Skip to content
Home » குறுநிலத் தலைவர்கள் #3 – மழவரும்-மழ நாட்டு வேளும்

குறுநிலத் தலைவர்கள் #3 – மழவரும்-மழ நாட்டு வேளும்

‘ ……..சேல்பாயும்
வயன்மதுவாற் சேறுமாறாப்
பொங்கொலிநீர் மழநாட்டுப் பொன்னிவட
கரைமிசைப்போய் புகலிவேந்தர்
நங்கள்பிரான் திருப்பாச்சி லாச்சிர
மம்பணிய நண்ணும் போதில்
மாடுவி ரைப்பொலி சோலையின் வான்மதி வந்தேறச்
சூடுப் ரப்பிய பண்ணைவ ரம்புசு ரும்பேற
ஈடுபெ ருக்கிய போர்களின் மேகமி ளைத்தேற
நீடுவ ளத்தது மேன்மழ நாடெனு நீர்நாடு
பொங்கரில் வண்டு புறம்பலை சோலைகண் மேலோடும்
வெங்கதிர் தங்கவி ளங்கிய மேன்மழ நன்னாடாம்
அங்கது மண்ணில ருங்கிய மாகவ தற்கேயோர்
மங்கல மாயது மங்கல மாகிய வாழ்மூதூர்’

மேற்கண்ட பாடல் சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் ஆனாய நாயனார் எனும் நாயன்மார் புராணத்தில் வருகிறது. இப்பாடலின் வழியே இன்றைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் பகுதிகளான அன்பிலாலந்துறை (அன்பில்), திருமாந்துறை, திருமழப்பாடி, திருவிஜயமங்கை (கோவிந்தப் புத்தூர்), திருமங்கலம், திருப்பாச்சிலாசிரமம் (திருவாசி), திருப்பழுவூர் போன்ற ஊர்கள் சோழநாட்டில் உள்ள மழநாடின் கீழ் இருந்ததை அறிய முடிகிறது.

சங்க காலத்தில் மழவர் எனும் குடியினர் குறித்து பல பாடல்கள் உள்ளன. இப்பாடல்கள் வாயிலாக இக்குடியினர் வாழ்ந்த நாடு, சேர நாட்டின் கீழ்ப்பகுதிக்கும் சோழநாட்டின் மேற்பகுதிக்கும் இடைப்பட்ட நிலமாய் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

‘மழவர் மெய்ம்மறை’ என்று சேரனைப் புகழும் பதிற்றுப் பத்து அடிகளால், மழநாடு சேர நாட்டின் உட்பிரிவுகளிலும் ஒன்றாயிருந்ததென்பது புலனாகின்றது. இம்மழவர் கூட்டத்தின் ஒரு பிரிவினராகக் கடையேழு வள்ளல்கள் எனப் போற்றப்படும் வல்வில் ஓரியையும் அதியமானையும் சங்ககாலப் புலவர்கள் குறிப்பிடுகின்றனர். இவர்கள் இருவரையும் ‘மழவர் பெருமகன்’ என அழைத்துள்ளனர். இதில் அதியமான் தலைநகராகிய தகடூரும் அவனது குதிரை மலையும் அக்குடியிற்றோன்றிய குறுநிலமன்னனாகிய வல்வில்லோரியினது கொல்லிக் கூற்றமும் சேரநாட்டின் கீழ்ப்பகுதியிலுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘பூலிரியும் பொழிற்சோலைக் காவிரியைக் கடந்திட்
டழகமைந்த வார்சிலையின் மழகொங்க மடிப்படுத்தும்’

என்ற வேள்விக்குடிச் செப்பேட்டில் உள்ள வரிகள் மூலமாக கொங்குநாட்டின் ஒரு பகுதியும் மழவர்க்குரித்தாயிருந்ததது என்பதும் அறிய முடிகின்றது.

இம்மழவர் இனம் பல இடங்களில் சங்ககாலம் தொட்டே சிறந்து விளங்கியமை தெரியவருகின்றது. இவர்கள் படைத்தலைவர்களாய் வழிகாட்டி, வேந்தர்களைக் காத்துப் போரிட்டுள்ளனர். இம்மழவர் குடியிலிருந்து தோன்றியவரே புகழ்பெற்ற சோழப்பேரரசி செம்பியன் மாதேவியார். இம்மழவர்கள் குடியில் பல தலைவர்கள் சீறூர் தலைவர்கள், மன்னர்கள் தோன்றியுள்ளனர். அவர்களில் ஒருவரான பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றன் மாறன் எனும் மழநாட்டு வேள் குறித்துக் காண்போம்.

செங்கோல் பற்றிய பரகேசரி

புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசல் சிவன் கோவிலில் உள்ள அர்த்தமண்டப அதிட்டானத்தில் ஒரு கல்வெட்டு உள்ளது. இதில் அரசனின் பெயர் ‘செங்கோல் பற்றிய பரகேசரி ஆண்டு ஐஞ்சில்’ என்று வருகிறது. இந்த பரகேசரி யார் என்பதும் அவர் யாரிடமிருந்து செங்கோலைக் கைப்பற்றினார் என்பதும் இங்கு விவாதத்திற்குரியது. இக்கல்வெட்டு ஆவணம் இதழ் 16இல், பக்கம் 18இல் பதிவாகியுள்ளது. இக்கல்வெட்டு வெட்டிய மன்னரின் பெயர் அங்கே விஜயாலய சோழன் என்று குறிப்பு கொடுத்துள்ளனர். ஆனால் இக்கல்வெட்டினைப் பார்க்கையில் அதன் எழுத்தமைதி 9ஆம் நூற்றாண்டு எழுத்தாக இல்லை. இக்கல்வெட்டு 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவே எண்ணத் தோன்றுகிறது.

முதலாம் ஆதித்த சோழனுக்கு கன்னரத்தேவன், பராந்தகன் என இரு புதல்வர்கள் இருந்தனர். இவர்களில் கன்னரத்தேவன் ராஷ்ட்ரகூட அரசி இளங்கோப்பிச்சிக்குப் பிறந்தவர். கன்னரத்தேவன், பராந்தகர் என இருவரில் எவர் மூத்தவர் என தெரியவில்லை. எனினும் ஆதித்தனுக்குப் பின்னர், பராந்தகரே சோழ அரசனாகிறார். எனவே பராந்தகர் சகோதர சண்டையால் அரியணையைக் கைப்பற்றியதால் ‘செங்கோல் பற்றிய பரகேசரி’ எனக் கூறிக்கொள்கிறாரா, அல்லது அவரது மூன்றாம் ஆட்சியாண்டில் மதுரையைக் கைப்பற்றியதால் அவர் செங்கோல் பற்றியதாகக் கூறிக்கொள்கிறாரா என்பது விவாதத்திற்குரியது. எனினும் அக்கல்வெட்டு நிச்சயமாக விஜயாலய சோழனுடையது இல்லை என உறுதியாகக் கூறலாம். இதற்கு முக்கியக் காரணியாக திருச்சோற்றுத்துறை கல்வெட்டினையே உதாரணமாகக் கூறலாம். ஏனெனில் இக்கல்வெட்டு எழுத்தமைதி பராந்தகசோழனின் பிற கல்வெட்டு எழுத்துடன் ஒத்துவருவதை உதாரணமாகக் கொள்ளலாம். வரலாற்றில் இருகல்வெட்டில் மட்டும் இடம் பெற்றிருந்தாலும், ஒரு விவாதத்தினை உருவாக்கிச் சென்றுள்ளார் இந்த மழநாட்டு வேள்.

திருவேங்கிவாசலில் உள்ள கல்வெட்டு மழநாட்டு வேள் நந்தாவிளக்கு ஏற்றியது பற்றின குறிப்பினைத் தருகிறது.

திருவேங்கிவாசல் கல்வெட்டு
திருவேங்கிவாசல் கல்வெட்டு

இக்கல்வெட்டு தவிர திருச்சோற்றுத்துறை சிவன் கோவிலில் பரகேசரியின் 2ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்றுள்ளது. இதில் மழநாட்டு வேள் 20 பொன் தானமளித்து அதில் வரும் வட்டி கொண்டு விளக்கெரிக்க ஏற்பாடு செய்துள்ளார். மேலும், திங்கள் சங்கிராந்தி தோறும் இறைவனுக்கு நெய் அபிஷேகம் செய்ய 20 பசுக்களையும் தானம் அளித்துள்ளார். இக்கல்வெட்டில் இம்மழநாட்டு வேளின் பெயர், தென்னவன் மழநாட்டு வேளாயின கொற்றன் மாறன் என வழங்கப்பெறுகிறது.

இரு கல்வெட்டிலும் மழநாட்டு வேள் வெளிப்படுகிறார். இம்மழநாட்டு வேளின் ஊராக திருச்சிராப்பள்ளியைச் சுற்றியுள்ள ஊரினைக் கொள்வது பொருத்தமாயிருக்கும்.

திருச்சிராப்பள்ளிக்கு அருகேயுள்ள கொல்லிமலையில் ஆளும் கொல்லிமழவன் ஒற்றியூரன் பிரதிகண்ட வர்மன் எனும் குறுந்தலைவர் குறித்த ஒரு தகவல் சுந்தரசோழரின் திருச்செங்கோட்டுச் செப்பேட்டில் கிடைத்துள்ளது. இதில் குறிப்பிடப்படும் தலைவனான ஒற்றியூரன் இம்மழநாட்டு வேளின் மரபினரின் தொடர்ச்சியாக கொல்லி மலையில் ஆளும் சீறூர் தலைவராகலாம்.

இச்செப்பேடு சுந்தரசோழரின் 5ஆம் ஆட்சியாண்டில் அதாவது கி.பி.962இல் வெளியிடப்பட்டுள்ளது. கொல்லிமழவனான ஒற்றியூரன் பிரதிகண்டவர்மன் தூசியூரைச் சேர்ந்த நிலத்தினை அவ்வூரிலுள்ள ஈசனுக்குத் தேவதானமாக அளித்ததை இச்செப்பேட்டுத் தகவல் கூறுகிறது.

மழவர் நடுகற்கள்

1.திருப்பத்தூர் மழவர் பையன்

இந்நடுகல், கிடந்த கோலத்தில் உள்ளது. 6 அடி உயரமும், 3 அடி அகலமும் உள்ள இந்நடுகல்லில் நடுகல் வீரன் வலது கையில் குறுவாளை ஏந்தியுள்ளான். இடது கையில் வில் உள்ளது. இடையில் கச்சு அணிந்து உறைவாளுடன் வீரன் காட்சித் தருகிறான். கழுத்தில் ஆபரணங்கள் உள்ளன. இவ்வீரனின் மார்பில் அம்பு ஒன்று பாய்ந்துள்ளது. மேலும் வலது தொடையில் பாய்ந்த அம்பு இடது தொடையின் வழியாக வெளிப்பட்டுள்ள காட்சி நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளது. இவன் இனக்குழுத் தலைவனுக்கான அடையாளத்தோடு காணப்படுகிறான். நடுகல் வீரனின் இடது கால் ஓரத்தில் மனித உருவம் ஒன்றும் உள்ளது.

மழவர் பையன் நடுகல்
மழவர் பையன் நடுகல்

இந்நடுகல் கல்வெட்டு கி.பி 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நுளம்ப மன்னன் ஸ்ரீ மாறன் காலத்தைச் சேர்ந்தது. திருப்பத்தூர் மீது நிகழ்ந்த போரில், திருப்பத்தூர் அழிந்தபோது தாயலூர் கிராமத்தைச் சேர்ந்த ‘மழவர் பையன்’ என்ற வீரன் போரிட்டு இறந்துள்ள செய்தியை இந்நடுகல் பதிவு செய்கிறது. திருப்பத்தூர் என்னும் பெயர் 1200 ஆண்டுகளுக்கு முன்பே வழக்கில் இருந்ததை இந்நடுகல் சான்றளிக்கிறது.

கல்வெட்டு:

ஸ்வஸ்தி ஸ்ரீ நுளம்ப சீமா
றன் எயினாடான் தாயலூ
ருடைய மழப்பையன் திருப்பத்
தூர் அழிந்
த நாட்பட்டான்

2.கோசரும் மழவரும்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல் சிறுநாகலூர் எனும் ஊரில் பழம் நடுகல் ஒன்று காணப்படுகிறது. எழுத்தமைதி கொண்டு இதனை 7ஆம் நூற்றாண்டு எனப் பதிவு செய்துள்ளனர். இந்நடுகல்லின் எழுத்தமைதி இன்னும் சற்றுப் பழமையாக இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது. விழுப்புரம் மாவட்ட கோழிநடுகற்கள் எழுத்தமைதியை இவ்வெழுத்துகள் ஒத்துள்ளது. முழுமையான வட்டெழுத்து எழுத்து வளர்ச்சியடையும் காலத்திற்கு முந்தைய (தமிழி-வட்டெழுத்து) காலமாய் இருக்கலாம் என, அதாவது 5ஆம் நூற்றாண்டாய் இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. இந்நடுகல் மிகச் சிறப்பான ஒரு தகவலைத் தருகிறது. சங்ககாலத்தில் புகழ்பெற்ற தொன்மக்குடியான கோசரையும், மழவரையும் இந்நடுகல் அடையாளப்படுத்துகிறது. பல்லவர்களின் ஆதிக்கம் இப்பகுதியில் நிலைபெரும் முன் இந்நடுகல் எழுப்பப்பட்டுள்ளது, இதன் பழமைக்கு ஒரு சான்று.

சங்க இலக்கியம் வாயிலாக கோசரில் முதுகோசர், இளங்கோசர் இன இரு பிரிவினர் இருந்தது தெரிய வருகிறது. முதுகோசரின் வயலுக்குள் அன்னிமிஞிலி எனும் ஒருவருடைய தந்தையின் ஆநிரை மேய்ந்து நாசம் செய்துவிட, அதனால் கோபம் கொண்ட கோசர், அன்னிமிஞிலியின் தந்தையின் கண்களைப் பிடுங்கிவிடுகிறார். அதனால் கோபமுற்ற அன்னிமிஞிலி அளுந்தூர் வேள் துணைகொண்டு முதுகோசர் இனத்தையே கருவறுத்தார்.

கோசர் மழவர் நடுகல்
கோசர் மழவர் நடுகல்

செம்மறியாட்டின் இருகொம்புபோல பலநாளுடைய சுருள்முடியுடன், செம்மை நிறம் மாறாத கண்களும் கொண்ட, அஞ்சத்தக்க தோற்றமுடைய குடியினராகவும், ஆநிரை கவர்ந்து, வழிப்பறி செய்யும் குடியினராகவும் தொடக்ககால மழவரை சங்கஇலக்கியங்கள் பதிவு செய்கிறது. இந்த இரு பெரும் சங்ககால குடியினர்.

பெரும்படையுடன் ஊரன் இருக்கை (இன்றைய கல் சிறுநாகலூர்) என்ற ஊரில் புகுந்து போரிட, திருக்கோவிலூரைச் சேர்ந்த குமரன் என்ற வீரன் எதிர்சமர் புரிந்து இறந்தார். அவருக்கு எழுப்பிய நடுகல்லே இது.

அன்னிமிஞிலியின் காலத்திற்குப் பிறகு வரலாற்றின் பக்கத்திலிருந்து மறைந்த கோசர் குடியினர், மீண்டும் இந்நடுகல் வாயிலாகவே வெளிப்படுகின்றனர். அதற்குமுன்னும் பின்னும் இவர்கள் குறித்த கல்வெட்டுகள் காணக்கிடைக்கவில்லை. சங்ககாலக் குடியினர் இருவரை அடையாளம் காட்டும் நடுகல்லாய் இது திகழ்கிறது.

இந்நடுகல்லில் இடம்பெறும் இக்கோசர் குறித்து விரிவாக அடுத்தடுத்த பகுதிகளில் காண்போம்.

(தொடரும்)

குறுநிலத் தலைவர்கள் #2

 

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *