Skip to content
Home » நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #17 – தெய்வம்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #17 – தெய்வம்

ஒரு கிராமத்தில் ஓர் இளம்பெண் வசித்துவந்தாள். அவளுடைய பெயர் துளசி. சிறுவயதிலேயே அவளுக்கு எப்படியோ யட்சகானம் பார்க்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது.  அவளுடைய ஊரில் ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டு ஒவ்வொரு வாரமும் யட்சகான நிகழ்ச்சி நடந்துவந்தது. சில சமயங்களில் கோவில் சார்பாக நிகழ்ச்சிகள் நடைபெறும். சில சமயங்களில் ஊரில் வசிக்கும் ஏதேனும் ஒரு பெரிய குடும்பத்தினர் தம் பிரார்த்தனைகள் நிறைவேறியதையொட்டி இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக யட்சகான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துவிடுவார்கள்.

யட்சகானப் பாட்டின் ஓசையையும் தாளத்தையும் கேட்டதுமே அதற்கு இசைவாக துளசியின் உடல் தானாகவே அதிரத் தொடங்கிவிடும். ஓசை வரும் திசையை உற்றுக் கவனித்து, அந்தத் திசையிலேயே நடந்துசென்று யட்சகானம் பார்க்க உட்கார்ந்துவிடுவாள். ஒருவேளை சாப்பாட்டை விட்டுவிடு என்று சொன்னால்கூட உடனே அவள் ஒப்புக்கொள்வாள். ஆனால் யட்சகானம் பார்க்கப் போகவேண்டாம் என்று மட்டும் சொல்லி அவளைத் தடுக்கவே முடியாது. காந்தத்தை நோக்கி ஈர்க்கப்படும் இரும்புத்துண்டைப் போல யட்சகானம் நடைபெறும் திசையில் ஓடிவிடுவாள்.

யட்சகானத்தில் கிருஷ்ணனாக நடிக்கும் பாத்திரத்தின் நடிப்பை அவள் மிகவும் விரும்பிப் பார்ப்பாள். அந்தப் பாத்திரம் பாடும் பாடல்களையும் விரும்பிக் கேட்பாள். வீட்டுக்குத் திரும்பிய பிறகும் கூட கிருஷ்ணன் இடம்பெற்ற காட்சிகளையும் கிருஷ்ணன் பாடிய பாடல்களையும் கிருஷ்ணனின் உரையாடல்களையும் தனக்குள் எண்ணி எண்ணி அசைபோட்டு மகிழ்வாள். பல நேரங்களில் யட்சகானத்தில் நடிக்கும் கிருஷ்ணனையே உண்மையான கிருஷ்ணன் என்று அவள் நினைத்துக்கொள்வாள்.

அந்த ஊரிலேயே வேறொரு பகுதியில் ஓர் இளைஞன் வசித்துவந்தான். அவன் பெயர் கோவிந்தப்பா. நல்ல அழகன். இளவயதுக்கே உரிய கவர்ச்சியோடும் மிடுக்கோடும் இருந்தான், ஆசாரித்தொழில் செய்து வந்தான். சின்னச்சின்ன சிற்பவேலைகளுடன் நிலைக்கதவுகளைச் செய்வதில் அவன் நிபுணனாக இருந்தான். அக்கம்பக்கத்தில் உள்ள கிராமங்களில் வீடு கட்டுபவர்கள் பலருக்கும் அவன் புதிய புதிய வடிவங்களில் கதவுகளை வடிவமைத்துக் கொடுத்துவந்தான்.

கோவிந்தப்பாவுக்கு துளசியை எப்படியாவது தன் வலையில் வீழ்த்தவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஒரு வேட்டை விலங்கு தன் இரையைக் கண்காணிப்பதுபோல துளசியின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கவனித்துவந்தான் அவன்.

அடிக்கடி யட்சகானம் நிகழும் இடங்களுக்கு துளசி தனியாகச் சென்றுவருவதை அவன் தொடர்ந்து கவனித்துவந்தான். அதனால் அவனும் அவளுக்குத் தெரியாமலேயே  அவள் செல்கிற யட்சகான நிகழ்ச்சிகளுக்கெல்லாம் சென்றான்.  கிருஷ்ணன் பாத்திரம் தொடர்பாக பிறருடன் ஒருவித பித்துடன் துளசி நிகழ்த்தும் உரையாடல்களையும் யாரோ ஒருவர் போல அவளுக்கு அருகிலேயே நின்று காது கொடுத்துக் கேட்டான்.

யட்சகான ஆட்டத்தின் மீது துளசி வைத்திருந்த ஈடுபாடு நாளுக்குநாள் பெருகிவருவதைக் கண்டு அவளுடைய பெற்றோர் அச்சம் கொண்டனர். திருமணம் செய்துகொண்டு இன்னொருவர் வீட்டில் வாழ்வதற்குச் செல்ல வேண்டிய வயதில் இப்படி இரவு வேளைகளில் யட்சகானம், யட்சகானம் என்று அவள் பைத்தியம் பிடித்து அலைவதைத் தடுத்து நிறுத்தும் வழி தெரியாமல் அவர்கள் தடுமாறினர்.

சிறுவயது முதல் செல்லம் கொடுத்து ஆசையாக வளர்த்துவிட்ட மகளை வெளிப்படையாகக் கண்டிக்கவும் அவர்களால் முடியவில்லை. முன்னிரவு நேரத்தில் யட்சகானம் பார்க்கச் செல்பவள் எப்போது வருவாள் என நினைத்து மனம் பதைபதைத்தபடி கதவைத் திறந்துவைத்துக்கொண்டு காவல் காத்தனர்.

நீண்ட காலத்துக்கு அந்தக் காத்திருப்பு தொடர்ந்தது. அவர்களுடைய தூக்கம் கெடுவதால் இருவருக்கும் அடிக்கடி உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படத் தொடங்கின. ஏதோ ஒரு நேரத்தில் புறப்பட்டுச் செல்கிறாள், ஏதோ ஒரு நேரத்தில் வீட்டுக்குத் திரும்பிவிடுகிறாள் என்பதைத் தவிர வேறெந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை அவர்கள் நாளடைவில் புரிந்துகொண்டனர். அதனால் அவள் விருப்பப்பட்ட நேரத்தில் எழுந்து செல்லவும் திரும்பி வந்து படுத்து ஓய்வெடுக்கவும் தோதாக, வீட்டுக்கு வெளிப்பகுதியிலேயே அவளுக்காக ஓர் அறையைக் கட்டிக் கொடுத்தனர்.

தனக்கென ஒரு தனி அறை அமைந்ததும், துளசியுடைய யட்சகானப் பித்து இன்னும் கூடுதலாகிவிட்டது. தம் சொந்த ஊரில் நடைபெற்ற யட்சகான நிகழ்ச்சிகளை மட்டுமன்றி, அக்கம்பக்கமுள்ள கிராமங்களில் நிகழும் பல நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்கச் செல்லத் தொடங்கினாள்.

துளசியுடைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து கவனித்துவந்த கோவிந்தப்பா, அவள் வீட்டுக்கு வெளியிலேயே ஒரு தனி அறையில் தனியாகத் தங்கியிருப்பதைப் பார்த்தான். யட்சகானம் பார்ப்பதற்காகச் செல்லும் நாட்களில் மட்டும் அவள் வெளியறையில் தங்குவதையும் பிற நாட்களில் வீட்டுக்குள் சென்று தங்குவதையும் அவன் புரிந்துகொண்டான்.

ஒருநாள் இரவில் உள்ளூரிலேயே நடைபெற்ற யட்சகான நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு வழக்கம்போல தன் அறைக்குத் திரும்பி உறங்குவதற்குச் சென்றாள் துளசி. அவளைத் தனியாகச் சந்திக்கும் தருணத்துக்காக நீண்ட காலமாகக் காத்திருந்த கோவிந்தப்பா, அன்றைய இரவில் எப்படியாவது அவளைச் சந்திக்கவேண்டும் என்று முடிவெடுத்தான். அதனால் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு யட்சகான கிருஷ்ணனைப்போல தனக்குத்தானே ஒப்பனை செய்துகொண்டான். அடிமேல் அடிவைத்து ஒருவருடைய பார்வையிலும் படாமல் நடந்து சென்று அவளுடைய அறையை நெருங்கினான்.

ஆழ்மனத்தில் அச்சம் பெருக்கெடுத்தோடியபடி இருந்தாலும் காதல் விசையால் அச்சத்தைக் கடந்துவிட்ட கோவிந்தப்பா, அவளுடைய அறைக்கதவைத் தட்டினான். உறங்கச் சென்று சிறிது நேரமே ஆகியிருந்ததால் அந்தச் சத்தத்தைக் கேட்டு துளசி விழித்தெழுந்தாள். உடனே படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். கதவு தட்டப்படும் சத்தம் மீண்டும் ஒலித்தது. ஆடையைச் சரிசெய்தபடி மெல்ல நடந்துசென்று கதவைத் திறந்தாள் துளசி. யட்சகானத்தில் கண்ட கிருஷ்ணன் வாசலில் வந்து நிற்பதைப் பார்த்து அவள் பரவசம் கொண்டாள்.

‘கிருஷ்ணா, நீயா?’ என்று கேட்டபடி வேகமாக வாசலுக்கு வெளியே கால்வைத்தாள்.

‘ஆமாம் துளசி. நானே கிருஷ்ணன்’ என்றான் கோவிந்தப்பா.

துளசிக்குப் பேச்சே எழவில்லை. ‘என்னைப் பார்க்கறதுக்கா இவ்வளவு தொலைவு வந்தாய்?’

‘ஆமாம் துளசி. துவாரகாபுரி நிகழ்ச்சியில் நீ முன்வரிசையில உட்கார்ந்து ரசிச்சி பார்த்ததைக் கவனிச்சேன். உன் விருப்பத்தை என்னால புரிஞ்சிக்கமுடிஞ்சது. அதனால, ஆட்டம் முடிஞ்சதும் தனிமையில் உன்னைச் சந்திச்சி கொஞ்ச நேரம் உல்லாசமாகப் பேசி பொழுதுபோக்கிட்டு, அதுக்கப்புறம் துவாரகாபுரிக்குப் போவலாம்ங்கற எண்ணத்தோடு இங்க வந்தேன். வரலாமா?’

‘வா வா’ என்று அவனை அறைக்குள் அழைத்துச் சென்று மஞ்சத்தில் உட்காரவைத்தாள் துளசி. கிருஷ்ணனுக்கு அருகில் அமர்ந்திருக்கிறோம் என்ற எண்ணமே அவளுக்கு ஆகாயத்தில் பறப்பது போன்ற அனுபவத்தைக் கொடுத்தது. தன்னை அறியாமலேயே அவனுடைய மார்பில் சாய்ந்தாள். மடியில் புரண்டாள். அவனை ஆரத் தழுவியபடி படுக்கையில் விழுந்தாள். இருவரும் இளமைக்கே உரிய வேகத்தோடும் வேட்கையோடும் ஒருவருக்கு ஒருவரை விருந்தாகப் படைத்துக்கொண்டனர். இருள் கலைவதற்கு முன்பாகவே ‘துவாரகாபுரிக்குப் போகணும். நேரமாகுது’ என்று சொல்லிவிட்டு துளசியிடம் விடைபெற்றுக்கொண்டு வெளியேறினான் கோவிந்தப்பா.

அன்றைய இரவுக்குப் பிறகு அவள் ஒவ்வொரு நாள் இரவும் கிருஷ்ணனின் வரவுக்காகக் காத்திருந்தாள். அவள் ஏக்கத்தை மெல்ல மெல்ல வளர்த்து, பிறகு அதை நிறைவேற்றும் விதமாக அவள் யட்சகான நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டுத் திரும்பும் நாட்களில் மட்டும் எதிர்பாராத விதமாக வந்து சென்றான் கோவிந்தப்பா. அந்த நாளை ஆனந்தமான நாளாக நினைத்துக் கொண்டாடி மகிழ்ந்தாள் துளசி.

எதிர்பாராத விதமாக திடீரென அந்தச் சந்திப்புகள் நின்றன. வெகுதொலைவில் நகர்ப்பகுதியில் வசிக்கும் ஒரு பணக்காரர் கோவிந்தப்பாவுடைய திறமையைக் கேள்விப்பட்டு அவனை அழைத்துச் சென்றார். அவர் தனக்குச் சொந்தமான ஒரு தோப்பில் மூன்று அடுக்குகளைக் கொண்ட ஒரு பெரிய பங்களாவைக் கட்டத் தொடங்கியிருந்தார். அந்தப் பங்களாவின் எல்லாக் கதவுகளையும் செய்யும் வேலையை அவனிடம் அவர் ஒப்படைத்தார். அந்தப் பொன்னான வாய்ப்பைத் துறக்க கோவிந்தப்பாவுக்கு மனம் வரவில்லை. அதனால் தன்னை அழைக்கவந்த ஆள் பிரயாணம் செய்துவந்த வண்டியிலேயே அவனும் புறப்பட்டுச் சென்றான்.  முதல் நாளிலேயே துளசியைவிட பல மடங்கு அழகான பெண்களை அந்த ஊரில் எளிதாக அடையமுடியும் என்னும் நம்பிக்கையை அவன் அடைந்துவிட்டான்.  அதனால் திரும்பிச் செல்லவேண்டும் என்கிற எண்ணத்துக்கு இடம் இல்லாமலேயே அதே ஊரில் தங்கிவிட்டான்.

கோவிந்தப்பா வருவான் என ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்துக் காத்திருந்து ஏமாற்றம் கொண்டாள் துளசி. ஒவ்வொரு முறையும் நாளைக்கு வரக்கூடும் என நினைத்து தன்னைத்தானே தேற்றிக்கொண்டாள். அடுத்த நாளும் அவன் வரவில்லை என்றதும் மனம் உடைந்தாள். தன் கனவு அறுபட்டதை நினைத்து அவள் மிகவும் வேதனைக்குள்ளானாள்.

ஒருநாள் காலையில் சிற்றுண்டியைச் சாப்பிட்டுவிட்டு எழுந்த வேளையில், காலூன்றி நிற்கமுடியாதபடி தடுமாறினாள் துளசி. நல்ல வேளையாக பக்கத்திலிருந்த தூணை உறுதியாகப் பிடித்துக்கொண்டதால் கீழே விழாதபடி தப்பித்தாள். ஆயினும் அவளே எதிர்பாராத விதமாக ஓவென்று சாப்பிட்டதையெல்லாம் வாந்தியாக எடுத்தாள். அதைத் தொடர்ந்து கால்கள் தளர்ந்து தடுமாறி அம்மா என்று கூவியபடி கீழே மயங்கி விழுந்தாள்.

துளசியின் நிலையைப் பார்த்ததும் அவளுடைய அம்மா பதற்றத்தோடு ஓடிவந்து, அவளை எழுப்பி உட்காரவைத்து குடிப்பதற்குத் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினாள். அந்தத் தண்ணீரையும் அவள் வாந்தியாக எடுத்தாள். துளசியின் தந்தையார் உடனே வெளியே சென்று வைத்தியரை அழைத்துவந்தார்.  துளசியுடைய நாடியைப் பிடித்து சோதித்த வைத்தியர் துளசியின் பெற்றோரைத் தனியாக அழைத்துச் சென்று துளசி கருவுற்றிருக்கும் செய்தியைச் சொன்னார்.

வைத்தியர் சொன்ன செய்தியைக் கேட்டு துளசியின் பெற்றோர் அதிர்ச்சியில் மூழ்கினர். ‘கர்ப்பமா? என்ன சொல்றீங்க வைத்தியரே? உண்மையாவா?’ என்று நாக்குழற கேட்டனர்.

‘ஆமாங்க. அந்த அடையாளத்துக்கான நாடிதான் இப்ப ஓடுது.’

‘அவளை நாங்க சின்ன கொழந்தையாவே நெனைச்சிட்டிருக்கோம். இது எப்படியாச்சின்னு தெரியலை வைத்தியரே. ஒன்னும் தெரியாத அறியாப் பொண்ணு அவ. கலைக்கறதுக்கு ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க. இதெல்லாம் வெளிய தெரிஞ்சா ரொம்ப அவமானமா போயிடும். நாங்க தலைநிமுந்து வாழவே முடியாது வைத்தியரே.’

வைத்தியரின் கைகளைப் பற்றிக்கொண்டு கெஞ்சினார் துளசியின் அப்பா.

‘நாள் ரொம்ப கடந்து போச்சி. என் கணக்குப்படி மூனு மாசத்துக்கும் மேல ஆகியிருக்கும். இந்த நிலைமையில இனிமேல ஒன்னும் செய்யமுடியாது.’

உதட்டைப் பிதுக்கிவிட்டுப் புறப்பட்டுச் சென்றார் வைத்தியர்.

துளசியின் அம்மா துளசியை நெருங்கி வேதனையோடு ‘காலம் பூரா செல்லம் கொடுத்து உன்னை வளர்த்ததற்கு இந்த மாதிரி ஒரு காரியத்தப் பண்ணிட்டியேடி. இது உனக்கே நல்லா இருக்குதா? யாருடி இங்க வந்தா? யாரால இந்த நிலைமை உண்டாச்சி?’ என்று கேட்டாள்.

‘ஒருநாள் துவாரகையிலேருந்து கிருஷ்ணன் வந்தாரும்மா. அவர்தான் அடிக்கடி வந்து பேசிச் சிரிச்சிட்டு சந்தோஷமா இருந்துட்டு போவாரு.’

‘என்னடி உளறுற? கிருஷ்ணனா?’

‘ஆமாம்மா. கிருஷ்ணனேதான். துவாரகாபுரி கிருஷ்ணன்.’

துளசியின் அம்மா கண்ணீருடன் தலையிலேயே அடித்துக்கொண்டாள். ‘இப்படி ஒரு அப்பாவிப் பொண்ண வச்சிகினு இந்த ஊருல எப்படிப் பொழைக்கப் போறேனோ, தெரியலையே’ என்று அழுதாள். ‘இந்த அப்பாவிப் பொண்ணுக்கு இப்படி ஒரு நிலைமையைக் கொடுத்திட்டியே தெய்வமே, எங்கள ஏன் இப்படி சோதிக்கற?’ என்று கூரையைப் பார்த்து புலம்பினாள். துளசியின் தந்தை உடல்நடுங்க வேறொரு பக்கத்தில் திகைப்பு நீங்காதவராக அமர்ந்திருந்தார். அவர் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தோடியது.

அன்று மாலை வரைக்கும் இருவரும் எதைஎதையோ சொல்லிப் புலம்பியபடி இருந்தனர். பொழுது சாயும் வேளையில் நீண்ட யோசனைக்குப் பிறகு துளசியின் அம்மா தன் கணவனை அருகில் அழைத்தாள்.

‘அவளை இந்த ஊருலயே வச்சிக்கறது அவளுக்கும் அவமானம். நமக்கும் அவமானம்.  இந்தக் குழந்தையை பெத்து கித்து முடியறவரைக்கும் அவ எங்க அம்மா வீட்டுல இருக்கட்டும்.  அவுங்க பார்வையிலயே எல்லாம் நடக்கட்டும். அதுக்கப்புறம் என்ன செய்யணுமோ, அதை யோசிச்சி செஞ்சிக்கலாம்.’

துளசியின் அப்பாவும் அவளுடைய முடிவை ஏற்றுக்கொண்டார். அன்று இரவு ஊர் அடங்கிய நேரத்தில் ஒரு கூண்டுவண்டியில் துளசியை மட்டும் ஏற்றிக்கொண்டு ஆறேழு கிராமங்கள் தள்ளியிருந்த மாமனார் ஊருக்குச் சென்றார். நிகழ்ந்த விவரங்களை அவர்களிடம் சுருக்கமாக எடுத்துரைத்துவிட்டு, துளசியை அவர்களிடம் ஒப்டைத்தார். பிறகு உடனடியாக அதே வண்டியில் விடிவதற்கு முன்பாகவே ஊருக்குத் திரும்பிவிட்டார்.

துளசியின் தாத்தாவும் பாட்டியும் அவளைக் கவனமுடன் பார்த்துக்கொண்டனர். வெளியே எங்கும் அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருந்தனர். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த கிழவி ஒருத்தி அடிக்கடி வந்து அவளுடைய நாடியைப் பிடித்துப் பார்த்துவிட்டு தேவையான மருந்துகளைக் கொடுத்துவிட்டுச் சென்றாள்.

சில மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் முன்னிரவுப் பொழுதில் துளசிக்கு வலி ஏற்பட்டது. உடனே துளசியின் தாத்தா வெளியே சென்று வைத்தியம் பார்க்கும் கிழவியை அழைத்துவந்தார். துளசியின் நாடியைப் பிடித்துப் பார்த்த கிழவி ‘பயப்பட வேணாம். சீக்கிரம் பொறந்துடும். ஒரு பாத்திரத்துல தண்ணிய நல்லா கொதிக்கவச்சி எடுத்துவாங்க’ என்று சொன்னாள்.

நள்ளிரவைக் கடந்த பொழுதில் ஆண் குழந்தை பிறந்தது. துளசி மயக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். கிழவி குழந்தையின் உடலை நன்றாகத் துடைத்து மெத்தென்று துணிகளுக்கிடையில் வைத்துத் தூக்கிக்கொண்டு வந்து துளசியின் தாத்தாவிடம் காட்டினாள். ‘இங்க பாருங்க, உங்களுக்குப் பேரன் பொறந்திருக்கான். தங்கத்துல காப்பு செஞ்சி போடுங்க’ என்றபடி பொக்கைவாயைத் திறந்து சிரித்தாள். தாத்தா அந்தக் குழந்தையை கைநீட்டி வாங்கவில்லை. தொட்டுக் கொஞ்சவும் இல்லை. அந்த மெளனத்தைக் கண்டு திகைப்புடன் அவரைப் பார்த்தாள் அவள்.

அந்த அறையிலிருந்து வேறொரு அறைக்கு கிழவியை அழைத்துச் சென்றார் துளசியின் தாத்தா.

‘இங்க பாரு, இந்தக் குழந்தையை விரும்பி ஏத்துக்கற நிலையில இங்க யாருமே இல்லை. சீரும் சிறப்புமா எதிர்காலத்துல வாழ வேண்டிய பொண்ணு இவ. என்னமோ ஒரு தகாத பழக்கத்துல இது உண்டாயிடுச்சி. கரைச்சி விட்டுடலாம்ங்கற கால அவகாசத்தைத் தாண்டித்தான் இந்த விஷயமே எல்லாருக்கும் தெரிய வந்தது. அதனால வேற வழியில்லாம பெத்தெடுக்க வேண்டியதாச்சி. இந்த வித்துடைய தடமே இங்க இருக்கக்கூடாது. இது வேணாம்னுதான் நாங்க நினைக்கறமே தவிர, இதை சாகடிக்கணும்னு நாங்க நினைக்கலை. நீ எங்களுக்காக ஒரு உதவி செய்யணும். இதை நீயே எடுத்து போயி ஆறேழு ஊருங்க தாண்டி எங்கனா கண் தெரியாத இடத்துல வச்சிடு. தேவை உள்ளவங்க எடுத்துட்டுப் போகட்டும். இல்லைன்னா, இதும் விதி போல நடக்கட்டும். இந்த உதவியை நாங்க என்னென்னைக்கும் மறக்கமாட்டோம்.’

கூடைநிறைய தானியங்களும் ஒரு சுருக்குப்பை நிறைய வெள்ளி நாணயங்களையும் கிழவியின் முன்னால் வைத்தார் துளசியின் தாத்தா. அவர் சொன்னதையெல்லாம் பொறுமையாகக் காதுகொடுத்துக் கேட்ட கிழவி ஒருகணம் தன் கையிலிருக்கும் குழந்தையின் முகத்தைப் பார்த்தாள். பெருமூச்சு விட்டபடி அறைக்குள் சென்று மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் துளசியின் முகத்தையும் பார்த்தாள். பிறகு ஒரு வார்த்தையும் சொல்லாமல் தனக்கு அளிக்கப்பட்ட கூடையிலேயே அந்தக் குழந்தையையும் வைத்துத் தூக்கிக்கொண்டு வெளியேறினாள்.

இரவு முழுதும் கால்போன திசையில் நடந்த கிழவி ஏதோ ஒரு கிராமத்தை அடைந்தாள். அதன் எல்லையில் பெரியதொரு அரசமரம் இருந்தது. அந்த மரத்தையொட்டி ஒரு பிள்ளையார் கோவிலும் அதைச் சுற்றி அடர்த்தியான புதர்களும் இருந்தன. பிள்ளையாரின் பாதத்தைத் தொட்டு தான் செய்யும் பாவத்துக்கு மன்னிப்பைக் கேட்டு பிரார்த்தனை செய்துகொண்டாள். பிறகு பக்கத்திலேயே இருந்த ஒரு புதருக்கருகில் துணிச்சுருளோடு குழந்தையை வைத்தாள். நீண்டதொரு பெருமூச்சு வாங்கிய பிறகு கூடையை தலையில் வைத்துக்கொண்டு வந்த வழியே திரும்பி வேகவேகமாக நடக்கத் தொடங்கினாள்.

அந்த ஊரில் மாடு மேய்க்கிற சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் சோமண்ணா. வழக்கம்போல அன்றும் காலை நேரத்தில் ஊரிலிருந்து மாடுகளையெல்லாம் ஓட்டிக் கொண்டு வந்தான் அவன்.  ஆலமரத்தை நெருங்கியதும்  புதர்களுக்கருகில் அவற்றை மேய்வதற்கு விட்டுவிட்டு   ஏரிக்கரையில் விளையாடுவதற்கு ஓடிவிட்டான். அவனைப்போலவே வேறுவேறு பகுதிகளிலிருந்து மாடுகளை ஓட்டி வந்து மேய்வதற்கு விட்ட சிறுவர்கள் ஏரிக்கரையில் அவனுக்காகக் காத்திருந்தனர். அவர்களோடு சேர்ந்து சோமண்ணாவும் விளையாடத் தொடங்கினான்.

புதருக்கிடையில் கிடந்த குழந்தை பசியில் அழுதது. அதன் அழுகுரல் கேட்டு அங்கே மேய்ந்துகொண்டிருந்த ஒரு பசு அக்குழந்தையின் அருகில் சென்றது. அந்தக் குழந்தை தன் உதடுகளால் கவ்வி பாலருந்தும் வண்ணம் குனிந்து தன் மடியைக் காட்டியது பசு. பசியின் வேகத்தில் அந்தக் குழந்தை பாலருந்தியது. மாலை வரையில் ஒவ்வொருமுறையும் அதன் அழுகுரல் எழுந்ததும் அந்தப் பசு எங்கிருந்தாலும் ஓடிவந்து தானாகவே குழந்தைக்கு அருகில் சென்று பாலூட்டியது.

வீட்டுக்குத் திரும்பவேண்டிய நேரம் வந்ததும் விளையாட்டை முடித்துக்கொண்டு திரும்பினான் சோமண்ணா.  எல்லா மாடுகளையும் ஒன்றாகத் திரட்டி எண்ணிப் பார்த்தான். அப்போதுதான் அவனுக்கு ஒரு பசு குறைவதை உணர்ந்தான். எங்கோ திசைமாறிச் சென்றுவிட்டதோ என நினைத்து நடுங்கினான். உடனே அவனுக்கு பயம் வந்துவிட்டது. வேகவேகமாக ஓடி அக்கம்பக்கம் மண்டியிருந்த புதர்களுக்கிடையில் நுழைந்து பசு போலவே ம்மே ம்மே என்று குரல் கொடுத்தபடி தேடினான்.

சோமண்ணாவுடைய எதிர்பார்ப்புக்கு உடனே பலன் கிட்டியது. ஒரு புதரிலிருந்து அவனுடைய அழைப்புக்கு ம்மே என ஒரு பதிலழைப்பை விடுத்தது பசு. அந்தக் குரலைக் கேட்ட பிறகே அவன் மனம் நிம்மதியாக உணர்ந்தது. குரல் வந்த திசையை நோக்கி ஓடினான். ஒரு மரத்தடியில் பசு நின்றிருப்பதையும் அதன் மடியில் ஒரு குழந்தை பால் அருந்திக்கொண்டிருப்பதையும் அவன் பார்த்தான்.

பசு கிடைத்துவிட்டது என்பது நிம்மதியை அளித்தாலும் யாருடைய குழந்தை இது, அது எப்படி இங்கு வந்தது என்னும் கேள்விகள் சோமண்னாவைத் துளைத்தெடுத்தன. உடனே அவன் அக்கம்பக்கத்தில் சிறிது தொலைவு வரைக்கும் ஓடிச் சென்று யாராவது தென்படுகிறார்களா என  தேடிப் பார்த்தான். எந்த இடத்திலும் மனித நடமாட்டமே இல்லை.  அரசமரத்தில் ஏறி உயரமான கிளையில் நின்றபடி எல்லாத் திசைகளிலும் பார்த்தான். கண்ணுக்கு எட்டிய தொலைவு வரைக்கும் ஒருவரும் தெரியவில்லை.

குழப்பத்தோடு கீழே இறங்கி அந்தக் குழந்தைக்கு அருகில் வந்தான் சோமண்ணா. குழந்தைக்கு உரியவர்கள் எங்காவது இங்குதான் இருப்பார்கள், விரைவில் வந்து எடுத்துக்கொண்டு செல்வார்கள் என நினைத்து தனக்குத்தானே அமைதியைத் தேடியபடி பசுவை அங்கிருந்து ஓட்டிச் செல்ல முனைந்தான். ஆனால் பசு அங்கிருந்து நகர மறுத்தது. எவ்வளவு தட்டிக் கொடுத்தாலும் கெஞ்சினாலும் அது ஓர் அடி தொலைவு கூட நகரவில்லை.

அந்தக் குழந்தையை விட்டு வர அதற்கு மனமில்லை என்பதை சோமண்ணா புரிந்துகொண்டான். ஒரு மாட்டுக்கு இருக்கும் இரக்கம் கூட தனக்கு இல்லாவிட்டால் மனிதனாக இருப்பதற்கே தனக்குத் தகுதியில்லை என்ற எண்ணம் அவனுக்குள் எழுந்தது. உடனே துணிச்சுருணையோடு அந்தக் குழந்தையை எடுத்து மார்போடு அணைத்துக்கொண்டான். அதற்குப் பிறகுதான் அந்தப் பசு அங்கிருந்து நகர்ந்தது.

சோமண்ணா அந்தக் குழந்தையை எடுத்துச் சென்று தன் அம்மாவிடம் கொடுத்து எல்லாத் தகவல்களையும் சொன்னான். அந்த அம்மா அக்குழந்தையை அன்போடு கைநீட்டி வாங்கிக்கொண்டாள். ‘யாரு பெத்த புள்ளயோ, இங்க வந்து நம்ம குடிசையில வாழணும்னு இதுந் தலையில எழுதியிருக்குது’ என்றாள். மடியில் கிடத்திக்கொண்டு கொஞ்சினாள். சோமண்ணாவும் அவளோடு சேர்ந்து அந்தக் குழந்தையிடம் கொஞ்சிக் கொஞ்சிப் பேசி விளையாடினான். அவன் அம்மா வீட்டிலிருந்த பாலாடையைத் தேடி எடுத்து வந்து அதன் வழியாக அக்குழந்தைக்குப் பாலூட்டினாள். பாலருந்தியபடி அக்குழந்தை தன் உருண்ட கண்களை உருட்டி உருட்டி அவளைப் பார்த்தது. அதன் கன்னத்தைத் தொட்டுக் கிள்ளி முத்தம் கொடுத்தான் சோமண்ணா.

‘அம்மா, இந்தப் பையனுக்கு ஒரு பேரு வைக்கலாமா?’ என்று அம்மாவிடம் கேட்டான்.

‘என்ன பேரு?’

‘என் பேரு சோமண்ணா. இவனுக்கு ராமண்ணான்னு வைக்கலாம். அப்பதான் பொருத்தமா இருக்கும்’ என்று சிரித்தான் சோமண்ணா.

அந்தப் பெயரைக் கேட்டதும் அவன் அம்மா சிரித்துவிட்டாள். உடனே அந்தக் குழந்தையின் பக்கம் திரும்பி ‘உன் பேரு ராமண்ணாவாடா? நீ ராமண்ணாவா?’ என்று கேட்டு கண்களைச் சிமிட்டினாள். அந்தக் குழந்தைக்கு எதுவும் புரியவில்லை. விழிகளை மட்டும் உருட்டி உருட்டிப் பார்த்தது.

அன்றுமுதல் ராமண்ணாவையும் தன் குழந்தையாகவே நினைத்து வளர்க்கத் தொடங்கினாள் அவள். சோமண்ணாவும் அவனைத் தன் தம்பியாக நினைத்துக் கொஞ்சினான்.

குழந்தைப்பேறு முடிந்து ஆறேழு மாதங்களுக்குப் பிறகு துளசியின் அப்பா மாமனார் வீட்டுக்கு வந்து துளசியை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பினார்.  தாத்தா வீட்டில் வசித்துவந்த காலத்தில் மெல்ல மெல்ல துளசியின் மனநிலையும் மாறியது. கற்பனைகளைத் துறந்து மற்றவர்கள் போல நிஜமான வாழ்க்கையை வாழ அவளுக்கும் விருப்பம் ஏற்பட்டது.

துளசிக்குப் பொருத்தமான மாப்பிள்ளையைத் தேடி பல இடங்களில் அலைந்தார் அவளுடைய அப்பா. அவருடைய அலைச்சல்கள் வீண்போகவில்லை. பத்து பன்னிரண்டு கிராமங்களுக்கு அப்பால் ஒரு சின்ன கிராமத்தில் ஒரு நல்ல சம்பந்தம் கிடைத்தது. மாப்பிள்ளை அந்த ஊர் தலையாரியிடம் மாத சம்பளத்துக்கு வேலை செய்துவந்தான். அவன் பெயர் உபேந்திரா. ஒருநாள் மாப்பிள்ளையை அவர் நேரில் சந்தித்து உரையாடி பழகிப்பார்த்தார். அவருக்குத் திருப்தியாக இருந்தது. தம் வீட்டுக்கு ஒருமுறை வந்து பெண்ணைப் பார்க்கும்படி சொல்லிவிட்டு அவர் கிராமத்துக்குத் திரும்பினார்.

சில நாட்களுக்குப் பிறகு உபேந்திராவும் அவனுடைய பெற்றோரும் சுற்றத்தாரும் வந்து துளசியைப் பார்த்தனர். துளசியைப் பார்த்ததுமே அவர்களுக்கும் பெண்ணைப் பிடித்துவிட்டது. இரு வீட்டினரும் பேசி, அன்றே தட்டு மாற்றிக்கொண்டனர். ஒரு மாத இடைவெளியிலேயே திருமணமும் முடிந்தது. தன்னுடைய பிறந்த ஊரைவிட்டு வெகுதொலைவில் உள்ள இன்னொரு கிராமத்தில் வாழ்வதற்காக, உபேந்திராவோடு சென்றாள் துளசி.

எட்டு ஆண்டு கால வாழ்வில் அவளுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். எல்லோருமே ஆண் பிள்ளைகள். மூன்று பேருமே அம்மா மீது பாசம் கொண்டவர்களாக வளர்ந்தனர்.

எட்டு ஆண்டுகளில் சோமண்ணா வீட்டில் ராமண்ணாவும் வளர்ந்து பெரியவனானான். சோமண்ணாவோடு சேர்ந்து அவனும் மாடுகளை மேய்ப்பதற்குச் சென்றான். எல்லோரும் மாடுகளை மேய்வதற்கு விட்டுவிட்டு ஏரியில் இறங்கி நீந்தி விளையாடிக்கொண்டிருக்கும் சமயத்தில் ராமண்ணா மட்டும் மரப்பட்டைகளைச் செதுக்கியும் கீறியும் அழகான உருவங்களை உருவாக்கி மகிழ்ந்தான்.

ஒருநாள் ஏரிக்கரையோரம் அவனுக்கு உளியின் அமைப்பில் ஒரு கல் கிடைத்தது. அதை எடுத்துவந்து முறிந்து விழுந்திருந்த மரக்கட்டையில் செதுக்கிச் செதுக்கி ஒரு பிள்ளையாரைச் செய்தான். ஏரியில் குளித்துவிட்டு திரும்பிய சோமண்ணாவும் அவனுடைய நண்பர்களும் அந்தப் பிள்ளையாரைப் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டனர். ‘நீயாடா செஞ்ச? நீயாடா செஞ்ச?’ என்று ராமண்ணாவை மீண்டும் மீண்டும் கேட்டனர். ‘வாடா, கோயில்ல கொண்டுபோய் வைக்கலாம். ரொம்ப அழகா இருக்குதுடா’ என்றபடி ஒருவன் அந்தப் பிள்ளையாரை எடுத்துச் சென்று பக்கத்திலிருந்த கோவில் வாசலில் வைத்தான். இன்னொருவன் புதரில் பூத்திருந்த எருக்கம் பூவைப் பறித்துவந்து அதற்கு அருகில் வைத்தான்.

அன்று இரவு சாப்பிடும் நேரத்தில் தன் அம்மாவிடம் ராமண்ணா பிள்ளையார் செய்த செய்தியைச் சொல்லி மகிழ்ந்தான் சோமண்ணா. ‘எனக்குத் தெரியும்டா, அவன் தங்கக்கட்டி’ என்று புன்னகைத்தாள் அம்மா.

அடுத்தநாள் காலையில் எங்கெங்கோ தேடி அலைந்து ஒரு சிறிய உளியை வாங்கிவந்து ராமண்ணாவுக்குக் கொடுத்தான் சோமண்ணா.  கையில் உளி கிடைத்ததும் வேலை எதுவுமின்றி உட்கார்ந்திருக்கும் நேரத்திலெல்லாம் மரத்துண்டுகளில் சின்னச்சின்ன பொம்மைகளைச் செய்வது  ராமண்ணாவின் பொழுதுபோக்காக மாறிவிட்டது.

ஒருநாள் மாடுகளை ஓட்டிக்கொண்டு திரும்புகிற வழியில் சாலையோரமாக எப்போதோ காற்றுமழையில் விழுந்து உலர்ந்துகிடந்த ஒரு மரக்கிளையைப் பார்த்தான் ராமண்ணா. உருண்டு பருத்த அதன் பகுதி சிற்பம் செய்ய பொருத்தமாக இருக்கும் என அவன் மனம் நினைத்தது. உடனே அந்தக் கிளையை வீட்டுக்கு இழுத்து வந்தான். அந்தக் கிளையிலிருந்து தேவையான பகுதியை மட்டும் கத்தியால் வெட்டித் துண்டாக்கி எடுத்துக்கொண்டான்.

உடனே அவன் கைகள் வேகவேகமாக இயங்கின. தன் உளியை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக சீவி வீசியபடி இருந்தான். பருத்த மரத்துண்டு, அழகான ஒரு பந்துபோல மாறி, அடுத்த ஒரு சில நிமிடங்களிலேயே பிள்ளையார் உருவம் திரண்டு வந்தது. அவனுக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்து அந்த அதிசயத்தைப் பார்த்தபடி இருந்தான் சோமண்ணா. அடுத்த அரைமணி நேரத்தில் பிள்ளையார் உருவம் தயாராகிவிட்டது. அதைப் பார்த்து தொட்டுத் தொட்டுப் பூரித்தாள் அவன் அம்மா. உடனே அதைக் கழுவி பொட்டும் பூவும் வைத்து பூசை அறையில் வைத்துவிட்டாள். அதை வேறு யாரிடமும் காட்டவோ, கொடுக்கவோ அவளுக்கு மனம் வரவில்லை.

அந்த ஊரிலிருந்து நான்கு ஊர் தள்ளி ஒரு சிறிய நகரம் இருந்தது. அங்கே பெரியதொரு பிள்ளையார் கோவில் இருந்தது. ஆண்டுக்கொரு முறை நடக்கும் திருவிழாவில் அந்த வட்டாரத்தில் வசிப்பவர்கள் அனைவரும் கலந்துகொள்வது வழக்கம். அதற்காகவே எல்லாப் பக்கங்களிலிருந்தும் மக்கள் வண்டி கட்டிக்கொண்டு வருவார்கள்.

சோமண்ணாவின் ஊரிலிருந்து பல வண்டிகள் அந்தத் திருவிழாவுக்குப் புறப்பட்டன. சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் அனைவரும் கூட்டம்கூட்டமாக கிடைத்த வண்டிகளில் ஏறிச் சென்றார்கள். ஏரிக்கரையில் மாடு மேய்க்கும் சிறுவர்களின் கூட்டம் ஒரு வண்டியில் ஏறிக் கொண்டது. ராமண்ணாவுக்கும் சோமண்ணாவுக்கும் அந்த வண்டியில் இடம் கிடைத்தது. கூட்டத்தோடு கூட்டமாக ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் அவர்கள் பயணம் தொடர்ந்தது.

வண்டிக்குள் அமர்ந்திருந்த நேரத்தில் கைக்குக் கிடைத்த ஒரு மரத்துண்டில் கைக்கு அடக்கமான அளவில் சின்னஞ்சிறிய ஒரு பிள்ளையாரைச் செய்துமுடித்தான் ராமண்ணா. அதை அனைவரும் வாங்கிப் பார்த்து மகிழ்ந்துவிட்டு அவனிடமே கொடுத்தார்கள். இரவு வீட்டுக்குத் திரும்பியதும் தன் அம்மாவுக்கு அந்தப் பிள்ளையாரை பரிசாகக் கொடுக்கவேண்டும் என அவன் நினைத்துக்கொண்டான்.

நகரத்தை அடைந்ததும் நெரிசலைத் தவிர்ப்பதற்காக, ஊருக்கு வெளியேயே எல்லா வண்டிகளும் நிறுத்தப்பட்டன. வண்டிக்காரர் அனைவரையும் அங்கேயே இறக்கிவிட்டார். மாலை நெருங்கியதும் குறிப்பிட்ட நேரத்தில் அனைவரும் திரும்பி வந்துவிடவேண்டும் என்று சொல்லி அனைவரையும் திருவிழா பார்க்க அனுப்பிவைத்தார்.

ஆயிரக்கணக்கில் கூடி நிறைந்திருக்கிற மனித நடமாட்டத்தைப் பார்க்கப் பார்க்க ராமண்ணாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. உலகத்தில் உள்ள மனிதர்கள் அனைவரும் அங்கே சேர்ந்துவிட்டார்களோ என்ற எண்ணம் எழுந்தது. எல்லோரும் உற்சாகமாக வேடிக்கை பார்த்தபடி சாலை ஓரமாக நடந்துபோனார்கள்.

கோவிலுக்கு எதிரே தேர் நின்றிருந்தது. பூ அலங்கார வேலை நடந்தபடி இருந்தது. சிறுவர்கள் அந்தத் தேரைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள். அவர்கள் வேகமாக ஒரு சுற்று சுற்றிவிட்டு ‘அந்தப் பக்கம் போவலாம்டா. அங்கதான் ராட்டினம் இருக்குது. போய் ஆடலாம்’ என்று சொன்ன சொற்களை அவன் மனம் உள்வாங்கிக்கொள்ளவில்லை. தேரின் பீடத்தைச் சுற்றி செதுக்கப்பட்டிருந்த சிற்பங்களை நின்று நின்று வேடிக்கை பார்ப்பதிலேயே மூழ்கியிருந்தான் ராமண்ணா. சின்னச் சின்ன சிற்பம் கூட எவ்வளவு அழகான வேலைப்பாடுடன் செய்யப்பட்டுள்ளது என நினைத்து நினைத்து அவன் மனம் ஆச்சரியப்பட்டது. வெகுநேரத்துக்குப் பிறகுதான் அவர்கள் தன்னைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டனர் என்பதை அவன் புரிந்துகொண்டான். அக்கணமே அவன் மனம் அச்சத்தில் மூழ்கியது. சோமண்ணாவை அவன் கண்கள் தேடின. ‘சோமண்ணா சோமண்ணா’ என்று கூவியபடி ஒவ்வொரு திசையிலும் சிறிது தொலைவு ஓடி ஓடிப் பார்த்தான்.

திருவிழாவுக்கு வந்த கூட்டத்தினரின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகிக்கொண்டே இருந்தது. ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொள்ளாமல் நடக்க முடியாது என்பதுபோல இருந்தது. கிடைத்த இடைவெளியில் எல்லாம் புகுந்து புகுந்து சோமண்ணாவின் முகத்தைத் தேடினான் ராமண்ணா. அவனைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

இருள் கவிந்தது. ராமண்ணாவின் மனத்தில் அச்சம் பெருகியது. இனிமேல் தன் ஊருக்கே திரும்பிச் செல்லமுடியாமல் போய்விடுமோ என நினைத்தபோது அவன் உடல் நடுங்கியது. அழுகை பெருகியது.

அழுது அழுது மனம் சோர்ந்து அவன் ஒரு மரத்தடியில் நின்றான். கண்ணில் தென்படுகிறவர்களையெல்லாம் ஏக்கத்துடன் பார்த்தான். அவனை அறியாமலேயே அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தபடி இருந்தது.

அதே நேரத்தில், உபேந்திரா தன் மூன்று பிள்ளைகளுக்கு தேர்த்திருவிழாவைச் சுற்றிக் காட்டிவிட்டு, ஊருக்குத் திரும்பிச் செல்ல தன் வண்டியை நிறுத்திவைத்திருந்த இடத்தை நோக்கி நடந்துவந்தான். அழுதுகொண்டு நின்ற ராமண்ணாவை அவன்தான் முதன்முதலாகப் பார்த்தான். அச்சிறுவனைக் கடந்து அவனால் நடக்கமுடியவில்லை. பக்கத்தில் சென்று ‘யாருப்பா நீ? எதுக்கு இங்க நின்னு அழுதுகிட்டிருக்க? பெரியவங்க யாரும் கூட வரலையா?’ என்று கேட்டான்.

ராமண்ணாவால் எந்தக் கேள்விக்கும் சரியாகப் பதில் சொல்லமுடியவில்லை. அழுகை மட்டும் பெருகியது. ‘சரி சரி. அழாத. நான் உனக்கு உதவி செய்றேன். எதுக்கும் பயப்படாத. மெதுவா என்ன நடந்ததுன்னு சொல்லு’  என்று அச்சிறுவனின் தோளைத் தொட்டு தட்டிக் கொடுத்தபடி சொன்னான் உபேந்திரா.

உபேந்திராவின் ஆதரவான பேச்சைக் கேட்டு ராமண்ணாவின் அழுகை மெல்ல மெல்ல அடங்கியது. அவனுடைய முகத்தைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக அமைதியடைந்தான் அவன். பிறகு ஊரிலிருந்து வண்டியில் புறப்பட்டது முதல், தேரின் பீடத்தில் இருந்த சிற்பங்களைப் பார்த்தபடி நின்றுவிட்ட இடைவெளியில் தன்னோடு வந்தவர்களிடமிருந்து பிரிந்துவிட்டதுவரை வரிசையாகச் சொன்னான்.

‘சரி, பயப்படாத. வண்டிய எங்க நிறுத்தியிருக்காங்க, தெரியுமா?’

தெரியாது என்பதன் அடையாளமாக உதட்டைப் பிதுக்கினான் ராமண்ணா.

‘வண்டிக்கு பக்கத்துல என்ன பார்த்த, அதாவது ஞாபகம் இருக்குதா?’

‘சுத்தி சுத்தி நிறைய மரங்கள் இருந்திச்சி. நிறைய வண்டிங்கள நிறுத்தியிருந்தாங்க.’

அந்தத் தகவல்களைக் கொண்டு ஓர் இடத்தைக் கண்டுபிடிக்க முடியாது என்பதால் மேற்கொண்டு என்ன பேசுவது என்று புரியாமல் யோசனையில் மூழ்கினான் உபேந்திரா.  அப்போதுதான் அவன் கையில் ஏதோ ஒரு பொம்மையைப் பார்த்தான் உபேந்திரா.

‘என்னடா பொம்மை இது?’ என்று கேட்டபடி கையை நீட்டினான். அதை அவனிடம் நீட்டியபடி ராமண்ணா ‘புள்ளையாரு’ என்றான். அதை வாங்கிப் பார்த்த உபேந்திரா ‘நல்லா இருக்குதே, எங்க வாங்கன?’ என்று கேட்டான்.

‘வாங்கலை. நானே செஞ்சேன்’ என்றான் ராமண்ணா.

ஒரு கணம் அதை நம்பமுடியாதவனாக அந்தப் பிள்ளையாரையே திருப்பித்திருப்பிப் பார்த்தான் உபேந்திரா. அதன் அழகு அவனைக் கவர்ந்தது. உடனே தன் பிள்ளைகள் பக்கமாகத் திரும்பி அந்தப் பிள்ளையாரை நீட்டி ‘பாருங்கடா, இந்தப் பிள்ளையாரை இந்தச் சின்னப்பையன் செஞ்சானாம். எவ்ளோ அழகா இருக்குது பாரு’ என்றான். அவர்களும் அதை வாங்கிப் பார்த்து புன்னகையுடன் தலையாட்டிவிட்டு அவனிடம் கொடுத்தார்கள்.

தன் பிள்ளைகளோடு அவனையும் சேர்த்து அழைத்துக்கொண்டு தன் வண்டி நிற்கும் இடத்துக்குச் சென்றான் உபேந்திரா.

அவர்கள் வருவதை தொலைவிலிருந்தே பார்த்துவிட்ட வண்டிக்காரர் உடனே படுத்திருந்த மாடுகளை எழுப்பி வண்டியில் பூட்டி புறப்படுவதற்குத் தயார் செய்தார்.

வண்டிக்கு அருகில் வந்ததும் ராமண்ணாவிடம் ‘ஒரு நிமிஷம் இந்த இடத்துல நல்லா சுத்தி பாருடா. நீ வந்த வண்டி எங்காவது நிக்குதா பாருடா’ என்றான். ராமண்ணா உடனடியாக வண்டி மீது ஏறி தன்னைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் பார்வையைச் சுழற்றினான். எந்த இடத்திலும் அவன் வண்டியின் தடம் தெரியவில்லை. அவன் கண்கள் திடீரென கலங்கத் தொடங்கின. ‘எங்கயும் இல்ல’ என்பதன் அடையாளமாக உதட்டைப் பிதுக்கி தலையசைத்தான் ராமண்ணா.

‘சரி. சரி. அதுக்காக கவலைப்பட வேணாம். வா. நம்ம வீட்டுக்குப் போவலாம். வேறொரு நாள் திரும்பி வந்து தேடிப் பார்க்கலாம்’ என்றான் உபேந்திரா.

உபேந்திராவின் மூன்று பிள்ளைகளும் வண்டிக்குள் ஏறி உட்கார்ந்தனர். தயக்கத்துடன் நாலு பக்கங்களிலும் சுற்றிப் பார்த்துவிட்டு கடைசியாக ராமண்ணாவும் வண்டியில் ஏறி உட்கார்ந்தான். பிள்ளைகள் அனைவரும் வண்டிக்குள் ஏறியதும் கடைசி ஆளாக வண்டிக்குள் ஏறி காலைத் தொங்கப் போட்டபடி உட்கார்ந்தான் உபேந்திரா.  மூன்று பிள்ளைகளும் ராமண்ணாவிடம் உற்சாகமாக கதை பேச ஆரம்பித்தனர்.

அவர்கள் வீட்டை அடையும்போது இரவு நேரமாகிவிட்டது. அவர்கள் வருகைக்காக வாசலிலேயே காத்திருந்தாள் துளசி. வண்டியிலிருந்து இறங்கிய வேகத்தில் மூன்று பிள்ளைகளும் ஓடிச் சென்று அவளைச் சுற்றிக் கொண்டன. திருவிழாவில் பார்த்ததையெல்லாம் பட்டியலிட்டுச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்கள்.

கடைசியாக வண்டியிலிருந்து இறங்கிய உபேந்திரா ஒரு சிறுவனைத் தூக்கி இறக்குவதை அப்போதுதான்  பார்த்தாள் துளசி. ‘இது யாரு? புதுசா இருக்குது?’ என்று கேட்டபடி அவனை நெருங்கினாள். உபேந்திரா பதில் சொல்லத் தொடங்கும் முன்பாக ஒவ்வொருவனும் ‘நான் சொல்றேன். நான் சொல்றேன்’ என்று ராமண்ணாவைக் கண்டுபிடித்த கதையை போட்டி போட்டுக்கொண்டு சொல்லிமுடித்தனர்.

‘ஐயோ, பாவம். நம்ம வீட்டுலயே புள்ளையோடு புள்ளையா இருக்கட்டும் விடுங்க’ என்றாள் துளசி. ‘அதைதான் நான் சொல்லணும்னு நெனச்சேன். நீயே சொல்லிட்ட’ என்று புன்னகைத்தான் உபேந்திரா.

பிள்ளைகள் ராமண்ணாவின் கையில் இருந்த பிள்ளையாரை வாங்கி துளசியிடம் காட்டினர். ‘இங்க பாரும்மா, பிள்ளையாரு. இவனே செஞ்சானாம். எவ்ளோ அழகா செஞ்சிருக்கான் பாரு. நீ அப்படியே சாமி மாடத்துல வச்சி பூசை செய்யலாம். அவ்ளோ அழகு’ என்றார் பெரியவன்.

பிள்ளையாரை வாங்கிப் பார்த்த துளசி அதன் அமைப்பையும் அழகையும் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கினாள். ‘பார்க்கறதுக்கு வாழைக்கன்னு மாதிரி இத்தனூண்டு இருக்கான். இவனா இதைச் செஞ்சான்? ஆச்சரியமா இருக்குது. எல்லாம் தெய்வத்துடைய அருள்’ என்றாள். ராமண்ணாவின் கன்னத்தைத் தொட்டு தட்டிக் கொடுத்துவிட்டு தலையை வருடிக் கொடுத்தாள்.

ராமண்ணா அந்தத் தீண்டலில் மனம் நெகிழ்ந்து துளசியை ஒருகணம் நிமிர்ந்து ஏக்கத்துடன் பார்த்தான். அந்தப் பார்வை அவளை என்னமோ செய்தது. அவள் அச்சிறுவனை மறுபடியும் ஊன்றிப் பார்த்தாள். அந்த முகம். அந்தக் கண்கள். அந்தக் கன்னம். இலைபோல விரிந்த அந்தக் காதுகள். சுருள்முடித்தலை. எல்லாவற்றிலும் ஒரே அடையாளம். நீண்ட காலத்துக்கு முன்னால் கிருஷ்ணனாக வந்து மயக்கிய கோவிந்தப்பாவின் அதே முகம்.  அதே பார்வை. அவள் உடல் ஒருகணம் சிலிர்த்து அடங்கியது. கண்களில் நீர் திரண்டுவிடாதபடி அவள் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டாள்.

அவன் தலையை மீண்டும் வருடியபடி ‘உன் பேரென்னப்பா?’ என்று கேட்டாள்.

அவன் ‘ராமண்ணா’ என்றான்.

‘அம்மா பேரு?’

‘தெரியாது.’

‘அப்பா பேரு?’

‘தெரியாது’ என்று உதட்டைப் பிதுக்கினான்.

அவள் மேலும் கேள்விகளைத் தொடுக்கும் முன்பாக உபேந்திரா குறுக்கிட்டான். ‘எல்லாத்தயும் வரும்போது கேட்டுட்டேன் துளசி. ஏழெட்டு வருஷத்துக்கு முன்னால  யாரோ காட்டுல போட்டுட்டு போயிட்டாங்களாம். மாடு மேய்க்கிற பையன் ஒருத்தன் குடும்பம்தான் கொண்டுவந்து காப்பாத்தியிருக்குது. அந்தப் பையன் பேரு சோமண்ணாங்கறதால இவனுக்கு ராமண்ணான்னு பேரு வச்சிருக்காங்க. என்னமோ தெய்வத்துடைய அருள்தான் இவனைக் காப்பாத்தியிருக்குது’ என்றான்.

‘ஆமாங்க. அந்தத் தெய்வத்துடைய அருள்தான். பாவம், ஆதரவு இல்லாம அலைஞ்சிட்டிருந்த பையன் உங்க பார்வையில பட்டு நம்ம குடும்பத்துல வந்து சேரணும்னு விதி இருக்குதுபோல’ என்றாள். உணர்ச்சிப்பெருக்கில் அவள் குரல் கரகரத்தது. ‘இவன் நான் பெத்த பிள்ளை. மனுஷங்க பிரிக்கணும்னு நெனச்சாலும் கடைசியா தெய்வம் சேர்த்துவச்சிட்டுது’ என்று ஆழ்மனத்துக்குள் நினைத்துக்கொண்டாள். பிறகு, ‘சரி, நேரமாவுது. எல்லாரும் கைகால கழுவிகிட்டு சாப்பிட வாங்க’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்றாள் துளசி.

0

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *