அவர் முழுப்பெயரும் அவரைப்போலவே நீளமானது; அல்லது உயரமானது. ஆனால் சுருக்கமாக, செல்லமாக அவர் ‘அபி’ என்றே பெற்றோராலும் மற்றோராலும் அழைக்கப்பட்டார். அவர் உலகப்புகழ் பெற்ற பின்னரும் அப்படியே. தன் பெயரை அவர் அடிக்கடி மண்ணிலும் பனிக்கட்டிகள் மீதும் மண் வெட்டி போன்ற பொருள்களின்மீது கரித்துண்டுகளாலும் எழுதிப்பார்ப்பார். அவர் பெயர் அவருக்கு ரொம்பப்பிடிக்கும். அவர் செய்த பல காரியங்களினால் சில ஆண்டுகள் கழித்து உலகத்துக்கே அவரை ரொம்பவும் பிடித்துப்போனது.
அவரது பெற்றோர் அவரது தாத்தா பெயரைத்தான் அவருக்கு வைத்திருந்தார்கள். அது புனித வேதமான பைபிளிலும் இருந்த பெயர். தன் பெயரை அவர் எழுதிப்பார்க்கத் தெரிந்துகொள்வதற்குள் அவருக்கு எட்டு வயதாகியிருந்தது. அவருடைய அப்பாவுக்கு அதுகூடத்தெரியாது. அம்மாவுக்குப் படிக்கத்தெரியும் ஆனால் எழுதத்தெரியாது. வீட்டில் நிறைய வேலை இருந்தது அவருக்கு.
அபியும் அவர் சகோதரியும் தங்கள் துவக்கப்பள்ளிக்கூடத்துக்குப்போக இரண்டு மைல் நடந்துபோக வேண்டியிருந்தது. ஒவ்வொரு தவணைக்கும் ஒரு டாலரோ இரண்டோ கட்டவேண்டியிருந்தது. அது அவர்களின் அப்பாவுக்குக் கஷ்டமாக இருந்தது. அதோடு, விறகு வெட்ட, தண்ணீர் கொண்டுவர, விவசாயத்தில் உதவி செய்ய என அபிக்கு நிறைய வேலை இருந்தது.
அபிக்கு ஏழு வயதானபோது இரண்டு தலைமுறைகளாக இருந்த கெண்டக்கி மாகாணத்தைவிட்டுக் குடும்பம் வேறிடத்துக்குச் செல்லவேண்டியிருந்தது. அடிமை வியாபாரமும் வெகு ஜோராக நடந்துகொண்டிருந்தது அந்தக்காலத்தில். அடிமைகள் மிருங்களைப்போல விற்கப்பட்டார்கள், வாங்கப்பட்டார்கள். எல்லாக் கடினமான வேலைகளும் கொடுக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார்கள். அதெல்லாம் அபியின் அப்பா தாமஸுக்குப் பிடிக்கவேயில்லை. ஆனால் கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக கறுப்பர்கள் அடிமைகளாக அங்கே அவதிப்பட்டுக்கொண்டுதான் இருந்தனர். தனிமனிதக் கழிவிரக்கத்தினால் சமுதாயக் கொடுமைகளை மாற்றிவிட முடியுமா என்ன? பேசமுடியாதவர்களுக்காகவும் ஆதவற்றவர்களுக்காகவும் நீ பேசு என்று புனித பைபிள் சொல்லியிருந்தாலும் (நீதிமொழிகள் அதிகாரம் 31) பேசிவிடமுடியுமா என்ன?
புதிய இடத்தில் ஒரு சின்ன வீட்டில் அபியின் குடும்பம் குடியேறியது. அபியின் அறையில் தரை என்பது விரவிய மண்தான். அவர்கள் இருந்த வீட்டுக்கு ஜன்னல்கூடக்கிடையாது. ஏன் கதவு என்றுகூட ஒன்றும் கிடையாது. வீட்டினுள்ளே இருள்தான் நிரம்பியிருக்கும். மெழுவர்த்திகள் வாங்கி வைத்துக்கொள்ளும் அளவுக்குக்கூட வசதி கிடையாது. வீட்டின் அடுப்பிலிருந்தோ அல்லது வெளியிலிருந்தோ வெளிச்சம் வந்தால்தான் உண்டு. அரசு இங்கே கட்டிக்கொடுக்கும் ‘வீடு’களைவிட மோசமான ஒரு அமைப்பாகத்தான் அது இருந்தது.
எல்லோருமே கடுமையாகப் பகலில் உழைக்க வேண்டியிருந்த காரணத்தால் சூரியன் அஸ்தமனம் ஆகும் நேரத்திலேயே அனைவரும் விறகுக்கட்டைபோல் உறங்க ஆரம்பித்துவிடுவார்கள். இரவில் எதுவும் செய்யவேண்டிய அவசியம் இல்லாததால் விளக்கும் தேவையில்லாமல் இருந்தது.
அபி கையில் அப்பா கோடரியைக் கொடுத்தபோது அவனுக்கு வயது எட்டுதான். மரம் வெட்டுவது, தங்களது நிலத்தில் உருளைக்கிழங்கு, கோதுமை போன்றவற்றை விதைப்பது என கிட்டத்தட்ட இருபத்தி மூன்று வயதுவரை அபி கோடரியைப் பயன்படுத்தியே வாழ்க்கை ஓட்ட வேண்டியிருந்தது. ஆனால் அவனது மூளையோ கோடரியைவிடக் கூர்மையாக இருந்தது.
ஒருமுறை அபியின் தலையில் குதிரையொன்று ஓங்கி ஓர் உதைவிட்டது. பாசமாக இருக்கலாம். ஆனால் மயங்கிக்கிடந்த அபியை அப்பாதான் வந்து தூக்கிச்சென்றார். அன்று இரவு முழுக்க அபிக்கு உணர்வு திரும்பவேயில்லை. செத்துவிட்டானோ என்றுகூட நினைத்தனர். ஆனால் காலையில் அபி கண்விழித்தான்.
அபியின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இறந்துகொண்டிருந்த அவர் தன் குழந்தைகளை அழைத்து, அப்பாமீதும், ஒருவரோடு ஒருவரும், இந்த உலகத்தோடும் அன்பாகவும், நட்போடும் இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு இறந்துபோனார்.
சாரா என்ற விதவையை இரண்டாவதாக அப்பா மணந்துகொண்டார். தன் கணவரின் முதல் மனைவியின் குழந்தைகள்மீது சாரா அன்பாக இருந்தார். பல மாற்றங்களை வீட்டில் அவர் கொண்டுவந்தார். ஒரு பரண் அமைத்து அதில் அபியையும் புதிய சகோதரன் ஜானையும் (சாராவின் முதல் கணவருக்குப் பிறந்தவன்) படுத்துக்கொள்ளச் சொன்னார். வீட்டுக்கு ஓர் ஒழுங்கான கதவு அமைக்கவும் கணவரிடம் சொல்லி ஏற்பாடு செய்தார். அபியை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது, அபிக்கும்தான்.
வீட்டில் உள்ள வேலைகளையெல்லாம் செய்த பிறகு நேரம் கிடைத்தபோதெல்லாம் அபி எதையாவது படித்து வந்தான். வேலை செய்துகொண்டிருந்தாலும், வீட்டிலிருந்தாலும். படிக்கும்போது அவன் கவனம் முழுக்க படிப்பிலேயே இருக்கும். தன்னைச்சுற்றி யார் இருக்கிறார்கள், என்ன நடக்கிறது என்றெல்லாம் பார்க்கவே மாட்டான். கருமமே கண்ணாயினார் என படித்துக்கொண்டிருப்பான்.
ஆனால், புத்தகங்கள் அரிதாகவே கிடைத்தன. தான் வந்தபோது தன்னோடு பல புத்தகங்களையும் அவன் சித்தி எடுத்து வந்திருந்தாள். அபிக்கு அது ரொம்ப வசதியாகப்போனது. அந்தப் புத்தகங்களையெல்லாம் அவன் திரும்பத்திரும்பப் படித்தான். புனித பைபிள், பில்க்ரிம்ஸ் ப்ராக்ரஸ் என்ற புகழ்பெற்ற நாவல், ஈசாப் கதைகள் – இப்படிப் படித்தான். திரும்பத்திரும்ப எழுதிப்பார்த்து எழுதுவதிலும் நிபுணனானான். பக்கத்து வீட்டுக்காரர்களெல்லாம் கடிதங்கள் எழுத அபியையே அழைத்தனர்.
அபி ரொம்ப இரக்க குணம் கொண்டவனாக இருந்தான். ஒருமுறை ஓர் ஆமையின் முதுகில் சில பையன்கள் தீவைக்க முயன்றபோது அதைத் தடுத்தான். ஒரு எறும்பாக இருந்தாலும் நம் உயிரைப்போல அதன் உயிரும் முக்கியம் என்று அவர்களுக்கு அறிவுரை சொன்னான். இயேசு போதித்த அன்பையே அவனும் எடுத்துச்சொன்னான்.
ஒருமுறை பள்ளிக்கூடத்தில் குறிப்பிட்ட சொல்லில் என்னென்ன எழுத்துக்கள் உள்ளன என்று ஆசிரியர் ஒரு மாணவியைக் கேட்டபோது அவள் தவறாகச் சொன்னாள். ‘ஐ’ என்ற ஒரு எழுத்தை அவள் விட்டுவிட்டதை அவளுக்கு உணர்த்த தனது கண்ணைக் காட்டினான் அபி.
பதினாறு வயதானபோதே அபி ஆறடி இரண்டு அங்குல உயரமாக இருந்தான். ஒருமுறை ஓஹியோ நதியில் இரண்டுபேரை தன் சிறு படகில் ஏற்றிச்சென்று கரைசேர்த்தான். இருவரும் ஆளுக்கு அரை டாலர் கொடுத்தனர். அபியால் தன் கண்களையே நம்பமுடியவில்லை. ஒரே நாளில் ஒரு டாலரா?
ஒரு நாளில் ஒரு டாலர் சம்பாதித்ததற்கே அவ்வளவு சந்தோஷப்பட்ட அபிதான் பின்னாளில் ஓர் ஆண்டுக்கு 25,000 டாலர்கள் சம்பாதித்தார். அதுவும் நியாயமான முறையில். ஆபிரஹாம் லிங்கன் என்ற பெயர்கொண்ட அமெரிக்க ஜனாதிபதியாக!
(தொடரும்)
_______
இக்கட்டுரை எழுதப்பயன்பட்ட நூல்: Abraham Lincoln For Kids. Janis Herbert. Chicago Review Press. 1956.
Wow
அருமை. சுவாரஸ்யமாக உள்ளது. தொடருக்காக waiting.
Nahvi