Skip to content
Home » மகாராஜாவின் பயணங்கள் #9 – கெய்ஷா பாடலும் மைக்கோ நடனமும்

மகாராஜாவின் பயணங்கள் #9 – கெய்ஷா பாடலும் மைக்கோ நடனமும்

ஜப்பான் தலைநகரில் சில நாட்கள் இருக்கவேண்டும்; ஜப்பானியரின் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும் விஷயங்களில் பங்கு பெற வேண்டும் என்ற விருப்பம் உந்தியதால் டோக்கியோ செல்ல விரும்பினேன். அறிமுகமாகியிருந்த சில ஆங்கியேர்களுடன் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு யோகோஹாமாவைவிட்டுப் புறப்பட்டேன்.

டோக்கியோ மாநகரம் இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைநகராக இருக்கிறது. அதன் மக்கட்தொகை சுமார் ஒன்றரை மில்லியன். மகத்தான தூரம் கொண்ட மாநகரம் என்று இதைச் சொல்லலாம். ஒரு முனையிலிருந்து மற்றொரு முனை பத்து மைல்கள் இருக்கும். பயணம் மிகுதியான நேரத்தைக் குடித்துவிடும்.

ஒரு நவீன மாநகரத்துக்குரிய அம்சங்களான யுத்த அலுவலகம், நாடாளுமன்ற வளாகம், நீதி மன்றங்கள் போன்றவை மிக அற்புதமான கட்டடங்களில் இயங்கிக்கொண்டிருந்தன. அவை சென்ட்ரல் பூங்காவையும் பொழுதுபோக்கு மைதானங்களைச் சுற்றியும் வட்டமாக அமைந்திருந்தன. கல்கத்தா அல்லது பம்பாய் மாநகரங்களைக் காட்டிலும் குறிப்பிட்டுச் சொல்லும்படி சுத்தமாகக் காணப்பட்டன. வியன்னாவின் ’ரிங் ஸ்ட்ராஸ்’ தோற்றத்தை இவை நினைவுபடுத்தின. சந்தேகமின்றி அந்த நகரத்திடமிருந்து பொதுவான நிர்வாக முறையை இவர்கள் காப்பியடித்திருக்க வேண்டும்.

டோக்கியோவை அடைந்தவுடன், உடனடியாக பிரிட்டிஷ் தூதரகத்துக்குச் சென்றோம். அங்கு இரண்டாவது செயலர், திரு.ஹோலர் எங்களை வரவேற்றார். மல்யுத்தம் ஒன்றைப் பார்க்க எங்களை அழைத்துச் சென்றார். வீடுபோன்ற ஒரு கட்டடத்தில் அந்நிகழ்ச்சி நடந்தது. தரை முழுவதும் பாய்கள் விரிக்கப்பட்டிருந்தன. உள்ளே நுழையும்போது ஷூக்களைக் கழற்றிவிட்டு அவர்கள் அளிக்கும் வீட்டுக்குள் போட்டுக்கொள்ளும் ‘கான்வாஸ் ஸ்லிப்பர்களை’ அணிய வேண்டும். ஜப்பானில் நிலவும் பொதுவான பழக்கம் இது. முன்னதாக, அந்த மல்யுத்த ஆசான் மல்யுத்தக் கலையின் அடிப்படைகளை ஆங்கிலத்தில் விளக்கினார். சில நடைமுறை விளக்கங்களையும் செய்து காட்டினார். அதன்பின் போட்டியாளர்கள் காட்சிக்குள் வந்தனர். போட்டிகள் தொடங்கின.

மல்யுத்தத்துக்கு, உடல் வலிமையைக் காட்டிலும் அதிகமாக திறன்தான் தேவைபோல் தோன்றியது. வெறுமனே கையை திறனுடன் திருப்பியோ எதிரியின் பாதத்தைச் சற்றே திருப்பியோ ஒருவர் மற்றொரு மனிதனைத் தூக்கி எறிவது முற்றிலும் வியப்புக்குரிய செயல். அத்துடன், அவ்வாறு தூக்கி எறியப்படும் அவர்கள், தீவிர அடியேதும் படாமல் எழுந்து செல்வது அசாதாரணமானது. அவர்கள் அனைவரும், குள்ளமான, முழுவதும் தசையாலான, உறுதியான மனிதர்கள். ஒவ்வொரு சுற்றும் சுமார் ஐந்திலிருந்து ஆறு நிமிடங்கள் நீடித்தன.

மல்யுத்தம் ஒரு நுண்கலையாகவே ஜப்பானில் பேணப்பட்டு வருகிறது. போலிஸ்காரர்களுக்கும் இந்தக் கலையின் அனைத்துத் தந்திரங்களும் கற்றுத் தரப்படுகின்றன. ஏனெனில், கட்டுப்பாடின்றித் திரியும் ஒழுக்கமற்ற ஆனால், உடல் வலிமை கொண்ட சில வெளிநாட்டுக் கடலோட்டிகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இக்கலையில் அவர்கள் பெற்றிருக்கும் திறமையான பயிற்சியால் அவர்களை எளிதாகத் தரையில் வீழ்த்த முடிகிறதாம்.

அங்கு சுமார் இரண்டு மணி நேரம் இருந்தோம். பன்னிரண்டு போட்டிகளைப் பார்க்க முடிந்தது. அங்கிருந்து நேராக இம்பீரியல் ஹோட்டலுக்குச் சென்றோம். டோக்கியோவில் எங்களது தங்கல் அங்கேதான். பெரிய, மூன்று மாடிக் கட்டடம் அது. மிக அழகான முகப்புத் தோற்றம். தரைத் தளத்தில், வருகை தருவோர்க்கான விசாலமான வரவேற்பறைகள்; இருநூறு நபர்கள் அமர்ந்து சாப்பிடும் வசதி கொண்ட ‘டைனிங் ஹால்’. இவை தவிர்த்து, தனி நபர்கள் தனித்துப் பொழுது போக்குவதற்காக அதிக எண்ணிக்கையில் அறைகளும் அங்கு இருந்தன.

இம்பீரியல் ஹோட்டல்

இம்பீரியல் ஹோட்டல்

பதினைந்தாம் தேதி காலை அரச குடும்பத்தின் இளவரசர்கள் சிலரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். ராஜ பரம்பரைக்கு அவர்கள் நெருங்கிய உறவினர்கள். துரதிஷ்டவசமாக, அவர்கள் அனைவரும் அன்று வெளியில் சென்றுவிட்டனர். எனது விசிட்டிங் கார்டுகளை மட்டுமே கொடுத்துவிட்டு வரமுடிந்தது. இந்த இளவரசர்கள் பெரும்பாலானோர்க்கு வசதியான வில்லாக்கள் உல்லாச நோக்கத்துக்காக இருக்கின்றன; அந்த ஓய்வில்லங்கள் பிரெஞ்சு வடிவமைப்பில் கட்டப்பட்டிருந்தன.
அறைக்கலன்களுக்கும் அலங்காரத்துக்கும் அதிகம் செலவழித்திருப்பார்கள் போலும். விரிவாகவும் நுட்பமாகவும் அவை அமைந்திருந்தன. ஆனால், இவை உல்லாச நோக்கத்துக்காக மட்டுமே. ஆனால், இந்த வில்லாக்களுக்குச் சொந்தக்காரர்கள், இணையாக, ஜப்பானிய வழக்கப்படி எளிமையான வாழ்க்கை வாழ்வதை விரும்பினர். பேரரசர் தொடங்கி கீழிருப்போர் வரையிலும் எளிமையான, சாதாரண ஜப்பானியப் பாணி வீடே அவர்களின் முன்னுரிமை; சொல்லப்போனால், அந்த இல்லங்களில் ‘ஃபர்னிச்சர்களே’ இருக்காது எனலாம். எப்போதும் இந்த வில்லாக்களுக்கு அருகில் இருப்பது போலவே அவை கட்டப்படுகின்றன.

ரஷ்யத் தூதரையும், இத்தாலி மற்றும் சீனத் தேசத்தின் தூதர்களையும் சந்திக்கச் சென்றிருந்தேன்; அனைவரையும் பார்க்கவும் உரையாடவும் முடிந்தது.

நான் உள்ளே நுழைந்ததும் மேன்மை தாங்கிய ரஷ்யத் தூதர், எனது முந்தையவர் தனக்கு நல்ல நண்பர் என்றும் அவருடன் பில்லியர்ட்ஸ் விளையாடி இருப்பதாகவும் கூறினார். அவர் கூறியதை என்னால் உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை. விளக்கிச் சொல்ல முற்பட்டதும்தான், புதிதாக வந்திருக்கும் சையாமின் (தாய்லாந்து) தூதர் என்று அவர் என்னைத் தவறாக எண்ணிக் கொண்டுவிட்டார் என்பது தெரிந்தது. உரையாடலின் போது, அவரது நாட்டுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான தவறான புரிதலும் வேறுபாடுகளும் இணக்கமாகப் பேசித் தீர்க்கப்படும் என்று நம்புவதாகக் கூறினார். ஜப்பானியர்கள் வலிமைமிக்கர்வர்கள் என்ற கருத்து நிலவுவதுபற்றிய அவரின் அபிப்பிராயத்தைச் சொல்லும்படி கேட்டேன். பதிலாக அவர், ஜப்பானியர்கள் தாங்கள் எதிர்க்க முடியாதவர்கள் என்று எண்ணிக் கொள்கிறார்கள் என்றார். செல்லும் இடங்களுக்கெல்லாம் ஜப்பானியக் காவல்துறை அவரைப் பின்தொடர்ந்து ஒற்றுவேலைப் பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அவரது அரசாங்கத்துக்கு எழுதும் அரசமுறை கடிதங்கள் அனைத்தையும் பாதுகாப்பை உத்தேசித்து ஒரு சிறப்புத் தூதர் மூலம் நாகசாகி துறைமுகத்திலிருந்து, ரஷ்ய ஸ்டீமரின் வழியாக அனுப்புவதாகவும் கூறினார்.

சீனத் தூதுவருடன் எனது சந்திப்பு முற்றிலும் ஆர்வம் நிரம்பியதாக இருந்தது. மஞ்சூரியாவின் தலைநகர் முக்டெனை ரஷ்யர்கள் ஆக்கிரமித்த சில நாட்களில், இந்தச் சந்திப்பு நடந்தது. இந்த விஷயத்தில் சீனா என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கமுடியும் என்று அனுதாப உணர்வுடன் அவரிடம் நான் கேட்டேன். பல் தெரிய ஒரு அகலமான சிரிப்பு அவர் முகத்தில். ஒரு கோப்பை தேநீருடன் வில்ஸ் சிகரெட்டுகளும் எனக்கு அளித்தார். மேன்மை தாங்கிய தூதுவரின் பதில் இதுதான்.

யூனோ’ பூங்கா

யூனோ பூங்கா

அந்த நாளின் பிற்பகுதியில், டோக்கியோவின் ‘ஹைட் பூங்கா’ என்று அழைக்கப்படும் ‘யூனோ’ பூங்காவை பார்க்கச் சென்றேன். நன்கு வளர்ந்த அழகிய மரங்களும், சிறப்பாக அமைக்கப்பட்டுப் பராமரிக்கப்படும் மரங்கள் நிறைந்த அகன்ற நடைபாதைகளும் அதற்கு மேலும் அழகூட்டின; ஒரு அருங்காட்சியகமும், சில மடாலயங்களும், சிற்றுண்டிச் சாலைகளும், நுண்கலைப் படைப்புகள் அடங்கிய காட்சியரங்கு ஒன்றும் பூங்காவிலிருந்தன. காட்சியரங்குக்குள் சென்று அங்கு ஜப்பானிய ஓவியர்களின் ஏராளமான கலைப்படைப்புகளைப் பார்த்தேன். அவற்றில் பெரும்பாலானவை நீர்வண்ணங்கள் கொண்டு வரையப்பட்டிருந்தன. பூங்காவின் கட்டடம் ஒன்றில் மேலேறிப் பார்த்தபோது மாநகரத்தின் அழகிய காட்சி தெரிந்தது. குனிந்து பார்த்தால், அம்மாநகரம் ஏதோ நம் காலடியின் கீழ் இருப்பது போல் தோன்றியது.

இரவு உணவுக்குப்பின், இதுபோன்ற கேளிக்கைகள் வழக்கமாக நடைபெறும் தேநீர் இல்லமொன்றில் ’கெய்ஷா’ நடனம் பார்த்தேன். கட்டடத்தில் நுழைந்ததும் பெண் பணியாளர்கள் வழக்கம்போல், முழந்தாளிட்டு, நெற்றியால் தலையைத் தொட்டு வணங்கி வரவேற்றனர். பூட்ஸ்களை கழற்றிவிட்டு, வீட்டுக்குள் போடும் ஸ்லிப்பர்களை அணிந்து கொண்டோம். படிக்கட்டுகளில் ஏறி மாடியில் இது போன்ற உல்லாசங்களுக்காக அமைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்தோம்.

ஜப்பானின் மற்ற வீடுகளைப்போல்தான் இந்த இடமும் இருந்தது. மரத்தால் கட்டப்பட்டிருந்த வீட்டின் அந்தத் தளம், காகிதத் தடுப்புகளால் பிரிக்கப்பட்டிருந்தது. இந்தத் திரைகள் முன்னும் பின்னும் நகர்த்தமுடியும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன. அப்படி நகர்த்தி, தேவையான எண்ணிக்கையில் பிரிவுகளை/அறைகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். தரை, சுத்தமான பழுப்பு வண்ண பாய் கொண்டு மூடப்பட்டிருந்தது. மொத்த இடத்திலும் தென்பட்ட முழுமையான சுத்தம், எதனாலும் விஞ்ச முடியாதது.

அந்த அறையின் ஒரு பகுதியில் மெத்தைகள் சில விருந்தினர்கள் அமர்வதற்காகப் போடப்பட்டிருந்தன. மெத்தைகளுக்கு இடையில் உலோகம் அல்லது பீங்கானால் ஆன அக்கினிக்கப்பரை வைக்கப்பட்டிருந்தது. அவை. வருகை தருவோர் தங்கள் கைகளைக் குளிரிலிருந்து கதகதப்பாக்கிக் கொள்வதற்கு.

 பக்க வாத்தியங்கள் வாசிக்கும் கெய்ஷாக்கள்

பக்க வாத்தியங்கள் வாசிக்கும் கெய்ஷாக்கள்

நாங்கள் எங்களது இருக்கைகளில் அமர்ந்ததும், சில பெண் இசைக்கலைஞர்கள் தோன்றினர். வழக்கமான பாணியில் வணக்கம் தெரிவித்தபின், தரையில் அமர்ந்தனர். சமுதாயத்தில் அனைவரும் நினைப்பதுபோல் கெய்ஷாக்கள் என்று சொல்லப்படுவோர் நடனம் ஆடுவதில்லை. அவர்கள் பக்க வாத்தியங்கள் வாசிக்கின்றனர், பாடுகின்றனர். ‘மைக்கோ’ என்று சொல்லப்படுவோர்தான் நடனமாடுகின்றனர். மைகோக்கள், ஒன்பதிலிருந்து பதினான்கு வயதுக்குள் இருக்கும் சிறுமிகள். கிட்டத்தட்ட அரை டஜன் மைகோக்கள் அந்த அறைக்குள் நுழைந்தனர்; எங்களுக்கு முன்னால், எங்களைப் பார்த்தபடி வரிசையாக நின்றனர். சற்று நேரத்தில், அவர்களது விநோதமான, ஆனால், மிக அழகான நடனத்தைத் துவங்கினர். கெய்ஷாக்கள் இசைக்கும் பாடலுக்கு ஏற்றவாறு, பலவித அழகிய உடலசைவுகளுடன், மெல்லிய அழகிய கைகளின் அலைகளின் அசைவுகளுடன் அந்த நடனம் நிறைந்திருந்தது.

பல வண்ணங்களால் ஆன அழகிய ஆடைகளில் அந்த மைக்கோக்கள் பட்டாம்பூச்சிகள் போல் தோன்றினர். அதே நேரத்தில் கெய்ஷாக்கள் கறுப்பு நிறத்தில் உடைகள் அணிந்திருந்தனர்; ஒருவித சோகமான தோற்றத்துடன் இருந்தனர். சிறிது நேரம் நடனம், கொஞ்சம் ஓய்வு, அதன்பின் மீண்டும் நடனம் என்பதாக அந்த நிகழ்ச்சி இருந்தது. அந்த நடனங்கள் யுத்தம், காதல், பருவகாலங்கள் என்று பலவற்றைப் பேசின. நடனக் கலைஞர்களின் அபிநயங்கள் அவற்றை சிரமமின்றி விளங்கிக்கொள்ளும் அளவுக்கு நன்றாக அமைந்தன.

மைகோக்கள்

மைகோக்கள்

கவர்ந்திழுக்கும் அழகுகொண்ட இந்தச் சின்னஞ்சிறிய நடனக் கலைஞர்கள் குழந்தைகள் போன்ற கபடமற்றத் தன்மை கொண்டவர்களாகவே இருந்தனர்; மலர்ந்து கொண்டிருந்த பெண்களாக அவர்கள் தென்படவில்லை; அழகிய பொம்மைகளைப் போலவே இருந்தனர். கெய்ஷாக்கள், பக்க வாத்தியக்காரர்களாக வாத்தியங்களை இசைப்பதற்கும், பாடுவதற்கும் தகுதியானவர்கள் என்று கருதப்படும் முன்பு, அவர்கள் அனைவரும் மைக்கோக்களாக இருந்தவர்கள் என்று நான் இங்கு குறிப்பிடவேண்டும். அவர்களில் பலரது உதடுகளும் சிதைந்து போயிருப்பதைக் கவனித்தேன். தினந்தோறும் அவர்கள் தாராளமாக ‘ரூஜ்’ பயன்படுத்துவதாலும் பற்களை கறுப்பாக்கிக்கொள்வதாலும் அப்படி நடந்திருக்கலாம். அவர்களது கருத்தோட்டத்தில் இவ்விதப் பழக்கங்கள், வருகை தருவோரிடம் அவர்கள் அதீதமான உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு உதவுகின்றன.

நிகழ்த்துக் கலைஞர்கள் அவ்வப்போது தேநீர், சகி (ஜப்பானிய மது) போன்ற பானங்களையும் சிற்றுண்டிகளையும் இடைவேளைகளில் பரிமாறினர். இந்தப் புதுமையான ஆர்வமூட்டும் உல்லாசம், நள்ளிரவு தாண்டியும் என்னை கட்டிப்போட்டது. அந்த இடத்தை விட்டுப் புறப்படுகையில் அவர்கள் அனைவரும் ஒருமித்த, இன்பமான குரலில் ‘சைனாரா’ (குட்பை) என்றனர்.

0

பதினாறாம் தேதி. ஜெர்மானிய தூதுவரின் முதல் செயலர் ஹெர் வான் எர்கெர்ட் மற்றும் அவரது மனைவியுடன் மதிய உணவு. அதன்பின் ஒகுமா கோமகன் கொடுத்த தோட்ட விருந்து ஒன்றிலும் கலந்துகொண்டேன். ‘மூத்த ராஜதந்திரிகளில்’ ஒருவரென அவர் கருதப்படுகிறார். ஜப்பானிய அரச குடும்பத்தினர், இதுபோன்ற விருந்துகளை அடிக்கடி கொடுக்கிறார்கள். அவர்களுக்கு செவ்வந்திப் பூக்கள் மீதிருக்கும் மிக அதிகமான பிரியத்தை வெளிப்படுத்தவே இவை நடத்தப்படுகின்றன. சில நாட்களுக்கு முன் பேரரசியின் தோட்ட விருந்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த மலர்களைக் காட்டிலும் இந்த ஒகுமா கோமகன் தோட்டத்தில் நான் பார்த்தவை எந்தவிதத்திலும் தாழ்ந்தவையாகத் தோன்றவில்லை. இந்தப் பூங்காவும் வழக்கமான ஜப்பானியத் தோற்றத்துடன், சிறிய ஏரிகள், அதன் நடுவே தீவுகள், பாலங்கள், குள்ளமான மரங்கள் என்று பொதுவான அம்சங்களுடன் காணப்பட்டது. விருந்தில் அரச வம்சத்தின் மூன்று இளவரசிகளும் ஒரு இளவரசனும், டோக்கியோ மாநகர சமூகத்தின் பெரும் திரளும் கலந்து கொண்டிருந்தனர்.

அரச குடும்பத்தவர் உடன் வர, என்னை அழைத்துக் கொண்டு விருந்தளித்த எனது மதிப்புக்குரியவர் அந்தப் பூங்காவைச் சுற்றி வலம் வந்தார். அங்கிருந்த சிறு குன்றின் மேலிருந்து, ஜப்பானியத் தேசத்தின் அழகிய காட்சியைப் பார்க்க முடிந்தது. நான்கு மணிக்கு விருந்தினர்கள் அனைவரும் இனிய விருந்துண்ண அமர்ந்தோம். அரச குடும்பத்தினருக்காக இரு மேஜைகள் தனியே போடப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்றில் நான் அமர்ந்தேன். எனது இடதுபுறம் அழகிய இளவரசியான நஷிமோடோ அமர்ந்தார்.

என்னிடம் பிரெஞ்சு மொழியில் அவர் உரையாடினார். நிச்சயமாகச் சொல்வேன், அவருடைய விநோதமான உச்சரிப்பால் அந்த மொழியின் அழகு எதையும் இழந்துவிடவில்லை. இளவரசிக்குச் சமீபத்தில்தான் திருமணமாகி இருக்கிறது. அவரது கணவர், பிரான்சின் ராணுவப் பள்ளி ஒன்றில் படித்துக் கொண்டு இருந்தார். சூதற்ற வெட்கச் சிவப்பு முகத்தில் பரவ, அவர்களது நடத்தைகளும், இந்த இளவரசிகளின் உரையாடல் முறையும் முற்றிலும் மகிழ்ச்சியளித்தன. ஐரோப்பியப் பெண்மணிகளிடமிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தன. ஜப்பானில் பார்த்தவை என்ன என்று என்னைக் கேள்விகளால் துளைத்துவிட்டனர். ஒரு கெய்ஷா நடனத்துக்குச் சென்றிருந்தேன் என்று கூறியதும் உற்சாகமும் மகிழ்ச்சியுமாக அவர்கள் முகம் மலர்ந்தது.  ஐந்து மணிக்கு விருந்து முடிந்தது; விருந்தளித்தவரிடம் விடைபெற்றுக்கொண்டு அனைவரும் அவரவர் வீட்டுக்குத் திரும்பினர்.

இரவு உணவுக்குப் பின், பிரிட்டிஷ் தூதரகத்தில் ‘பால்’ நடனம் ஒன்று ஏற்பாடாகியிருந்தது. எனவே பூங்கா விருந்திலிருந்து கால தாமதம் செய்யாமல் அங்கு சென்றுவிட்டேன். அது ஒரு அதிகாரப்பூர்வ நிகழ்வு. ஆகவே, அனைவரும் முழுமையான ஆடை அலங்காரங்களில் வந்திருந்தனர். நான் எனது மிகச் சிறந்த பஞ்சாபி உடையை அணிந்து சென்றிருந்தேன். அதிகமானோரின் கவனத்தை அது ஈர்த்தது. ஏனெனில் அங்கு வந்திருந்த எவரும் இதைப்போன்ற உடையைப் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை.

இளவரசிகளும் இளவரசர்களும், விருந்து அளிப்பவரும் அவரது மனைவியும் உடன் வர அமைதியான ஊர்வலம்போல் பால் ரூமுக்குள் நுழைந்தேன். ஐரோப்பிய ராஜ தந்திரிகள், ஜப்பானிய அதிகாரிகள், மற்ற விருந்தினர்கள் என்று நாங்கள் நுழைகையும்போது அந்த அறையில் கூடியிருந்தனர். அழகான உடைகள், பதக்கங்கள் அலங்கரிக்கும் சீருடைகள் என்று இந்தியாவில் நாம் அரிதாகவேப் பார்க்க முடிகிற அற்புதக் காட்சி.

இளவரசி நஷிமோடோ

இளவரசி நஷிமோடோ

முதலாதவாக, ஒரு ‘க்வாட்ரில்’, அதாவது நான்கு ஜோடிகள் மாறி மாறி ஆடும் நடனம். எனக்கு ஜோடி இளவரசி நஷிமோடோ; அவருடன் இணைந்து நடனமாடும் வாய்ப்பு எனக்கு ஒரு கௌரவமாக இருந்தது. அவர் அழகாகவும் மிக நேர்த்தியாகவும் ஐரோப்பியப் பாணியில், அழகான ஊதா நிற வெல்வெட் ஆடையை அணிந்திருந்தார். தலையிலும் கழுத்திலும் சிறந்த வைரங்களால் ஆன அணிகலன்கள். நள்ளிரவில், தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அடுத்த அறையில் இரவு உணவு. நடனம் சற்று ஒத்திப் போடப்பட்டது. அரச குடும்பத்தினர் சற்று நேரத்தில் புறப்பட்டுச் சென்றனர். எனக்கு விருந்தளித்த பிரிட்டிஷ் தூதருக்கும் அவரது வசீகரமான மனைவிக்கும் இரவு வணக்கம் சொல்லிவிட்டு நானும் புறப்பட்டேன்.

லேடி மெக்டொனால்ட் இவ்வாறு அடிக்கடி அளிக்கும் விருந்துக்கும் உல்லாசப் பொழுதுபோக்குக்கும் டோக்கியோ சமூகத்தினர் நன்றிக் கடன் பட்டவர்கள். அத்துடன் சமுதாயப் பணிகளிலும் தர்ம நிறுவனங்களுக்கு உதவுவதிலும் பெருந்தன்மையுடனும் பரிவுடனும் அவர் அக்கறை காட்டுகிறார்.

பதினேழாம் தேதி. தலைநகரத்தின் மிகச் சிறந்த படைப்பான புகழ்பெற்ற ஷிபா கோவில்களுக்குச் சென்றேன்.

(தொடரும்)

___________
ஜகத்ஜித் சிங் எழுதிய “My Travels in China, Japan and Java, 1903” நூலின்  தமிழாக்கம்

பகிர:
nv-author-image

அக்களூர் இரவி

சொந்த ஊர் மாயவரம். தொலைத் தொடர்புத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 'இந்தியா என்கிற கருத்தாக்கம்', ‘காந்தியும் பகத் சிங்கும்’, ‘அரசியல் சிந்தனையாளர் புத்தர்’ உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். திசையெட்டும் மொழியாக்க விருது பெற்றவர். தொடர்புக்கு : thendralaham@gmail.comView Author posts

2 thoughts on “மகாராஜாவின் பயணங்கள் #9 – கெய்ஷா பாடலும் மைக்கோ நடனமும்”

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *