Skip to content
Home » குறுநிலத் தலைவர்கள் #2 – கள்வர் கோமான் புல்லி

குறுநிலத் தலைவர்கள் #2 – கள்வர் கோமான் புல்லி

‘கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்’

அகநானூற்று பாடலான இப்பாடலில், சங்ககாலப் புலவரான மாமூலனார், புல்லியைக் கள்வர் கோமான் (கள்வர்களுக்குத் தலைவன்) என்றும், மழவர்களது நாட்டை அடக்கி ஆண்டவன் என்றும், வேங்கட மலையை ஆண்டவன் என்றும் குறிப்பிடுகிறார். இதனால் புல்லி என்பவன் கள்வர் எனும் இனத்தின் கோமான் (அரசன்) எனப் பொருள் கொள்ளலாம்.

மாமூலனார் புல்லியை ‘கள்வர் கோமான்’ என்றுத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதால், இவனைக் கள்வர் குடி மக்களின் தலைவன் அல்லது கள்வர் குடியில் தோன்றியவன் என்று உறுதிப்படுத்த முடிகின்றது.

ஆனால், அகநானூற்றில் (அகம் 342) ஒரு பாடலில் ‘தெற்கேயுள்ள கவுரியர் நாட்டின் (பாண்டியர் நாட்டின்) மண்ணாலாய புற்றினையுடைய காட்டரணின் இடத்தைத் திறத்தலோடு, பகைவர் ஆநிரைக்களைக் கவர்ந்து கொள்ளும் மூதூர்க் கள்வர் பெருமகனும் ஏவலிளையர் தலைவனும் பல போரினை வென்ற நல்லிசையுடையவனும் தென்னன் ஆவான்’ (அகம்.342:5-10) என்று மதுரைக் கணக்காயனார் குறிப்பிட்டுள்ளார்.

இவர் ‘கள்வர் பெருமகன் தென்னன்’ என்று குறிப்பிடுவதும், ‘கள்வர் கோமான் புல்லியும்’ ஒருவரா? வேறானவர்களா? அல்லது ஒரே குடியைச் சேர்ந்தவர்களா? கள்வர் குடியைச் சேர்ந்த இருவரும் வேங்கடமலைப் பகுதியையும், பாண்டிய நாட்டுபக்கத்திலிருந்த மூதூரையும் ஆட்சி செய்தனரா? போன்ற கேள்விகளுக்கு விடை காண முடியவில்லை.

புல்லணற்காளை என்றும் அழைக்கப்படும் புல்லியை, உலோச்சனார் (புறம்.258), கல்லாடனார் (புறம்.385, அகம். 83,209) மாமூலனார் (அகம்.61. 295,311, 399, 393; நற்.14) ஆகிய மூன்று புலவர்களும் பாட்டுடைத் தலைவனாக வைத்துப் பாடியுள்ளனர். கடியலூர் உருத்திரங் கண்ணனார், பெரும்பாணாற்றுப் படையில் (பெரு.134-145) புல்லியைக் குறிப்பிடுகின்றார்.

ஆநிரை என அழைக்கப்படும் மாட்டினங்களில் கடைக்கண் புள்ளி என்று ஒரு வகை மாடு உண்டு. அவ்வகை மாட்டினங்கள் சற்று முரடானவை. அத்தகைய மாட்டினை ஆநிரைக் கூட்டத்தினிடையே உரிமையாளர் விட்டுவிடுவர். அந்த மாட்டை அடக்குவதோ, கடத்துவதோ மிகவும் கடினம். அவ்வகை மாட்டினங்களை மந்தைக்கு நடுவில் விட்டு மந்தையோடு வெட்சிப்போர் புரிவோர் கடத்துவர். அவ்வகையில் புள்ளியைக் கடத்துபவன் பெரு வீரனாக அன்று மதிக்கப்பட்டிருப்பான்.

ஒருவேளை அவ்வகை புள்ளியைக் கடத்துபவர்களை புள்ளியார் என்றழைத்தனரோ என்றும் எண்ண வேண்டியுள்ளது.

புல்லியின் வாழ்க்கை முறை

வெட்சிப் போர்

புறப்பொருள் வெண்பாமாலை, வெட்சிப் படலம் குறித்து விரிவாக பேசுகிறது.

வெட்சி, வெட்சி அரவம், விரிச்சி, செலவு,
வேயே, புறத்திறை, ஊர்கொலை, ஆகோள்,
பூசல் மாற்றே, புகழ்சுரத் துய்த்தல்,
தலைத்தோற் றம்மே, தந்துநிறை, பாதீடு,
உண்டாட்டு, உயர்கொடை, புலனறி சிறப்பே,
பிள்ளை வழக்கே, பெருந்துடி நிலையே,
கொற்றவை நிலையே, வெறியாட்டு உளப்பட
எட்டு இரண்டு ஏனை நான்கொடு தொகைஇ
வெட்சியும் வெட்சித் துறையும் ஆகும்.

மேலும், வெட்சி என்பது மன்னுறு தொழிலும், தன்னுறு தொழிலும் என இரு வகையினையுடையது. இதில் புல்லியினத்தினர் தன்னுறு தொழிலாக வெட்சி எனும் களவுத் தொழிலை மேற்க்கொண்ட குடியினர் ஆவர். தொல்காப்பிய புறத்திணை இயல் ‘களவின் ஆதந்து ஓம்பல்’ எனக் களவுத் தொழிலை குறிப்பிடுகிறது.

‘அண்ணல் யானை வெண்கோடு கொண்டு
நறவுநொடை நெல்லின் நாண்மகிழ் அயருங்
கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்’

தலைமை வாய்ந்த யானைகளின் தந்தங்களை, கள்ளோடு விற்று அதனால் கிடைத்த நெல்லைக் கொண்டு, தன்னைப் புகழ்ந்துபாடும் அலைகுடிகளான பாணர்க்கு பரிசளித்து மகிழ்வான். கழலினைத் தரித்த திருந்திய அடிகளை உடைய கள்வர்களின் கோமான் புல்லி என மாமூலனார் புல்லியைப் போற்றுகிறார்.

இதுதவிர புல்லியியின் இனத்தைப் பற்றி 10 பாடல்கள் சங்க இலக்கியமெங்கும் கிடைக்கின்றன. இப்பாடல்களை ஆய்ந்து பார்க்கையில், புல்லிகள் பதினென் வேளிர்குடிகளில் ஒருவராய் இல்லாது, சங்ககாலத்தில் பயின்றுவரும் ஆநிரைக் கள்வர்களில் தனித்துவம் வாய்ந்த ஓர் இனமாய் இருத்தல்கூடும். பெரியபுராணத்தில்கூட கண்ணப்பர் வரலாற்றை சேக்கிழார் கூறுகையில், வேங்கடமலையை ஒட்டிவாழும் பகுதிகளில் ஆநிரைகள்வர்கள் கூட்டமாய் சென்று பசுக் கூட்டங்களைக் கவர்ந்து, அதனால் செழிப்போடு அவ்வூர் இருந்தது எனக் காட்டியிருப்பார். சங்ககாலத்தின் தொடக்கத்தில் புல்லிஇனம் ஆநிரை கவரும் ‘வெட்சிப் போரில்’ மட்டுமே ஈடுபட்டதை அறிய முடிகிறது.

சங்ககாலத்தில் பல செய்யுளில் அறியப்பட்ட புல்லியினம், அதன்பின் கி.பி.6ஆம் நூற்றாண்டு அளவிலே கிடைக்கும் இரு நடுகற்கள் வாயிலாகவே அறிய முடிகிறது. இதற்கு முன்புள்ள சங்கம் மருவிய காலத்திலும், பல்லவர் சோழர் காலத்திலும், புல்லிகளைக் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.

கரந்தைப் போர்

வெட்ப்போர் புரிந்த கள்வர்களால் கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளை மீட்டு வரும் வீரர்களுக்கான படலமே கரந்தைப் படலம் ஆகும்.

‘அழுங்கல்நீர் வையகத்து ஆருயிரைக் கூற்றம்
விழுங்கியபின் வீடுகொண் டற்றால் – செழுங்குடிகள்
தாரார் கரந்தை தலைமலைந்து தாங்கொண்டார்
நேரார்கைக் கொண்ட நிரை’ (புறப்.கரந்தை.1)

தம்முடைய மறத்தினாலே (வீரம்) செழுமையுற்றவரான வீரர்கள், கொத்தாகப் பொருந்திய கரந்தைப் பூவைத் தமது தலையிலே சூடிப், பகைவர்கள் வந்து கைப்பற்றிச் சென்ற தம் நாட்டு ஆநிரையை மீட்டுக் கைப்பற்றி வருதலாகிய செயலானது, ஆரவாரமுடைய கடலினாற் சூழப்பெற்றிருக்கின்ற இவ்வுலகினிடத்தே, பெறுதற் கரிதான ஒருவரது உயிரினைக் கூற்றமானது (மரணம்) விழுங்கியதன் பின்னர், அதனை வென்று, அவ்வுயிரினை மீட்டுக் கொண்டது போல்வதொரு செயற்கரிய தன்மைத்து ஆகும் என்கிறது புறப்பொருள் வெண்பாமாலை.

வெட்சிப் போர் எனும் களவுத் தொழில் புரிந்த புல்லியினம், நாளடைவில், தொண்டைமண்டலத்தில் ஆநிரைகாக்கும் குடியாக உயர்கிறது. இதற்கு அக்காலத்தில் ஏற்பட்ட அரசு மாற்றங்களும் காரணமாய் இருந்திருக்கக்கூடும். சங்க காலத்தில் எவ்வரசக் கூட்டங்களுடனும் சேராது தனித்ததொரு வாழ்வியலைக் கொண்டிருந்த இவ்வினம், அதன்பின் நடுவில் நாடு எனப்படும், தொண்டைநாட்டிலும், தகடூர் நாடு என்றழைக்கப்படும் தர்மபுரி மாவட்டத்திலும் கிடைக்கும் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு நடுகற்கள் வாயிலாக அறியப்படுகின்றனர். இவ்விரு நடுகற்களும் ஆநிரை மீட்கும் கரந்தை வீரர்களுக்காக எடுப்பித்த நடுகற்களாகும்.

புல்லி நடுகற்கள்

1.கோரையாறு நடுகல்

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் அமைந்துள்ள ஊர் கோரையாறு. இங்குள்ள வேடியப்பன் கோவிலில் நான்கு நடுகற்கள் உள்ளன. இவற்றில் மூன்று நடுகற்கள் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவையாக இருப்பினும், இதில் ஒன்றில் மட்டுமே புல்லிகள் குறித்த எழுத்துப் பொறிப்பு உள்ளது. தமிழகத்தில் கிடைத்த தொன்மையான நடுகல்லில் இதுவும் ஒன்றாகும்.

தமிழி (தமிழ்பிராமி) எழுத்திலிருந்து, வட்டெழுத்து வரிவடிவம் உருவான இடைப்பட்டக் காலத்தைச் சார்ந்தது என்பது அதன் சிறப்பு. இந்நடுகல்லில் எந்த அரசர்கள் பெயரும் இல்லை. இதன் எழுத்தமைதி, அமைப்பு ஆகியவற்றைக் கொண்டு இதன் காலத்தை பொ.ஆ. 5-6ஆம் நூற்றாண்டினதாகக் கொள்ளலாம் என்று கல்வெட்டு அறிஞர்களும் தொல்லியல் அறிஞர்களும் கருதுகின்றனர்.

தமிழின் தொன்மையான எழுத்து முறையான தமிழி எனும் எழுத்திலிருந்து வட்டெழுத்து கிளைத்தது. அதிலிருந்து இன்று நாம் எழுதும் எழுத்து வடிவம் படிப்படியாய் தோன்றியது என்பது தொல்லியலாளர்களின் கருத்தாகும். இக்கருத்திற்கு வழு சேர்க்கும் வண்ணம், தமிழி எழுத்திற்கும் வட்டெழுத்திற்கும் இடைப்பட்ட காலக் கல்வெட்டுகள், தமிழகத்தில் ஆங்காங்கே கிடைக்கின்றன. இத்தகைய கல்வெட்டுகள் பூலாங்குறிச்சி, ஈரட்டிமலை, பறையன்பட்டு, திருநாதர்குன்று, பிள்ளையார்பட்டி, அம்மன்கோவில்பட்டி போன்ற இடங்களில் கிடைக்கிறது. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்நடுகல்லும் இந்த வகையினைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வெட்டு

1. கோரைக் கோட்டுப் பொருணன ங்க (ங்கநி அரை)
2. சிடும் பொன்முது
3. ட் புல்லி(கள்)
4. முதுட்காட்டி பூச
5. லுட்
6. பட்ட
7. கல்

கல்வெட்டுச் செய்தி

இக்கல்வெட்டில் பயின்று வரும் ‘பொன்’ எனும் பெயர், பெரும் கால்நடை மந்தைக் கூட்ட தலைவன் என்ற பொருளில் வருவதாய் அறிஞர். பூங்குன்றன் கருதுகிறார். பெரும் மந்தைக்கூட்ட புல்லியினத் தலைவன், தம் இனத்திற்காக ஆநிரை மீட்பு பூசலில் இறந்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. கோரையாறு, என்று, இன்று அழைக்கப்படும் இப்பகுதி, அக்காலத்தில் கோரைக்கோடு என்று அழைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி முழுவதும் சுமார் 10 கி.மீ மேல் கோரைப்புற்களின் அடர்த்தி அதிகம் உள்ளது. இந்தக் கோரையாறு, தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் ஓர் கிளை நதி. இந்நதி தென்பெண்ணையில் கலக்கும் வழியெங்கிலும், இப்புல்லின் அடர்த்தி அதிகம். எனவே இப்பகுதியில் மேய்ச்சல் சமூகங்கள் அதிகம் அன்று இருந்ததால், இங்கு ஆநிரைப்பூசல் போர்கள் நிறைய நடந்துள்ளன என்பதை இங்குள்ள நடுகற்கள் வாயிவாக அறிய முடிகிறது.

2. கரடி நடுகல்

திருக்கோவிலூருக்கு அருகே கரடி எனும் ஊர் உள்ளது. இங்கே புல்லி வம்சத்தவரின் மற்றுமொரு நடுகல் கிடைக்கிறது.

கல்வெட்டு

‘புல்லியார் கொற்றாடை நிரை
மீட்டுப்பட்ட கல் கோனாரு’

கல்வெட்டுச் செய்தி

புல்லி இனத்தினைச் சேர்ந்த கொற்றாடை என்பவர், கள்வர்களால் கவரப்பட்ட தம் ஆநிரைக் கூட்டத்தினை மீட்கும் கரந்தைப் போரில் ஈடுபட்டு இறந்ததை இந்நடுகல் கூறுகின்றது.

இரு நடுகற்களின் ஒற்றுமை

இவ்விரு நடுகற்களும் ஒரே மாதிரியான சிற்ப அமைவை கொண்டுள்ளன. இரு நடுகற்களிலும் உள்ள வீரர்களின் ஜடாபாரம், அணிகலன்கள், ஆடை, ஆயுதங்கள் போன்றவை ஒரே அமைப்பைக் கொண்டுள்ளன. தகடூரிலிருந்து, நடுநாடு வரை புல்லிகள் ஆங்காங்கே சீறூர் தலைவர்களாய் எழுச்சி பெற்றதை இந்நடுகற்கள் காட்டுகிறது. சங்ககாலத்தில் புகழ்பெற்றிருந்த புல்லியினம், அதன்பின் 5-6ஆம் நூற்றாண்டளவில் பெற்ற எழுச்சி சிந்திக்கத்தக்கது. புல்லிகளைப் போலவே ஆங்காங்கே தமிழகமெங்கும் சில சீறூர் தலைவர்கள் 5-6ஆம் நூற்றாண்டளவில் சுயாட்சி புரிந்துள்ளனர். களப்பிரர்களின் முழுமையான வீழ்ச்சிக்குப் பின் இந்தச் சீறூர் தலைவர்களின் எழுச்சி நிகழ்ந்துள்து. அதன்பின் பல்லவர்-பாண்டியர் பேரரசுகளின் ஆதிக்கத்தில், அவர்களின் கீழடங்கிய குடிகளாய் பல சீறூர்த் தலைவர்கள் மாற்றமடைகின்றனர்.

சங்ககாலத்தில் பல செய்யுட்களைப் பாட்டுடைத் தலைவனாய் ஆட்கொண்ட புல்லிகள், அதன்பின் 5-6ஆம் நூற்றாண்டில் இரு நடுகற்கள் வாயிலாக அறியப்படுகின்றனர். அதன்பின் இவர்கள் குறித்த தகவல்கள் எங்கும் கிடைக்கவில்லை.

(தொடரும்)

குறுநிலத் தலைவர்கள் #1

குறுநிலத் தலைவர்கள் #3

 

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *