Skip to content
Home » நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #14 – கருணை

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #14 – கருணை

ஒரு காலத்தில் சின்னஞ்சிறிய ராஜ்ஜியம் ஒன்றை ஓர் அரசன் நல்ல முறையில் ஆட்சி செய்துவந்தான். அவனுடைய ஆட்சியில் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் வாழ்ந்துவந்தார்கள். ஆனால் அந்த அரசனின் மனத்தில் மட்டும் மகிழ்ச்சி இல்லை. தீராத வேதனையில் மூழ்கியிருந்தான்.

அவனுக்குத் திருமணமாகி பதினைந்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனாலும் அவனுக்கு மக்கட்பேறு அமையவில்லை. எல்லாவிதமான பூஜைகளையும் செய்துவிட்டார்கள். எல்லாவிதமான பரிகாரங்களையும் செய்துவிட்டார்கள். பலனில்லை.

ஒருநாள் மாலை வேளையில் அரசனும் அரசியும் அந்த ராஜ்ஜியத்தின் எல்லையை ஒட்டி ஓடிக்கொண்டிருந்த ஆற்றங்கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய உரையாடல் தொடங்கும்போது மகிழ்ச்சியோடுதான் தொடங்கியது. ஆற்றங்கரை ஓரமாக வளர்ந்து நிற்கும் மரங்கள், நாலு திசையிலும் விரிந்துசெல்லும் அவற்றின் கிளைகள், ஒவ்வொரு கிளையிலும் ஊஞ்சல் கட்டி விளையாடி மகிழ்கிற சிறுவர்கள், வெவ்வேறு கிளைகளைப் பிடித்து தொற்றிக்கொண்டு உச்சி வரைக்கும் சென்று, அங்கிருந்து ஆற்றில் தொபீர் என்று குதித்து நீச்சலடிக்கும் சிறுவர்கள் என கண்ணுக்குத் தென்பட்ட ஒவ்வொரு காட்சியைப்பற்றியும் அவர்களுடைய உரையாடல் வளர்ந்துகொண்டே சென்றது.

சிறுவர்களைப்பற்றியதாக அவர்களுடைய உரையாடல் மாறிய கணமே, ‘காலாகாலத்தில நமக்கும் ஒரு பிள்ளை பிறந்திருந்தா, அவனும் இப்படி கிளையில ஏறி ஆட்டம் போடக்கூடிய ஆளா இன்னைக்கு வளர்ந்திருப்பான்’ என்று ஏக்கத்துடன் சொன்னாள் அரசி. ‘ஆமாம், அதுக்கு நாம என்ன செய்யமுடியும்? நமக்குத்தான் அந்தப் பாக்கியம் இல்லையே’ என்று அரசனும் சொல்லி வருத்தப்பட்டான். அதற்குப் பிறகு அவர்களுடைய உரையாடல் முழுவதும் துக்கமயமானதாக மாறிவிட்டது.

அவர்களுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு பொழுதும் இப்படித்தான் இனிமையாகத் தொடங்கி துன்பமயமானதாக மாறிக்கொண்டிருந்தது. பிள்ளை இல்லை என்னும் குறை அவர்களைப் பாடாய்ப் படுத்திக்கொண்டிருந்தது.

ஒருநாள் ஆற்றங்கரையில் அவர்கள் ஒரு சாமியாரைச் சந்தித்தனர். அவரோடு உரையாடிய நேரத்தில் அரசன் தம் மனக்குறையைத் தெரிவித்தான். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட சாமியார் ‘நடந்தது என்னவோ, நடந்ததாவே இருக்கட்டும். இப்ப நான் சொல்றபடி ஒரு வேலை செய்யுங்க. கடவுள் நிச்சயமா உங்களுக்கு கருணை காட்டுவார்’ என்றார்.

‘என்ன செய்யணும்? சொல்லுங்க. கண்டிப்பா செய்யறோம்’ என்றான் அரசன்.

‘நம்ம ராஜ்ஜியத்துடைய எல்லையில, ஒரு ஈஸ்வரன் கோவில் பாழடைஞ்சி கெடக்குது. அத பழுது பார்த்து பழையபடி நல்ல கோவிலா மாத்தணும். அது ஒரு புண்ணியமான வேலை. அதை செஞ்சீங்கன்னா, உங்க வாழ்க்கையில பல மாற்றங்கள் வரும். கடவுள் உங்க பக்கம் நிப்பாரு’ என்றார் சாமியார்.

அடுத்தநாள் காலையில் அரசனே தன் ஆட்களோடு சென்று அந்தக் கோவிலைப் பார்வையிட்டு வந்தான். தன் ராஜ்ஜியத்தின் எல்லைக்குள்ளேயே சீரழிந்து சிதைந்த நிலைமையில் ஒரு கோவில் இருக்கும் விஷயத்தை இதுவரை தெரிந்துகொள்ளாமலேயே இருந்துவிட்டோமே என நினைத்து வருத்தப்பட்டான். ஊருக்குத் திரும்பி வந்த பிறகு கோவிலைச் செப்பனிடுவது குறித்து எல்லா முக்கியஸ்தர்களோடும் உரையாடினான்.

இரு தினங்களுக்குப் பிறகு செப்பனிடும் கலையில் தேர்ச்சி பெற்ற ஆட்களின் கூட்டம் அந்த ஊருக்குச் சென்றது. அவர்கள் அங்கேயே தங்கி வேலை செய்வதற்கான ஏற்பாடுகளை அரசனே செய்துகொடுத்தான். அவ்வப்போது அரசனும் அரசியும் சென்று மேற்பார்வை பார்த்துவிட்டு வந்தனர்.

மூன்று மாதங்களிலேயே எல்லா வேலைகளும் நிறைவெய்தின. நீண்ட காலமாக பாழடைந்த தோற்றத்தோடு நின்றிருந்த ஈஸ்வரன் கோவில் புதுப்பொலிவோடு காட்சியளித்தது. ஒரு நல்ல நாளில் அரசன் குடும்பத்தோடு வந்து இறைவனை வழிபட்டுவிட்டுச் சென்றான்.

அந்த வாரத்தின் கடைசி நாளில் அரசியுடைய அறைக்கு வந்த அரசன் அவளுடைய மலர்ந்த முகத்தைப் பார்த்து வியப்படைந்தான். அவளை நெருங்கி ‘பல வருஷங்களுக்குப் பிறகு, நீ கலகலப்பா மலர்ந்த முகத்தோடு இருக்கறதை இன்னைக்குத்தான் நான் பார்க்கறேன்’ என்று மெல்ல கிசுகிசுத்தான். அரசி வெட்கத்தோடு அவனை நெருங்கிவந்து தான் கருவுற்றிருக்கும் செய்தியைத் தெரிவித்தாள். அச்செய்தியைக் கேட்டதும் அரசனுக்கு வானத்தில் பறப்பதுபோல இருந்தது. அன்றுமுதல் அவர்களுடைய உரையாடல் முழுக்கமுழுக்க குழந்தை சார்ந்ததாகவே இருந்தது.

பத்து மாதங்களுக்குப் பிறகு அரசி ஓர் ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தாள். குழந்தையின் முகம் அழகாக இருந்தது. ஆனால் அந்தக் குழந்தைக்கு கைகளும் இல்லை. கால்களும் இல்லை. வெறும் உடல்மட்டும் இருந்தது. அதைப் பார்த்த கணத்திலேயே அவர்களுடைய மகிழ்ச்சி முழுவதும் கரைந்துவிட்டது. அரசனும் அரசியும் அதிர்ச்சியில் இடிந்துபோய் உட்கார்ந்துவிட்டார்கள்.

தினசரி வேலைகளில் அவர்களுடைய உற்சாகம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது. குழந்தையைப் பராமரிக்கும் வேலைகளையெல்லாம் அங்கிருந்த வேலைக்காரர்கள் பார்த்துக்கொண்டனர். அக்குழந்தைக்குப் பால் கொடுத்தபோதும், அதை கையிலெடுத்து கொஞ்ச முடியாமல் வருந்தினாள் அரசி.

சில மாதங்களுக்குப் பிறகு அவர்களுடைய குடும்ப ஜோதிடர் அவர்களைப் பார்க்க வந்தார். ஆறு மாதங்களுக்கு முன்பு காசிக்கு யாத்திரை சென்ற அவர் அப்போதுதான் ஊருக்குத் திரும்பி வந்திருந்தார். அரசனுக்கு குழந்தை பிறந்திருக்கும் செய்தியைக் கேள்விப்பட்டதும், பார்த்துவிட்டுச் செல்வதற்காக வந்தார்.

‘குழந்தை பிறந்த தேதி, நேரம் எல்லாம் குறிச்சி வச்சிருக்கீங்க இல்லையா? அதைக் கொண்டு வாங்க. கிரகநிலை எப்படி இருக்குதுன்னு பார்த்து சொல்றேன்’ என்று அரசனிடம் சொன்னார்.

அரசன் ஒரு பெருமூச்சு விட்டபடி அவரைப் பார்த்து ‘முதல்ல உள்ள போய் குழந்தையைப் பார்த்துட்டு வாங்க. அதுக்கப்புறம் ஜாதகம் எழுதறத பத்தி பேசலாம்’ என்று சொன்னான். ஜோதிடரும் ஆவலோடு குழந்தை கிடத்தப்பட்டிருக்கும் தொட்டிலுக்கு அருகில் சென்றார்.

குழந்தையின் மீது ஒரு துணி போர்த்தப்பட்டிருந்தது. குழந்தை கண்களை உருட்டி உருட்டி பார்த்தபடி படுத்திருந்தது. ‘என்னடா, புதுசா ஒரு தாத்தா வந்திருக்காரே, யாருன்னு யோசிக்கிறியா?’ என்று புன்னகைத்தபடியே குழந்தை மீது போர்த்தப்பட்டிருந்த துணியை எடுத்தார். அக்கணமே அவருடைய கை அப்படியே உறைந்துவிட்டது. கைகளும் கால்களும் இல்லாமல் ஒரு பொம்மையைப்போல இருக்கும் குழந்தையைப் பார்த்து அவர் முகம் சுருங்கினார்.

எதுவும் பேசாமல் தன்னுடைய இருக்கைக்குத் திரும்பி வந்து உட்கார்ந்தார் ஜோதிடர். அரசனிடமும் அரசியிடமும் எப்படி பேச்சைத் தொடங்குவது என்பது புரியாமல் பெருமூச்சு வாங்கியபடி இருந்தார். இறுதியாக, எப்படியோ துணிச்சலை வரவழைத்துக்கொண்டு ‘நான் சொல்றதை கொஞ்ச நேரம் நீங்க ரெண்டு பேரும் காது கொடுத்துக் கேக்கணும். அந்தக் குழந்தையுடைய பிறப்பு, வரப்போற ஏதோ ஒரு தீமையைச் சுட்டிக்காட்டக்கூடிய அடையாளமா தோணுது. அது நல்ல சகுனத்துல பொறக்கலை. அந்தக் குழந்தையை நீங்க வீட்டுல வச்சிக்கக்கூடாது. அது அழிவைத்தான் கொண்டுவரும். நீங்க உடனடியா அந்தக் குழந்தையை இங்கேர்ந்து எடுத்துட்டு போய் வேற எங்காவது கண்காணாத இடத்துல விட்டுட்டு வாங்க’ என்றார்.

‘நம்ம ராஜ்ஜியத்துக்குள்ள எங்க விட்டாலும் இது ராஜாவுடைய குழந்தைன்னு எல்லோருக்குமே தெரிஞ்சிடும். எதையும் மறைக்கமுடியாது. கண்காணாத இடம்னு ஒன்னு இங்க எங்க இருக்குது?’ என்று சங்கடத்துடன் கேட்டான் அரசன்.

‘நம்ம ராஜ்ஜியத்துக்குள்ள விடணும்னு நான் சொல்லலையே. அடுத்த ராஜ்ஜியம், அதுக்கடுத்த ராஜ்ஜியம்னு எங்காவது போய் விட்டுட்டு வரணும். இங்கயே வச்சிருந்தா எல்லோருக்கும் கேடுதான்.’

அரசனுக்கும் அரசிக்கும் ஜோதிடரின் சொல்லுக்குக் கட்டுப்படுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. ஒருநாள் அதிகாலையில் கனத்த இதயத்துடன் குழந்தையை ஒரு கூடையில் வைத்து நம்பிக்கையான இரண்டு வேலைக்காரர்களிடம் ஒப்படைத்து வெகுதொலைவுக்கு அப்பால் எங்காவது கண்காணாத இடத்தில் வைத்துவிட்டு வருமாறு சொல்லி அனுப்பினார்கள்.

வேலைக்காரர்கள் ஆறுநாட்கள் தொடர்ச்சியாக நடந்து ஏழாம் நாள் காலையில் முதலில் தென்பட்ட ஊரில் ஒரு தோப்பை ஒட்டி இருந்த புதரில் வைத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்து வந்துவிட்டனர்.

வேலைக்காரர்கள் ஊருக்குத் திரும்பிவந்தபோது அந்த ஊரின் நிலைமையே மாறிவிட்டிருந்தது. அவர்கள் ஊரைவிட்டுப் புறப்பட்ட அன்று பக்கத்து ராஜ்ஜியத்தைச் சேர்ந்த அரசன் படைவீரர்களோடு வந்து அந்த ஊரை முற்றுகையிட்டு சண்டை போட்டான். அந்த மோதலில் அரசன் தோற்றுவிட்டான். எதிரிகளிடம் அகப்படக்கூடாது என நினைத்து அரசனும் அரசியும் யாருக்கும் தெரியாமல் அந்த ஊரைவிட்டு எங்கோ தப்பித்துச் சென்றுவிட்டனர். ஒரே நாளில் அரசனின் குடும்பம் சின்னாபின்னமாகி சிதறிவிட்டது.

வேலைக்காரர்கள் புதரருகில் கூடையை வைத்துவிட்டு புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் அந்தப் பக்கமாக அந்த ஊரை சேர்ந்த வயது முதிர்ந்த ஒரு பாட்டி வந்தாள். வீடுகளிலும் கடைத்தெருக்களிலும் கையேந்தி பிச்சையெடுத்து வாழ்க்கையை நடத்துபவள் அவள். அங்கிருந்த குளத்தில் இறங்கி குளித்துவிட்டு உடைமாற்றிக்கொண்டு புறப்படவிருந்த நேரத்தில் ஒரு குழந்தையின் அழுகுரலைக் கேட்டு ஒருகணம் திகைத்து நின்றாள். இந்த வனாந்திரத்தில் எந்தப் பக்கத்திலிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்கிறது என்பதை அவளால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. கண்ணுக்கு எட்டிய தொலைவு வரைக்கும் நடமாட்டமே இல்லை. ஆனால் அழுகுரல் சத்தம் மட்டும் தொடர்ந்து கேட்டபடி இருந்தது.

அழுகுரல் சத்தம் வந்த திசையை சிறிது நேரம் ஆழ்ந்து கவனித்து, அது எந்தப் பக்கத்திலிருந்து வருகிறது என்பதை முதலில் உறுதிப்படுத்திக்கொண்டாள் அவள். பிறகு அடிமேல் அடிவைத்து அக்கம் பக்கம் பார்வையை படரவிட்டபடி நடந்தாள். சிறிது தொலைவில் புதர் மறைவில் ஒரு பெரிய கூடை இருப்பதை அவள் பார்த்துவிட்டாள். வேகமாக நடந்து அந்தக் கூடைக்கு அருகில் சென்றாள். அதற்குள் அழுதுகொண்டிருந்த குழந்தையைப் பார்த்தாள்.

அவள் நெஞ்சில் அழுகுரலுக்குரிய குழந்தையைக் கண்டுபிடித்த திருப்தியைவிட, குழந்தையைக் கண்டதால் ஏற்பட்ட அதிர்ச்சிதான் அதிகமாக நிறைந்திருந்தது. கைகளும் கால்களும் இல்லாத குழந்தையின் தோற்றம்தான் அவளுடைய திகைப்புக்கு முதல் காரணம். இப்படி ஒரு பிறவி இந்த உலகத்தில் இருக்கக்கூடும் என்பதையே அவளால் நம்பமுடியவ்வில்லை. ஒருவேளை கைகால்கள் வெட்டப்பட்டிருக்குமோ என்ற ஐயத்தால், குனிந்து தொட்டுப் பார்த்தாள். அதற்குப் பிறகுதான் இயற்கையிலேயே அக்குழந்தைக்கு கைகால்கள் இல்லை என்பதை அவள் புரிந்துகொண்டாள்.

குனிந்து கூடையிலிருந்த குழந்தையை எடுத்தாள். அப்போதுதான் குழந்தைக்கு அருகிலேயே கிடந்த ஒரு துணிமுடிச்சை அவள் பார்த்தாள். அவசரமாக அதை எடுத்துப் பிரித்துப் பார்த்தாள். ஏராளமான வெள்ளி நாணயங்களும் தங்க நாணயங்களும் அதில் இருந்தன. அவற்றைப் பார்த்ததும் அவள் கண்கள் மலர்ந்தன. அவசரமாக அந்த முடிச்சை தன் இடுப்பில் செருகிக்கொண்டு குழந்தையோடு தன் குடிசைக்குத் திரும்பினாள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் தோப்புக்கருகில் குழந்தையைக் கண்டெடுத்ததாகத் தெரிவித்து, அதன் பசியை ஆற்ற பால் வேண்டும் என கேட்டு வாங்கிவந்து குழந்தைக்குக் கொடுத்தாள்.

தொடக்கத்தில் கூடைக்குள் பார்த்த குழந்தையை அவள் தன்னோடு எடுத்துச் செல்ல இரு காரணங்கள் இருந்தன. அந்தக் கூடைக்குள்ளேயே வைக்கப்பட்டிருந்த வெள்ளி நாணயங்கள் ஒரு காரணம். பிச்சை எடுக்கச் செல்லும்போது தன்னோடு கைகால்கள் இல்லாத குழந்தையையும் சேர்த்து எடுத்துக்கொண்டு சென்றால், தனக்கு இன்னும் கொஞ்சம் கூடுதலான கவனமும் பிச்சையும் கிடைக்கும் என்பது இரண்டாவது காரணம்.

குழந்தையை வீட்டுக்கு எடுத்துச் சென்று கொஞ்சத் தொடங்கியதும் பிச்சைக்காரியின் மனத்தில் அந்த எண்ணங்கள் அனைத்தும் மறைந்துவிட்டன. அசலான குழந்தைப்பாசம் அவளை ஆட்கொண்டது. அந்தக் குழந்தையை தன் கண்ணைப்போல பாதுகாப்பாக வளர்த்துவந்தாள். பாசத்தோடு அந்தக் குழந்தைக்கு மஞ்சப்பா என்று பெயரைச் சூட்டினாள்.

ஒவ்வொரு நிமிடமும் மஞ்சப்பா, மஞ்சப்பா என்று அழைத்து அந்தக் குழந்தையைக் கொஞ்சினாள் பாட்டி. அந்தக் குழந்தையும் அவளோடு நல்ல ஒட்டுதலோடு வளர்ந்தது. பிற பிள்ளைகளைப்போல அவன் கைவீசி விளையாடவோ, தத்தித்தத்தி நடைபோடவோ முடியாதவனாக இருந்தான் என்பது மட்டுமே ஒரு குறையாக இருந்தது. ஆயினும் அந்தக் குறை அவனுடைய மனத்தில் தேங்கிவிடாதபடி அந்தப் பாட்டி அவனைக் கவனித்துக்கொண்டாள்.

பதினாறு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஒவ்வொரு நாளும் காலையில் புறப்பட்டுச் சென்று மாலையில் குடிசைக்குத் திரும்புகிற பாட்டி, உலகத்தில் அன்றன்று கண்ட, கேட்ட கதைகளையெல்லாம் மஞ்சப்பாவிடம் அன்றன்றே சொல்லிப் பகிர்ந்துகொள்வதால், வெளியுலகத்தைப் பார்க்கவில்லை என்கிற குறையே அவன் மனத்தில் எழவில்லை. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவன் வளர்ந்துவந்தான். குடிசைக்குள் பகல் முழுக்க அவன் எப்போதும் தனியாக இருக்கவேண்டியிருந்தது. ஆனாலும் தன் பகல்கனவுகள் வழியாக அவன் அந்தத் தனிமையைப் போக்கிக்கொண்டான்.

ஒருநாள் அவள் வசித்துவந்த ஊரில் ஏதோ ஒரு திருவிழா நடைபெற்றது. அதையொட்டி ஊர்க்காரர்கள் ஒரு யட்சகான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். நாடெங்கும் புகழ்பெற்று விளங்கிய ஒரு குழு தசாவதாரம் நிகழ்ச்சியை நிகழ்த்துவதற்காக அந்த ஊரில் வந்து இறங்கியிருந்தது.

பாட்டி யட்சகானம் பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவள். பிச்சை எடுக்கச் செல்லும் இடங்களில் பல சமயங்களில் அவள் சில யட்சகானப் பாடல்களை மனப்பாடமாகவே பாடிக் காட்டுவதுண்டு. தான் வசிக்கும் ஊரிலேயே யட்சகான நிகழ்ச்சி நடைபெறப் போகிறது என்னும் செய்தியை அறிந்த கணத்திலிருந்து, எப்படியாவது அந்த நிகழ்ச்சியை நேரில் பார்க்கவேண்டும் என முடிவு செய்தாள்.

பகல்முழுதும் தனிமையில் இருக்கும் மஞ்சப்பா இரவிலும் தனிமையில் இருப்பதற்குத் தயங்கினான். அதனால் மெதுவாக பாட்டியைப் பார்த்து, ‘யட்சகானத்துக்குப் போகவேணாம் பாட்டி. அங்க தாளம் அடிக்கிற சத்தமும் பாட்டு பாடற சத்தமும் இங்க குடிசைக்குள்ளயே கேக்குதே. அதை கேட்டா போதாதா? போகவேணாம் பாட்டி. எனக்கு ரொம்ப பயமா இருக்குது’ என்று கெஞ்சினான். ஆனால் அபூர்வமாக கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பை நழுவவிட பாட்டிக்கு மனம் வரவில்லை.

‘நான் முழுசா பார்க்கமாட்டேன்டா. ஒரு ரெண்டு மணி நேரம் மட்டும்தான் அங்க இருப்பேன். அதுக்கப்புறம் ஓட்டமா ஓடிவந்துடுவேன். போதுமா?’ என்று சிரித்துக்கொண்டே சொன்னாள் பாட்டி. வேறு வழியில்லாமல் அவள் புறப்படும் போது ‘சரி, சீக்கிரமா வந்து சேரு. நல்லா இருக்குதுன்னு ஒரேடியா உக்காந்துடாதே’ என்று சொன்னான்.

யட்சகானத்துக்குப் புறப்படுகிற சமயத்தில் பாட்டிக்கு திடீரென வேறொரு யோசனை வந்தது. ‘உன்னை தனியா விட்டுட்டு போக எனக்கும் மனசு கேக்கமாட்டுது மஞ்சப்பா’ என்று தயங்கினாள். சுவரோரமாக கவிழ்த்துவைத்திருந்த ஒரு கூடையை எடுத்துவந்து, அதற்குள் மஞ்சப்பாவைத் தூக்கி உட்காரவைத்து, கூடையைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டாள். மஞ்சப்பாவுக்கு ஒரே சந்தோஷம். பிறகு இருவரும் உரையாடிக்கொண்டே யட்சகானம் பார்க்கச் சென்றார்கள்.

இருவரும் சேர்ந்து இரண்டு மணி நேரம் யட்சகான நிகழ்ச்சியைப் பார்த்தார்கள். இருவருக்கும் ஒரே ஆனந்தம். ‘எனக்கும் கால் இருந்தா, நானும் இதே மாதிரி ஆடுவன் பாட்டி’ என்றான் மஞ்சப்பா. அவனுடைய ஆசையைக் கேட்டு பாட்டி உற்சாகம் கொண்டாள். ‘கவலைப்படாதடா. அந்த சிவபெருமானுக்கு கண்ணுன்னு ஒன்னு இருந்தா, அவன் ஒனக்கு கண்டிப்பா காலைக் கொடுப்பான். நீயும் அந்த நடராஜர் மாதிரி நல்லா ஆடுவ. நான் அதை பார்க்கத்தான் போறேன்’ என்று உணர்ச்சிவசப்பட்ட குரலில் சொன்னாள்.

இரண்டுமூன்று பாத்திரங்கள் மேடையில் அறிமுகமாகி ஆடி முடிக்கிற வரைக்கும் யட்சகான நிகழ்ச்சியைப் பார்த்த பாட்டிக்கு தூக்கக்கலக்கத்தில் தலை சுற்றியது. மஞ்சப்பாவும் தூங்கித்தூங்கி விழுந்துகொண்டிருந்தான். அதற்கு மேல் மேடைக்கருகில் உட்கார்ந்திருக்கவேண்டாம் என நினைத்த பாட்டி, அவன் அமர்ந்திருந்த கூடையைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு குடிசையை நோக்கி நடந்தாள். வீட்டுக்குச் சென்றதும் மஞ்சப்பாவை குடிசைக்குள் படுக்கவைத்துவிட்டு, அவள் மட்டும் வாசலில் படுத்துக்கொண்டாள்.

நள்ளிரவைக் கடந்த நேரத்தில் அந்தக் குடிசைக்கு இரு திருடர்கள் வந்தனர். அவர்களுடைய காலடி சத்தத்தைக் கேட்டு வாசலில் படுத்திருந்த பாட்டி எழுந்துவிட்டாள். தன்னை நோக்கி நகர்ந்துவரும் நிழல் உருவங்களைப் பார்த்து ‘யார் அது? யார் அது?’ என்று அதட்டும் குரலில் கேட்டாள். உடனே திருடர்கள் கத்தியை எடுத்து அவள் முன்னால் நீட்டி ‘ஸ்…. சத்தம் போடாதே. கொன்னுடுவேன்’ என்று மிரட்டினார்கள். அந்த மிரட்டலுக்கே பாட்டி பயத்தின் காரணமாக மயக்கம் போட்டு கீழே விழுந்துவிட்டாள்

உடனே குடிசைக்குள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த பானைகளுக்குள் பாட்டி சேர்த்துவைத்திருந்த வெள்ளி நாணயங்களையும் தங்க நாணயங்களையும் பணத்தையும் பிற பொருட்களையும் மூட்டையாகக் கட்டி எடுத்துக்கொண்டனர்.

அப்போது சுவரோரமாக துணிமூட்டை மாதிரி மஞ்சப்பா தூக்கத்தில் ஆழ்ந்திருந்தான். ஒரு திருடன் அவனை அப்படியே மூட்டையைத் தூக்குவதுபோல தூக்கிக்கொண்டு வெளியே வந்தான். இன்னொரு திருடன் குடிசையின் கதவைப் பூட்டிவிட்டு, தீ மூட்டினான். உலர்ந்த கீற்றுகளால் வேயப்பட்ட குடிசையில் வேகவேகமாக தீ பரவத் தொடங்கியது.

தன்னை யாரோ தூக்கிக்கொண்டு போகிறார்கள் என்பதை உணர்ந்துகொண்டதும் மஞ்சப்பா சத்தம் போட்டான். ஆனால் அந்தச் சத்தத்தைக் கேட்டு ஓடிவர அந்தத் தெருவில் ஒருவரும் இல்லை. எல்லோருமே யட்சகானம் நிகழும் இடத்தில் கூடியிருந்தார்கள்.

திருடர்கள் ஓட்டமும் நடையுமாக வெளியேறியதால் சீக்கிரமாகவே ஊரைவிட்டு வெகுதொலைவு வந்துவிட்டனர். வேகவேகமாக நடந்ததால் நாலைந்து ஊர்கள் கடந்து வந்ததே அவர்களுக்குத் தெரியவில்லை. சிறிது நேரம் நின்று திரும்பி மூச்சு வாங்கினர்.

முதல் திருடன் மஞ்சப்பாவை மூட்டை மாதிரி தூக்கிக்கொண்டு வந்த இரண்டாவது திருடனைப் பார்த்து ‘எதுக்குடா இவனை இன்னும் தூக்கிட்டு வர? தூக்கி வீசுடா’ என்று சொன்னான். உடனே அவன் தெருவோரமாக இருந்த புதரை ஒட்டிய பள்ளத்தில் வீசினான். பிறகு திருட்டுப்பொருட்கள் அடங்கிய மூட்டையை எடுத்துக்கொண்டு வேகவேகமாக நடந்தனர்.

விடிந்த பிறகுதான் பாட்டி மயக்கம் தெளிந்து எழுந்தாள். தன் குடிசை எரிந்து சாம்பலாகக் கிடப்பதைப் பார்த்து மார்பில் அடித்துக்கொண்டு ‘ஐயோ ஐயோ’ என்று அழுதாள். யட்சகானம் முடிந்து அப்போதுதான் தெருவாசிகள் அனைவரும் ஒவ்வொருவராகத் திரும்பி வந்துகொண்டிருந்தனர். பாட்டியின் அழுகைச் சத்தத்தைக் கேட்டு அவள் குடிசைக்கு அருகில் வந்தனர். சாம்பலாகக் கிடக்கும் அவளுடைய குடிசையைப் பார்த்து ‘என்னாச்சி? என்னாச்சி?’ என்று ஒருவரையொருவர் கேட்டுக்கொண்டனர்.

‘யாரும் இல்லாத சமயமா பார்த்து ரெண்டு திருடனுங்க வந்து என்னை அடிச்சி போட்டுட்டு குடிசைக்குள்ள போய் கொள்ளையடிச்சிட்டு போயிட்டானுங்க. படுபாவிங்க என் பேரனையும் கொன்னுட்டு போயிட்டானுங்க’

பாட்டி தேம்பித்தேம்பி அழுதாள். ஊர்க்காரர்கள் அனைவரும் சேர்ந்து அவளை அமைதிப்படுத்தினர். ‘அவன் என்ன உன் சொந்தப் பேரனா? எதுக்கு அழுவற, விடு. தானா வந்தான், இப்ப தானா போயிட்டான்னு நெனச்சி மனச தேத்திக்கோ பாட்டி’ என்றார் ஒருவர். பாட்டியின் அழுகை மெல்ல மெல்ல அடங்கியது. ஊர்க்காரர்கள் அனைவரும் ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு செலவு செய்து அவளுக்கு புதிதாக ஒரு குடிசையைக் கட்டிக் கொடுத்தார்கள். அவள் ஊர்க்காரர்களுக்கு நன்றி சொன்னாள். உடல்நலம் தேறியதும் பழையபடி பிச்சை எடுக்கத் தொடங்கினாள்.

பள்ளத்தில் விழுந்து கிடந்த மஞ்சப்பா தன்னைச் சுற்றி ஒரே இருட்டாக இருப்பதைப் பார்த்தான். அவனுக்குப் பயமாக இருந்தது. முதலில் ‘பாட்டி பாட்டி’ என்று கூவி அழுதான். பிறகு ‘யாராவது இருக்கீங்களா, என்னை காப்பாத்துங்க. இங்க பள்ளத்துக்குள்ள கெடக்கறேன்’ என்று சத்தம் போட்டான்.

வெகுநேரம் சத்தம் போட்டபடி இருந்ததில் களைத்துவிட்டான். எப்போது தூங்கினோம் என்பது தெரியாமலேயே தூக்கத்தில் மூழ்கிவிட்டான். நீண்ட நேரத்துக்குப் பிறகுதான் அவனுக்கு விழிப்பு வந்தது. கண்களைத் திறந்து பார்த்தான். உயரத்தில் வட்டமாக நீல வானம் தெரிந்தது. விடிந்துவிட்டது என்பதைப் புரிந்துகொண்டான். வெளியே மக்கள் பேசிக்கொண்டே நடந்துபோகும் சத்தம் கேட்டது. உடனே ‘யாராவது இருக்கீங்களா, என்னை காப்பாத்துங்க. இங்க பள்ளத்துக்குள்ள கெடக்கறேன்’ என்று மீண்டும்மீண்டும் சத்தம் போட்டபடி இருந்தான். எப்படியாவது வழிப்போக்கர்களின் கவனம் தன் மீது திரும்பாதா என அவன் எதிர்பார்த்தான். ஆனால் அவன் குரல் பாதையில் நடப்பவர்களை எட்டவில்லை. ஆயினும் நம்பிக்கையோடு அவன் மீண்டும் மீண்டும் குரலெழுப்பியபடி இருந்தான்.

அந்த நேரத்தில் தேவர்களின் உலகத்தில் முப்பெருந்தேவியர்களான பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோருக்கிடையே ஒரு விவாதம் நிகழ்ந்துகொண்டிருந்தது. மூன்று பேரில் யார் பெரியவர், யாருடைய ஆற்றல் உயர்வானது என்பதுதான் அந்த விவாதத்தின் மையப்புள்ளி. ஒவ்வொருவரும் தானே பெரியவர் என்பதை நிறுவும் வகையில் புள்ளிவிவரங்களை அடுக்கி ஓய்வில்லாமல் விவாதித்தபடி இருந்தனர்.

அவர்களிடைய நிகழும் மோதலைத் தடுத்த நிறுத்த தேவர்களின் உலகத்தில் ஒருவரும் இல்லை. அப்போது அந்த மோதலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நாரதர் ‘நீங்க மூணு பேரும் இங்க நின்னு சண்டை போடறதுல அர்த்தமே இல்லை. இந்த நேரத்துல பூமியில கையும் இல்லாம காலும் இல்லாம பதினஞ்சி வருஷ காலம் வளர்ந்த ஒரு பையன் தன்னை காப்பாத்த யாருமில்லையான்னு கதறி அழுதுகிட்டிருக்கான். நீங்க எல்லாரும் அங்க போயி அவனுக்கு ஏதாவது செஞ்சி உங்க திறமையைக் காட்டுங்க. அப்ப, உங்க மூனு பேருல யாரு பெரியவங்க, யாருடைய திறமைக்கு மதிப்பு அதிகம்ன்னு தானாவே தெரிஞ்சிடும்’ என்று பொறுமையாகச் சொன்னார்.

நாரதரின் சொற்கள் முப்பெருந்தேவியரின் காதுகளில் விழுந்தன. சந்தேகத்துக்கு இடமில்லாதபடி தம்மை நிறுவிக்கொள்வதற்காக கிடைத்த வாய்ப்பை வீணாக்க அவர்கள் விரும்பவில்லை. உடனே மூன்று பேரும் தமக்குள் விவாதிப்பதை ஒரு கணம் நிறுத்திவிட்டு நாரதரின் பக்கம் திரும்பிப் பார்த்தனர். உடனே அவர்களை நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு வேறு எங்கோ வேடிக்கை பார்ப்பதுபோல பார்த்தார். மூன்று தேவிகளும் அதைப் பொருட்படுத்தவில்லை. தம் ஆற்றலை அடுத்தவர்களுக்கு உணர்த்துவதற்கு இது சரியான வாய்ப்பு என ஒவ்வொருவரும் கருதினர். அதனால் மூன்று பேரும் பூமியை நோக்கி இறங்கி வந்தனர்.

அந்த நேரத்தில்தான் ‘யாராவது இருக்கீங்களா, என்னை காப்பாத்துங்க. இங்க பள்ளத்துக்குள்ள கெடக்கறேன்’ என்று கூவிக் குரலெழுப்பிக்கொண்டிருந்தான் மஞ்சப்பா. மூன்று பெண்மணிகளும் வானத்திலிருந்து இறங்கிவரும் காட்சியை அவன் பார்த்தான். உடனே அவன் அவர்களுக்குக் கேட்கும் வகையில் பெருங்குரலெடுத்து கூவினான். ‘ஆகாயத்தில் பறந்துபோகிற தாய்மார்களே, தயவுசெஞ்சி என்னை இந்தப் பள்ளத்துலேருந்து காப்பாத்துங்க’ என்று மீண்டும் மீண்டும் கூவினான்.

அந்தச் சத்தத்தை பார்வதி தேவிதான் முதலில் கேட்டார். அவர் சுட்டிக் காட்டியதும் மற்ற இரு தேவியரும் காது கொடுத்துக் கேட்டார்கள். கைகளும் இல்லாமல் கால்களும் இல்லாமல் ஒருவன் பள்ளத்தில் விழுந்து கிடந்த காட்சி அவர்களுடைய மனத்தை உருக்கியது. உடனே அவர்கள் அந்தப் பள்ளத்துக்கு அருகே இறங்கி வந்தனர்.

ஆர்வத்தின் காரணமாக அந்தப் பள்ளத்துக்குள் குனிந்து பார்த்தார் பார்வதி. அவர் பார்ப்பதை மஞ்சப்பாவும் பார்த்தான். ‘அம்மா, பார்க்கறதுக்கு அந்தப் பரமேஸ்வரி மாதிரியே இருக்கீங்க. உங்களுக்கு வணக்கம் சொல்றதுக்குக் கூட எனக்கு கையும் இல்லை. எழுந்துவந்து கால்ல விழறதுக்கு காலும் இல்லை. என் தலையை உங்க கால்ல வச்சி வேண்டிக்கறதா நெனச்சிக்குங்க. எப்படியாவது என்னை மேல தூக்கி காப்பாத்துங்க. யாரோ ரெண்டு திருடனுங்க என்னை தூக்கிவந்து இந்த பள்ளத்துக்குள்ள வீசிட்டு போயிட்டாங்க. தயவுசெஞ்சி என்னைக் காப்பாத்தி எல்லா மனிதர்களையும் போல கைகால் உள்ளவனா என்னை மாத்துங்க. உங்களுக்கு கோடி புண்ணியமா இருக்கும். உங்க உதவியை நான் என்னென்னைக்கும் மறக்கமாட்டேன். காலம் முழுக்க உங்களை நெனச்சிட்டே இருப்பேன்’ என்று கதறினான்.

அவனுடைய கதறல் குரல் பார்வதி தேவியின் மனத்தை உருக்கியது. உடனே பள்ளத்தில் இருக்கும் அவனை நோக்கி ஆசீர்வதிப்பதைப்போல தன் வலது கையை அவன் பக்கமாகக் காட்டி ‘எல்லாம் சரியாயிடும். உன் மனம் போல வாழ்க்கை அமையும். மேலே வா மகனே’ என்று சொன்னார்.

அக்கணமே அவன் தன் உடலில் ஒரு மாற்றம் நிகழ்வதை உணர்ந்தான். அவன் உடலிலிருந்து கைகளும் கால்களும் தோன்றி அவன் உடலுக்குப் பொருத்தமான வகையில் நீண்டன. உடனே அவன் அருகில் தெரிந்த செடிகொடிகளையும் வேர்களையும் பற்றி மேலேறி வந்து பார்வதிதேவியின் கால்களில் விழுந்து வணங்கினான். ‘அம்மா, உண்மையிலேயே நீங்க பார்வதி தேவிதாம்மா. உங்க கருணையே கருணை. எனக்கு ஒரு புது வாழ்க்கையையே நீங்க கொடுத்துட்டீங்க. ரொம்ப நன்றி.’ என்று கூறினான். பார்வதிதேவி புன்னகைத்தபடி அவன் தலைமீது கை வைத்து மீண்டும் ஆசி வழங்கினாள்.

அப்போதுதான் அவன் பார்வதி தேவிக்கு அருகில் சற்றே தள்ளி நின்றுகொண்டிருந்த இன்னொரு தேவியைப் பார்த்தான். அவருடைய தோற்றத்தைப் பார்த்ததுமே அவர்தான் லட்சுமி தேவி என்பதை அவன் புரிந்துகொண்டான். உடனே அவருக்கு அருகில் சென்று அவருடைய கால்களில் விழுந்து வணங்கினான்.

‘அம்மா, காலம் முழுக்க மத்தவங்க கருணையால வளர்ந்து, இன்னைய தினம் வரைக்கும் உயிரோடு இருக்கறேன். பார்வதி தேவி கருணையால எனக்கு எப்படியோ கைகாலுங்க கெடைச்சிடுச்சி. நானும் இந்த ஊருல ஒரு மனிதன்னு தலைநிமுந்து நடக்கலாம். ஆனா இந்த உலகத்துல கெளரவமா வாழணும்ன்னா அது மட்டும் போதாது. வீடு வாசல் நிலம் மாடு கன்னுங்கன்னு வச்சிருக்கிறவங்களுக்குத்தான் மதிப்பு உண்டு. என்னை ஒரு மனிதனா நிக்க வச்சி பேச வைச்சது இந்த இடம்தான். இந்த இடத்துலயே நின்னு நிலையா வாழ்ந்தாதான் எனக்குப் பெருமை. தயவு செஞ்சி இந்த இடத்துலயே வீடு வாசல் நிலம் மாடு கன்னுங்க எல்லாம் கிடைக்கிற மாதிரி செய்யுங்கம்மா. காலம் முழுக்க உங்க கருணையை நினைச்சிட்டே இருப்பேன்.’

அவனுடைய கதறல் லட்சுமி தேவியின் மனத்தை உருக்கியது. ‘நீ ஆசைப்படற எல்லாம் இந்த இடத்துலயே உனக்கு அமையும்’ என்று தன் வலது கையை அவன் தலை மீது வைத்து ஆசி வழங்கினாள். அடுத்த கணமே அந்த இடத்திலிருந்து சிறிது தொலைவில் அழகானதொரு வீடும், வீட்டையொட்டி ஒரு பெரிய விளைநிலமும் உருவாகின. நிலத்துக்கு அருகிலேயே அவன் விரும்பிய வண்ணம் பசுக்களும் எருதுகளும் கன்றுகளும் கூட்டமாகக் காணப்பட்டன.

எழுந்து நின்று கைகூப்பி அவளுக்கு நன்றி சொல்லி முடிக்கும் நேரத்தில் சிறிது தொலைவில் நின்றுகொண்டிருந்த இன்னொரு தேவியைப் பார்த்தான். அவருடைய தோற்றத்தைப் பார்த்ததுமே அவர்தான் சரஸ்வதி தேவி என்பதை அவன் புரிந்துகொண்டான். உடனே அவருக்கு அருகில் சென்று அவருடைய கால்களில் விழுந்து வணங்கினான்.

‘அம்மா தாயே, காலம் முழுக்க மத்தவங்க கருணையாலதான் வளர்ந்து, இன்னைய தினம் வரைக்கும் எப்படியோ உயிரோடு இருக்கறேன். நாலு பேரு பேசறதை கேட்டு ஏதோ கொஞ்சம் அறிவை வளர்த்துகிட்டேன். படிப்பறிவுன்னு எனக்கு எதுவுமே கிடையாதும்மா. எனக்கு நல்ல படிப்பறிவு கொடு தாயே. மத்தவங்ககிட்ட நாகரிகமா நயமா பேசிப் பழகற பக்குவத்தையும் அடக்கத்தையும் கொடு தாயே.’

அவனுடைய கதறல் சரஸ்வதி தேவியின் மனத்தை உருக்கியது. ‘நீ ஆசைப்படற மாதிரியே இந்த உலகத்துல நீ நல்ல புத்திமானாகவும் கல்விமானாகவும் நாலு பேரு மெச்சற மாதிரி உன் வாழ்க்கை அமையும்’ என்று தன் வலது கையை அவன் தலை மீது வைத்து ஆசி வழங்கினாள். அடுத்த கணமே அவன் தன் உடலிலும் உணர்விலும் ஒரு மாற்றம் நிகழ்வதை உணர்ந்தான்.

‘ரொம்ப நன்றிம்மா. ரொம்ப நன்றி’ என்று கைகுவித்து அவளுக்கு மனமார நன்றி சொன்னான்.

பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவியரும் மீண்டும் அவனை வாழ்த்திவிட்டு பூமியிலிருந்து விண்ணை நோக்கிப் பறந்து சென்றனர். விண்ணிலிருந்து பூமியை நோக்கி இறங்கிவரும்போது அவர்களுடைய பேச்சின் மையப்பொருளாக இருந்த யார் பெரியவர் என்கிற விஷயம் காணாமல் போய்விட்டது. பதற்றமில்லாமல் மிகவும் இயல்பாக ஒருவரோடு ஒருவர் பேசியபடி பறந்தார்கள்.

மூன்று பேருமே தமக்குரிய வேலைகளில் பெரியவர்களே என்பதையும் அந்த வேலைகளில் உயர்ந்தது தாழ்ந்தது என்கிற பேதம் எதுவும் இல்லை என்பதையும் உலகத்தில் எல்லா விதமான வேலைகளும் ஒரே மதிப்புள்ளவையே என்பதையும் அவர்கள் மஞ்சப்பாவின் அனுபவம் வழியாக உணர்ந்துகொண்டனர். மேலும் ஒருவருடைய ஆற்றலைவிட, அந்த ஆற்றலை வெளிப்படுத்துவதற்குத் தூண்டுதலாக இருக்கக்கூடிய கருணையே மிகமுக்கியமானது என்பதையும் உணர்ந்துகொண்டனர். அதனால் தன்முனைப்பு அற்றவர்களாக, ஒருவரோடு ஒருவர் இயல்பான முறையில் உரையாடியபடி பறந்துகொண்டே இருந்தனர்.

லட்சுமியின் கருணையால் தனக்குக் கிடைத்த வீட்டை நோக்கி தன் சொந்தக் கால்களால் நடந்துசென்றான் மஞ்சப்பா. முதன்முதலாக பூமியின் மீது பாதங்களைப் பதித்து நடக்கும்போது அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அக்கணத்தில் மற்றவர்களுக்கு இணையானவனாக தன்னை நினைத்துக்கொண்டான்.

தனக்குக் கிடைத்த கால்நடைகளைப் பராமரிப்பதில் அவன் மனம் பூரித்தது. தன் நிலத்தில் சொந்தமாகப் பயிரிட்டு வளர்த்தபோது அவன் மனம் நெகிழ்ச்சியுற்றது. அக்கம்பக்கத்தில் உள்ள சிற்றூர்களிலிருந்து வேலை தேடி வந்து நின்றவர்களுக்கு உரிய வேலைகளை அவர்களுக்கு ஒதுக்கிக் கொடுத்து தனக்கு அருகிலேயே வைத்துக்கொண்டான். அவர்களுடைய குடும்பங்களை தம் குடும்பங்களாகவே நினைத்துப் பராமரித்தான். ஐந்தாண்டு காலத்தில் அவனுடைய செல்வாக்கு அந்த வட்டாரம் முழுவதும் பரவியது.

ஒருநாள் ஊரூராக நடந்து பிச்சையெடுத்து வாழ்க்கையை நடத்தும் ஒரு பாட்டி அந்த ஊருக்கு வந்து சேர்ந்தார். அந்த வழியில் ஒரு புதிய வீடும் விவசாய நிலங்களும் இருப்பதைப் பார்த்ததும், அந்த வீட்டை நெருங்கி வந்து நின்றார். வீட்டு வாசலில் நின்றிருந்த காவலர்கள் ‘போ போ’ என்று விரட்டினர்.

அந்தப் பாட்டி கெஞ்சிக் கேட்கும் குரலும் காவலர்கள் விரட்டும் குரலும் வீட்டுக்குள்ளே இருந்த மஞ்சப்பாவின் செவியில் விழுந்தது. அந்தப் பாட்டியின் குரல் தனக்குப் பழகிய குரலாக அவனுக்குத் தோன்றியது. உடனே, வீட்டிலிருந்து வாசலுக்கு ஓடோடி வந்தான். அந்தப் பாட்டியைப் பார்த்ததுமே, அவள்தான் தன்னை வளர்த்து ஆளாக்கிய பாட்டி என்று புரிந்துவிட்டது. ‘பாட்டி’ என்று கூவிக்கொண்டே ஓடோடி வந்து அவரைத் தழுவிக்கொண்டான். அந்த இளைஞனின் தோற்றம் முதலில் அவளைக் குழப்பினாலும் அவனுடைய குரலை வைத்து அவனே மஞ்சப்பா என்பதை அவள் புரிந்துகொண்டாள். ‘மஞ்சப்பா’ என்று பிரியத்தோடு அழைத்து அவளும் அவனைத் தழுவிக்கொண்டாள்.

மஞ்சப்பா பாட்டியைக் கைத்தாங்கலாக வீட்டுக்குள் அழைத்துச்சென்று மஞ்சத்தில் அமரவைத்தான். எல்லா வசதிகளும் நிறைந்த அந்தப் புதிய வீட்டை அதிசயத்தைப் பார்ப்பதுபோல சுற்றிச்சுற்றிப் பார்த்தாள் பாட்டி. பிறகு ‘நல்லா இருக்கியா மஞ்சப்பா?’ என்று கேட்டாள். ‘உன்னைப் பார்த்து அஞ்சி வருஷத்துக்கும் மேல ஆயிடுச்சி’ என்றாள்.

‘யட்சகானம் பார்த்துட்டு வந்த அன்னைக்கு திருடனுங்க உன்னை அடிச்சி போட்டதும் நீ செத்துப் போயிட்டன்னு நெனச்சேன் பாட்டி’ என்றான் மஞ்சப்பா.

‘இல்லைப்பா. அது வெறும் மயக்கம்தான். மயக்கம் தெளிஞ்சி எழுந்து பார்த்தபோது குடிசை எரிஞ்சி சாம்பலா கெடந்தது. திருடனுங்க உன்ன உள்ள வச்சி குடிசையை கொளுத்திட்டு போயிட்டானுங்கன்னு நானும் நெனச்சிட்டேன் மஞ்சப்பா’ என்றாள் பாட்டி.

‘அவனுங்க ஒரு கூடைக்குள்ள வச்சி என்னை தூக்கிட்டு போய் இந்த ஊருல ஒரு பள்ளத்துல தூக்கி போட்டுட்டு போயிட்டானுங்க பாட்டி. குழந்தையா இருந்த சமயத்துல அனாதையா சாகக் கெடந்தபோது என் உயிரை நீதான் காப்பாத்தின. அதேபோல பள்ளத்துல கெடந்த சந்தர்ப்பத்துல தெய்வம் வந்து காப்பாத்திச்சி. இந்த உலகமே என் மேல கருணையோடு இருக்கறதாலதான் இன்னைக்கு நான் உயிரோடு இருக்கேன் பாட்டி.’

இருவரும் அருகருகே உட்கார்ந்து வெகுநேரத்துக்கு பழைய கதைகளைப் பேசிக்கொண்டிருந்தனர். பிறகு வேலைக்காரர்களை அழைத்து பாட்டி குளிப்பதற்கும் உடைமாற்றிக்கொள்ளவும் உண்பதற்கும் ஏற்பாடு செய்யும்படி சொல்லிவிட்டு வெளியே புறப்பட்டுச் சென்றான்.

தான் எடுத்து வளர்த்த ஒரு குழந்தை இப்படி நாகரிகமான மனிதனாக வளர்ந்து மிடுக்கோடு இருப்பதைப் பார்த்து பாட்டி உளமார மகிழ்ச்சி கொண்டாள். மஞ்சப்பாவின் வீட்டிலேயே தங்கி கால்நடைகளைப் பராமரிக்கும் வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டாள்.

காலம் வேகமாக நகர்ந்தது. சில மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் முன்னிரவுப் பொழுதில் வீட்டு வாசலில் பாட்டியும் அவனும் உட்கார்ந்து வானத்தில் எழுந்து உலவத் தொடங்கிய நிலாவைப் பார்த்தபடி நிலாச்சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது வயதான ஒரு ஆணும் பெண்ணும் வந்து நின்றார்கள். ‘ஐயா, நாங்க பக்கத்தூருக்கு போகணும். இருட்டுல இனிமே நடக்கறது கஷ்டம். இன்னைக்கு ஒருநாள் ராத்திரி தங்கிக்க இடம் கொடுக்கறீங்களா?’ என்று கேட்டார்கள்.

அவர்களுடைய குரலைக் கேட்டு மஞ்சப்பாவின் மனம் இளகியது. ‘முதல்ல உள்ள வாங்க ஐயா. இப்படி உக்காருங்க. நீங்க தாராளமா இங்க தங்கிட்டு போகலாம். அதுக்கு நான் ஏற்பாடு செய்யறேன். அதுக்கு முன்னால பசிக்கு ஏதாவது சாப்புடுங்க’ என்று கூறினான். பக்கத்தில் நின்றிருந்த வேலைக்காரனை அழைத்து அவ்விருவருக்கும் உணவு கொண்டுவந்து கொடுக்கும்படி கேட்டுக்கொண்டான். வேலைக்காரன் தோட்டத்துக்குச் சென்று வாழைமரத்திலிருந்து இரு இலைகளை அறுத்து எடுத்துவந்து கழுவி அவர்கள் முன் விரித்தான். பிறகு மஞ்சப்பாவும் பாட்டியும் சாப்பிட்ட அதே உணவு வகைகளை அவர்களுடைய இலைகளிலும் பரிமாறினான். இருவரும் வயிறாரச் சாப்பிட்டனர்.

சாப்பாட்டை முடித்துக்கொண்டதும் அவர்கள் சுவரில் சாய்ந்தபடி கால்நீட்டி உட்கார்ந்தனர். மஞ்சப்பா அவர்களிடம் வெற்றிலை பாக்கு பெட்டியை நீட்டியபடி ‘நீங்க எந்த ஊருலேர்ந்து வரீங்க? உங்க பிள்ளைகள் உங்களைக் கவனிச்சிக்கலையா?’ என்று கேட்டார்.

அவர்கள் தம் ஊரின் பெயரைச் சொன்னார்கள். ‘நாங்கதான் அந்த ஊரையே ஆட்சி செய்துவந்தோம். திடீர்னு ஒருநாள் அடுத்த ஊரு அரசன் எதிர்பாராதபடி ஏராளமான படையோடு வந்து எங்களைத் தாக்கி விரட்டிட்டு எங்க ஊரப் புடுங்கிகிட்டு எங்களை விரட்டியடிச்சிட்டான். அவன் கையில மாட்டியிருந்தா எங்களை அவன் கொன்னிருப்பான். உயிர் பொழைச்சிருக்கணுமேன்னு நாங்க அந்த ஊர்லேர்ந்து தப்பிச்சி காடுகாடா அலைஞ்சிட்டிருக்கோம்.’

சொல்லும்போது அவர்கள் கண்களில் கண்ணீர்த்துளிகள் தேங்கி நின்றன.

‘உங்களுக்கு பிள்ளைகள் இல்லையா?’

‘கல்யாணமாகி பதினஞ்சி வருஷ காலம் புள்ளையே இல்லாம இருந்தது. அதுக்குப் பிறகு ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணுன்னு ஒரு புள்ள பொறந்தது. ஆனா அது ஒரு அதிசயமான புள்ள. கையும் இல்லை. காலும் இல்லை. வெறும் தலையும் வயிறும் மட்டும்தான் இருந்தது. அது பொறந்த சமயத்துல எங்க ஊரு ஜோசியக்காரர் ஒருத்தர் கைகால் இல்லாம முண்டமா பொறந்திருக்கிற இந்தக் குழந்தை இங்கயே இருந்தா இந்த ஊருக்குத்தான் கேடு. இதை உடனே எடுத்துட்டு போய் கண்காணாத இடத்துல விட்டுட்டு வாங்கன்னு சொன்னாரு. எங்களுக்கும் அவருடைய பேச்சைக் கேக்கறதைத் தவிர வேற வழி எதுவும் தோணலை. அதனால ஒருநாள் காலையில வேலைக்காரங்கள்கிட்ட விஷயத்தைச் சொல்லி குழந்தையைக் கொடுத்து அனுப்பிட்டோம். அவுங்க ஒரு கூடைக்குள்ள அந்தக் குழந்தையை வச்சி எடுத்துட்டு போயிட்டாங்க. அதே நாள் காலையில நடந்த சண்டையில நாங்க தோத்துட்டோம். எல்லாத்தையும் பறிகொடுத்துட்டு ஊரை விட்டு நாடோடியா கெளம்பிட்டோம். ஒரு பக்கம் புள்ளையும் போச்சி. இன்னொரு பக்கம் இருந்த ஊரும் போச்சி. எல்லாம் எங்க போதாத காலம்.’

அவர்கள் சொன்ன கதையைக் கேட்கக்கேட்க மஞ்சப்பாவின் கண்களில் கண்ணீர் பொங்கி வழிந்தபடி இருந்தது. ‘நீங்க காட்டுல தூக்கி போட்டுட்டு வரச் சொன்ன குழந்தை நான்தான்’ என்றபடி தன்னை அவர்களிடம் அறிமுகப்படுத்திக்கொண்டான். பிறகு அவர்களுடைய கால்களில் விழுந்து வணங்கினான்.

பிறகு ‘அந்தக் காட்டுலேர்ந்து என்னை தூக்கி வந்து வளர்த்தது இந்தப் பாட்டிதான்’ என்று பக்கத்தில் இருந்த பாட்டியை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினான்.

பாட்டியோடு அவர்களும் அந்த வீட்டில் மகிழ்ச்சியோடு வாழத் தொடங்கினர்.

ஒரு சில மாதங்களுக்குப் பிறகு போதுமான அளவில் படையைத் திரட்டி அழைத்துச் சென்று, தனக்குச் சொந்தமான ஊரை ஆட்சி செய்யும் அரசனிடம் சண்டை போட்டு அந்த ஊரை மீட்டெடுத்தான் மஞ்சப்பா. பிறகு அந்த வாரத்திலேயே ஒரு நாளில் தன் அம்மா அப்பாவிடம் அந்த ஊரை ஒப்படைத்தான்.

‘நீயும் எங்களோடு இருக்கலாமே மஞ்சப்பா’ என்று அவனுடைய அம்மா ஆசையோடு கேட்டாள்.

‘அவ்வளவு பெரிய வீட்டையும் நிலபுலங்களையும் வேலை செய்ற ஆட்களையும் பாட்டியையும் அப்படியே விட்டுட்டு எப்படிம்மா வரமுடியும்? நான் அங்கயே இருந்தாதான் எல்லாம் நல்லபடியா நடக்கும். அப்பப்ப வந்து பார்த்துட்டு போறேன். சரியா?’ என்றபடி விடைபெற்றான் மஞ்சப்பா.

0

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *