Skip to content
Home » கறுப்பு மோசஸ் #2 – பண்டைய உலகில் அடிமைத்தளை

கறுப்பு மோசஸ் #2 – பண்டைய உலகில் அடிமைத்தளை

பண்டைய உலகின் கிரேக்கம், ரோமானியப் பேரரசு, எகிப்து, அக்காடியன் பேரரசு, அசிரியா, பாபிலோனியா, பாரசீகம், இஸ்ரேல், அராபிய காலிப்புகள், சுல்தான்களின் ஆட்சியிலிருந்த பகுதிகள், ஆப்பிரிக்காவின் நூபியா, சஹாராவை ஒட்டி அமைந்த பேரரசுகள், வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா, சீனா என உலகின் எல்லாப் பகுதிகளிலும் அடிமைப்படுத்தும் வழக்கம் நிலவியது. கடனைத் திருப்பிச் செலுத்தமுடியாமல் கொத்தடிமைகளாக வாழ்வது, செய்த குற்றத்துக்குத் தண்டனையாக அடிமைகளாவது, போர்க்கைதிகள், பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள், அடிமைப் பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகள் என எண்ணற்ற காரணங்களால் மக்கள் அடிமைத்தளையில் சிக்கித் தவித்தனர்.

அடிமைகளைக்கொண்ட சமூகத்துக்கும் அடிமைச் சமூகத்துக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை மோஸ் ஃபின்லே என்ற வரலாற்றாசிரியர் விளக்குகிறார். குறைந்த அளவில் அடிமைகள் வாழும் சமூகத்தில் அதன் பொருளாதாரம் அடிமைகளின் உழைப்பைச் சார்ந்திருப்பதில்லை. இது அடிமைகளைக்கொண்ட சமூகம். குடிமக்களின் எண்ணிக்கைக்கு நிகரான அளவில் அடிமைகள் வாழும் சமூகத்தில் அதன் பொருளாதாரம், சமூக நிலை, அரசியல் கட்டமைப்புகள் என எல்லாவற்றின்மீதும் அடிமைகளின் உழைப்பின் தாக்கம் வெளிப்படும். உலகின் அடிமைச் சமூகங்கள் பட்டியலில் இடம்பிடிக்கும் முதல் ஐந்து நாடுகள்: பண்டைய கிரேக்கம், பண்டைய ரோம், வட அமெரிக்காவின் தெற்கு மாகாணங்கள், பிரேசில், கரீபியன் தீவுகள். அந்த வகையில் உலகின் முதல் அடிமைச் சமூகம் என்ற பெருமையைப் பெறுகின்றன கிரேக்கத்தின் பேரரசுகள்.

0

பண்டைய கிரேக்கத்தின் தத்துவக் கோட்பாடுகளும் குறிக்கோள்களும் உலகையே திரும்பிப் பார்க்கச் செய்தவை. தனிமனித உரிமையையும் தடையற்ற செயலுரிமையையும் பறைசாற்றிய நாகரிகம் அடிமைத்தளையை ஆதரிக்கும் சமூகமாக இருந்தது நகைமுரண். பண்டைய கிரேக்கத்தை அடிமைத்தளையை அடித்தளமாகக்கொண்டு கட்டமைக்கப்பட்ட சமூகம் என்றும் சொல்லலாம்.

கிரேக்கத்தின் அரசுகள் ஒவ்வொன்றும் தன்னுடைய சமூகப் பொருளாதார புவியியல் சூழலுக்கேற்ற அடிமை முறையைப் பின்பற்றின. அடிமைகளை நிர்வகிக்கும் சட்டங்களும் விதிமுறைகளும் மாறுபட்டன. ஏதென்ஸில் அடிமைகள் உரிமையாளர்களின் உடைமைகளாகப் பாவிக்கப்படும் சேட்டல் அடிமைத்தளையைப் பின்பற்றினர். உரிமையாளர்கள் அவர்களை விற்கலாம், வாங்கலாம், குத்தகைக்கு விடலாம். இந்த முறையில் அயல்தேசத்தைச் சேர்ந்தவர்களே அடிமைகளாக இருந்தனர். விவசாயம், கனிமச் சுரங்கம், வங்கி, கைத்திறன் சார்ந்த தொழில்கள், வீட்டுவேலை போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.

ஸ்பார்டாவில் இருந்த அடிமைத்தளை ஹெலட் என்றழைக்கப்பட்டது. இந்த வகை அடிமைகள் உரிமையாளரின் விவசாய நிலத்தில் பணிசெய்தனர். அந்த நிலத்தைத் தவிர வேறெங்கும் போகமுடியாது. அடிமைகளுக்கும் குடிமக்களுக்கும் இடைப்பட்ட நிலையில் இருந்தனர். இவர்கள் செல்வம் சேர்த்துத் தங்களின் விடுதலைக்கான விலையைக் கொடுத்து விடுவித்துக்கொள்ளலாம்.

இன்னொரு வகையில் கடனைத் திருப்பிச் செலுத்தமுடியாத குடிமக்கள் அடிமைகளாக்கப்பட்டு உயர்குடியினரின் பண்ணைகளிலும் விவசாய நிலங்களிலும் வேலைசெய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். மற்றுமொரு வகையில் அடிமைகள் அரசாங்கத்தின் உடைமையாக இருந்தனர். சாலை அமைப்பது, நகரத் தூய்மையாளர் போன்ற பொதுத்துறைப் பணிகளிலும் காவலர், எழுத்தர், செயலாளர் போன்ற அலுவலகப் பணிகளிலும் ஈடுபட்டனர்.

அடிமைகளின் விசுவாசம் குறித்த அச்சம் இருந்தாலும் பெரும்பாலான குடும்பங்களில் அடிமைகள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். அவர்களில் சிலர் தங்கள் உரிமையாளரின் குடும்பத்தில் முக்கியமான பொறுப்புகளை ஏற்றிருந்தனர். நல்லொழுக்கத்துடனும் விசுவாசத்துடனும் நடக்கும் அடிமைகளை விடுவிப்பதும் வழக்கமாக இருந்தது. அரசாங்கத்தின் படைகளோடு இணைந்து போரில் சண்டையிடும் அடிமைகளுக்கு நினைவுச்சின்னம் எழுப்பிக் கௌரவித்தனர்.

கடனைத் திருப்பிச் செலுத்தமுடியாத காரணத்தால் எண்ணற்ற கிரேக்க மக்கள் அடிமைப்பட்டனர். நாட்டின் பொருளாதாரமும் மோசமாக இருந்தது. இந்த நெருக்கடியால் மக்கள் கலகம் செய்யலாம் என நினைத்த ஏதென்ஸின் ஆட்சியாளரான சொலோன் பொஆமு 6ஆம் நூற்றாண்டில் அடிமைப்பட்ட கிரேக்கர்களை விடுவித்துக் குடியுரிமை வழங்கினான். ஆனாலும் அடிமைப்படுத்தும் வழக்கம் முற்றிலும் மறைந்துவிடவில்லை, வேறு வடிவத்தில் தொடர்ந்தது. பாரசீகம் போன்ற அண்டை நாடுகளுடன் நடந்த போர்களில் கவர்ந்துவந்த மக்களையும் விலைக்கு வாங்கப்பட்டவர்களையும் அடிமைகளாக்கினர் கிரேக்கர்கள்.

பொஆமு 5 முதல் 3ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் கிரேக்கத்தின் மொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒருவர் அடிமை என்றால் பாருங்கள். அடிமைகளின் உழைப்பினால் கிடைத்த ஆதாயமும் அதைச் சாத்தியமாக்கிய அரசியல் சூழலும் கிரேக்கத்தைச் செழிப்பாக்கின. உடலுழைப்பு தேவையாக இருந்த பணிகளை அடிமைகள் செய்ததால் கிடைத்த ஓய்வுநேரத்தில் உயர்தரக் கலாசாரத்தையும் கலையையும் உருவாக்க முனைந்தனர் உயர்குடியினர். இத்தனை அடிமைகள் இருந்த காரணத்தால்தான் ஏதென்ஸின் மக்கள் விடுதலை குறித்து அதிகம் சிந்தித்தனர் என்ற கருத்து நிலவுகிறது.

0

பண்டைய ரோமானியத்தில் போர்க்கைதிகள், கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட மாலுமிகள், கடற்பயணிகள், ரோமானியப் பேரரசின் ஆட்சிக்குட்படாத பகுதிகளிலிருந்து விலைக்கு வாங்கப்பட்டவர்கள் போன்றார் அடிமைகளாக வாழும் கொடுமையில் தள்ளப்பட்டனர். சிரமமான காலகட்டத்தில் பெற்றோரே தங்கள் குழந்தைகளை அடிமைகளாக விற்கும் துயரச் சம்பவங்களும் நடந்தன. அடிமைகளும் அவர்களின் குடும்பத்தினரும் உரிமையாளரின் உடைமையாகப் பாவிக்கப்பட்டதால், அவர்களை விற்கலாம், வாடகைக்கும் விடலாம். சாட்டையால் அடிப்பது, சூட்டுக்கோலால் சூடுபோடுவது, சமயத்தில் கொல்வது எனத் துன்புறுத்தினாலும் அதை எதிர்த்து யாரும் கேள்வி கேட்கவோ அந்தக் கொடுமைகளைச் செய்பவர்களைத் தண்டிக்கவோ முடியாது. பண்டைய ரோமானியர்கள் அடிமைகள் தேவை என நினைத்தனர். ஒரு சிலரே அவர்களை நியாயமாக நடத்தவேண்டுமென எடுத்துக்கூறினர்.

வீடுகள், சுரங்கங்கள், தொழிற்சாலைகள், பண்ணைகள் இவற்றோடு சாலைபோடுவது, நீர்வழிகளை அமைப்பது, கட்டுமானப் பணி போன்ற அரசாங்கப் பொறியியல் பணிகளிலும் அடிமைகள் வேலைசெய்தனர். இதனால் பொதுமக்களோடு இரண்டறக் கலந்துவிட்டனர், அவர்களைத் தனியே இனங்காண முடியவில்லை. ரோமானியக் குடிமக்களும் அடிமைகளும் பார்க்க ஒன்றுபோல இருந்ததால் அடிமைகளுக்கெனத் தனியுடையைப் பரிந்துரைக்கலாமா என செனட் ஆலோசித்தது. ஆனால் தாங்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பது தெரியவந்தால் அடிமைகள் ஒன்றுதிரண்டு கலகம் செய்யக்கூடுமென நினைத்து அந்த யோசனையைக் கைவிட்டது.

ஆனால் ஒன்று, உரிமையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் அடிமைகளை விடுதலை செய்யலாம். அடிமைகளும் தங்களின் விடுதலைக்கான விலையைக் கொடுத்து விடுவித்துக்கொள்ளலாம். இதனால் பெரும்பாலான அடிமைகள் கடுமையாக உழைத்தனர், உரிமையாளர்களின் கட்டளைக்கு அடிபணிந்து நடந்தனர். நீதிமன்றத்தில் முறைசார்ந்த விடுதலை பெற்றவர்கள் ரோமானியக் குடியுரிமையைப் பெற்றனர். என்ன ஒன்று, அவர்களால் முக்கியமான பதவிகளை வகிக்கமுடியாது. ஆனால் அவர்களின் குழந்தைகள் குடியுரிமையோடு பதவி வகிக்கும் உரிமையையும் பெறுவார்கள். முறைசாராத விடுதலை பெற்றவர்கள் குடியுரிமையைப் பெறமுடியாது. இறப்புக்குப் பிறகு அவர்களின் சேமிப்பும் சொத்துக்களும் முந்தைய உரிமையாளர்களையே சேரும் என்ற வழக்கம் நிலவியது.

அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் மற்ற உழைக்கும் வர்க்கத்தினரைப்போலவே தங்களின் பணிகளைத் தொடரலாம். அவர்களில் சிலர் செல்வந்தவர்களாகவும் ஆயினர். எனினும் ரோமானியர்கள் சமூக அந்தஸ்துக்கு முக்கியத்துவம் அளித்ததால் விடுதலை பெற்றாலும் அடிமைத்தளையின் இழுக்கை எளிதில் உதறமுடியாமல் வாழ்க்கையின் இறுதி வரையில் அதைச் சுமக்கவேண்டியிருந்தது.

0

ஆப்பிரிக்காவில், குறிப்பாக அதன் வட கிழக்குப் பகுதியில் அமைந்த பண்டைய எகிப்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வகையில் மக்கள் அடிமைப்படுத்தப்பட்டனர். போர்க்கைதிகளே பெரும்பாலும் அடிமைகளாக்கப்பட்டனர் என்றாலும் அடிமைப் பெற்றோருக்குப் பிறந்து அடிமைகளாக வளரும் குழந்தைகளும் கடன்சுமையால் அடிமையானவர்களும் உண்டு. வறுமையில் உழலும் விவசாயிகள் உணவும் தங்குமிடமும் கிடைக்கும் என்பதற்காகத் தங்களையே அடிமைகளாக விற்பதும் நடைமுறையில் இருந்தது. ஆனாலும் ரோமானியப் பேரரசைப் போலவும் மற்ற நாடுகள் அளவுக்கும் பண்டைய எகிப்தில் அடிமை வாணிகம் நடைமுறையில் இல்லை.

ஏனைய நாடுகளைவிடவும் எகிப்தில் அடிமைகள் நல்லவிதமாகவே வாழ்ந்தனர். அவர்கள் சமூகத்தில் மற்ற தொழிலாளர்களுக்கு ஒப்பான உரிமைகளையும் அந்தஸ்தையும் பெற்றிருந்தனர். சிறுவயது அடிமைகளைக் கடுமையான வேலையில் ஈடுபடுத்தாமல் உரிமையாளப் பெண்மணி கருத்துடன் வளர்க்கவேண்டும் என்பது நியதி.

அடிமைகளில் சிலர் வீடுகளிலும் சிலர் வழிபாட்டுத் தலங்களிலும் பணிசெய்தனர். சிறப்புத் திறன்களையுடைய அடிமைகளுக்கு அதிகத் தேவையிருந்தது. குழந்தைப் பராமரிப்பு, சமையல், தோட்டவேலை, விவசாயம், வீட்டு விலங்குப் பராமரிப்பு எனப் பலவிதமான வேலைகளில் ஈடுபட்டனர். கல்வியறிவு பெற்றவர்கள் உரிமையாளரின் சொத்துக்களுக்கு மேலாளராகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றனர். சுரங்கங்ளிலும் கல்லுடைக்கும் வேலைகளிலும் ஈடுபட்டவர்களின் நிலைமை மோசமாக இருந்தது. தாங்கொணாத வகையில் கொடூரமாக நடத்தப்பட்டால் மட்டுமே அடிமைகள் தப்பியோடுவார்கள்.

பொஆமு 1550 முதல் 1295ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அடிமைகளைச் சிறைப்பிடித்தவர்களையே அவர்களின் உரிமையாளராக அரசன் நியமித்தான். பொஆமு 732 முதல் 656ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அடிமைகளை விற்பதும் வாங்குவதும் வழக்கமானது. பொஆமு 672 முதல் 525ஆம் ஆண்டுகளுக்கிடையே பேரரசன் டேரியஸ் ஆட்சிசெய்த காலகட்டத்தில் எழுதப்பட்ட அடிமை ஒப்பந்தச் சான்றுகள் கிடைத்துள்ளன. அவற்றை எழுத அடிமைகளின் ஒப்புதலும் தேவை என்பதுதான் கவனிக்கவேண்டிய விஷயம்.

0

பொஆமு 3500ஆம் ஆண்டில் சுமேரிய நாகரிகம் தழைத்திருந்த காலகட்டத்தில் அடிமைப்படுத்தல் நிறுவனமயமானது. பண்டைய பாபிலோனில் பொஆமு 1755 முதல் 1750 வரையிலான காலகட்டத்தில் ஹமுராபி மன்னனின் ஆட்சியில் இயற்றப்பட்ட நெறிமுறை குடிமக்களுக்கும் அடிமைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எடுத்துச்சொல்கிறது. தப்பிச் செல்லும் அடிமைகளைப் பிடித்துத் தருபவர்களுக்கு இரண்டு ஷெகல்கள் வெகுமதி அளிக்கப்பட்டது. தப்பியோடுபவர்களுக்குத் தஞ்சமளிப்பவர்களுக்கும் உதவிசெய்பவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அயல்தேசத்தில் பிடிபட்டவர்கள், போர்க்கைதிகள், கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள், குற்றமிழைத்தவர்கள் போன்றோர் அடிமைகளாகினர்.

அடிமையை வாங்கி ஒரு மாதத்துக்குள்ளாக வலிப்புநோயால் பாதிக்கப்பட்டால் செலுத்திய முழு தொகையையும் உரிமையாளர் திரும்பப் பெறலாம் எனவும் குறிப்பிட்டது ஹமுராபியின் நெறிமுறை. உரிமையாளரின் சொல்படி நடக்காத அடிமைகளின் காது வெட்டப்படும் என்றும் சொல்கிறது. வெளிநாடுகளிலிருந்து வாங்கிவரும் அடிமைகளுக்கான சட்டம் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன. அடிமை விற்பனைப் பத்திரங்களையும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

0

இடைக்காலத்தின் தொடக்கத்தில் ஐரோப்பாவின் சில பகுதிகளில் அடிமைப்படுத்தும் வழக்கம் சிறிதளவு குறைந்தது. ஆனாலும் கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே பல நூற்றாண்டுகள் நடைபெற்ற போரில் ஒருவரையொருவர் கைதுசெய்து அடிமைப்படுத்தினர். பொஆ 7ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டு வரையிலும் மேற்கு, மத்திய ஆசியா, வடக்கு, கிழக்கு ஆப்பிரிக்கப் பகுதிகள், இந்தியா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் இஸ்லாமிய அடிமைப்படுத்தல் நடைமுறையிலிருந்தது. இஸ்லாமியரல்லாதவர்களை அடிமைப்படுத்தலாம் என இஸ்லாமிய சமய விதி கூறியதாகச் சொல்லி தங்கள் மதத்தை ஏற்காத மக்களை அடிமைப்படுத்தித் தங்களுடைய நாடுகளுக்குக் கூட்டிவந்தனர். பால்கன், க்ரிமியா, புகாரா, அண்டலூசியா, சஹாரா, சிவப்புக் கடல், இந்தியப் பெருங்கடல் என நாற்திசையிலிருந்தும் அடிமைகள் கொண்டுவரப்பட்டனர்.

0

மெக்சிகோவில் ஸ்பானியர்களின் வருகைக்கு முன்பே மக்களை அடிமைப்படுத்தும் வழக்கம் நிலவியது. கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களைச் சிறைப்படுத்திக் கடன் தீரும் வரையில் வேலைசெய்யவேண்டுமெனக் கட்டாயப்படுத்தினார்கள். மாயா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அக்கம்பக்கத்து நாடுகளுக்குப் படையெடுத்து மக்களைக் கவர்ந்து வந்தார்கள். அவர்களை நரபலி கொடுப்பதற்கும் வழிபாட்டுத்தலங்களின் கட்டுமானப் பணியிலும் ஈடுபடுத்தினார்கள். ஆனால் ஒன்று, பெற்றோர் அடிமைகளாக இருந்தாலும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அடிமைகளாவதில்லை, சுதந்திரமாக வாழலாம்.

இன்கா பேரரசில் ஒவ்வொரு குடும்பமும் தங்களில் ஒருவரைப் பேரரசுக்குப் பணிசெய்ய அர்ப்பணிக்கவேண்டும்; அதற்குச் சம்பளம் கிடையாது. இதை அடிமைப்படுத்தல் என்று வரையறுக்க முடியாதென்றாலும் கட்டாயப் பணி என்பதால் விருப்பமில்லையென்றாலும் செய்துதானாகவேண்டும். பின்னர் அங்கு வந்த ஸ்பானியர்கள் பொலிவியாவின் வெள்ளிக் கனிமச் சுரங்கத்துக்கான பணியாட்களை வேலைக்கமர்த்த இதே முறையைப் பின்பற்றினர்.

வட அமெரிக்காவில் சிவப்பிந்தியர்கள், தென்னமெரிக்காவில் வசித்த பழங்குடி இனக்குழுக்கள், பசிபிக் கடற்கரையோரமாக வசித்த இனங்கள் எனப் பலரும் போர்க்கைதிகளை அடிமைப்படுத்தினர்.

0

பண்டைய சீனாவில் பொஆமு 18 முதல் 12ஆம் நூற்றாண்டு வரையிலும் அடிமைப்படுத்தல் நடைமுறையிலிருந்தது. போர்க்கைதிகளும் கடன்பட்டவர்களும் குடும்பத்தினரால் விற்கப்பட்டவர்களும் அடிமைகளாக வாழ்ந்தனர். இவர்கள் சமூகத்தில் கீழ்நிலையில் இருந்தாலும் சட்ட உரிமைகளைப் பெற்றிருந்தனர்.

கிரேக்க அறிஞர் மெகஸ்தனிஸ் பொஆமு 4ஆம் நூற்றாண்டில் எழுதிய இண்டிகாவில் பண்டைய இந்தியாவின் மௌரியப் பேரரசில் அடிமைப்படுத்தல் தடைசெய்யப்பட்டிருந்தெனக் குறிப்பிடுகிறார். அடுத்த நூறாண்டுகளில் பேரரசர் அசோகரின் ஆட்சிக்காலத்தில் பொஆமு 3ஆம் நூற்றாண்டின் இடைப்படுதியைச் சேர்ந்த கல்வெட்டில் அடிமைகள், கூலிக்கு வேலைசெய்யும் பணியாளர்கள் ஆகியோரின் கடமைகளைப் பற்றிய குறிப்பைக் காணமுடிகிறது. முகலாயர்களின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவிலிருந்து மத்திய, மேற்கு ஆசியாவுக்கு அடிமைகள் கொண்டுசெல்லப்பட்டனர் என்றும் கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகள் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டனர் என்றும் வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் ஆப்பிரிக்க அடிமைகளை இந்தியாவின் மேற்குப் பகுதிக்குக் கொண்டுவந்தனர். காலனி ஆதிக்கத்தின்போது அடிமைப்பட்ட இந்தியர்கள் உலகின் பல பகுதிகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

0

விவிலயத்தின் பழைய ஏற்பாட்டில் அடிமைகள் பற்றிய பல குறிப்புகளைக் காணமுடிகிறது. அவர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் எப்படி நடத்தப்பட வேண்டும் போன்ற விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அடிமைத்தளை சமூகத்தின் இயல்பான வழக்கமாகக் கருதப்பட்டது. அடிமைகளுக்குப் போதுமான உணவும் நீரும் பாதுகாப்பும் வழங்கப்படவேண்டும், அவர்களைச் சங்கிலியில் பிணைக்கவோ துன்புறுத்தவோ அடிக்கவோ கூடாது போன்ற நன்னடத்தை விதிமுறைகள் புழக்கத்திலிருந்தன.

ஜூப்ளி எனப்படும் கொண்டாட்டத்தில் அடிமைகளை விடுவிக்கும் வழக்கம் குறித்து லேவியராகமம் குறிப்பிடுகிறது. இஸ்ரேலிலும் அடிமைகளுக்கு ஏழாம் ஆண்டில் விடுதலை தருவது பற்றி உபாகமம் சொல்கிறது. ஹீப்ரூ மக்கள் அல்லாதவர்களும் அவர்களின் வழித்தோன்றல்களும் அடிமைத்தளையில் இருந்து தப்பிக்கமுடியாது. அடிமைகள் உரிமையாளர்களுக்கு அடிபணிந்து நடக்கவேண்டுமென்றும் உரிமையாளர்கள் அடிமைகளை அச்சுறுத்தக்கூடாதென்றும் சொல்கிறது புதிய ஏற்பாடு.

(தொடரும்)

பகிர:
கார்குழலி

கார்குழலி

தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதுபவர். பல்வேறு அரசுத் துறைகளோடும் பன்னாட்டு அரசு சாரா அமைப்புகளோடும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடும் நாளிதழ்களோடும் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். துலிகா, பிரதம் புக்ஸ் போன்ற பதிப்பகங்களில் குழந்தைகளுக்காக நாற்பத்தைந்துக்கும் அதிகமான நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார்.View Author posts

2 thoughts on “கறுப்பு மோசஸ் #2 – பண்டைய உலகில் அடிமைத்தளை”

  1. Greek and Roman empires were built on exploitation of the vulnerable. Notwithstanding whatever greatness that can be attributed to them, they propagated slavery. Perhaps, enslaving the vanquished population and depriving them of their rights was deemed appropriate gains from wars all over the world, but it is unfortunate that the practice is prevalent even today in the so called civilised westernised world.

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *