Skip to content
Home » மீடியா டவுன் #3 – ஜாதியைக் கேள்வி எழுப்பும் காலப்பயணம்!

மீடியா டவுன் #3 – ஜாதியைக் கேள்வி எழுப்பும் காலப்பயணம்!

அறிவியல் புனைவுத் திரைப்படங்களுக்கு என்று பொதுவான ஓர் அம்சமுண்டு. அக்கதைகள் மனிதர்களின் கற்பனைகளுக்குள் அடங்காத அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பார்வையாளர்களுக்குக் காட்டி அதன் மூலம் மனித வாழ்வு குறித்த சில தத்துவார்த்தக் கேள்விகளை எழுப்பும்.

உதாரணமாக, 1968இல் வெளியான புகழ்பெற்ற படமான 2001: ஏ ஸ்பெஸ் ஒடிசி, இந்த அண்டத்தில் மனிதர்கள் இடம் என்ன, அறிவாற்றல் என்பது மனிதர்களுக்கே உரியதா என்ற கேள்வியை எழுப்பியது. 1982ஆம் ஆண்டு வெளியான பிளேட் ரன்னர் திரைப்படம், செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களுக்குப் பிரக்ஞை உண்டாவதால் மட்டும் அவர்கள் மனிதர்களின் இடத்தை அடைந்துவிடுவார்களா என்ற கேள்வியை எழுப்பியது. மேட்ரிக்ஸ் திரைப்படம் நாம் வாழும் உலகின் யதார்த்தம் என்பது உண்மையில் நிஜமா என்ற கேள்வியை முன்வைத்தது. இப்படி நிறையப் படங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். அந்தவகையில் தமிழில் அறிவியல் புனைவின் மொழியில் மனிதச் சமூகம் பற்றிய, குறிப்பாக ஜாதியச் சமூகம் பற்றிய கேள்வியை எழுப்பும் குறும்படம் ஒன்றைச் சமீபத்தில் பார்த்தேன். படத்தின் பெயர் ‘யுகம்: The Time Propeller’.

மெட்ராஸ் செம்மலையில் நடைபெறுகிறது கதை. அப்பகுதியில் இருக்கும் பாறை ஒன்றுக்கு ஒவ்வொரு நூறு ஆண்டுக்கும் ஈர்ப்பு விசையை வளைக்கும் ஆற்றல் இருப்பதாகவும், அப்பாறையால் அருகே இருக்கும் பொருட்களையோ, மனிதர்களையோ காலப் பயணம் செய்ய வைக்க முடியும் என்றும் விஞ்ஞானி ஒருவர் கொடுக்கும் விளக்கத்துடன் படம் தொடங்குகிறது.

இந்தக் காலப்பயணம் என்பது மனிதர்களை எதிர்காலத்திற்கோ, இறந்த காலத்திற்கோ மட்டும் கொண்டு செல்லும் நேர்க்கோட்டுப் பயணம் கிடையாது. எதிர்காலத்திற்கு ஒரு மனிதரை அழைத்துச் செல்லும் அதே நேரத்தில், எதிர்காலத்தில் வாழும் அதே மனிதரின் வம்சாவளியைக் கடந்தகாலத்திற்குக் கொண்டு வந்துவிடும். அப்படி ஒரு சிறப்பு அந்தப் பாறைக்கு. இந்த விளக்கத்தின் பின்னணியில் 2025ஆம் ஆண்டில் கதை நடைபெறுகிறது.

2025ஆம் ஆண்டு. ஜாதி மறுப்பு திருமணம் செய்த அகல்யா – கார்த்திக் தம்பதி காட்டிற்குள் அந்தப் பாறை இருக்கும் இடத்துக்கு வருகிறார்கள். அந்தப் பாறை இப்போது சிலையாக வடிக்கப்பட்டு சாமியாக வணக்கப்பட்டு வருகிறது. அவர்களை அழைத்து வருவது அகல்யாவின் அண்ணன் செல்வம். இருவரையும் அங்கே வைத்து ஆணவக் கொலை செய்வதுதான் அவனது திட்டம். அவன் கொலை செய்யக் கத்தியை எடுத்து கார்த்திக்கைக் குத்தும்போது கல்லில் இருந்து வெளிப்படும் ஆற்றல், காலப்பயணத்தை முடுக்கி விடுகிறது. கத்தியால் குத்தப்பட்ட கார்த்திக் கடந்தகாலத்துக்கு, அதாவது மனிதர்கள் வேட்டைச் சமூகமாக இருந்த காலகட்டத்துக்குச் சென்றுவிடுகிறான். அவனது மூதாதையரில் ஒருவன் (அதுவும் அதே நடிகர்கள்தான்), 2025க்கு வந்துவிடுகிறான். கடந்த காலத்துக்குச் சென்ற கார்த்திக், அங்கே இருக்கும் அகல்யா, அவளது அண்ணன் செல்வம் ஆகியோரின் மூதாதையரைச் சந்திக்கிறான். நிகழ்காலத்துக்கு வரும் கார்த்திக்கின் மூதாதையர் இப்போது இருக்கும் அகல்யாவையும் செல்வத்தையும் சந்திக்கிறான். இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

காலப்பயணம் எனும் அறிவியல் கருத்தை எடுத்து சமூக அமைப்பின் முரண்பாடுகளை கேள்வி எழுப்புகிறார் இயக்குநர். குறிப்பாக வேட்டைச் சமூகம், நவீனச் சமூகம் இரண்டையும் ஒரே தட்டில் நிறுத்தி, இரண்டு மனிதர்களின் மனநிலை, சமூக கட்டமைப்பு, இரண்டிலும் எழும் முரண்பாடு ஆகியவற்றை விவாதிக்கிறார்.

படத்தில் ஒரு காட்சி உண்டு. 2025ஐ சேர்ந்த கார்த்திக் வேட்டைச் சமூக காலத்துக்குச் சென்றவுடன் அவனைக் கண்டு அஞ்சும் அகல்யாவின் முன்னோர்கள் பிறகு இவன் காயம்பட்டிருப்பதைப் பார்த்து உதவுகின்றனர். அவனுக்குப் பசிக்கு உணவு தருகின்றனர். இதேசமயத்தில் இங்கே வரும் கார்த்திக்கின் மூதாதையரை இங்கே இருப்பவர்கள் கொல்ல முயல்கின்றனர். அவனைக் காட்டுமிராண்டி எனச் சித்தரிக்கின்றனர்.

நவீனமடைந்துவிட்டோம் என்று சொல்லும் மனிதர்கள் எப்படி இன்னும் மனதில் ஜாதியைத் தாங்கியபடி வன்முறை குணத்துடன் சக மனிதனைக் கொல்லத் திரிகின்றனர் என்பதையும், காட்டுமிரண்டிகளாக வாழ்ந்த மனிதர்கள் எப்படிச் சக மனிதன் துன்புறுகிறான் என்றவுடன் எந்த முன்முடிவும் இன்றி உதவ முன்வந்து அன்பைச் செலுத்துகிறார்கள் என்பதையும் காட்சிப்படுத்துகிறார் இயக்குநர்.

இதேபோல் இன்னொரு காட்சியும் முக்கியமானது. 2025இல் கார்த்திக்கைக் கொலை செய்ய முயலும் செல்வம், ஜாதி வெறியால் பீடிக்கப்பட்டு அவன் குடும்பத்தையே அழித்துவிடுவேன் என மிரட்டுகிறான். இதனால் பயந்துபோகும் கார்த்திக் கடந்தகாலத்தில் அவனது முன்னோர்களைப் பார்க்க நேரும்போது அவர்களை ஏன் கொன்றுவிடக்கூடாது என்று யோசிக்கிறான். செல்வத்தின் முன்னோர்களைக் கொன்றால் ஜாதிய மனநிலை கொண்ட ஒரு மனிதன் எதிர்காலத்தில் உருவாகமாட்டான் என்று எண்ணி கொலையும் செய்துவிடுகிறான். இதன் விளைவாக, செல்வத்தின் வம்சாவளியே இல்லாமல் புதிய எதிர்காலம் ஒன்று உருவாகிறது. ஆனால் அங்கே இருக்கும் மனிதர்களும் அதேபோன்ற ஜாதிய மனநிலையில்தான் இருக்கிறார்கள் என்று காட்டுகிறார் இயக்குநர்.

இது பகடியாய் வெளிப்பட்டாலும், வெறும் தனி மனிதர்களை அழிப்பதனால் ஜாதி ஒழிப்பில் எந்த மாற்றமும் கொண்டு வர முடியாது; ஒட்டுமொத்த சமூக, பொருளாதார அமைப்பையும் மாற்றினால் மட்டுமே ஜாதிய மனநிலையை அழிக்க முடியும் என்கிற பார்வையை முன்வைக்கிறார் இயக்குநர். இதுபோல இன்னும் சில காட்சிகளும் படத்தில் உண்டு.

படத்தில் பிரச்சாரத் தொனியில் எந்தக் கருத்தும் பேசப்படவில்லை. மிக நுணுக்கமாக, கதையின் போக்கில் நாமே யோசித்துப் புரிந்துகொள்ளும்படி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் கதையின் ஊடாகப் பல கேள்விகளை எழுப்பி, அதற்கு வெவ்வேறு இடங்களில் விடை கொடுத்திருக்கிறார் இயக்குநர். வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்ட புதிய ஓர் அனுபவத்தை இந்தப் படம் தருகிறது.

இயக்குநர் அருண் பகத் இயக்கி, Ra2 சினிமாஸ் வெளியிட்டுள்ள இப்படம் யூடியூப்பில் காணக் கிடைக்கிறது: படத்தின் சுட்டி

0

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *