Skip to content
Home » குறுநிலத் தலைவர்கள் #1

குறுநிலத் தலைவர்கள் #1

நம் சங்க இலக்கியத்தில் மூவேந்தர்களுக்கு அடுத்த இடத்தில் வைத்துப் புலவர்களால் போற்றப்படுவர்கள், வேளிர்கள். இவ்வேளிர்கள் குறித்து புறநானூறு (390,24,202,201), அகநானூறு(258), மதுரைக் காஞ்சி (55), குறுந்தொகை (164), பதிற்றுப்பத்து (30) போன்ற பாடல்கள் கூறுகின்றன.

‘நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றி
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை
உவரா ஈகை துவரை ஆண்டு
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறற்போர் அண்ணலே
தார் அணி யானைச் சேட்டு இருங் கோவே’

எனும் புறநானூற்றுப் பாடல், இன்றைய திருச்சி-மதுரை புறவழிச்சாலையில் உள்ள கொடும்பாளூர் எனும் ஊரினைத் தலைநகராய்க் கொண்டு ஆண்ட இருங்கோவேள் எனும் வேளிரைப் பற்றி கபிலர் பாடுவதாக அமைந்துள்ளது. இதில், துவாராபதி எனும் ஊரினை ஆண்ட தொன்மையான பதினென் குடி வேளிரில் வந்த நாற்பத்தொன்பதாவது தலைமுறையில் வந்த வேளிர் நீ, என இருங்கோவைளைக் கூறுகிறார் கபிலர்.

இவ்வேளிர் குடியில் வந்த தலைவர்களை சங்ககாலப் புலவர்கள் ’வேள்’ என்று அழைத்ததை வழமையாய்க் கொண்டுள்ளனர். ‘வேள் ஆய்’, ‘வேள் எவ்வி’, ‘வேள் ஆவி’, ‘வேள் பாரி’, ‘வேள் ஓரி’, ‘நாங்கூர் வேள்’, ‘அழும்பில் வேள்’, ‘இருங்கோ வேள்’, ‘அழுந்தூர் வேள்’, ‘செங்கண்மா வேள் நன்னன்’ போன்ற வேளிர் குடித்தலைவர்களை நாம் சங்க இலக்கியங்களில் காணலாம். இவர்கள் தவிர்த்து மலையமான், அதியமான், மழவர், எயினர், கோசர் போன்ற குடியினர் சங்க இலக்கியங்களில் ஆளுமை மிக்க குறுநில மன்னர்களாய் வருகின்றனர். இவர்களில் அதியமான், அசோகரின் கல்வெட்டில் மூவேந்தர்களுக்கு அடுத்து ‘சத்தியபுத்திரர்’ எனச் சிறப்பாகக் குறிக்கப்படுகிறார்.

சங்க இலக்கியம் தவிர்த்து, சங்க மருவிய காலம் என அழைக்கப்படும் காலத்திலிருந்து இத்தகைய குறுநிலத் தலைவர்களின் வரலாற்றினை அறிய நடுகற்களே பெரும்பாலும் உதவி புரிகின்றன. செப்பேடுகள், இலக்கியங்கள் ஆகியவற்றில் இல்லாத பல தலைவர்களை இந்நடுகற்கள் அடையாளம் காட்டுகின்றன. இவர்களில் சில தலைவர்கள், சங்க காலத்திலிருந்து 13-ம் நூற்றாண்டு வரையிலும் தொடர்ச்சியாக ஆண்டுள்ளனர். சில தலைவர்கள், சங்ககாலத்துடனையே முடிவுக்கு வருகின்றனர். சில தலைவர்களின் பெயர்கள் காலம் கடந்தும் மன்னர்களால் நினைவுகூரப்படுகின்றனர்.

சங்க காலத்துடன் மறையப்பெற்ற ஒய்மான் நல்லியக்கோடன், அதன்பின் 13-ம் நூற்றாண்டு வரையிலும் அவர் ஆட்சி செய்த இன்றைய திண்டிவனம் பகுதிக்கு, சோழர்கள் அவர்கள் பெயரிலேயே ‘ஒய்மான்நாடு’ என அழைத்தனர். பாரி ஆண்ட பறம்புமலையை ஒரு கல்வெட்டில் சுந்தரபாண்டியன் நினைவுகூர்கிறார். சிலர் புதிதாக அரசாளும் குடியினராக உயர்வு பெறுகின்றனர். இவர்களில் பழங்குடியினராக அறியப்படும் சங்ககாலம் தாண்டியும், தப்பிப் பிழைத்த மழவரும், கோசரும் 6-ம் நூற்றாண்டு நடுகல் ஒன்றில் வருகின்றனர். அத்துடன் கோசர் குறித்த குறிப்புகள் இல்லை, எனினும் மழவர் குடியினரோ அதன்பின் சோழர்க்கு பெண் கொடுக்கும் நிலைக்கு உயர்கின்றனர். இவர்கள் வழிவந்தவரே பல கோவில் கட்டுமானப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு பெரும்புகழ்பெற்ற செம்பியன் மாதேவியாவார்.

இனி, கல்வெட்டு ரீதியாக அதிகம் அறியப்படாத குறுநிலத் தலைவர்களின் வரலாற்றினைக் காண்போம்.

கோ வெண்கட்டி

குறுநிலத் தலைவர் குறித்து தமிழகத்தில் கிடைக்கும் கல்வெட்டுகளில் காலத்தால் மூத்த இரண்டாவது கல்வெட்டு இதுவேயாகும். இது ஒரு நடுகல் கல்வெட்டு, இதன் காலம் கி.பி.2-ம் நூற்றாண்டு.

(திருவண்ணாமலை மாவட்டம் ஜம்பையில் கிடைத்த அதியமான் கல்வெட்டு கி.பி. மூன்றாம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. இதுவே காலத்தால் மூத்தது, அதியமான்கள் குறித்து வரும் தொடரில் விரிவாகக் காண்போம்.)

புதுக்கோட்டையின் கிழக்கே 6 கி.மீ தொலைவில் உள்ளது பொற்பனைக்கோட்டை. ஆனால், பொப்பணைக் கோட்டை என்பதே அதன் பழம்பெயராகும். மக்கள் வழக்கில் பொற்பனைக்கோட்டை என அழைக்கப்படுகிறது. இங்குள்ள முனீஸ்வரரின் கோவிலின் எதிரேயுள்ள பனைமரங்களில் பொன்னால் ஆன நுங்கு காய்த்ததாய் ஒரு புராணக்கதை பின்னால் தோன்றி, அம்முனீஸ்வரர் பொற்பனை முனீஸ்வரர் என்றும், அதன் பின்னூட்டே ஊரும் பொற்பனைக்கோட்டை என்று வழங்கப்படுகிறது.

‘காற்றைப் பிடித்துக் கடத்தி லடைத்துக் கடியபெருங்
காற்றைக் குரம்பை செய்வார்செய் கைபோலுமற் காலமெனுங்
கூற்றைத் தவிர்த்தருள் பொப்பண்ண காங்கேயர் கோனளித்த
சோற்றுச் செருக்கல்ல வோதமிழ் மூன்றுரை சொல்வித்ததே’

சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார், தனது தமிழுக்கு ஊக்கமளித்தவன் பொப்பண்ண காங்கேயன் என்று அந்நூலின் பாயிரத்தில் கூறுகிறார். 12,13-ம் நூற்றாண்டிலும் அதற்கு முன்பிருந்தும் இப்பகுதி சோழர்-பாண்டியர்களின் கீழ் அதிகாரிகளாய் விளங்கிய காங்கேயர்களின் ஆளுமையில் இருந்ததை புதுக்கோட்டைக் கல்வெட்டுகளில் காணலாம், எனவே பொப்பணக் கோட்டை பின்னாளில் மருவி பொற்பனைக் கோட்டையாகியது.

இவ்வூரில் சங்ககாலக் கோட்டையும் கொத்தளமும் இருந்ததற்கு சான்றாக, இன்றும் கோட்டைச் சுவர்கள், அகழிகள் காணப்படுகின்றன. இங்குள்ள குளத்துக் கரையில் ஒரு முக்கோணவடிவ கல், துணி துவைக்கும் கல்லாக, அவ்வூர் மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. 2012-ம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் இக்கல்லினை தம் களஆய்வில் கண்டு, அதிலுள்ள எழுத்துக்களைப் படியெடுத்து ஆவணம் இதழில் செய்தியாக வெளியிட்டனர்.

கோ வென்கட்டி என்பவர் காலத்தில், பொன்கொங்கர் விண்ணக்கோன் எனும் மற்றொரு தலைவன் ஆநிரை கவரும் வெட்சிப்போரை நிகழ்த்த, இக்கோட்டையின் காவலன் ‘அங்கப்படை தானையன் கனங்குமரன்’ இப்பூசலில் இறக்கிறார். அவருக்கு எழுப்பிய நடுகல்லே இது.

பொற்பனைக்கோட்டை கல்வெட்டு தகவல்:

1.கோவென் கட்டிற் நெதிர
2.ணாறு பொன்கொங்கர் விண்ணகோன்
3.ஆஎறிஇத்து ஏவ அதவ்வனாரு
4.அங்கபடை தாணைத் தணயன் கணங்
5.குமாரன் கல்

இந்நடுகல் இரு குறுநிலத் தலைவர்களை அடையாளப் படுத்தப்படுகிறது. அதில் இக்கோட்டையின் தலைவனான வெண்கட்டி என்பவர் குறித்து சங்க இலக்கியப்பாடல்கள் கிடைக்காவிடினும், அவரது குலமான கட்டி எனும் குலம் குறித்து சில சங்கப்பாடல்கள் உள்ளன.

‘நன்னன், ஏற்றை, நறும் பூண் அத்தி
துன் அருங் கடுந் திறற் கங்கன், கட்டி,
பொன் அணி வல்வில் புன்றுறை, என்று ஆங்கு’

மேற்கண்ட அகநானூற்று 44-ம் பாடல், நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை, கணையன் ஆகிய ஏழுபேர் ஒன்றுகூடிச் சோழனைத் தாக்கிய போர் குறித்துப் பாடுகிறது. ‘சோழநாட்டுக் கட்டூர் என்னுமிடத்தில் இப்போர் நடந்தது. எழு குறுநிலத் தலைவர்கள் சேர்ந்து சோழர்படையின் தலைவன் பழையன் என்பவனைக் கொன்றனர். இதனைக் கண்டு வெகுண்ட சோழ மன்னன், தானே படைக்குத் தலைமை தாங்கிச்சென்று போரிட்டான். எதிர்த்த எழுவரில் ஆறு பேர் தப்பித்துக்கொண்டனர். கணையன் என்பவன் மட்டும் அகப்பட்டுக்கொண்டான்’ என மேற்கண்ட பாடல் கூறுகிறது.

இப்பாடலின் வழியே கட்டி எனும் குறுநிலத் தலைவன் ஒருவன் இருந்ததை அறிய முடிகிறது. அவனது வழித்தோன்றலில் ஒருவனே இந்த கோ வெண்கட்டி என்பவனாவான்.

இவனைப்போன்று நடுநாட்டுப் பகுதியான விழுப்புரம் மாவட்டம் பாக்கம் பகுதியிலுள்ள சிம்மவிஷ்ணு கால நடுகல் ஒன்றில் கட்டி இனத்தைப்பற்றி ஒரு குறிப்பு வருகின்றது. இதில் ஒரு நகைமுரண் என்னவெனில், பொற்பனைக்கோட்டை நடுகல்லில் ஆநிரை மீட்கும் கரந்தைப்போரில் கோட்டையின் காவலன் இறந்ததைக் கூறுகிறது. விழுப்புரம் கல்வெட்டு, அதே கட்டி இன வீரன் ஆநிரை கவரும் வெட்சிப்போரில் ஈடுபட்டதைக் கூறுகிறது.

விழுப்புரம் கல்வெட்டு தகவல்:

1. கோவிசைய சிங்க விண்ண
2. பருமற்கு இருபத்து
3. நால்காவது இவ்வூர் தொறு செ
4. டஞான்று சேடார் மகன்
5. கட்டி எறிந்து பட்டான்
6….. கல்

இந்நடுகல் குறித்து சில சுவாரசியமான தகவல்களைக் காண்போம்.

வெட்சிபோர் வீரன்: சங்க இலக்கியத்தில் பயின்று வரும் ‘ஆகோள்’ போர், ஆநிரைகளைக் கவரும் அல்லது மீட்ட போர்களை குறிக்கும். இப்போரில் இறந்த வீரர்களுக்கு நடுகல் எடுப்பர். இவை பெரும்பாலும் ஆநிரைகளை மீட்கும் போரான கரந்தைபோர் வீரர்களுக்கே எடுக்கப்பட்டுள்ளது. வெகுசில நடுகற்களே ஆநிரை கவர்ந்தபோரில் இறந்த வெட்சிபோர் வீரர்களுக்கென உள்ளது. அவ்வாறு கிடைத்த சில நடுகற்களில் இந்நடுகல்லும் ஒன்று. ‘ஆகோள் பூசல்’ எனும் சொல் நடுநாட்டு பகுதிகளில் ‘தொறுபூசல்’ என வழங்கப்படுகிறது. இப்போரில் இறந்த வீரன் ‘கட்டி’ எனும் வம்சத்தை சேர்ந்தவன். இந்தக் கட்டி வம்ச வீரன், ஆநிரை கவரும் போரில் எதிர்குடியினரிடம் சண்டையிட்டு இறக்கிறான். இவ்வீரன் இங்குள்ள மாட்டு மந்தையைக் கவர்ந்துள்ளான். இக்கல்வெட்டு சிம்மவிஷ்ணு காலத்தைச் சேர்ந்தது.

அகநானூற்று தமிழ் எண்: பழங்கன்னடத்தில் எண்மதிப்பான நான்கின், பன்ம மதிப்பினைச் சுட்ட நால்கு, பதினால்கு, இருபத்திநால்கு என்று குறிப்பிடுவர். இன்றுவரையிலுமே அவர்களிடம் இச்சொல்லாடல் வழக்கில் இருந்து வருகின்றது. சிம்மலிஷ்ணு பல்லவர் கால இந்நடுகல்லில் இருபத்தி நான்கு எனக் குறிப்பதற்கு பதிலாக, இருபத்து நால்கு எனக் குறிப்பிடுகின்றனர். பழமையான நமது சங்க இலக்கியத்தில் நான்கு என்பதற்கு பதிலாக நால்கு என்றே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சங்க இலக்கியம் பற்றி நன்கு ஆராயாத சிலர், திராவிட மொழி ஒப்பிலக்கண அட்டவணையில் இந்த நால்கு என்ற சொல் கன்னடமொழியின் தனிச்சிறப்பு, அங்கிருந்தேதான் திராவிட மொழி அனைத்திற்கும் பரவியது எனும் கருத்தினைக் கூறியுள்ளனர்.

நால்கு என்ற வார்த்தை வரும் சில இலக்கியப் பாடல்கல்களைக் காண்போம்:

‘கோட்டிற் செய்த கொடுஞ்சி நெடுந்தேர்
ஊட்டுளை துயல்வர வோரி நுடங்கப்
பால்புரை புரவி நால்குடன் பூட்டிக்
காலி னேழடிப் பின்சென்று கோலின்’ (பொருநராற்றுப்படை)

‘புணர் தொழில நால்குடன் பூட்டி
அரித்தேர் நல்கியும் அமையான், செருத்தொலைத்து
ஒன்னாத் தெவ்வர்’ (பெரும்பாணாற்றுப்படை)

‘நன்னால்கு பூண்ட கடும்பரி நெடுந்தேர்’ (அகம் 104)

‘நால்குடன் பூண்ட கால்நவில் புரவிக் கொடிஞ்சி நெடுந்தேர் கடும்பரி’ (அகம் 334)

பழமையான இச்சொல்லாடல், இந்த நடுகல்லிலும் பயின்று வருகிறது. கன்னடத்தில் மட்டுமல்ல, நம்மிடையேயும் இச்சொல்வழக்கு தொடர்ச்சியாய் இருந்தது. அதுமட்டுமின்றி நம்மிடம் இருந்தே தென்னக மொழிகளுக்கும் பரவியிருக்கும் எனும் கருத்திற்கு இந்நடுல்லே சான்று.

சங்கப்பாடல்களில் ஆரம்பித்து, பொப்பண்ணக் கோட்டை நடுகல்லில் இடம்பெற்று, இறுதியாக ஐந்தாம் நூற்றாண்டுடன் கட்டி எனும் இனக் குறுநிலத் தலைவர்களின் இருப்பு முடிவுக்கு வருகிது. அதன் பின் இவர்கள் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *