Skip to content
Home » நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #25 – ஆறு சகோதரர்களும் ஒரு சகோதரியும்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #25 – ஆறு சகோதரர்களும் ஒரு சகோதரியும்

ஒரு கிராமத்தில் ஒரு எண்ணெய் வியாபாரி வசித்துவந்தான். அவன் பெயர் செளடய்யா. ஒவ்வொரு நாளும் அவன் செக்குமேட்டிலிருந்து இரண்டு குடம், நான்கு குடம் என்கிற அளவில் எண்ணெயை நேரடியாகக் குறைந்த விலைக்கு வாங்கிவருவான். பிறகு, அவற்றை வண்டியில் வைத்து ஊரூராக எடுத்துச் சென்று மக்களிடையில் சில்லறை விற்பனை செய்வான். அதில் கிடைக்கும் சிறு லாபம்தான் அவனுடைய வாழ்க்கைக்கான ஆதாரம்.  

சில சமயங்களில் அவன் கழுதைகளின் முதுகிலும் சுமையை வைத்து வியாபாரத்துக்காக ஊரூராக ஓட்டிச்  செல்வதும் உண்டு. அதனால் இரண்டு வண்டி மாடுகளும் இரண்டு கழுதைகளும் அவன் வீட்டில் எப்போதும் இருந்தன. எண்ணெய் இருப்பு அதிகமாக இருந்தால் மாட்டுவண்டியையும் இருப்பு குறைவாக இருக்கும்போது கழுதைகளையும் பயன்படுத்திக்கொள்வான்

செளடய்யாவின் மனைவியின் பெயர் கெளரம்மா. செளடய்யா வியாபாரத்துக்குப் புறப்பட்டுச் சென்றதும் வீட்டிலிருக்கும் மாடுகளை அல்லது கழுதைகளை ஊருக்கு வெளியே காட்டுப்புறமாக ஓட்டிச் சென்று மேயவைப்பாள். அப்படியே வீட்டுச் சமையலுக்குத் தேவையான காய்கறிகளையும் கீரைகளையும் தேடிப் பார்த்து பறித்து மடியில் கட்டிக்கொள்வாள். அவை எதுவும் தேவைப்படாதபோது, அடுப்பெரிக்கத் தேவையான விறகுகளையும் சுள்ளிகளையும் தேடிச் சேகரிப்பாள். அதற்குள் மாடுகளும் தேவையான அளவுக்கு மேய்ச்சலை முடித்துவிடும். நிதானமாக அவற்றை மீண்டும் வீட்டுக்கே ஓட்டிவந்து தண்ணீர் அருந்தவைத்து தோட்டத்திலுள்ள கொட்டகையில் கட்டிவைப்பாள்.

செளடய்யாவுக்கும் கெளரம்மாவுக்கும் திருமணமான புதிதில் இரண்டுமூன்று ஆண்டுகளுக்குக் குழந்தை இல்லாமல் இருந்ததுஅதற்குப் பின்பு அடுத்தடுத்து ஆறு ஆண் குழந்தைகள் பிறந்தன. வீரண்ணா, சோமண்ணா, ராமண்ணா, ரேவண்ணா, ஜெயண்ணா, சிக்கண்ணா என ஒவ்வொரு குழந்தைக்கும் ஆசையோடு பெயர்சூட்டி வளர்த்தார்கள். அவர்களுக்கு பெண் குழந்தை மீது ஆசை இருந்ததால் தொடர்ச்சியாக குழந்தைகளைப் பெற்றுக்கொண்டே இருந்தனர். ஏழாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு அவர்கள் லிங்கம்மா என்று பெயர்சூட்டினர். அதற்குப் பிறகு அவர்கள் குழந்தை வேண்டாம் என நிறுத்திக்கொண்டனர்.

ஆண் பிள்ளைகள் அனைவரும் ஏழெட்டு வயது வரைக்கும் ஆட்டமாடிக்கொண்டும் பாட்டு பாடிக்கொண்டும் பொழுதுபோக்கினர். பிறகு தன் அம்மா வழியில் மாடுகளையும் கழுதைகளையும் காட்டுக்கு ஓட்டிச் சென்று மேய்த்துவிட்டு வந்தனர். கெளரம்மா வீட்டிலேயே தங்கி லிங்கம்மாவைப் பார்த்துக்கொண்டாள். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக லிங்கம்மா வளர்ந்துவந்தாள்

வீரண்ணா பெரியவனானதும்  வண்டியில் உட்கார்ந்து பயணம் செய்யும் ஆசையினால் தன் அப்பாவோடு சேர்ந்துகொண்டு எண்ணெய் வியாபாரத்துக்குச் செல்லத் தொடங்கினான். மற்ற நேரங்களில் மாடுகளையும் கழுதைகளையும் மேய்ப்பதற்காக காட்டுக்கு ஓட்டிச் சென்றான். அந்த நேரத்தில் செளடய்யா சோமண்ணாவையோ ராமண்ணாவையோ தன் உதவிக்காக வண்டியில் ஏற்றிக்கொண்டு வியாபாரத்துக்குச் சென்றான்.

ஒருநாள் காட்டில் மாடுகளை மேயவிட்டு ஒரு புங்கமரத்தில் ஏறி உற்சாக மிகுதியால் உச்சிக்கிளை வரைக்கும் சென்றான் வீரண்ணா. அங்கே உட்கார்ந்துகொண்டு ஆகாயத்தைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு ஆனந்தமாக இருந்தது. வானத்தையும் மேகங்களையும் கைநீட்டித் தொட்டுவிடலாம் என அவன் நினைத்தான். எந்தப் பக்கம் திரும்பினாலும் பச்சைப்பசேலென காடு விரிந்திருந்தது. சுற்றிச்சுற்றிப் பார்த்து அந்தக் காட்டின் அழகில் லயித்திருந்தபோது எங்கோ தொலைவில் வெள்ளைவெளேரென்ற நிறத்தில் ஒரு குதிரை தனியாக மேய்ந்துகொண்டிருந்ததை எதிர்பாராத ஒரு கணத்தில் பார்த்தான். அருகில் யாராவது இருக்கிறார்களா என உற்றுப் பார்த்தான். ஒருவரும் தென்படவில்லை

நெருக்கமாகச் சென்று அந்தக் குதிரையைப் பார்க்கும் ஆவலால் வேகவேகமாக மரத்திலிருந்து இறங்கினான் வீரண்ணா. குதிரை மேய்ந்துகொண்டிருக்கும் திசையில் நடக்கத் தொடங்கினான். அந்தத் திசையில் பாதை என தனியாக எதுவும் இல்லை. செடிகளையும் மரங்களையும் தாண்டித்தாண்டித்தான் செல்ல வேண்டியிருந்தது.

குதிரையின் முழு தோற்றமும் கண்ணுக்குப் புலப்படும் வகையில் ஒரு மரத்துக்குப் பின்னால்  வந்து நின்றான் வீரண்ணா. அதன் வெள்ளை நிறத்தைப் பார்க்கப் பார்க்க அவனுடைய ஆசை அதிகரித்தது. அதைத் தொட்டுப் பார்த்துக் கொஞ்சவும் அதன் மீது ஏறி சவாரி செய்யவும் அவனுக்குள் ஆசை பொங்கியது

குதிரையைச் சுற்றி எல்லா இடங்களிலும் பார்வையைச் சுழற்றி எங்காவது ஆள் நடமாட்டம் தெரிகிறதா என்று பார்த்தான். ஒருவரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டதும் மெல்ல மெல்ல அந்தக் குதிரையை நோக்கி அடியெடுத்து வைத்தான். சில நொடிகளிலேயே குதிரையை நெருங்கிவிட்டான். அதன் முதுகுப்பக்கத்தைத் தொட்டு மெதுவாகத் தட்டிக் கொடுத்தான். பிறகு கைகளை முன்னோக்கி நகர்த்தி கழுத்தின் பக்கமாக வருடிக் கொடுத்தான். அப்போது ஒரு கணம் குதிரை தன் முகத்தைத் திருப்பி அவனைப் பார்த்தது. அதன் கண்களில் எந்த எதிர்ப்பையும் அவனால் பார்க்க முடியவில்லை

குதிரையின் அமைதியால் உற்சாகம் கொண்டு, அதன் முதுகில் செல்லமாகத் தட்டித்தட்டி மெதுவாக நடக்க வைத்தான் வீரண்ணா. அவன் கட்டளைக்கு அடிபணிவதுபோல குதிரை அவன் பின்னாலேயே நடந்தது. அந்த மரத்தடியிலேயே அங்குமிங்கும் சிறிது நேரம் நடந்துவிட்டு, பிறகு மாடுகளை மேயவிட்ட இடத்தை நோக்கி  அழைத்துச் செல்லத் தொடங்கினான். எந்த மறுப்பும் இல்லாமல் குதிரை அவனைத் தொடர்ந்து நடந்து வந்தது. நடக்கும்போதே எதிர்காலத்தில் குதிரை மீது ஏறி காடு, மலைகள், ஆறுகள் கடந்து பயணம் செல்வதுபோல அவன் கனவு கண்டான்.

அன்று மாலை மேய்ச்சலை முடித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிய வீரண்ணா மாடுகளோடு புதிதாக ஒரு குதிரையையும் ஓட்டிவந்ததைப் பார்த்து கெளரம்மா ஆச்சரியப்பட்டாள். மற்ற தம்பிமார்களும் லிங்கம்மாவும் அதிசயத்தைப் பார்ப்பதுபோல அந்தக் குதிரையைப் பார்த்தனர். ‘நம்ம வீட்டுலயே வச்சிக்கலாமாண்ணா?’ என்று எல்லோரும் சந்தேகத்தோடு கேட்டனர். ‘இனிமே இந்தக் குதிரை நம்ம வீட்டுலதான்டா இருக்கப் போவுதுஎன்று  வீரண்ணா அவர்களைப் பார்த்து புன்னகைத்தபடி பதில் சொன்னான். எல்லாப் பிள்ளைகளும் குதிரை மீது சவாரி செய்ய விரும்பினார்கள். வீரண்ணா ஒவ்வொருவராக எல்லோரையும் ஒருமுறை குதிரை மீது அமரவைத்து தன் வீட்டைச் சுற்றி நடக்கவைத்தான். அனைவருக்கும் குதிரை சவாரி இனிய அனுபவமாக இருந்தது.

தனக்கென ஒரு குதிரை கிடைத்த பிறகு குதிரையின் முதுகிலேயே எண்ணெய்க்குடங்களின் சுமையை ஏற்றிவைத்துக்கொண்டு அப்பா வழியில் தனியாக வியாபாரம் செய்யத் தொடங்கினான் வீரண்ணா. அவர் ஒரு ஊர் வழியாகச் சென்றால், அவன் வேறொரு ஊரைத் தன் வியாபாரத்துக்கான இலக்காக வைத்துக்கொண்டான்.

வீரண்ணா தனி வியாபாரியாக எண்ணெய்க்குடங்களைச் சுமந்துகொண்டு ஊரூராகப் பயணம் செய்வதையும் இரவு நேரத்தில் திரும்பி வந்து தன் அனுபவங்களைக் கதைகதையாகச் சொல்லிப் பூரிப்பதையும் பார்த்துப் பார்த்து பிற சகோதரர்களான சோமண்ணா, ராமண்ணா, ரேவண்ணா, ஜெயண்ணா, சிக்கண்ணா அனைவருடைய நெஞ்சிலும் அதேபோன்ற ஆசை படரத் தொடங்கியது. அவர்களும் ஒவ்வொருவராக வளர்ந்து ஆளானதும் தமக்கு ஏற்ற வகையில் ஒரு கழுதை அல்லது ஒரு மாட்டை ஏற்பாடு செய்துகொண்டு அதே எண்ணெய் வியாபாரத்தில் இறங்கினர். காலை நேரத்தில் கணவனும் பிள்ளைகளும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் எண்ணெய்ப் பாத்திரங்களோடு வியாபாரத்துக்காக புறப்பட்டுச் சென்றபிறகு கெளரம்மாவும் லிங்கம்மாவும் மட்டுமே வீட்டில் இருந்தனர். சமையல் வேலைகளிலும் வீட்டு வேலைகளிலும் லிங்கம்மா தன் தாய்க்குத் துணையாக விளங்கினாள்

பருவ வயதடைந்த மகளுக்கு நல்ல மணமகனைத் தேடி திருமணம் செய்துவைக்க வேண்டும் என கெளரம்மாவும் செளடப்பாவும் திட்டமிட்டனர். வியாபாரத்துக்குச் செல்லும் இடங்களிலெல்லாம் தன் குடும்பத்துக்கு உகந்த மணமகன் கிடைக்கமாட்டானா என்று தேடினார் செளடய்யா. தம் தேவையைப்பற்றி பலரிடமும் தகவலைச் சொல்லிவைத்தார்

வீர்ண்ணாவும் பிற சகோதரர்களும் லிங்கம்மாவின் திருமண விஷயம் தொடர்பாக தீவிரமான தேடுதல் வேட்டையில் இருந்தனர். அவளுடைய திருமணத்தை நல்லபடியாக முடிக்கும் வரைக்கும் தம் திருமணத்தைப்பற்றிய பேச்சை குடும்பத்தில் ஒருவரும் எடுக்கக்கூடாது என்று அனைவரும் தீர்மானமாக அறிவித்துவிட்டனர்.

ஒருநாள் மதிய உணவுக்குப் பிறகு திண்ணையிலேயே பாயை விரித்து கெளரம்மா உறங்கத் தொடங்கினாள். வீட்டிலிருந்த அழுக்குத் துணிகளையெல்லாம் மூட்டையாகக் கட்டி எடுத்துக்கொண்டு துவைப்பதற்காக சிறிது தொலைவிலிருந்த குளத்துக்குச் சென்றாள் லிங்கம்மா

குளத்தங்கரை ஆள்நடமாட்டமின்றி அமைதியாக இருந்தது. கரையை ஒட்டி ஓங்கி வளர்ந்திருந்த ஆலமரத்தின் கிளைகள் நான்கு பக்கங்களிலும் பரவி எல்லா இடங்களிலும் நிழல் படிந்திருக்கும்படி செய்தது. அதன் விழுதுகள் கரையெங்கும் இறங்கி காற்றில் அசைந்துகொண்டிருந்தனமரக்கிளைகளில் அமர்ந்திருந்த குருவிகளும் குயில்களும் எழுப்பும் ஓசை மட்டும் அவ்வப்போது எழுந்து அடங்கியது

லிங்கம்மா ஒவ்வொரு துணியாக அழுக்குப் போக துவைத்து அலசிப் பிழிந்து பக்கத்திலிருந்த பாறை மீது தனியாக வைத்தாள்.

அந்த ஆலமரத்தில் நீண்ட காலமாக ஒரு பிசாசு வசித்துவந்தது. பசிக்கும் நேரத்தில் அந்தப் பக்கமாகச் செல்லும் ஆடுகளையும் மாடுகளையும் அல்லது கூடுகளில் தங்கியிருக்கும் பறவைகளையும் அடித்துக் கொன்று விழுங்கும். சில சமயங்களில் வழிப்போக்கர்களையும் அடித்துக் கொன்றுவிடும். பசி அடங்கியதும் உறக்கத்தில் மூழ்கிவிடும். அப்போது உயிரினங்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் எந்தவிதமான தொந்தரவும் இருக்காது

உறக்கத்தில் மூழ்கியிருந்த பிசாசு மிக அருகிலிருந்து ஒரு பெண்ணின் மணம் வருவதை உணர்ந்து சட்டென கண்விழித்து எல்லாப் பக்கங்களிலும் பார்வையைச் சுழலவிட்டது. குளக்கரையில் நின்று துணிகளைத் துவைத்துக்கொண்டிருந்த லிங்கம்மாவை அப்போதுதான் அந்தப் பிசாசு பார்த்தது. அப்படி ஒரு பேரழகியை அதற்குமுன் பார்த்ததில்லை என்பதால் லிங்கம்மாவின் தோற்றம் அப்பிசாசை மயக்கியது.  

அக்கணமே  அப்பெண்ணின் உடலில் சிறிது காலமாவது வாழ்ந்து பார்க்கவேண்டும் என அந்தப் பிசாசு விரும்பியது. ஆயினும் தனக்குள் ஒரு கட்டுப்பாட்டை விதித்துக்கொண்டு, குனிந்து நிமிர்ந்து அவள் ஒவ்வொரு துணியையும் துவைப்பதையும் முறுக்கிப் பிழிந்து உதறுவதையும் அது நிதானமாக வேடிக்கை பார்த்தது. அவள் எல்லாத் துணிகளையும் அலசி முடித்து ஒரு விரிப்புக்குள் அடுக்கி மூட்டையாகக் கட்டினாள். அதை இடுப்பில் வைத்துக்கொண்டு வீட்டுக்குச் செல்வதற்காக குளத்திலிருந்து வெளியே வந்த நேரத்தில் தன்னுடைய இடத்திலிருந்து இறங்கிவந்த பிசாசு ஒரு பூவைப் போல அவள் தோளில் அமர்ந்தது. லிங்கம்மா அதன் இருப்பை உணரவே இல்லை. அதைப் புரிந்துகொண்டதும் பிசாசு அவளுடைய உடலில் புகுந்துகொண்டது

தனக்குள் ஏதோ ஓர் அதிர்வை அப்போதுதான் உணர்ந்தாள் லிங்கம்மாமரத்திலிருந்து தன் மீது ஏதாவது விழுந்துவிட்டதா என அவளுக்கு ஐயம் வந்தது. அதை உறுதி செய்துகொள்வதற்காக ஒரு கணம் நின்று குளத்தின் பக்கம் திரும்பிப் பார்த்தாள். அவள் பார்வையில் எதுவும் தென்படவில்லை. பிறகு உதட்டைப் பிதுக்கி தனக்குத்தானே ஏதோ சொல்லிக்கொண்டு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள். அவள் உடலுக்குள் புகுந்த பிசாசும் குதூகலத்தோடு அவளோடு சென்றது.

அன்று இரவு வழக்கம்போல எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டனர். பிறகு வாசலுக்கு வந்து நிலா வெளிச்சத்தில் வட்டமாக உட்கார்ந்து நேரம் போவது தெரியாமல் உரையாடினர்பிறகுஎனக்கு தூக்கம் வருது. நான் தூங்கப் போறேன்என்று எழுந்தார் செளடய்யா. சுவரோரமாக சாத்தி வைத்திருந்த கட்டிலை எடுத்துவந்து வாசலில் பிரித்துப் போட்டு அதில் படுத்துக்கொண்டார். கெளரம்மா வீட்டுக்குள் சென்று சமையலறை ஓரமாகவே படுத்துக்கொண்டாள். லிங்கம்மா மட்டும் அறைக்குள் சென்றாள். ஆறு சகோதரர்களும் திண்ணைகளிலும் வாசலிலும் கிடைத்த இடத்தில் பாயை விரித்து படுத்தனர்.

நள்ளிரவுக்குப் பிறகு தன் அறையின் கதவைத் திறந்துகொண்டு சத்தமெழாமல் வீட்டைவிட்டு வெளியே வந்தாள் லிங்கம்மா. வாசலில் உறங்கும் அனைவரையும் ஓரக்கண்ணால் கண்காணித்தபடி சுற்றிக்கொண்டு வீதியை நோக்கி நடந்தாள். இருபுறங்களிலும் நின்றிருந்த மரங்களிலிருந்து இதமான காற்று வீசியது. வானத்தில் நிலவொளி படர்ந்திருந்தது

ஒரு மரத்தடியில் ஒரு வண்டி நிற்பதையும் இரண்டு மாடுகள் மரத்தடியில் அமர்ந்து அசைபோட்டபடி உறக்கத்தில் மூழ்கியிருப்பதையும் அவள் பார்த்தாள். உடனே அந்த இடத்தில் நின்றாள். கொழுகொழுவென காணப்பட்ட மாடுகளைப் பார்த்ததும் அவளுக்கு நாவில் எச்சில் ஊறியது. சத்தமே எழாமல் கையாலேயே ஓங்கி ஒரு அடி கொடுத்து அந்த மாடுகளை அவள் வீழ்த்தினாள். அக்கணமே அம்மாடுகள் வாழைத்தண்டுகள் போல சுருண்டு விழுந்தன

ஏதோ கீரைக்கட்டுகளை எடுத்துச் செல்வதுபோல இரு கைகளாலும் இரு மாடுகளை எடுத்துக்கொண்டு மரங்களையொட்டி இருந்த மறைவான இடத்துக்குச் சென்றாள் லிங்கம்மா. அவள் வாயிலிருந்து கத்தி போல அவளுடைய பற்கள் நீண்டன. அப்பற்களால் மாடுகளைக் கடித்துக் கிழித்து வேகவேகமாக உண்ணத் தொடங்கினாள். சிறிது நேரத்துக்குப் பிறகு அங்கு மாடுகளின் எலும்புக்கூடுகள் மட்டுமே சிதறிக் கிடந்தன. பசி அடங்கிய திருப்தியோடு வாயைத் துடைத்தபடி எழுந்து வீட்டை நோக்கித் திரும்பி நடந்தாள் லிங்கம்மா. நீண்டிருந்த பற்கள் எல்லாம் மறைந்துவிட்டன. புறப்பட்டு வந்ததுபோலவே சத்தமெழாமல் வீட்டுக்குள் சென்று தன் கட்டிலில் படுத்து உறங்கத் தொடங்கினாள்

அடுத்தநாள் காலை தூங்கி எழுந்ததும் செளடய்யா வியாபாரத்துக்குச் செல்வதற்கான வேலைகளைத் தொடங்கினார். அப்போது தெருப்பக்கத்திலிருந்து யாரோ குரலெடுத்து புலம்பி அழும் குரல் கேட்டது. செய்துகொண்டிருந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினார். அங்கு ஒரு வண்டி நிறுத்தப்பட்டிருப்பதையும் அருகில் ஒரு பெரியவர் உட்கார்ந்து அழுவதையும் பார்த்து குழம்பினார். அதற்குள் தெருவில் வசிக்கும் பல பேர் அங்கு திரண்டுவிட்டனர். இரவில் வண்டிக்கு அருகில் கட்டிவைத்திருந்த மாடுகளைக் காணவில்லை என அவர் அழுதார். மாட்டுக்குப் பதிலாக மாட்டின் எலும்புக்கூடுகள் மட்டுமே அங்கு கிடந்தன.

 ‘ஐயோ பாவம்என்று சிலர் பரிதாபப்பட்டனர். ‘ஏதாவது பேய் பிசாசு வேலையாதான் இருக்கணும்என்று சிலர் கருத்துரைத்தனர். ‘ஐயோ பாவம். மாடுங்கள பறிகொடுத்துட்டு இவரு எப்படித்தான் பொழைக்கப் போறாரோ?’ என்று சிலர் பரிதாபப்பட்டனர். நீண்ட நேரம் அனைவரும் கும்பலாக அங்கேயே நின்று தமக்குள் பேசிக்கொண்டனர். பிறகு ஒவ்வொருவராக தத்தம் வேலையைப் பார்ப்பதற்காக அங்கிருந்து கலைந்து சென்றனர்.  

அடுத்து சில நாட்களுக்குப் பிறகு அதே தெருவில் இன்னொரு வீட்டில் இரு மாடுகள் காணாமல் போய்விட்டன. தொழுவத்தில் எலும்புக்கூடுகள் மட்டும் காணப்பட்டன. பிறகு பக்கத்துத் தெருவில் ஒரு ஆட்டு மந்தையில் ஆறேழு ஆடுகள் காணாமல் போய்விட்டன. இன்னொரு வீட்டில் நேர்த்திக்கடனுக்காக நேர்ந்துவிடப்பட்டிருந்த சேவல்கள் மறைந்துவிட்டிருந்தன. என்ன நடக்கிறது என்றே புரியாமல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் குழம்பித் தவித்தனர்

ஒருநாள் செளடய்யாவின் வீட்டில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருந்தனர். அப்போது திண்ணையில் படுத்திருந்த வீரண்ணாவுக்கு திடீரென விழிப்பு வந்துவிட்டது. சிறுநீர் கழிப்பதற்காக திண்ணையிலிருந்து எழுந்து தொலைவில் உள்ள வேலிக்குப் பின்னால் மறைவிடத்துக்குச் சென்றான். சிறுநீர் கழித்துவிட்டு எழுந்திருந்தபோது வானத்தில் தெரிந்த நிலவைப் பார்த்தபடி சிறிது நேரம் நின்றான். நிலவொளியில் சின்னச்சின்ன பொட்டு போல ஒளிரும் விண்மீன்களோடு அந்த வானமே அழகாக இருப்பதுபோல அவனுக்குத் தோன்றியது. அந்த அழகில் லயித்திருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. தன் பைத்தியக்காரத்தனத்தை நினைத்து தனக்குத் தானே சிரித்தபடி வீட்டுக்குச் செல்வதற்காஅகத் திரும்பினான்

அக்கணத்தில் வீட்டிலிருந்து  லிங்கம்மா வெளியே வருவதையும்  வாசலைத் தாண்டி தெருவில் இறங்கி எங்கோ செல்வதையும் பார்த்து அவன் ஒருகணம் திகைத்து நின்றான். முதலில் அவளும் சிறுநீர் கழிக்கச் செல்கிறாள் என்றுதான் அவன் நினைத்தான். ஆனால் தெருவில் இறங்கி அவள் நடக்கிற வேகத்தைப் பார்த்ததும் அவன் அச்சமுற்றான். என்ன நடக்கிறது என்பதையே அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆயினும் எந்நிலையிலும் அவள் தன்னைக் கண்டுவிடாதபடி சிறிது இடைவெளியிலேயே அவளைப் பின்தொடர்ந்து நடந்தான்

லிங்கம்மா ஏரிக்கரையை நோக்கி நடந்தாள். கரையோரமாக இருந்த குடிசையை ஒட்டி இரு மாடுகள் கட்டப்பட்டிருந்தன. அவள் அம்மாடுகளின் அருகில் சென்று நின்றாள். அவை நல்ல சதைப்பற்றோடு காணப்பட்டன. அவற்றின் நெற்றியில் தன் கைகளை வைத்து ஓரிரு கணங்கள் தடவிக் கொடுத்தபடி நின்றிருந்தாள். எதிர்பாராத கணத்தில் அதே கையால் ஓங்கி அம்மாட்டின் நெற்றியில் அடித்தாள். ஒரு முனகல் சத்தம் கூட இல்லாமல் தலை உடைந்து அந்த மாடு கீழே விழுந்தது. அக்கணமே அந்த மாட்டின் தோலை உரித்து தொலைவில் வீசிவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக உண்ணத் தொடங்கினாள் அவள்

சிறிது நேரத்திலேயே முழு மாடும் அவள் வயிற்றுக்குள் சென்றுவிட்டது. அவளுக்கு எதிரே வெறும் எலும்புக்குவியல் மட்டுமே கிடந்தது. பெரிய ஏப்பத்துடன் எழுந்து வாயைத் துடைத்தபடி திரும்பிக்கூட பார்க்காமல் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள். நம்பமுடியாதபடி அச்சத்தோடு அவள் சென்ற திக்கையே அவன் பார்த்தபடி இருட்டுக்குள்ளேயே நின்றான். அவனை அறியாமல் அவனுடைய உடல் நடுங்கியது

அவள் புறப்பட்டுச் சென்ற வெகுநேரத்துக்குப் பிறகுதான் அவனுக்கு சுய உணர்வே திரும்பியது. தன் தங்கையா இப்படி நடந்துகொள்கிறாள் என்ற கேள்வி அவன் மனத்துக்குள் மீண்டும் மீண்டும் அலைமோதியது. கடந்த சில நாட்களாக கால்நடைகள் காணாமல் போனதற்குக் கூட இதுதான் காரணமாக இருக்குமோ என்கிற ஐயமும் அப்போது எழுந்ததுமனிதப்பிறவியாக இருக்கும் ஒரு பெண் ஒரு மிருகத்தைப்போல கொன்று தின்பதை அவனால் கற்பனை செய்யவே முடியவில்லை. அதை நினைக்க நினைக்க அவன் உடல் நடுங்கத் தொடங்கியது.

திண்ணைக்குத் திரும்பிவந்து பாயில் அமர்ந்தான் வீரண்ணா. இனி தன்னால் உறங்கமுடியும் என்கிற நம்பிக்கையே அவனுக்கு வரவில்லை. கால்களை நீட்டிக்கொண்டு சுவரில் சாய்ந்தபடி வானத்தையே பார்த்தபடி எதைஎதையோ சிந்தித்தவண்ணம் விடியும் வரை உட்கார்ந்திருந்தான்.

பொழுது விடிவதற்கு முன்பே செளடய்யா விழித்தெழுந்தார். கிழக்குமுகமாகப் பார்த்துகாப்பாத்துங்க தெய்வமேஎன கைகளை உயர்த்தி ஒருகணம் விழிமூடி வணங்கினார். பிறகு படுக்கையைச் சுருட்டி ஓரமாக வைத்துவிட்டு எழுந்தார்

அப்பா விழித்தெழுந்ததைப் பார்த்ததும் உடனடியாக அவரிடம் தான் பார்த்த செய்தியைச் சொல்லவேண்டும் என்று வீரண்ணாவுக்குத் தோன்றியது. உடனே அமர்ந்திருந்த இடத்திலிருந்து அவசரமாக எழுந்து சென்று அவருக்கு அருகில் நின்றான். பரபரப்பாக அவன் வந்து நின்றதைப் பார்த்ததும் செளடய்யாஏன்டா, தூங்கலையா? இவ்ளோ சீக்கிரமா எழுந்துட்ட?’ என்று கேட்டபடி காட்டை நோக்கி நடந்தார்.

அப்பா, உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். அதுக்காகத்தான் தூங்காம முழிச்சிட்டிருக்கேன்என்று பதில் சொல்லிக்கொண்டே அப்பாவுக்குப் பின்னாலேயே நடந்தான்.

அப்படி என்னடா முக்கியமான விஷயம்?’

நேத்து ராத்திரி நான் ஒரு மோசமான விஷயத்தை என் கண்ணால நேருக்கு நேரா பார்த்தேன். அந்த நிமிஷத்திலேர்ந்து என் உடம்பு நடுங்கிகிட்டே இருக்குது.

வீரண்ணாவின் குரலில் தென்பட்ட பதற்றத்தை உணர்ந்து அவனை ஒரு கணம் திரும்பிப் பார்த்து நின்றார் செளடய்யா. ‘பதறாம சொல்லு. என்ன விஷயம்?’ என்று அமைதியாகக் கேட்டார்.

இரவில் சிறுநீர் கழிக்க எழுந்தபோது லிங்கம்மா வெளியே நடந்து செல்வதைப் பார்த்ததிலிருந்து அவள் மாட்டை அடித்துத் தின்றுவிட்டு எதுவுமே நடக்காததுபோல பதுமைபோல திரும்பி நடந்துவந்து வீட்டுக்குள் சென்று படுத்துவிட்டதுவரை எல்லாச் செய்திகளையும் ஒன்றுவிடாமல் சொன்னான் வீரண்ணா

டேய். என்ன உளறுற நீ? ஏதாவது கெட்ட கனவு கண்டியா? உலகத்துல எங்கயாவது ஒரு பொண்ணு ஒரு மாட்டை அடிச்சி தின்னிருக்காங்கற விஷயத்தைக் கேள்விப்பட்டிருக்கியா நீ? நீ சொல்றதெல்லாம் நம்பற மாதிரியா இருக்குது?’ என்று அமைதியாகக் கேட்டார் செளடய்யா.

உலகத்துல இதுவரை நடக்காத விஷயம்தான்.    யாரும் பார்க்காத விஷயம்தான். நம்ம வீட்டுல முதல்முறையா நடந்திருக்குது. அதை நான் என் ரெண்டு கண்ணால பார்த்தேன். நான் சொல்றதை ஏன் நம்ப மாட்டற?’ என்று மன்றாடும் குரலில் சொன்னான் வீரண்ணா.

காலை நேரத்துல உளறிகிட்டு பொழுதை வீணாக்காத வீரண்ணா. எனக்கு நூறு வேலை இருக்குது. நீ போஎன்று அவனை அனுப்பிவிட்டு காட்டுக்குள் சென்றார் செளடய்யா.

தன் பேச்சை தன் அப்பா ஏன் நம்ப மறுக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியாத சோர்வோடும் சோகத்தோடும் மெல்ல மெல்ல வீட்டை நோக்கி நடந்து வந்தான் வீரண்ணா.

அவன் வாசலை அடையும்போது அவன் தாய் கெளரம்மா வாசலைப் பெருக்குவதற்காக துடைப்பத்தோடு நின்றிருந்தாள்.

என்னடா, வழக்கமில்லாத வழக்கமா இவ்ளோ காலையில எழுந்து எங்கடா போய்ட்டு வர?’ என்று கேட்டாள் அவள்.

தன் அப்பாவிடம் சொன்ன விவரங்களையெல்லாம் தன் அம்மாவிடம் விவரமாக எடுத்துரைத்தான் வீரண்ணா

பாவம், அறைக்குள்ள படுத்திருக்கிற புள்ள மேல ஏன்டா இப்படி அபாண்டமா பழி போடற? ராத்திரி படுத்தவ இன்னும் கண்ணு முழிக்காம அப்படியேதான் படுத்திருக்கா. அவளைப் போய் மாட்டை அடிச்சித் தின்னா, ஆட்டை அடிச்சித் தின்னான்னு சொல்ற. நம்பற மாதிரியா இருக்குது நீ சொல்றது? இருட்டுல மூஞ்சி தெரியாம, வேற யாரையோ பார்த்துட்டு நம்ம லிங்கம்மான்னு நெனைச்சிட்டியா?’ என்று கேட்டாள் கெளரம்மா.

நான் தெளிவா பார்த்தேன்மா. அது நம்ம லிங்கம்மாதான்.

போய் ஆகற வேலையைப் பாருடா. எனக்கு தலைக்கு மேல நூறு வேலை இருக்குது. ஏபாரத்துக்குக் கெளம்பற மனுஷனுக்கு இனிமேலதான் எல்லாத்தையும் செஞ்சாவணும்.

அதற்கு மேல் பேச நேரமில்லை என்பதுபோல அவள் துடைப்பத்தால் வாசலைக் கூட்டத் தொடங்கினாள்

இவர்களுக்கெல்லாம் எப்படி எடுத்துச் சொல்லி நம்பவைப்பது என்று புரியாமல் குழம்பினான் வீரண்ணா. நினைக்க நினைக்க அவனுக்குத் தலையை வலித்தது

வாசலில் பேச்சுச்சத்தம் கேட்டு சோமண்ணா, ராமண்ணா, ரேவண்ணா, ஜெயண்ணா, சிக்கண்ணா அனைவரும் ஒவ்வொருவராக எழுந்து வந்து வீரண்ணாவைச் சூழ்ந்து நின்றனர். ‘என்னண்ணா, என்ன விஷயம்? காலை நேரத்துலயே எல்லாரும் என்னமோ சலசலன்னு பேசிட்டிருக்கீங்க. எதைப்பத்தி பேசறீங்க?’ என்று கேட்டனர்

வீரண்ணா அவர்களுக்காக மீண்டுமொரு முறை இரவில் தான் கண்ட காட்சிகளையெல்லாம் விவரமாகச் சொன்னான். அதைக் கேட்டதும் அவர்கள் அச்சம் கொள்வார்கள் என அவன் நினைத்தான். ஆனால் அதற்கு நேர்மாறாக அவனைப் பார்த்து அனைவரும் புன்னகை புரிந்தனர்

என்னண்ணே இது? நீ சொல்ற விஷயம் சின்ன வயசுல அம்மா சொன்ன கதை மாதிரி இருக்குது? நமக்கு இருக்கறது ஒரே ஒரு தங்கச்சி. நம்ம மேல எவ்வளவு பாசத்தோடு இருக்குதுன்னு நமக்கே தெரியும். அதைப்பத்தி இப்படி நாமே தப்பு தப்பா பேசலாமா? கொஞ்ச நேரம் வியாபாரத்துக்குப் போகாம வீட்டுலயே உக்காந்து ஓய்வெடுங்கண்ணே. அப்பதான் உங்க மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்.

இந்தக் குடும்பத்தில் யாரிடமும் எதையும் சொல்லி நம்பவைக்க முடியாது என்பதை அக்கணத்தில் வீரண்ணா புரிந்துகொண்டான். லிங்கம்மாவின் பிடியிலிருந்து இவர்களை எப்படிக் காப்பாற்றுவது என்பது புரியாமல் அவன் மனம் குழம்பியது. நீண்ட நேர யோசனைக்குப் பிறகு அவர்களாகவே அதைப்பற்றி ஒரு முடிவு எடுக்கும் வரை தன்னால் எதுவும் செய்ய இயலாது என்பதை அவன் தெளிவாகப் புரிந்துகொண்டான்.

மற்றவர்களைப்போல அவனும் குளித்து கஞ்சி குடித்துவிட்டு வியாபாரத்துக்குத் தயாரானான்இரு எண்ணெய்க்குடங்களை கயிற்றால் இணைத்துக்கட்டி குதிரையின் கழுத்தில் தொங்கவிட்டான். எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு வீட்டிலிருந்து புறப்பட்டான்

ஊர் எல்லையைக் கடக்கும்போது அவன் இனி தன் ஊருக்குத் திரும்பி வரப்போவதில்லை என முடிவெடுத்தான். தன் வார்த்தையை நம்பாதவர்களுக்கிடையில் வாழ்ந்து தன்னைச் சுற்றி நிகழும் நரபலிகளுக்கு சாட்சியாக தன்னால் ஒருபோதும் இருக்கமுடியாது என அவனுக்குப் புரிந்துவிட்டது. இன்றுமுதல் கிடைக்குமிடத்தில் தங்கி ஒவ்வொரு நாளும் செலுத்துகிற திசையில் போய்க்கொண்டே இருப்போம் என முடிவெடுத்து குதிரையை முன்னோக்கிச் செலுத்தினான். வழியில் கிராமங்கள் எதிர்ப்படும் இடங்களில் குதிரையை நிறுத்தி வியாபாரம் செய்தான். பிறகு அடுத்த ஊரை நோக்கிச் சென்றான்

தன் குடங்களில் இருந்த எண்ணெய் தீரும் வரைக்கும் அவன் குதிரையின் மீது சென்று கொண்டே இருந்தான். சில நாட்களுக்குப் பிறகு எண்ணெய் இருப்பு முற்றிலும் இல்லாமலொழிந்தது. இனி அந்த ஊர்தான் தன் வசிப்பிடம் என முடிவெடுத்து அங்கேயே ஒரு வணிகரின் வீட்டுத் திண்ணையில் தங்கினான். அடுத்த நாள் காலையில் அதே ஊரிலிருக்கும் செக்கடிக்குச் சென்று பணம் கொடுத்து குடங்களில் எண்ணெய் நிரப்பி வந்து தெருத்தெருவாக குதிரையில் சென்று வியாபாரம் செய்தான். இப்படியே நாள், வாரம், மாதம் என காலம் ஓடியது.

சிற்சில சமயங்களில் அவனுக்குத் தன் சொந்த கிராமமும் பெற்றோர்கள் முகமும் சகோதர சகோதரியின் முகமும் நினைவுக்கு வரும். அப்போது இனம்புரியாத வேதனையில் அவனையறியாமல் அவன் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுக்கும். அவர்கள் நினைவிலேயே மூழ்கியிருந்துவிட்டு, எப்போது உறங்கினோம் என்பது தெரியாமலேயே உறங்கிவிடுவான்.

ஒருநாள் மாலைப்பொழுதில் அவன் திண்ணையில் உட்கார்ந்திருந்தபோது தெருவில் தமுக்கடித்தபடி வந்த ஒருவர் உரத்த குரலில் ஒரு செய்தியைச் சொல்வதைக் கேட்டான். முதலில் அந்த அறிவிப்பில் அவன் எந்த நாட்டத்தையும் காட்டவில்லை. ஆனால் ஏதோ போட்டி என்ற சொல் காதில் விழுந்ததும் உண்மையிலேயே ஆர்வத்துடன் கேட்கத் தொடங்கினான்.

தாய்மார்களே, பெரியோர்களே, இளஞ்சிங்கங்களே, குதிரை வீரர்களே. இன்னும் ரெண்டு நாள்ல ஒரு போட்டி இங்க நடக்க இருக்குது. நம்ம ஊருக்கு வெளியே இருக்கிற பெரிய பள்ளத்தை நீங்க எல்லாரும் பார்த்திருப்பீங்க. அகழி மாதிரி இருக்கிற அந்தப் பெரிய பள்ளத்தை குதிரை மேல வந்து ஒரே பாய்ச்சலா பாய்ந்து தாவி இந்தப் பக்கத்துலேர்ந்து அந்தப் பக்கம் போவறதுதான் போட்டி. போட்டியில ஜெயிக்கிற சிங்கக்குட்டிக்கு ஒரு பெரிய வீடு பரிசா கிடைக்கும். வீட்டோடு சேர்ந்து வாழறதுக்கு ஒரு பொண்ணயும் கொடுத்து கல்யாணம் செஞ்சி கொடுக்கப்படும்.

ஓங்கிய குரலில் அறிவிப்பைச் சொல்லி முடித்ததும் தொம்தொம் என தொடர்ச்சியாக சிறிது நேரம் அடித்து ஓய்ந்தான். உடனே தெருவில் இருந்த ஆட்களெல்லாரும் அவனைச் சுற்றி நின்றுகொண்டனர். ‘என்ன சொன்ன? இன்னொரு தரம் சொல்லுஎன மற்றொரு முறை விளக்கம் கேட்டனர். தமுக்கடிப்பவனும் ராகம் போட்டு இழுத்து இழுத்து கதை சொல்வதுபோல எல்லாவற்றையும் மற்றொரு முறை சொல்லி முடித்தான்

புதுவீடு யோகம் யாருக்குக் கொடுத்து வச்சிருக்கோ!

வீட்டுக்கு ஆசைப்பட்டு பள்ளத்தைத் தாண்டறேன்னு கெளம்பி கீழ உழுந்து கைகால உடைச்சிகிட்டு உக்காந்துட்டா யாருப்பா கவனிப்பாங்க. இந்த விளையாட்டு நமக்கு வேணாம்பா.

கோழை மாதிரி பின்வாங்கக்கூடாதுப்பா. தைரியமா ரெண்டுல ஒன்னு பார்த்துடணும்.

நான் கோழைதாம்பா. ஒத்துக்கறேன். தைரியம் உள்ளவங்க ஜெயிச்சி பரிசு வாங்குங்க.

தாண்டறது ஒருபக்கம் இருக்கட்டும். முதல்ல அதுக்கு குதிரை வேணும். தாண்டணும்னு நெனச்சாலும் குதிரை இல்லாம முடியுமா?’

குதிரை வச்சிருக்கவங்ககிட்ட ஒருநாள் கடனா கேட்டா கொடுக்கமாட்டாங்களா என்ன?’

ஒரு கெளரவத்துக்குக் கொடுப்பாங்கமாட்டேன்னு யாரும் சொல்லப் போறதில்லை. ஆனா பழகாத குதிரையை வச்சிகிட்டு பள்ளத்தைத் தாண்டறது தற்கொலைக்குச் சமம்.

திண்ணையில் உட்கார்ந்திருந்த வீரண்ணா அந்த அறிவிப்பைக் கேட்டான். அந்தப் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என விதி தனக்குக் கட்டளையிடுவதாக அவனுக்குத் தோன்றியது. தமுக்கடித்து அறிவிப்பைச் செய்ய, ஊருக்குள்ளேயே நூறு இடங்கள் இருக்கும்போது தன் கண்ணெதிரில் நின்று தன் காதுபட தமுக்கடிப்பதற்கான காரணம் அதுதான் என அவன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

அடுத்தநாள் காலையில் தன் குதிரையிலேயே சென்று ஊர் எல்லையில் இருந்த மாபெரும் பள்ளத்தைப் பார்த்தான். பெரிய பள்ளம்தான். சந்தேகமில்லை. ஆயினும் தன் குதிரையால் தாண்டிவிட முடியும் என்று அவன் உறுதியாக நம்பினான். அங்கிருந்து நேராக போட்டியை அறிவித்தவரின் வீட்டுக்குச் சென்று போட்டியில் கலந்துகொள்வோர் பட்டியலில் தன் பெயரையும் எழுதிக்கொள்ளுமாறு சொல்லிவிட்டுத் திரும்பினான்

மறுநாள் முதல் மாலையில் சீக்கிரமாகவே வியாபாரத்தை முடித்துக்கொண்டு திண்ணைக்குத் திரும்பி வரத் தொடங்கினான். பானைகளை இறக்கி திண்ணையில் ஓரமாக வைத்துவிட்டு ஊருக்கு வெளியே நடமாட்டம் இல்லாத திசையில் சென்றான். சிறியதும் பெரியதுமாக பள்ளத்தின் நீட்சி அங்கும் இருந்தது. இருப்பதில் குறைவான அகலம் கொண்ட பள்ளத்துக்கு அருகில் தன் குதிரையை அழைத்துச் சென்று நிறுத்தினான் அந்த இடத்தை நன்றாகப் பார்க்கும்வகையில் அப்படியும் இப்படியுமாக சிறிது நேரம் நடக்கவைத்தான். பிறகு வெகுதொலைவு பின்வாங்கிச் சென்று குதிரையில் ஏறி அமர்ந்துகொண்டு வேகமாக ஓட்டிக்கொண்டு வந்தான். குதிரையும் நல்ல வேகத்துடன் பாய்ந்துவந்தது. அந்தப் பள்ளத்தை நெருங்கியதும் அதற்குப் புரியும் வகையில் குனிந்து அதன் நெற்றியில் இருமுறை மெல்லத் தட்டினான். உடனே சட்டென குதிரை பறவைபோல எம்பித் தாவி அந்தப் பள்ளத்தைக் கடந்தது. குதிரைமீது உட்கார்ந்திருந்த வீரண்ணாவுக்கு மெய்சிலிர்த்தது. குதிரையிலிருந்து இறங்கி அதைத் தழுவிக்கொண்டு அதன் நெற்றியில் மாறிமாறி முத்தமிட்டான். ஒவ்வொரு நாளும் இப்படி ஆறேழுமுறை பயிற்சி செய்தான்.

போட்டிக்கான நாள் வந்தது. ஊரே அந்தப் பள்ளத்தின் அருகில் கூடி நின்றது. அறிவிப்பாளர் தன் மகளை மணக்கோலத்துடன் அங்கு அழைத்துவந்திருந்தார். உள்ளூரிலிருந்தும் வெளியூரிலிருந்தும் பல குதிரை வீரர்கள் அந்தப் போட்டியில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தனர்.

அறிவிப்பாளர் போட்டியாளர்களின் பெயர்களைச் சத்தமாகச் சொல்லி அழைக்கத் தொடங்கினார். வீரர்களும் தம் குதிரைகளோடு அந்தப் பள்ளத்துக்கு அருகில் வந்தனர். பலருடைய குதிரைகள் பள்ளம் வரைக்கும் வேகமாக ஓடி வந்து பள்ளத்தை நெருங்கியதும் வேகம் குறைந்து தயங்கி நின்றன. சில தடுமாறி விழுந்தன. கடைசியாக அங்கு வந்த வீரண்ணாவின் குதிரை ஏற்கனவே பலமுறை செய்து பழகிய பயிற்சியின் காரணமாக ஒரு பறவையைப்போல விண்ணில் தாவிப் பறந்து அந்தப் பள்ளத்தை கண்ணை மூடி கண்ணைத் திறப்பதற்குள் கடந்து மறுபக்கம் சென்று நின்றது. கூடியிருந்த அனைவரும் ஆரவாரத்துடன் கைதட்டி அவனை வாழ்த்தினர். ஏற்கனவே அறிவித்திருந்தபடி போட்டி ஏற்பாட்டாளர் தன் மகளை அந்த இடத்திலேயே வீரண்ணாவுக்கு திருமணம் செய்துவைத்தார்

திருமணத்துக்குப் பிறகு மனைவியின் வீட்டுக்கே இடம்பெயர்ந்தான் வீரண்ணா. அது பெரிய மாளிகை. மணமக்கள் இருவரும் அங்கு மகிழ்ச்சியோடு பொழுதுபோக்கினர்

மணமகளின் அப்பாவுக்கு வீரண்ணாவின் துணிச்சலும் வீரமும் திட்டமிடலும் மிகவும் பிடித்துவிட்டன. அவனுடைய ஒவ்வொரு செயலும் அவருக்குத் தன் இளமைப்பருவத்தை நினைவூட்டியது

அவர் விலங்குகள் மீது அளவற்ற பாசம் கொண்டவராக இருந்தார். அவருடைய  வீட்டுக்குப் பின்னாலேயே ஒரு சின்ன விலங்குக்காட்சிச்சாலையை அமைத்து புலிக்குட்டிகளையும் சிங்கக்குட்டிகளையும் யானைக்குட்டிகளையும் மான்குட்டிகளையும் வளர்த்துவந்தார்ஒவ்வொரு குட்டியையும் தனித்தனி கூண்டுகள் செய்து அடைத்து வைத்திருந்தார். ஒவ்வொரு கூண்டுக்கும் சென்று ஒவ்வொரு குட்டியிடமும் பேசிக் கொஞ்சுவதுதான் அவருடைய மிகப்பெரிய பொழுதுபோக்கு

ஒருநாள் வீரண்ணாவை அந்த விலங்குக்காட்சிச்சாலைக்கு அழைத்துச் சென்று எல்லாக் குட்டிகளையும் காட்டினார். ஒவ்வொரு குட்டிக்கும் அவர் அழகாக ஒரு பெயர் சூட்டி வைத்திருந்தார். அவர் பெயர் சொல்லி அழைத்ததும் அந்தக் குறிப்பிட்ட குட்டி திரும்பிப் பார்த்து அவரை நெருங்கிவந்து கொஞ்சியது. அதையெல்லாம் பார்க்கப் பார்க்க வீரண்ணாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

வீரண்ணா, என் பொண்ணை மட்டுமல்ல, இந்தக் குட்டிகளையும் நீதான் பொறுப்பா பார்த்துக்கணும். எனக்குப் பிறகு இந்தக் குடும்பத்தை நீதான் தொடர்ந்து நடத்தணும்.

மாமனாரின் சொற்களைக் கேட்டு அவன் மனம் நெகிழ்ந்தது. ‘எல்லாத்தையும் நான் பொறுப்பா பார்த்துக்கறேன் மாமா. நீங்க கவலைப்படாதீங்கஎன்று அவருக்கு வாக்களித்தான் வீரண்ணாஅன்றுமுதல் குட்டிகளுக்கு உணவு கொடுக்கும் வேலையை மாமனாரோடு சேர்ந்து அவனும் செய்தான். எல்லாக் குட்டிகளும் அவனோடு நன்றாக ஒட்டிக்கொண்டன. இருப்பதிலேயே வயது குறைந்த ஒரு புலிக்குட்டியும் சிங்கக்குட்டியும் அவனோடு மிகவும் நெருங்கிப் பழகின. அவனுடைய ஒவ்வொரு சொல்லையும் காதுகொடுத்துக் கேட்டு அதன்படி செய்யப் பழகின. அவனுடைய உடல் மணமும் குரலும் அக்குட்டிகளுக்கு நன்றாகப் பழகிவிட்டனஅவனும் அவற்றோடு பாசத்துடன் பழகினான்.

ஒருநாள் காலையில் எழுந்ததும் அவனுக்குத் தன் பெற்றோரையும் சகோதரர்களையும் நினைத்துக்கொண்டான். அவர்களைப் பிரிந்துவந்து பல மாதங்கள் உருண்டோடிவிட்டன. தன் திருமணம் திடீரென அமைந்துவிட்டதால் அவர்களை  அழைக்கமுடியாமல் போய்விட்டதை நினைத்து அவனுக்குள் ஒருவித குற்ற உணர்வு இருந்தது. ஒருமுறை சொந்த ஊருக்குச் சென்று அவர்கள் அனைவரும் எப்படி இருக்கிறார்கள் என்று பார்த்துவிட்டு வரவேண்டும் என முடிவு செய்தான். அதே நேரத்தில் தன் சகோதரியை நினைத்து அவனுக்கு அச்சமாகவும் இருந்தது. ஆயினும் கடைசியில் அவனுடைய விருப்பமே வென்றது

அன்று இரவு உணவு உண்ணும் சமயத்தில் தன் விருப்பத்தைத் தன் மனைவியிடம் தெரிவித்தான். ‘எனக்கும் அவர்களைப் பார்க்கணும்னு ஆசையா இருக்குது. நானும் உங்களோடு வரட்டுமா?’ என்று கேட்டாள். ‘இப்ப வேணாம். நான் ஒருமுறை போய் பார்த்துட்டு வரேன். அதுக்கப்புறம் இன்னொருமுறை நாம ரெண்டு பேரும் சேர்ந்து போய்வரலாம்என்று சொன்னான் அவன். அப்போது தன் சகோதரியைப்பற்றிய எந்த விவரத்தையும் அவளிடம் அவன் தெரிவிக்கவில்லை

மறுநாள் காலையிலேயே அவன் புறப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தான். மனைவியும் அவனுக்கு உதவியாக இருந்தாள்.

நான் கெளம்பிப் போன பிறகு இந்தக் குட்டிகளையெல்லாம் நீதான் கவனிக்கணும். அப்பா பார்த்துக்குவாருன்னு நெனைச்சி விட்டுடாத. குறிப்பா என்கூட எப்பவும் விளையாடிட்டிருக்கும் புலிக்குட்டியையும் சிங்கக்குட்டியையும் நீ முக்கியமா கவனிச்சக்கணும். ஏதாவது அசெளகரியமா முனகற மாதிரியோ, நெளியற மாதிரியோ தெரிஞ்சா, உடனே அந்தக் குட்டிகளுடைய கூண்டுகளைத் தெறந்துவிடு. நான் ஏதோ ஆபத்துல சிக்கிகிட்டிருக்கேங்கறதுக்கு அது ஒரு அடையாளம். நான் எங்க இருந்தாலும் அதுங்க மின்னல் வேகத்துல ஓடிவந்து என்னைக் காப்பாத்திடும். புரியுதா?’ என்று சொன்னான்.

ஐயோ, உங்களுக்கு ஆபத்து வருமா? புரியறமாதிரி சொல்லுங்களேன்என்று பதறினாள் அவன் மனைவி.

இப்ப ஒன்னும் கேக்காத. நான் எல்லாத்தயும் திரும்பி வந்து உனக்குச் சொல்றேன். எனக்கு ஒன்னும் ஆகாது. எதுவா இருந்தாலும் அந்தக் குட்டிங்க என்னைக் காப்பாத்தும். கவலைப்படாதேஎன்று அவளை  அமைதிப்படுத்தினான் வீரண்ணா. பிறகு அவளிடம் விடைபெற்றுக்கொண்டு தன் குதிரையில் ஏறி கிராமத்தை நோக்கிச் சென்றான்.

பல மணி நேர பயணத்துக்குப் பிறகு அவன் தன் ஊரை அடைந்தான். அப்போது அவன் கண்ட காட்சியை அவனால் நம்பவே முடியவில்லை. ஊருக்குள் மக்கள் நடமாட்டமே இல்லை. எல்லா வீடுகளும் பாழடைந்து கிடந்தன. சுடுகாடுபோல எங்கெங்கும் அமைதி நிலவியது. அச்சூழலே அவனுக்குள் கலவரத்தை ஏற்படுத்தியது. எந்தத் தெருவிலும் மனித நடமாட்டம் மட்டுமல்ல, ஆடுமாடுகளின் நடமாட்டம் கூட இல்லை என்பதை அவன் செல்லச்செல்லப் புரிந்துகொண்டான். தன் வீடு இருக்கும் திசையில் அவன் தன் குதிரையைச் செலுத்தியபடி இருபுறங்களிலும் வேடிக்கை பார்த்தபடி சென்றான்.

பழக்கத்தின் காரணமாக குதிரை தானாகவே அவன் வீட்டு வாசலை அடைந்து நின்றது. அவன் அங்கேயே குதிரையிலிருந்து இறங்கி வீட்டை நோக்கி நடந்தான். ஆள் நடமாட்டமின்றி வீட்டில் வெறுமை சூழ்ந்திருந்தது. என்ன நடந்திருக்கக்கூடும் என்பதை அக்கணமே அவன் புரிந்துகொண்டான்

வீட்டு ஜன்னல் வழியாக அவன் வருவதைப் பார்த்துவிட்டு லிங்கம்மா வேகமாக வெளியே வந்தாள். அவனைப் பார்த்து சிரித்தபடிவாண்ணே. வா. உன்னைத்தான் ரொம்ப நாளா தேடிட்டே இருந்தேன். இப்பதான் வீட்டுக்குத் திரும்பி வரணும்னு உனக்குத் தோணிச்சா?’ என்று கேட்டுக்கொண்டே அருகில் வந்தாள்

வீட்டுல யாருமில்லையா? நீ தனியாவா இருக்க?’

அப்பாவும் அண்ணன்களும் வியாபாரத்துக்குப் போயிருக்காங்கண்ணே. அம்மா காட்டுக்கு விறகு எடுத்துட்டுவர போயிருக்கா.’

அவன் அந்த வீட்டைச் சுற்றி அமைதியாக பார்வையைச் சுழலவிட்டான். அவளுடைய சொற்கள் மீது அவனுக்கு நம்பிக்கை பிறக்கவில்லை. அந்த வீட்டின் சூழலே வெகுகாலமாக நடமாட்டமே இல்லாமல் இருந்த இடத்தைப்போல இருந்தது

அவனுடைய கவனத்தைத் திசைதிருப்பும் விதமாகவீட்டுக்குள்ள வாண்ணே. வந்து உக்காருண்ணேஎன்று சொல்லிக்கொண்டே அவனை வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள். பிறகு ஏதேதோ பழைய கதைகளை நினைவுபடுத்தும் விதமாகப் பேசி அவனுடைய கவனத்தைத் திசைதிருப்பினாள்.

சிறிது நேரத்துக்குப் பிறகு அவன் சாப்பிடுவதற்காக நாலைந்து வாழைப்பழங்களைக் கொண்டுவந்து கொடுத்தாள். ‘தற்சமயத்துக்கு இதைச் சாப்பிடுங்கண்ணே. மதியத்துக்கு கோழி அடிச்சி குழம்புவச்சி சாப்புடலாம்என்றாள்

மிகுந்த தயக்கத்துடன் தன் முன்னால் வைக்கப்பட்ட பழத்தட்டிலிருந்து ஒரு பழத்தை எடுத்தான் வீரண்ணா

அப்போது அவசரமாக எழுந்தாள் லிங்கம்மா. ‘பாவம். ரொம்ப தூரத்துலேர்ந்து வந்திருக்கே. நமக்குப் பசிக்கிற மாதிரி குதிரைக்கும் பசியா இருக்குமில்லையா? அதுக்கு நானே போய் புல் வச்சிட்டு வரேன். நீ சாப்பிடுண்ணேஎன்று சொல்லிவிட்டு வெளியே சென்றாள்.

வீரண்ணாவுக்கு பழத்தைச் சாப்பிடவே மனமில்லை. வெளியே சென்ற லிங்கம்மா என்ன செய்வாளோ என நினைத்து நினைத்து அவன் மனம் கலவரமுற்றது. அவளைத் தொடர்ந்து பின்னால் செல்லவும் அவனுக்குத் தயக்கமாக இருந்தது. அவளுக்கு எவ்விதமான சந்தேக உணர்வும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதிலும் அவன் கவனமாக இருக்கவேண்டியதாக இருந்தது. அதனால் உட்கார்ந்த இடத்திலிருந்தே ஜன்னல் வழியே அவளுடைய நடவடிக்கையைக் கவனித்தபடி இருந்தான்.

லிங்கம்மா வீட்டு வாசலில் மரத்தடியில் நின்றிருந்த குதிரைக்கு அருகில் சென்று நின்றாள். ஒருகணம் அதை விழுங்கிவிடுவதுபோல ஆவலோடு விழிவிரியப் பார்த்தாள். பிறகு அதன் வழவழப்பான உடலை வருடியபடி சுற்றிச்சுற்றி வந்தாள்

சட்டென ஒருகணம் நின்று அந்தக் குதிரையின் பின்னங்கால்களில் ஒரு காலைத் தொட்டு ஏதோ மரக்கிளையை வளைத்து உடைப்பதுபோல சட்டென உடைத்தாள். உடைத்த காலை ஆவலோடு பார்த்தபடிஅண்ணே, உங்க ஊருல குதிரைகளுக்கெல்லாம் மூனு கால்தான் இருக்குமா? உன் குதிரைக்கு நாலாவது காலையே காணோமேஎன்று கேட்டாள்.

ஜன்னல் வழியாக எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்த வீரண்ணாவுக்கு உடல்  நடுங்கியது. வேர்வை பொங்கி  வழிந்தது. காலிழந்து கதறியபடி கீழே சரிந்த தன் குதிரையை ஒருவித இயலாமையோடு பார்த்தான். வெளியே ஓடோடி தன் குதிரையைக் காப்பாற்ற அவன் மனம் துடித்தாலும் சிரமப்பட்டு கட்டுப்படுத்திக்கொண்டான்.

ஆமாம். எங்க ஊருல எல்லாக் குதிரைகளுக்கும் மூனு கால்தான்என்று பதில் கொடுத்தான்

அதற்குள் அவள் உடைத்தெடுத்த காலைத் தின்று முடித்து எலும்பைத் தூக்கி வீசினாள். வாயைத் துடைத்தபடி மீண்டுமொரு முறை குதிரையைச் சுற்றி வந்தாள். பிறகு குதிரையின் மற்றொரு காலை உடைத்தாள். உடைத்த காலை கையில் ஏந்தியபடி  ‘அண்ணே, உங்க ஊருல குதிரைகளுக்கெல்லாம் ரெண்டு கால்தான் இருக்குமா?’ என்று கேட்டாள்.

ஆமாம். எங்க ஊருல எல்லாக் குதிரைகளுக்கும் ரெண்டு கால்தான்என்று பதில் சொன்னான் வீரண்ணா. அவன் உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது. அங்கிருந்து தப்பிப்பது எப்படி என்பது புரியாமல் குழம்பினான்.

அதற்குள் அவள் இரண்டாவது காலையும் தின்று முடித்து எலும்பைத் தூக்கி வீசினாள். ஈரமான வாயைத் துடைத்தபடி மறுபடியும் குதிரையைச் சுற்றத் தொடங்கினாள். திடீரென  குதிரையின் மூன்றாவது காலை உடைத்தாள். உடைத்த காலை கையில் ஏந்தியபடி  ‘அண்ணே, உங்க ஊருல குதிரைகளுக்கெல்லாம் ஒரே ஒரு கால்தான் இருக்குமா?’ என்று கேட்டாள்.

ஆமாம். எங்க ஊருல எல்லாக் குதிரைகளுக்கும் ஒரே கால்தான்என்று பதில் கொடுத்தான் வீரண்ணா

அதற்குள் அவள் மூன்றாவது காலையும் தின்று முடித்து எலும்பைத் தூக்கி வீசினாள். ரத்தமும் சதையும் படிந்த வாயைத் துடைத்துக்கொண்டே குதிரையைச் சுற்றிவரத் தொடங்கினாள். பிறகு குதிரையின் உடலில் எஞ்சியிருக்கும் நான்காவது காலையும் உடைத்தாள். உடைத்த காலை எடுத்து கரும்பைக் கடிக்க வாயில் வைப்பதுபோல வைத்தபடி கையில் ஏந்தியபடி  ‘அண்ணே, உங்க ஊருல குதிரைகளுக்கெல்லாம் காலே கிடையாதா? காலில்லாத குதிரையை எப்படி ஓட்டிட்டு வந்தே?’ என்று கேட்டாள்.

ஆமாம். எங்க ஊருல எந்தக் குதிரைக்கும் காலே கிடையாதுஎன்று பதில் கொடுத்தான். இனி அந்த இடத்தில் இருப்பது ஆபத்து என நினைத்து சத்தமெழாமல் பின்வாசல் கதவைத் திறந்துகொண்டு தோட்டத்தின் பக்கம் ஓடினான். அங்கிருந்த அரசமரத்தில் ஏறி உச்சிக்கிளைக்குச் சென்று உட்கார்ந்துகொண்டான்

அதற்குள் லிங்கம்மா குதிரையின் உடலையும் கிழித்துக்கிழித்துத் தின்றுமுடித்தாள்.

அதே சமயத்தில் அவனுடைய மனைவி கூண்டுக்குள் இருந்த புலிக்குட்டியும் சிங்கக்குட்டியும் அமைதியிழந்து கூச்சலிடுவதைப் பார்த்தாள். உடனே அவளுக்கு தன் கணவன் சொல்லிவிட்டுச் சென்ற செய்திகள் நினைவுக்கு வந்தன. ஒரு நொடி கூட வீணாக்காமல் வேகமாகச் சென்று கூண்டின் கதவுகளைத் திறந்து இரு குட்டிகளும் வெளியேற வழி செய்துகொடுத்தாள். இரு குட்டிகளும் வெளியே பாய்ந்து மின்னல் வேகத்தில் ஓடத் தொடங்கின.

குதிரையைத் தின்றுமுடித்த லிங்கம்மா தன் அண்ணனையும் தின்னும் ஆசையோடு வீட்டுக்குள் வந்தாள். பழத்தட்டு அப்படியே இருந்தது. வீரண்ணாவைக் காணவில்லை. ‘அண்ணே அண்ணேஎன அழைத்தபடி வீட்டில் எல்லா அறைகளிலும் புகுந்து தேடினாள். பிறகு ஏதோ ஒரு சந்தேகத்தோடு பின்வாசல் கதவைத் திறந்துகொண்டு தோட்டத்துக்கு வந்தாள். ‘அண்ணே அண்ணேஎன்று குரல் கொடுத்தபடி அங்குமிங்கும் திரும்பிப் பார்த்தாள். எல்லாப் பக்கங்களிலும் பார்வையைச் சுழற்றியபோது, ஒரு கணத்தில் அவன் அரசமரத்தின் உச்சிக்கிளையில் உட்கார்ந்திருப்பதைக் கண்டுபிடித்தாள். ‘அண்ணே, எறங்கி வாண்ணேஎன அன்பொழுக அழைத்தாள். அதே நேரத்தில் அம்புபோலப் பறந்துவந்த புலிக்குட்டியும் சிங்கக்குட்டியும் அவள்மீது பாய்ந்து தரையில் வீழ்த்தின

அந்த எதிர்பாராத தாக்குதலால் லிங்கம்மா நிலைகுலைந்தாள்அக்குட்டிகளை அவளால் எதிர்க்கமுடியவில்லை. எதிர்க்கும் வேகமும் மூர்க்கமும் திரள்வதற்குள் இரு குட்டிகளும் தம் பாதங்களால் மாறிமாறி அவளை அறைந்தன. பற்களால் உடலெங்கும் கடித்துக் குதறின. சிங்கக்குட்டி தாவிச் சென்று அவள் குரல்வளையைக் கடித்தது. கடிபட்ட இடத்திலிருந்து குபுகுபுவென ரத்தம் பாய்ந்து வெளியேறியது. அவள் மூச்சு மெல்ல மெல்ல அடங்கியது

இயலாமையோடு வானத்தை நோக்கி அண்ணாந்த அவள் கண்கள் அரசமரத்தின் உச்சிக்கிளையின் அமர்ந்தபடி தன் அண்ணன் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்தன. லிங்கம்மாவின் உயிர் அக்கணத்திலேயே பிரிந்தது. அவள் உடலில் அதுவரை தங்கியிருந்த பிசாசு சட்டென வெளியேறிச் சென்றது

நீண்ட நேரத்துக்குப் பிறகு மரத்திலிருந்து கீழே இறங்கிவந்தான் வீரண்ணா. அவனைப் பார்த்த மகிழ்ச்சியில் இரு குட்டிகளும் ஓடோடி வந்து அவன் கால்களைச் சுற்றிச்சுற்றி வந்தன. அவன் குனிந்து இரு குட்டிகளையும் தொட்டுத் தட்டிக்கொடுத்தான்

இறந்து கிடந்த லிங்கம்மாவின் உடலைப் பார்க்கப்பார்க்க அவன் மனத்தில் துயரத்தில் மூழ்கியது. ஆறு ஆண்பிள்ளைகளைத் தொடர்ந்து ஏழாவதாகப் பிறந்த பெண்பிள்ளை என்பதால் அந்த வீட்டில் ராணி போல வலம் வந்த நாட்களை நினைத்தபோது, அவனால் பெருமூச்சு மட்டுமே விடமுடிந்ததுஅவனை அறியாமல் அவன் விழிகளில் கண்ணீர் பொங்கி வழிந்தது. பழைய கால வாழ்க்கையையெல்லாம் அசைபோட்டபடி தோட்டத்திலேயே ஆறடி நீளத்துக்கு ஒரு பள்ளத்தை வெட்டினான்லிங்கம்மாவின் உடலைச் சுமந்துவந்து அந்தப் பள்ளத்தில் வைத்துப் புதைத்தான்.   

இரு குட்டிகளும் பின்தொடர்ந்துவர அந்தக் கிராமத்திலிருந்து கண்ணீருடன் வெளியேறினான் வீரண்ணா.

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *