Skip to content
Home » மண்ணின் மைந்தர்கள் #21 – வ.உ. சிதம்பரனார்

மண்ணின் மைந்தர்கள் #21 – வ.உ. சிதம்பரனார்

வ.உ. சிதம்பரனார்

வ.உ. சிதம்பரனாரின் விடுதலை முழக்கத்தையும் பாரதியாரின் பாடல்களையும் கேட்டால் செத்த பிணம் கூட எழுந்து சுதந்திரப் போரில் பங்குகொள்ளும் என்று ஆங்கிலேய நீதிபதியால் கூறப்பட்டு, அந்தக் காழ்ப்புணர்ச்சியாலேயே கடும் தண்டனைகள் பெற்றவர் வ.உ.சி.

எதிரி எந்த ஆயுதம் கொண்டு நம்மைத் தாக்க வந்தானோ, அதே ஆயுதம் கொண்டு அவனை வீழ்த்த முடியும் என்று கப்பல் வணிகம் என்னும் ஆயுதம் மூலம் ஆங்கிலேயர்களைக் கலங்க வைத்த தமிழன் அவர். தமிழகத்தின் மிக முக்கியமான செல்வாக்குமிக்க வழக்கறிஞராகப் பணியாற்றி மிகுந்த செல்வங்களைப் பெற்றவர். பெற்ற செல்வங்களை நாட்டின் விடுதலைக்காகப் பயன்படுத்தி, இறுதிக்காலத்தை வறுமையில் கழித்த வ.உ. சிதம்பரனார் பற்றிய வாழ்வியல் தொகுப்பை அறிவோம்.

1872ஆம் ஆண்டு உலகநாதன் பரமாயி அம்மாளுக்கு மூத்த மகனாகப் பிறந்த வ.உ. சிதம்பரனார், வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனப் பன்முகத்துடன் களமாடி நாட்டு விடுதலையின் நாயகனாக வலம் வந்தவர். அன்னாரின் வாழ்வு நாட்டு வாழ்வாகவே, நாட்டுக்கான தியாக வாழ்வாகவே இறுதி வரை இருந்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆங்கிலேய ஆட்சியில் தென் மாவட்டங்களின் மிக முக்கியமான வழக்கறிஞராகத் திகழ்ந்தார் வ.உ. சிதம்பரனார். நீதிமன்றங்களில் வ.உ. சிதம்பரனார் வழக்குகளில் ஆஜரானால் வெற்றி இவர் பக்கமே என்று தீர்ப்பையே எழுதிவிடலாம் எனும் அளவுக்கு நேர்மையாளராகவும், ஏழைகளுக்கு இலவசமாகவே வாதாடும் பண்பு கொண்டும் வாழ்ந்தார்.

வ.உ. சிதம்பரனாரும், மகாகவி பாரதியும் அருகருகே உள்ள கிராமத்தில் வசித்தமையால் இயல்பான நட்புணர்வோடும், நாட்டுப்பற்று மிக்க பணிகளில் ஒன்றிணைந்தும் செயலாற்றினர். பாரதியாரின் பாடல்களை மிகவும் விரும்பிக் கேட்கும் வழக்கத்தை உடையவராகத் தம் வாழ்நாளில் இறுதி வரை திகழ்ந்தார்.

இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து நாட்டு விடுதலைக்காகத் தீவிரமாகப் பணியாற்றத் தொடங்கினார். தமிழகத்தின் சுதந்திர எழுச்சிப் போராட்டங்கள் ஆமை வேகத்தில் இருந்த காலத்தில் வ.உ. சிதம்பரனார் தலைமையேற்றார். இவரின் எழுச்சி மற்றும் பேச்சாற்றல், தலைமைப்பண்பு ஆகியவற்றால் இந்தியாவின் தென் பகுதியில் சுதந்திரப் போராட்டம் வீறு கொண்ட போராட்டக் களமாக மாறத் தொடங்கியது.

இந்தியப் பாரம்பரியக் கைத்தொழில்கள் ஆங்கிலேயரின் வர்த்தகத்தால் வீழ்ச்சியை நோக்கிச் செல்லாமல் இருக்க, பாலகங்காதர திலகர், லாலா லஜ்பதி ராய், சுப்பிரமணிய சிவா, வ.உ. சிதம்பரனார் ஆகியோர் மிகவும் போராடினர். இந்தியாவின் தென் பகுதி கடல் பரப்பில் ஆங்கிலேயர்கள் கப்பல் செலுத்தி தம் ஆதிக்கத்தை நிறுவி வந்தனர். ஆங்கிலேயர்களின் கப்பல் போக்குவரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப் பல்வேறு திட்டங்களைத் தீட்டி மக்கள் போராட்டமாக மாற்றத் தொடங்கினார். வ.உ. சிதம்பரனாரின் போராட்டங்களைக் கண்டு ஆங்கிலேயர்கள் தடுமாறினர். சுதந்திரப் போராட்ட வீரர் இராமகிருஷ்ணானந்தாவால் ஈர்க்கப்பட்ட வ.உ. சிதம்பரனார் 1906ஆம் ஆண்டு சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார். இந்தியா முழுவதும் பயணம் சென்று பலரிடம் நிதியுதவிப் பெற்றார். தமது சொத்துகளில் முக்கால்வாசியை இந்த நிறுவனத்திற்காக இழந்தார்.

தென்னகத்தின் பல பகுதிகளிலும் பெரும் செல்வந்தர்கள், வணிகர்களைச் சந்தித்து சுதேசிப் பொருளாதாரத்தின் மேன்மையை எடுத்துச் சொல்லி நிதி திரட்டினார். இருப்பினும் கப்பல் வாங்குவதற்கான தொகை சேராததால், வட இந்தியா நோக்கிப் புறப்பட்டார். தமிழகத்திற்கு நான் திரும்பும் போது கப்பலுடனே திரும்புவேன். இல்லையெனில் கடலில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று கூறி பயணத்தைத் தொடர்ந்தார்.

பாலகங்காதர திலகர், அரபிந்தோ கோஷ் ஆகியோரின் துணையுடன் எஸ்.எஸ்.காலியோ, எஸ்.எஸ். லாவோ என்னும் பிரெஞ்சு நாட்டின் இரண்டு பெரும் நீராவிக் கப்பல்களை வாங்கினார். கிட்டத்தட்ட 2000 இருக்கைகள் 5000 சரக்கு மூட்டைகள் ஏற்றும் அளவுக்குப் பெரிய கப்பல்களை வாங்கி பெருமிதத்துடன் தமிழகம் திரும்பினார். இந்தியாவின் அன்றைய செய்தி நிறுவனங்கள் வ.உ. சிதம்பரனாரின் சாதனையைப் பெரிய செய்தியாகப் பரப்பின. இது ஆங்கிலேயருக்குப் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது. இந்தியா பத்திரிக்கையில் மகாகவி பாரதியார், வ.உ. சிதம்பரனாரின் சாதனையைப் பாராட்டி எழுதினார். இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வர்த்தகப் போர் மூலம் ஆங்கிலேயர்களை வீழ்த்த பெரும் திட்டங்களை முன்னெடுத்தார்.

ஆங்கிலேய அரசாங்கம் மற்றும் பிரிட்டிஷ் வணிகத்தினரின் பெரும் தடைகளைத் தாண்டி மக்கள் எழுச்சியுடன் தூத்துக்குடி – கொழும்பு இடையே வணிகம் மற்றும் போக்குவரத்துக் கப்பலை இயக்கினார். வ.உ. சிதம்பரனாரின் சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனம் ஆங்கிலேயரின் நிறுவனத்திற்கு மிகப்பெரும் சவாலாக இருந்தது. இந்தியர்கள் பெரும்பாலும் தாய்நாட்டின் மீது கொண்ட பற்றின் காரணமாக வ.உ. சிதம்பரனாரின் கப்பல்களையே பயன்படுத்தினர். இதன் காரணமாக ஆங்கிலேயக் கப்பல் நிறுவனம் கட்டணத்தைக் குறைக்க முன்வந்து பல்வேறு சலுகைகளை அறிவித்தது. வ.உ. சிதம்பரனாரும் கட்டணத்தைக் குறைத்து நாட்டிற்காக, தமது சொத்துகளை அடமானம் வைத்து கப்பல் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்தினார்.

ஒரு கட்டத்தில் ஆங்கிலேயர்கள் பயணிகளை இலவசமாகவே அழைத்துச் செல்லத் தொடங்கினர். பெரும்பாலான பயணிகள் ஆங்கிலேயக் கப்பல்களைப் பயன்படுத்தியமையால் வ.உ. சிதம்பரனார் பெரும் நெருக்கடிக்கு உள்ளானார். ஆங்கிலேயர்களின் பிரிட்டிஷ் கம்பெனி, வ.உ. சிதம்பரனாரிடம், ஓர் இலட்சம் ரூபாய் தருகிறோம். சுதேசி நிறுவனத்தை விட்டு விலகுங்கள் என்று கூற, நான் வணிகத்துக்காகக் கப்பல் விடவில்லை, விடுதலைக்காகவே கப்பல் விட்டேன் என்று ஆங்கிலேயரிடம் மறுத்துப் பேசினார். ஆனால் இவரது பங்குதாரர்களையும், பயணிகளையும் மிரட்டி ஆங்கிலேயர்கள் பணிய வைத்தனர். மாதம் பல ஆயிரங்கள் இழப்பில் சுதேசி நிறுவனம் இயங்க இயலாமல் இருந்தது. கப்பல் நிறுவனத்தை இயக்கியபடியே விடுதலைப் போரிலும் பங்கு கொண்டு மக்களிடையே விடுதலை உணர்வைத் தட்டி எழுப்பினார்.

இந்திய நாட்டில் சுதேசி கட்டமைப்பை விரிவு செய்து தம் நாட்டுப் பொருள்களை மட்டுமே நம் மக்கள் பயன்படுத்த வேண்டும் என்னும் அடித்தளத்தை விரிவுபடுத்த இந்திய மக்களிடையே பெரும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார் வ.உ. சிதம்பரனார்.

இந்தியாவின் முதல் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னின்று நடத்தி ஆங்கிலேயருக்குப் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தியவராக நாம் வ.உ. சிதம்பரனாரை அடையாளப்படுத்துவதில்லை. ஆம் 1908ஆம் ஆண்டு இந்தியாவில் முதன்முதலாக திருநெல்வேலி கோரல் மில் போராட்டத்தை முன்னின்று நடத்தினார். மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர்களின் நலன் காக்க 50 சதவிகித ஊதிய உயர்வும், வார விடுமுறையும் கேட்டுப் போராட்டங்களை நடத்தினார். போராட்டத்தின் நிறைவில் தொழிலாளர்களுக்கு ஐம்பது விழுக்காடு ஊதிய உயர்வு அளிக்க நிர்வாகம் முன்வந்து வ.உ. சிதம்பரனாரின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்தியாவில் நடைபெற்ற முதல் சுதந்திரப் போரைப் போல, வ.உ.சி. நடத்திய இந்தியாவின் முதல் தொழிற்சங்கப் போராட்டத்தையும் நாம் இனிவரும் இளைய சமூகத்துக்கு அடையாளப்படுத்திட வேண்டும். அந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய பெருமைக்குரியவர் வ.உ. சிதம்பரனார் என்பதை நம் குழந்தைகளுக்குப் பெருமையுடன் சொல்லித் தர வேண்டும்.

இந்தியாவில் அரசியல் மற்றும் வர்த்தகப் போரில் கைது செய்யப்பட்ட முதல் போராளி வ.உ. சிதம்பரனார்தான். ஆங்கிலேயருக்கு எதிராக முதன்முதலாக ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியவரும் இவர்தான். தூத்துக்குடி போராட்டத்தில் ஆங்கிலேயர்களின் துணிகளைத் துவைக்க மாட்டோம், ஆங்கிலேயர்களுக்கு முடி திருத்தம் செய்ய மாட்டோம் எனக் கிளம்பிய மக்கள் இயக்கப் போராட்டத்தைக் கண்டு ஆங்கிலேய அதிகாரிகள் அஞ்சினர். வ.உ. சிதம்பரனாரைக் கைது செய்தால் மட்டுமே தங்களால் தென் பகுதிகளில் வாழ முடியும் என்று ஆங்கில அரசாங்கத்துக்கு மடல் அனுப்பினர். வேறு வழியின்றி ஆங்கிலேய அதிகாரிகள் வ.உ. சிதம்பரனாரைக் கைது செய்ய முடிவெடுத்தனர்.

இந்திய நாட்டின் மீது கொண்ட பெரும் விருப்பத்தால் வ.உ.சி. தம் சொத்துகளைச் சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனம் மூலம் இழந்தார். தொழிலாளர் நலனுக்காகப் போராடி ஆங்கிலேய அரசின் வெறுப்புக்கு உள்ளாகி தேசத் துரோகச் சட்டத்தின் மூலம் 1908ஆம் ஆண்டு வ.உ.சி.யைக் கைது செய்ய உத்தரவிடப்பட்டது. மக்கள் எழுச்சி காரணமாக வ.உ. சிதம்பரனாரை கைது செய்ய முடியாமல் ஆங்கிலேய அரசு தடுமாறியது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குப் பேச்சுவார்த்தை என வரவழைத்து இரண்டு நாட்கள் பேச்சு வார்த்தை நடத்தி 1908 மார்ச் 11ஆம் நாள் வ.உ. சிதம்பரனார் கைது செய்யப்பட்டார்.

அவ்வாறு கைது செய்யப்பட்ட வ.உ. சிதம்பரனாரை மக்கள் போராட்டங்களால் தொடர்ச்சியாக ஒரே சிறையில் வைக்காமல் நாட்டின் பல சிறைச்சாலைகளுக்கும் மாற்றிக் கொடுமைப்படுத்தினர். 1908 ஜூலை முதல் 1910 ஆண்டு கடைசி வரை கோயமுத்தூர் சிறையில் வ.உ. சிதம்பரனார் அடைக்கப்பட்டார். சிறையில் சாதாரணக் கைதிகளுக்குக் கிடைத்த சலுகைகள் கூட வ.உ. சிதம்பரனாருக்கு மறுக்கப்பட்டது. மற்ற கைதிகள் போல அல்லாமல் வ.உ.சி. மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டார். கடுமையான அதிக எடை கொண்ட செக்கினை இழுக்கும் உத்தரவுகளைச் சிறை அதிகாரிகள் பிறப்பித்துச் செக்கிழுக்க வைத்தனர். சிறையில் இருந்தாலும் சட்டப்போராட்டங்களை கடித வழியிலேயே மேற்கொண்டு ஆங்கிலேய அரசுக்குச் சிக்கல்களை ஏற்படுத்தினார். இருப்பினும் வ.உ. சிதம்பரனார் சிறையிலிருந்த போதே அவரின் சுதேசி ஸ்டீம் நேவிகேசன் நிறுவனம் முடக்கப்பட்டது.

உடல் நலம் பாதிக்கப்பட்டு, கடும் சட்டப்போராட்டங்களுக்கு மத்தியில் டிசம்பர் மாதம் 1912ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார் வ.உ. சிதம்பரனார். சிறையின் வெளியே பெருமளவு தம்மை வரவேற்பார்கள் என்ற எண்ணத்துடன் வெளியே வந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம் ஒருவர் கூட அவரை வரவேற்க வரவில்லை. பெரும் வருத்தத்தில் இருந்த வ.உ. சிதம்பரனாரை கோயமுத்தூர் பேரூராதீனம் 22 வது சன்னிதானம் தவத்திரு மாணிக்க சுவாமிகள் தமது ஆதீனத்துக்குச் சொந்தமான இடத்தில் குடியிருக்க ஏற்பாடுகள் செய்தார். பாரிஸ்டர் பட்டம் பறிக்கப்பட்டதால் சட்டப்பயிற்சியும் மேற்கொள்ள இயலாமல் தவித்தபோது பேரூராதீனம் பல உதவிகளைச் செய்தது. கோயமுத்தூரில் பேரூராதீனத்தில் தங்கியிருந்து சட்டப் போராட்டங்களை நடத்தினார். சத்வித்ய சன்மார்க்க மன்றத்தில் கலந்து கொண்டு சமயத்தின் மீது ஈடுபாடு கொண்டு பல சமய நூல்களைக் கற்றார். பேரூராதீன வளாகத்தில் நடைபெற்ற சிவஞான போத வகுப்புகளில் கலந்து பின்னர், சிவஞான போத நூலுக்கு உரை எழுதினார்.

1935 ல் பேரூராதீன சத்வித்ய சன்மார்க்க சங்கம் வ.உ. சிதம்பரனாரின் சிவஞான போத உரை நூலினை வெளியிட்டார்கள். பேரூராதீனத்தில் தங்கியிருந்த போது பதிணென் கீழ்க்கணக்கு நூல்களான இன்னிலை, திருக்குறள் போன்ற நூல்களுக்கும் வ.உ.சி. உரை எழுதியுள்ளமை இங்குக் குறிப்பிடத்தக்கது. இக்கட்டான சூழ்நிலையில் தமக்கு உதவிய பேரூராதீனத்தை தமது வாரிசுகள் கட்டாயம் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை வந்து சந்தித்து ஆசி பெற வேண்டும் என்னும் மரபை உருவாக்கினார். அதன்படி வ.உ. சிதம்பரனாரின் கடைசி வாரிசான வாலேசுவரன் தம் இறுதிக் காலம் வரை ஆதீனத்திற்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

கடும் நெருக்கடியில் இருந்த போதிலும் தொல்காப்பியம் இளம் பூரணம் உரை நூல், திருக்குறள் மணக்குடவர் உரை ஆகியவற்றைப் பெரிதும் முயன்று பேரூராதீனம் சத்வித்ய சன்மார்க்க சங்க மன்றக் கூட்டத்தில் வெளியீடு செய்து தமது இலக்கிய முகத்தையும் பதிவு செய்திருக்கிறார் வ.உ.சி.

கேரளா மாநிலம் கண்ணனூர் சிறையில் இருந்த போது சிறைக்கைதிகளுக்கு மெய்யறம் என்னும் பெயரில் நீதி நெறி வகுப்பினை எடுத்தார். அதுவும் பிற்காலத்தில் நூல் வடிவம் பெற்றது.

1914ஆம் ஆண்டு தமிழகத்தின் மிகப்பெரிய பேச்சாளராகத் திகழ்ந்த மறைமலையடிகள் பேரூராதீனம் சத்வித்ய சன்மார்க்க சங்கத்தில் மனம் என்னும் தலைப்பில் உரையாடியதை வ.உ. சி கேட்டார். அதில் மறைமலை அடிகள் ஜேம்ஸ் ஆலன் என்பவரைப் பற்றிச் சொல்லி, அவர் எழுதிய OUT FROM THE HEART என்ற நூல் பற்றிக் குறிப்பிடுகிறார். அந்த நூலின் மீது பெரும் விருப்பம் கொண்ட வ.உ.சி. ‘அகமே புறம்’ என்னும் தலைப்பில் அந்த நூலை மொழி பெயப்பு செய்து வெளியிட்டார்.

வ.உ. சிதம்பரனாரின் சுதந்திரப் போராட்டப் பணிகளுக்கு மத்தியில் மொழிபெயர்ப்புத் துறையிலும் அவர் சிறந்து விளங்கினார். ஜேம்ஸ் ஆலன் என்பவர் எழுதிய ‘As a Man Thinketh’ என்ற நூலை மிகச்சிறப்பான முறையில் ‘மனம் போல் வாழ்வு’ என்னும் பெயரில் மொழிபெயர்த்தார். மனித எண்ணமே மனித வாழ்வைக் கட்டமைக்கின்றது. பழக்கமே மனித வாழ்வை ஒழுக்கமானதாக மாற்றுகின்றது என்னும் தத்துவக் கருத்துகளை எழுதி வெளியிட்ட நூல் இன்றளவும் பெரும்பாலான மக்களால் விருப்பமுடன் வாசிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜேம்ஸ் ஆலன் எழுதிய ‘From Poverty to Power’ என்ற நூலை ‘வலிமைக்கு மார்க்கம்’ என்ற பெயரிலும், ‘The Way to Peace’ ‘சாந்திக்கு மார்க்கம்’ என்ற பெயரிலும் வெளியிட்டார். எல்லாச் சந்தப்பத்திலும் இனிமையான, பொறுமையான, அன்பான, மன்னித்தல் குணமுடையவனாக உள்ளவர்களே மெய்ப்பொருளை உணரும் மனிதர்கள் என்று வ.உ.சி. தம்முடைய நூலில் குறிப்பிடுகிறார். பல்வேறு இலக்கியப் பங்களிப்புகளை ஆற்றிய வ.உ. சிதம்பரனாரின் நூல்கள் இன்றளவும் வாசிப்பில் இருக்க வேண்டும் என்பது அவரின் தீராத இலக்கியத் தாகத்திற்கு நாம் ஆற்றும் மரியாதை ஆகும்.

வ.உ. சிதம்பரனார் தமது சட்டப்போராட்டத்தின் மூலம் மீண்டும் சட்டப்பணியாற்ற விண்ணப்பித்தார். இவரின் நேர்மையை முன்னரே அறிந்திருந்த திரு. வாலசு என்பார் அவருக்கு அனுமதி வழங்கினார். அவரின் நினைவாகத் தம்முடைய கடைசி மகனுக்கு வாலேசுவரன் என்று பெயர் சூட்டினார். தம் வாழ்வின் இறுதிக்காலத்தை இலக்கியப் பணிகளுக்காகச் செலவிட்ட வ.உ. சிதம்பரனார் பல்வேறு நூல் பணிகளுக்கும் தம் வாழ்வை அமைத்துக்கொண்டார். தாம் வெளியிடும் ஒவ்வொரு நூலிலும் முகப்புப் பக்கத்தில், ‘இந்நூலின் எழுத்து, கட்டமைப்பு, அச்சு, மை யாவும் சுதேசியமே’ என்று குறிப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். தமது நூல் வெளியீடுகளில் உதவிய தென்னாப்பிரிக்க நாட்டின் தமிழர்கள் பெயரையும் பேரூராதீனத்தையும் முதல் ஐந்து பக்கங்களில் குறிப்பிட்டே நூலை வெளியிடுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

நாட்டுக்காகவே வாழ்ந்து தம் சொத்துகள் பலவற்றையும் இழந்து 1936ஆம் ஆண்டு தூத்துக்குடி காங்கிரசு அலுவலகத்தில் வ.உ. சிதம்பரனார் தமது இன்னுயிரை நீத்தார். சாகும் தறுவாயிலும் தமது நண்பரான மகாகவி பாரதியாரின் ‘என்று தணியும் எங்கள் சுதந்திரத் தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?’ என்ற பாடலைக் கேட்டுக் கொண்டே தம் இறுதி வாழ்வை அமைத்த வ.உ. சிதம்பரனாரின் தியாக வாழ்வை இளந்தலைமுறைக்கு இன்றைய கல்வி நிறுவனங்கள் சொல்லித் தருதல் வேண்டும்.

1972ஆம் ஆண்டு வ.உ. சிதம்பரனாரின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வண்ணம் அஞ்சல் தலையை இந்திராகாந்தி அம்மையார் வெளியிட்டுச் சிறப்பித்தார். இயக்குநர் திரு.பந்துலு என்பவர் இயக்கி, திரு.சிவாஜி கணேசன் நடித்த ‘கப்பலோட்டிய தமிழன்’ என்னும் திரைப்படம் வ.உ. சிதம்பரனாரின் பெருமைகளை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்தது.

தமிழகத்தில் தொழிலாளர் போராட்டத்தை முன்னெடுத்தவராக, சுதந்திரப் போராட்ட வீரராக, வழக்கறிஞராக, இலக்கியவாதியாக இருந்தாலும் தம் வாழ்வின் பெரும் பகுதியை இழந்து, சொத்துகளை இழந்து, நாட்டின் சுதந்திர தாகத்தை மூட்டிய மண்ணின் மைந்தரின் வாழ்வியலை வரலாறாக, சுதந்திரப் போராட்ட வரலாறாக நாம் வாசித்தல் வேண்டும். அவரின் நூல்களை மறுபதிப்புச் செய்து அவருக்கு மரியாதை அளித்துப் போற்றுதல் வேண்டும். என்று தணியும் இந்த சுதந்திரத் தாகம்? என்ற ஆர்வமுடன் காத்திருந்த வ.உ. சிதம்பரனாரை வணங்கிப் போற்றி மகிழ்வோம்.

0

பகிர:
nv-author-image

பொ. சங்கர்

கட்டுரையாளர், எழுத்தாளர். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், வேதாத்திரி மகரிசி ஆகியோரின் வாழ்வியல் சிந்தனைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தொல்லியல் சான்றுகள் தேடி விரிவான பயணங்கள் மேற்கொண்டவர். கோயமுத்தூர் யுவபாரதி மையப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தொடர்புக்கு - tamilshanker@gmail.comView Author posts

2 thoughts on “மண்ணின் மைந்தர்கள் #21 – வ.உ. சிதம்பரனார்”

  1. ஆழம் மிக்க கட்டுரை.
    சிதம்பரனாரின் வரலாற்று பார்வை பயன்மிக்கது. பாராட்டும் வாழ்த்தும் .

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *