Skip to content
Home » நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #24 – பத்மினியின் திருமணம்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #24 – பத்மினியின் திருமணம்

ஒரு கிராமத்தில் சந்திரசேகர கெளடா என்கிற பண்ணையார் வசித்துவந்தார். அவருடைய பண்ணையில் ஐம்பது அறுபது பேர்கள் வேலை செய்துவந்தனர். அவருடைய மனைவியின் பெயர் சரஸ்வதி. அவர்களுடைய இனிய இல்லற வாழ்வில் அவர்களுக்கு இரு பெண்குழந்தைகள் பிறந்தனர். மூத்த பெண்ணின் பெயர் லட்சுமி. இரண்டாவது பெண்ணின் பெயர் பத்மினி. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவர்கள் வளர்ந்துவந்தனர்.

விவசாயத்தை விரிவாக்கி, சாகுபடியைப் பெருக்கி செல்வம் சேர்ப்பதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார் கெளடாஇரவு பகல் பாராமல் அதற்காகவே உழைத்துக்கொண்டிருந்தார். உறங்கும் நேரத்தைத் தவிர பிற நேரங்களில் அவர் பண்ணையிலேயே இருந்தார். அங்கு நிகழும் வேலைகளை மேற்பார்வை செய்வதிலும் அடுத்தடுத்து செய்யவேண்டிய புதிய வேலைகளைத் திட்டமிடுவதிலும் அந்த வேலைக்குத் தேவையான சிறுசிறு கருவிகளையெல்லாம் பழுதில்லாமல் சேகரித்து வைப்பதிலும் மூழ்கியிருப்பார். குடும்ப விவகாரங்களை அவருடைய மனைவி சரஸ்வதி பார்த்துக்கொண்டாள்

குடும்பச்செலவுகளுக்கு அவ்வப்போது தேவைப்படுகிற பணத்தை மட்டும் கொண்டுவந்து மனைவியிடம் கொடுத்துவிடுவார் கெளடா. அவர்களுடைய வீட்டு சாமி மாடத்தில் ஒரு நோட்டுப்புத்தகம் இருந்தது. அந்தப் புத்தகத்தில் தேதியை எழுதி தான் கொடுக்கும் பணத்தைப்பற்றிய தகவலைக் குறித்துவைப்பது அவர் வழக்கம்

அன்றுமுதல் குடும்பத்துக்காகச் செலவிடும் தொகையை கெளடா எழுதிய தகவலுக்குக் கீழே தேதிவாரியாக எழுதி வைக்கத் தொடங்குவாள் சரஸ்வதிதன் கையிருப்பு முடிவடையும் நேரத்தில் சரஸ்வதி கெளடாவிடம் மீண்டும் பணம் கேட்பாள். அப்போதுதான் கெளடா சாமி மாடத்தில் வைக்கப்பட்டிருக்கும் நோட்டை எடுத்துப் பிரித்துப் பார்ப்பார்எழுதிவைக்கப்பட்டிருக்கும் வரவுசெலவுக் கணக்கை மனத்துக்குள்ளேயே கூட்டிச் சரிபார்த்துக்கொள்வார். பிறகு சரஸ்வதியின் பக்கம் திரும்பி பாராட்டுகிற விதமாக புன்னகைத்துவிட்டு அறைக்குள் செல்வார். பெட்டியைத் திறந்து பணத்தை எடுத்துவந்து அவளிடம் கொடுத்துவிட்டு நோட்டுப்புத்தகத்தில் குறிப்பெழுதிவிட்டுப் பண்ணைக்குச் சென்றுவிடுவார்

இப்படித்தான் ஆண்டுக்கணக்காக கெளடாவின் குடும்ப வாழ்க்கை நடந்துவந்தது. அவருடைய இரு பெண்களும் வேகவேகமாக வளர்ந்து திருமண வயதை அடைந்தனர். பண்ணை வேலைகளிலேயே மூழ்கியிருக்கும் கெளடா வீட்டுக்கு வந்து இளைப்பாறும் சமயங்களில்கல்யாண வயசுல ரெண்டு பொண்ணுங்கள வச்சிகிட்டு நாள் முழுக்க பண்ணை பண்ணைன்னு பண்ணையே கட்டி அழுதுகிட்டிருந்தா நல்லாவா இருக்குது? காலாகாலத்துல நல்ல மாப்பிள்ளையைத் தேடிக் கண்டுபுடிச்சி கல்யாணம் செஞ்சிவைக்கணும்ங்கற எண்ணமே உங்களுக்கு இல்லையா?’ என்று பேச்சைத் தொடங்குவாள் சரஸ்வதி.

வெற்றிலைக்கு சுண்ணாம்பு தடவியபடி கெளடாபார்க்கலாம் பார்க்கலாம் சரஸ்வதி. இப்ப என்ன அவசரம்? சின்ன புள்ளைங்கதான?’ என்று பட்டும் படாமல் பதில் சொல்வார். அதைக் கேட்டதும் சரஸ்வதிக்குக் கோபம் வரும். உடனேயாரு சின்ன புள்ளைங்க? அதும் வயசுப் புள்ளைங்க எல்லாம் எப்பவோ கல்யாணம் முடிச்சி கையில ஒன்னு, இடுப்புல ஒன்னுன்னு புள்ளைங்கள தூக்கிகிட்டு நடக்குதுங்க தெரியுமா? காலாகாலத்துல கல்யாணத்தை செஞ்சி முடிச்சாதான, நாமளும் நிம்மதியா இருக்கமுடியும்? இன்னும் எவ்ளோ காலத்துக்குத்தான் இப்படியே தனியா திரிய உடறது?’ என்று பொங்கியெழுவாள்

உடனே கெளடா புன்னகைத்தபடிசரி சரி, கவலைப்படாத. நானும் பார்த்துகிட்டேதான் இருக்கேன். பல இடங்கள்ல இதுக்காக சொல்லி வச்சிருக்கேன். சந்தர்ப்ப சூழல் சரியா அமைஞ்சதும் செஞ்சிடலாம்என்று சொல்வார்

அதைத் தொடர்ந்து அக்கம்பக்கமுள்ள கிராமங்களிலிருக்கும் பண்ணையார்களில் ஒவ்வொருவராக ஞாபகப்படுத்திக்கொண்டுஅந்தக் குடும்பம் எப்படி? இந்தக் குடும்பம் எப்படி?’ என்று உரையாடுவார்கள். எந்த இடமும் அவர்கள் எதிர்பார்ப்புக்கு இசைவானதாக இருக்காது. ‘சரி, நம்ம பொண்ணுங்களுக்குன்னு உள்ள ஒருத்தன்  பூமியில எங்கயோ பொறந்திருப்பான். சீக்கிரம் அவனா வந்து சேருவான் பாருங்கஎன்று சரஸ்வதியே அந்த உரையாடலை முடித்துவைப்பாள்.

அவர்கள் எதிர்பார்த்ததுபோலவே சில நாட்களுக்குப் பிறகு சுற்றுவட்டாரத்தில் உள்ள பல பண்ணையார்கள் அனுப்பிய ஆட்கள் கெளடாவைச் சந்திக்க வரத் தொடங்கினர்ஏதோ விவசாய விவகாரமாகத்தான் இருக்கும் என அவர் தொடக்கத்தில் நினைத்தார். ஆனால் வந்தவர்கள் தம் உரையாடலைத் தொடங்கியதும் தம் பண்ணையின் மதிப்பைப்பற்றியும் நிலபுலன்கள் பற்றியும் குடும்பத்தின் உயர்வைப்பற்றியுமான செய்திகளை வெவ்வேறு கோணங்களில் முன்வைப்பதைக் கேட்டதும் அவர் புரிந்துகொண்டார். இறுதியாக அவர்கள் தம் பண்ணையாரின் மகனுடைய தகுதியைப்பற்றி எடுத்துரைத்து பெண் எடுக்கும் பேச்சில் கொண்டுவந்து நிறுத்தினர். அதையும் அக்கறையோடு கேட்டுக்கொண்டார் கெளடா.

பெண் தொடர்பான விசாரிப்புகள் வரத் தொடங்கிய பிறகுதான் சரஸ்வதியின் முகத்தில் மலர்ச்சி ஏற்பட்டது. பண்ணையாரைவிட அவள்தான் அந்த உரையாடலில் மிகுந்த ஆர்வம் காட்டினாள். கெளடாவுக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்து, சொல்லப்படுகிற எல்லாத் தகவல்களையும் ஆர்வத்துடன் கேட்டாள். குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கின்றனர், எத்தனை வாரிசுகள் இருக்கின்றனர், அவர்களில் எத்தனை பேருக்கு  திருமணம் நடந்துமுடிந்திருக்கிறது, இன்னும் எத்தனை பேருக்கு நடைபெறவேண்டும் என பல கேள்விகளைக் கேட்டு பதில்களைத் தெரிந்துகொண்டாள். அந்த உரையாடலில் சாராம்சத்தை அன்று இரவே மகளிடம் எடுத்துரைத்து, அவளுடைய கருத்தையும் விசாரித்து அறிந்துகொண்டாள். இதுவரை அவள் கருத்து அவர்கள் எதிர்பார்த்ததுபோல அமையாததால், திருமண முயற்சி கைகூடாமல் தள்ளித்தள்ளிச் சென்றது.

ஒன்றிரண்டு மாதங்களிலேயே அத்தகு விசாரணைகளின் விளைவாக எப்படியோ ஒரு நல்ல இடம் அமைந்துவிட்டது. மாப்பிள்ளை பற்றிய தகவல்கள் லட்சுமிக்கும் ஏற்புடையதாக இருந்தன. அடுத்த வாரமே பெண் பார்க்க வருமாறு செய்தியைத் தெரிவித்தனர். மாப்பிள்ளையைப் பார்த்ததுமே லட்சுமி தன் சம்மதத்தைத் தன் தாயிடம் தெரிவித்துவிட்டாள். மாப்பிள்ளையும் தன் பெற்றோரிடம் சம்மதத்தைத் தெரிவித்துவிட்டான். அடுத்து வந்த முகூர்த்தத்திலேயே இருவருக்கும் தடபுடலாகத் திருமணமும் நடந்துமுடிந்துவிட்டது. கெளடாவும் சரஸ்வதியும் நாலைந்து கூண்டு வண்டிகளில் தம் பெண்ணுக்கான சீர்வரிசைகளை ஏற்றிக்கொண்டு சென்று புகுந்த வீட்டில் மகளை விட்டுவிட்டு வந்தனர்.

சில நாட்களுக்குப் பிறகு கெளடாவும் சரஸ்வதியும் இரவுச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு நிலா வெளிச்சத்தில் சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி வெற்றிலை போடுவதற்கான ஆயத்தங்களில் மூழ்கியிருந்தனர். அப்போது  ‘லட்சுமிக்கு நடத்தியதுபோலவே நம்ம பத்மினிக்கும் சீக்கிரமா கல்யாணத்தை நடத்திடணுங்க. அப்பதான் நிம்மதியா இருக்கும்என்று உரையாடலைத் தொடங்கினாள் சரஸ்வதி.

செஞ்சிடலாம் சரஸ்வதி. நானும் பல இடங்கள்ல சொல்லி வச்சிருக்கேன்என்றார் கெளடா.

ஒன்றிரண்டு மாதங்களிலேயே ஏற்கனவே லட்சுமியைப்பற்றி விசாரித்து வந்ததுபோல பலரும் பத்மினியைப்பற்றி விசாரித்துக்கொண்டு வரத் தொடங்கினர். வழக்கம்போல சரஸ்வதிதான் அனைவரோடும் உரையாடி தகவலைத் தெரிந்துகொண்டு, கேட்ட கேள்விகளுக்கெல்லாம்  விடை  சொன்னாள். முன்பு போலவே ஒவ்வொரு கட்டத்திலும் தாம் சேகரித்த தகவல்களை பத்மினியிடமும் பகிர்ந்துகொண்டாள். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட பத்மினிஎன்னமோ தெரியலை, எனக்கு இந்த சம்பந்தம் புடிக்கலைம்மாஎன்று நிராகரித்தாள்.  

ஒரு வாரம் கழித்து வெகுதொலைவிலிருக்கும் பண்ணையிலிருந்து ஒரு சம்பந்தம் வந்தது. எல்லா வகையிலும் தன் மகளுக்கு அந்த இடம் பொருத்தமாக இருக்கும் என நினைத்து ஆவலோடு பத்மினியிடம் விவரித்தாள் சரஸ்வதி. ஆனால் உதட்டைப் பிதுக்கி வேண்டாம் என்பது போல தலையை அசைத்து அந்த சம்பந்தத்தையும் நிராகரித்தாள் பத்மினி.

பத்மினியின் தொடர் நிராகரிப்புகளைக் கேட்டுக் கேட்டு சரஸ்வதியும் கெளடாவும் கொஞ்சம் கொஞ்சமாக நிம்மதியிழக்கத் தொடங்கினர். பத்மினியின் மனத்திலிருக்கும் காரணத்தை சரஸ்வதியால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. பத்மினியும் எதையும் மனம் திறந்து பேசுவதற்கான ஆர்வமில்லாதவளாக இருந்தாள். அதனால் பண்ணையைத் தேடி வருகிற சம்பந்தம் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது

ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. தன் மகளுக்குப் பிடித்தமான வகையில் மாப்பிள்ளை பார்க்க முடியவில்லையே என்கிற துக்கம் சரஸ்வதியின் நெஞ்சை அறுத்தது. ஒரு மகளுடைய இல்லற வாழ்க்கையை அழகாக அமைத்துக்கொடுத்த கடவுள் இன்னொரு மகளுடைய திருமணம் தொடர்பான விஷயத்தில் ஏமாற்றத்தைக் கொடுப்பதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் தவித்தாள்.

அதற்கிடையில் மூத்த மகள் மகப்பேறுக்காக தாய்வீட்டுக்கு வந்திருந்தாள். அவளுக்கு எல்லா வகையிலும் துணையாக நின்று தேவையான உதவிகளைச் செய்வதில் தன் துயரத்தை மறந்திருந்தாள் சரஸ்வதி. இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவளுக்கு ஆண்குழந்தை பிறந்தது. சம்பந்தி வீட்டினர் அனைவரும் வந்து பார்த்துவிட்டுச் சென்றனர்

குழந்தையைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பைத் தானே மனமுவந்து ஏற்றுக்கொண்டாள் சரஸ்வதி. தாயிடம் பாலருந்தும் நேரத்தைத் தவிர, பிற நேரங்களில் குழந்தை சரஸ்வதியின் மடியிலும் தோளிலும்தான் இருந்தது

குழந்தையோடு இருக்கும் நேரங்களில் சரஸ்வதி இந்த உலகத்தையே மறந்திருந்தாள்பண்ணையில் வேலை செய்யும் நேரங்களில் கெளடாவும் இந்த உலகத்தையே மறந்திருந்தார்.

குழந்தையின் முதல் பிறந்தநாளை கெளடா தன் வீட்டிலேயே சீரும் சிறப்புமாகக் கொண்டாட ஏற்பாடுகளைச் செய்தார்கொண்டாட்டத்துக்கு மாப்பிள்ளை வீட்டினர் அனைவரும் வந்தனர். உறவினர்களும் பண்ணையில் வேலை செய்யும் ஆட்களும் ஊராரும் வந்து சாப்பிடும் வகையில் பெரியதொரு விருந்தை சரஸ்வதி ஏற்பாடு செய்திருந்தார். பிறந்தநாள் விழா முடிந்து ஒரு வாரத்துக்குப் பிறகுதான் சம்பந்தி வீட்டினர் தம் ஊருக்குப் புறப்பட்டனர். அவர்களைத் தொடர்ந்து ஒரு கூண்டு வண்டியில் எல்லா சீர்வரிசைகளோடும் மகளையும் பேரக்குழந்தையையும் ஏற்றிக்கொண்ட்டு மாப்பிள்ளை வீட்டில் விடுவதற்காகப் புறப்பட்டுச் சென்றாள் சரஸ்வதி

சரஸ்வதி வீட்டில் இல்லாத நேரத்தில் எங்கிருந்தோ ஒரு சம்பந்தம் வந்தது. வந்தவரை நன்கு உபசரித்து தனித்துப் பேசித் தகவலைக் கேட்டுக்கொண்டார் கெளடாபிறகு தான் கேட்டறிந்த தகவலைத் தெரிவிப்பதற்காக பத்மினியின் அறைக்குச் சென்றார். பத்மினி தன் அறையில் தனிமையில் தலையணை உறையில் ஏதோ பூவைப் பின்னிக்கொண்டிருந்தாள். கெளடா சொன்ன விவரங்களையெல்லாம் கேட்டுவிட்டுஇது வேணாம்பா. புடிக்கலைஎன்று சொல்லி அனுப்பிவைத்துவிட்டாள். தொடர்ந்து அந்தச் சம்பந்தத்தைப்பற்றி மேலும் சில தகவல்களைச் சொல்லக்கூட அவள் அனுமதிக்கவில்லை. மன வேதனையுடன் வெளியே வந்துவிட்டார் கெளடா

மேலும் ஆறு மாதங்கள் உருண்டோடிவிட்டன. ஒருநாள் நாலைந்து கிராமங்களுக்கு அப்பால் இருக்கும் ஒரு பண்ணையிலிருந்து திருமணம் தொடர்பாக பேசுவதற்கு ஆட்கள் வந்தனர். எதிர்பாராத விதமாக அந்த நேரத்திலும் சரஸ்வதி ஊரில் இல்லை. பேரக்குழந்தையைப் பார்த்துவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டு மகள் வீட்டுக்குச் சென்றிருந்தாள்வேறு வழியில்லாமல் அவரே வந்தவர்களை வரவேற்று உபசரித்துப் பேசி எல்லாத் தகவல்களையும் தெரிந்துகொண்டார். பிறகு மகளிடம் சொல்வதற்காக அவளுடைய அறைக்குச் சென்றார். வழக்கம்போல பத்மினி அனைத்தையும் கேட்டுவிட்டுஇல்லைப்பா. இந்த சம்பந்தம் எனக்குப் புடிக்கலைப்பாஎன்று பதில் சொன்னாள்

ஏற்கனவே கடுமையான கசப்பிலிருந்த கெளடா மகளுடைய பதிலைக் கேட்ட பிறகு சீற்றம் கொண்டார். திடீரென குரலை உயர்த்திரெண்டு வருஷமா காட்டற மாப்பிள்ளைகளையெல்லாம் வேணாம் வேணாம்னு தள்ளிவிட்டிட்டிருக்கியே, நீ என்னதான் நினைச்சிட்டிருக்க  உன் மனசுல? என்று அதட்டும் குரலில் கேட்டார்.

முதன்முறையாக கோபமுற்ற குரலில் அப்பா கேட்டதைப் பார்த்ததும் ஒரு கணம் திகைத்து நின்றுவிட்டாள் பத்மினி. பிறகு மெதுவாகஎனக்குப் புடிக்கலைப்பா, அதனாலதான் புடிக்கலைன்னு சொல்றேன்என்றாள்.

என்ன காரணத்துக்காக புடிக்கலைன்னு சொல்ற? அதைச் சொல்லுஎன்று மீண்டும் அதட்டினார் கெளடா.

புடிக்காததுக்கு என்னப்பா காரணம் சொல்றது? புடிக்கலை. அவ்ளோதான்என்றாள் பத்மினி

அந்தப் பதிலைக் கேட்டதும் புயலைப்போல ஓர் ஆவேசம் அவருக்குள் எழுந்தது. பொங்கியெழுந்த கோபத்தைக் கட்டுப்படுத்தியபடி ஒரு வார்த்தை கூட சொல்லாமல் நின்ற இடத்திலிருந்து திரும்பினார். தன் அப்பா ஒரு வார்த்தைகூட வாய்திறந்து பேசவில்லை என்றபோதும் அவர் முகத்தில் படிந்திருந்த கசப்பைப் பார்த்து உணர்ந்துகொண்ட பத்மினி அவரை அமைதிப்படுத்தும் விதமாகஅப்பா, ஒரு நிமிஷம், நான் சொல்றதை முழுசா கேளுங்கப்பாஎன்றபடி ஒரு அடி முன்னால் வைத்து அவருடைய கையைப் பற்ற முயற்சி செய்தாள். அதை சற்றும் விரும்பாத கெளடா அவள் கையை வேகமாக உதறித் தள்ளினார்

அந்த விசையின் காரணமாக அவள் நிலைகுலைந்து மறுபக்கம் சரிந்தாள். சரிந்த வேகத்தில் அவள் தலை தூணில் மோதியது. எதையாவது பற்றிக்கொள்ள அவள் கைகள் அலைபாய்ந்தன. எதுவும் கிடைக்காத சூழலில் அவள் மீண்டும் சரிந்தாள். தூணுக்கு அருகிலிருந்த இரும்பு உரலில் மோதி கீழே விழுந்தாள். ஒரு முனகல் கூட இல்லாமல் அப்படியே விழுந்த இடத்தில் அவள் உயிர் பிரிந்துவிட்டது

முன்னோக்கி நடக்கத் தொடங்கிவிட்ட கெளடா பத்மினி விழுந்த கோலத்தைப் பார்த்து சட்டென திரும்பிவந்தார். பேச்சின்றி அவள் கிடப்பதைப் பார்த்து அவர் மனம் அஞ்சியது. வேகமாகச் சென்றுபத்மினி பத்மினிஎன்று அவளைத் தொட்டு அசைத்தார். அவள் உடலில் அசைவே இல்லை. அதைப் பார்த்ததும் கெளடாவின் உடல் நடுங்கியது

ஒருகணம் அவளுடைய முகத்தையே பார்த்தார் கெளடா. பிறகு அந்த அறையைவிட்டு வேகமாக வெளியே வந்து கூடத்தில் நெல் குத்திக்கொண்டிருந்த வேலைக்காரப் பெண்களை அழைத்து விவரத்தைச் சொன்னார். அவர்களும் ஓடோடி வந்து பத்மினியை எழுப்ப பல விதங்களில் முயற்சி செய்து பார்த்தனர். அதற்கிடையில் யாரோ ஒருத்தி ஓட்டமாக ஓடி பக்கத்துத் தெருவில் வசித்துவந்த வைத்தியரை அழைத்துவந்தாள். அவர் குனிந்து பத்மினியின் கையைப் பிடித்து நாடியைப் பரிசோதித்துவிட்டு உதட்டைப் பிதுக்கியபடி கெளடாவைப் பார்த்தார்

நான் ஒன்னும் செய்யலை வைத்தியரே. ஏதோ சொல்றதுக்காக என் கையைப் புடிக்க வந்தா. அதைக் கேக்கறதுக்கு விருப்பமில்லாம நான் அவள் கையை உதறினேன். அப்படியே பின்னால சாஞ்சி அந்தத் தூணுலயும் உரல்லயும் மோதி விழுந்துட்டா.

கெளடா அங்கிருந்த ஒவ்வொருவரையும் பார்த்துப் பார்த்துப் புலம்பினார். அவரைப் பார்ப்பதற்குப் பாவமாக இருந்தது

கடவுள் கொடுத்த ஆயுள் கணக்கு முடிஞ்சிடுச்சி கெளடரே. அதுக்கு நீங்க என்ன செய்யமுடியும்? ஆகவேண்டியதைப் பார்க்கலாம். வாங்கஎன்றபடி வைத்தியர் கெளடரை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று கூடத்தில் அமரவைத்தார்

சரஸ்வதி தன் மகள் வீட்டுக்குச் சென்றிருக்கும் செய்தியை வீட்டில் வேலை செய்யும் பெண்கள் வைத்தியரிடம் தெரிவித்தனர். ‘ஐயோ, அந்த ஊருக்குப் போய்வரணும்ன்னா ரெண்டு நாள் ஆவுமே. அதுவரைக்கும் நாம வச்சிருக்கக்கூடாது. ஐம்பது, நூறு பேரு புழங்கற இடம். சின்னச்சின்ன குழந்தைங்களும் வயசான பெரியவங்களும் இருக்கறாங்க. சமைக்காம கொள்ளாம எல்லாரையும் எப்படி ரெண்டு நாள் பட்டினி போடமுடியும்? நாம ஆகவேண்டிய காரியத்தைப் பார்க்கலாம்என்றார் வைத்தியர். கெளடரை தனியாக அழைத்துச் சென்று அவரிடமும் மெதுவாக எடுத்துச் சொல்லி புரியவைத்தார் அவர்

எது செஞ்சா நல்லதோ, அப்படி செய்ங்க வைத்தியரே. என் மூளையே குழம்பியிருக்குது. எதையும் சிந்திக்கிற நிலையில நான் இல்லைஎன்று சொல்லிவிட்டு ஒரு நாற்காலியில் வெறித்த பார்வையுடன் உட்கார்ந்தார் கெளடா

சீக்கிரமா போய் சேந்துடுவோம்னு அவளுக்கு ஏதோ உள்ளுணர்வு இருந்திருக்குது போல. அதனாலதான் எந்த மாப்பிள்ளை வந்தாலும் வேணாம் வேணாம்னு அவளை சொல்லவச்சிருக்குது விதிஎன்று சோகமாக தனக்குத்தானே சொல்லிக்கொண்டார்.

ஊரிலிருந்த உறவுக்காரர்கள் முன்னிலையிலும் பண்ணையில் வேலை பார்ப்பவர்கள் முன்னிலையிலும் பத்மினியின் இறுதிச்சடங்கு நடைபெற்றது. வீட்டுக்குப் பின்னால் இருந்த தோட்டத்திலேயே குழியெடுத்து பத்மினியை அங்கு புதைத்தனர். பத்மினியின் நடமாட்டம் இல்லாத வீட்டின் தனிமை கெளடாவை அச்சத்தில் தள்ளியது

இரண்டு நாட்கள் கழிந்த பிறகே சரஸ்வதி ஊருக்குத் திரும்பி வந்தாள். பத்மினியின் உடல் புதைக்கப்பட்ட இடத்திலேயே வெயில் நிழல் பார்க்காமல் நீண்ட நேரம் உட்கார்ந்து அழுதாள். அவளுக்கு அருகிலேயே கெளடாவும் பிறரும் இருந்தபோதும், அவளுக்கு யாராலும் ஆறுதல் சொல்ல முடியவில்லை. யாருடைய பேச்சையும் காது கொடுத்துக் கேட்கும் நிலையிலும் அவள் இல்லை.

மகளைப் புதைத்த இடத்துக்கு அருகிலேயே ஒரு சிறிய மாடத்தைக் கட்டி, அதில் ஒரு விளக்கை வைத்து ஒவ்வொரு நாளும் ஏற்றத் தொடங்கினாள் சரஸ்வதி. இரு பிள்ளைகளைப் பெற்றெடுத்து ஒரு பிள்ளையை மணக்கோலத்தோடு அனுப்பிவைத்துவிட்டு இன்னொரு பிள்ளையை இப்படி மண்ணுக்கு அடியில் புதைக்கவைத்த விதியை நினைத்து நினைத்து துன்பத்தில் மூழ்கினாள்

ஒருநாள் மாடத்தில் விளக்கேற்ற வந்த போது மாடத்துக்கு அருகில் ஒரு செடி முளைத்திருப்பதைப் பார்த்து சரஸ்வதி ஆச்சரியத்தில் மூழ்கினாள். உடனே அருகில் வேலை செய்துகொண்டிருந்த பெண்மணியிடம்இந்த செடி எப்படி இங்க வந்தது? யாரு நட்டு வச்சாங்க?’ என்று கேட்டாள். அவள் தனக்குத் தெரியாது என்பதுபோல உதட்டைப் பிதுக்கி தோளைக் குலுக்கியபடிதெரியலைம்மா. நானும் இப்பதான் பார்க்கறேன். நாங்க யாருமே நடலை. பார்க்கறதுக்கு மாதுளை செடி மாதிரி இருக்குது. நம்ம பத்மினியே மண்ணுலேர்ந்து இந்தச் செடியா முளைச்சி வந்திருக்குதும்மாஎன்றாள்.

பத்மினியைப்பற்றிய பேச்சு வந்ததுமே சரஸ்வதிக்கு அந்தச் செடியின் மீது ஒரு பற்று உருவாகிவிட்டது. அச்செடியைத் தன் மகளாகவே நினைக்கத் தொடங்கிவிட்டாள். அப்போதே அச்செடியைச் சுற்றி வட்டமாக ஒரு பள்ளமெடுத்து நீரூற்றினாள். ‘புள்ளையைப் பார்த்துக்கற மாதிரி இந்தச் செடியையும் பார்த்துக்கணும் புரியுதா?’ என்று பக்கத்தில் இருந்த பெண்களிடம் சொன்னாள்.

ஒருசில ஆண்டுகளிலேயே அச்செடி நல்ல வளத்துடன் உயரமாக வளர்ந்து மரமாக நின்றது. பச்சைப்பசேலென்ற நிறம் பார்ப்பவர்களைக் கவர்ந்தது. அந்தத் தோட்டத்தில் பல மாதுளை மரங்கள் இருந்தன. அவை எல்லாவற்றிலும் அந்த மரமே பசுமை நிறைந்ததாகவும் அழகாகவும் இருந்தது.

பூக்கும் பருவம் வந்தபோது, சுற்றியிருக்கும் எல்லா மரங்களிலும் பூக்கள் பூத்துக் குலுங்கின. ஆயினும் அந்தக் குறிப்பிட்ட மரத்தில் ஒரு பூ கூட பூக்கவில்லை. இப்படியே பல பருவங்கள் கடந்துசென்றன.

சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பருவத்தில் முதன்முறையாக அம்மரத்தில் ஒரே ஒரு பூ பூத்தது. அன்று மாலை விளக்கு ஏற்றுவதற்கு வந்த சரஸ்வதிதான் அந்தப் பூவை முதன்முதலாகப் பார்த்தாள். அதை மகிழ்ச்சியோடு மற்றவர்களுக்கும் காட்டினாள். அந்தப் பூவைப் பார்க்கும்போது இறந்துபோன தன் மகளின் சிரித்த முகத்தைப் பார்ப்பதுபோல இருப்பதாக அவள் நினைத்துக்கொண்டாள்அந்த விசித்திரமான பூ இரவில் விளக்கேற்றத் தொடங்கும் நேரத்தில் இதழ் விரித்து மலரத் தொடங்குவதையும் பொழுது விடியும் வேளையில் கூம்பி மூடிக் கொள்வதையும் பார்த்து அவள் ஆச்சரியத்தில் மூழ்கினாள்

ஒருநாள் இரவு உணவை முடித்துக்கொண்டு கெளடாவும் சரஸ்வதியும் தம் படுக்கையறைக்குச் சென்றுவிட்டனர். இறந்தகால வாழ்க்கையின் நினைவுகளை அசைபோட்டபடி சிறிது நேரம் படுத்திருந்தனர். பிறகு எப்போது உறங்கத் தொடங்கினோம் என்று தெரியாமலேயே உறக்கத்தில் மூழ்கிவிட்டனர்

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சமயத்தில் எங்கிருந்தோ வீணையின் இசை ஒலிப்பதைக் கேட்டு சட்டென தூக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்தார். அதே நேரத்தில் சரஸ்வதியும்யாருங்க இந்த வேளை கெட்ட வேளையில வீணையை மீட்டறது?’ என்று கேட்டபடியே படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். தனக்கு முன்னால் கெளடா எழுந்து குழப்பத்துடன் அமர்ந்திருப்பதைப் பார்த்து அவளுக்குக் குழப்பம் இருந்தது.

என்னங்க இது? இந்த நேரத்துல யாருங்க வீணை இசைக்கிறாங்க?’ 

எனக்கும் அந்தச் சத்தம் கேட்டுது சரஸ்வதி. அதைக் கேட்டுதான் சட்டுனு எழுந்து உட்கார்ந்தேன். யாருன்னு தெரியலை. ஆனா இசையைக் கேட்கக்கேட்க இன்னும் கேட்டுகிட்டே இருக்கணும் போல அற்புதமா இருக்குது.’ 

முதலில் பிரமையாக இருக்குமோ என்றுதான் அவர்கள் நினைத்தனர். ஆனால் மயங்கவைக்கும் அந்த இசை தொடர்ச்சியாக அவர்கள் காதில் விழுந்தபடியே இருந்தது. ஒருவரையொருவர் கேள்வியோடு பார்த்தபடி தோட்டத்துக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்து பார்த்தனர். அந்த வெட்டவெளியெங்கும் வீணையின் இசை நிறைந்திருந்தது. ஆனால் இசைப்பவர் யார், எங்கிருந்து அந்த இசை வருகிறது என்பதைத்தான் அவர்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை

சரி வா. படுத்துக்கலாம். விடியற நேரத்துக்கே நான் பண்ணைக்கு போகணும். வேலைக்கு ஆளுங்க வந்துருவாங்க. அவங்களுக்கு முன்னால நான் போய் நிக்கணும்என்று சொன்னார் கெளடா. சுற்றுவட்டாரத்தில் எவ்வளவு தொலைவுக்கு பார்த்தாலும் ஒருவரையும் பார்க்கமுடியாததால் ஏமாற்றத்தோடு சரஸ்வதி திரும்பினாள். இருவரும் வீட்டுக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டனர்.

விண்ணுலகத்தை ஆட்சி செய்யும் இந்திரனுக்கு ஒரு மகன் இருந்தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திசையில் தன் ஊர்தியில் வானுலா சென்று அலைந்து திரிந்து இயற்கையில் அழகில் தோய்ந்திருப்பது அவன் வழக்கம். ஒருநாள் தன் வழக்கத்தையொட்டி வானுலா வந்துகொண்டிருந்த சமயத்தில் பூமியிலிருந்து எழுந்த இனிமையான வீணையின் நாதத்தைக் கேட்டான். அந்த இசை அவனை மயக்கியது. வானுலகத்தில் வாழும் கந்தர்வர்களின் இசைக்கு நிகரானதாக அந்த வீணையின் இசை இருப்பதைப்போல அவனுக்குத் தோன்றியது. பூமிக்கு வெகு அருகில் வந்து நின்று அந்த இசையைக் கேட்டபடி நீண்ட நேரம் பொழுது போக்கினான்

இவ்வளவு இனிமையாக வீணையை மீட்டி இசைப்பவர் யார் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவல் அவனை உந்தித் தள்ளியது. அதனால் அந்த வீணையின் இசை வந்த திசையிலேயே பயணம் செய்து இறங்கி வந்தான். குளிர் நிறைந்த இரவு நேரத்தில் ஒரு மாதுளை மரத்தில் ஒரே ஒரு மலர் மலர்ந்திருப்பதையும்   அம்மலருக்குள் அரசியைப்போன்ற தோற்றத்தோடு ஓர் இளம்பெண் அமர்ந்துகொண்டு வீணையை மீட்டுவதையும் அவன் பார்த்தான். அவளுடைய அழகான தோற்றம் அவன் நெஞ்சில் அக்கணமே அழுத்தமாகப் பதிந்துவிட்டது. தேவர்களின் உலகத்தில் வாழும் கன்னிப்பெண்களைவிட அவளுடைய அழகு வசீகரமுள்ளதாக இருந்தது. மிகமிக நெருக்கமாக நின்று அவளுடைய இசையைக் கேட்டபடி பொழுது போவது தெரியாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்

இசைத்து முடிந்ததும் வீணையைக் கீழே வைத்தாள் பத்மினி. பிறகு மெல்ல மலரிலிருந்து இறங்கி தரைக்கு வந்தாள். தன் வீட்டையும் வானத்தையும் பிற மரங்களையும் ஏக்கத்துடன் ஒருகணம் பார்த்து பெருமூச்சு விட்டாள்அவளுடைய பார்வை ஒவ்வொரு மரமாக மாறிமாறிச் சென்ற சமயத்தில் அங்கே அமைதியாக நின்றபடி ஏக்கத்துடன் தன்னையே பார்த்துக்கொண்டிருந்த இளைஞனைப் பார்த்தாள். ஒரே கணத்தில் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். அவனைப் பார்த்ததுமே பத்மினிக்கு அவனை மிகவும் பிடித்துவிட்டது

பத்மினியை நெருங்கி வந்த இளைஞன் அவளுடைய கைகளை மெதுவாகத் தொட்டான். பிறகு அவள் விரல்களைத் தொட்டு வருடினான். அடுத்து ஒரு புதையலைப்போல அவள் கைகளைத் தன் கைகளுக்குள் வைத்து மூடிக்கொண்டான். அவன் செயல்களைக் கண்டு பத்மினி நாணத்துடன் சிரித்தாள். தன்னைத் தொடும் கைகளை அவள் உதறவில்லை என்பதை உணர்ந்ததும் அந்த இளைஞன் தைரியம் வரப்பெற்றவனாக அவள் கைகளை உயர்த்தி முத்தமிட்டான். அவள் உடனடியாக  புன்னகைத்தபடியே தன் கைகளை அவனுடைய பிடியிலிருந்து விடுவித்துக்கொண்டாள்

நாம ரெண்டு பேரும் திருமணம் செஞ்சிக்கலாமா?’ என்று மெல்லிய குரலில் பத்மினியிடம் கேட்டான் இளைஞன்.

அவனைப்பற்றிய எந்த விவரமும் தெரியாமலேயே பத்மினிம்என்று தலையசைத்தபடி தன் சம்மதத்தைத் தெரிவித்தாள். ஏதோ ஓர் உள்ளுணர்வு அவனையே தன் வாழ்க்கைத்துணைவன் என நினைக்கவைத்தது.

அதைக் கேட்டு அந்த இளைஞன் முகம் பூரித்தது. ‘நான் யார் தெரியுமா?’ என்று மெதுவாகக் கேட்டான். அவள் தெரியாது என்பதன் அடையாளமாக உதட்டைப் பிதுக்கி தலையசைத்தாள்.

நான் மண்ணுலகத்தைச் சேர்ந்த ஆளில்லை. தேவ உலகத்தைச் சேர்ந்தவன். இந்திரனின் மகன். நான் இப்பவே போய் எங்க அம்மா அப்பாகிட்ட உன்னைப்பத்தி எடுத்துச் சொல்லி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கிட்டு வரேன். அதுவரை காத்திரு.

தன் சம்மதத்துக்கு அடையாளமாக புன்னகையுடன் தலையசைத்தாள் பத்மினி. அவன் அவளுடைய விரல்களைப்பற்றி மீண்டுமொருமுறை முத்தமிட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறினான். அவன் வானத்தில் பறந்து செல்வதையே பார்த்தபடி நீண்ட நேரத்துக்கு நின்றிருந்தாள் பத்மினி. பிறகு தன் மலருக்குத் திரும்பினாள்.

இந்திர உலகத்துக்குத் திரும்பியதும் இளைஞன் தன் படுக்கையறைக்குச் சென்று படுத்துக்கொண்டான். வேலைக்காரர்கள் பலமுறை அறைக்குள் வந்து எழுப்பிய போதும் அவன் எழுந்திருக்கவில்லை

அப்போது ஒரு வேலைக்காரன் வந்துஐயா, விடிஞ்சி ரொம்ப நேரமாவுது. குளிக்கறதுக்கு நேரமாகிவிட்டது. வாங்கஎன்று பணிவோடு அழைத்தான். ‘நான் வரமாட்டேன் போஎன்று படுக்கையிலேயே கண்களை மூடிக்கொண்டு கிடந்தான் இளைஞன்.

சிறிது நேரம் கழித்து இன்னொரு வேலைக்காரன் வந்துஐயா, புத்தாடையெல்லாம் தயாரா இருக்குது. சீக்கிரம் வந்து குளிச்சிட்டு போட்டுக்குங்கஎன்று அழைத்தான். அப்போதும் அவன் படுக்கையிலேயே கண்களை மூடிக்கொண்டு கிடந்தான். தலையை மட்டும் திருப்பிநான் வரமாட்டேன் போஎன்று சொன்னான்.

சிறிது நேரம் கழித்து மீண்டுமொரு வேலைக்காரன் அறைக்குள் வந்து நின்றான். ‘ஐயா, அம்மா, அப்பா எல்லாரும் சிற்றுண்டி சாப்பிட உட்கார்ந்துட்டாங்க. உங்களைத்தான் தேடறாங்க. எழுந்துவந்து சீக்கிரமா குளிச்சிட்டு புத்தாடை போட்டுகிட்டு சாப்பிட வாங்கஎன்று அழைத்தான். அப்போதும் அவன் எழுந்திருக்கவில்லை. கண்ணைத் திறக்காமல் தலையை மட்டும் வேகமாக அசைத்துநான் வரமாட்டேன் போஎன்று சொன்னான்.

சிறிது நேரத்துக்குப் பிறகு அவனுடைய அம்மா அறைக்குள் வந்தாள். ‘மகனே, என்ன பிரச்சினை? உடம்புக்கு என்ன? குளிக்கமாட்டேன், புதுச்சட்டை போடமாட்டேன், சாப்பிடமாட்டேன்னு அடம் பிடிக்கிறியாமே, ஏன்? என்ன நடந்திச்சி?’ என்று கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டபடி அவனைத் தொட்டு எழுப்பினாள்.

அம்மாவின் குரலைக் கேட்டதும் சட்டென எழுந்து உட்கார்ந்தான் இளைஞன். எல்லாவற்றையும் மறந்து அம்மாவைப் பார்த்துப் புன்னகைத்தான். அம்மாவின் கையைப் பற்றி இழுத்து தனக்கு அருகில் உட்காரவைத்துக்கொண்டான்.

அம்மா, நேத்து ராத்திரி பூமியில அழகான ஒரு பொண்ணைப் பார்த்தேன்மா. எனக்கு அவள் நினைவாகவே இருக்குது. அவளை நான் கல்யாணம் செஞ்சிக்கணும்மா. அவ இல்லாம என்னால ஒருநாள் கூட வாழ முடியாதும்மா

மகனுடைய பேச்சைக் கேட்டு அம்மாவின் முகம் மலர்ந்தது. ‘உனக்குள்ள கல்யாண ஆசை வந்திருக்கிறதைப் பார்க்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது. நீ இந்திர உலகத்துல இருக்கிறவன்அந்தப் பொண்ண பூமியில பார்த்தேன்னு சொல்ற. உனக்கும் அவளுக்கும் எப்படிப் பொருத்தமாகும், சொல்லு? அது இயற்கைக்கே விரோதமானது மகனேஎன்று இளைஞனுக்குப் புரியும் வகையில் மெதுவாக எடுத்துரைத்தாள்.

இளைஞன் ஏமாற்றமடைந்த பார்வையுடன் தன் அம்மாவைப் பார்த்தான்

இங்க பாருப்பா. இந்த இந்திர லோகத்துல இல்லாத அழகியா பூமியில இருக்கப் போறா? வாப்பா, உனக்கு இந்த உலகத்துலயே அழகான ஒரு பொண்ணைப் பார்த்து கல்யாணம் செஞ்சிவைக்கறேன்.

நம்ம உலகத்துப் பொண்ணே எனக்கு வேணாம்மா. எனக்கு அந்தப் பொண்ணைத்தான் புடிச்சிருக்குது. நான் அவளைக் கல்யாணம் செஞ்சிக்கறதா வாக்குறுதி கொடுத்திருக்கேன். நான் அந்த சத்தியத்தைக் காப்பாத்தணும். தயவுசெஞ்சி எனக்கு சம்மதம் கொடுங்க. எவ்ளோ அழகா அவள் வீணை வாசிப்பா தெரியுமா? ஒரு நொடி நீங்க காது கொடுத்துக் கேட்டா அப்படியே மயங்கிடுவீங்க. அவளுடைய திறமைக்கு நிகரா இந்த உலகத்துல கூட யாரும் ஈடு இணையே இல்லை.

மீண்டும் மீண்டும் தன் தாயிடம் கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டான் அந்த இளைஞன்

ஒரு பக்கம் தேவர்கள் உலகத்துக் கட்டுப்பாடுகளை அவள் நினைத்துப் பார்த்தாள். இன்னொரு பக்கம் தன் மகன் மயங்கிய அழகான பெண்ணையும் நினைத்துப் பார்த்தாள். இறுதியில் தாய்ப்பாசமே வென்றது. ‘சரி, இன்னைக்கு நீ பூமிக்குப் போவும்போது நானும் உன் கூட வரேன். அந்தப் பொண்ணை நானும் ஒருமுறை பார்க்கறேன். அதுக்குப் பிறகு நாம மத்த விஷயங்களைப் பேசி முடிவு செய்யலாம்என்றாள். இளைஞன் அந்தக் கோரிக்கையை அக்கணமே ஏற்றுக்கொண்டான். ‘சரி, இப்பவாவது போய் குளிச்சிட்டு சட்டை மாத்திட்டு வா. சாப்பிடலாம். அங்க எல்லாரும் காத்திருக்காங்கஎன்றாள் அவள். ‘நீங்க போயிட்டே இருங்கம்மா. கொஞ்ச நேரத்துல நான் தயாராகி வரேன்என்று அவளை அனுப்பிவைத்துவிட்டு குளியலறைக்குள் ஓடினான்.

பொழுது சாயத் தொடங்கியதும் மகனைப் பார்த்துபோகலாமா? உன் மனத்தை மயக்கிய பெண் எப்படிப்பட்டவள்னு பார்க்கறதுக்கு எனக்கும் ஆசையா இருக்குதுஎன்றாள் தாய். ‘வாங்கம்மா, கெளம்பலாம்என்று இளைஞனும் அக்கணமே தயாரானான்.

இருவரும் பூமியை நெருங்கி கெளடாவின் வீட்டுத் தோட்டத்தில் இறங்கினார்கள். அவ்வேளையில் இன்னும் சூரியன் மறையவில்லை. பொழுது எஞ்சியிருந்தது. ‘எங்கடா உன் மனசை மயக்கிய தேவதை?’ என்று வேடிக்கையாகக் கேட்டாள் தாய். ‘இரும்மா. அவசரப்படாதே? இன்னும் இருட்டு வரலையே. இருட்டினாதான் அவ வருவாஎன்றான் அவன்.

எந்தப் பக்கத்திலிருந்து வருவா?’ என்று பொறுமையின்றிக் கேட்டாள் அவள்.

அதோ அங்க மாதுளை மரம் தெரியுதா? அந்த மரத்துல ஒரே ஒரு பூ இருக்குதே, அது தெரியுதா?’

எல்லாம் தெரியுது. பொண்ணு எங்கேன்னு கேட்டா நீ பூ எங்க இருக்குதுன்னு சொல்லிட்டிருக்கியே.

கொஞ்சம் பொறுமையா இரும்மா. அதோ, அந்தப் பூவிலிருந்துதான் அவள் வருவா.

அதைக் கேட்டு ஒருகணம் சற்றே திகைத்து நின்றாள் அவள். ‘என்ன சொல்ற நீ? பூவிலிருந்து வருவாளா?’ என்று ஆச்சரியத்தோடு கேட்டாள்.

ஆமாம்மா. பூவிலிருதுதான் வருவா.

உனக்கு உறுதியா தெரியுமா?’

நல்லா உறுதியா தெரியும்ம்மா.

அதைக் கேட்டு ஏளனம் தொனிக்கும் வகையில் சிரித்தாள் அம்மா. ‘உனக்கு என்ன பைத்தியமா? உயிருடன் இருக்கிற ஒரு மானுடப் பெண் ஒரு பூவிலிருந்து வருவாள்ங்கற விஷயம் நம்பறமாதிரியா இருக்குது? ஏன் இப்படி உளறுற? வா, நாம் நம்ம இடத்துக்கே திரும்பிப் போகலாம்என்றாள்

அம்மா, தயவுசெஞ்சி நான் சொல்றதை நம்பும்மா. இந்த மாதுளைப் பூ இரவு நேரத்துல மலரத் தொடங்கி விடியற நேரத்துல கூம்புகிற அபூர்வமான பூ. பகல் முழுக்க கூம்பித்தான் இருக்கும். இதோ பாருங்க, இருட்டு கவியத் தொடங்கிடுச்சி. இன்னும் கொஞ்ச நேரத்துல அந்தப் பூ மலரப் போவுது பாருங்கஎன்று மன்றாடி தன் அம்மாவை நிறுத்தினான்.

வேறு வழியில்லாமல் இருவரும் அம்மலரையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

 சரஸ்வதி தோட்டத்துக் கதவைத் திறந்துகொண்டு வந்து மாடத்தில் விளக்கேற்றி வைத்துவிட்டுத் திரும்பிச் சென்றாள். அவள் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் பூமியின் மீது இருள் சூழ்ந்தது. அக்கணமே அழகான நறுமணத்தோடு மாதுளையின் பூ மெல்ல மெல்ல விரியத் தொடங்கியது. சில கணங்களுக்குப் பிறகு யாரோ வீணையை மீட்டியெழுப்பும் இசை கேட்டது

தேவ உலகத்தில் கூட கேட்கமுடியாத இனிய இசையாக அந்த வீணையின் இசை இருப்பதை உணர்ந்தாள் அம்மா. மலர் முற்றிலும் மலர்ந்ததும், மலருக்குள் உட்கார்ந்து வீணை வாசிக்கும் அந்தப் பெண்ணின் முகத்தையும் அவள் தெளிவாகப் பார்த்தாள். அந்த அழகை அவளால் நம்பவே முடியவில்லை. சூரிய ஒளியும் நிலவொளியும் இணைந்ததுபோல அவள் முகம் மின்னியதைப் பார்த்து அவளுக்கு மயக்கமே வரும்போல இருந்தது.

தேவ உலகத்தில் வசிக்கும் பெண்களைவிட அவள் உண்மையிலேயே பேரழகி என்பதை அவள் உணர்ந்துகொண்டாள். பக்கத்திலிருந்த மகனிடம்நீ சொன்னது உண்மைதான் மகனே. இப்படி ஒரு அழகி நம்ம உலகத்துல கூட கிடையாதுஎன்று அடங்கிய குரலில் கூறினாள்.

வீணையின் இசை ஓயும் வரைக்கும் இருவரும் அமைதியாக ஒதுங்கி நின்று அவளையே பார்த்தபடி இருந்தனர். இசை ஓய்ந்ததும் மலரை நெருங்கி வந்தனர். நேற்று சந்தித்த  இளைஞனைப் பார்த்ததும் பத்மினி மலரிலிருந்து வெளிப்பட்டு அவனை நெருங்கிவந்தாள்

பத்மினி, இவங்கதான் என் அம்மா. உன்னை அவுங்களுக்குக் காட்டணும்னு அழைச்சிட்டு வந்தேன்

பத்மினி அவளைப் பார்த்து கைகுவித்து வணங்கினாள். அம்மா புன்னகைத்தபடி ஆசையோடு பத்மினியைத் தன் நெஞ்சோடு ஆரத் தழுவிக்கொண்டாள். ‘என் மகனுக்குப் பொருத்தமானவள்தான் நீஎன்று அவளுக்கு ஆசி வழங்கினாள். பத்மினி அவள் பாதங்களைத் தொட்டு வணங்கினாள்

என் மகனைத் திருமணம் செய்துகொள்ள உனக்குச் சம்மதம்தானே?’ என்று கேட்டாள் அம்மா. பத்மினி நாணத்துடன்ம்என்று தலையசைத்தபடி அந்த இளைஞனின் பக்கம் திரும்பிப் பார்த்து புன்னகைத்தாள்

அப்படின்னா, நீ இப்பவே எங்க கூட கெளம்பு. நம்ம உலகத்துக்குப் போய் திருமணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யலாம்என்றாள் அம்மா

மூவரும் அங்கிருந்து அக்கணமே தேவலோகத்துக்குப் புறப்பட்டனர். இந்திரனைச் சந்தித்து எல்லா விவரங்களையும் தெரிவித்தனர்தேவர்கள் முன்னிலையில் அவ்விருவருக்கும் சிறப்பான வகையில் திருமணத்தை நடத்திவைத்தார் இந்திரன். இளம் தம்பதியினர் இருவரும் இனிமையான  வகையில் தம் இல்வாழ்க்கையைத் தொடங்கினர்.

வழக்கம்போல ஒவ்வொரு நாள் மாலையிலும் மாடத்தில் விளக்கேற்றி வைப்பதைத் தொடர்ந்து செய்துவந்தாள் சரஸ்வதி. ஒருநாள் அவள் விளக்கேற்ற வந்தபோது மாதுளை மரத்தின் இலைகள் வாடி இருப்பதைப் பார்த்தாள். அக்கம்பக்கத்தில் இருக்கும் எல்லா மரங்களும் பச்சைப்பசேலென இருக்கும் நிலையில் அந்த மரம் மட்டும் பசுமை குன்றி வெளிறி இருப்பதற்கான காரணம் தெரியாமல் அவள் தடுமாறினாள்

அவள் தான் பார்த்ததை அங்கிருந்த பணிப்பெண்களிடம் சுட்டிக் காட்டி விசாரித்தாள். ‘நாங்க கூட கவனிச்சிகிட்டுதாம்மா வரோம். நீங்க சொல்றது உண்மைதாம்மா. கொஞ்ச நாளாவே அந்த மரத்தின் இலைகளெல்லாம் சுருங்கிகிட்டே வருதும்மா. என்ன காரணம்னு புரியலைஎன்று கூறினார்கள். ஊட்டச்சத்து குறைவாக இருக்கலாம் என நினைத்து மரத்தைச் சுற்றி வட்டமாகப் பாத்தி கட்டி எருவிட ஏற்பாடு செய்தாள். அப்போதும் மரத்தின் வாட்டம் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போனதே தவிர மாற்றம் எதுவும் ஏற்படவில்லை

தொடக்கத்தில் இரவானதும் மலரும் மாதுளையின் மலர் இரவு நேரத்திலும் கூம்பிய நிலையிலேயே இருந்தது. இயற்கையில் ஏற்படும் மாற்றங்களுக்கான காரணத்தைப் புரிந்துகொள்ள முடியாத சரஸ்வதி மாலையில் விளக்கேற்றி வணங்கும் பழக்கத்தை மட்டும் தொடர்ந்து செய்துவந்தாள்.

ஒருநாள் வழக்கம்போல மாலை நேரத்தில் மாடத்தில் விளக்கேற்றி வைத்து வணங்கினாள் சரஸ்வதி. பிறகு ஏதோ நினைத்தவளாக அங்கேயே ஒரு மேட்டில் உட்கார்ந்து கவியத் தொடங்கும் இருளையும் வானத்தில் மிதந்து செல்லும்  மேகங்களையும் வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள். காற்றில் எதிர்பாராத விதமாக ஒரு குளுமை கூடியதும், ஒருவேளை மழை பொழியக்கூடுமோ என நினைத்தவளாக மேகம் செல்லும் திசையையே பார்த்தபடி இருந்தாள்

ஒரு திசையிலேயே நிலைத்திருந்த அவள் பார்வை மெல்ல மெல்ல இறங்கி மாதுளை மரத்தின் மீது பதிந்தது. துவண்ட இலைகளோடும் மெலிந்த கிளைகளோடும் காணப்பட்ட மரத்தின் தோற்றத்தைப் பார்க்கப்பார்க்க அவள் மனம் வேதனையில் மூழ்கியது. அவள் விழிகளில் தன்னையறியாமலேயே கண்ணீர் பெருகி வழிந்தது

விண்ணுலகத்தில் தன் கணவனோடு மகிழ்ச்சியாக குடும்பம் நடத்திவந்த பத்மினிக்கு ஒருநாள் மண்ணுலகத்துக்குச் சென்று தன் தாயைப் பார்க்கவேண்டும் என்ற ஏக்கம் எழுந்தது. தன் எண்ணத்தைத் தன் கணவனிடம் தெரிவித்தாள். உடனே அவன்அதுக்கென்ன தயக்கம்? வா, இப்பவே போய் பார்த்துட்டு வரலாம்என்று சொல்லிவிட்டு அக்கணமே புறப்பட்டான் அவன்

இருவரும் தேவ உலகத்திலிருந்து புறப்பட்டு மண்ணுலகத்துக்கு வந்து சேர்ந்தனர். மாதுளை மரத்துக்கு அருகில் இறங்கினர். பத்மினியின் கால் மண்ணில் பட்டதும் வாடி நின்றிருந்த மாதுளை மரத்தின் மறுபடியும் பசுமை படியத் தொடங்கியது

வேதனையோடும் கண்ணீரோடும்  மரத்தைப் பார்பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்த மாதுளை மரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கினாள் சரஸ்வதி. இது என்ன கனவா, அல்லது நனவா என்று தன் கையை அவளே ஒருமுறை கிள்ளிப் பார்த்துக்கொண்டாள்

துவண்ட இலைகள் சட்டென விரிந்து நீண்டன. இலையற்ற இடங்களில் கூட இலைகள் செறிவுற்று அடர்த்தியாக அசைந்தன. கிளைகள் அசைந்து காற்றை வீசியது. தொலைவில் வெகுகாலமாக கூம்பியிருந்த மாதுளையின் பூ மெல்ல மெல்ல மலர்ந்து விரிந்தது.  ‘கடவுளே, கடவுளேஎன்று கண்ணீருடன் எழுந்து நின்று அந்த மரத்தைப் பார்த்து கைகுவித்து வணங்கினாள் சரஸ்வதி. ‘எங்க மரத்துக்கு மறுபடியும் உயிரைக் குடுத்துட்ட கடவுளே. ரொம்ப நன்றி. ரொம்ப நன்றிஎன்றபடி தன் விழிகளில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.

அதே கணத்தில் பத்மினி சரஸ்வதியின் எதிரில் தோன்றினாள். ஏதாவது மாயத் தோற்றமாக இருக்கக்கூடும் என நினைத்து தன் கண்களை நன்றாகத் துடைத்துக்கொண்டு மீண்டும் திறந்து பார்த்தாள் சரஸ்வதி. பத்மினி அங்கேயே நின்றிருந்தாள். சரஸ்வதியால் அதற்கு மேல் அங்கு நிற்கமுடியவில்லை. சட்டென முன்னால் நகர்ந்து அவளை பத்மினி பத்மினி என்று ஆசையோடு தொட்டாள். ‘நான்தாம்மா. பத்மினிதாம்மா. எப்படிம்மா இருக்க?’ என்று கேட்டபடி பத்மினி சரஸ்வதியை இழுத்து அணைத்துக்கொண்டாள்

நீ செத்து எத்தனை வருஷமாச்சி. உன்னை நெனச்சி நெனச்சி என் மனசே ரணமாயிடுச்சி தெரியுமா? இவ்ளோ காலமா நீ எங்கம்மா இருந்தா? எப்படிம்மா இருந்தஎன்றபடி தடுமாறினாள் சரஸ்வதி.

ஆமாம்மா. செத்துதாம்மா போயிட்டேன். ஆனாலும் உங்களையெல்லாம் விட்டுட்டுப் போக எனக்கு மனசே வரலைம்மா. அதனால இங்கயே இந்த மாதுளை மரமா நின்னு உங்களையெல்லாம் பார்த்துட்டே இருந்தேம்மா. நீங்க எல்லாரும் என் மேல எவ்ளோ பாசமா இருக்கீங்கன்னு இந்தப் பூவுக்குள்ள இருந்துகிட்டே ஒவ்வொரு நாளும் பார்த்துப் பார்த்து சந்தோஷப்பட்டேம்மா.’ 

பத்மினி சொல்லச்சொல்ல ஏதோ ஒரு கதையைக் கேட்பதுபோல மெய்மறந்து கேட்டாள் சரஸ்வதி

இத்தனை காலம் இந்தப் பூவுக்குள்ள இருந்தேன்னு சொல்ற. இப்ப கொஞ்ச காலமா மரமும் வாட்டமாவே இருக்குது. இந்தப் பூவும் வாட்டமாவே இருக்குது. அதையெல்லாம் பார்க்கப்பார்க்க எனக்குச் சங்கடமா இருக்கும். அது ஏன் அப்படி ஆச்சி?’

அதுவா, அது ஒரு பெரிய கதைம்மாஎன்று சிரித்தாள் பத்மினி. தொடர்ந்துஎனக்கு கல்யாணம் ஆயிடுச்சிம்மா. நீயும் அப்பாவும் அந்தக் காலத்துல எனக்குக் கல்யாணம் செஞ்சி வைக்கணும்னு அந்தக் காலத்துல எவ்வளவு கஷ்டப்பட்டீங்கஇப்ப நான் கல்யாணம் செஞ்சிகிட்டேம்மா. இவருதான் என் வீட்டுக்காரர். தேவலோகத்துக்கு அதிபதியான இந்திரனுடைய மகன்.’ 

பக்கத்திலேயே நின்றிருந்த தன் கணவனை தன் அம்மாவுக்கு அறிமுகப்படுத்தினாள் பத்மினி. அவன் அவளை வணங்கினான். இரு கைகளையும் உயர்த்திரெண்டு பேரும் நல்லா இருங்க தங்கங்களா. இந்த அம்மாவுடைய ஆசி எப்பவும் உங்களுக்குத் துணையா இருக்கும்என்று குரல் தழுதழுக்கச் சொன்னாள் சரஸ்வதி.

எனக்கு கல்யாணம் ஆகறவரைக்கும் இந்த மரத்துலயேதாம்மா இருந்தேன். அதனால மரமும் எப்பவும் பச்சைப்பசேல்னு இருந்தது. கல்யாணத்துக்குப் பிறகு நான் தேவலோகம் கெளம்பிப் போயிட்டதால மரம் வாடிப் போயிடுச்சி. இதோ இப்ப இந்தத் தோட்டத்துல  நான்  காலடி எடுத்து வச்சதும் மறுபடியும் பச்சைப்பசேல்னு ஆயிட்டுது பாரும்மா.

சரஸ்வதி அதைப் புரிந்துகொண்டாள். பத்மினியின் கன்னத்தைத் தொட்டு வருடி இறுக்கமாகத் தழுவி அவள் நெற்றியிலும் கன்னத்திலுமாக மாறிமாறி முத்தமிட்டாள்.

உன் அக்காவுக்கு ஒரு வாழ்க்கையை அமைச்சிக் கொடுத்தமாதிரி உனக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சிக் குடுக்க முடியாம போயிடுச்சேன்னு நாங்க ரெண்டு பேரும் குற்ற உணர்ச்சியால தவியா தவிச்சிட்டோம்மா. ஏதோ கடவுள் தயவால, தொலைவான இடமா இருந்தாலும் எங்கயோ சந்தோஷமா குடும்பம் நடத்திட்டிருக்கேன்னு கேக்கறதுக்கு மனசுக்கு நிறைவா இருக்குது. நீ எங்க இருந்தாலும் நல்லா இரும்மா. அது போதும்.’ 

அப்பா எங்கம்மா? அவருதான் என் மேல ரொம்ப வருத்தமா இருந்தாரு.’ 

அவரு எந்தக் காலத்துலம்மா வீட்டுல தங்கியிருக்காரு. தூங்கற நேரம் தவிர மத்தபடி  எல்லா நேரத்துலயும் பண்ணை பண்ணைன்னு பண்ணையிலயேதான் கெடக்கறாரு. உன் கல்யாண சேதியை அவருகிட்ட சொல்றேன். அவரு ரொம்ப சந்தோஷப்படுவாரு.’ 

சிறிது நேரத்துக்குப் பிறகு பத்மினியும் அவள் கணவனும் சரஸ்வதியிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு மீண்டும் விண்ணுலகத்தை நோக்கிப் பறந்து சென்றனர். அவர்கள் சென்ற திசையையே நேரம் போவது தெரியாமல் மெய்மறந்து பார்த்தபடி நின்றிருந்தாள்

வீட்டுக்குள்ளிருந்துசரஸ்வதி, சரஸ்வதிஎன கெளடா அழைக்கும் குரலைக் கேட்ட பிறகுதான் அவள் தன்னுணர்வை அடைந்தாள். உடனே பத்மினியைப் பார்த்த செய்தியை அவரிடம் தெரிவிக்கவேண்டும் என்கிற வேகத்துடன் வீட்டுக்குள் திரும்பினாள்.   

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *