ஒரு காலத்தில் இந்த நாட்டின் ஒரு சிறிய பிரதேசத்தை ராமப்பா என்னும் அரசன் ஆட்சி புரிந்துவந்தான். அவனுக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் மல்லப்பா. ஒரே பிள்ளை என்பதால் அந்த அரசன் அவனைச் செல்லமாக வளர்த்துவந்தான். அரண்மனையில் அவனைத் தூக்கிவைத்துக்கொண்டு கொஞ்சாதவர்களே இல்லை. அனைவருக்கும் அவன் பிடித்த பிள்ளையாக இருந்தான். எல்லோரும் அவனுக்கு விளையாட்டு காட்டி உற்சாகமாக வளர்த்துவந்தனர்.
மல்லப்பாவுக்கு ஐந்து வயது நிரம்பியதும், ஓர் அரசகுடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைக்குத் தேவையான திறமைகளையெல்லாம் வளர்த்துக்கொள்ளும் வகையில் அவனை தக்க குருமார்களிடம் அனுப்பி எல்லாப் பயிற்சிகளையும் பெற வழி செய்தான் அரசன். கல்வி, இசை, நடனம் போன்ற கலைகள், போர்க்கலை என அனைத்துவிதமான கலைகளிலும் மல்லப்பாவுக்கு ஆர்வம் இருந்தது. அதனால் அவன் குறுகிய காலத்திலேயே எல்லாக் கலைகளையும் ஆழமாகக் கற்றுத் தேர்ச்சியடைந்தான். அவனுடைய திறமையையும் பணிவையும் ஆர்வத்தையும் கண்ட குருமார்கள் அனைவரும் அவனுக்கு உற்சாகமாகக் கற்பித்தனர். பல ஆண்டு கால இடைவிடாத பயிற்சியின் விளைவாக அவன் எல்லாக் கலைகளிலும் தேர்ச்சி பெற்று விளங்கினான்.
கல்விப்பயிற்சி, ஆயுதப்பயிற்சி ஆகியவற்றைவிட ஆன்மிகத்திலும் பக்தியிலும் தியானத்திலும் யோகக்கலையிலும் கூடுதலான ஆர்வம் கொண்டவனாக இருந்தான் மல்லப்பா. அதைச் சார்ந்த ஐயங்களையெல்லாம் ஒவ்வொரு நாளும் ஆசிரியர்களிடம் கேட்டு விளக்கம் பெற்றான். அதன் விளைவாக அவன் மனம் துறவை நாடியது. துறவு வழியாக மட்டுமே இறையனுபவத்தைப் பெறமுடியும் என அவன் நம்பினான். மண்ணுலக இன்பத்தைவிட விண்ணுலக இன்பமே பேரின்பம் என அவன் உறுதியாக நினைத்தான். அந்த நம்பிக்கையின் விளைவாக, ஓய்ந்திருக்கும் நேரமெல்லாம் இறைவனை நினைத்து தியானத்தில் ஆழ்ந்திருந்தான்.
மல்லப்பாவின் சிந்தனைப்போக்கு ராமப்பாவுக்கு வருத்தத்தை அளிக்கத் தொடங்கியது. ‘சின்னப் பையன்தானே அவன்? ஏதோ ஒரு வேகத்துல இப்ப இப்படி நினைக்கிறான். அதுக்காக ஏன் கவலைப்படறீங்க? நாளைக்கு வளரவளர தானாவே அவன் சரியாயிடுவான்’ என்று ராமப்பாவின் மனைவி அவனுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பேசினாள். அரசனும் அதைக் கேட்டு காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும் என நினைத்து அமைதியடைந்தான்.
மல்லப்பா மெல்ல மெல்ல வளர்ந்து வாலிபனானான். ஆனால் அனைவரும் எதிர்பார்த்ததுபோல அவனுடைய போக்கில் எவ்விதமான மாற்றமும் ஏற்படவில்லை. அவன் துறவு எண்ணத்தில் இன்னும் தீவிரமாக மூழ்கியிருந்தான். இல்லற வாழ்விலும் அரச வாழ்விலும் கொஞ்சம் கூட அவனுக்கு ஈடுபாடு இல்லை.
அந்தப் பிரதேசத்தைச் சுற்றியிருக்கும் வெவ்வேறு ராஜ்ஜியங்களைச் சேர்ந்த அரசர்கள் தம் பெண்களை மல்லப்பாவுக்குத் திருமணம் செய்து கொடுக்க விரும்பினர். அதனால் தம் பெண்களின் ஆருடக்குறிப்புகளை எடுத்துக்கொண்டு அரசனைச் சந்திக்க வந்து பேச்சுவார்த்தையைத் தொடங்கினர். ஆனால், மல்லப்பாவுக்குத் திருமணத்தில் நாட்டமில்லை என்பதைப் புரிந்துகொண்டதும் அவர்கள் பின்வாங்கிவிட்டனர்.
ஒருசிலர் அந்த நகரத்துக்கு நேரிடையாக வந்து மல்லப்பாவைச் சந்தித்து உரையாடிப் பார்த்தனர். ஆனால் ஒருவராலும் மல்லப்பாவின் நெஞ்சில் திருமண ஆசையை ஏற்படுத்த முடியவில்லை. அவனுடைய உறுதியான போக்கைப் பார்த்து ராமப்பா மிகவும் மனம் தளர்ந்துபோனான்.
ஒருநாள் அரசனே மல்லப்பாவைச் சந்தித்து தன் வருத்தத்தை வெளிப்படுத்தினான்.
‘உலகத்துல எல்லா அம்மா அப்பாவும் தன்னுடைய புள்ளைக்கு கல்யாணம் செஞ்சி பார்க்கணும்னு ஆசைப்படற மாதிரி நாங்களும் ஆசைபடறதுல என்ன தப்பு இருக்குது? அதை நீ ஏன் புரிஞ்சிக்கமாட்டற? காலாகாலத்துல நீ கல்யாணம் செஞ்சிகிட்டா எங்களுக்கு நிம்மதியா இருக்கும். அப்பதான உனக்குப் பிறகு இந்த ராஜ்ஜியத்தை ஆட்சி செய்ய ஒரு வாரிசு உருவாகும்.’
ராமப்பாவின் சொற்களைத் தலைகுனிந்த நிலையில் அமைதியாகக் கேட்டான் மல்லப்பா. பிறகு மெதுவாக ‘என்னை மன்னிச்சிக்கப்பா. தற்சமயம், எனக்குத் திருமணத்துல விருப்பம் வரலை. ஒருவேளை எதிர்காலத்துல அப்படி ஒரு விருப்பம் ஏற்பட்டா, அப்ப நான் உங்ககிட்ட உடனே வந்து சொல்றேன். அதுக்கேத்த மாதிரி அப்ப நீங்க ஏற்பாடு செய்யலாம்’ என்று தெரிவித்தான்.
‘மல்லப்பா, எங்களுக்கு ஒன்னை மாதிரி அஞ்சாறு பிள்ளைங்க இருந்திருந்தா இந்தப் பேச்சுக்கே இடமிருந்திருக்காது. எங்களுக்கு இருக்கறது நீ ஒரே பிள்ளை. இப்படி நீ தனி ஆளாவே காலத்தை கடத்திட்டா, நாளைக்கு அந்தக் காலம் திரும்பி வராது. செல்வத்தை இழந்தா மறுபடியும் சம்பாதிச்சிக்கலாம். ஆனா இழந்துபோன காலத்தை ஒருநாளும் சம்பாதிக்கமுடியாது. புரிஞ்சிக்கோ’ என்று வேதனையோடு சொன்னான்.
இரண்டடி முன்னால் வந்து அப்பாவின் கைகளைப் பற்றிக்கொண்டான் மல்லப்பா. ‘இங்க பாருங்கப்பா. காத்தடிக்கிற பக்கம் பறந்துபோற இலை மாதிரி இந்த ஆன்மிகம் என்னை எங்கயோ இழுத்துட்டு போவுது. எவ்வளவு தூரம் போகமுடியுமோ அவ்வளவு தூரம் போயிட்டு நான் திரும்பி வருவேன். என்னை நம்புங்கப்பா’ என்று சொன்னான். அச்சமயத்துக்கு அந்தச் சொற்கள் ராமப்பாவுக்கு மிகவும் ஆறுதலை அளித்தன. ‘சரிப்பா, சரி. உன் விருப்பம் போலச் செய்’ என்று சொன்னபடி முதுகைத் தட்டிக் கொடுத்துவிட்டு நடந்தான் ராமப்பா.
ராமப்பா ஆட்சி புரிந்த பிரதேசத்துக்குக் கிழக்கே வெகுதொலைவில் வேறொரு பிரதேசம் இருந்தது. அதை ரங்கண்ணா என்பவன் ஆட்சி புரிந்துவந்தான். அவனுக்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். அவளுடைய பெயர் கங்காதேவி. அவளுக்கு எல்லாக் கலைகளிலும் பயிற்சி இருந்தது.
திருமண வயதை அடைந்ததும், அவளுக்குப் பொருத்தமான மாப்பிள்ளையைத் தேடத் தொடங்கினான் ரங்கண்ணா. அந்தச் செய்தியைத் தன் மகளிடமும் தெரிவித்தான். உடனே அவள் ‘அப்பா, எனக்கு மாப்பிள்ளையா வரக்கூடியவரு வெறும் வீரசூரனா மட்டும் இருந்தா போதாதுப்பா. எனக்குப் புடிச்ச மாதிரி, என்னோடு கலந்து பேசி விவாதிக்கிற மாதிரி, அறிவாளியாவும் இருக்கணும். அந்த மாதிரி ஒரு மாப்பிள்ளையைத் தேடுங்கப்பா’ என்றார்.
‘பேசறதையும் பழகறதையும் வச்சி ஒருத்தன் அறிவாளியா இல்லையான்னு எப்படிம்மா தெரிஞ்சிக்க முடியும்? ஒரு அரச குடும்பத்துல வளர்ந்து நிக்கிறவங்க அறிவில்லாமலயா வளர்ந்திருப்பாங்க?’
‘அப்பா, படிப்புங்கறது வேற, ஞானம்ங்கறது வேற.’
‘எல்லாம் சரிம்மா. அதை நான் எப்படி கண்டுபுடிக்கிறது?’
கங்காதேவி சிறிது நேரம் யோசனையில் மூழ்கினாள். பிறகு ‘அப்பா, நான் சொல்றமாதிரி செய்யுங்க. என்னைக் கல்யாணம் செஞ்சிக்கறேன்னு சொல்லி எந்த நாட்டுலேர்ந்து எந்த இளவரசன் வந்தாலும், உங்க முன்னிலையிலயே என்னைச் சந்திக்கணும். நான் அவன்கிட்ட ஒரு பத்து கேள்வி கேட்பேன். அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ற விதத்துலயே அவனுடைய அறிவுத்திறமை எப்படிங்கறது தெரிஞ்சிடும். பத்து கேள்விக்கும் பொருத்தமான பதிலைச் சொல்றவனைத்தான் நாம தேர்ந்தெடுக்கணும். இந்தப் போட்டி பற்றிய செய்தியை ஒரு ஓலையில எழுதி இன்னைக்கே எல்லா பிரதேசங்களுக்கும் அனுப்பி வைங்க. யார்யார் வராங்க, யார் ஜெயிக்கப் போறாங்கன்னு நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.’
கங்காதேவியின் முகம் பிரகாசத்தில் மின்னியது. அவள் திட்டத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர ரங்கண்ணாவுக்கு வேறு வழி தெரியவில்லை. ஒரே செல்ல மகள் என்பதால் அவள் சொற்களை மீறவும் மனமில்லை.
‘சரிம்மா, உன் யோசனைப்படியே செஞ்சிடலாம்’ என்று தலையசைத்தான். அடுத்த கணமே அவன் மனத்துக்குள் ஓர் ஐயம் உதித்தது. ‘எல்லாம் சரி. ஒருவேளை போட்டியில கலந்துக்கக்கூடிய இளவரசர்கள் ஒன்னு ரெண்டு கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லி, மத்த கேள்விகளுக்கு பதில் தெரியாத ஆளுங்களா இருந்தா என்ன செய்யறது?’ என்று கேட்டான்.
கங்காதேவி தன் அப்பாவின் முகத்தை நேருக்கு நேர் பார்த்து ‘அப்பா, பதில் சொல்லக்கூடிய இளவரசர்கள் யாரா இருந்தாலும், பத்து கேள்விக்கும் பதில் தெரிஞ்ச ஆளாத்தான் இருக்கணும். ஒரே ஒரு கேள்விக்கு பதில் தெரியாம போனாலும் அவுங்கள தோல்வி அடைஞ்சவங்களாதான் நாம நினைச்சிக்கமுடியும்’ என்றாள்
‘அப்படியா?’
‘ஆமாம்பா. அது மட்டுமில்லைப்பா. பதில் தெரியாதவங்களை வெளியே அனுப்பமுடியாது. அவுங்களுக்கு சிறைத்தண்டனை கொடுத்து நம்ம சிறையில அடைக்கணும்.’
‘ஐயோ, என்னம்மா, இப்படி சொல்ற?’ என்று பதறினான் ரங்கண்ணா.
‘ஆமாம்பா. அதுதான் சரியான இளவரசனைத் தேர்ந்தெடுக்க ஒரே வழி. ஒரு போட்டியில தண்டனைன்னு ஒன்னு இருந்தாதான் தகுதியான ஆட்கள் மட்டும் கலந்துக்குவாங்க. இல்லைன்னா, வெல்லம் மேல ஈ வந்து மொய்க்கிறமாதிரி நான் நீன்னு எல்லாரும் வந்து மொய்ப்பாங்க.’
கங்காதேவி சொல்லும் திட்டத்துக்கு இசைந்துபோவதைத் தவிர ரங்கண்ணாவுக்கு வேறு வழி தெரியவில்லை. ‘சரிம்மா, நீ நினைக்கிற மாதிரியே செஞ்சிடறேன். அதுக்கப்புறம் கடவுள் விட்ட வழி’ என்று சொன்னான்.
அன்று மாலையே கங்காதேவி உரைத்த விவரங்களையெல்லாம் தொகுத்து ஓர் அறிவிப்பாக ஓலைகளை எழுதவைத்தான். பிறகு நகரத்தில் வாழும் ஓவியர்களை அரண்மனைக்கு வரவழைத்தான் ரங்கண்ணா. அவர்களைக் கொண்டு கங்காதேவியின் உருவத்தை ஓவியமாகத் தீட்டும்படி கேட்டுக்கொண்டான். எல்லா ஓவியங்களும் தயாரானதும், ஒவ்வொரு ஓவியத்தையும் ஓலையையும் ஒவ்வொரு தூதுவனிடம் கொடுத்து சுற்றுவட்டாரத்தில் உள்ள அரசர்களைச் சந்தித்து விவரங்களைக் கூறி பொருத்தமான அரசகுமாரர்களை அரண்மனைக்கு அழைத்து வரும்படி சொல்லி அனுப்பிவைத்தான். எல்லாத் தூதுவர்களும் அன்றே குதிரையில் ஏறி ஆளுக்கொரு திசையில் சென்றனர்.
பல அரசகுமாரர்கள் கங்காதேவியைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டனர். தூதுவர்கள் கொண்டுவந்து காட்டிய கங்காதேவியின் ஓவியத்தின் அழகில் அவர்கள் மயங்கினர். ஆனால் அரசகுமாரி கேட்கும் கேள்விகளுக்குப் பதில் தெரியாவிட்டால் எல்லோருடைய முன்னிலையிலும் அவமானப்பட்டு நிற்கவேண்டும் என்கிற எண்ணத்தால் அந்த ஆசையை அக்கணமே துறந்தனர். அதனால் செய்தியைக் கொண்டுவந்த தூதுவரிடம் பட்டும் படாமல் ‘எல்லோரோடும் கலந்து பேசிட்டு சொல்லி அனுப்பறோம்’ என்ற பதிலைச் சொல்லி அனுப்பிவைத்தனர்.
கங்காதேவியைத் திருமணம் செய்துகொண்டால், சிறிது காலத்துக்குப் பிறகு அவளுடைய பிரதேசமும் தனக்குக் கிடைக்கும் என்கிற மயக்கத்தில் சில அரசகுமாரர்கள் ‘நமக்கு இருக்கிற அறிவுக்கு இவள் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாதா என்ன?’ என்று அலட்சியமாக நினைத்துக்கொண்டு செய்தி கிடைத்ததுமே அவளுடைய பிரதேசத்துக்குப் புறப்பட்டு வந்தனர்.
ஒரு சுயம்வரத்துக்குத் தேவையான ஏற்பாடுகளைப்போலவே எல்லா ஏற்பாடுகளும் ரங்கண்ணாவின் அரண்மனையில் செய்யப்பட்டன. நகரப்பூங்காவிலும் ஒவ்வொரு அரசகுமாரனுக்கும் அரசகுமாரியைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கி அறிவிக்கப்பட்டது.
ஓர் அரசகுமாரன் அரண்மனைக்குள் வரும் வேளையில் அடுத்த அரசகுமாரன் வெளியேதான் நிற்கவேண்டும். ஒருவரிடம் கேட்கப்படும் கேள்விகள் இன்னொருவருக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதால், பதில் சொல்லாதவர்களையும் அல்லது அரைகுறையாகப் பதில் சொன்னவர்களையும் வெளியே அனுப்பாமல் அரண்மனையின் உள்வழியாகவே சிறைக்கூடத்துக்கு அழைத்துச் சென்று அடைத்துவைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. கேள்விகளைக் கேட்கத் தொடங்கும் முன்பாகவே கேட்கப்படும் எல்லாக் கேள்விகளுக்கும் சரியான பதில்களைச் சொல்லவில்லையெனில் தன்னைச் சிறையில் அடைப்பதற்கு எவ்விதமான தடையும் இல்லை என ஒவ்வொருவரும் ஓர் ஓலையில் எழுதி கையெழுத்திட்டுக் கொடுத்தனர்.
தொடக்கத்தில் பல அரசகுமாரர்கள் உற்சாகமாக அரண்மனைக்குச் சென்று போட்டியில் கலந்துகொண்டனர். ஆனால் ஒருவராலும் ஒன்றிரண்டு கேள்விகளுக்கும் மேல் பதில் சொல்ல இயலவில்லை. அதனால் நிபந்தனையின்படி அனைவரும் சிறைச்சாலைக்குச் செல்லவேண்டியிருந்தது. ஒவ்வொரு நாளும் சிறையில் அடைபடும் இளவரசர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போனது.
கங்கம்மாதேவியின் ஓவியமும் ஓலையும் ராமப்பாவின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தன. அவனும் அவன் மனைவியும் அந்த ஓவியத்தைப் பார்த்தனர். ஓவியத்தில் காணப்பட்ட அரசகுமாரி தன் மகனுக்குப் பொருத்தமானவளாக இருப்பாள் என்று இருவரும் நினைத்தனர். ஓலையில் குறிப்பிடப்பட்டிருந்த கேள்வி பதில்களைப்பற்றிய நிபந்தனைகளைப்பற்றி இருவரும் தமக்குல் உரையாடிக்கொண்டனர். எல்லா சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ச்சி பெற்றிருக்கும் தன் மகன் மல்லப்பாவுக்கு அவற்றை எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டு என அவர்கள் மனதார நினைத்தனர். தம் மகனுக்குத் திருமணத்தருணம் இப்படி கூடி வந்திருக்கிறதுபோலும் என்று கூறினான் ராமப்பா. உடனே ஒரு சேவகனை அழைத்து அந்த ஓலையையும் ஓவியத்தையும் மல்லப்பாவிடம் கொடுத்துவிட்டு வருமாறு சொன்னான். இரண்டையும் பெற்றுக்கொண்ட சேவகன் அக்கணமே மல்லப்பா வசிக்கும் அறையை நோக்கிச் சென்றான்.
அறையில் கிழக்குமுகமாக அமர்ந்து தியானத்தில் மூழ்கியிருந்தான் மல்லப்பா. அவனுடைய தியானத்துக்கு ஊறு ஏற்படாதபடி வாசலிலேயே நின்றான் சேவகன். அப்போது ஒரு காக்கை எங்கிருந்தோ பறந்துவந்து வாசலுக்கு எதிரிலிருந்த மரக்கிளையில் அமர்ந்து கா கா என்று கரைந்தது. உடனே தன்னையறியாமல் சேவகன் காக்கையை நோக்கி கைவீசி போ போ என்று விரட்டினான். அந்தக் காக்கை அவன் குரலுக்கு மதிப்பளிக்காமல் ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்குத் தாவித்தாவி உட்கார்ந்து கா கா என்று கரைந்தபடி இருந்தது. அதை விரட்டியடிப்பதையே தன் கடமையென நினைத்த சேவகனும் சத்தமெழுப்பியபடி அதை நோக்கி கைகளை வீசினான்.
தொடர்ச்சியாக எழுந்த ஓசையின் காரணமாக தியானம் கலைந்து கண்விழித்தான் மல்லப்பா. காக்கையின் பின்னால் ஓடும் சேவகனைப் பார்த்து அவனுக்குச் சிரிப்பு வந்தது. வாய்விட்டுச் சிரித்தான். பிறகு அவனை அழைத்து, வந்த விஷயத்தைக் கேட்டான்.
சேவகன் தன் கையிலிருந்த ஓலையையும் ஓவியச்சுருளையும் மல்லப்பாவிடம் கொடுத்தான். அவற்றை வாங்கிப் படித்த மல்லப்பா கசப்புடன் அந்த ஓலையைக் கீழே வைத்துவிட்டு வாசலைப் பார்த்தான். சில கணங்களுக்குப் பிறகு அந்த ஓலையை எடுத்து மீண்டும் படித்துவிட்டு ‘சிறைத்தண்டனை, சிறைத்தண்டனை’ என்று தனக்குள்ளாகவே முனகிக்கொண்டான். தொடர்ந்து, ‘பாவம், இந்த நேரத்துக்குள்ள எத்தனை பேரு சிறையில மாட்டிகிட்டாங்களோ’ என்று பெருமூச்சு விட்டான். தொடர்ந்து ‘ஒரு மனிதனுக்கு ஞானம் விடுதலையைத்தான் கொடுக்கணுமே தவிர, அகம்பாவத்தைக் கொடுக்கக்கூடாது. அதுகூட தெரியலையே இந்தப் பொண்ணுக்கு’ என்று சொல்லிக்கொண்டான்.
ஓலையை ஒரு ஓரமாக வைத்துவிட்டு மீண்டும் தியானத்தில் ஈடுபட்டான் மல்லப்பா. சில நிமிடங்களுக்கு மேல் அவனால் அத்தியானத்தில் மூழ்கியிருக்க முடியவில்லை. கண்ணைத் திறந்து அந்த ஓலையை எடுத்து மீண்டும் படித்தான்.
‘அந்தப் பெண்ணுடைய அகங்காரத்தை அடக்கணும். தன்னைவிடப் பெரிய புத்திசாலி யாருமே இருக்கமுடியாதுன்னு நெனச்சிட்டாளோ என்னமோ. அதனாலதான் அகங்காரம் இந்த அளவுக்கு கொழுந்துவிட்டு எரியுது’ கேள்விக்குப் பதில் சொல்லமுடியாதவங்களை சிறைக்குள்ள அடைச்சி வைக்கறது எவ்வளவு பெரிய பாவம். இது கூட புரியலைன்னா, இந்தப் பொண்ணு படிச்ச படிப்புக்கு என்ன அர்த்தம் இருக்குது?’ என பலவிதமான எண்ணங்கள் அடுத்தடுத்து தோன்றியபடி இருந்தன. முடிவில் ‘இந்தப் போட்டியில கலந்து இந்தப் பொண்ணுடைய அகங்காரத்துக்கு ஒரு முடிவு கட்டி, சிறையில இருக்கற எல்லா அரசகுமாரர்களையும் விடுதலை செய்யணும். அதுதான் என் முதல் வேலை. அதை செஞ்சி முடிக்காம இனி தியானத்துல உக்கார்ரதுல அர்த்தமில்லை’ என்ற தீர்மானத்துடன் எழுந்தான். சுவர் நடுவில் பீடத்தில் அமைக்கப்பட்டிருந்த சிவலிங்கத்தைப் பார்த்து தலைகுனிந்து வணங்கினான்.
அறையிலிருந்து அரண்மனைக்குச் சென்று அப்பாவின் முன் நின்று வணங்கினான் மல்லப்பா. ‘என்ன ஓலை இது அப்பா? ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, யாருக்கும் இவ்வளவு அகங்காரம் இருக்கக்கூடாது. அறிவுங்கறது அடுத்தவங்களுக்காக உழைக்கறதுக்குப் பயன்படணுமே தவிர, அடுத்தவங்களை வாட்டி வதைக்கறதுக்காக பயன்படக்கூடாது. இந்தப் பொண்ணுக்கு எல்லாத்தையும் புரியவச்சிட்டு வரேன். எனக்கு விடை கொடுங்க’ என்று புறப்படுவதற்குத் தீர்மானித்தவனைப்போலக் கூறினான்.
‘ஏதோ கேள்வி பதில், தண்டனை…..’ என்று சொல்வதற்கு முற்பட்ட ராமப்பாவை நிறுத்தி ‘அதையெல்லாம் நான் பார்த்துக்கறேன்பா. அதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது’ என்றான். உடனே இருக்கையைவிட்டு எழுந்த ராமப்பா, மகனுக்கு அருகில் வந்து ‘அப்படின்னா, போய் வா மகனே. வெற்றியோடு வா’ என்று சொல்லி ஆசி வழங்கி அனுப்பிவைத்தான்.
காவியுடை, சடைசடையாகத் தொங்கும் தலைமுடி, மார்புவரைக்கும் வளர்ந்து தொங்கும் தாடியைக் கொண்ட கோலத்தோடு அன்றே பயணத்தைத் தொடங்கினான் மல்லப்பா. அவனுக்குத் துணையாக நான்கு உதவியாட்களை அனுப்பிவைக்க முயற்சி செய்தார் ராமப்பா. அவர்களையெல்லாம் தடுத்து நிறுத்திவிட்டு ‘யாரும் வேணாம் அப்பா. எனக்கு அந்த ஈஸ்வரனே துணை’ என்று சொல்லிவிட்டு வேகவேகமாக தனிமையில் நடந்துசென்றான்.
நான்கு நாட்கள் பயணத்துக்குப் பிறகு ஓலையில் குறிப்பிட்ட பிரதேசத்தை அடைந்தான் மல்லப்பா. ஊர் முகப்பிலேயே இருந்த குளத்தில் குளித்து முடித்து தினசரிப் பூசைகளையெல்லாம் செய்துவிட்டு துறவுக்கோலத்தோடு அரண்மனைக்குச் செல்லும் வழியை விசாரித்துத் தெரிந்துகொண்டு நடந்து சென்றான்.
அரண்மனையில் இருந்த காவலர்கள் முதலில் அவனுடைய துறவுக்கோலத்தைப் பார்த்துவிட்டு யாரோ யாசகம் கேட்டு வந்திருக்கும் ஒரு சாமியார் என நினைத்து தடுத்து நிறுத்தினர். மல்லப்பா தன் கையிலிருந்த ஓலையை அவர்களிடம் காட்டினான். அதில் தன் பிரதேசத்தின் முத்திரை இருப்பதைப் பார்த்த பிறகு அவனை உள்ளே செல்ல அனுமதித்தனர்.
அவன் நேராக அரசசபை நடக்கும் இடத்துக்குச் சென்றான். இருக்கையில் அமர்ந்திருந்த ரங்கண்ணாவைப் பார்த்து கைகுவித்து வணங்கினான். பிறகு தன்னிடம் இருந்த ஓலையை அவனிடம் காட்டினான்.
‘ஆமாம். இது நான் அனுப்பிய ஓலைதான். நீங்க எப்படி இதை எடுத்துட்டு வந்தீங்க?’ என்று கேட்டான் ரங்கண்ணா.
‘அதுக்கு அப்புறமா பதில் சொல்றேன். முதல்ல நான் ஒரு கேள்வி கேக்கறன். அதுக்குப் பதில் சொல்லுங்க. ஓலையில எழுதியிருக்கிறமாதிரி உங்க பொண்ணு கேக்கற கேள்விகளுக்கு யார் வேணும்னாலும் பதில் சொல்லலாமா?’ என்று கேட்டான் மல்லப்பா.
‘உண்மைதான். யாரு வேணும்னாலும் பதில் சொல்லலாம். அரசகுமாரனா இருந்தாலும் சரி, சந்நியாசியா இருந்தாலும் சரி, சாதாரணமான ஆளா இருந்தாலும் கூட சரி, கேக்கற கேள்விக்கு பதில் சொல்லணும். அந்தப் பதில் என் பொண்ணு ஏத்துக்கற மாதிரி இருக்கணும். அதுதான் முக்கியம். அதுல எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது’ என்றான் ரங்கண்ணா.
‘ரொம்ப நன்றி அரசே. உங்க பொண்ணு கேக்கற கேள்விகளுக்கு பதில் சொல்ல நான் தயாரா இருக்கேன்’ என்று தெரிவித்துவிட்டு வணங்கினான் மல்லப்பா.
‘நீங்களா?’ என்று ஒரு கணம் அதிர்ந்து பின்வாங்கினான் ரங்கண்ணா. பிறகு மறுகணமே தன்னைத்தானே சுதாரித்துக்கொண்டு ‘சரி, கொஞ்ச நேரம் அந்த இருக்கையில உக்காருங்க. மகளை அழைச்சிட்டு வரச் சொல்றேன்’ என்றான். அருகிலேயே நின்றிருந்த சேவகனை அழைத்து ‘போய் உடனே அரசகுமாரியை புறப்பட்டு வரச் சொல்லு’ என்று சொல்லி அனுப்பிவைத்தான். அவன் உடனே அரச சபையிலிருந்து வெளியேறி அந்தப்புரத்தை நோக்கி ஓடினான்.
ரங்கண்ணா சுட்டிக் காட்டிய இருக்கையில் சென்று உட்கார்ந்தான் மல்லப்பா. தன்னைச் சுற்றி வட்டமாக அமர்ந்திருந்த அமைச்சர்களையும் போர்வீரர்களையும் ஒவ்வொருவராகப் பார்த்தான். சுவரில் அங்கங்கே தொங்கும் ஓவியம் தீட்டப்பட்ட திரைச்சீலைகளைப் பார்த்தான்.
சிறிது நேரத்தில் கங்காதேவி அங்கு வந்து சேர்ந்தாள். தன் தந்தையையும் அவையினரையும் பொதுவாகப் பார்த்து வணங்கினாள்.
‘கங்காதேவி, இவர் போட்டியில கலந்துகொள்ள வந்திருக்காரு. நீ அவரிடம் ஒவ்வொரு கேள்வியா கேக்கலாம்’ என்றார் ரங்கண்ணா.
கங்காதேவி அப்போதுதான் திரும்பி தனக்கு எதிர்வரிசை இருக்கையில் அமர்ந்திருந்த மல்லப்பாவைப் பார்த்தாள். அதுவரை யாரோ இமயமலைக்குச் செல்லும் ஒரு துறவியோ அல்லது இமயமலையிலிருந்து திரும்பிவரும் துறவியோ வந்திருப்பதாக அவள் நினைத்திருந்தாள். போட்டியில் கலந்துகொள்ள வந்திருப்பவர் என்னும் தகவலைக் கேட்டு அவள் திகைப்பில் மூழ்கிவிட்டாள். பிறகு ‘பதவியாசையும் பெண்ணாசையும் ஒரு மனிதனை எப்படியெல்லாம் பாடாய்ப் படுத்துது’ என்று மனத்துக்குள்ளேயே நினைத்துக்கொண்டபடி மல்லப்பாவை ஒருகணம் ஏறிட்டுப் பார்த்தாள்.
‘ஒன்று என்பது என்ன?’ என்று தன் முதல் கேள்வியைக் கேட்டுவிட்டு அலட்சியமாக அவனைப் பார்த்தாள் கங்காதேவி.
மல்லப்பா புன்னகை மாறாத முகத்துடன் ‘இந்த உலகத்துக்கு வானமாக இருப்பதுதான் ஒன்று’ என்று பதில் சொன்னான்.
அந்தப் பதிலைக் கேட்டு கங்காதேவி ஒரு கணம் உறைந்துவிட்டாள். தான் கணித்ததுபோல அவன் சாதாரணமான ஆளில்லை என்ற எண்ணம் அவளுக்குள் எழுந்தது.
சில கணங்களுக்குப் பிறகு ‘இரண்டு என்பது என்ன?’ என்று கேட்டாள் கங்காதேவி.
‘வானத்தில் வலம் வரும் சூரியனையும் சந்திரனையும்தான் இந்த இரண்டு என்கிற சொல் குறிக்கிறது’ என்றான் மல்லப்பா. அந்தப் பதிலைக் கேட்டு அவனையே சில கணங்கள் உற்றுப் பார்த்தாள் கங்காதேவி.
‘மூன்று என்றால் என்ன?’ என தன் அடுத்த கேள்வியைக் கேட்டாள் கங்காதேவி.
‘கைலாசத்தில் வசிக்கிற ஈசனுக்கு மூன்று கண்கள் என்பது நம் நம்பிக்கை. வேறு யாருக்கும் அப்படிப்பட்ட முக அமைப்பு கிடையாது. மூன்றின் அடையாளம் அதுதான்’ என்றான் மல்லப்பா.
‘நான்கு என்றால் என்ன?’ என தன் கேள்வியைக் கேட்டாள் கங்காதேவி. அவள் குரல் மெல்லத் தளர்ச்சியடையத் தொடங்கியது.
‘வேதங்களைத்தான் நான்கு என்று குறிப்பிடுவது வழக்கம்’ என்று சொல்லிவிட்டு அமைதியாகப் புன்னகைத்தான் மல்லப்பா.
போட்டிக்கு வந்தவர்களில் இதுவரை ஒருவரும் கூட நான்கு கேள்விகள் வரை ஈடுகொடுத்ததில்லை. முதன்முதலாக நான்கு கேள்விகளுக்கும் பதில் சொல்லிவிட்டு உட்கார்ந்திருக்கிற மல்லப்பாவை ஒரு கணம் கண்ணிமைக்காமல் பார்த்தாள் கங்காதேவி. அவன் யாராக இருக்கக்கூடும் என்றொரு வினா அவளுக்குள் சிறகடித்தபடி இருந்தது.
அவள் அமைதியாக இருப்பதைப் பார்த்த ரங்கண்ணா ‘என்னம்மா, அவர் சொல்ற பதில்களெல்லாம் சரியான பதில்கள்தானா?’ என்று கேட்டார்.
‘ஆமாம்பா. எல்லாமே சரியான பதில்கள்தாம்பா’ என்றாள் கங்காதேவி.
‘அப்புறமென்ன தயக்கம்? அடுத்த கேள்வியைக் கேளும்மா’ என்று தூண்டினார் ரங்கண்ணா.
‘கேக்கறேம்பா’ என்று அவருக்குப் பதில் சொல்லிவிட்டு சில கணங்களுக்குப் பிறகு மல்லப்பாவைப் பார்த்து ‘ஐந்து என்றால் என்ன?’ என்னும் கேள்வியை சற்றே பதற்றத்துடனேயே கேட்டாள் கங்காதேவி.
‘பஞ்சபூதங்கள்தான் ஐந்து’ என்றான் மல்லப்பா.
‘ஆறு என்பது என்ன?’ என்று அடுத்த கேள்வியைக் கேட்டாள் கங்காதேவி.
‘இந்து மதத்துக்கு ஒரு ஞானமரபு இருக்குது. சிந்தனைப்போக்கையெல்லாம் திரட்டி அது ஆறு தரிசனங்களா முன்வைக்குது. சைவம், வைணவ, சாக்தம், கணாபத்யம், கெளமாரம், செளரம். எல்லாமே இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றி பேசக்கூடிய சிந்தனைகள். அதுதான் ஆறு என்பதன் அடையாளம்’ என்று சொன்னான் மல்லப்பா.
‘ஏழு என்பது என்ன?’ என்று தயக்கத்துடன் அடுத்த கேள்வியைக் கேட்டாள் கங்காதேவி.
‘பிரம்மாவின் வழிவந்தவங்கன்னு ஏழு ரிஷிகளைச் சொல்வது வழக்கம். அவுங்களுக்கு சப்தரிஷின்னும் ஒரு பேரு உண்டு. அத்திரி, பரத்வாஜர், ஜமதக்கினி, கெளதமர், காஷ்யபர், வசிஷ்டர், விஸ்வாமித்திரர் ஆகியோர்தான் ஏழுங்கற எண்ணுடைய அடையாளம்’ என்று சொல்லி முடித்தான் மல்லப்பா.
கங்காதேவி கிட்டத்தட்ட மனமுடைந்த நிலையை அடைந்தாள். ஒருகணம் திரும்பி தன் தந்தையின் முகத்தைப் பார்த்தாள். எதையோ சொல்ல நினைத்தாள். ஆனால் எந்தச் சொல்லும் அவள் நெஞ்சிலிருந்து எழவில்லை. அவள் குரல் உடைந்தது. எங்கோ பார்த்தபடி ‘எட்டு என்பது என்ன?’ என்று கேட்டாள்.
‘இந்த உலகத்தில திசைகளின் அதிபதிகளாகவும் காவலர்களாவும் இருக்கற தெய்வங்களை வணங்கறது நம்ம வழக்கம். அஷ்டதிக்குப் பாலகர்கள்னு அவுங்களுக்குப் பொதுவான பேரு. தனித்தனியா இந்திரன், அக்கினி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன்னு அவுங்கள சொல்லலாம். அவர்கள்தான் எட்டு என்பதன் அடையாளம்’ என்றான் மல்லப்பா.
‘ஒன்பது என்பது என்ன?’ என்று அடுத்த கேள்வியைக் கேட்டாள் கங்காதேவி.
‘சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்கிற ஒன்பது கிரகங்கள் நம்மைச் சுற்றி இருக்குதுங்கறதும் நம்ம நம்பிக்கை. அதுதான் ஒன்பது என்கிற எண்ணின் அடையாளம்’ என்றான் மல்லப்பா.
கங்காதேவி முற்றிலும் தளர்ந்துவிட்டாள். தான் வெல்லப்படுகிறோம் என்னும் எண்ணம் அவளுக்கு ஒரே சமயத்தில் வருத்தமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. எது நடந்தாலும் நடக்கட்டும், எல்லாம் நல்லதற்கே என்கிற முடிவோடு இறுதிக் கேள்வியாக ‘பத்து என்பது என்ன?’ என்ற கேள்வியைக் கேட்டாள்.
‘இந்த உலகத்துல பத்துவிதமான தானங்கள் உண்டு. இவை எல்லாமே மனிதர்கள் தனக்கு நல்லது நடக்கணும்னு நினைச்சி தேவைப்படறவங்களுக்கு செய்கிற தானங்கள். கோதானம், பூதானம், திலதானம், பொன்தானம், நெய்தானம், வஸ்திரதானம், அரிசிதானம், வெல்லதானம், வெள்ளிதானம், உப்புதானம். அதுதான் பத்தின் அடையாளம்’ என்று சொன்னான் மல்லப்பா.
ரங்கண்ணா உட்பட அரசசபையில் அமர்ந்திருந்த அனைவரும் அங்கே நடைபெற்ற கேள்வி பதில்களைக் கேட்டு ரசித்தனர். கங்காதேவி, மல்லப்பா இருவருடைய ஞானத்தின் ஆழத்தையும் அறிந்து மகிழ்ச்சியடைந்தனர்.
ஒரு துறவிக்கு தன் மகளைத் திருமணம் செய்துவைப்பதில் ஒருகணம் ரங்கண்ணாவுக்கு சற்றே வருத்தம் எழுந்து மறைந்தது. ஆயினும் இறைவனால் நடத்திவைக்கப்படும் செயல்களுக்கு மனிதனால் அர்த்தம் கண்டுபிடிக்கமுடியாது என நினைத்து அந்த வருத்தத்தை அந்தக் கணத்திலேயே உதறினான்.
உடனே எழுந்து நின்று ‘இந்தப் போட்டியின் நிபந்தனையின்படி உங்க ரெண்டு பேருக்கும் திருமணம் செய்துவைக்க இந்த சபை தீர்மானிச்சிருக்குது’ என்று அறிவித்தான். கங்காதேவி ஒருகணம் தன் தந்தையைப் பார்த்து புன்னகைத்துவிட்டு மறுகணம் வெட்கத்தோடு தலைகுனிந்தாள். சபையிலிருந்தவர்கள் அனைவரும் அத்தீர்மானத்தை வரவேற்று கைதட்டி மகிழ்ந்தனர்.
மல்லப்பா இருக்கையிலிருந்து எழுந்து அரசனைப் பார்த்து கைகுவித்து வணங்கியபடி ‘நான் சொல்றதை நீங்க ஒரு நொடி கேக்கணும். நான் துறவி. எனக்குத் திருமணம் வேணாம்’ என்று சொன்னான்.
அதைக் கேட்டு ரங்கண்ணா ஒருகணம் பேச்செழாமல் திகைத்து நின்றான். பிறகு மெல்ல தன்னைத் திரட்டிக்கொண்டு ‘போட்டியில அறிவிச்சபடி என்னுடைய மகள் கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் நீங்க பதில் சொல்லி முடிச்ச நொடியிலேயே அவள் உங்களுக்குச் சொந்தமாயிட்டா. அது தெய்வத்துடைய முடிச்சு. இப்ப திருமணம்ங்கறது பேருக்காக நாங்க செஞ்சி வைக்கிற சடங்கு. அவ்வளவுதான்’ என்றான்.
‘உங்க பொண்ண திருமணம் செஞ்சிக்கணும்ங்கற்துக்காக நான் இந்தப் போட்டியில கலந்துக்க வரலை. கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லலைங்கற காரணத்துக்காக ஆசையோடு வந்தவங்களுக்கு சிறைத்தண்டனை கொடுத்து அடைச்சி வைக்கறது பெரிய தப்புன்னு தோணிச்சி. அதிகாரம் நம்ம கையில இருந்தா எதை வேணும்ன்னாலும் செய்யலாம்னு நினைக்கிற அகங்காரம்தான் அப்படியெல்லாம் செய்யவைக்குது. அந்த அகங்காரத்தை அடக்கணும், சிறையில அடைபட்டு அவஸ்தைப்படற ஆட்களை வெளியே கொண்டுவரணும்ங்கற வேகத்துலதான் நான் இங்க வந்தேன். கல்யாணத்தைப்பத்தி எனக்கு எந்த யோசனையும் அப்பவும் இல்ல. இப்பவும் இல்ல.’
மல்லப்பாவின் சொற்கள் ரங்கண்ணாவின் கண்களைத் திறந்தன. ஏதோ ஒரு வேகத்தில் மகளுடைய பேச்சைக் கேட்டு முரட்டுத்தனமான ஒரு நிபந்தனையை எழுதியதற்காக உள்ளூர வருந்தினான். அதனால் உடனடியாக சிறை அதிகாரிகளை அழைத்து சிறையில் அடைபட்டிருக்கும் அனைவரையும் விடுவித்து திருமணக்கூடத்துக்கு அழைத்துவரவேண்டும் என்று உத்தரவிட்டான். அதிகாரிகள் அங்கிருந்து வேகமாக வெளியேறினர்.
விடுதலை செய்யப்பட்ட இளவரசர்கள் அனைவரும் போட்டியில் வெற்றி பெற்றவரைப் பார்க்கும் ஆவலோடு அரசசபைக்கு வந்து சூழ்ந்துகொண்டனர். அங்கே துறவுக்கோலத்தோடு நின்றிருக்கும் மல்லப்பாவைப் பார்த்து வியப்பில் உறைந்தனர்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த எல்லா இளவரசர்களும் சபைக்கு வந்துவிட்டனர் என்பதை உறுதி செய்துகொண்ட பிறகு மல்லப்பாவைப் பார்த்தான் ரங்கண்ணா. ‘இப்ப திருப்திதான? இனிமேலாவது இந்தத் திருமணம் நடக்கலாமல்லவா?’ என்று கேட்டான்.
மல்லப்பாவால் அதற்குப் பிறகு எதுவும் பேசமுடியவில்லை. சபையிலேயே வேகவேகமாக திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. அடுத்த ஒரு மணி நேரத்தில் திருமணம் கோலாகலமாக நடந்தேறியது. சிறையில் அடைபட்டிருந்த இளைஞர்கள் எல்லோரும் அந்தத் திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்தினர். அனைவரும் மல்லப்பாவைச் சந்தித்து வணங்கி நன்றிகளைத் தெரிவித்துவிட்டு தத்தம் ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
அன்று இரவு மல்லப்பாவுக்கும் கங்காதேவிக்கும் முதல் இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னிரவு நேரம் முடிந்த பிறகு கங்காதேவி பால் செம்புடன் அறைக்குள் வந்து மல்லப்பாவை வணங்கினாள். அக்கணமே மல்லப்பா அவளிடமிருந்து விலகி நகர்ந்து நின்றான்.
‘இங்க பாரு தேவி. நான் சொல்றதை கவனமா கேளு. நான் ஆன்மீகத்துல ஈடுபட்டிருக்கிற ஆள். பக்திமார்க்கம்தான் என்னுடைய வழி. அதுக்காகவே இந்தத் துறவுக்கோலம். உன் அகங்காரத்தால பல இளைஞர்கள் சிறையில அடைக்கப்பட்டிருக்காங்கன்னு தெரிஞ்சதும் வருத்தமா இருந்தது. நான் ஏற்கனவே சொன்னமாதிரி, உனக்கு ஒரு தெளிவு பிறக்கணும்ங்கறதுக்காகவும் அந்த இளைஞர்களை விடுதலை செய்யணும்ங்கறதுக்காகவும் தான் இந்தப் போட்டியில நான் கலந்துகிட்டேன். உன்னைக் கல்யாணம் செஞ்சிகிட்டு இல்லறவாழ்க்கை வாழணும்ங்கற எண்ணம் எனக்கு சுத்தமா இல்லை. என்னை நீ புரிஞ்சிக்கணும்’ என்றான்.
‘அதெல்லாம் நடந்து முடிஞ்ச கதை. அதைப்பத்தி இனிமே நாம பேசவேணாம். இந்த நிமிஷத்திலேர்ந்து நீங்க என் கணவர். நான் உங்க மனைவி.’
‘நான் ஏற்கனவே சொன்னேனே. நான் பக்தி மார்க்கத்துல இருக்கற துறவி. என்னை மாதிரியே நீயும் துறவியா இருக்கறதா இருந்தா, நாம சேர்ந்து இருக்கலாம். அதுக்கு விருப்பமில்லைன்னா, நீ உனக்குப் பிடிச்ச மாதிரியான வாழ்க்கையை வாழலாம். நான் அதுக்குக் குறுக்கே நிக்கமாட்டேன்.’
‘ஐயோ கடவுளே, ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க’ என்று காதுகளை மூடிக்கொண்டாள் கங்காதேவி. ‘உங்களுக்கு மாலை சூட்டிய பிறகு உங்களைவிட்டு நான் பிரிஞ்சி போகமாட்டேன். அதே சமயத்துல பக்தி மார்க்கம், துறவி மார்க்கத்தையும் என்னால ஏத்துக்கமுடியாது’ என்று தீர்மானமாகச் சொன்னாள்.
அடுத்த நாள் காலையில் தன்னுடைய தந்தையைச் சந்திக்க வந்தாள் கங்காதேவி. ‘என்னை ஜெயிக்கறதுக்காக ஒரு சாமியாரைத் தேடிப் புடிச்சி கொண்டுவந்து என் வாழ்க்கையையே நீங்க பாழாக்கிட்டீங்க. சூடான நெய்ய நாக்குல ஊத்திகிட்டு துப்பவும் முடியாம, விழுங்கவும் முடியாம அவஸ்தைப்படற மாதிரி ஆயிட்டுது என் நிலைமை’ என்று அழுதாள்.
ரங்கண்ணாவுக்கு அதைக் கேட்டு கோபம் வந்தது. ஆயினும் கொஞ்சம் கூட கோபத்தைக் காட்டாமல் ‘இங்க பாரு. எல்லாம் உன் புத்திசாலித்தனத்தால வந்த வினை. இதுல என்னுடைய பங்கு என்ன இருக்குது? போட்டிக்கான நிபந்தனையையெல்லாம் எழுதனது யாரு? நீதான? இப்ப என்னை வந்து குறை சொன்னா என்ன அர்த்தம்? கொஞ்சம் யோசிச்சி பாரு’ என்றான்.
கங்காதேவி பதில் எதுவும் சொல்லாமல் அழுத கோலத்துடன் நின்றிருந்தாள். அதைப் பார்த்ததும் அவன் மனம் இரங்கியது.
‘சரி கங்காதேவி. கவலைப்படாம நீ அந்தப்புரத்துக்குப் போ. ஏதாவது ஒரு வகையில பேசி அவன் மனசை மாத்தமுடியுமான்னு நான் முயற்சி செஞ்சி பார்க்கறேன்’ என்று சொல்லி மகளை அனுப்பிவைத்தான்.
அவள் சென்ற பிறகு மல்லப்பா இருக்கும் அறைக்குச் சென்றான் ரங்கண்ணா. ‘வணக்கம். வாங்க’ என்று அவனை தனக்கு எதிரே இருந்த இருக்கையில் அமரவைத்தான் மல்லப்பா.
‘இங்க பாருங்க மருமகனே. சின்ன வயசுல ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒரு ஆசை, ஒரு லட்சியம் இருக்கறது நல்லதுதான். அந்த மாதிரிதான் இந்த பக்தி மார்க்கத்துல உங்களுக்கு ஈடுபாடு வந்திருக்குது. அதுல ஒன்னும் தப்பு கிடையாது. அந்தக் காலகட்டம் முடிஞ்சி போச்சி. இப்ப நீங்க ஒரு இளவரசியுடைய கணவன். எதிர்காலத்துல இந்த ராஜ்ஜியத்தை ஆட்சி செய்யப் போறவரு. என் பொண்ணு உங்க கழுத்துல மாலை போட்ட நிமிஷத்துலயே உங்க பக்தி மார்க்கத்துடைய காலகட்டம் முடிஞ்சி போச்சி. ராஜவாழ்க்கையுடைய காலகட்டம் தொடங்கிடுச்சி. வேணும்ன்னா வயசான காலத்துல நீங்க மறுபடியும் பக்தி மார்க்கத்துல போகலாம். இப்ப இளவரசியோடு ஆனந்தமா குடும்பம் நடத்தற வேலையைப் பாருங்க.’
ரங்கண்ணா மிகவும் பொறுமையாக ஒரு குழந்தைக்குச் சொல்வதுபோல ஒவ்வொரு வார்த்தையாகச் சொன்னான். அதைக் கேட்ட மல்லப்பா மறுப்பதுபோல தலையசைத்தபடி அதேபோன்ற நிதானமான குரலில் ‘இங்க பாருங்க மாமா. ஒரு மாப்பிள்ளையைத் தேடறதுக்காக இப்படி ஒரு போட்டிக்கு ஏற்பாடு செஞ்சது உங்க தப்பு. யாரோ அநியாயமா சிறையில இருக்கறாங்கன்னு கேள்விப்பட்டு அந்தப் போட்டியில கலந்துக்க வந்தது என்னுடைய தப்பு. ரெண்டு பக்கத்துலயும் தப்பு நடந்துபோச்சி. என் தப்புக்காக என்னை மன்னிச்சிக்குங்க. தயவு செஞ்சி நான் சொல்றதை கேளுங்க. எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு எழுதிக் கொடுத்துட்டு நான் போயிடறேன். நீங்க வேணும்ன்னா உங்க பொண்ணையே இந்த பிரதேசத்துக்கு ராணியாக்கிடுங்க. இல்லைன்னா, அவளுக்குப் பொருத்தமான வேறொரு பையனைத் தேடிக் கண்டுபுடிச்சி கல்யாணம் செஞ்சிவைச்சி, அவன்கிட்ட அரசாங்கப் பொறுப்பைக் கொடுங்க’ என்றான்.
அந்தப் பிரச்சினையை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும் வழி தெரியாமல் தடுமாறினான் ரங்கண்ணா. அன்று இரவு முழுக்க யோசனையில் மூழ்கியிருந்தான். அவனால் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை.
அடுத்தநாள் காலையில் அவன் மனத்தில் ஒரு திட்டம் உதித்தது. நகரத்தில் வசிக்கிற முக்கியமான பிரமுகர்கள் அனைவரையும் அரண்மனைக்கு வரவழைத்து அவர்களிடம் கருத்து கேட்கலாம் என்பதுதான் அத்திட்டம். அதன்படி அனைவரும் அரசசபைக்கு வரவழைக்கப்பட்டனர். மல்லப்பாவும் கங்கம்மாதேவியும் கூட அந்தக் கூட்டத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
அமைச்சர் எழுந்து மல்லப்பாவின் அருகில் சென்றார். ‘நீங்க எங்க இளவரசிக்கு மாலை சூட்டிய நிமிஷத்துலயே உங்க துறவுமார்க்கம் ஒரு முடிவுக்கு வந்திடுச்சி. அதுதான் விதியுடைய விருப்பம். துறவு வேணாம், இல்லறத்தின் பக்கமா போன்னு விதியே உங்ககிட்ட சொல்லுது. அதை நீங்க புரிஞ்சிக்கணும். விதியுடைய விருப்பத்தை மீறி போறது ரொம்ப ரொம்ப தப்பு. தயவு செஞ்சி எங்களுக்காக நீங்க இந்தக் கோலத்தை விட்டுத் தொலைக்கணும்’ என்று அமைதியான குரலில் சொன்னார்.
இன்னொரு முக்கியஸ்தர் எழுந்து ‘எங்க இளவரசி நீங்கதான் கணவர்னு நம்பி உங்க கழுத்துல மாலை போட்டிருக்கா. நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தாதான், அதைப் பார்த்து எங்க அரசரும் சந்தோஷமா இருப்பாரு. அப்பதான் நாட்டுல நல்ல ஆட்சியும் நடக்கும். அவர் கவலைப்படத் தொடங்கினார்னா, நாட்டுடைய கதி அதோகதியாயிடும். எங்க பக்கத்துல எந்தத் தப்பு நடந்திருந்தாலும் தயவுசெஞ்சி நீங்க எங்களை மன்னிச்சி மறந்துடணும். இந்தப் பிரதேசம் நல்லபடியா இருக்கணும்ன்னா நீங்களும் இளவரசியும் நல்ல ஜோடியா வாழ்ந்து காட்டணும்’ என்றார். பிற பிரமுகர்களும் அதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர்.
தன்னைவிட வயதில் மூத்தவர்கள் அனைவரும் சேர்ந்து இல்வாழ்க்கையின் வழிக்கு வருமாறு அழுத்தம் கொடுக்கும்போது ஓர் எல்லைக்கு மேல் அந்தக் கோரிக்கையை நிராகரிப்பது அழகல்ல என்று நினைத்தான் மல்லப்பா. ஒருவேளை அதுவே இறைவனின் விருப்பமாக இருக்கலாம் என்றும் அவனுக்குத் தோன்றியது. அதனால் அதுவரை அவன் மேற்கொண்டுவந்த துறவு வாழ்க்கையைத் துறந்துவிட்டு கங்காதேவியோடு இல்வாழ்க்கையைத் தொடங்கலாம் என்று முடிவெடுத்தான்.
சபையின் முக்கிய பிரமுகர்கள் சொன்ன சொற்களையெல்லாம் அமைதியாகக் கேட்டபடி இருக்கையில் அமர்ந்திருந்த மல்லப்பா அனைவரையும் பார்த்து கைகுவித்து வணங்கியபடி எழுந்து நின்றான். ஒருகணம் தொண்டையைச் செருமியபடி பேசத் தொடங்கினான்.
‘வயசுல பெரியவங்களா இருக்கற நீங்க எல்லாரும் இந்த அளவுக்கு எடுத்துச் சொல்லும்போது, அதுல உடனடியா நமக்குப் புரியாத ஒரு அர்த்தம் இருக்குது, அதுல கடவுளுடைய விருப்பம் ஒன்னு இருக்குதுன்னு எனக்குத் தோணுது. அதை மீறிச் செல்ல எனக்கு விருப்பமில்லை. சின்ன வயசுலிருந்தே ஆன்மிகம், தத்துவம், பக்தின்னு வளர்ந்ததால எல்லாத்தையும் விட துறவுதான் பெரிசுன்னு நான் நம்பியிருந்தேன். துறவால அடையக்கூடிய எல்லாத்தையும் இல்வாழ்க்கை வழியாவும் அடையலாம்னுதான் எல்லாத் தத்துவமும் சொல்லுது. வழிதான் வேறவேறயே தவிர, லட்சியம் ஒன்னுதான். அதனால நீங்க சொல்ற வார்த்தைக்குக் கட்டுப்பட்டு இந்த இல்வாழ்க்கை வழியை நான் ஏத்துக்கறேன்.’
அவன் சொற்களைக் கேட்டு சபையில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் ஆனந்தத்தில் ஆரவாரக்குரல் எழுப்பினர். அருகில் நின்று கேட்டுக்கொண்டிருந்த ரங்கண்ணாவும் கங்காதேவியும் மகிழ்ச்சியில் கண் கலங்கினர். கங்காதேவி புன்னகை ததும்பும் முகத்தோடு ஒருமுறை மல்லப்பாவை ஏறிட்டுப் பார்த்தாள்.
‘ஒரு முக்கியமான விஷயத்தை நான் உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன். நான் எங்கிருந்தோ சந்நியாசியா கெளம்பி வந்த ஆள் இல்லை. எங்க அப்பாவும் ஒரு அரசர்தான். இங்கேருந்து நாலைந்து நாள் பயண தூரத்துல எங்க பிரதேசம் இருக்குது. எங்க அப்பா ராமப்பாதான் அதுக்கு அரசர். அவருக்கு வந்த ஓலையைப் பார்த்துட்டுத்தான் நான் இங்க வந்தேன். ஏதோ ஒரு வகையில விதி என்னை இந்த பிரதேசத்தை நோக்கி செலுத்தியதே என் துறவு வழியை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதற்கோ என்னமோ. தெரியலை.’
மல்லப்பா ஓர் அரசகுடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதைக் கேட்டு ரங்கண்ணாவும் கங்காதேவியும் மிகவும் மகிழ்ந்தனர். சபையில் நிறைந்திருந்த அனைவரும் மணமக்களை வாழ்த்திவிட்டு விடைபெற்றுச் சென்றனர்.
அடுத்தநாளே ரங்கண்ணா ஒரு தூதுவனை ராமப்பாவின் பிரதேசத்துக்கு அனுப்பி அவனையும் அவன் மனைவியையும் வரவழைத்தான். தன் பெற்றோரைப் பார்த்ததும் மல்லப்பா அவர்கள் கால்களில் விழுந்து வணங்கினான். பிறகு தம் பிரதேசத்தைவிட்டு புறப்பட்டதிலிருந்து அன்றுவரை நடைபெற்ற எல்லாச் செய்திகளையும் வரிசையாகச் சொல்லிமுடித்தான்.
நீண்ட காலமாக எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் துறவுவழியை விட்டு விலகிவர மனமில்லாத மல்லப்பாவை அந்தப் பயணம் மாற்றிவிட்ட விந்தையை நினைத்து மகிழ்ச்சியில் திளைத்தான் ராமப்பா.
நாலைந்து நாட்கள் அனைவரும் ரங்கண்ணாவின் அரண்மனையில் விருந்தினராகத் தங்கி மகிழ்ச்சியோடு காலம் கழித்தனர். அதற்குப் பிறகு மணமக்களை அழைத்துக்கொண்டு தம் சொந்தப் பிரதேசத்துக்குப் புறப்பட்டனர்.
(தொடரும்)