வரலாறை ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்?
இந்தியாவுக்குச் சென்று பணிபுரியவிருப்பவர்களுக்கு உலக வரலாற்றில் அற்புதமான இந்தியாவின் இடம் என்ன… எந்த முக்கியமான இடத்தை அது பெற்றிருக்கவேண்டும் என்பதை நான் விளக்கிச் சொல்லவிரும்புகிறேன். மேலும் இந்தப் பல்கலைக்கழகத்தில் இருக்கும் மற்றவர்களுக்கு இன்னொன்றைச் சொல்லவிரும்புகிறேன். கிரேக்கர், ரோமானியர், சாக்ஸன்கள், செல்டிக்கள் ஆகியோரின் வரலாறு கொஞ்சம் போல் பாலஸ்தீனியர், எகிப்தியர், பாபிலோனியர் ஆகியவர்களின் வரலாறை மட்டுமே நாம் உலக வரலாறாகப் படித்துவிட்டு, நமக்கு மிகவும் நெருங்கிய அறிவார்ந்த உறவுகளான இந்திய ஆரியர்கள் பற்றிப் படிக்காமல் விட்டால் நம் உலக வரலாற்று அறிவு முழுமையற்றதாகவே ஆகிப் போகும்.
அற்புதமான மொழியான சமஸ்கிருதத்தை வடிவமைத்தவர்கள் ஆரியர்கள். நமது அடிப்படைக் கோட்பாடுகளின் உருவாக்கத்தில் சக பயணிகளாக இருப்பவர்கள். இயல்பாக உருவாகி வந்திருக்கும் பல மதங்களின் பிதாமகர்கள் (தந்தை); புராண, ஐதீக மரபுகளில் அதி சிறப்பான திறப்புகளை வெளிப்படுத்தியவர்கள்; அதி நுட்பமான தத்துவங்களை முன்மொழிந்தவர்கள்; மிக மிக விரிவான சட்ட திட்டங்களை வகுத்தளித்தவர்கள் இந்த ஆரியர்கள். இவர்களைப் பற்றிப் படிக்காவிட்டால் நம் உலக அறிவு குறைவுடையதாகவே ஆகிவிடும்.
குறுகலான சிந்தைகள் இல்லாத, தாராளமான கல்வியில் பல விஷயங்கள் இருந்தாகவேண்டும். நாம் நமது பள்ளிகள், கல்லூரிகளில் கற்றுத் தரும் ஒட்டுமொத்த வரலாறும் இந்தியா பற்றிய ஒரே ஒரு அத்தியாயத்துக்குக் கூட ஈடாகமுடியாது. அதாவது, இந்திய வரலாறை முறையாகப் புரிந்துகொண்டு, விளக்கிச் சொன்னால் அதற்கு இணையாக நம்மிடம் இருக்கும் எதுவுமே ஈடாகாது.
வரலாற்று ஆசிரியர்கள் சேகரித்து நம் முன் கொட்டும் மலைபோன்ற தகவல்கள் எல்லாம் வரலாற்றுப் படிப்பு என்பதை மிகவும் சிரமமானதாக சாத்தியமற்றதாக ஆக்கிவருகின்றன. எனவே உண்மையான வரலாற்றாசிரியர் என்பவர், சரியான விகிதத்திலான தகவல்களைக் கண்டடையவேண்டும். அவற்றை கலை நயத்துடன் தொகுக்கவேண்டும். வரலாற்றில் நாம் கடந்துவந்திருக்கும் இடத்தின் அடிப்படையில் ஒதுக்கவேண்டியவற்றை மிகவும் கறாராக ஒதுக்கிவிடவேண்டும். வெறுமனே வரலாற்றுத் தகவல்களைப் பட்டியலிடும் ஒருவரையும் எது சரியான வரலாற்றுத் தகவல் என்பதை மிகச் சரியான இனம் காணும் உண்மையான வரலாற்று ஆசிரியரையும் வித்தியாசப்படுத்திக் காட்டும் விஷயம் அதுவே. வெறுமனே பட்டியலிடும் நபருக்கு எல்லா தகவல்களுமே – அதிலும் அவரே அவற்றைக் கண்டடைந்திருந்தால் – எல்லாமே முக்கியமானதாகவே தோன்றும்.
புருஷ்யாவின் வரலாற்றை எழுதியவர்கள் எல்லாம் மாமன்னர் ஃப்ரெடரிக்கின் சட்டையில் இருந்த பொத்தான்களைப் பற்றி மறக்காமல் எழுதியதைப் பார்த்து மனம் சலித்த அவர் அவருடைய காலத்தில் உண்மையான வரலாற்று ஆசிரியர் எப்போது உருவாவார் என்று கசந்த மனதுடன் வருந்திச் சொன்னது இதைத்தான். ‘வரலாற்று ஆவணங்கள் முழுவதையும் அலசிச் சலித்துப் பார்த்துவிட்டேன். எந்தவொரு தகவலும் எந்த மன்னரின் பெயரையும் பட்டங்களையும் சொல்லி வருங்காலத் தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் அளவுக்கு முக்கியமானதாகவே இல்லை’ என்று கார்லைல் இப்படியான பட்டியலிடும் வரலாறுகளைப் படித்துச் சலித்துப் போய் சொன்னதும் அதுவே. அவருக்கு அப்படியான பார்வை இருந்த பின்னரும் அவர் எழுதிய வரலாறுகளிலுமேகூட பெரும்பாலானவற்றை மறைத்து ஒதுக்கிவிடலாம் என்ற வகையிலேயே இருக்கவும் செய்கின்றன!
நாம் ஏன் வரலாற்றைத் தெரிந்துகொள்ளவேண்டும்?
நவீன தாராளக் கல்வியில் வரலாற்றுப் படிப்புக்கு முக்கியமான இடம் ஏன் தரவேண்டும்?
ஏனென்றால் நாம் அனைவரும், ஒவ்வொருவரும் இப்போது யாராக இருக்கிறோமோ அந்த இடத்துக்கு எப்படி வந்து சேர்ந்திருக்கிறோம் என்பதை நிச்சயம் தெரிந்துகொண்டாகவேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு காலகட்ட மனிதரும் ஒரே தொடக்கப் புள்ளியில் இருந்து அனைத்தையும் மீண்டும் மீண்டும் சிரமப்பட்டுத் தெரிந்துகொண்டாகவேண்டிய கஷ்டம் இல்லாமல் ஆகும். மேலான, உன்னதமான இலக்குகளை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல அதுவே உதவும்.
ஒரு குழந்தை வளர்ந்து வரும்போது தன் தந்தை அல்லது தாத்தாவிடம் தாம் வசிக்கும் வீட்டைக் கட்டியது யார்..? காட்டைச் சீர்திருத்தி உணவு தரும் வயலாக்கியது யார்? என்றெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்வதுண்டு. நாமும் அதுபோலவே, எப்போது இங்கு வந்தோம்… நம்முடையவை என்று நாம் சொல்பவையெல்லாம் நமக்கு எப்படி வந்து சேர்ந்தன என்று வரலாற்று ஆசிரியர்களிடம், கேட்டுத் தெரிந்துகொள்கிறோம்.
பயனுள்ள, வியக்கவைக்கும் பல விஷயங்களை வரலாறு நமக்குச் சொல்லித்தரும். பாட்டிகள் மற்றும் அம்மாக்களிடமிருந்து குழந்தைகள் தெரிந்துகொள்வதுபோன்ற பல்வேறு வம்பு வழக்குகளைச் சொல்லித் தரும். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக, நமக்கு முன்னே நடந்தவை என்ன… நம் முன்னோர்கள் யார்… நமது வம்ச வழி எப்படியெல்லாம் வந்திருக்கிறது என்பவற்றை வரலாறு முக்கியமாகக் கற்றுத் தந்தாகவேண்டும்.
நமது (ஐரோப்பியர்களுடைய) அறிவுத்துறை சார்ந்த முன்னோர்கள் என்று பார்த்தால் யூதர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள், சாக்ஸன்களே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பாலஸ்தீன, கிரேக்க, ரோமானிய, ஜெர்மானிய பகுதிகளில் வாழ்ந்த நம் முன்னோர்களுக்கு நாம் பட்டிருக்கும் நன்றிக்கடனைப் பற்றி ஐரோப்பாவில் இருக்கும் ஒருவருக்குத் தெரியவில்லையென்றால் அந்த நபரை நாம் கற்றறிந்தவராக மதிக்கவே மாட்டோம். அப்படியான நபருக்கு உலகின் கடந்த கால வரலாறென்பது மிகப் பெரிய அறியாமையாக இருளாகவே இருக்கும். அவருக்கு முன்பாக இருந்தவர்கள் பற்றியும் அவர்கள் உருவாக்கித் தந்திருப்பவை பற்றியும் எதுவும் தெரிந்திருக்காது. எனவே அவருக்குப் பிந்தைய சந்ததிகளாக வரப்போகிறவர்களுக்கு அவரால் எதையும் உருவாக்கித் தரவும் முடியாமலேயே இருக்கும். அவருக்கு வாழ்க்கை என்பது மணல் கயிறு போன்றதாகவே இருக்கும். உண்மையில் அந்தக் கயிறு கடந்த காலச் சிந்தனைகளுடன் இதயங்களைத் துடிக்கவும் அதிரவும் வைக்கும் மின் ஆற்றல் மிகுந்த சரடாக இருந்திருக்கவேண்டியது. வருங்காலத்தை நம்பிக்கை மிகுந்ததாக ஆக்கியிருக்கவேண்டியதும் கூட.
மதம் பற்றிய பார்வையில் இருந்து ஆரம்பிப்போம்.
யூத இனம் பற்றி எதுவும் தெரியாமல் கிறிஸ்தவ மதத்தின் வரலாறு பற்றி எதையுமே ஒருவர் தெரிந்துகொள்ளவே முடியாது. யூத இனம் பற்றித் தெரிந்துகொள்ள பழைய ஏற்பாட்டை ஒருவர் பிரதானமாகப் படித்தாகவேண்டும். யூதர்களுக்கும் பழைய உலகின் பிற பகுதியினருக்கும் இடையிலான உண்மையான தொடர்பைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் யூதர்களின் தனிப்பட்ட விசேஷ சிந்தனைகள் என்ன… பிற செமிட்டிய இனங்களுடன் (குலங்களுடன்) என்னென்ன சிந்தனைகள் அவர்களுக்கு பொதுவாக இருந்தன… பழம் பெரும் நகரங்களுடனான வரலாற்றுத் தொடர்புகளின் மூலம் என்னவிதமான மதம் சார்ந்து என்னென்ன சிந்தனைத் தூண்டல்களைப் பெற்றிருக்கிறார்கள்… என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள பாபிலோன், நினேவா, ஃபொனீஷியா, பாரசீகம் ஆகிய பகுதிகளின் வரலாறு பற்றியும் போதிய கவனம் செலுத்தியாகவேண்டும்.
இவையெல்லாம் தூர தூர தேசங்களாகவும் மறைந்து மறக்கப்பட்ட மக்களாகவும் தோன்றலாம். ‘புதைந்து அழிந்துபோனவர்கள் தமது வரலாற்றை புதைத்து அழித்துக் கொள்ளட்டும். இந்த மம்மிகள் (மறைந்துபோனவை) நமக்கு கற்றுத் தர என்ன இருக்கின்றன’ என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால் எதுவும் மறையவில்லை. பல விஷயங்கள் வரலாற்றில் தொடர்ந்து அற்புதமாக நீடித்துவருகின்றன. இங்கு இந்தப் பல்கலை அரங்கில் கூடியிருக்கும் நம்மிடையேகூட பாலிலோனியா, நினேவா, எகிப்து, ஃபொனீஷியா, பாரசீகம் ஆகியவற்றிலிருந்து நாம் பெற்ற பல விஷயங்கள் இருக்கின்றன.
நாம் அனைவரும் கைக்கடிகாரம் அணிந்திருக்கிறோம். அதற்கு, ஒரு மணி நேரத்தை 60 நிமிடங்களாகப் பகுத்துச் சொன்ன பாபிலோனியர்களுக்கு நாம் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம். அவர்களுடைய அந்தப் பகுப்பு, குறைகள் உடையதாக இருந்திருக்கலாம். ஏனென்றால் அது கிரேக்கர்கள் வழியாகவும் ரோமானியர்கள் வழியாகவும் நமக்கு வந்து சேர்ந்திருக்கின்றன. அவர்களுக்கு பாபிலோனில் இருந்தே கிடைத்திருக்கிறது. அறுபதை அடிப்படையாகக் கொண்ட கணிதப் பகுப்பு பாபிலோனியர்களுக்கே உரித்தானது. பாபிலோனில் இருந்து ஹிப்பார்கஸ் அதை கி.மு.150 வாக்கில் பயன்படுத்த ஆரம்பித்தார். தாலமி கி.பி.150-ல் அதை மேலும் பெருமளவில் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தார். மற்ற அனைத்தையும் அழித்த ஃபிரெஞ்சுக்காரர்கள் நமது கடிகாரங்களின் முள் தகடை ஒன்றும் செய்யவில்லை. பாபிலோனிய அறுபது நிமிடப் பகுப்பையும் ஒன்றும் செய்யவில்லை.
கடிதம் எழுதுபவர்கள் எல்லாருமே ரோமானியர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் கடன்பட்டவர்களே. ஃபொனீஷியர்களிடமிருந்து கிரேக்கர்கள் தமது எழுத்துகளை வடிவமைத்துக் கொண்டனர். ஃபொனீஷியர்கள் அதை எகிப்திலிருந்து கற்றுக் கொண்டனர். அந்த எழுத்து வடிவம் முழுமையடையாததாக இருக்கலாம். அந்த எழுத்துகளை ஆராயும் அனைவரும் அதைச் சொல்வார்கள். இருந்தும் நாம் எழுதும் ஒவ்வொரு எழுத்துக்கும் பழங்கால ஃபொனீஷியர்கள், எகிப்தியர்கள் ஆகியோருக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறோம். நாம் எழுதும் ஒவ்வொரு எழுத்தின் பின்னாலும் எகிப்திய பழங்கால வரிவடிவ மூலாதாரம் மறைந்துநிற்கிறது.
(தொடரும்)