந்தக்காரங்களைப் பார்க்கலையா?

மேளச்சத்தத்தைக் கேக்கலியா?

வாசல் தோரணம் தெரியலையா?

வாழை மரங்களும் தெரியலையா?

அம்மா வேதனை புரியலையா?

அப்பா வேதனை புரியலையா?

இரக்கம் காட்டடி ரங்கம்மா

எறங்கி வாடி ரங்கம்மா.

என்று சொல்லச்சொல்ல அவர்களுக்கு அழுகை பொங்கியது. தேம்பித்தேம்பி அழுதுகொண்டே அவளைப் பார்த்து கைகுவித்து வணங்கியபடி அங்கேயே நின்றனர்.

அம்மாவின் கண்ணீரையும் நடுங்கும் குரலையும் கேட்டபோது ரங்கம்மாவுக்கும் அழுகை பொங்கியது. அதே சமயத்தில் அவர்கள் தன்னிடம் வஞ்சனையாக நடந்துகொண்டதை நினைத்து ஆத்திரமும் பொங்கியது

பேசக் கத்துக் கொடுத்தது நீங்க

படிக்கக் கத்துக் கொடுத்ததும் நீங்க

நல்லது கெட்டது சொல்லி வளர்த்ததும் நீங்க

நியாயம் அநியாயம் சொல்லி வளர்த்ததும் நீங்க

இந்த வாயாலதான் அம்மான்னு கூப்ட்டேன்

இந்த வாயலதான் அப்பான்னு கூப்ட்டேன்

இதே வாயால நான் எப்படி அத்தைன்னு கூப்புடுவேன்?

இதே வாயால நான் எப்படி மாமான்னு கூப்புடுவேன்?’

சொல்லிக்கொண்டே அதுவரை நின்ற இடத்திலிருந்து இன்னும் உயரமான கிளையை நோக்கி ஏறத் தொடங்கினாள் ரங்கம்மா.

ஐயோ, நாம சொல்லச் சொல்ல கேக்காம இன்னும் உயரமான கிளையைப் புடிச்சிட்டு ஏறறாளேஎன்று நாராயணப்பாவும் லட்சுமியம்மாவும் புலம்பிக் கண்ணீர் விட்டனர். நிற்கவே முடியாதபடி அவர்கள் கால்கள் நடுங்கின. நின்ற இடத்திலேயே உட்கார்ந்து தலைமீது கைகளை வைத்துக்கொண்டனர்.

அங்கே நடப்பதைப் பார்த்துவிட்டு யாரோ பந்தலுக்குள் சென்று ரங்கம்மாவின் முதல் மூன்று சகோதரர்களை அழைத்துவந்தனர். அவர்கள் மாமரத்தை நெருங்கி உச்சிக்கிளை மீது அமர்ந்திருக்கும் ரங்கம்மாவைப் பார்த்துத் திகைத்து அழுதனர். ‘வா ரங்கம்மா, தயவு செஞ்சி கீழ இறங்கி வாம்மாஎன்று வேண்டினர். ஒரு பதிலும் சொல்லாமல் ரங்கம்மா அவர்களையே வெறித்துப் பார்த்தபடி இருந்தாள்.

சொந்தக்காரங்களைப் பார்க்கலையா?

மேளச்சத்தத்தைக் கேக்கலியா?

வாசல் தோரணம் தெரியலையா?

வாழை மரங்களும் தெரியலையா?

மூத்த அண்ணன் வேதனை புரியலையா?

ரெண்டாவது அண்ணன் சங்கடம் புரியலையா?

மூணாவது அண்ணன் துயரம் புரியலையா?

இரக்கம் காட்டடி ரங்கம்மா

எறங்கி வாடி ரங்கம்மா.

என்று சொல்லத் தொடங்கியதுமே அவர்களுக்கு அழுகை பொங்கியது. தேம்பித்தேம்பி அழுதுகொண்டே அவளைப் பார்த்து கைகுவித்து வணங்கியபடி அங்கேயே நின்றனர்.

அண்ணன்மார்களின் கண்ணீரையும் நடுங்கும் குரலையும் கேட்டபோது ரங்கம்மாவுக்கும் அழுகை பொங்கியது. அதே சமயத்தில் கண்முன்னால் நடக்கும்  ஒரு பெருந்தவறைத் தட்டிக் கேட்டு நிறுத்த துணிவில்லாமல்  அவர்கள் கோழைகளைப்போல நடந்துகொண்டதை நினைத்து ஆத்திரமும் பொங்கியது

ஓடிப் பிடிச்சி விளையாடக் கத்துக் கொடுத்தது நீங்க

உலக ஞானத்தைக் கத்துக் கொடுத்ததும் நீங்க

இந்த வாயாலதான் பாசக்கார அண்ணேன்னு கூப்ட்டேன்

இந்த வாயலதான் ஆசைக்கார அண்ணேன்னு கூப்ட்டேன்

இதே வாயால நான் எப்படி மாமான்னு கூப்புடுவேன்?

இதே வாயால நான் எப்படி மச்சான்னு கூப்புடுவேன்?’

சொல்லிக்கொண்டே அதுவரை நின்ற இடத்திலிருந்து இன்னும் உயரமான கிளையை நோக்கி ஏறத் தொடங்கினாள் ரங்கம்மா.

பந்தல்கூடத்திலிருந்து வேகவேகமாக தம் கணவன்மார்கள் புறப்பட்டுச் சென்றதைப் பார்த்துவிட்டு யாரோ அவர்களுடைய மனைவிமார்களிடம் தகவலைத் தெரிவித்தனர். உடனே மனைவிமார்கள் அனைவரும் தோட்டத்தை  நோக்கி ஓடி வந்தனர். அவர்கள் மாமரத்தை நெருங்கி உச்சிக்கிளை மீது அமர்ந்திருக்கும் ரங்கம்மாவைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். பிறகு மெல்ல அந்தத் திகைப்பிலிருந்து மீண்டுவா ரங்கம்மா, தயவு செஞ்சி கீழ இறங்கி வாம்மாஎன்று வேண்டினர். ஒரு பதிலும் சொல்லாமல் ரங்கம்மா அவர்களையே வெறித்துப் பார்த்தபடி இருந்தாள்.

சொந்தக்காரங்களைப் பார்க்கலையா?

மேளச்சத்தத்தைக் கேக்கலியா?

வாசல் தோரணம் தெரியலையா?

வாழை மரங்களும் தெரியலையா?

மூத்த அண்ணி வேதனை புரியலையா?

ரெண்டாவது அண்ணி சங்கடம் புரியலையா?

மூனாவது அண்ணி துன்பம் புரியலையா?

இரக்கம் காட்டடி ரங்கம்மா

எறங்கி வாடி ரங்கம்மா.

என்று சொல்லத் தொடங்கியதுமே அவர்களுக்கு அழுகை பொங்கியது. தேம்பித்தேம்பி அழுதுகொண்டே அவளைப் பார்த்து கைகுவித்து வணங்கியபடி வா வா என்று சொல்லிக்கொண்டு அங்கேயே நின்றனர்.

 அண்ணிமார்களின் கண்ணீரைப் பார்த்ததும்  ரங்கம்மாவுக்கும் அழுகை பொங்கியது. அதே சமயத்தில் கண்முன்னால் நடக்கும்  ஒரு பிழையைச் சுட்டிக்காட்டி தடுத்து நிறுத்தத் துணிவில்லாமல்  அவர்கள் அமைதியாக நிற்பதை நினைத்து ஆத்திரமும் பொங்கியது

சமையல் வேலை கத்துக் கொடுத்தது நீங்க

சமாளிக்கும் கலையைக் கத்துக் கொடுத்ததும் நீங்க

இந்த வாயாலதான் பாசக்கார அண்ணின்னு கூப்ட்டேன்

இந்த வாயலதான் ஆசைக்கார அண்ணின்னு கூப்ட்டேன்

இதே வாயால நான் எப்படி ஓரகத்தின்னு கூப்புடுவேன்?

இதே வாயால நான் எப்படி ஓரகத்தின்னு கூப்புடுவேன்?’

சொல்லிக்கொண்டே அதுவரை நின்ற இடத்திலிருந்து இன்னும் உயரமான கிளையை நோக்கி ஏறத் தொடங்கினாள் ரங்கம்மா.

திருமணத்துக்காக வந்திருந்த எல்லா சொந்தக்காரர்களும் ஊர்க்காரர்களும் தோட்டத்தை  நோக்கி ஓடி வந்தனர். மாமரத்தின் உச்சிக்கிளை மீது அமர்ந்திருக்கும் ரங்கம்மாவைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். பிறகு மெல்ல அந்தத் திகைப்பிலிருந்து மீண்டுவா ரங்கம்மா, தயவு செஞ்சி கீழ இறங்கி வாம்மாஎன்று வேண்டினர். ஒரு பதிலும் சொல்லாமல் ரங்கம்மா அவர்களையே வெறித்துப் பார்த்தபடி இருந்தாள்.

சொந்தக்காரங்களைப் பார்க்கலையா?

மேளச்சத்தத்தைக் கேக்கலியா?

வாசல் தோரணம் தெரியலையா?

வாழை மரங்களும் தெரியலையா?

ஊரார் வேதனை புரியலையா?

உற்றார் வேதனை புரியலையா?

இரக்கம் காட்டடி ரங்கம்மா

எறங்கி வாடி ரங்கம்மா.

என்று சொல்லத் தொடங்கியதுமே அவர்களுக்கு அழுகை பொங்கியது. தேம்பித்தேம்பி அழுதுகொண்டே அவளைப் பார்த்து கைகுவித்து வணங்கியபடி வா வா என்று சொல்லிக்கொண்டு அங்கேயே நின்றனர்.

ஊரார், உறவினரின்  கண்ணீரைப் பார்த்ததும்  ரங்கம்மாவுக்கும் அழுகை பொங்கியது. அதே சமயத்தில் தன் பக்கமாக நின்று ஒருவரும் நியாயத்தைப் பேசவில்லையே என்பதை நினைத்து ஆத்திரமும் பொங்கியது

ஆயிரம் கதைகள் சொல்லிக் கொடுத்தது நீங்க

ஆடும்போது பாதுகாப்பா நின்னதும் நீங்க

இந்த வாயாலதான் அண்ணன்னு கூப்ட்டேன்

இந்த வாயலதான் தம்பின்னு கூப்ட்டேன்

இதே வாயால நான் எப்படி மாமான்னு கூப்புடுவேன்?

இதே வாயால நான் எப்படி மச்சான்னு கூப்புடுவேன்?’

சொல்லிக்கொண்டே அதுவரை நின்ற இடத்திலிருந்து இன்னும் உயரமான கிளையை நோக்கி ஏறத் தொடங்கினாள் ரங்கம்மா.

கடைசியாக அவளைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என நினைத்த சிதானந்தா வந்து நின்றான். அவன் கண்களில் கோபம் கொப்பளித்தது. ‘கீழே இறங்கி வாஎன்று கூவினான்.

சொந்தக்காரங்களைப் பார்க்கலையா?

மேளச்சத்தத்தைக் கேக்கலியா?

வாசல் தோரணம் தெரியலையா?

வாழை மரங்களும் தெரியலையா?

கிண்டல் செய்வது புரியலையா?

கிளம்பிச் செல்வதும் தெரியலையா?

எரிச்சல் ஊட்டாதடி ரங்கம்மா

எறங்கி வாடி ரங்கம்மா.

சிதானந்தாவின் கோபத்தைப் பார்த்ததும்  ரங்கம்மாவுக்கும் கோபம் பொங்கியது. நேற்றுவரை உயிருக்குயிரான அண்ணனாக இருந்தவன் மனத்தில் எந்த வடிவில் நஞ்சு கலந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறினாள். அவனை நேருக்கு நேர் பார்ப்பதற்குக் கூட அவளுக்கு வெட்கமாக இருந்தது

ஊஞ்சல் ஆட கத்துக் கொடுத்தது நீங்க

ஊர் சுத்த துணையா வந்ததும் நீங்க

இந்த வாயாலதான் பாசமுள்ள அண்ணான்னு கூப்ட்டேன்

இந்த வாயலதான் ஆசையுள்ள அண்ணான்னு கூப்ட்டேன்

இதே வாயால நான் எப்படி அத்தான்னு கூப்புடுவேன்?

இதே வாயால நான் எப்படி மாமான்னு கூப்புடுவேன்?’

சொல்லிவிட்டு அதுவரை நின்ற இடத்திலிருந்து இன்னும் உயரமான கிளையை நோக்கி ஏறத் தொடங்கினாள் ரங்கம்மா.

அவளை எப்படியாவது தடுத்து நிறுத்தி கீழே இறக்கி அழைத்துக்கொண்டு வரவேண்டும் என்ற முடிவோடு மாமரத்துக்கு அருகில் சென்று கிளையைப் பற்றி கோபத்துடன் ஏறத் தொடங்கினான் சிதானந்தா. அனைவரும் மரத்தடியில் கூட்டமாக நின்று பதற்றத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் போதே அவன் ஒவ்வொரு கிளையாகத் தாவித்தாவி ஏறிச் சென்றான்

உச்சிக்கிளையில் நின்றபடி ரங்கம்மா அவன் தன்னைப் பின்  தொடர்ந்து வருவதைப் பார்த்தாள். உடனே தான் நின்றிருக்கும் கிளையிலிருந்து பக்கத்து மாமரத்தின் கிளையைத் தாவிப் பிடித்து ஒரே கணத்தில் அந்த மரத்துக்குச் சென்றுவிட்டாள்

அதைப் பார்த்த சிதானந்தாவும் தனக்குன் இசைவாகக் கிடைத்த இன்னொரு கிளையைப்பற்றி அந்த மரத்துக்கு நெருக்கமான கிளைக்கு அருகில் சென்று அவள் நின்றிருந்த மரத்துக்குத் தாவிவிட்டான்

மரத்தடியில் நின்றிருந்த கூட்டம் அவர்கள் இருவரையும் பார்த்துவாங்க, கீழ வாங்கஎன்று குரல் கொடுத்தபடி இருந்தனர். அந்தக் குரலை இருவருமே பொருட்படுத்தவில்லை

சிதானந்தாவின் கையில் சிக்கிவிடக்கூடாது என்கிற ஒரே நோக்கத்தோடு அவர் மரம் விட்டு மரம் என தாவிக்கொண்டே இருந்தாள் ரங்கம்மா. ரங்கம்மாவை எப்படியாவது பிடித்து கீழே இறக்கிக்கொண்டு சென்றுவிட வேண்டும் என்று முனைப்போடு சிதானந்தாவும் அவளைத் தொடர்ந்து மரம் விட்டு மரம் என தாவிக்கொண்டே இருந்தான்

ஒரு கட்டத்தில் ரங்கம்மாவுக்கு அச்சம் வந்துவிட்டது. எப்படியும் அவன் தன்னை விடப்போவதில்லை என்பதையும் விரைவில் தன்னைப் பிடித்துவிடுவான் என்பதையும் அவள் புரிந்துகொண்டாள். அக்கணத்தில் அவனிடம் அகப்படுவதைவிட, உயிர் துறப்பதே மேல் என முடிவெடுத்தாள். அதற்குப் பின் ஒரு கணம் கூட யோசிக்காமல் கிளையைப் பற்றியிருந்த தன் பிடியைத் தளர்த்தி இரு மரங்களுக்கும் இடையிலிருந்த கிணற்றுக்குள் நேராக விழுந்தாள்

ரங்கம்மாவால் கிணற்றுக்குள் நீண்ட நேரம் மூச்சை அடக்கமுடியவில்லை. விரைவிலேயே அவள் உயிர் பிரிந்தது. அவள் உடல் ஆழத்தை நோக்கிச் சென்றது

ரங்கம்மா கிணற்றில் குதிப்பதைச் சற்றும் எதிர்பார்க்காத சிதானந்தா அவளை விட்டுவிடக் கூடாது என்கிற வேகத்தில் அவனும் கிணற்றுக்குள் தாவினான். கிணற்றின் ஆழத்தை நோக்கிச் சென்றபடி ரங்கம்மா எங்காவது தென்படுகிறாளா என அக்கம்பக்கம் பார்த்தபடியே சென்றான். ஆயினும் அவளை அவனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை

நீண்ட நேரம் சிதானந்தாவால் மூச்சை அடக்கிக்கொள்ள இயலவில்லை. அதே சமயத்தில் ரங்கம்மா இல்லாமல் மேலே செல்லவும் அவனுக்கு மனம் வரவில்லை. இன்னும் ஒருமுறை ஆழத்துக்குச் சென்று தேடலாம் என நினைத்து ஆழத்தை நோக்கிச் செல்ல முயற்சி செய்வதற்குள் அவன் கால்கள் துவண்டன. அதே நொடியில் அவன் மூச்சு இறுகி உயிர் பிரிந்தது

கிணற்றில் மூழ்கிய இருவரும் வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை என்பதை உணர்ந்ததும் கிணற்றைச் சுற்றி நின்று பார்த்தவர்களில் நீச்சல் பழகிய சிலர் கிணற்றுக்குள் இறங்கி அவர்களைத் தேடத் தொடங்கினர். சிறிது நேரத்தில் இருவரையும் உயிரற்ற உடல்களாக மேலே தூக்கிக்கொண்டு வந்தனர்.

கல்யாணத்துக்குன்னு வந்துட்டு இப்படி சாவுக்கு சாட்சியா நிக்கறமாதிரி ஆயிட்டுது பாருஎன்று சுற்றி நின்றிருந்தவர்கள் தமக்குள் உரையாடியபடிக்கொண்டனர்

அதற்குள் பொழுது கவிந்துவிட்டது. அடக்கம் செய்வதை அடுத்தநாள் வைத்துக்கொள்ளலாம் என அங்கிருந்தவர்கள் முடிவெடுத்தனர்

இரவு முழுவதும் நாராயணப்பாவும் லட்சுமியம்மாவும் இருவருடைய உடல்களுக்கு அருகிலேயே அழுதபடியே அமர்ந்திருந்தனர். மூன்று சகோதரர்களும் அவர்களுடைய மனைவிமார்களும் இன்னொரு பக்கத்தில் அழுதுகொண்டிருந்தனர். அழுத களைப்பில் அப்படியே அனைவரும் அந்தந்த இடத்திலேயே படுத்து உறங்கிவிட்டனர்.

லட்சுமியம்மாவின் கனவில் ரங்கம்மா தோன்றினாள். அவளைப் பார்த்ததும் தன்  குடும்பம் செய்த பிழையை மன்னித்துக்கொள்ளும்படி அவள் ரங்கம்மாவிடம் கேட்டுக்கொண்டாள்

அம்மா, இப்பவாவது என் பேச்சைக் கேளு. என்னையும் அண்ணனையும் தயவுசெஞ்சி ஒரே இடத்துல புதைக்காதீங்க. வேற வேற இடத்துல புதைங்கஎன்று ரங்கம்மாவும் தன் அம்மாவிடம் கேட்டுக்கொண்டாள்

அடுத்த நாள் புதைப்பதற்குக் குழி வெட்ட வந்தவர்கள் நாராயணப்பாவை நெருங்கிஐயா, எங்க குழி வெட்டணும்னு  இடம் சொல்லிட்டீங்கன்னா, எங்க வேலையை நாங்க பார்ப்போம்என்று கேட்டனர்.

அவர்களுடைய கேள்வியைப்  புரிந்துகொள்ளவே நாராயணப்பாவுக்கு சில கணங்கள் பிடித்தன. பெருமூச்சுடன் அவர் பதில் சொல்லத் தொடங்கும் முன்பாக, ‘நான் சொல்றேன்என்பதுபோல கையை உயர்த்தி அவரைத் தடுத்தாள் லட்சுமியம்மாபிறகு ஆட்களைப் பார்த்துசிதானந்தாவுக்கு நம்ம குடும்ப வயல்ல வெட்டுங்கரங்கம்மாவுக்கு நம்ம தோட்டத்துக்குப் பின்னாலயே வெட்டுங்கஎன்றாள்

சரிங்கம்மாஎன்று தலையசைத்தபடி அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். நாலைந்து மணி நேரங்களுக்குப் பிறகு எல்லாவிதமான சடங்குகளும் முடிந்தன. சிதானந்தாவின் உடலைச் சுமந்தபடி ஒரு கூட்டம் வயல்வெளியை நோக்கிச் சென்றது. ரங்கம்மாவின் உடலைச் சுமந்தபடி இன்னொரு கூட்டம் தோட்டத்தின் பக்கம் திரும்பி நடந்தது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *