ஆயிரம் யாகங்களைவிட உயர்ந்தது ஒரு சத்திய வாக்கு
இன்னொரு காவியமான மஹாபாரதத்திலும் சத்தியத்துக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் காட்டப்படுவதைப் பார்க்க முடிகிறது. ஒருமுறை கொடுத்த வாக்குறுதிகளுக்கு அடிமைபோல், விசுவாசமாக, முழுமையாகப் பணிந்து நடப்பதையும் பார்க்க முடிகிறது. மஹாபாரதக் கதையின் மிக முக்கியமான சம்பவங்களில் ஒன்றான பீஷ்மரின் மரணம், ‘பெண்களைக் கொல்லமாட்டேன் (பெண்களுடன் போரிட மாட்டேன்)’ என்று அவர் கொடுத்த வாக்குறுதியினால்தான் நடக்கிறது. அவர் பெண் என்று நினைத்துப் போரிட மறுத்து நின்ற சிகண்டியால் கொல்லப்படுகிறார்.
இந்து சட்ட நூல்கள், பிந்தைய படைப்புகள் என எதை எடுத்துக்கொண்டு பார்த்தாலும் அனைத்திலும் சத்தியத்துக்குத் தரப்படும் மிக உயரிய மரியாதையைப் பார்க்கமுடியும்.
சில நேரங்கள் பொய் சொல்ல அனுமதிக்கப்படுவதும் உண்டு. பொய் சொல்பவர்கள் இந்திய நீதிமான்களால் மன்னிக்கப்படுவதும் உண்டு என்ற உண்மைகளையும் நாம் சொல்லித்தான் ஆகவேண்டும். ‘கோபம், மிகுதியான சந்தோஷம், பயம், வலி அல்லது சோகம் ஆகியவற்றினால் சொல்லப்படும் பொய்கள், குழந்தைகள் அல்லது முதியவர்கள் சொல்லும் பொய்கள், மன மயக்கத்தில் இருப்பவர்கள், மது போதையில் இருப்பவர்கள், தீயவர்கள் ஆகியோர் சொல்லும் பொய்கள் எல்லாம் அவர்களுக்குப் பெரும் வீழ்ச்சியைத் தருவதில்லை. அவை மன்னிக்கத் தகுந்த குற்றமே… மாபெரும் குற்றம் அல்ல என்று கெளதமர் சொல்லியிருக்கிறார்.
இது பொதுப்படையான அறிவிப்புதான். இதிலும் கூட ஒருவித நேர்மை இருக்கிறது. மஹாபாரதத்தில் இது மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படுகிறது. மஹாபாரதத்தில் உண்மை சொன்னதற்காகத் தண்டனை பெற்றதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. சத்தியவாதின் – சத்தியம் மட்டுமே பேசுபவன் என்று புகழப்படும் கெளசிகரின் கதை இடம்பெற்றிருக்கிறது. அவர் சத்தியத்தைப் பேசியதனால் நகரத்துக்குச் செல்கிறார். சிலர் காட்டுக்குள் வேகமாக ஓடிச் செல்வதைப் பார்த்திருக்கிறார். பின்னாலேயே தஸ்யு – கொள்ளையர்கள் துரத்தி வந்திருக்கிறார்கள். கெளசிகரிடம் அவர்கள் எங்கே என்று கேட்டபோது காட்டுக்குள் எந்தத் திசையில் சென்றார்கள் என்ற உண்மையைச் சொல்லிவிட்டார். கொள்ளையர்கள் தப்பி ஓடியவர்களைத் தேடிப் பிடித்துக் கொன்றுவிட்டார்கள். அதற்குக் காரணமான கெளசிகர், உண்மையைச் சொன்ன நிலையிலும், நரகத்துக்குச் செல்ல நேர்ந்தது. உண்மையைச் சொன்னால் தீமை விளையும்; பொய்யைச் சொன்னால் குறையற்ற நன்மை விளையுமென்றால் அந்த இடத்தில் மட்டும் பொய்யைச் சொல்லலாம் என்றும் இந்திய நீதி நூல்கள் சொல்கின்றன.
ஹிந்துக்கள் அர்ச்சக அமைப்பினால் வழிநடத்தப்படுபவர்கள்; யாகங்கள், சடங்கு சம்பிரதாயங்கள் மீது மிகுந்த அர்ப்பண உணர்வு கொண்டவர்கள் என்று தோன்றக்கூடும். ஆனால், மஹாபாரத ஆசிரியர் என்ன சொல்கிறாரென்றால்,
‘ஆயிரம் யாகங்களின் (அஸ்வமேத யாகங்களின்) பலனை ஒரு தட்டிலும் சத்திய வாக்கு ஒன்றை மறு தட்டிலும் வைத்தால் சத்திய வாக்கே ஆயிரம் யாகங்களையும்விட பலன் கூடியதாக இருக்கும்’.
மன்னர் துஷ்யந்தரால் கைவிடப்பட்ட சகுந்தலை, தன்னையும் அவர்களுடைய குழந்தையை அடையாளம் தெரியவில்லையென்று துஷ்யந்தர் சொன்னபோது இதைச் சொல்கிறார். சகுந்தலை சொல்வதை துஷ்யந்தர் செவிமடுக்காமல் போகும்போது, ‘உங்கள் மனசாட்சியைக் கேட்டுப் பாருங்கள்’ என்று மன்றாடுகிறாள்.
‘நடந்தவை எனக்கு மட்டுமே தெரியும்; நான் மட்டுமே சாட்சி என்று நினைக்கவேண்டாம். உங்கள் மனதில் நல்லோர் குடிகொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய நல் வாக்குகள் இருக்கின்றன. நீங்கள் செய்யும் தவறுகளை அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். தான் செய்யும் தவறுகள் மற்றவர்களுக்குத் தெரியாது என்று ஒருவர் நினைக்கக்கூடும். ஆனால், இறைவனுக்குத் தெரியும். மனதில் சாட்சியாக வாழும் நற்குணவான்களுக்குத் தெரியும்’.
இவ்வளவு பட்டியலிட்டால் போதுமென்று நினைக்கிறேன். இந்தியாவில் இருக்கும் 25 கோடிக்கு மேற்பட்டவர்கள் எல்லாம் சத்தியசந்தர்கள், தேவதைகள் என்றெல்லாம் நான் சொல்லவரவில்லை. ஆனால், நம்பகத்தன்மையற்றவர்கள் என்று குற்றச்சாட்டு வைப்பது பழங்காலத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால் முழுக்கவும் ஆதாரமற்றது என்ற உண்மையை நீங்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை என்பதுமட்டுமல்ல; அப்பட்டமான பொய்யும் கூட.
இன்றைய நவீன காலகட்டத்தை எடுத்துக் கொண்டால் அதாவது இயேசு பிறந்த ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிந்தைய காலகட்டத்தை எடுத்துக்கொண்டால், மொஹமதியர்களின் பயங்கரமான தாக்குதல் மற்றும் வன்முறைகளைப் பற்றிய வரலாற்றைப் படித்துப் பார்த்தால், இந்த அளவுக்கு உண்மைத்தன்மையும் நற்குணங்களும் இந்தியாவில் தாக்குப்பிடித்து நிற்கிறது என்பதே எனக்கு மிகப் பெரிய அதிசயமாகத் தோன்றுகிறது. ஒரு பூனையின் முன்னால் எலி உண்மையைப் பேசவேண்டும் என்று எதிர்பார்ப்பதைப் போன்றதுதான் முஹமதிய நீதிபதியின் முன் இந்து ஒருவர் உண்மையைப் பேசவேண்டும் என்று எதிர்பார்ப்பது.
ஒரு குழந்தையைப் பயமுறுத்தினால் அது பொய்தான் சொல்லும். லட்சக்கணக்கானவர்களை அச்சுறுத்தி ஒடுக்கினால் அதிலிருந்து தப்பிக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகளைக் கண்டு ஆச்சரியமடைய ஒன்றுமில்லை. நம்பகத்தன்மை, உண்மைத்தன்மையெல்லாம் ஒருவகையான மேட்டிமைக் குணம். மிகவும் மகத்தான குணம். மிக மிக ஆடம்பரமான குணம். பாலர் பருவத்திலிருந்தே அதைப் போற்றிப் பாதுகாக்க முடியும்படியான வசதிவாய்ப்புகள் பெற்றவர்கள் மிகவும் மகிழ்ச்சியான அதிர்ஷ்டசாலிகள்.
இங்கிலாந்து போன்ற சுதந்தர தேசங்களில், நமது காலகட்டத்தில், பொய் சொல்லாமலே இருப்பது எளிதாக இருக்கக்கூடும். வயதாக ஆக, உண்மைகளை மட்டுமே பேசுவது, முழு உண்மைகளை மட்டும் பேசுவது என்றெல்லாம் இருக்க முடிவதில்லை. ஹிந்துக்களும் அந்த உண்மைகளைக் கண்டுணர்ந்து சொல்லியிருக்கிறார்கள். உண்மையை மட்டுமே, உண்மையைத் தவிர வேறு எதுவும் இல்லாமல் முழு உண்மையைப் பேசிக் கொண்டிருப்பது எவ்வளவு கடினம்; சாத்தியமே இல்லாத விஷயம் என்பதெல்லாம் அவர்களுக்கும் தெரியும்.
சதபத பிரமாணத்தில் ஒரு கதை இருக்கிறது. மிகவும் ஆழமான அர்த்தங்களைக் கொண்டது. உண்மையின் சவால் மற்றும் உண்மையாக இருக்க நேர்வதில் இருக்கும் சவால் பற்றித் தெளிவாகப் பேசுகிறது.
அருண ஒளபவேஸியிடம் அவருடைய உறவினர் சொல்கிறார்: ‘நீங்கள் நீண்டகால அனுபவம் பெற்றுவிட்டிருக்கிறீர்கள்; யாக அக்னியை நீங்களே எழுந்தருளச் செய்யும் வலிமை பெற்றுவிட்டீர்கள்’ என்கிறார்.
‘அதாவது, இனிமேல் நான் மோனத்தில் ஆழவேண்டும் என்கிறாய், அப்படித்தானே. யாக அக்னியை எழச் செய்பவர்கள் சத்தியம் மட்டுமே பேசியாகவேண்டும். மெளனமாக இருப்பவரால் மட்டுமே பொய் பேசாமல் இருக்க முடியும். அந்த அளவுக்கு யாக அக்னிக்கான சடங்கு சம்பிரதாயங்கள் சத்தியத்தை வலியுறுத்தி நிற்கின்றன’ என்கிறார்.
உலகின் வேறு எந்த மொழி இலக்கியத்திலாவது சத்தியமே பேசவேண்டும் என்பதற்கு இப்படியான தாகம் கொண்ட மனங்களைப் பார்க்க முடியுமா என்பது சந்தேகமே. பேச்சு வெள்ளியைப் போன்றது; மெளனம் பொன் போன்றது என்ற நம்முடைய (ஐரோப்பியப்) பழமொழியைவிடப் பழங்கால இந்து இலக்கியம் சத்தியத்தை அதி உன்னதமானதாகப் போற்றுகிறது.
இந்தியாவில் வசிக்கும் பல லட்சக்கணக்கானவர்களை ஆட்சி செய்யப்போகும் நீங்கள் இந்துக்கள் தொடர்பாக நம் தேசங்களில் இருக்கும் பிழையான பொதுப்புத்தியைக் களைந்தாகவேண்டும். அது ஒருவகையில் பைத்தியக்காரத்தனம் போல் அவர்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது. கறுப்பு (பழுப்பு) நிறத் தோல் கொண்டவர்கள் பலர் என்னைவிடச் சிறந்தவர்களாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். இந்தியாவிலும் அப்படியானவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் அவர்களைத் தேடிக் கண்டடைய முடியும். உங்களுக்குச் சில அதிருப்தி தரும் சம்பவங்கள் ஏற்படக்கூடும். அப்படி யாரேனும் உங்களின் நம்பிக்கையை இழந்தால் இங்கு வெள்ளையர்களிலும் நீங்கள் நம்பிக்கை வைத்து அதற்கு ஏற்ப நடக்காதவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.
உலக மக்களை எடைபோடுவதில் பரிசேயர்களைப் போல் போலிப் பெருமிதம் கொண்டவர்களாகவே நாம் இருக்கிறோம். சில நாட்களுக்கு முன் அறிவார்ந்த அரசியல் தலைவர் எழுதி வெளியிட்ட துண்டுப்பிரசுரம் ஒன்றைப் பார்த்தேன்:
‘ஒழுக்கங்களில் தாழ்ந்துகிடக்கும் மக்களுக்கு, முழு நம்பிக்கையை வைக்கத் தகுந்த நபர்களுடனான பரிச்சயம் போல் அதிர்ச்சி தரக்கூடியது வேறு எதுவுமே இருக்காது. உள்ளூர்வாசிகளுக்குத் தமது தாழ்நிலை நன்கு புரிந்துமிருக்கிறது. அவர்களுக்கு இலக்கியம், விஞ்ஞானம் இவற்றையெல்லாம்விட முதலில் நல்லொழுக்கத்தையே கற்றுத் தரவேண்டும்’.
ஹிந்துக்களை இப்படியான மனநிலையில் அணுகினால் அவர்களுக்கு நீங்கள் சரியானதையோ இலக்கியத்தையோ விஞ்ஞானத்தையோ எதையுமே கற்றுத் தரமுடியாது. அவர்கள் அவர்களுடைய இலக்கியங்கள், சட்ட நூல்கள் சொல்வதைக் கேட்டு நடந்துகொண்டு நமக்கு சத்தியத்தின் பெருமையையும் நமக்கு நாமே உண்மையாக இருக்கவேண்டியதன் அவசியத்தை – அதாவது வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் பணிவை – அவர்கள் கற்றுத் தரமுடியும்.
யக்ஞவல்க்யர் என்ன சொல்கிறார் தெரியுமா?
‘நமது ஆஸ்ரமமோ – அதை நாம் மதம் என்று சொல்லலாம் – நமது வர்ணமோ நற்குணங்களை உருவாக்குவதில்லை. அவற்றை நாம் முயன்று கடைப்பிடிக்கவேண்டும். எனவே பிறர் தனக்கு எதைச் செய்யக்கூடாதென்று ஒருவர் நினைக்கிறாரோ அதைப் பிறருக்குச் செய்யாதிருங்கள்.’
ஜேம்ஸ் மில் கடுமையாக விமர்சித்த மனுவின் விதிகள் என்ன சொல்கின்றன?
‘தவறுகள் செய்பவர்கள் வேறு யாரும் தம்மைப் பார்ப்பதில்லை என்று நினைக்கிறார்கள். ஆனால், இறைவனும் ஞானவான்களும் மனதிலிருந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள்’.
‘ஆத்மாவே ஆத்மாவின் சாட்சி. ஆத்மாவே ஆத்மாவின் புகலிடம். சுயத்தை ஆத்மாவை வெறுக்காதீர். மனிதரின் அது உயர்ந்த சாட்சி அந்த ஆத்ம மன சாட்சியே’.
‘சுய நலன் சார்ந்து சிந்திக்கும் நண்பா… மன சாட்சியே அமைதியாக அனைத்தையும் பார்த்து, சிந்தித்துக் கொண்டிருக்கிறது (பரம்பொருளைப் போல்) என்பதை மறவாதீர். அனைவருடைய உள்ளங்களிலும் வாசம் செய்யும் அது (அவர்) நல்லது கெட்டது எது என்பதைப் பார்த்துக்கொண்டிருக்கிறது’.
‘பிறந்தது முதல் இன்றுவரை செய்த நன்மைகள் எல்லாம் (புண்ணியங்கள் எல்லாம்) ஒரே ஒரு பொய் சொன்னாலும் நாயினும் கீழான நிலைக்கு உன்னைக் கொண்டுசென்றுவிடும்’.
வசிஷ்டர் சொல்கிறார்: ‘நல்லொழுக்கத்தைப் பின்பற்றுங்கள். தீயொழுக்கத்தை அல்ல; சத்தியத்தைப் பேசுங்கள்; பொய்மையை அல்ல; தொலைவில் உள்ளவற்றில் கவனம் வையுங்கள். அண்மையில் உள்ளவற்றில் அல்ல. உன்னதமானவற்றைப் பாருங்கள். தாழ்ந்துகிடப்பவற்றை அல்ல’.
இன்று இந்தியாவில் ஒழுக்கக்கேடு இருக்கிறது. உலகில் எங்குதான் அது இல்லை? உலக நாடுகள் எப்படியெல்லாம் இருக்கின்றன என்று புள்ளிவிவரங்கள் எடுக்க ஆரம்பித்தால் அது வில்லங்கமான விஷயமாகிவிடும். ஒழுக்கம் தொடர்பான வரையறைகள், மதிப்பீடுகள் இடத்துக்கு இடம் மாறுபடும் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. இந்தியாவில் ஒழுக்கமாக மதிக்கப்படுபவற்றில் இருந்து பெருமளவுக்குப் பல விஷயங்களில் அவை மாறுபடவும் செய்யும். தந்தையும் தாத்தாவும் சரியென்று செய்தவற்றை மகன்களும் பேரன்களும் குற்றம் என்று கண்டித்தால் அதைக் கேட்டு நாம் அதிர்ச்சியடையக்கூடாது. எது சரி எது தவறு என்பதை நம்முடைய சுய புரிதலின் அடிப்படையில் முடிவெடுக்கவேண்டும்.
பிறருடைய சொந்த அல்லது பொது வாழ்க்கையைப் பற்றி ஒரு தீர்மானம் எடுப்பதென்றால் வரலாற்று ஆசிரியராகவோ அரசியல்வாதியாகவோ எப்படிச் சிந்திப்பவராக இருந்தாலும் இதமான அணுகுமுறை நன்மையையே கொண்டுவரும் என்பதை மறக்கவேண்டாம். இந்தியர்கள் ஒழுக்கத்தில் தரம் தாழ்ந்தவர்கள்… மலை அளவுக்குப் பொய் பேசுவார்கள் என்றெல்லாம் முன் முடிவுகளுடன் அணுகுவதுபோல் இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சி நிலைபெற்று இருப்பதற்கு மிகவும் மோசமான, மிகவும் அபாயகரமான, மிகவும் பேரழிவைத் தரக்கூடியது வேறு எதுவும் இருக்காது. ‘எல்லா மனிதர்களும் பொய்யர்களே’ என்று அவசரகதியில் சொல்பவர்போல் சொந்த வாழ்க்கையானாலும் பொது வாழ்க்கையானாலும் தவறான முடிவெடுப்பவர்கள் வேறு யாருமே இருக்கமுடியாது.
(தொடரும்)