உலக மொழிகளின் சக உதர மொழி : சம்ஸ்கிருதம்
ஐரோப்பியரான நாம் பாரசீகர்களுக்கு எதிலெல்லாம் கடன்பட்டிருக்கிறோம்? அவர்கள் புதியவற்றைக் கண்டுபிடிக்கும் திறமைகள் கொண்டவர்கள் அல்ல. அவர்களுக்குத் தெரிந்தவை எல்லாம் பெரும்பாலும் அண்டையில் இருந்த பாபிலோனியர்கள் மற்றும் அஸிரியர்களிடமிருந்து கற்றுக் கொண்டவையே. இருந்தும் பாரசீகர்களுக்கும் நாம் சில விஷயங்களில் கடமைப்பட்டிருக்கிறோம். முதலாவதாக, கிரேக்கர்களால் தோற்கடிக்கப்பட அவர்கள் தம்மை அனுமதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை மாராதானில் கிரேக்கர்களை பாரசீகர்கள் தோற்கடித்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்… அவர்கள் கிரேக்கர்களை அடிமைப்படுத்தியிருந்தால் பழம் பெரும் கிரேக்க பாரம்பரியம் அழிக்கப்பட்டிருக்கும். எனினும் மனித குல வளர்ச்சியில் இந்தப் பங்களிப்பென்பது தன் விருப்பமற்ற மறைமுகப் பங்களிப்பு என்றே சொல்லப்படும். ஆனால், கிரேக்கர்கள், ரோமானியர்கள் மட்டுமல்ல; சாக்ஸன்கள், ஆங்கிலோ சாக்ஸன்கள் ஆகியோர் கூட பார்ஸிகளாக, நெருப்பை வழிபடுபவர்களாக ஆகியிருப்பார்கள். மயிரிழையில் அப்படி நடக்காமல் தப்பியிருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டவே இதைச் சொல்கிறேன்.
பாரசீகர்கள் சுயமாக நமக்களித்த பரிசு ஒன்று உண்டு. வெள்ளி – தங்கம் என இரட்டை உலோகம் சார்ந்த நமது நாணயச் செலாவணியில் அந்த இரண்டு உலோகங்களுக்கிடையிலான பண மதிப்பு சார்ந்த கணிப்புகளுக்கு நாம் பாரசீகர்களுக்கே நன்றி சொல்லவேண்டும். உண்மையில் பாபிலோனியாவில்தான் அந்த இரண்டுக்குமிடையிலான தொடர்பு நிர்ணயமானது என்றாலும் நடைமுறை மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை அந்தக் கணக்கீடு, பாரசீகப் பேரரசில்தான் எட்டியது. அங்கிருந்துதான் ஆசியாவில் இருந்த கிரேக்க குடியேற்றப் பகுதிகளுக்குப் பரவியது. அதன் பின் ஐரோப்பாவுக்குப் பரவியது. லேசான மாறுதலுடன் அந்த மதிப்பீடுதான் இன்றும் நம்மால் பின்பற்றப்பட்டுவருகிறது.
ஒரு தோலண்ட் அறுபது மின்களாகவும் ஒரு மினா அறுபது ஷீகல்களாகவும் பகுக்கப்பட்டன. இந்த இடத்திலும் அறுபதை அடிப்படையாகக் கொண்ட பாபிலோனியக் கணக்கீடுதான் இதற்கு ஆதாரமாக இருப்பதைக் காண்கிறோம். அறுபது என்ற எண் பல எண்களால் வகுபடக்கூடியது. ஷீகல் என்பதை கிரேக்கத்தில் ஸ்டேடர் என்று அழைத்தனர். பாரசீக தங்க நாணயம் போலவே ஏதெனிய தங்க நாணயமும் குரோசஸ், அலெக்சாண்டர் ஆகியோரின் காலகட்டம் வரையிலும் செல்வாக்குடன் இருந்தது. ஸ்டேடர் என்பது தங்க மினாவின் 60-ல் ஒரு பங்கு மதிப்பு கொண்டதாக இருந்தது. நமது சாம்ராஜ்ஜியத்திலும் கிட்டத்தட்ட இதற்கு இணையான மதிப்பீடே இருந்தது. வெள்ளிக்கும் தங்கத்துக்கும் இடையிலான விகிதம் I3 அல்லது I3.33 க்கு I. வெள்ளி ஷீகலை I3 க்கு I0 என்று ஆக்கினால் நம்முடைய ஃப்ளோரினுக்கு ஏகதேசம் சமமாக இருக்கும். பாதி வெள்ளி ஷீகல் என்பது ட்ரச்மாவுக்கு சமம். இந்த அடிப்படையில் பார்த்தால் நமது ஷில்லிங்கின் மூல ஆதாரம் இதுவே.
வெள்ளி, தங்கம் இவற்றின் மதிப்பை இரண்டுக்கும் இடையிலான தொடர்பின் அடிப்படையில் நிர்ணயிக்க மேற்கொள்ளும் முயற்சிகள் மிகப் பெரிய தவறான செயல் என்று ஒருவர் சொல்லக்கூடும். எனினும் உலகம் எந்த அளவுக்கு ஒன்றை ஒன்று சார்ந்ததாக இருந்திருக்கிறது. நல்லதோ கெட்டதோ… நாம் யாராக இருக்கிறோமே அது நம்முடைய கடின உழைப்பினால் மட்டுமே அல்ல; எந்த ரத்தம் ஓடிய நாளங்களைக் கொண்டவர்களாக இருந்தாலும் என்னவிதமான எலும்புகளைக் கொண்டவர்களாக இருந்தாலும் நம்முடன் தொடர்பில் வந்த மற்றவர்களாலுமேதான் நம்முடையதாக இருப்பவையெல்லாம் உருவாகிவந்திருக்கின்றன என்பதையே இவை எடுத்துக்காட்டுகின்றன.
ஒரு மதத்தின் தோற்றம், வளர்ச்சி பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளாமல் அதைப் பற்றிய முழுமையான அறிவை ஒருவர் ஒருபோதும் பெறவே முடியாது. அதுபோலவே மெசபடோமியர்களின் க்யூனிஃபார்ம் எழுத்துகள், எகிப்தின் ஹியரோக்லிஃபிக் மற்றும் ஹியராட்டிக் படைப்புகள், பாரசீக மற்றும் ஃபொனீஷியர்களின் வரலாற்று நினைவுச் சின்னங்கள் இவையெல்லாம் பற்றித் தெரிந்துகொள்ளாமல் நமது அறிவார்ந்த சிந்தனைப் புலங்களையும் வாழ்க்கையையும் பற்றி எதையும் முழுமையாகத் தெரிந்துகொள்ளமுடியாது.
மத அடிப்படையில் நாம் யூத அல்லது செமிட்டிக் வேர்கள் கொண்டவர்கள். தத்துவ அடிப்படையில் கிரேக்க வேர்கள் கொண்டவர்கள். நம் அரசியலின் வேர்கள் ரோமானிய சாம்ராஜியத்தில் ஊன்றியிருக்கின்றன. நமது தார்மிக ஒழுக்க ஒழுங்குகள் சாக்ஸனிய வேர்கள் கொண்டவை. இந்த அடிப்படையில் பார்த்தால் கிரேக்க, ரோமானிய, சாக்ஸனியர்களின் வரலாறு பற்றிய நம் அறிவு அல்லது கிரேக்கத்தில் இருந்து இத்தாலிக்கும் ஜெர்மனியில் இருந்து பிற பகுதிகளுக்கும் பாய்ந்திருக்கும் நாகரிகத்தின் போக்கு பற்றிய நம் அறிவுதான் தாராளமான, நவீன, விஞ்ஞான பார்வை கொண்ட நம்முடைய வரலாற்றுக் கல்வியின் அடிப்படையாகத் திகழ்கிறது.
இந்த அளவுக்குத்தான் இவை பற்றிச் சொல்லமுடியும் என்று ஒருவர் சொல்லக்கூடும். உலகின் மகத்தான வரலாற்று சாம்ராஜ்ஜியங்களில் வாழ்ந்த நமது உண்மையான ஆன்மிக முன்னோர்கள் பற்றி நம்மால் தெரிந்துகொள்ள முடிந்த அனைத்தையும் நாம் தெரிந்துகொண்டாகவேண்டும். எகிப்தியர்கள், பாபிலோனியர்கள், ஃபொனீஷியர்கள், யூதர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள், சாக்ஸன்கள் ஆகியோரிடம் நாம் கடன்பட்ட அனைத்துக்கும் நாம் நன்றி உணர்வுடன் இருந்தாகவேண்டும். ஆனால், இந்தியாவை எதற்காக இங்கு கொண்டுவரவேண்டும்?
நல்ல கல்வி பெற்றதாகச் சொல்லிக்கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் ஏற்கெனவே கற்றுத் தேறவேண்டியவை ஏராளம் இருக்கும் நிலையில் கூடுதல் சுமையாக இந்தியாவைப் பற்றியும் ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்? சிந்து மற்றும் கங்கை நதி தீரங்களில் வாழ்ந்த பூடகமான நபர்களிடமிருந்து நாம் எதைக் கடனாகப் பெற்றிருக்கிறோம். அவர்களுடைய மன்னர்கள், அவர்களின் காலகட்டங்கள், அவர்கள் செய்தவை பற்றியெல்லாம் ஏற்கெனவே அதிக சுமையாகிவிட்டிருக்கும் நம் நினைவுகளில் மேலும் திணித்துக்கொள்ள என்ன அவசியம் இருக்கிறது?
இந்தக் கேள்வியில், புகாரில் ஓரளவு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. யூதர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள், சாக்ஸன்கள் எந்த அளவுக்கு நாம் ஐரோப்பியர்களுக்கு அறிவார்ந்த மூதாதைகளாக இருக்கிறார்களோ அதுபோல் பழங்கால இந்தியாவில் வாழ்ந்தவர்கள் நம்முடன் தொடர்புடையவர்கள் அல்ல. எனினும் அவர்கள், நாம் எந்த மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ அதனுடன் தொடர்புடையவர்கள். அவர்களுடைய சிந்தனை, வரலாற்று நிகழ்வுகள் (பதிவுகள்) எல்லாம் பிற அனைத்து வரலாற்று ஆவணங்களைவிடவும் மிக மிகப் பழமையானவை. அவையெல்லாம் மிக அற்புதமான முறையில் நாம் படித்துப் புரிந்துகொள்ளும்வகையில் நம் கைகளுக்குப் பாதுகாப்பாகக் கொண்டுவந்து சேர்க்கப்பட்டிருக்கின்றன. வேறு எதிலிருந்தும் தெரிந்துகொள்ளமுடியாத பாடங்களை இவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளமுடியும்.
நமது அறிவார்ந்த மூதாதை மரபில் விடுபட்டிருக்கும் கண்ணிகளையும் இடைவெளிகளையும்விட மிக முக்கியமான மனிதக் குரங்குக்கும் மனிதருக்கும் இடையிலான பரிணாமத் தொடர்பில் விடுபட்டிருக்கும் பல முக்கியமான இணைப்புகளையும் நாம் பூர்த்திசெய்துகொள்ளமுடியும்.
பழம்பெரும் இந்திய இலக்கியங்கள் பற்றி மட்டுமே இங்கு பேசவில்லை. அதையும்விட மிகப் பழமையான சம்ஸ்கிருதம் என்ற இந்தியாவின் மொழியைப் பற்றிப் பேசுகிறேன். கிரேக்கம், லத்தீன், ஆங்கிலோ சாக்ஸன் மொழிகளின் மூல மொழி சம்ஸ்கிருதம் என்று இன்று யாரும் சொல்வதில்லை. முன்பு அப்படிச் சொல்லப்பட்டது. ஆனால், கிரேக்கம், லத்தீன், ஆங்கிலோ சாக்ஸன் மொழிகள் எந்த மூல மொழியில் இருந்து கிளை பிரிந்தனவோ அதிலிருந்து உருவான ஒரு கிளை மொழிதான் சம்ஸ்கிருதம் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. இந்த மொழிகள் மட்டுமல்ல; ட்யூடானிக், செல்டிக், ஸ்லோவேனிக் மட்டுமல்ல பாரசீகம் மற்றும் அர்மீனிய மொழிகள் அனைத்துமே அப்படியாகக் கிளைபிரிந்தவையே.
இப்படியான நிலையில் ஒரு வரலாற்று ஆசிரியரின் பார்வையில் சம்ஸ்கிருதத்துக்கு மிக அதிக முக்கியத்துவத்தையும் அக்கறையையும் தாக்கூடியதாக இருக்கும் விஷயம் என்ன?
முதலாவதாக அதன் தொல் பழமை. அது கிரேக்க மொழியையும்விடத் தொன்மையானது என்பது நமக்குத் தெரியும். ஆனால், இந்த கால அடிப்படையிலான வெறும் தொன்மையைவிடவும் அதி தொன்மையான வழிமுறையில் அற்புதமாகப் பாதுகாக்கப்பட்டு நம் கைகளில் தரப்பட்டிருக்கிறது. கிரேக்கம், லத்தீன் பற்றி பல நூற்றாண்டுகளாக உலகோருக்குத் தெரியும். அவை இரண்டுக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பதும் தெரியும். ஆனால் இந்த ஒற்றுமை எப்படி ஏற்பட்டது? இதை எப்படி விளக்குவது? சில நேரங்களில் கிரேக்கச் சொல் ஒன்றின் புரியாத அர்த்தத்தை லத்தீன் சொல் ஒன்று புரியவைக்கும். சில நேரங்களில் லத்தின் வார்த்தையின் வேர்ச்சொல் குறித்து கிரேக்கம் புதிய பார்வையை முன்வைக்கும்.
கோதிக் மற்றும் ஆங்கிலோ சாக்ஸன் போன்ற ட்யூடானிக் மொழிகள், பழங்கால செல்டிக், ஸ்லோவேனிக் மொழிகள் பற்றிப் பின்னர் படித்துத் தெரிந்துகொள்ள ஆரம்பித்தோம். இவை அனைத்தும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்பது புரியவந்தது. ஆனால் இந்த ஒற்றுமையும் தொடர்பும் எப்படி ஏற்பட்டன… அதோடு இந்த மொழிகளுக்கிடையே எப்படி மிக மிகத் தீவிரமான வேறுபாடுகள் ஏற்பட்டன என்பதையெல்லாம் விளக்கவே முடியவில்லை. மிகவும் புதிராகவே இருக்கும் இந்த விஷயங்கள், பல்வேறு அறிவியல் அடிப்படையற்ற, துளியும் பொருத்தமற்ற யூகங்களுக்கு வழிவகுத்தன.
இந்த நேரத்தில்தான் சம்ஸ்கிருதம் களத்தில் புகுந்தது. இந்தப் புதிரான ஒற்றுமைகள், வேற்றுமைகள் அனைத்தின் மீதும் ஒளியைப் பாய்ச்சியது. இவையெல்லாம் அந்நிய மொழிகள் அல்ல என்பது தெளிவானது. ஒவ்வொரு மொழிக்கும் அதனதன் கிளை இடம் உறுதிப்படுத்தப்பட்டது. சம்ஸ்கிருதமே இந்த மொழிகள் அனைத்தின் சக உதர கிளை மொழி. இந்த மொழிக் குடும்பத்தின் பல மொழிகள் மறந்துவிட்ட விஷயங்கள் பலவற்றை சம்ஸ்கிருதம் விளக்கியது. பிற மொழிகள் அனைத்துக்கும் தமக்கென்று சொல்ல தனி வரலாறு இருக்கவே செய்கின்றன. இந்த வரலாறுகள் எல்லாம் சேர்ந்தே மனித சிந்தனையின் ஒரு அத்தியாயம் எழுதப்பட்டிருக்கிறது. இது ஒருவகையில் யூத, கிரேக்க, லத்தீனிய, சாக்ஸனிய அத்தியாயங்களைவிடவும் சில அம்சங்களில் மிக மிக முக்கியமானது.
(தொடரும்)