ஒரு ஊரில் நடுவயதைக் கடந்த ஒரு பெண்மணி இருந்தாள். அவள் பெயர் சாக்கவ்வா. அவளுடைய கணவன் ஒரு பண்ணையாரின் வீட்டில் மாடு மேய்த்துவந்தான். அவன் பெயர் திம்மப்பா. ஒருமுறை தமக்குள் மோதிக்கொண்டிருந்த இரு மாடுகளை விலக்கிவிடச் சென்றபோது, கோபம் கொண்ட ஒரு மாடு அவனைத் தன் கொம்புகளால் முட்டி கீழே தள்ளி வயிற்றில் குத்திக் கிழித்துவிட்டது. பலத்த காயங்களின் காரணமாக படுத்த படுக்கையாக இருந்த அவன் சில நாட்களுக்குப் பிறகு குணமாகாமலேயே இறந்துவிட்டான்.
திம்மப்பாவுடைய மரணத்துக்குப் பிறகு சாக்கவ்வா ஊருக்கு வெளியே காட்டுப்பகுதிகளில் கிடைக்கும் விறகுகளையும் சுள்ளிகளையும் எடுத்துவந்து கட்டு கட்டி சந்தையில் விற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். சில சமயங்களில் பிற பெண்களோடு சேர்ந்து விவசாய வேலைகளுக்கும் சென்றாள். அந்த வருமானத்தில்தான் சாக்கவ்வா குடும்பத்தை நடத்திவந்தாள்.
சாக்கவ்வாவுக்கு இரு பிள்ளைகள் இருந்தனர். மூத்தவன் ஆண்பிள்ளை. அவன் பெயர் கெம்புராஜா. இளையவள் பெண்பிள்ளை. அவள் பெயர் கெம்பம்மா. இருவரையும் அவள் செல்லமாக வளர்த்துவந்தாள். கெம்புராஜா தன் அப்பா வேலை செய்த அதே பண்ணையார் வீட்டில் மாடுகளை மேய்த்துவந்தான். அம்மாவும் அண்ணனும் வேலைக்குச் சென்ற பிறகு வீட்டைப் பெருக்கி சுத்தப்படுத்துவது, சட்டிபானை கழுவுவது, குளத்துக்குச் சென்று துணி துவைப்பது, சமைப்பது, வீட்டையொட்டி இருந்த சின்னஞ்சிறிய தோட்டத்தைப் பராமரிப்பது என எல்லா வேலைகளையும் கெம்பம்மா பார்த்துக்கொண்டாள்.
சாக்கவ்வாவின் அரவணைப்பில் இரண்டு பிள்ளைகளும் செழிப்பாக வளர்ந்து நின்றார்கள். நாள் முழுதும் தன் காலைச் சுற்றி ஓடி விளையாடியபடியும் இரவுகளில் மடியில் படுத்து கதை கேட்டபடியும் வளர்ந்த பிள்ளைகள் இருவரும் பெரியவர்களாக நடமாடுவதைப் பார்க்கும்போது ஒருபக்கம் அவள் மனம் மகிழ்ச்சியில் திளைத்தாலும் இருவருக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொடுக்கப் போகிறோம் என்பதை நினைத்து நினைத்து கவலையில் மூழ்கினாள்.
கெம்பம்மாவின் கூந்தல் பிற பெண்களின் கூந்தலைப்போல கரிய நிறத்தில் இல்லாமல் தங்க நிறத்தில் இருந்தது. அவள் கூந்தல் மீது சூரிய ஒளி படும்போது, அது பளபளவென மின்னத் தொடங்கும். பார்ப்பவர்களின் கண்ணைப் பறிக்கும். அதனால் பிறருடைய பார்வை அவளுடைய கூந்தல் மீது பட்டுவிடாமல் இருப்பதற்காக ஏதேனும் ஒரு ஏற்பாடு செய்ய வேண்டும் என நினைத்தாள் சாக்கவ்வா.
சாக்கவ்வாவுக்கு உறவுக்காரரான ஒரு தையல் தொழிலாளி அடுத்த ஊரில் கடை வைத்திருந்தார். அவரிடம் கெம்பம்மாவை அழைத்துச் சென்று தன்னுடைய பிரச்சினையைப்பற்றிச் சொன்னாள். அவளுடைய தங்கநிறக்கூந்தலை யாருடைய பார்வையிலும் படாதபடி ஒரு பாதுகாப்புக்கவசம் தைத்துக் கொடுக்குமாறு கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள்.
அந்தத் தையல்காரர் ஒருமுறை கெம்பம்மாவைத் திரும்பிப் பார்த்தார். அக்கணத்திலேயே அந்தப் பிரச்சினையின் தீவிரத்தைதை தையல்காரர் புரிந்துகொண்டார். அதனால் கூந்தலுக்கு மட்டும் கவசமாக இருக்காமல் கூந்தலையும் முகத்தையும் ஒரு சேர மறைக்கிற வகையில் பொருத்தமாக ஒரு துணிக்கவசம் தைத்துக் கொடுத்தார். அக்கவசத்தில் கண்கள், மூக்கு, வாய், காது போன்ற உறுப்புகளுக்கு மட்டும் சின்னச்சின்ன இடைவெளிகளை அமைத்திருந்தார்.
கெம்பம்மா அக்கவசத்தை வாங்கி அணிந்தாள். கழுத்துவரை நீண்டிருந்த கவசம் அவளுடைய அழகையே மறைத்தது. அதைப் பார்த்த பிறகுதான் சாக்கவ்வாவுக்கு மனம் அமைதியடைந்தது. அந்தக் கவசமே இனி தன் மகளுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என அவள் உறுதியாக நம்பினாள்.
அவர் தைத்துக் கொடுத்த துணிக்கவசம் கெம்பம்மாவுக்குப் பொருத்தமாக இருப்பதை உணர்ந்துகொண்டதும், மாற்றிமாற்றிப் பயன்படுத்துவதற்கு உதவும் வகையில் கூடுதலாக நான்கைந்து கவசங்களைத் தைத்துக் கொடுத்தனுப்பினார் தையற்காரர். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு கெம்பம்மாவுடன் வீட்டுக்குத் திரும்பினாள் சாக்கவ்வா.
அன்றுமுதல் வீட்டில் தனிமையில் இருக்கும் நேரத்தைத் தவிர பிற நேரங்களில் கெம்பம்மா அந்தக் கவசத்தை அணிந்துகொண்டே இருந்தாள். கவசம் எதற்காக என்று கேட்கிறவர்களுக்கு எதிர்பாராத தீக்காயத்தால் ஒரு பகுதி முகம் புண்ணாகி தடித்த தழும்பு உண்டாகிவிட்டது என்றும் பார்ப்பவர்களுக்கு அருவருப்பு ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக முகத்தை கவசத்தால் மூடிக்கொண்டு நடமாடுவதாகவும் சொல்லவேண்டும் என்று சாக்கவ்வா சொல்லிக் கொடுத்த சொற்கள் எப்போதும் அவள் நெஞ்சில் இருந்தன. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லோருக்கும் அவள் அந்த ஒரே பதிலைச் சொல்லிவந்தாள்.
ஒருநாள் காலையில் சாக்கவ்வா விறகு சேகரித்துக்கொண்டு வருவதற்காக காட்டுக்குச் சென்றிருந்தாள். கெம்புராஜாவும் மாடு மேய்ப்பதற்காக பண்ணையார் வீட்டுக்குச் சென்றிருந்தான். வீட்டுவேலைகளையெல்லாம் முடித்துக்கொண்டு குளிப்பதற்காக குளியலறைக்குச் சென்றாள் கெம்பம்மா. குளித்துவிட்டு உடைமாற்றிக்கொண்ட பிறகு வாசலில் வெயில் படும் இடத்தில் நின்று தலைமுடியை விரித்து உதறி ஈரம் போக உலர்த்திக்கொண்டிருந்தாள். கட்டுக்கட்டான பொன்னிழைகளைப்போல அவள் கூந்தல் அந்த இளவெயிலில் மினுமினுத்தது.
அதே நேரத்தில், தூக்குவாளியை எடுத்துச் செல்ல மறந்துபோன கெம்புராஜா, அதை எடுப்பதற்காக வீட்டுக்குள் வந்தான். அவன் கண்களில் கெம்பம்மாவுடைய கூந்தல்தான் முதலில் தெரிந்தது. அலையலையாக காற்றில் நெளிந்து தொங்கும் அவளுடைய கூந்தல் அழகை அவனை மயக்கியது. அதன் பொன்னிறம் அவனை மயக்கத்தின் உச்சத்துக்கே தள்ளியது. வட்டநிலா போல காட்சியளித்த அவளுடைய முக அழகு அவனை மேலும் மயங்கவைத்தது. கெம்பம்மா தன் சகோதரி என்பதையே அவன் மறந்துபோனான். அவளை எப்படியாவது தன்னுடையவளாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என அவன் நினைத்தான்.
திடீரென வீட்டுக்கு வந்த அண்ணனைப் பார்த்து கெம்பம்மாவுக்கு திகைப்பாக இருந்தது. “என்னண்ணா, என்ன வேணும்?” என்று கேட்டாள். அவள் பேசுவதைக் கேட்டதும் அவன் நெஞ்சிலிருந்து சொற்களே எழவில்லை. அவன் “ம்ஹூம். ஒன்னுமில்லை” என்று தலையசைத்தபடியே கையில் எடுத்த தூக்குவாளியை அவள் முன்னால் காட்டினான். பிறகு அசட்டுத்தனமாக ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு புறப்பட்டுச் சென்றான்.
மாடுமேய்த்துவிட்டு பண்ணையார் வீட்டிலிருந்து மாலையில் திரும்பியதும் முதல் வேலையாக அம்மாவிடம் தன் மனத்தில் எழுந்த காதலைத் தெரியப்படுத்தவேண்டும் என்றும் தன் சகோதரியை தனக்குத் திருமணம் செய்துவைக்கும்படி கேட்டுக்கொள்ள வேண்டும் என்ற முடிவோடு அவன் பண்ணையார் வீட்டுக்குச் சென்றான். அங்கு அவனுக்காகக் காத்திருந்த மாடுகளையெல்லாம் ஓட்டிக்கொண்டு மேய்ச்சல் நிலத்துக்குச் சென்றான்.
தன் எண்ணங்களைக் குறித்து தன் தாயிடம் மாலையில் வீட்டுக்குத் திரும்பியதும் தெரிவிக்கவேண்டும் என முடிவெடுத்திருந்த கெம்புராஜா நேரம் கழியக்கழிய தன் பொறுமையை இழந்தான். மீண்டும் மீண்டும் தன் சகோதரியின் பொன்னிறக்கூந்தலின் அழகும் சுடர் மிகுந்த அவளுடைய முக அழகும் அவன் மனக்கண் முன்னால் தோன்றி அவனைப் பாடாய்ப் படுத்தின. மாலை வரையில் காத்திருக்க அவனுக்குப் பொறுமை இல்லை. அதனால் மாடுகளையெல்லாம் மேய்ச்சல் நிலத்தில் அங்கங்கேயே விட்டுவிட்டு அம்மாவைத் தேடி ஓடினான். சந்தையில் ஒரு மரத்தடி நிழலில் விறகுக்கட்டுகளை குவித்துவிட்டு, யாராவது வாங்க வரமாட்டார்களா என எல்லாத் திசைகளிலும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருந்தாள். அப்போதுதான் அவள் தன் மகன் தன்னை நோக்கி வருவதைப் பார்த்தாள். எதற்காக வருகிறான் என்று புரியாமல் குழப்பத்தோடு அவன் வரும் திசையையே பார்த்தாள். அவன் வேகவேகமாக வந்து அம்மாவின் முன்னால் நின்றான்.
“என்னடா, என்ன விஷயம்? ஏன் இப்படி வேர்க்க விறுவிறுக்க ஓடி வர? அப்படி என்ன அவசரம்? உடம்புகிடம்பு சரியில்லையா?”
எழுந்து நின்று கேள்வி கேட்டபடி அவன் கையைப் பிடித்துப் பார்த்தாள். கழுத்தில் கையை வைத்துப் பார்த்தாள்.
“நல்லாதாம்மா இருக்கேன்” என்று அசட்டுத்தனமாக சிரித்தான் அவன்.
“அப்புறம் எதுக்கு இவ்வளவு தூரம் ஓடி வந்திருக்க? மாடுகளுக்கு ஏதாவது பிரச்சினையா?”
“இல்லம்மா”
“பண்ணையார் சந்தையிலிருந்து ஏதாவது சாமானுங்க வாங்கிவரச் சொன்னாரா?”
“அதெல்லாம் ஒன்னுமில்லைம்மா. இது வேற விஷயம்”
அவன் முகத்தில் வெட்கம் படிந்தது. அதுவரையில் தன் மகன் முகத்தில் வெளிப்படாத அந்த உணர்வை சாக்கவ்வா முதன்முதலாகப் பார்த்தாள். ஓர் இனம்புரியாத அச்சம் அவளை அறியாமல் அவளுடைய அடிவயிற்றில் பரவியது. “என்னடா? என்ன விஷயம்?” என்று அடங்கிய குரலில் கேட்டாள்.
“வீட்டுல கெம்பம்மாவைப் பார்த்தேன்மா”
“என்னாச்சி அவளுக்கு?”
“அவ நல்லாதாம்மா இருக்கா. ஆனா அவளைப் பார்த்ததிலேர்ந்து எனக்குத்தாம்மா ஒரு மாதிரி இருக்குது.”
“என்னடா ஒரு மாதிரி. புரியறமாதிரி சொல்லு”
“உனக்கு எப்பிடிம்மா சொல்றது? இத்தன வருஷமா தெனந்தெனமும் பார்த்துட்டிருந்த கெம்பம்மா முதமுதலா இன்னைக்கு என் கண்ணுக்கு வேற மாதிரி தெரிஞ்சாம்மா. அவளைப் பார்க்கப்பார்க்க அவளுடைய அழகு எனக்கு பைத்தியம் புடிக்க வைக்குதும்மா. உன்னை கெஞ்சி கேட்டுக்கறேன். கெம்பம்மாவை நானே கல்யாணம் செஞ்சிக்கறேன்மா. அவளை நான் ராஜாத்தி மாதிரி நல்லா பார்த்துக்குவேன்”
அவனுடைய பேச்சைக் கேட்டு சாக்கவ்வாவுக்கு மயக்கமே வந்தது. அவளால் நிற்கவே முடியவில்லை. கால்கள் நடுங்கின. சட்டென்று கீழே உட்கார்ந்துவிட்டாள். அவள் கண்களிலிருந்து தானகவே கண்ணீர் பெருக்கெடுத்தோடியது.
”கெம்புராஜா, கெம்பம்மா உனக்கு தங்கச்சிடா. அப்படியெல்லாம் நீ அவள நெனைக்கவும் கூடாது. பார்க்கவும் கூடாது. அது முறையில்லை. ஊருல இருக்கறவங்க நம்ம மேல் காறித் துப்புவாங்க. புரிஞ்சிக்கோ. அது உலகமகா பாவம்டா”
“அம்மா, அது பாவமோ, புண்ணியமோ, அதெல்லாம் எனக்குத் தெரியாது. கெம்பம்மா மேல ஆசைப்பட்டுட்டேன். உன் கால்ல உழுந்து கேட்டுக்கறேன். தயவு செஞ்சி கல்யாணம் செஞ்சி வைச்சிடு” என்று சொல்லிக்கொண்டே சாக்கவ்வாவின் கால்களில் விழுந்தான். சந்தையில் அந்தப் பக்கமாக போகிற, வருகிறவர்கள் எல்லோரும் அந்தக் காட்சியை ஓரக்கண்ணால் பார்த்தபடி சென்றார்கள். சாக்கவ்வாவுக்கு அவமானமாக இருந்தது. “எல்லாரும் பார்க்கறாங்க பாருடா கெம்பு. எழுந்துருடா. எல்லாத்தயும் அப்புறம் பேசிக்கலாம்” என்றாள்
“நீ ம்னு ஒரு வார்த்தை சொன்னாதான் நான் எழுந்திருப்பேன்மா. இல்லைன்னா எத்தனை வருஷமானாலும் இப்படியே கெடப்பேன். பட்டினி கெடந்து செத்தாலும் சாவேனே தவிர, இந்த இடத்துலேர்ந்து எழுந்திருக்கமாட்டேன். என் மேல உனக்கு உண்மையிலயே பிரியம் இருந்தா, கெம்பம்மாவை எனக்குக் கட்டி வைம்மா”
கெம்புராஜாவை எப்படி சமாளிப்பது என்றே சாக்கவ்வாவுக்குப் புரியவில்லை. குழப்பமாக இருந்தது. வேறு வழி தெரியாமல் “சரி, எழுந்திரு. உன் ஆசைப்படியே செஞ்சி வைக்கறேன்” என்று பெருமூச்சுடன் சொன்னாள்.
“இப்ப சரினு சொல்லிட்டு, அதுக்கப்புறம் பேச்ச மாத்தக்கூடாது. எனக்கு கெம்பம்மா கண்டிப்பா வேணும்”
“சரி, எழுந்திரு”
“சத்தியம்னு சொல்லு. அப்பதான் எழுந்திருப்பேன்.”
“சரி, சத்தியம். எழுந்திரு”
கெம்புராஜா சாக்கவ்வாவின் கால்கள் மீது முகத்தை வைத்து முத்தமிட்டான். வணங்கினான். பிறகு எழுந்து நின்றான். அவன் முகத்தில் புன்னகையும் கண்ணீரும் படர்ந்திருந்தன.
“இப்பதாம்மா எனக்கு நிம்மதியா இருக்குது. நான் இப்பவே போய் மாடுங்களையெல்லாம் ஓட்டி வந்து பண்ணையாரு வீட்டுல விட்டுட்டு, கல்யாணத்துக்குத் தேவையான புடவை, தாலி, வேட்டி, துண்டு எல்லாம் வாங்கிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு முகத்தில் ஆனந்தம் தாண்டவமாட அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.
நின்ற இடத்திலேயே இடிந்துபோய் உட்கார்ந்தாள் சாக்கவ்வா. அவளுடைய திகைப்பு இன்னும் அடங்கவில்லை. மகன் முன்னிலையில் கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவித்திருந்தாலும் அவளுக்கு உள்ளூர அதில் விருப்பமில்லை. எக்காரணத்தை முன்னிட்டும் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கக்கூடாது என்பதுதான் அவள் விருப்பமாக இருந்தது. மாலையில் கெம்புராஜா திரும்பி வருவதற்குள் ஏதாவது செய்யவேண்டும் என அவள் பரபரத்தாள்.
அந்த நிமிஷமே, சாக்கவ்வா சந்தையிலிருந்து வீட்டுக்குச் சென்றாள். அப்போது, குளித்துவிட்டு உடைமாற்றிக்கொண்டு சமையல் வேலையில் மூழ்கியிருந்தாள் கெம்பம்மா. வழக்கத்துக்கு மாறாக சீக்கிரமாக வீட்டுக்கு வந்த அம்மாவை ஆச்சரியத்தோடு பார்த்தாள் அவள். “என்னம்மா, இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட?” என்று சிரித்துக்கொண்டே கேட்டாள்.
“ஊரே நம்ம பார்த்து சிரிக்கிற நிலைமைக்கு உன் அண்ணன்காரன் நம்மள கொண்டுவந்து விட்டுட்டான்டி” என்று தலையில் அடித்துக்கொண்டு கண்ணீர்விட்டாள் சாக்கவ்வா.
கெம்பம்மாவுக்கு எதுவும் புரியவில்லை. “என்னம்மா சொல்ற? ஒன்னுமே புரியலையே. விளக்கமா சொல்லும்மா” என்று அம்மாவின் கைகளை ஆதரவோடு பற்றினாள் கெம்பம்மா.
சந்தையில் கெம்புராஜா சந்திக்க வந்ததில் தொடங்கி, அவன் புறப்பட்டுச் சென்றதுவரை எல்லா விஷயங்களையும் கண்ணீர் விட்டபடி சுருக்கமாகச் சொல்லிமுடித்தாள் சாக்கவ்வா.
“இங்க பாரு கெம்பம்மா. நீ சீக்கிரமா இந்த ஊரைவிட்டே புறப்பட்டு போயாகணும். உன் அழகே உன் சொந்த வீட்டுல உன்னால பாதுகாப்பா இருக்கமுடியாத நிலைமைக்கு கொண்டுவந்திடுச்சி. நீ இங்க நிக்கற ஒவ்வொரு நிமிஷமும் உனக்கு ஆபத்துதான். உடனே உனக்குத் தேவையான நாலைஞ்சி துணிமணிங்கள ஒரு பையில போட்டு எடுத்துக்கோ. உன் துணிக்கவசங்களையும் எடுத்துக்கோ. எந்தக் காரணத்தை முன்னிட்டும் யார் முன்னாலயும் துணிக்கவசத்தை மட்டும் எடுக்கவே கூடாது. யாராவது அதைப்பத்தி விசாரிச்சா, தீ விபத்துல புண்ணாகி தழும்பாயிடுச்சின்னு சொல்லு. எல்லாருக்கும் அந்த ஒரே பதிலைத்தான் சொல்லணும். ஊரைத் தாண்டி காட்டு வழியில நடந்து போ. திக்கற்றவருக்கு தெய்வமே துணை. உனக்கும் கடவுள் துணையா இருக்கட்டும். கெளம்பு”
கெம்பம்மா வேகவேகமாக கொடியில் போட்டிருந்த நாலைந்து உடைகளை மடித்து பைக்குள் வைத்துக்கொண்டாள். கைவசம் இருந்த துணிக்கவசங்களையும் எடுத்துக்கொண்டாள். அம்மாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டாள்.
“இனிமேல உன்ன உயிரோடு பார்க்கிற பாக்கியம் எனக்கு இருக்குமோ இல்லையோ தெரியலை. எங்க இருந்தாலும் நல்லா இரு கெம்பம்மா. கடவுள மறக்காத. போய் வா”
கெம்பம்மாவைத் தழுவி முத்தம் கொடுத்து அனுப்பிவைத்தாள் அவள். நீண்ட ஒரு பெருமூச்சோடு துணிக்கவசத்தை எடுத்து அணிந்தபடி கெம்பம்மா துணிமூட்டையோடு அந்த வீட்டைவிட்டு வெளியேறி வேகவேகமாக நடக்கத் தொடங்கினாள்.
பார்வையிலிருந்து மறையும் வரை கெம்பம்மா சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்த சாக்கவ்வா கண்ணீரைத் துடைத்தபடி தோட்டத்துக்குச் சென்றாள். அங்கே தோட்டத்து வேலியோரமாக வளர்ந்திருந்த அரளிச்செடியிலிருந்து கைக்கு எட்டும் உயரத்தில் தொங்கிக்கொண்டிருந்த பத்து பதினைந்து கொட்டைகளைப் பறித்தாள். அம்மியில் வைத்து நசுக்கி சாந்தாக அரைத்து வழித்தெடுத்து செம்பிலிருந்த தண்ணீரில் கலந்து குடித்தாள். அவள் கண்களிலிருந்து தன்னிச்சையாக கண்ணீர் வழிந்தபடி இருந்தது. கெம்பம்மா சென்ற திசையைப் பார்த்தபடி சுவரோடு சாய்ந்து கால்களை நீட்டிக்கொண்டாள். சிறிது நேரத்தில் சாக்கவ்வாவின் உயிர் பிரிந்துவிட்டது.
அன்று மாலை நேரத்தில் திருமணத்துக்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் வாங்கி மூட்டை கட்டி எடுத்துக்கொண்டு உல்லாசமாக பாட்டு பாடியபடி வீட்டுக்கு வந்தான் கெம்புராஜா. சாக்கவ்வா தரையில் படுத்துக் கிடந்த கோலம் அவனுக்கு அச்சத்தை மூட்டியது. கொண்டு வந்தவை அனைத்தையும் கீழே வீசிவிட்டு வேகவேகமாக அவள் அருகில் ஓடினான். அவன் தொட்டதும் அவள் உடல் அவன் மீது சாய்ந்தது. அவள் உயிருடன் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளவே அவனுக்குச் சில நொடிகள் தேவைப்பட்டன
“கெம்பம்மா, கெம்பம்மா” என்று பலமுறை அழைத்துப் பார்த்தான் . பதில் இல்லை. அடுப்பங்கரையில் சமையல் அரைகுறையோடு நின்றிருந்தது. அம்மா இறந்துவிட்டாள் என்பதையும் தங்கை வீட்டைவிட்டு எங்கோ வெளியேறிவிட்டாள் என்பதையும் அவன் புரிந்துகொண்டான்.
அடுத்த நாள் காலையில் சாக்கவ்வாவின் சவ அடக்கம் நடைபெற்றது. அதற்கு அடுத்த நாள் கெம்பம்மாவைத் தேடிக்கொண்டு அந்தக் கிராமத்திலிருந்து கெம்புராஜா வெளியேறினான். மனம் பேதலித்த நிலையில் மனம் போன போக்கில் ஊரூராக அலைந்து செல்லத் தொடங்கினான்.
முகக்கவசத்தோடு காட்டுப்பாதையில் நடக்கத் தொடங்கிய கெம்பம்மா கையோடு கொண்டுவந்திருந்த உணவை வைத்துக்கொண்டு இரண்டு நாட்கள் வரை சமாளித்தாள். மூன்றாம் நாள் அவளிடம் சாப்பிடுவதற்கு எதுவும் இல்லை. வழியில் கிடைத்த பழங்களை எடுத்து சாப்பிட்டு பசியைப் போக்கிக்கொண்டாள். ஐந்தாவது நாள் பசியோடு களைப்பும் சேர்ந்துகொண்டது. அப்போது வழியில் ஓர் ஆற்றைக் கடந்துசெல்ல வேண்டியிருந்தது. அச்சத்தோடும் கலவரத்தோடும் கடந்து மறுபக்கம் வந்தாள். தொடர்ந்து நடக்க முடியாது என்று தோன்றிய நேரத்தில் சிறிது தொலைவில் ஓர் ஆலமரத்தடியில் ஒரு குடிசை தெரிந்தது. மெல்ல மெல்ல அடியெடுத்துவைத்து அந்தக் குடிசை வரைக்கும் சென்று, பிறகு சுயநினைவின்றி அங்கேயே விழுந்துவிட்டாள்.
நீண்ட நேரம் கழித்து அக்குடிசையிலிருந்து ஒரு பாட்டி வெளியே வந்தாள். ஓரு உருவம் வாசலில் விழுந்து கிடப்பதையும் அது முகக்கவசம் அணிந்திருப்பதையும் பார்த்து அவளுக்கு விசித்திரமாக இருந்தது. அவளுடைய தோளைப்பற்றி தன் குடிசையின் உட்பக்கம் வரை இழுத்துச் சென்று சுவரோடு சாய்த்தாள். பிறகு அவள் முகத்தில் தண்ணீர் தெளித்தாள்.
மயக்கம் தெளிந்த பிறகு கெம்பம்மா தன் முழுக்கதையையும் விரிவாக பாட்டியிடம் சொன்னாள். பாட்டி அதைக் கேட்டு கண்கலங்கினாள். “இது பொல்லாத கலிகாலம்டி. கலிகாலம். பொண்ணா பொறந்தவளுக்கு எல்லாப் பக்கமும் துன்பம்தான். என்ன வேணும்னாலும் நடக்கும்” என்று சொல்லிக்கொண்டே பெருமூச்சுவிட்டாள். பிறகு கெம்பம்மாவை தன் சொந்தப் பேத்தியைப்போல அக்கறையோடு பார்த்துக்கொண்டாள். நாலைந்து நாள் தொடர்சியான ஓய்வும் நல்ல சாப்பாடும் பாட்டியுடைய ஆதரவும் கிடைத்ததால், மிகவிரைவில் அவள் பழைய நிலைக்குத் திரும்பினாள். தனக்கு ஏதாவது வேலை தேடிக் கொடுக்குமாறு பாட்டியிடம் கேட்டுக்கொண்டாள்.
அடுத்த நாள் பாட்டி ஊருக்குள் சென்று வேலை தொடர்பான தகவல் எங்காவது கிடைக்குமா என பல இடங்களில் விசாரித்தாள். ஒருவர் வழியாக ஒரு பயனுள்ள தகவல் கிடைத்தது. அந்தத் தகவலோடு வீட்டுக்குத் திரும்பி வந்து கெம்பம்மாவை அழைத்தாள்.
”இங்க பாரு. பக்கத்து ஊருல ரங்கப்பான்னு ஒரு பண்ணையாரு இருக்காரு. அவரு வீட்டுல சமையல் வேலை செய்யறதுக்கு ஆள் வேணுமாம். உனக்கு அங்க போக விருப்பமிருந்தா, உன்ன அங்க சேர்த்துவிடறேன்” என்று சொன்னாள்.
கெம்பம்மா ”சரி” என்று சம்மதித்தாள்.
அன்று மாலை வேளையில் பண்ணையார் வீட்டுக்குச் சென்று அவருடைய மனைவி கெளரம்மாவைச் சந்தித்துப் பேசினார்.
“எங்க ஊருலேர்ந்து ஒரு பொண்ணு வந்திருக்காம்மா. அனாதைப்பொண்ணும்மா. ஊருல ஏதோ ஒரு தீவிபத்துல மாட்டி செத்து பொழைச்சி வந்திருக்கா. உயிர காப்பாத்துன கடவுள் அவ மூஞ்சிய மட்டும் கரிக்கட்டையா ஆக்கிட்டான். அதையே நெனச்சி ஊட்டுக்குள்ளயே உக்காந்திருந்தா, உயிரோட இருக்கமுடியுமா? ஏதாச்சிம் வேலை இருந்தா பார்த்துக் குடுங்கம்மான்னு வந்திருக்கா. அடுத்தவங்க கண்ணுக்குத் தெரியாத மாதிரி முகக்கவசம் போட்டுகிட்டுதான் நடமாடறா. நல்லா சோறாக்குவா. வீட்டுவேலையெல்லாம் கருத்தா செய்வா. தோட்டத்து வேலையை கூட பார்த்துக்குவா. நீங்கதான் எப்படியாவது மனசு வைச்சி அவளுக்கு ஒரு வாழ்க்கையை கொடுக்கணும்”
கருணையைத் தூண்டும் வகையில் பாட்டி எடுத்துச் சொன்ன விதம் கெளரம்மாவின் மனத்தைத் தொட்டது. “நாளைக்கே அழைச்சிகிட்டு வா. சமையல் வேலையெல்லாம் எப்படி செய்றான்னு பார்த்துட்டு இருக்கலாமா, வேணாமான்னு சொல்றேன்” என்று சொல்லி அனுப்பிவைத்தாள்.
பண்ணையார் வீட்டிலிருந்து திரும்பிய பாட்டி, கெம்பம்மாவிடம் எல்லா விஷயங்களையும் தெரிவித்தாள்.
“கெளரம்மா ரொம்ப நல்லவங்க. அங்க அவுங்க உன்ன வச்சிக்கறதும் அனுப்பறதும் நீ சமைக்கற விதத்துலயும் நடந்துக்குற விதத்துலயும்தான் இருக்குது”
அடுத்தநாள் காலையிலேயே கெம்பம்மாவை தன்னோடு அழைத்துச் சென்ற பாட்டி, கெளரம்மாவிடம் அறிமுகப்படுத்தி வைத்தாள். கெம்பம்மா அவளைப் பார்த்து கையை உயர்த்திக் கும்பிட்டாள். கெம்பம்மா தன் முகம் தெரியாதபடி துணிக்கவசம் அணிந்திருந்ததைப் பார்த்துவிட்டு அதைப்பற்றி சில கேள்விகளைக் கேட்டாள் கெளரம்மா. கெம்பம்மா எப்போதும் எல்லோரிடமும் சொல்லும் பதிலையே அவளிடமும் சொன்னாள்.
“அவளை சமையலறைக்கு அழைச்சிட்டு போய் எல்லாத்தயும் ஒரு தரம் சொல்லிக் கொடுத்துட்டு போ” என்று பாட்டியிடம் சொன்னாள் கெளரம்மா. உடனே பாட்டி கெம்பம்மாவை அந்த இடத்திலிருந்து அழைத்துக்கொண்டு புறப்பட்டாள். சமையலறையில் எந்தெந்த சாமான்கள் எங்கெங்கே இருக்கிறது என்பதையெல்லாம் ஒருமுறை விளக்கமாகச் சுட்டிக் காட்டி விளக்கினாள் பாட்டி. தொடர்ந்து “பார்த்து கவனமா மரியாதையா நடந்துக்கணும். அவுங்க ஏதாச்சிம் வேகத்துல ஒரு வார்த்த கூட கொறச்சலா சொன்னாலும் அனுசரிச்சிகிட்டு போவணும்” என்று சொல்லிவிட்டுத் திரும்பிவிட்டாள்.
கெம்பம்மா உடனடியாக மதிய உணவுக்கான காய்கறிகளை வெட்டி தனித்தனியாக எடுத்துவைக்கத் தொடங்கினாள். அவள் வேலை செய்யும் வேகம் கெளரம்மாவுக்குப் பிடித்துவிட்டது. சமையலறையிலேயே ஓரமாக நாற்காலியில் உட்கார்ந்தபடி எல்லாவற்றையும் மேற்பார்வை செய்தார். ஒரு மணி நேரத்தில் சிட்டு மாதிரி எல்லா வேலைகளையும் அவள் வேகவேகமாக முடித்துவிட்டாள்.
அந்த வீட்டில் பண்ணையாரான ரங்கப்பா, கெளரம்மா, அவர்களுடைய மகன் சதானந்தன், மகள் சந்திரா என நான்கு பேர்தான் இருந்தனர். மதிய உணவுக்கான நேரத்தில் அவர்கள் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்தனர். கெம்பம்மா சமைத்த உணவை ருசித்துச் சாப்பிட்டனர். “நல்லாதான் இருக்குது. அவளை இங்கயே வச்சிக்கலாம்” என்று கெளரம்மாவிடம் கண்ணால் ஜாடை காட்டிவிட்டு ரங்கப்பா எழுந்துபோய்விட்டார்.
அன்று இரவு உணவையும் கெம்பம்மா சமைத்தாள். அதையும் அவர்கள் அனைவரும் விருப்பமுடன் சாப்பிட்டனர். அப்போது ”இனிமேல கெம்பம்மாவே சமைக்கட்டும்” என்று அனைவரும் ஒருமித்த குரலில் வெளிப்படையாகவே தெரிவித்தனர். அதைக் கேட்ட பிறகுதான் கெம்பம்மாவின் மனம் அமைதியடைந்தது. ஒரு நிமிடம் மனத்துக்குள் தன் அம்மாவை நினைத்துக்கொண்டாள்.
பாத்திரங்களையெல்லாம் கழுவி வைத்துவிட்டு வீட்டுக்குப் புறப்படுவதற்குத் தயாரானாள் கெம்பம்மா. விடை பெறுவதற்காக கெளரம்மாவிடம் சென்றாள். அப்போது கெளரம்மா “நாளைக்கு வரும்போது உன் மூட்டையையும் எடுத்துகிட்டு வந்துடு கெம்பம்மா. நீ இங்கயே தங்கிக்கலாம். வீட்டுக்குப் பின்னால கெணத்தை ஒட்டி ஒரு அறை இருக்குது. நீ அங்கயே தங்கிக்கலாம். பாய், போர்வையெல்லாம் அங்கயே இருக்குது. பாட்டிகிட்டயும் விஷயத்தை சொல்லிட்டு வந்துடு” என்று தெரிவித்தார்.
ஒரு சிக்கல் தீர்ந்தது என்று நிம்மதியாக உணர்ந்த நேரத்தில் இன்னொரு புதிய சிக்கல் தொடங்கிவிட்டதை உணர்ந்தபோது கெம்பம்மாவுக்கு வருத்தமாக இருந்தது. ஆயினும், இனி பின்வாங்குவதில் அர்த்தமில்லை என நினைத்து மனத்தை உறுதிப்படுத்திக்கொண்டாள். ”எது வந்தாலும் சமாளிக்கிற மன உறுதியைக் கொடு கடவுளே” என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டாள்.
அடுத்தநாள் முதல் கெம்பம்மா அந்தத் தோட்டத்து அறையிலேயே தங்கத் தொடங்கினாள். அந்த அறை முடியும் இடத்திலிருந்து அந்த இடத்தின் தோட்டமும் கிணறும் தொடங்கின. விதவிதமான மலர்கள் பூத்துக் குலுங்கும் செடிகளைப் பார்க்கும்போதெல்லாம் அவளுக்கு தன் வீடு நினைவுக்கு வந்துவிட்டது. அம்மாவை நினைத்ததும் அவள் கண்கள் தளும்பத் தொடங்கின.
நாட்கள் வேகவேகமாக கடந்துசென்றன. நாலைந்து மாதங்கள் போனதே தெரியவில்லை. கெம்பம்மா அந்த இடத்தை மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தாள். பாட்டி செய்த உதவியை அடிக்கடி நன்றியுடன் நினைத்துப் பார்த்துக்கொண்டாள்.
ஒருநாள் காலை உணவு முடிந்ததும் கெளரம்மா “இன்னிக்கு நாங்க எல்லாருமே பக்கத்து ஊரு கோயில்ல ஒரு பூஜைக்குக் கெளம்பறோம். மதிய சாப்பாடு சமைக்கவேணாம். சாயங்காலமா வந்துருவோம். நாங்க வந்த பிறகு ராத்திரி சாப்பாடு சமைச்சிக்கலாம்” என்று தெரிவித்தார். கெம்பம்மாவும் “சரிம்மா” என்று தலையை அசைத்துக்கொண்டாள்.
சாப்பிட்ட பிறகு எல்லோரும் உடைமாற்றிக்கொண்டு புறப்பட்டார்கள். அவர்களை ஏற்றிக்கொண்டு செல்வதற்காக வாசலில் காத்திருந்த பெட்டிவண்டியில் அமர்ந்துகொண்டார்கள். மாடுகளின் கழுத்துச்சலங்கை சத்தம் சமையலறை வரைக்கும் கேட்டது. வண்டி புறபட்டுச் சென்றுவிட்டது என கெம்பம்மா நினைத்தாள். ஆனால் அந்த வண்டியில் ரங்கப்பாவும் கெளரம்மாவும் சந்திராவு மட்டுமே சென்றனர். சதானந்தன் செல்லவில்லை. ஏதோ ஒரு வேலை செய்துகொண்டிருப்பதாகவும் அதைச் செய்துமுடித்துவிட்டு தாமதமாக வந்து சேர்வதாகவும் அவர்களை வழியனுப்பிவிட்டு அறைக்குத் திரும்பிச் சென்றுவிட்டான். அது கெம்பம்மாவுக்குத் தெரியாது.
வீட்டில் அமைதி நிலவியது. எல்லோரும் கிளம்பிச் சென்றுவிட்டார்கள் என நினைத்த கெம்பம்மா தன் அறைக்குச் சென்று தன் கவசத்தைக் கழற்றிவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தாள்.
ஒவ்வொரு நாளும் காலையில் சீக்கிரமாகவே தூங்கி எழும் பழக்கமுடையவள் அவள். அப்போதே உடனடியாக குளித்துவிடுவாள். அந்நேரங்களில் சூழ்நிலையின் காரணமாக உடம்பு நனையும்படி நீரூற்றி குளிக்க முடிந்ததே தவிர, அவளால் தலையில் தண்ணீர் ஊற்றிக் குளிப்பதற்கான வாய்ப்பே அமையவில்லை. துணிக்கவசத்திலேயே அடைபட்டிருப்பதால் தலைமுடியில் அழுக்கேறியிருந்தது. அந்த அழுக்கைப் போக்கிக்கொள்வதற்காகவாவது ஒருமுறை தலையில் தண்ணீர் ஊற்றிக் குளிக்கவேண்டும் என அவள் நினைத்தாள். வீட்டில் யாரும் இல்லாத அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு தலை குளித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
உடனடியாக வேகவேகமாக கிணற்றடிக்குச் சென்று தொட்டியில் நீரை நிரப்பிக்கொண்டு ஆடைகளைக் களைந்துவிட்டு குளிக்கத் தொடங்கினாள். தலையில் குளிர்ச்சியான நீர் பட்டதும் அவளுக்கு உடலே சிலிர்த்தது. மீண்டும் மீண்டும் தண்ணீரை குவளையில் எடுத்து எடுத்து தலைமீது கவிழ்த்துக்கொண்டாள். சின்னப்பிள்ளை மாதிரி அவள் மனம் துள்ளியது. தலைமுடிக்குள் விரல்விட்டு நீவி நீவி அழுக்கை எடுத்தாள். பகல் வெளிச்சத்தில் அவளுடைய தலைமுடியின் இழைகள் பொன்னிறத்தில் மின்னின. தன் தலைமுடியின் அழகை ரசித்தபடியே அவள் சிறிது நேரம் நின்றாள்.
ஆசை தீரக் குளித்தபிறகு மீண்டும் உடைமாற்றிக்கொண்டாள். பழைய உடைகளைத் துவைத்து உலர்த்தினாள். பிறகு சூரிய வெளிச்சம் தன் மீது படும்படி நின்றுகொண்டு தலைமுடியை தன் தோள்மீது படரவிட்டு உலர்த்தினாள்.
அதுவரைக்கும் தன் அறைக்குள் ஏதோ வேலை செய்தபடி இருந்த சதானந்தன் தன் அறையிலிருந்தபடியே ”கெம்பம்மா, ஒரு செம்புல குடிக்கிற தண்ணீர் எடுத்துவா” என்று சத்தமாகச் சொன்னான். மீண்டும் மீண்டும் சொன்ன பிறகும் பதில் இல்லாததால் அறையிலிருந்து வெளியே வந்து சமையலறையைப் பார்த்துச் சொன்னான். அங்கிருந்தும் பதில் வராததால் “எங்க போயிட்டா கெம்பம்மா?” என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டபடி சமையலறைக்குள் சென்றான். அங்கே அவளைக் காணவில்லை.
எங்கே போயிருக்கக்கூடும் என தனக்குத்தானே கேட்டபடி ஒவ்வொரு அறையாகப் பார்த்துவிட்டு, கடைசியாக வீட்டின் பின்கட்டுக்குச் சென்றான் சதானந்தன். அவன் அழைத்த குரலுக்கு அப்போதும் பதில் வரவில்லை. அதனால் கெம்பம்மா கெம்பம்மா என அழைத்தபடியே பின்கட்டு வாசல் வழியே கெம்பம்மா தங்கியிருக்கும் அறையை நோக்கிச் சென்றான்.
கிணறுவரை சென்ற பிறகுதான் அவன் தொலைவில் வெயிலுக்கு நடுவில் தலைமுடியைத் துவட்டிக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணைப் பார்த்தான். பார்த்த முதல் கணத்திலேயே அவளுடைய தலைமுடியின் அழகும் அவளுடைய அழகும் அவனை வசீகரித்தன. அந்த அழகைப் பார்த்து அவன் வாயடைத்துப் போய் நின்றான்.
அவனுக்கு அவள் யாரென்றே தெரியவில்லை. தம் வீட்டுத் தோட்டத்தில் எப்படி வந்தாள் என்றும் அவனுக்குத் தெரியவில்லை. அதனால் அவள் யார் என்று தெரிந்துகொள்ளும் பரபரப்புடன் ”யார் அது? யார் அது?” என்று கேட்டான். அவன் வாயிலிருந்து சொல் எழவே இல்லை என்பதை சில கணங்களுக்குப் பிறகே அவன் மனம் உணர்ந்தது. உடனே தொண்டையைச் செருமியபடி “யார் அது?” என்று மீண்டும் கேட்டான்.
திடீரென ஒரு குரல் தன்னை நோக்கி வந்ததும் அச்சத்தோடு சட்டென திரும்பிப் பார்த்தாள் கெம்பம்மா. சதானந்தன் அங்கே நிற்பதைப் பார்த்ததும் அவள் திகைத்துவிட்டாள். ”ஐயா, நீங்களா?” என்று அஞ்சியபடி கேட்டாள். உடனே பதற்றத்துடன் அருகிலிருந்த துணிக்கவசத்தை எடுத்து தன் முகத்தை மூடிக்கொண்டாள். ”நீங்க… நீங்க…” என்று அவனைப் பார்த்து ஏதோ கேட்பதற்கு முன்னால் சதானந்தன் அங்கிருந்து வேகமாக வெளியேறிவிட்டான்.
சதானந்தனின் மனம் அவளுடைய அழகை நினைத்து நினைத்து மயக்கத்தில் மூழ்கியது. வாழ்ந்தால் இப்படி ஒரு பேரழகியோடு வாழவேண்டும் என அவன் அக்கணமே முடிவெடுத்தான். அவளுடைய முகமும் காற்றில் அலைபாய்ந்தபடி இருந்த அவளுடைய பொன்னிறக் கூந்தலும் அவன் நினைவில் நிழலாடியபடி இருந்தன. அன்றைய பொழுது சாயும்வரை அவன் வீட்டுக்கே திரும்பாமல் அவளுடைய முகத்தை நினைத்தபடி எங்கெங்கோ அலைந்து திரிந்தான்.
பொழுது சாயும் சமயத்தில்தான் சதானந்தன் வீட்டுக்குத் திரும்பினான். வெளியூருக்குச் சென்ற பெட்டி வண்டி வாசலில் நின்றிருப்பதைப் பார்த்து, அனைவரும் திரும்பிவிட்டார்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டான்.
வீட்டுக்கு வந்ததும் நேராக தன் அம்மாவின் அறைக்குச் சென்றான். “அம்மா, நான் ஒரு பொண்ண பார்த்து மனசைப் பறிகொடுத்துட்டேன். எந்த மறுப்பும் சொல்லாம, எனக்கும் அவளுக்கும் நீங்க கல்யாணம் செஞ்சி வைக்கணும்மா” என்று ஏக்கத்துடன் சொன்னான்.
“யாருடா அந்தப் பொண்ணு? நாங்க பாக்கவேணாமா? ஒனக்குப் பொருத்தமா இருப்பாளா அவள்?” என்று கேட்டாள் கெளரம்மா.
“அம்மா, அவளைவிட எனக்குப் பொருத்தமான ஒருத்தி இந்த உலகத்திலயே கிடைக்கமாட்டாம்மா. பேரழகிம்மா அவள். பேரழகி”
“அழகா இருந்துட்டா மட்டும் போதுமா மகனே. நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவளா இருக்க வேணாமா? ஒரு குடும்பத்தை நிர்வகிக்கிற திறமை உள்ளவளா இருக்க வேணாமா?”
“நீ சொல்ற எல்லாமே அவளுக்கு இருக்குதும்மா. நீ மட்டும் ம்னு ஒரு வார்த்தை சொல்லும்மா”
“சொல்றேன். நீ ஆசைப்படற பொண்ணயே உனக்குக் கல்யாணம் செஞ்சிவைச்சாதானே, உனக்கும் சந்தோஷம், எங்களுக்கும் சந்தோஷம். அதுக்கு முன்னால அந்தப் பொண்ணு யாரு, எந்த ஊரு, அம்மா அப்பா யாரு, எங்க இருக்காங்க, அதெல்லாம் தெரிஞ்சிக்க வேணாமா?”
சதானந்தன் அம்மாவைப் பார்த்து ஒருகணம் வெட்கத்துடன் புன்னகைத்தான். “நம்ம வீட்டுலயே இருக்கிற பொண்ணுதாம்மா. தினந்தினமும் நீங்க பார்த்துட்டிருக்கிற பொண்ணுதாம்மா. சொன்னா, நீ ஆச்சரியப்படுவ” என்றான்.
“என்னடா சொல்ற நீ? ஒரே குழப்பமா இருக்கே. யாருடா அவ?”
“நம்ம கெம்பம்மாதாம்மா”
சதானந்தனின் பதிலைக் கேட்டு அம்மா ஒருகணம் திகைத்துவிட்டாள். பிறகு வருத்தத்துடன் “என்னடா இது? ஒரு வேலைக்காரியை கல்யாணம் செஞ்சிக்க போறேனு சொல்றியே, உனக்கு மூளை இல்லையா? நாலு பேரு முன்னால மூஞ்சியையே காட்டமுடியாம துணிக்கவசத்தால மூடிகிட்டு நடக்கற அந்தப் பொண்ண கல்யாணம் செஞ்சிக்கறேன்னு சொல்றியே, உனக்கு என்ன மூளை கலங்கிடிச்சா?” என்றாள்.
“ஐயோ, அம்மா, ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளு. அவ போட்டிருக்கறதெல்லாம் வேஷம். யாருக்காகவோ பயந்து அப்படி இருக்கா அவ. இன்னிக்கு நானே அவளுடைய முகத்தை தற்செயலா பார்த்தேன். வேணும்ன்னா, நீயும் ஒருதரம் வந்து பாரு. அதுக்கப்புறம் இருக்கலாமா, வேணாமான்னு நீயே முடிவுகட்டு”
அக்கணமே அவன் தன் அம்மாவின் கையைப் பற்றி வேகவேகமாக அழைத்துச் சென்று கெம்பம்மாவின் முன்னால் நிறுத்தினான். கெம்பம்மா இருவரையும் பார்த்துவிட்டு தலையைக் குனிந்துகொண்டாள்.
”என்னடி இது? இவன் என்னமோ சொல்றானே, அதெல்லாம் உண்மையா?” கேட்டாள் கெளரம்மா. கெம்பம்மா பதில் சொல்லாமல் குனிந்த தலையை நிமிர்த்தாமல் அமைதியாக நின்றிருந்தாள்.
“என்னம்மா கேள்வி இது? அந்த முகக்கவசத்தை எடுத்துட்டுப் பார்த்தா, உண்மை என்னன்னு தானா தெரிஞ்சிடும்” என்று பரபரத்தான் அவன். அவனையும் அவளையும் மாறிமாறிக் குழப்பத்துடன் பார்த்தபடி நின்றாள் கெளரம்மா. தம் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரியாக இருந்தாலும் அவளைத் தொடுவதற்கு கெளரம்மாவுக்குத் தயக்கமாக இருந்தது. ஆயினும் வேறு வழி தெரியாமல் கெம்பம்மாவின் பக்கத்தில் சென்று சற்றே அச்சத்தோடு அவளுடைய முகத்தை மூடியிருந்த தலைக்கவசத்தை அகற்றினாள்.
சுருட்டி முடிந்திருந்த அவளுடைய நீளமான கூந்தல் பிரிந்து அவிழ்ந்து சட்டென்று தொங்கியது. பளபளவென்ற அதன் பொன்னிறம் கண்ணைக் கவர்வதாக இருந்தது. கெளரம்மாவுக்கு எல்லாமே கனவுபோல இருந்தது. தன் முன்னால் நிற்பது உண்மையிலேயே ஒரு பெண்ணா அல்லது தங்கச்சிலையா என்ற எண்ணம் எழுந்தது. அவளுடைய அழகான முகத்தையே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். இப்படிப்பட்ட பேரழகைப் பார்த்து தன் மகன் மயங்கியிருப்பதில் பிழையே இல்லை என மனத்துக்குள் நினைத்துக்கொண்டாள்.
அவளை நெருங்கி “இவ்வளவு அழகா இருக்கிற உன் முகத்தை மறைச்சிகிட்டு வாழவேண்டிய அளவுக்கு உனக்கு என்ன நெருக்கடி கெம்பம்மா?” என்று கெம்பம்மாவிடம் கேட்டாள். கெம்பம்மாவின் முகம் இன்னும் கலவரத்திலேயே மூழ்கியிருந்தது. தலையைக் குனிந்தபடி தன் கதையை ஆரம்பத்திலிருந்து சுருக்கமாக விவரித்து முடித்தாள்.
“அப்பா வரட்டும். அவரோடு கலந்து பேசிட்டு என்ன செய்யலாம்ங்கறதை அப்புறமா முடிவு செஞ்சிக்கலாம். இப்ப நீ உன் அறைக்குப் போ” என்று சதானந்தனை அனுப்பிவைத்தாள் கெளரம்மா.
அவன் போன பிறகு கெம்பம்மாவை தன் பக்கத்திலேயே அமரவைத்துக்கொண்டு ஏதேதோ கேள்விகள் கேட்டு, அவள் சொல்லும் பதில்களையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தாள் கெளரம்மா.
இரவு நேரத்தில் ரங்கப்பா வீட்டுக்குத் திரும்பியதும் கெளரம்மா அவரிடம் சதானந்தனுடைய ஆசை பற்றியும் கெம்பம்மாவின் கதையைப்பற்றியும் சுருக்கமாக எடுத்துரைத்தாள். இரவுச்சாப்பாட்டின் போது ரங்கப்பா முகக்கவசம் அணியாத கெம்பம்மாவைப் பார்த்தார். பார்த்த கணத்திலேயே அவள் தன் மகனுக்குப் பொருத்தமாக இருப்பாள் என அவருடைய மனத்துக்குத் தோன்றியது.
அந்த இடத்திலேயே இருவருடைய திருமணத்துக்கும் ஒப்புதல் தெரிவித்துவிட்டார். அடுத்த ஒரு வாரத்திலேயே ஒரு நல்ல முகூர்த்தநாளில் சதானந்தனுக்கும் கெம்பம்மாவுக்கும் திருமணம் நடந்துமுடிந்தது. கெம்பம்மாவின் சார்பாக பாட்டி மட்டும் வந்து திருமணத்தில் கலந்துகொண்டு ஆசி வழங்கிவிட்டுச் சென்றாள்.
சதானந்தனும் கெம்பம்மாவும் ஆனந்தமாக வாழ்ந்தார்கள். வாரத்துக்கு ஒருமுறை வில்வண்டியில் பயணம் செய்து, அக்கம்பக்கத்தில் இருக்கும் கோவில்கள், குளங்கள், ஆற்றங்கரை, மலையடிவாரம் எல்லாம் பார்த்துவிட்டுத் திரும்பினார்கள்.
நான்கு வருஷ காலம் நான்கு நாட்களைப் போல ஓடிவிட்டது. மணமக்கள் இருவரும் மகிழ்ச்சியோடு பேசித் திரியும் காட்சியைப் பார்த்து ரங்கப்பாவும் கெளரம்மாவும் பெரிதும் மனநிறைவுற்றார்கள். திருமணமாகி நான்கு ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையிலும் அவர்கள் ஒரு குழந்தை பெற்றுக்கொள்வதைப்பற்றி கவலை இல்லாமல் இருக்கிறார்களே என்பதை நினைக்கும்போது மட்டுமே அவர்கள் மனத்தில் கொஞ்சம் கவலை ஏற்படும். பிறகு அது தானாகவே மறைந்துவிடும்.
“ஏதாவது நமக்குத் தெரியாத தோஷமா கூட இருக்கலாம். வீட்டுல ஒரு பரிகார பூஜை செஞ்சி பாரு. அதுக்கப்புறம் நடக்கறது நல்லதா நடக்கும்”
ஒருநாள் ரங்கப்பாவின் நண்பரொருவர் சொன்ன ஆலோசனையைப்பற்றி அவர் நீண்ட நேரம் யோசனையில் மூழ்கியிருந்தார். வீட்டுக்குத் திரும்பிய பிறகு கெளரம்மாவிடமும் அதைப்பற்றி கலந்து பேசினார். அவளும் ”பூஜைதான? செஞ்சிப் பார்த்துடலாம். அதுல என்ன தப்பு?” என்று அவளும் ஒப்புக்கொண்டாள்.
அடுத்த நாளே ரங்கப்பா ஜோதிடரைப் பார்த்து பரிகார பூஜைக்கு நல்ல நாளையும் நேரத்தையும் குறித்து வாங்கிக்கொண்டு வந்தார். பிறகு, பூஜைக்கு ஆலோசனை சொன்ன நண்பரைச் சந்தித்து நல்ல நேரம் குறித்த தகவலையும் தெரியப்படுத்தினார். அந்த நண்பர் தனக்குத் தெரிந்த ஒரு நல்ல குருசாமி இருக்கிறார் என்றும் எல்லாவிதமான பரிகார பூஜைகளிலும் அவர் வல்லவர் என்றும் அவருக்கு மாயமந்திரம் கூட அத்துபடியான விஷயம் என்றும் குறிப்பிட்ட பூஜைக்கு அவரையே பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். சொன்னதுபோலவே ஒருநாள் ரங்கப்பாவை தன்னோடு அழைத்துச் சென்று குருசாமியை அறிமுகப்படுத்தினார்.
ரங்கப்பா தன் தேவையைச் சொன்னதும் வீட்டுக்கு வந்து பூஜையைச் செய்ய குருசாமி ஒப்புக்கொண்டார். பூஜை நடைபெறக்கூடிய தினத்தில் வீட்டில் வசிக்கும் அனைவரும் காலையிலிருந்து விரதம் இருக்கவேண்டும் என்றும் மதியநேரத்தில் ஆரத்தி முடிந்த பிறகே உணவுண்ண வேண்டும் என்றும் தெரிவித்தார் குருசாமி. அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு வீட்டுக்குத் திரும்பி வந்தார் ரங்கப்பா.
பூஜை நாள் வந்தது. வீட்டில் இருந்த அனைவரும் அதிகாலையில் குளித்ததிலிருந்து ஒருவாய் நீர் கூட அருந்தாமல் இருந்தார்கள். குறிப்பிட்ட நேரத்தில் குருசாமியும் வந்து சேர்ந்தார். ரங்கப்பாவும் கெளரம்மாவும் பயபக்தியோடு குருசாமி சொல்வதையெல்லாம் செய்தனர். அவர்கள் வழிபாடு முடிந்ததும் “மகனையும் மருமகளையும் கூப்புடுங்க” என்றார் குருசாமி. அவர்கள் வந்து மணையில் உட்கார வேண்டும் என்றார்.
அவர்கள் இருவரும் அடுத்த அறையில் இருந்தனர். சந்திரா சென்று இருவரையும் அழைத்துவந்தாள். இருவரும் பூஜை நடக்கும் கூடத்துக்கு வந்து குருசாமியைக் கைகூப்பி வணங்கினர். கையை உயர்த்தி அவர்களுக்கு ஆசி கூறியபடி இருவரையும் நேருக்கு நேர் பார்த்தார் குருசாமி.
கெம்பம்மாவைப் பார்த்த கணத்திலேயே குருசாமியுடைய மனம் மயங்கியது. சிலை மாதிரி இருந்த அவளுடைய பேரழகு அவருடைய சிந்தனையைக் கலைத்தபடி இருந்தது. எத்தனை முறை கட்டுப்படுத்தினாலும் அவர் பார்வை மீண்டும் மீண்டும் கெம்பம்மாவின் பக்கமே சென்றது. அவளை எப்படியாவது வசப்படுத்தி தன்னுடையவளாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று அவர் மனம் அக்கணமே திட்டமிட்டது.
பூஜை முடிந்ததும் எல்லோரும் பிரசாதம் வாங்கிக்கொண்டனர். குருசாமி அனைவரையும் வாழ்த்தினார். கெம்பம்மா மீது குருசாமி கொண்ட மோகம் அவருடைய மனத்துக்குள் நெருப்பு மாதிரி பற்றியெரிந்தபடி இருந்தது. அவளை அடைவதற்கு ஒரு குறுக்குவழியாக அவருடைய மனத்தில் ஒரு திட்டம் உதித்தது. உடனே ரங்கப்பாவைப் பார்த்து “இந்த ஒரு பூஜை போதாது. உங்க மருமகள் வயித்துல கரு நிக்கறதுக்கு இன்னும் சில பூஜைகளை தொடர்ச்சியா செய்யணும். அப்பதான் நாம செஞ்ச பூஜைக்கு பலன் கிடைக்கும். ரெண்டு நாளைக்கு ஒன்னு, நாலு நாளைக்கு ஒன்னுன்னு பூஜைகளை பிரிச்சி பிரிச்சி செய்யலாம். உங்களுக்கு விருப்பமிருந்தா நான் இங்கயே ஏதாவது ஒரு அறையில தங்கி அந்த பூஜைகளை செய்யறேன்” என்று சொன்னார். ரங்கப்பாவும் கெளரம்மாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். பிறகு இருவரும் ஒரே குரலில் “நல்லது நடக்கும்ன்னா, தாராளமா செய்யலாம் சாமி” என்றனர்.
சதானந்தனுக்கும் கெம்பம்மாவுக்கும் அதில் நம்பிக்கை இல்லை. அவர்கள் இருவரும் ஒருவித இயலாமையோடு ஒருவரையொருவர் பார்த்தபடி அமைதியில் மூழ்கியிருந்தனர். அவர்களால் எதையும் வெளிப்படையாகச் சொல்ல இயலவில்லை. குருசாமி தன்னைப் பார்த்த பார்வையை நினைத்தாலே கெம்பம்மாவுக்கு குமட்டிக்கொண்டு வருவதுபோல இருந்தது. ஆனால் வெளிப்படையாக அதைப்பற்றி யாரிடமும் பேச அவளால் முடியவில்லை.
வீட்டுக்குள்ளேயே குருசாமிக்காக ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்தார் ரங்கப்பா. அவருக்கு உதவியாக ஒரு ஆளையும் நியமித்தார். வேளாவேளைக்கு அவருக்குத் தேவையான உணவு அவருடைய அறைக்கே அனுப்பப்பட்டது.
ஒருநாள் குருசாமி கெளரம்மாவை அழைத்து “இன்னிக்கு ராத்திரி ரெண்டாம் ஜாமம் தொடங்கற நேரத்துல பூஜையை வச்சிக்கலாம். சடங்குக்கு ஒரு சீப்பு வாழைப்பழம், ஒரு கை பாதாம் பருப்பு, வெத்திலை, பாக்கு எல்லாம் வேணும். பூஜை அறைக்கு கெம்பம்மா மட்டும் வந்தா போதும். சாமி முன்னால நிக்க வச்சி சில சடங்கு செய்யணும். அதுக்குப் பிறகு நான் கொடுக்கிற பிரசாதத்தை, தனியான இடத்துல உக்கார்ந்து முழுசா சாப்புடணும். யார் கண்ணுலயும் படாம அதைச் செய்யணும்” என்று சொன்னார். ”ஆகட்டும் சாமி” என்று ஒப்புக்கொண்டாள் கெளரம்மா.
இரவு உணவுக்குப் பிறகு குருசாமி குறிப்பிட்ட எல்லாப் பொருட்களையும் கெளரம்மாவே எடுத்துச் சென்று பூஜை அறையில் வைத்துவிட்டுத் திரும்பிவிட்டாள். இரண்டாம் ஜாமம் தொடங்கும் நேரத்தில் குருசாமியின் அறைக்குச் செல்லுமாறு கெம்பம்மாவிடம் தெரியப்படுத்திவிட்டு ஓய்வெடுப்பதற்காக தன் அறைக்குச் சென்றாள்.
கெளரம்மா பூஜைப் பொருட்களை வைத்துவிட்டுச் சென்றதுமே, பூஜை அறைக்குச் சென்றார் குருசாமி. தன்னுடைய மந்திர ஆற்றலைப் பயன்படுத்தி, அந்தப் பொருட்களுக்கு ஒரு வசிய சக்தியை ஊட்டினார்.
பூஜையை முடித்துக்கொண்டதும் அவற்றைத்தான் பிரசாதமாக அவர் கெம்பம்மாவுக்குக் கொடுக்கத் தீர்மானித்திருந்தார். அவள் தன் அறைக்கு அதை எடுத்துச் சென்று உண்டதும், அவளுக்குள் அவர் மீது ஒரு ஈர்ப்புசக்தி தானாகவே எழும். அதைத் தடுக்கமுடியாமல் அவள் தானாகவே அவருடைய அறையை நோக்கி வந்துவிடுவாள். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு தன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்லலாம் என்பதுதான் குருசாமியின் திட்டம்.
இரண்டாம் ஜாமம் தொடங்கும் நேரம் வந்தது. மாமியார் சொன்னபடி கெம்பம்மா அந்தக் குருசாமியின் அறைக்குச் சென்றாள். குத்துவிளக்கின் முன்னிலையில் அவளை உட்காரவைத்துவிட்டு ஏராளமான மந்திரப்பாடல்களைப் பாடி பூஜை செய்தார் குருசாமி. பிறகு தட்டில் கற்பூரம் ஏற்றி விளக்குக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த சிவபெருமானின் படத்துக்குப் படைத்தார். விளக்கின் முன்னால் விழுந்து வணங்கிய கெம்பம்மா கற்பூர தீபத்தைத் தொட்டு கன்னத்தில் போட்டுக்கொண்டாள். தட்டிலிருந்த குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டாள்.
பூஜை முடிந்த பிறகு குருசாமி இரண்டு வாழைபழங்களையும் ஒரு பிடி பாதாம்பருப்புகளையும் வெற்றிலைபக்கையும் அவளிடம் கொடுத்தார். பிறகு “யாருடைய பார்வையிலயும் படாம, மிச்சம் வைக்காம எல்லாத்தயும் சாப்புட்டுட்டுதான் படுக்கணும். மறக்கக்கூடாது” என்று குறிப்பிட்டார். கெம்பம்மாவும் தலைவணங்கி அதைப் பெற்றுக்கொண்டு திரும்பி நடந்தாள்.
பூஜை அறையை அடைத்துவிட்டு, தன் அறைக்குத் திரும்பிய குருசாமி அறையில் எரிந்துகொண்டிருந்த விளக்கை அணைத்துவிட்டு இருட்டில் கெம்பம்மாவின் வருகைக்காகக் காத்திருக்கத் தொடங்கினார். வெளியே ஒரு சின்ன சத்தம் கேட்டால் கூட அவள் வந்துவிட்டாளோ, அவள் வந்துவிட்டாளோ என நினைத்து எட்டி எட்டிப் பார்த்தார்.
தன் அறைக்குத் திரும்பாமல் தனிமையை நாடி சமையலறைக்குச் சென்று கதவை மூடிக்கொண்டாள். பிறகு அறையின் பின்கதவைத் திறந்துகொண்டு அருகிலிருந்த தொழுவத்துக்குச் சென்று, அங்கே கட்டப்பட்டிருந்த ஒரு எருமையின் முன்னால் பிரசாதத்தை வீசிவிட்டுத் திரும்பினாள். பிறகு சமையல்கட்டிலேயே இருந்த பழங்களை எடுத்துத் தின்றுவிட்டு தண்ணீர் அருந்தினாள். பிறகு முந்தானையால் வாயைத் துடைத்தபடி தன் அறைக்கு வந்து சதானந்தனோடு கதை பேசிவிட்டு உறக்கத்தில் மூழ்கினாள்.
கெம்பம்மா வீசிய பிரசாதத்தை எருமை குனிந்து சாப்பிட்டது. அடுத்து சில நிமிடங்களிலேயே பழங்கள் வழியாக வெளிப்பட்ட மந்திர சக்தியின் காரணமாக முளைக்குச்சியில் கட்டப்பட்டிருந்த கயிற்றை அறுத்துக்கொண்டு தொழுவத்தை விட்டு வெளியே வந்தது. தன்னை மானசிகமாக ஈர்க்கும் புள்ளியை நோக்கி அடிவைத்து நடந்தது. அது நடந்துவரும் ஓசையைக் கேட்ட குருசாமி, அது கெம்பம்மாவின் காலடி ஓசை என நினைத்து ஆசையோடு கதவைத் திறந்தார். அவருக்கு முன்னால் எருமை நின்றிருப்பதையும் கதவை முட்டித் தள்ளிக்கொண்டு அது அறைக்குள் வரத் துடிப்பதையும் பார்த்து திகைத்து மனமுடைந்தார். வேகவேகமாக தன் சக்தியைப் பயன்படுத்தி கதவை அழுத்தி மூடிக்கொண்டார். அன்று இரவு முழுக்க அவர் உறங்கவில்லை. மனமுடைந்த நிலையில் எதைஎதையோ யோசித்தபடி அன்றையை இரவைக் கழித்தார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகும், கெம்பம்மாவின் மீது அவர் மனம் கொண்டிருந்த ஈர்ப்பு கொஞ்சம் கூட குறையவில்லை. அது கூடுதலாக வளர்ந்து அவரைப் பாடாய்ப்படுத்தியது. அதனால் அவர் வேறொரு திட்டம் போட்டார்.
ஒரு வாரம் கழித்து கெளரம்மாவை அழைத்தார். “பூஜை வரிசையில மூனாம் ஜாமப் பூஜை ஒன்னு இருக்குது. இன்னும் ரெண்டு நாள்ல அதுக்குப் பொருத்தமான நேரம் வருது. போன முறை செஞ்சமாதிரியே பூஜைக்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்யுங்க” என்று சொன்னார். “அப்படியே ஆகட்டும் ஐயா” என்று ஒப்புக்கொண்டாள் கெளரம்மா.
மூனாம் ஜாம பூஜைக்குரிய நாள் வந்தது. பூஜை அறையில் வைக்கவேண்டிய எல்லாப் பொருட்களையும் கொண்டுவந்து வைத்துவிட்டுச் சென்றாள் கெளரம்மா. அவற்றை குத்துவிளக்கு முன்னால் வைத்து பூஜை செய்தார் குருசாமி. தன்னுடைய மந்திர ஆற்றலைப் பயன்படுத்தி, அந்த வாழைப்பழம், பாதாம்பருப்பு, வெற்றிலை பாக்கு எல்லாவற்றுக்கும் ஒரு வசிய சக்தியை ஊட்டினார். பூஜையை முடித்துக்கொண்டதும் அவற்றையெல்லாம் பிரசாதமாக அவர் கெம்பம்மாவிடம் கொடுத்தார். அவளும் பயபக்தியோடு அதை வாங்கிக்கொண்டாள். “யாரு பார்வையிலும் படாம, எதையும் மிச்சம் வைக்காம சாப்புடணும்” என்று குறிப்பிட்டார். கெம்பம்மாவும் தலைவணங்கி அவற்றைப் பெற்றுக்கொண்டு திரும்பி நடந்தாள்.
சமையலறைக்குச் சென்ற கெம்பம்மா பின்கதவு வழியாக தொழுவத்துக்குச் சென்று, அங்கே கட்டப்பட்டிருந்த ஒரு ஆட்டின் முன்னால் வீசிவிட்டு அறைக்குச் சென்றுவிட்டாள். பிரசாதங்களைத் தின்ற ஆடு சிறிது நேரத்திலேயே விசைகொண்டு கட்டை அறுத்துக்கொண்டு குருசாமி தங்கியிருந்த அறையின் கதவை முட்டியது. கெம்பம்மா வந்துவிட்டாள் என நினைத்து ஆசையோடு கதவைத் திறந்த குருசாமி ஏமாற்றமடைந்தார். அந்த ஆட்டை வெளியே விரட்டித் தள்ள அவர் படாத பாடுபட்டார். அன்று இரவு முழுக்க அவர் உறங்கவே இல்லை.
ஒரு வாரம் கழித்து கெளரம்மாவை மீண்டும் அழைத்தார். “பூஜை வரிசையில நாலாம் ஜாமப் பூஜை ஒன்னு இன்னும் பாக்கி இருக்குது. இன்னும் ரெண்டு நாள்ல அதுக்குப் பொருத்தமான நேரம் வருது. போன முறை செஞ்சமாதிரியே பூஜைக்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்யுங்க” என்று சொன்னார். “அப்படியே ஆகட்டும் ஐயா” என்று ஒப்புக்கொண்டாள் கெளரம்மா. வழக்கம்போல குருசாமி கேட்ட பொருட்களையெல்லாம் கொண்டுவந்து வைத்துவிட்டு தன் அறைக்குச் சென்றுவிட்டாள் அவள்.
பூஜை முடிந்ததும் வழக்கம்போல பிரசாதங்களையெல்லாம் கெம்பம்மாவிடம் கொடுத்தார் குருசாமி. தலைவணங்கி அவற்றைப் பெற்றுக்கொண்டு தனிமையை நாடி சமையலறைக்குள் சென்ற கெம்பம்மா தொழுவத்துக்கு அருகில் நின்றிருந்த குதிரைக்கு முன்னால் எல்லாவற்றையும் வீசிவிட்டுச் சென்றாள். அவற்றைத் தின்ற குதிரை முளைக்குச்சியில் கட்டப்பட்டிருந்த கயிற்றை அறுத்துக்கொண்டு வெளியே சென்று குருசாமி தங்கியிருந்த அறையின் கதவை முட்டியது. கெம்பம்மா வந்துவிட்டாள் என நினைத்து ஆசையோடு கதவைத் திறந்த குருசாமி ஏமாற்றமடைந்தார். அந்தக் குதிரையை மிகுந்த சிரமத்துடன் வெளியே விரட்டியடித்தார்.
ஒரு வாரம் கழித்து கெளரம்மாவை அழைத்தார் குருசாமி. “வீட்டுக்குள்ள செய்யவேண்டிய பூஜைகள் எல்லாம் முடிஞ்சதும்மா. இன்னும் ஒரே ஒரு பூஜை மட்டும் பாக்கியிருக்குது. ஆனா அதை வீட்டுல வச்சி செய்யமுடியாது. ஆற்றங்கரை ஓரத்துலதான் செய்யணும். பூஜை நேரத்துல கெம்பம்மா இருக்கணும். அதே நேரத்துல பூஜையை கண்ணால பாக்கவும் கூடாது. அதனால, கெம்பம்மாவை ஒரு பெரிய பெட்டிக்குள்ள வச்சி ஆற்றங்கரை வரைக்கும் யாராவது நாலு பேரு கொண்டுவந்து வச்சா போதும். பூஜையை சிறப்பா செஞ்சிடலாம். எல்லாம் முடிஞ்சதும் ஆளுங்க பொட்டியை வீட்டுக்கு எடுத்துட்டு திரும்பிடலாம்” என்றார். “அப்படியே ஆகட்டும் சாமி” என்று ஒப்புக்கொண்டாள் கெளரம்மா.
குறிப்பிட்ட நாளில் கெம்பம்மாவை ஒரு பெட்டிக்குள் வைத்து மூடினர். அப்பெட்டியை பூஜை அறையில் வைத்து பொழுது சாயும் நேரம் வரைக்கும் பூஜை செய்தார் குருசாமி. பிறகு ஆட்கள் அப்பெட்டியைச் சுமந்துகொண்டார்கள். ”கவலைப்படாதே கெளரம்மா. எல்லாம் நல்லதாவே நடக்கும்” என்று சொல்லிவிட்டு விடைபெற்றார் குருசாமி. அனைவரும் ஆற்றங்கரை நோக்கி நடந்தார்கள்.
ஆற்றங்கரையை அடைந்ததும் வேலைக்காரர்கள் பெட்டியை இறக்கிவைத்தார்கள். குருசாமி அவர்களிடம் “இந்த பூஜையை தனிமையிலதான் செய்யணும். அது முடிய நாலஞ்சி மணி நேரம் ஆவும். நீங்க இங்க நிக்கவேணாம். வீட்டுக்கு போயிட்டு அப்புறமா திரும்பி வாங்க” என்று சொல்லி அனுப்பிவைத்தார்.
அவர்கள் எல்லோரும் சென்றதும் குருசாமி பெட்டியை ஏக்கத்துடன் பார்த்தார். கெம்பம்மாவின் அழகு அவர் கண் முன்னால் நிறைந்திருந்தது. இருள் கவிவதற்காக அவர் காத்திருந்தார். ஆனால் அவரால் பெட்டிக்கு அருகில் நிற்கவும் முடியவில்லை. அதனால் சிறிது தொலைவு நடந்துவிட்டு வரலாம் என காட்டுப்பாதையில் நடக்கத் தொடங்கினார்.
பேச்சுச்சத்தம் எதுவும் கேட்காததால், பெட்டிக்குள் இருந்த கெம்பம்மாவுக்கு பயம் ஏற்பட்டது. அதனால் உள்ளிருந்தபடியே பெட்டியைத் தட்டி “யாராச்சிம் இருக்கீங்களா? யாராச்சிம் இருக்கீங்களா?” என்று சத்தம் எழுப்பினாள்.
அந்த ஆற்றங்கரைக்கு அருகில்தான் பாட்டியின் குடிசை இருந்தது. சமையல் செய்வதற்குத் தேவையான தண்ணீரை எடுத்துச் செல்ல ஆற்றங்கரைக்கு வந்த பாட்டி, கரையோரமாக இருந்த பெட்டியை விசித்திரமாகப் பார்த்தாள். பெட்டியிலிருந்து சத்தம் வந்ததும் அவளுக்கு ஏதோ சந்தேகம் வந்தது. உடனே பெட்டிக்கு அருகில் சென்று தாழ்ப்பாளின் குறுக்கில் இருந்த கட்டையை விலக்கி பெட்டியைத் திறந்தாள். பெட்டிக்குள் முடங்கியிருந்த கெம்பம்மாவைப் பார்த்து “ஐயோ, கெம்பம்மா, என்னடி இது கோலம்? நீ எப்படிடி இதுக்குள்ள வந்த?” என்று திகைத்து அழுதாள். “பாட்டி, நல்ல வேளை, தெய்வம் மாதிரி வந்து நீ என்னை காப்பாத்திட்ட” என்று சொன்ன கெம்பம்மா தன் பாட்டியைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள்.
குருசாமி செய்த பூஜைகளைப்பற்றிய கதையை சுருக்கமாக பாட்டியிடம் சொன்னாள் கெம்பம்மா. “அந்த குருசாமி இங்கதான் எங்கயாச்சும் பக்கத்துல இருப்பான். வா பாட்டி, போயிடலாம்” என்று அவசரப்படுத்தினாள்.
“இருடி. இரு. இவ்ளோ அநியாயம் செஞ்சிருக்கான் அந்தப் பாவி. அவனை சும்மா விடக்கூடாது. அவன் எவ்வளவு பெரிய சதிகாரன்னு உலகத்துக்கு தெரியணும்” என்று சொன்னாள் பாட்டி.
“என்ன செய்யப் போற பாட்டி? நாம என்ன சொன்னாலும் நம்ம பேச்சு எடுபடாது பாட்டி. சாமியாரு பேச்சுதான் எடுபடும்”
“இரு.இரு. நான் என்ன செய்யப் போறேங்கறத மட்டும் வேடிக்கை பாரு. அவனுக்கு மட்டும்தான் சதி செய்யத் தெரியுமா? மத்தவங்களுக்குத் தெரியாதா?”
சொல்லிக்கொண்டே பாட்டி கரையோரமாக திரிந்துகொண்டிருந்த மூன்று நாய்களை அழைத்தாள். உடனே அவை ஓடி வந்தன. வேகமாக குடிசைக்குள் சென்று ஒரு தட்டு நிறைய சோற்றைப் போட்டு மீன்குழம்பை ஊற்றிப் பிசைந்து எடுத்துவந்து பெட்டிக்குள் வைத்தாள்.
அடுத்த கணமே மீன் குழம்பு மணத்தில் மயங்கி மூன்று நாய்களும் பெட்டிக்குள் இறங்கின. அவை ஆசையாக சோற்றைத் தின்னத் தொடங்கியதும் பெட்டியை மூடினாள் பாட்டி. தாழ்ப்பாளில் கட்டையைச் செருகினாள். “வாடி கெம்பம்மா, குடிசைக்கு போயிடலாம். அங்கேருந்து என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்” என்றாள்.
இருள் கவிந்ததும் குருசாமி திரும்பி வந்தார். காட்டிலிருந்து அவர் மாம்பழங்களைக் கொண்டு வந்திருந்தார். அவற்றை பெட்டியின் மீது வைத்துவிட்டு சிறிது நேரம் மந்திரங்களை உச்சரித்தபடி பூஜை செய்தார். பூஜையை முடித்ததும் அக்கம்பக்கம் திரும்பி யாருமில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு ஏக்கத்துடன் பெட்டியை மெதுவாகத் திறந்தார்.
மந்திரத்தின் சக்தியால் விசையூட்டப்பட்ட மூன்று நாய்களும் பெட்டியிலிருந்து வெளியே வந்தன. கெம்பம்மா காணாமல் போனது எப்படி என்று நினைத்து குழம்பிய குருசாமி திகைத்திருக்கும் சமயத்தில் மூன்று நாய்களும் அவர் மீது பாய்ந்து பிறாண்டத் தொடங்கின. அந்தத் திடீர் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் அவற்றைத் தள்ளிவிட முயற்சி செய்தபடி ஓடத் தொடங்கினார். ஆனால் நாய்கள் அவற்றை விடவில்லை. அவர் ஓட ஓட நாய்களும் அவருக்குப் பின்னால் ஓடின.
அந்தச் சமயத்தில் பெட்டியை எடுத்துச் செல்ல ஆற்றங்கரைக்குத் திரும்பிவந்த வேலைக்காரர்கள் அக்காட்சியைப் பார்த்து வாயடைத்து நின்றார்கள். அவர்களுக்கு எதுவும் புரியவில்லை. “சின்னம்மாவுக்கு என்ன ஆச்சோ, வாடா பார்க்கலாம்” என்று கரையை நோக்கி ஓடினார்கள். கரையில் பெட்டி திறந்து கிடப்பதைப் பார்த்துவிட்டு திகைத்தார்கள்.
எல்லாவற்றையும் குடிசைக்குள் உட்கார்ந்தபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கெம்பம்மாவும் பாட்டியும் வெளியே வந்து வேலைக்காரர்களை அழைத்தார்கள். கெம்பம்மாவை உயிருடன் பார்த்த பிறகுதான் வேலைக்காரர்களுடைய பதற்றம் தணிந்தது.
நடந்த கதையையெல்லாம் பாட்டி அவர்களுக்குச் சொன்னாள். “அவ்ளோ பெரிய அயோக்கியனா அந்தக் குருசாமி? அடப் பாவி. யாருமே அதை கண்டுபுடிக்கலையே” என்று சொல்லி மலைத்தார்கள் அவர்கள்.
அந்த இருட்டிலேயே அவர்கள் அனைவரும் பண்ணையார் வீட்டை நோக்கி நடந்தார்கள். எல்லோரும் ஆளுக்குக் கொஞ்சமாக நடந்த கதையை அனைவருக்கும் சொன்னார்கள்.
“ஒரு குழந்தைக்கு ஆசைப்பட்டு இப்படி மோசம் போயிட்டமே. அந்தக் குருசாமி மேல எந்தத் தப்பும் கிடையாது. நம்ம மேலதான் தப்பு” என்று மனம் நொந்து அனைவரும் பேசிக்கொண்டார்கள்.
“எங்க வீட்டு மகாலட்சுமிக்கு எந்த ஆபத்தும் வரலையே. அது போதும். கடவுள் நம்ம பக்கம்தான் இருக்காரு” என்ற கெளரம்மா கெம்பம்மாவை இழுத்து அணைத்துக்கொண்டாள்.
அடுத்த ஆண்டிலேயே அந்தக் குடும்பமே மகிழ்ச்சியில் திளைக்கும் வகையில் கெம்பம்மாவுக்கும் சதானந்தனுக்கும் அழகான ஒரு பெண்குழந்தை பிறந்தது. அதன் தலைமுடியும் பொன்னிறத்தில் பளபளப்பதைப் பார்த்து எல்லோரும் ஆச்சரியத்தில் மூழ்கினார்கள். தன் அம்மாவின் நினைவாக, அக்குழந்தைக்கு சாக்கவ்வா என்று பெயர் சூட்டினாள் கெம்பம்மா.
0