தமிழகத்தில் பிறக்காமல், தமிழகத்திற்கே வராமல் தமிழ் மண் மீதும் இந்திய விடுதலை மீதும் ஆர்வம் கொண்டு அயல் மண்ணில் போராடி, மகாத்மா காந்தியடிகளின் அன்பைப் பெற்ற பெண் மங்கை தில்லையாடி வள்ளியம்மை.
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை மகாத்மாவாக மாற்றிய மண்ணின் மங்கை இவர். இந்திய நாட்டு விடுதலைக்கு அயல் நாட்டில் போராடி, இந்திய கொடிக்காகத் தனது ஆடையை அளித்துப் புரட்சி ஏற்படுத்திப் புதுமைப்பெண்ணாக வரலாற்றில் இடம்பெற்றவர் தில்லையாடி வள்ளியம்மை. இவர் அளித்த ஆடையை வைத்துத்தான் இந்திய நாட்டின் கொடிக்கான வித்து உருவாக்கப்பட்டது என்பது பதியப்பட வேண்டிய வரலாற்றுத் தரவாகும்.
மகாத்மா காந்தியடிகளின் மனதில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கி இந்திய விடுதலைப் போரில் இன்னும் தீரத்துடன் மகாத்மா காந்தியை ஈடுபடச் செய்த தில்லையாடி வள்ளியம்மையின் ஆயுட்காலம் பதினாறு ஆண்டுகள் என்றால் நாம் நம்பித்தான் ஆகவேண்டும். பிறந்த நாளிலேயே இறப்பும் நிகழ்ந்து (1898 பிப்ரவரி 22 – 1914 பிப்ரவரி 22).
மயிலாடுதுறை மாவட்டம் அருகே தில்லையாடி என்னும் கிராமத்தில் வசித்து வாழ்வாதாரம் தேடி தென் ஆப்பிரிக்கா சென்ற முனுசாமி – மங்களத்தம்மாள் தம்பதிக்கு 1898ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் நாள் பிறந்தவர் தில்லையாடி வள்ளியம்மை.
இந்திய நாட்டில் சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வந்த காலத்தில், வழக்கறிஞர் பணிக்காக தென் ஆப்பிரிக்காவில் வசித்து வந்தார் மகாத்மா காந்தியடிகள். தென் ஆப்பிரிக்கா நாட்டில் வசித்து வந்த இந்திய மக்களுக்குப் பல்வேறு இன்னல்களை அந்த நாட்டின் அரசு ஏற்படுத்தி சாதாரண அடிப்படை உரிமைகளைக் கூட வழங்காமல் இருந்தது. இதனை எதிர்த்து தென்னாப்பிரிக்கா நாட்டில் மகாத்மா காந்தியடிகள் இந்தியர்களின் உரிமைகளைப் பெற்றுத் தர பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு போராட்டங்களை மகாத்மா காந்தியடிகள் நடத்தி வந்தார்.
1906ஆம் ஆண்டு இந்தியர்கள் அனைவரும் பெயரையும், கைரேகையும் பதிவு செய்தே அனைத்து இடங்களுக்கும் செல்ல வேண்டும் என்ற அவசரச் சட்டம் ஒன்றை இயற்றியது தென்னாப்பிரிக்க நாட்டின் ஆங்கிலேய அரசு. இதனை எதிர்த்து மகாத்மா காந்தியடிகள் தலைமையில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் டிரான்சுவல் மாகாணத்திற்குள் நுழையப் பேரணியாகச் சென்றனர். இந்திய மக்கள் அந்த மாகாணத்திற்குள் நுழையத் தடையும் விதிக்கப்பட்டது. மகாத்மா காந்தியடிகளையும் அவரது போராட்டங்களையும் சிறுவயதிலேயே உள்வாங்கி உரிமைகளுக்கான அகிம்சைப் போரில் தில்லையாடி வள்ளியம்மையும் பங்குகொண்டு போராடத் தொடங்கினார்.
1913ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் கிறித்தவ முறைப்படி மட்டுமே திருமணம் செய்ய வேண்டும் என்ற புதிய விதியைப் பிரிட்டிஷ் அரசாங்கம் கொண்டு வந்தது. இதனை எதிர்த்து ஜோகன்ஸ்பர்க் நகரில் மிகப்பெரிய அளவில் அகிம்சை ஊர்வலத்தை நடத்தினார் காந்தி. அப்போது அந்த ஊர்வலத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக இந்தத் தாளில் இருக்கும் வாசகங்களை யார் படிக்கிறீர்கள் என்று மகாத்மா காந்தியடிகள் கேட்ட போது பதினைந்து வயதே நிரம்பிய தில்லையாடி வள்ளியம்மை முன்வந்து ‘வெள்ளை ஏகாதிபத்தியத்தின் விலங்கொடிப்போம் வாருங்கள்’ என்று முழக்கமிட அகிம்சை ஊர்வலம் நகரத் தொடங்கியது.
மாபெரும் மக்கள் ஊர்வலத்துடன் 56 நாட்கள் அகிம்சை முறையில் நடைபெற்ற பேரணியில் முன்னிலை வகித்துச் சென்ற மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொல்ல அந்த நாட்டின் காவல்துறையினர் மகாத்மா காந்தியை நோக்கித் துப்பாக்கியுடன் வந்த போது மகாத்மாவின் முன் நின்று, ‘என்னை வீழ்த்தி விட்டு காந்தியடிகளைச் சுடு’ என்று மன வலிமையுடன் நின்று மகாத்மாவைக் காப்பாற்றினார் வள்ளியம்மை. இதனை மகாத்மா காந்தியடிகள் தனது சுயசரிதை நூலில் வியப்புடன் கூறியுள்ளார்.
ஊர்வலத்தின் நிறைவில் அனைவரும் கைது செய்யப்பட, ஊர்வலத்தில் ஆங்கிலேயருக்கு எதிராகக் கனத்த குரலில் வாசகங்களை முழங்கி, பிரிட்டிஷ் போலிசாரைத் திகைக்க வைத்த தில்லையாடி வள்ளியம்மையைக் கைது செய்து பெயரைப் பதிவு செய்கின்றனர். அப்போது தனது பெயரைக் கூறி, இந்திய நாட்டைச் சேர்ந்தவர் என்று கூறினார். அதனைக்கேட்ட ஆங்கிலேய அதிகாரிகள் சிரிக்கின்றனர். இந்தியா என்ற நாடும் கிடையாது, அந்த நாட்டுக்கென்று ஒரு கொடியும் இல்லையே என்று கூறினர். அதனைக்கேட்ட தில்லையாடி வள்ளியம்மை தனது ஆடையில் ஒரு பகுதியைக் கிழித்து ஆங்கிலேயர் முன் இதுதான் என் நாட்டின் கொடி என்று வீரமுழக்கத்துடன் பதில் கூறுகிறார்.
தில்லையாடி வள்ளியம்மையின் பதிலால் கொதிப்புற்ற ஆங்கிலேய காவல் துறையினர் அந்தச் சிறுமி மீது கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் கடுமையான தண்டனைகள் விதித்துச் சரியாக உணவுகள் வழங்கப்படாமையால் தில்லையாடி வள்ளியம்மையின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. சிறை அதிகாரிகள் தில்லையாடி வள்ளியம்மையிடம், சிறு அபராதம் கட்டி மன்னிப்புக் கடிதம் எழுதினால் விடுதலை கிடைக்கும் என்று கூற, ‘அகிம்சை வழி வந்த எமக்கு மன்னிப்புக் கடிதம் இழுக்கு, அவமானம். சிறையிலேயே உயிர் போனாலும் மன்னிப்புக் கேட்க மாட்டேன்’ என்று நெஞ்சுரத்துடன் கூறினார் வள்ளியம்மை.
மகாத்மா காந்திக்கும், தென்னாப்பிரிக்கா ஆங்கிலேய அரசுக்கும் தற்காலிக ஒப்பந்தங்கள் மூலம் சிறையில் இருந்த அனைவரும் விடுதலை பெறுகிறார்கள். தில்லையாடி வள்ளியம்மையை சிறையில் இருந்து மகாத்மா காந்தி சுமந்து கொண்டு வந்து நன்றாக மருத்துவச் சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்துகிறார். சிறையில் இருந்து வெளிவந்து பத்துநாட்களில் உடல்நிலை மிகவும் மோசமாகி தில்லையாடி வள்ளியம்மை 1914ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் நாள் மரணமடைகிறார். தில்லையாடி வள்ளியம்மையின் மரணச் செய்தி அறிந்து துயருற்ற மகாத்மா காந்தியடிகள் தமது பதிவில், தில்லையாடி வள்ளியம்மை, ‘இந்தியாவின் மேன்மையான குழந்தை’ என்றும், இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தில்லையாடி வள்ளியம்மையின் பெயர் என்றும் நீங்கா இடம்பெற்றிருக்கும் என்று பதிவு செய்தார்.
தென்னாப்பிரிக்கா நாட்டில் 1914 ஜூலை 15ஆம் நாள் தில்லையாடி வள்ளியம்மையின் நினைவுச் சின்னத்தைத் திறந்து வைத்து எமது போராட்டத்திற்கு உந்து சக்தியாக இருந்தவர் தமிழகத்தின் தில்லையாடி வள்ளியம்மையே என்று உரையாற்றினார். 1915ஆம் ஆண்டு தமிழகம் வருகை புரிந்த மகாத்மா காந்தியடிகள் தில்லையாடி கிராமத்திற்குச் சென்று அந்தக் கிராமத்தின் மண்ணை எடுத்துக் கண்களில் ஒற்றி வணங்கினார். எமக்கு விடுதலை உணர்வின் உச்சத்தை உணர்வு ரீதியாக உணர வைத்த மாபெரும் பெருமைக்குரியவர் தில்லையாடி வள்ளியம்மை என்று தமது சுயசரிதையில் பதிவு செய்துள்ளார்.
இந்திய நாட்டுக்கென்று ஒரு கொடியை உருவாக்கிட மகாத்மா காந்தியடிகள் முனைகிறார். பிங்கலி வெங்கையா மூலம் உருவாக்கப்பட்ட கொடி, தில்லையாடி வள்ளியம்மை உருவாக்கிய சுதந்திர நெருப்பில் உருவான கொடியே; அக்கொடியே இன்று நாம் போற்றும் தேசியக்கொடி என்பதும் இங்குப் பதியப்படவேண்டிய வரலாற்றுத் தரவாகும்.
‘இந்தியாவின் புனித மகள்’ என்று மகாத்மா காந்தியடிகளால் போற்றப்பட்ட தில்லையாடி வள்ளியம்மைக்கு 1997ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா அவர்களின் முயற்சியின் மூலம் தென்னாப்பிரிக்காவில் அவரின் கல்லறை புதுப்பிக்கப்பட்டு விழா எடுத்து அவரின் சிறப்பைப் போற்றினர்.
தில்லையாடி வள்ளியம்மையின் நூற்றாண்டு நினைவுக் கல்வெட்டை திருப்பனந்தாள் ஆதீனத்தின் சன்னிதானங்கள் திறந்து வைத்தார் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் சார்பில் தில்லையாடி கிராமத்தில் நினைவு மண்டபம், நினைவு நூலகம் அமைக்கப்பட்டு தற்போதும் பயன்பாட்டில் இருக்கின்றது.
இந்திய அரசின் சார்பில் 2015ஆம் ஆண்டு நூற்றாண்டு நினைவு தினத்தில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. 16 ஆண்டுகள் மட்டுமே மண்ணுலகில் வாழ்ந்தாலும் வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த தில்லையாடி வள்ளியம்மையின் வரலாற்றையும் அவரின் வீரத்தையும் நாம் போற்றி வணங்குதல் வேண்டும். தென்னாப்பிரிக்கா நாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும் இன்றளவும் தில்லையாடி வள்ளியம்மை போராளியாகவே உள்ளார். அந்த நாட்டில் வசிக்கும் குழந்தைகளுக்கு இவரின் வரலாறும், வீரமும் கற்பிக்கப்பட்டுவருகிறது. நம் நாட்டில் பிறக்காவிட்டாலும் நம் மண்ணுக்கென்று தனியாக ஒரு கொடியை அன்றே உருவாக்கிய தில்லையாடி வள்ளியம்மையின் புகழ் காலத்திற்கும் அழியாத நினைவுகளை உள்ளடக்கி இருக்கும் என்பதில் ஐயமில்லை.
0
அருமையான பதிவு சங்கர். இக்கால இளைஞர்களுக்கு சென்று சேர வேண்டிய முக்கியமான பதிவு. அதிகம் பகிர்வோம். தங்கள் எழுத்துப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்💐💐💐
தயவுசெய்து காந்தியின் ‘தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்’ என்ற நூலைப் படித்து விட்டு, இக்கட்டுரை குறித்து சரியான மதிப்பீடிற்கு வாருங்கள்.
சீ.இளங்கோவன்
7548849455
சங்கரன் கொடுத்த தமிழை
இச் சங்கரன் மெருகேற்றுகிறார்
வாழ்க 8883324084
தயவுசெய்து காந்தியின் ‘தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்’ என்ற நூலைப் படித்து விட்டு, இக்கட்டுரை குறித்து சரியான மதிப்பீடிற்கு வாருங்கள்.
சீ.இளங்கோவன்
7548849455
இக்கட்டுரையில் தில்லையாடி வள்ளியம்மை அவர்களின் தியாகத்தை உயர்த்திக் காட்ட வேண்டும் என்ற காரணத்திற்காக, ஆதாரமற்றத் தகவல்களைச் சொல்லி உள்ளதாக நினைக்கிறேன். ஓரிரு தகவல்கள் குறித்த எனது சந்தேகத்தை இங்கு பதிவு செய்கிறேன். அதற்கு உரிய ஆதாரம் இருந்தால் எனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
வள்ளியம்மைக்குக் கட்டப்பட்ட நினைவு மண்டபத்தை 1914 ஜூலை 15 ம் நாளில் காந்தி திறந்து வைத்தார் என்று உள்ளது.
அப்படித் திறந்து வைத்த காந்தி தனது ‘தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம்’ நூலின் 315ம் பக்கத்தில் நினைவு மண்டபம் கட்டப்படவில்லை என்று வருத்தத்தோடு பதிவு செய்திருப்பது ஏன்?
தென்னாப்பிரிக்க போலீஸ் காந்தியைச் சுட முயற்சி செய்ததை அறிந்த வள்ளியம்மை தான் காப்பாற்றினார் என்று ஒரு தகவல். அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக காந்தி எங்கும் பதிவு செய்யவில்லை.
இச்சம்பவம் பற்றி மட்டும் கட்டுரையாளர் பொ.சங்கர் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் எழுதி, அவ்வாறு காந்தி எழுதிய பதிவு இருக்கும் பக்க எண் அல்லது அத்தியாயத்தின் தலைப்பை எனக்குத் தெரியப்படுத்துமாறு கேட்டிருந்தேன். இதுவரை பதில் இல்லை. பதிப்பகத்தாராகியத் தாங்களாவது உரிய ஆதாரங்களுடன் பதில் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
சீ.இளங்கோவன்
திரு சீ. இளங்கோவன் அவர்கள் சுட்டிக்காட்டி உள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்றுதான் சத்திய சோதனை நூலை பலமுறை படித்த எனக்கும் தோன்றுகிறது.
தவிரவும் தனது சேலையை கிழித்து இதுதான் எனது தேசத்தின் கொடி எனக்கொடுத்ததாகவும் மகாத்மா காந்தி அவர்களே நோயுற்ற வள்ளியம்மை யைப் சுமந்து வந்ததாகவும் கட்டுரையில் கூறியுள்ளதற்கான ஆதாரங்களை வெளியிடுமாறு கட்டுரையாளர் சங்கர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
— துரைசாமி, ஈரோடு.