தமிழக அரசியலில் பெரும் மனிதர் என்ற பட்டத்திற்குத் தகுதியானவராக, பூணூல் அணிந்த புரட்சியாளராக, அனைத்துச் சமூக மக்களுக்கும் வழிபாட்டு உரிமை இருப்பதை உறுதி செய்தவராக, பூணூல், பஞ்சகச்சம், குடுமி கொண்டு வீதிகளில் போராடிய பெரும் மதியாளராக, விடுதலைப் போராட்ட வீரராக, சமூக நலத்தின் சாட்சியாக, மதுரை மண்ணின் மைந்தராக வாழ்ந்த மதுரை வைத்தியநாதரின் வரலாற்றுச் சுவடுகளை இங்குக் காண்போம்.
வைத்தியநாதர் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே 1890ஆம் ஆண்டு மே 16ஆம் நாள் அருணாசலம் லட்சுமி தம்பதியினருக்கு இரண்டாவது நன்மகவாகப் பிறந்தார். தந்தை அருணாசலம் மதுரைக்குப் பணி நிமித்தமாக இடம்பெயர வேண்டியதால் மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் படித்து சென்னை மாகாணத்தில் இரண்டாவது மாணவராகவும், மதுரைக் கல்லூரியில் பட்டம் படித்து மாகாண அளவில் நான்காம் இடத்தையும் பெற்றார். நன்முறையில் கல்வி கற்று ஆசிரியராகப் பணியாற்றினார். ஆசிரியர் பணிக்கு இடையில் வழக்கறிஞர் படிப்பையும் தொடர்ந்தார். உயர்மதிப்பெண் பெற்று வழக்கறிஞர் தேர்வில் தேர்ச்சி அடைந்தார்.
வைத்தியநாதருக்கு 18 வயது நிரம்பியபோது அகிலாண்டம்மாள் என்பவரை மணம் புரிந்தார். வைத்தியநாதரின் போராட்டங்களுக்கு உறுதுணையாகவும், உற்ற துணையாகவும் இருந்து வந்தார் அகிலாண்டம்மாள்.
வழக்கறிஞர் தொழிலுக்குத் தகுதி பெற்றதும் மதுரையில் புகழ்பெற்ற வழக்கறிஞர் நடேச ஐயர் அவர்களிடம் உதவியாளராகச் சேர்ந்தார். வைத்தியநாதரின் திறமையைக் கண்ட நடேசனார், நீங்கள் தனியாகவே வாதாடும் திறமையை நன்முறையில் பெற்றுள்ளீர்கள். ஆகவே உங்கள் பணிகளைத் தொடங்குங்கள் என்று வாழ்த்தினார். தம் வாழ்நாள் முழுவதும் வழக்கறிஞர் பணிகளில் நடேசனாரைத் தம் குருவாகவே எண்ணினார் வைத்தியநாதர்.
மதுரையில் நடேசனாருக்கு இணையாக, அவர் மிகச் சிறந்த வழக்கறிஞராக உருவெடுத்தார். மதுரை, புதுக்கோட்டை, திருநெல்வேலி எனத் தென் மாவட்டங்களின் சிறந்த வழக்கறிஞராக வழக்குகளை நடத்தினார். வழக்கறிஞர் பணியில் தம் வாதத் திறமையால் நீதிபதிகளும் பாராட்டும் வகையில் பணியாற்றினார். உண்மைக்குப் புறம்பான வழக்குகளை எப்போதும் இவர் நடத்திட முன்வரமாட்டார் என்னும் நற்பெயரையும் பெற்றார். ஆதலால் இவர் முன்னின்று நடத்தும் வழக்குகளில் உண்மைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வழிவகுத்தார். பல வழக்கறிஞர்கள் இவரை முன்மாதிரியாக ஏற்றனர். தமக்குக் கீழே பணி புரியும் ஜூனியர் வழக்கறிஞர்களையும் வழக்குகளில் வாதாட வைத்தார். பெரும் செல்வமும், பெரும் புகழும் கிடைத்த நேரத்தில் வைத்தியநாதர், விபின் சந்திர பாலின் சுதந்திரப் போராட்டக் கூட்டத்தில் கலந்து கொள்ள நேர்ந்தது. அவரின் பேச்சால் ஈர்க்கப்பட்டு இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடலானார்.
மகாத்மா காந்தியடிகள் 1921ஆம் ஆண்டு மதுரை நகரம் வருகை புரிந்து அரையாடை அணிந்து புரட்சியை உருவாக்கியபோது, காந்தியின் மீது கொண்ட பெரும் ஈர்ப்பால் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முழுமையாக ஈடுபடலானார்.
வழக்கறிஞர் தொழிலில் பெரும் புகழும் , செல்வமும் உடையவராகத் திகழ்ந்த வைத்தியநாதர், வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு முழுநேர காங்கிரசு உறுப்பினராக, ஊழியராகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். அப்போதைய தலைவர்களில் முக்கியமானவராகத் திகழ்ந்த சித்தரஞ்சன்தாஸ், வைத்தியநாதரிடம்,, ‘நீங்கள் வழக்கறிஞர் தொழிலை விடவேண்டாம். தேசப்பணியில் ஈடுபடும் தொண்டர்களைக் காப்பாற்றும் நோக்கில் நீங்கள் பணியைத் தொடர்ந்து நடத்திட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து வைத்தியநாதர் வழக்கறிஞர் பணியில் மீண்டும் ஈடுபடலானார்.
மகாத்மா காந்தி அவர்கள் கதர் போராட்டத்தை முன்னெடுத்தபோது தென் பகுதிகள் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கதர் பிரசாரத்தை முன்னெடுத்தார் வைத்தியநாதர். எளிய கிராமங்களிலும் ராட்டையை அறிமுகப்படுத்தினார். மதுரையில் வைத்தியநாதர் மிகப்புகழ்பெற்ற நபராக இருந்தமையால் அவரின் சொல்லுக்கு இணங்கி எல்லோரும் கதராடை அணியத் தொடங்கினர். 1924ஆம் ஆண்டு இந்தியாவிலேயே கதர் விற்பனையில் தமிழகத்தின் மதுரை நகரம் முன்னிலை வகித்தது. மிகப்பெரும் செல்வந்தராக இருந்தாலும் தன் தோளில் கதர் ஆடைகளைச் சுமந்து விற்பனைக்குக் கொண்டு சென்றார். பல இடையூறுகளையும் சந்தித்தார். ஆங்கிலேயரின் மிகுந்த கோபத்திற்கு ஆட்படலானார்.
கதர் பிரசாரத்தின்போது கிராமங்கள் தோறும் சென்ற வைத்தியநாதர், கிராமங்களில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளை ஒழிக்க வேண்டும் என முடிவெடுத்தார். எளிய மக்களும் கல்வி உரிமைகளைப் பெற வேண்டும் என்னும் நோக்கில் பல நூறு குழந்தைகளைத் தம் சொந்தச் செலவில் படிக்க வைத்தார். உயர்கல்வி வரை சமூகத்தில் பின்தங்கிய மக்களின் குழந்தைகளையும் படிக்க வைத்தார்.
சமூக, பொருளாதார, சாதிய அடுக்குகளில் கீழ் நிலையில் இருக்கும் மக்களை ஒன்றிணைத்து அவர்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டார். சாதி இந்து என்னும் நிலையில் பூணூல், பஞ்சகச்சம், குடுமி கொண்டு உயர் சாதி மனிதராகத் திகழும் வைத்தியநாதர், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்குப் போராடிய காரணத்தால் வைதீகர்களின் கடுமையான கோபத்திற்கும் ஆளானார். அவர் சார்ந்த சமூகத்தால் ஒதுக்கியும் வைக்கப்பட்டார். தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பலரைத் தம் மகன்கள் போல வீட்டில் இருந்து கல்வி பயிலவும் அனுமதித்தார். அவ்வாறு வைத்தியநாதர் உருவாக்கிய மகன்களில் திரு.கக்கன் குறிப்பிடத்தகுந்தவர்.
இந்தியாவிலும் தமிழகத்திலும் சமூக நல இயக்கங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் வைத்தியநாதர். தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக் காவலராகத் திகழ்ந்தார். நகரின் முக்கிய இடங்களுக்குத் தாழ்த்தப்பட்ட மக்களையும் கதராடை அணிய வைத்து அழைத்துச்சென்றார். சமூகத்தின் மிக முக்கிய நபராக வைத்தியநாதர் திகழ்ந்த காரணத்தால் அனைத்துப் பகுதிகளிலும் இதன் தாக்கம் சென்றடைந்தது.
உப்பும் தங்கமும் ஒரே விலையில் விற்ற ஆண்டுகளில் ஆங்கில அரசின் உப்புச் சட்டத்தை எதிர்த்து மகாத்மா காந்தியடிகள், சபர்மதியில் இருந்து தண்டி நோக்கி யாத்திரை செல்லத் தீர்மானித்தார். அதன்படி தென்னகத்திலும் இந்தப் போராட்டத்தை நடத்துவது என்றும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தவர் வைத்தியநாதர் என்பதும் இங்குக் குறிப்பிடவேண்டியது அவசியம்.
யாத்திரையின் நோக்கம் குறித்து 1930ஆம் ஆண்டு திருச்சியில் தொடங்கி, வேதாரண்யம் வரை நடைபயணமாகச் சென்று உப்பு எடுக்கும் போராட்டத்தை நடத்த ராஜாஜி தலைமை ஏற்க முடிவானது. ஆங்கிலேய ஆட்சியாளர்களின் திருச்சி காவலர்கள் அப்போது புதுமையான தண்டனையை உருவாக்கியிருந்தனர். புளியவிளாரால் அடிக்கும் முறையை உருவாக்கியிருந்தனர். போராட்டத்தின் நோக்கம் குறித்து ஒரு கூட்டத்தில் வைத்தியநாதர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ஆங்கிலேயக் காவலர்கள் மேடையில் பேசிக்கொண்டிருந்த வைத்தியநாதரைப் புளிய விளாரால் கடுமையாகத் தாக்கினார்கள். பின்னர் திருச்சி நகர வீதிகளில் இழுத்துச் செல்லப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் வைத்தியநாதர் அடைக்கப்பட்டார். காந்தி – இர்வின் ஒப்பந்தம் காரணமாக வைத்தியநாதர் விடுதலை செய்யப்பட்டார். தன்னுடைய மனைவி அகிலாண்டம்மாள் அவர்களையும் நாட்டு விடுதலையில் ஈடுபடுத்தினார். அதனால் அகிலாண்டம்மாளும் வேலூர் சிறையில் ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை பெற்றார் என்பது வரலாறு சொல்ல மறந்த கதை.
1932ஆம் ஆண்டு சட்டமறுப்புப் போராட்டம் காரணமாக காந்தியடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட, அதனை எதிர்த்து மதுரையில் வைத்தியநாதர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது, ஆங்கிலேய காவலர்கள் திடீரென மேடை ஏறி தடை உத்தரவை வாசித்து வைத்தியநாதரைச் சிறையில் அடைத்து அவரின் மகிழுந்தை ஏலம் விட முடிவு செய்தனர். சிறையில் இருந்து மீண்டு வந்து இழந்த தன் சொத்துகளை மீட்டு மீண்டும் விடுதலைப்போரில் ஈடுபடலானார்.
1935ஆம் ஆண்டு திருவாங்கூர் சமஸ்தானத்து அரசர், தமது ஆளுகைக்குட்பட்ட திருக்கோயில்களில் அனைத்துச் சமூகத்தவரும் வழிபடும் உரிமையை வழங்கினார். இந்தச் செய்தியைக் கேள்வியுற்ற வைத்தியநாதர் தமிழகத்திலும் இவ்வாறு நடத்த எண்ணினார். ஆனால் கடுமையான எதிர்ப்புகள் ஆரம்பக் கட்டத்திலேயே இருந்ததை உணர்ந்தார். இருப்பினும் தமது செயலில் உறுதியாக இருந்து, ‘தாழ்த்தப்பட்ட மக்களை ஆலயங்களின் உள்ளே அழைத்துச் சென்றே தீருவேன்’ என்பதில் உறுதியாக இருந்தார்.
தமிழகத்தின் தென் பகுதி முழுவதும் சுதந்திரப் போராட்டப் பணிகளுக்கு மத்தியில் ஆலய நுழைவுரிமைப் போராட்ட மாநாடுகளை நடத்தினார். இதனால் தாழ்த்தப்பட்ட மக்கள் வைத்தியநாதரைத் தங்களின் மீட்பராகவே கருதினர். இந்திய அளவில் மகாத்மா காந்தி ஹரிஜன மக்களின் உரிமைக்குக் குரல் கொடுத்த வேளையில், தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை உடனிருந்து, அவர்களின் உரிமைகளைப் பெற்றுத் தந்து செயல் வீரராகவே வைத்தியநாதர் திகழ்ந்தார்.
1939ஆம் ஆண்டு ஜூலை மாதம் எட்டாம் நாள் மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில், தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துக்கொண்டு சமநீதியைப் பெற்றே தீருவேன் என்னும் முழக்கத்துடன் ஊர்வலமாக மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் நோக்கிச் சென்றார். வழியில் வைதீகர்கள் கடுமையான எதிர்ப்புகளை முன்வைத்தனர். சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் என அழைக்கப்படும் பலரையும் அழைத்துச்சென்று மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் உள்ளே அழைத்துச்சென்று வழிபட வைத்தார். அந்தக் குழுவில் சென்றவர்களில் கக்கனும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆலய வழிபாடு முடிந்து வெளியே வந்து மக்களிடம் ஆலய நுழைவுரிமைப் போராட்டம் வெற்றி என்னும் முழக்கத்தை முன்வைத்தார். இனி மதுரை ஆலயத்தில் அனைவரும் சென்று வழிபடலாம். தடுத்தால் வைத்தியநாதனிடம் வைத்தியம் பெற வேண்டி வரும் என்று எச்சரிக்கையும் விடுத்தார். வைத்தியநாதரின் ஆலய நுழைவுரிமைப் போராட்டத்திற்கு முத்துராமலிங்கத்தேவர் பக்கபலமாக இருந்தார்.
ஆலய நுழைவுரிமை முடிந்து வெளியே வெற்றிக் கூட்டம் நடைபெற்றபோது வைதீகர்களில் ஒருவர் வைத்தியநாதரிடம் வந்து, ‘நீங்களும் தாழ்த்தப்பட்ட மக்களாய் மாறிவிட்டீர்களா?’ என்று கேட்க அதற்கு வைத்தியநாதர், ‘நான் மனிதராய் மாறிவிட்டேன்’ என்று பதில் கொடுத்தார். வைத்தியநாதர் பெரிதும் மதிக்கும் நடேச ஐயர் தலைமையில் வைதீகர்கள் ஒன்றுகூடி வைத்தியநாதரைச் சாதி விலக்கம் செய்வதாக அறிவித்தனர். மதுரை மீனாட்சியம்மன், கோயிலைவிட்டு வெளியேறி நடேசர் வீட்டில் இருப்பதாகவும் ஆலயம் தீட்டுப் பட்டதாகவும் அறிவித்தனர். மாறாக வைத்தியநாதர், என்னைச் சாதியை விட்டுத்தானே தள்ளிவைத்தீர். நாங்கள் சமூகத்தைவிட்டே உங்களைத் தள்ளி வைக்கிறோம் என்று முழங்கினார். வைத்தியநாதரின் போராட்டம் தமிழகம் எங்கும் கிளர்ந்து எழுந்தது. மகாத்மா காந்தி வைத்தியநாதரின் போராட்டத்தைப் பாராட்டிக் கடிதம் எழுதினார். இந்தியாவின் சமூக நீதியின் முதல் முன்னோடி என்றும் பாராட்டினார்.
வைத்தியநாதரின் போராட்டம் உச்சம் தொட்டது. சுதந்திரப் போராட்டத்திற்கு நிகராக, தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலய நுழைவுரிமைப் போராட்டம் பல திருக்கோயில்களில் நடைபெற்றது. திருவரங்கம், திருப்பரங்குன்றம், பழனி, அழகர் கோயில், திருவில்லிப்புத்தூர் எனப் பல கோயில்களில் ‘அனைவருக்குமானது ஆலயம்’ என்னும் முழக்கத்தை முன்வைத்து போராட்டங்களை நடத்தி, மேற்காணும் கோயில்களில் ஆலய நுழைவுரிமையை நிகழ்த்தினார். வைத்தியநாதரின் போராட்டம் கண்டு அரசாங்கம் தீவிரமாக ஆலோசனை செய்து வேறு வழியின்றி, ஆலய நுழைவுரிமை அனைவருக்குமானது என்னும் சட்டத்தை நிறைவேற்றியது.
அரசின் சட்டத்தை எதிர்த்து வைதீகர்கள் நீதிமன்றத்தை நாடினார்கள். அங்கும் வைத்தியநாதர் வழக்கறிஞராக நின்று அரசின் சட்டம் அவசியமானது என்னும் வாதத்தை முன்வைத்தார். தான் தொழில் கற்ற குரு நடேசரும், வைத்தியநாதரும் எதிர் எதிர் நின்று வாதாடினார்கள். இறுதியில் தாம் பெரிதும் மதிக்கும் நடேசரை வாதில் வென்று ஆலய நுழைவுரிமைச் சட்டம் செல்லும் என்னும் தீர்ப்பினை வாங்கிக் கொடுத்தார். 1940 களில் வைத்தியநாதர் உருவாக்கிய இந்தப் போராட்டத்தால்தான் இன்றும் ஆலயங்களில் அனைவரும் செல்லலாம் என்னும் உரிமை உள்ளது என்பதை வரலாறும், அரசியல் இயக்கங்களும் மறைத்து விட்டன என்பது உண்மை. ஆலய நுழைவுரிமைப் போராட்டம் நடந்து நூறு வருடங்கள் ஆகப்போகின்றது. ஆனாலும் தமிழகத்தின் பல இடங்களில் இன்றும் குறிப்பிட்ட மக்களுக்கு ஆலய நுழைவுரிமை மறுக்கப்பட்டே வருகின்றது. சமூக நீதி பேசும் திராவிட இயக்கங்களின் ஐம்பது ஆண்டுகால ஆட்சியிலும் இந்த நிலைமை தொடர்வது வேதனையே.
இரண்டாம் உலகப் போரினால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் சீர்குலைய, கைத்தறித் தொழில் பெரிதும் பாதிப்படைந்தது. நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க தமது சொந்த நிதியில் பல உதவிகளைச் செய்தார்.
முகமது அலி ஜின்னா விடுத்த தனிநாடு கோரிக்கையினால் 1940இல் மதுரையில் இந்து முஸ்லிம் கலவரம் மேல மாசி வீதியில் நடக்க இருந்த சமயத்தில், அந்த இடத்திற்கு விரைந்து சென்று இருதரப்பினரையும் சமாதானம் செய்து பெரும் கலவரம் நடக்காமல் காப்பாற்றினார். இருதரப்பினரும் ஏற்கும் தலைவராக, மக்கள் மதிக்கும் நபராக வைத்தியநாதர் திகழ்ந்ததே இதற்குக் காரணம்.
1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டம் நாடு முழுவதும் மிகத் தீவிரமாக நடைபெற்றபோது, நாடு முழுவதும் பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மதுரையில் மக்களைத் திரட்டி ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய வேளையில் வைத்தியநாதரும் கைது செய்யப்பட்டு மேற்கு வங்காள அலிப்பூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1942 முதல் பல்வேறு காரணங்களால் ஆங்கில அரசு இவரை வெளியே விடாமல் பல சிறைகளில் அடைத்துத் துன்புறுத்தியது. 1945ஆம் விடுதலையான வைத்தியநாதர் மீண்டும் விடுதலைப்போரில் ஈடுபடலானார்.
வைத்தியநாதரின் சமூக நீதிப் போராட்டங்களின் தொடர்ச்சியாக, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுமாறு காந்திஜி, சர்தார் வல்லபாய், ராஜாஜி ஆகியோர் வலியுறுத்தல் காரணமாக 1946ஆம் ஆண்டு மதுரை மேலூர் தொகுதியில் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கட்சி இவரின் நன்மதிப்பையும், சமூகத்தில் இவருக்கு இருக்கும் முக்கியத்துவத்தைக் கருதியும் அமைச்சர் பதவி வழங்க முன்வந்தது. வைத்தியநாதர் அதனை ஏற்க மறுத்துவிட்டார். மிகச்சிறந்த சட்டமன்ற உறுப்பினராகத் திகழ்ந்து மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து வந்தார். வைகை ஆற்றில் வெள்ளம் வந்தபோது களத்தில் இறங்கி மக்களைக் காப்பாற்றினார். தொகுதி முழுவதும் நீர்நிலைக் கிணறுகளை அமைத்துத் தந்தார். பிளேக் போன்ற கொடிய நோய்கள் பரவாமல் இருக்க தம் சொந்த நிதியில் தொகுதி முழுவதும் சுகாதார நிலையங்களை உருவாக்கினார். மேலூரில் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டபோது தேக்கடி நீர்த்தேக்கத்தில் இருந்து மிகப்பெரிய குழாய்கள் மூலம் நீர் கொண்டு வந்து மக்களையும், மாடுகளையும், வேளாண்மையும் காத்தார். மதுரையில் செல்வாக்கு மிக்க நபராக வலம் வந்த வைத்தியநாதரை மக்கள் மிகவும் மதித்தனர்.
சட்டமன்றத்தில் இவரின் உரைகள் காலத்தால் பாதுகாக்கப்பட வேண்டியவை என்று பல தலைவர்களும் பாராட்டினர். ஆலய நுழைவு, ஹரிஜன மக்களின் நல்வாழ்வு, இந்தியாவின் புதிய அரசமைப்பு, கல்வி மற்றும் பெண்கள் நலன் ஆகியன குறித்துப் பல மசோதாக்களைக் கொண்டு வந்து மிக நுணுக்கமான வாதங்களை முன்வைத்தார்.
வைத்தியநாதரின் சட்டன்ற உரைகளைத் தொகுத்து சந்திரபிரபு என்பவர், ‘Voice of the Great Soul’ என்னும் பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார். இன்றைய அரசியல்வாதிகள் மசோதாக்களின்போது எவ்வாறு பேச வேண்டும் என்பதற்கு இந்த நூல் ஒரு சாட்சி. அரசியல்வாதிகள் எவ்வாறு சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு வைத்தியநாதர் முன்மாதிரி.
தமிழ்நாடு ஹரிஜன சங்கத்தின் தலைவராக நீண்ட நாள் பதவி வகித்தார். அந்தணராக இருந்து ஹரிஜன மக்களின் வாழ்வுரிமைக்குப் போராடியதால், ஹரிஜன மக்களின் பாதுகாவலன் என்று போற்றப்பட்டார். தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்குப் பாடுபட்ட வைத்தியநாதர் மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல் மக்கள் பிரச்னைகளுக்குக் களப்பணி ஆற்றுவது என்றும் முடிவு செய்தார் . அதன்படி தமிழகம் முழுவதும் பயணம் செய்து அடித்தட்டு மக்களின் உரிமைகளுக்கு நீதி கேட்டுப் போராடித் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கு, உரிமைகளுக்குக் காவலராய் போராடிய வைத்தியநாதர் 1955ஆம் ஆண்டு அவரின் 65ஆம் வயதில் இவ்வுலக வாழ்வைவிட்டு நீங்கினார்.
வைத்தியநாதரால் உரிமைகள் பெற்ற பலரும் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். தஞ்சாவூரில் பிறந்து மதுரையின் அடையாளமாக மாறிப்போன வைத்தியநாதரின் பிரிவை மதுரை மக்கள் தாங்கிக் கொள்ள இயலாமல் கூட்டம் கூட்டமாக வந்து இறுதி மரியாதை செய்தனர்.
1955ஆம் ஆண்டு வைத்தியநாத ஐயர் இறந்தபோது, அவரால் பல நிலைகளுக்கு உயர்ந்த கக்கன் அமைச்சராக இருந்தார். பேருந்தில் சென்று அவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார். அவரின் உடலுக்கு தீ வைக்கத் தயாரானபோது, கக்கனும் மொட்டை அடித்து மகன் போலத் தயாரானார். அதற்கு அங்கிருந்த வைத்தியநாதரின் உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க, அப்போது வைத்தியநாதரின் மகன்கள், ‘நாங்கள் பிறப்பால் மகன்கள். கக்கன் வளர்ப்பால் மகன். ஆகவே அவரே கொள்ளி வைக்கட்டும்’ என்றார்கள். கக்கனிடம் வைத்தியநாதரின் உறவினர்கள் பேச்சு நடத்த, அதற்கு கக்கன், ‘இன்று நான் வகிக்கும் பதவி, அணிந்திருக்கும் கதராடை, எனது நேர்மை எல்லாமே ஐயர் தந்தது. அவருக்கு நான் கொள்ளி வைக்காவிடில் வாழ்வதற்கே தகுதியில்லை’ என்றார்.
உயர் குடியில் பிறந்த வைத்தியநாதருக்குத் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த கக்கன் கொள்ளி வைத்து மகன் போல அழுததை இங்குப் பதிதல் அவசியம். சமூக நீதியின் காவலராக, காந்தியவாதியாக, விடுதலைப் போராட்ட வீரராக, மக்கள் மதிக்கும் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, மிகச் சிறந்த வழக்கறிஞராக வாழ்ந்த வைத்தியநாதர் மதுரை மக்களால் ‘மதுரை வைத்தியநாதர்’ என்றே அழைக்கப்பட்டார்.
மதுரையில் புகழ் பெற்று விளங்கும் கல்வி நிறுவனங்கள் வைத்தியநாதரின் பணிகளை இன்றைய இளைய தலைமுறையினரிடம் எடுத்துச் சொல்ல முன்வரவேண்டும். பல்கலைக்கழகம் என்ற பெயரில் இயங்கும் காமராசர் பல்கலைக்கழகம் அந்த மண் சார்ந்த மண்ணின் மைந்தர்களின் வரலாற்றைப் பாடத்திட்டமாக வைக்க யோசிக்கவாவது செய்ய வேண்டும். அதற்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், பாடத்திட்ட வல்லுநர்களுக்கு வரலாறாவது தெரிந்திருக்க வேண்டும். அரசியல் பின்புலத்தில் பேராசிரியராக வந்தவர்களுக்கு வரலாறு எதற்கு? என்பது தற்போது தமிழகத்தில் பதவி வகிக்கும் பேராசிரியர்களே சாட்சி.
சொந்த சாதியினரால் சாதி விலக்கம் செய்யப்பட்டு சமூக விடியலுக்குப் பாடுபட்ட வைத்தியநாதரின் வரலாறு என்றும் அறிந்துகொள்ள வேண்டிய ஆவணம். புளிய விளாரால் அடிபட்டு, சாதி இந்துக்களால் கொடுமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிமைகள் பெற்றுத் தந்து, தாழ்த்தப்பட்ட மக்களின் காவலனாக, சமூக விடியலின் தந்தையாகத் திகழும் வைத்தியநாதரை வணங்குவோம்.
0
Super
மதுரை வைத்தியநாதரின் சிறப்பு மிகு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தரவுகள் படிக்க படிக்க வியப்பூட்டும் வகையில் மிகச் சிறந்த மண்ணின் மைந்தரை அறிந்த மகிழ்ச்சி… அனைவரும் அறிய வேண்டிய பதிவு