ஓர் ஊரில் ஒரு சிற்றரசன் இருந்தான். அவனுக்கு அழகான ஒரு மனைவி இருந்தாள். இனிய இல்லறத்தின் அடையாளமாக அவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்தார்கள். மூத்தவள் பெண்குழந்தை. பெயர் கனகவல்லி. இளையவன் ஆண்குழந்தை. பெயர் கனகராஜா. இருவருமே பெற்றோர்களின் செல்லப்பிள்ளைகள். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இருவரும் வளர்ந்து கல்வி கற்கும் பருவத்தை அடைந்தார்கள். ஒவ்வொரு நாளும் ஆசிரியரொருவர் அரண்மனைக்கே வந்து அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார்.
பாடம் படிக்கும் நேரம் போக, இரு பிள்ளைகளும் எஞ்சிய நேரத்தில் அரண்மனைத் தோட்டத்தில் விளையாடி பொழுதுபோக்கினார்கள். அங்கு வேலை செய்யும் பணிப்பெண்களிடம் கதை கேட்டு மகிழ்ந்தார்கள். இரவு உறங்கச் செல்லும்போது அந்தக் கதைகளையெல்லாம் அம்மாவுக்குச் சொல்லி மகிழ்ந்தார்கள்.
ஒருநாள் அந்தப் பெண்குழந்தை பெரியவளானாள். பூப்புனித நீராட்டு விழாவில் புத்தாடைக்கோலத்தில் அவளைப் பார்த்த அம்மா பரவசமடைந்தாள். நம் பெண்ணா இவள் என நினைத்து நினைத்து அவள் பெருமிதமடைந்தாள். சிறுவனும் நன்றாக வளர்ந்து படிப்பிலும் பாட்டு முதலான கலைகளிலும் சிறந்து விளங்கினான்.
எல்லாம் நல்ல விதமாக நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராதபடி ஊரெங்கும் பரவிய புதுவிதமான ஒரு நச்சுக்காய்ச்சலால் அரசி துன்பமுற்றாள். பத்து நாட்களுக்கும் மேலாக கண்களைக் கூட திறக்காமல் மயங்கிய நிலையிலேயே படுக்கையில் கிடந்தாள். தன்னுணர்வு திரும்பாமலேயே அவளுடைய உயிர் பிரிந்துவிட்டது.
அரசி இறந்ததும் அரண்மனையே இருண்ட உலகமாக மாறிவிட்டது. அரசனின் முகம் களையிழந்து மூப்படைந்ததைப்போல காணப்பட்டது. பிள்ளைகளும் மெலிந்து நலியத் தொடங்கினார்கள்.
அரண்மனையில் இருந்த பெரியவர்கள் கூடி அரசனின் நிலைமை குறித்து தமக்குள் ஆலோசனை செய்தனர். வாழ்க்கைத் துணையை இழந்ததால்தான் அவர் அந்த நிலைமைக்கு ஆளாகிவிட்டார் என அவர்களுக்குத் தோன்றியது. ஒரு திருமணம் செய்துகொண்டால், அரசன் பழைய நிலைக்கு மீண்டு வந்துவிடுவார் என அவர்கள் நம்பினர். தக்க நேரம் வரும் வரையில் காத்திருந்து அனைவரும் அரசனைச் சந்தித்தனர்.
தொடக்கத்தில் ஏதேதோ செய்திகளைப் பேசிய பிறகு, இறுதியில் மறுமணம் செய்துகொள்ளுமாறு அரசனிடம் கேட்டுக்கொண்டனர். அதைக் கேட்டதும், அந்தக் கோரிக்கையை அரசன் வேகமாகத் தலையசைத்து மறுத்தான். ஆனால் அரண்மனைப் பெரியவர்கள் தொடர்ச்சியாக வற்புறுத்திய காரணத்தால் விருப்பமில்லாமலேயே மறுமணத்துக்கு ஒப்புக்கொண்டான்.
உடனே நான்கு திசைகளிலும் ஆட்களை அனுப்பி அரசனுக்கு ஏற்ற பெண் எங்கு கிடைப்பாள் என தகவலைத் திரட்டிக்கொண்டு வருமாறு அனுப்பி வைத்தார்கள் பெரியவர்கள். கிழக்குத்திசையில் சென்ற ஒருவன் பத்து பதினைந்து நாட்களிலேயே திரும்பி வந்து அரசருக்குப் பொருத்தமான ஒரு பெண்ணைப் பார்த்துவிட்டு வந்ததாகச் சொன்னான். உடனே அரசனின் ஆலோசனைக்குழுவினர் அவனோடு சென்று பெண் வீட்டாரிடம் பேசி முடிவு செய்துவிட்டு வந்தனர். அடுத்த பத்து நாட்களில் அவர்களுக்குத் திருமணம் நடந்துமுடிந்தது.
அரண்மனை வாசம் புதிதாக வந்த அரசிக்கு மிகவும் பிடித்திருந்தது. அனைவரும் அவளை வணங்குவதைக் கண்டு அவள் மனம் பூரித்தது. ஆரம்பத்தில் எல்லோரோடும் இயல்பாகவே பேசிப் பழகிக்கொண்டு இருந்தாள். அரசனின் பிள்ளைகளோடும் பாசமாக பேசிப் பழகினாள். ஆனால் ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பிறகு எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. அனைவரிடமும் வெடுக் வெடுக்கென்று பேசத் தொடங்கினாள். அருகில் நெருங்க விடாமல் அனைவரையும் விரட்டியடித்தபடி இருந்தாள். உப்பு பெறாத விஷயத்துக்கெல்லாம் கண் முன்னால் நிற்பவர்கள்மீது எரிந்து விழுந்தாள்.
கனகவல்லியையும் கனகராஜாவையும் ஒருவித பகையுணர்ச்சியோடு பார்க்கத் தொடங்கினாள். அரண்மனையில் இருக்கும் அனைவருமே தமக்கு எதிராக சதி செய்வதாக நினைத்துக்கொள்ளத் தொடங்கினாள். பிறகு தவறு செய்ததாக சிலர் மீது குற்றம் சுமத்தி, அரசனிடம் எதையும் தெரிவிக்காமலேயே தன்னிச்சையாக தண்டனை கொடுக்கத் தொடங்கினாள்.
கனகவல்லி நாளுக்கு நாள் வளர்ந்து பெரியவளாவதைப் பார்த்து புதிய அரசி பொறாமையில் மனம் குமைந்தாள். ஒருநாள் காலையில் கனகவல்லி சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்து ஒரு கோப்பையில் பழச்சாறை நிரப்பி கொடுத்தாள். அப்போது கனகவல்லி ‘சித்தி, எனக்குப் பழச்சாறு பிடிக்காது பால்தான் குடிப்பேன்’ என்று மறுத்தாள். ‘அப்படியா, அது தெரியாம சித்தி உனக்கு பழச்சாறு கொண்டுவந்துட்டேனே. சரி, போகட்டும், இன்னைக்கு ஒரு நாள் குடிச்சிடு. நாளையிலேர்ந்து பால் வைக்கறேன்’ என்றாள். வேறு வழியில்லாமல் சித்தியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அவள் அந்தப் பழச்சாறை மருந்து குடிப்பதுபோல கண்ணை மூடிக்கொண்டு ஒரே மூச்சில் குடித்துமுடித்தாள். தம்ளரை கீழே வைத்துவிட்டு உதடுகளைத் துடைத்துக்கொண்டாள். பிறகு தம்பியோடு படிப்பதற்காக ஆசிரியர் அமரும் முற்றத்துக்குச் சென்றார்.
பிறந்து சில நாட்களே ஆன ஒரு சின்னஞ்சிறு பாம்புக்குட்டியைப் பிடித்துவந்து அந்தப் பழச்சாறில் போட்டிருந்தாள் புதிய அரசி. கனகவல்லி வளர வளர, அந்தப் பாம்புக்குட்டியும் கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய வயிற்றில் வளரத் தொடங்கியது. அதன் காரணமாக அவளுடைய வயிறு ஒவ்வொரு நாளும் பெரிதாக உப்பத் தொடங்கியது. அவளும் வலியில் துடிக்கத் தொடங்கினாள்.
கனகவல்லியின் உப்பிப் பருத்த வயிற்றைப் பார்த்ததும் அவள் கருவுற்றிருப்பதாக வதந்தியைப் பரப்பத் தொடங்கினாள் புதிய அரசி. அரண்மனை முழுக்க செய்தி பரவிவிட்டது. ஒருநாள் அவளே அரசனைச் சந்தித்து திருமணமாகாமல் கருவுற்றிருக்கும் ஒரு பெண்ணை அரண்மனைக்குள் வைத்திருப்பது கேவலம் என்று தெரிவித்தாள். பிறகு அவளை எங்காவது காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று கண் காணாத இடத்தில் விட்டுவிட்டு வருமாறு கேட்டுக்கொண்டாள்.
புதிய அரசி சொன்ன சொற்களை அரசனால் தட்டமுடியவில்லை. தன் மகளை காட்டுக்கு அனுப்பி வைப்பதைத் தவிர அரசனுக்கு வேறு வழி தெரியவில்லை. தன் அப்பாவே தன் அக்காவைக் காட்டுக்கு அனுப்பிவைக்கத் திட்டமிட்டிருப்பதை அறிந்துகொண்ட கனகராஜா, அக்காவை விட்டு தன்னால் தனியாக இருக்கமுடியாது என்று தெரிவித்தான். அதனால் அரசனின் வேலையாட்கள் இருவரையும் கண்களைக் கட்டி ஒரு குதிரை மீது ஏற்றி அழைத்துச் சென்று காட்டுக்குள் தொலைவான ஒரு பகுதியில் இறக்கிவிட்டு வந்துவிட்டனர். கண்கட்டை அவிழ்த்துப் பார்த்த கனகவல்லியும் கனகராஜாவும் எங்கிருக்கிறோம் என்பது புரியாமல் குழம்பித் தவித்தனர்.
இருவரும் தன்னந்தனியாக காட்டில் அலைந்து திரிந்தனர். பகல் நேரங்களில் மரங்களும் புதர்களும் அடர்ந்த பாதைகளில் நடந்து பொழுதுபோக்கினர். ஆங்காங்கே அலைந்து திரியும் மான்களையும் குரங்குகளையும் பார்த்து துன்பத்தை மறந்தனர். மரங்களில் கனிந்து தொங்கும் பழங்களைப் பறித்து பசியைப் போக்கிக்கொண்டனர். குளங்களில் நிறைந்திருக்கும் தண்ணீரை அருந்தி வேட்கையைத் தணித்துக்கொண்டனர். இரவு நேரங்களில் மரத்தடிகளில் சருகுகளைக் கூட்டி மெத்தைபோல பரப்பிவிட்டு அதன் மீது படுத்துறங்கினர்.
தனிமையில் தவம் செய்யும் வயதான பெரியவர் ஒருவர் அந்தக் காட்டில் வசித்துவந்தார். ஒருநாள் அவர் அதிகாலையில் குளிப்பதற்காக குளத்தங்கரையை நோக்கி வந்தபோது மரத்தடியில் உறங்கிக்கொண்டிருந்த கனகராஜாவையும் கனகவல்லியையும் பார்த்தார். மனித நடமாட்டமே இல்லாத காட்டுப்பகுதியில் குழந்தைகள் இருவரும் உறங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்க அவருக்கு வியப்பாக இருந்தது.
அவ்விருவரையும் எழுப்பி அவர்களைப்பற்றிய விவரங்களைக் கேட்டார். இருவரும் காட்டை வந்தடைந்த கதையை மனமுருகும் வகையில் விவரித்தனர். அதைக் கேட்டு அந்தப் பெரியவரின் மனம் இளகியது. நீராடி முடித்துவிட்டுத் திரும்பியபோது இருவரையும் தம்மோடு அழைத்துச் சென்றார். அவர்கள் பசியாறுவதற்கு தம்மிடம் இருந்த பழங்களைக் கொடுத்தார். தன் குடிசையிலேயே தங்கிக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். அவர்களுக்குத் தேவையான வசதிகளையும் செய்துகொடுத்தார்.
அந்தக் குடிசையை இருவரும் சேர்ந்து சுத்தப்படுத்தி அழகுபடுத்தினர். சுற்றுப்புறங்களையும் சுத்தமாக்கி தொலைவில் இருந்து பார்க்கும்போதே வீடு பளிச்சென்று தெரியும் வகையில் உருமாற்றினர். வீடு கட்டுவதற்குத் தேவையான பொருட்களை பல இடங்களில் தேடியலைந்து சேகரித்து எடுத்துவந்து பழைய குடிசையை புதிதாகவும் பெரிதாகவும் மாற்றிக் கட்டினர். தோற்றம் மாறிய வீட்டைக் கண்டு மகிழ்ச்சி கொண்ட பெரியவர் அவர்கள் இருவரையும் மனம் திறந்து பாராட்டினார். வீட்டைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை அவர்களிடமே விட்டுவிட்டார்.
பத்தாண்டுகள் கனகராஜாவும் கனகவல்லியும் அந்தப் பெரியவரின் பராமரிப்பிலேயே கழித்தனர். அவர் அவ்விருவருக்கும் நல்ல முறையில் கல்வியைக் கற்பித்தார். நீதி நூல்களின் கருத்துகளையெல்லாம் விளக்கிச் சொன்னார். ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு நல்ல கருத்துகளைக் கொண்ட கதைகளை மனத்தில் பதியும் விதத்தில் கூறி மகிழ்ச்சியோடு இருக்கும் வகையில் செய்தார்.
காலம் வேகவேகமாக கரைய இருவரும் வாலிபப்பருவத்தை அடைந்தனர். மதுநுட்பம் வாய்ந்த அவ்விருவரையும் பார்த்து பெரியவரும் மகிழ்ச்சியுற்றார்.
வழக்கமாக அதிகாலையிலேயே உறக்கத்திலிருந்து எழுந்து நீராடுவதற்குச் செல்லும் பெரியவர் ஒருநாள் விடிந்து நீண்ட நேரமாகியும் எழாததைக் கண்டு திகைத்த கனகவல்லி அவருக்கு அருகில் சென்று குரல் கொடுத்து எழுப்பினாள். அப்போதும் அவரிடமிருந்து எவ்விதமான அசைவும் தென்படாததால் தொட்டு அசைத்து எழுப்ப முயற்சி செய்தாள். அவர் உடல் அசைவற்று உருண்டது.
அதைக் கண்டு அதிர்ச்சியுற்ற கனகவல்லி தன் தம்பி கனகராஜாவைச் சத்தம் போட்டு அழைத்தாள். அழைப்புக்குரலைக் கேட்டு ஓடோடி வந்தான் கனகராஜா. மூக்கின் அருகில் விரல்வைத்துப் பார்த்துவிட்டு மூச்சு நின்றுவிட்டதை அவன் உறுதி செய்தான். இருவரும் அந்தப் பெரியவரின் உடலுக்கருகில் நீண்ட நேரம் அமர்ந்து மனவேதனையோடு அழுதனர். பிறகு வீட்டுத் தோட்டத்துக்கு அருகிலேயே அவருடைய உடலைப் புதைத்தனர். அந்த இடத்தில் ஒரு பூச்செடியை நட்டு வளர்க்கத் தொடங்கினர்.
ஒரு நாள் காட்டில் திரிந்துகொண்டிருந்த நாலைந்து எருமைகளை அவர்கள் அழைத்துவந்து தம் வீட்டருகில் கட்டிவைத்தனர். ஒவ்வொரு நாளும் கனகவல்லியே அவற்றை மேய்ச்சலுக்கு புல் நிறைந்த பகுதிகளுக்கு ஓட்டிச் சென்று திரும்பினாள். கனகவல்லியின் பராமரிப்பில் எருமைகள் நன்றாக வளர்ந்தன.
சில மாதங்களுக்குப் பிறகு ஓர் எருமை ஒரு கன்றுக்குட்டியை ஈன்றது. கன்றுக்குட்டி முற்றத்தில் துள்ளித்துள்ளி ஓடுவதைப் பார்த்து மகிழ்ச்சியில் மூழ்கினாள் கனகவல்லி. கன்றுக்குட்டி தன் தாயிடம் பாலருந்துவதைப் பார்க்கப் பார்க்க அவளுக்குப் பரவசமாக இருந்தது.
ஒருநாள் மாலை எருமையிடம் கன்றுக்குட்டி அருந்தியதுபோக எஞ்சியிருக்கும் பாலை ஒரு பாத்திரத்தில் பால் கறந்தாள் கனகவல்லி. பிறகு ஒரு பானையில் அந்தப் பாலை ஊற்றி காய்ச்சினாள். அடுப்பில் பால் கொதித்துக்கொண்டிருந்தபோதே, சோர்வின் காரணமாக அவளுக்கு உறக்கம் வந்துவிட்டது. அடுப்புக்கு அருகிலேயே படுத்து உறங்கிவிட்டாள்.
பாத்திரத்தில் இருந்த பால் நன்றாகக் கொதித்துப் பொங்கி தரையெங்கும் வழிந்தோடியது. பாத்திரத்தில் எஞ்சியிருந்த பால் சுண்டத் தொடங்கியது. சுண்டிய பாலின் இனிய நறுமணமும் தரையெங்கும் பரவித் தேங்கியிருந்த பாலின் மணமும் சேர்ந்து வீடெங்கும் பால்மணம் பரவியது.
அந்த இனிய மணம் அவளுடைய வயிற்றிலிருக்கும் பாம்பு வரைக்கும் எட்டியது. பால் மணத்தை நுகர்ந்த பிறகு அந்தப் பாம்புக்கு எப்படியாவது பாலை அருந்தவேண்டும் என்னும் ஆவல் பிறந்துவிட்டது. உடனே, மெதுவாக அவளுடைய வயிற்றிலிருந்து வெளியேறி ஊர்ந்துசென்றது.
அதே நேரத்தில், அதுவரைக்கும் காட்டில் எங்கோ அலைந்து திரிந்துகொண்டிருந்த கனகராஜா கதவைத் திறந்துகொண்டு வீட்டுக்குள் வந்தான். கூடத்தில் ஓரமாக தரையில் தன் அக்கா படுத்து உறங்குவதையும் அடுப்பைச் சுற்றி பால் தேங்கி நிற்பதையும் அதை நோக்கி ஒரு பாம்பு செல்வதையும் அவன் பார்த்தான். உடனே அவன் வேறு எந்த சிந்தனைக்கும் இடமில்லாதவனாக வேகமாகப் பாய்ந்து சென்று அப்பாம்பை தன் கையிலிருந்த கத்தியை எடுத்து துண்டுதுண்டாக வெட்டினான். பிறகு அத்துண்டுகளையெல்லாம் கூட்டி எடுத்துச் சென்று வேறொரு அறைக்குள் வீசிவிட்டு, அந்த அறையைப் பூட்டிக்கொண்டான்.
சத்தம் கேட்டு விழித்தெழுந்த கனகவல்லி ‘ஐயோ என்னை அறியாமல் தூங்கிவிட்டேனே. அடுப்பில் பால் வைத்திருந்தேனே? என்ன ஆனது?’ என்று பதற்றத்தோடு கனகராஜாவிடம் விசாரித்தாள். வீடு முழுதும் வெள்ளம்போல வழிந்தோடி பரவியிருக்கும் பாலைப் பார்த்து அவள் அஞ்சினாள். நடந்ததையெல்லாம் கனகராஜா அவளிடம் விரிவாக எடுத்துக் கூறினான். கடைசியாக, பாம்புத்துண்டுகளை வெட்டி வீசிய அறையைக் காட்டி, அதை ஒருபோதும் திறக்கக்கூடாது என்றும் கவனமாக இருக்கவேண்டும் என்றும் சொல்லிவைத்தான். அவள் உம் உம் என்று தலையசைத்தபடி எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டாள். அப்போதுதான் தன் வயிறு எவ்விதமான எடையுமில்லாமல் பிற பெண்களுக்கு இருப்பதுபோல மெலிந்திருப்பதையும் பல ஆண்டுகளாக தன்னை வருத்திவந்த வலியும் வேதனையும் மறைந்துவிட்டதையும் உணர்ந்தாள்.
அறைக்கதவைத் திறக்கமாட்டேன் என தன் தம்பிக்கு வாக்களித்திருந்தாலும் கனகவல்லியுடைய ஆழ்நெஞ்சில் பூட்டப்பட்ட அறையைத் திறந்து பார்க்கும் ஆவல் எழுந்தது. இத்தனை ஆண்டுகள் தன் வயிற்றில் இருந்த பாம்பை ஒருமுறை பார்க்கவேண்டும் என அவள் நினைத்தாள். ஒருபக்கம் தம்பிக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறக்கூடாது என்று அவளுக்குத் தோன்றினாலும் இன்னொரு பக்கம் என்னதான் இருக்கிறது என்பதை நேருக்குநேர் பார்த்துவிட வேண்டும் என்கிற ஆவல் அவளை ஒவ்வொரு நாளும் சுண்டியிழுத்தது. கடைசியில் அவளுடைய ஆவலே வெற்றி பெற்றது.
ஒருநாள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கனகவல்லி மெதுவாக பூட்டப்பட்ட அந்த அறையின் முன்னால் சென்று தன்னிடமிருக்கும் சாவியை எடுத்து கதவைத் திறந்தாள். அந்த அறைமுழுதும் ஒரு மல்லிகைக்கொடி அடர்ந்து பரவியிருப்பதையும் மல்லிகைப்பூ மலர்ந்து மணம் பரப்பியிருப்பதையும் அவள் பார்த்தாள். மல்லிகையின் மணம் மயக்கமூட்டுவதாக இருந்தது. அக்கணமே அவள் மல்லிகைக்கொடிக்கு அருகில் சென்று, கொடியில் பூத்திருந்த மல்லிகைப்பூக்களைப் பறித்துக்கொண்டு வந்து வாசலுக்கருகில் நின்றிருந்த மரத்தடியில் அமர்ந்து ஒரு மாலையாகத் தொடுக்கத் தொடங்கினாள்.
காட்டில் அலைந்து திரிந்த கனகராஜா அந்த நேரத்தில்தான் வீட்டுக்குத் திரும்பி வந்தான். தம்பியைப் பார்த்ததும் தன் கையிலிருந்த மாலையை அவன் கழுத்தில் அணிவிக்க அவள் விரும்பினாள். ‘கனகராஜா, இங்கே வா. உனக்காக ஒரு மாலை தொடுத்திருக்கிறேன். உனக்கு இதை அணிவிக்கிறேன்’ என்று சொன்னபடி நெருங்கி வந்தாள் கனகவல்லி.
கனகவல்லியின் கையில் இருந்த மாலையையும் கண்ணுக்கு முன்னால் திறந்திருந்த அறைக்கதவையும் பார்த்த அவனால் என்ன நடந்திருக்கும் என்பதை எளிதாக ஊகிக்கமுடிந்தது. உடனே பின்வாங்கி நகர்ந்து அந்த மாலையைத் தன் கழுத்தில் சூட்டவேண்டாம் என்று கனகவல்லியிடம் கெஞ்சினான். ஆனால் அவன் சொற்களைக் காதுகொடுத்துக் கேட்கும் மனநிலையில் கனகவல்லி இல்லை. என்ன சொன்னாலும், அதை மறுத்து கனகராஜாவிடம் எதிர்விவாதம் செய்தாள். அவனுக்கு அந்த மாலையைச் சூட்டி அழகு பார்க்கவேண்டும் என்பதில் கனகவல்லி உறுதியாக இருந்தாள்.
தன் சகோதரியின் மன உறுதியையும் விருப்பத்தையும் பார்த்த கனகராஜா ‘இந்த மாலையை எனக்கு அணிவிக்கவேண்டும் என்பதில் நீ உறுதியாக இருந்தால், நான் சொல்வதைக் கேள். மாலையை எனக்குச் சூட்டும் முன்பாக, இதோ இந்த மூன்று கூழாங்கற்களை வாங்கிக்கொள். இந்த மாலையை எனக்குச் சூட்டிய பிறகு ஒருவேளை ஏதேனும் விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் நடந்தால், அந்தக் கூழாங்கற்களை என் பெயரைச் சொல்லி அழைத்தபடி அடிப்பதுபோல வீசு’ என்றான்.
‘சரி, அப்படியே ஆகட்டும்’ என்றாள் அவள். அவன் கொடுத்த கூழாங்கற்களை கைநீட்டி வாங்கி வைத்துக்கொண்டாள். ‘இந்த மாலையை உனக்காகவே தொடுத்தேன். உனக்கு அணிவித்து அழகு பார்க்கவேண்டும் என்பதுதான் என் ஆசை’ என்று புன்னகைத்தபடியே மாலையை கனகராஜாவின் கழுத்தில் அணிவித்தாள்.
அடுத்த கணமே கனகராஜா பாம்பாக மாறிவிட்டான். அவள் அணிவித்த மாலை தரைமீது சுருண்டிருக்க, அந்தச் சுருளிலிருந்து ஊர்ந்தபடி ஒரு பாம்பு வந்து தலையசைத்தது.
தன் கண்முன்னாலேயே ஒரே கணத்தில் தன் தம்பி பாம்பாக மாறியதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துநின்றுவிட்டாள் கனகவல்லி. மிகப்பெரிய ஒரு பிழையைச் செய்துவிட்டதாக நினைத்து குற்ற உணர்ச்சியால் வருத்தமுற்றாள். ஒரு கணம் என்ன செய்வது என்பது புரியாமல் குழப்பத்தோடு அந்தப் பாம்பையே அச்சத்தோடு பார்த்துக்கொண்டு நின்றாள்.
தம்பி கொடுத்த கூழாங்கற்களையும் அவன் சொன்ன வாசகத்தையும் அக்கணத்தில் முழுக்கவே மறந்துவிட்டாள் கனகவல்லி. அந்தப் பாம்பு மெல்ல மெல்ல அறையிலிருந்து ஊர்ந்து வெளியேறி காட்டை நோக்கி செல்லத் தொடங்கியது. என்ன செய்வது என்று எதுவும் புரியாமல் அவளும் அந்தப் பாம்பின் பின்னாலேயே சென்றாள்.
சிறிது தொலைவு வரைக்கும் சென்ற பாம்பு, ஒரு மரத்தடி வரைக்கும் சென்று அங்கிருந்த ஒரு புற்றில் புகுந்தது. கலக்கத்தோடு அவள் அந்தப் பாம்பின் அருகிலேயே அமர்ந்துவிட்டாள். அந்தப் பாம்பு வெளியே வரும் தருணத்துக்காகக் காத்திருந்தாள்.
அந்நேரத்தில் அந்தப் பிள்ளைகளின் தந்தையான அரசனும் சேவகர்களும் காட்டில் வேட்டையாடிவிட்டு அரண்மனைக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். காட்டு வழியில் ஒரு மரத்தடியில் அமர்ந்திருக்கும் பெண்ணைப் பார்த்து என்ன என்று விசாரிப்பதற்காக அவளுக்கு அருகில் சென்றான் அரசன்.
தன் கண் முன்னால் அழகான சிற்பமென நின்றிருக்கும் இளம்பெண்ணைப் பார்த்து அரசன் மனம் மயங்கினான். அவள் தன் மகள் என்பதையே அவனால் கண்டுணர முடியவில்லை. யாரோ ஒரு பெண் என நினைத்துக்கொண்டான். துரதிருஷ்டவசமாக அவளுக்கும் அவருடைய முகம் நினைவுக்கு வரவில்லை. யாரோ ஓர் அந்நிய ஆடவர் என்றே அவளும் நினைத்து ஒதுங்கி ஒதுங்கிச் சென்றாள்.
அவளை நெருங்கிய அரசன் அவளைத் தன்னோடு வருமாறு சொன்னான். அவள் அருகிலிருந்த புற்றைச் சுட்டிக்காட்டி தன் சகோதரன் பாம்பாக மாறி அந்தப் புற்றில் இருப்பதாகவும் அவன் இல்லாமல் தன்னால் எங்கும் வரமுடியாது எனவும் தெரிவித்தாள். உடனே அரசன் தன்னோடு வந்திருந்த ஆட்களில் ஒருவனை அழைத்து அருகிலிருக்கும் கிராமத்துக்குச் சென்று பாம்பு பிடிக்கவல்ல ஒரு பாம்பாட்டியைக் கண்டுபிடித்து அழைத்துவருமாறு கேட்டுக்கொண்டான். ஒரு நாழிகைக்குப் பிறகு அவன் ஒரு பாம்பாட்டியைத் தன் குதிரையில் அமரவைத்து அழைத்துவந்து ராஜாவின் முன்னால் நிறுத்தினான்.
அரசன் பாம்பாட்டியிடம் அருகிலிருந்த புற்றைச் சுட்டிக்காட்டி அதற்குள் சென்றுவிட்ட பாம்பை உயிரோடு பிடித்துத் தருமாறு சொன்னான். பாம்பாட்டியும் ‘அப்படியே செய்கிறேன் சாமி’ என்று வணக்கம் சொல்லிவிட்டு புற்றுக்கு அருகில் சென்றான். தன் இடுப்பில் செருகியிருந்த மகுடியை எடுத்து மெதுவாக இசைக்கத் தொடங்கினான்.
மகுடியோசை காடெங்கும் நிறைந்தது. புற்றிலிருந்து பாம்பு வெளியேறி வந்து படமெடுத்தபடி நின்றது. பாம்பாட்டி அதை எடுத்து ஒரு பெட்டியில் வைத்துக்கொண்டான்.
அவர்கள் எல்லோருமே அரண்மனைக்குச் சென்றனர். அரண்மனையை நெருங்கியதும் கனகவல்லிக்கு எல்லாப் பழைய விஷயங்களும் நினைவுக்கு வந்துவிட்டன. குழந்தைப்பருவத்திலிருந்து ஆடிப் பழகிய இடங்களை ஒவ்வொன்றாக ஆசையோடு பார்த்தபடி வந்தாள்.
அரசன் அவளை நெருங்கி தன்னை மணந்துகொள்ளுமாறு மன்றாடத் தொடங்கினான். அவன் பேச்சை மறுப்பதுபோல தலையசைத்தபடி ‘உங்கள் விருப்பம் நிறைவேற வாய்ப்பில்லை. என்னை உங்களுக்குத் தெரியவில்லையா? நான் உங்கள் செல்லமகள். நான் சிறுமியாக இருந்தபோது கனகவல்லி கனகவல்லி என்று எத்தனை முறை செல்லமாக அழைத்து மகிழ்ந்திருப்பீர்கள். எல்லாம் மறந்துவிட்டதா அப்பா? ஒருமுறை என்னை நன்றாகப் பாருங்கள். அப்போது புரியும் உங்களுக்கு. அம்மா இறந்த பிறகு துக்கத்தில் மூழ்கியிருந்த நீங்கள் அத்துக்கத்திலிருந்து மீண்டெழுந்து வரவேண்டும் என்பதற்காக அரண்மனையில் இருந்தவர்கள் எல்லோரும் சேர்ந்து உங்களுக்குத் திருமணம் செய்துவைத்தார்கள். ஆனால் நீங்கள் திருமணம் செய்துகொண்டு வந்த சிற்றன்னை என் மீது வீண்பழி சுமத்தி என்னையும் தம்பியையும் உங்கள் கண்முன்பாகவே இந்த அரண்மனையை விட்டு விரட்டியடித்தாள். அதை நீங்கள் மறந்துவிட்டீர்களா அப்பா?’ என்று அழுதுகொண்டே கேட்டாள்.
கனகவல்லியின் சொற்களைக் கேட்டு ஒரு கணம் அரசன் உறைந்து நின்றுவிட்டான். பிறகு அவள் சொன்னதையெல்லாம் மனத்துக்குள் அசைபோட்டபடி அவளையே நீண்டநேரம் உற்றுப் பார்த்தபடி நின்றான். பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற நிகழ்ச்சிகள் எல்லாம் மடையை உடைத்துக்கொண்டு பாயும் வெள்ளமென நினைவுக்கு வரத் தொடங்கின.
‘கனகவல்லியா நீ?’ என்று கண்ணீர் சொரிந்தபடி அவளை நெருங்கினான்.
‘கனகவல்லி, என்னை மன்னித்துவிடு மகளே? உனக்கு நான் செய்த பாவமெல்லாம் போதாது என அதைவிட பெரிய பாவம் செய்ய இருந்தேன். தக்க தருணத்தில் என்னைக் காப்பாற்றிவிட்டாய். என்னை மன்னித்துவிடு மகளே’ என்று கைகுவித்து மன்னிப்பை யாசித்தான்.
‘அப்பா, எல்லாம் என் விதி அப்பா. என் விதிதான் நீங்கள் அப்படியெல்லாம் செய்வதற்குக் காரணமாக அமைந்துவிட்டது. அதையெல்லாம் மறந்துவிடு அப்பா’ என்றாள்.
ஆனந்தக்கண்ணீர் வழிய நின்றிருந்த அப்பாவையும் மகளையும் அரண்மனையில் இருந்தவர்கள் அனைவரும் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.
மகளைப் பார்த்த மகிழ்ச்சியில் அனைத்தையும் மறந்திருந்த ராஜாவுக்கு அப்போதுதான் மகனுடைய நினைவு வந்தது. ‘தம்பி கனகராஜன் எங்கே மகளே? நீங்கள் இருவரும் இணைந்துதானே காட்டுக்குச் சென்றீர்கள்’ என்று கேட்டான்.
அப்போதுதான் கனகவல்லிக்கு தம்பியின் நினைவு வந்தது. விளையாட்டுத்தனமாக அவனுடைய கழுத்தில் மாலை சூட்டச் சென்றபோது அவன் சொன்ன சொற்களும் கொடுத்த கூழாங்கற்களும் அப்போதுதான் அவளுக்கு நினைவுக்கு வந்தன.
அவசரமாக பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த பாம்புக்கூடையைச் சுட்டிக் காட்டி, ‘அப்பா, இந்தப் பெட்டிக்குள் பாம்பாக இருப்பவன்தான் தம்பி கனகராஜா’ என்றாள்.
சொல்லிக்கொண்டே பெட்டியின் மூடியைத் திறந்தாள். உள்ளே சுருண்டிருந்த பாம்பு மெல்ல மெல்ல கூடையிலிருந்து வெளியேறி கனகவல்லியின் காலருகில் சென்றது. கனகவல்லி தன் கையிலிருந்த மூன்று கூழாங்கற்களையும் இறைவனை நினைத்தபடி அந்தப் பாம்பின் மீது அடிப்பது போல வீசி ‘கனகராஜா, எழுந்து வா’ என்றாள். மறுகணமே, பாம்பு மறைந்துவிட, அந்த இடத்தில் கனகராஜா நின்றிருந்தான்.
‘மகனே கனகராஜா’ என்று கைகளை விரித்தபடி சென்று மகனை அணைத்துக்கொண்டான் அரசன். அவன் வயதில் சிறியவனாக இருந்தபோதும் அரண்மனைச் சம்பவங்கள் அனைத்தும் அவனுக்கு நினைவில் இருந்தன. அதனால் அவனும் ‘அப்பா’ என்று ஆசையாக அழைத்தபடி அவனுக்கு அருகில் சென்றான். அரசன் தன் பிள்ளைகளை ஆசையோடும் பாசத்தோடும் அணைத்துக்கொண்டான்.
‘அப்பா சித்தி எங்கே?’ என்று கேட்டாள் கனகவல்லி. அதைக் கேட்டதும் அரசன் பெருமூச்சு விட்டபடி இருக்கையில் அமர்ந்துவிட்டான்.
‘அவளைப்பற்றி நான் என்ன சொல்வேன் மகளே. ஏதோ ஆசையினால் அவள் என்னைத் திருமணம் செய்துகொண்டாளே தவிர, அவளுக்குக் குழந்தையே பிறக்கவில்லை. உங்களையெல்லாம் காட்டுக்கு விரட்டிவிட்ட பாவத்தால்தான் தனக்கு பிள்ளைப்பேறு இல்லாமல் போய்விட்டது என சொல்லிச் சொல்லி புலம்பிக்கொண்டே இருந்தாள். காசிக்குப் போய்வந்தால்தான் என் பாவம் தொலையும் என்று அடிக்கடி சொல்லத் தொடங்கினாள் உன் சித்தி. என்ன பாவம் செய்தாய் நீ என்று கேட்டால் ஒரு பதிலும் சொல்லமாட்டாள். ஆனால் காசி காசி என்று ஒரு நாளைக்கு நூறு தரம் சொல்லிக்கொண்டே இருப்பாள். வியாதிக்கு அப்படியும் ஒரு மருந்து இருக்கலாம். அனுப்பிவையுங்கள் என்று அரண்மனை வைத்தியரும் சொன்னார். அவளுக்குத் துணையாக அவர்தான் காசிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். திரும்பி வர இன்னும் சில மாதங்கள் ஆகும்.’
அரசன் சொல்லிக்கொண்டிருந்தபோதே அரண்மனை முழுக்க ஏராளமானவர்கள் கூடிவிட்டனர். எல்லோரும் பார்க்கும் வகையில் கனகவல்லியையும் கனகராஜாவையும் தனக்கு அருகில் நிற்கவைத்து ‘ஒரு காலத்தில் புத்தி தடுமாற்றத்தால் நான் வெளியேற்றிய என் பிள்ளைகளை இப்போது இறைவன் எனக்குத் திருப்பிக் கொடுத்திருக்கிறான். நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள். இனி இவன்தான் உங்கள் இளவரசன் கனகராஜா. இவள்தான் உங்கள் இளவரசி கனகவல்லி’ என்று அறிமுகப்படுத்தினான்.
எல்லோரும் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு ‘வாழ்க இளவரசர். வாழ்க இளவரசி’ என்று வாழ்த்தினர்.
0