Skip to content
Home » மொஸாட் #7 – உயிருடன் வேண்டும்!

மொஸாட் #7 – உயிருடன் வேண்டும்!

‘ஐக்மேன் உயிருடன் இருக்கிறானா?’ யாரும் அதிர்ச்சியடையவில்லை. ஏற்கெனவே இதுபோன்ற பல கடிதங்களைப் பார்த்தாகிவிட்டது. இதுவும் வழக்கம்போல் ஏதோ ஒரு பிதற்றல் கடிதம்தான். தூக்கிக் கடாசிவிட்டு வேலையைப் பாருங்கள் என்றது மொஸாட் மேலிடம்.

ஆனால் இஸ்ரேல் அரசு மொஸாடுக்கு அழுத்தம் கொடுத்தது. ஐக்மேன் குறித்த கடிதத்தை அனுப்பியது யாரோ அல்ல. நாஜிக் குற்றங்களை விசாரிக்கும் வழக்கறிஞர் பாவர். அவருக்குப் பதில் சொல்வதற்காவது யாரையாவது அனுப்பி விசாரியுங்கள்.

மொஸாடும் யோயல் கோரன் என்கிற ஓர் உளவாளியை பியூனஸ் அயர்ஸுக்கு அனுப்பி விசாரணை மேற்கொள்ளச் சொன்னது. கோரன் நேராக ஐக்மேன் தங்கியிருப்பதாகச் சொல்லப்பட்ட பகுதிக்குச் சென்றார். என்ன விசாரித்தார், ஏது விசாரித்தார் என்றெல்லாம் தெரியாது. விசாரணை முடிந்துவிட்டதாக இஸ்ரேலுக்குத் திரும்பி வந்த அவர், ‘ஐக்மேன் போன்ற ஒரு முக்கிய நாஜிக் குற்றவாளி அதுபோன்ற இடத்தில் வாழ்வதற்குச் சாத்தியமே இல்லை’ என்று அறிக்கை கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டார். மொஸாடும் விசாரணையை நிறுத்திவிட்டது.

ஆனால் பாவர் விடுவதாக இல்லை. அவர் தொடர்ந்து இஸ்ரேலுக்குக் கடிதங்கள் எழுதிக்கொண்டே இருந்தார். இதற்கு மேலும் நான் சொல்வதில் நம்பிக்கை வர வேண்டும் என்றால் யார் எனக்குத் தகவல் தந்தார்கள் என்பதைக்கூட வெளியிடுகிறேன். உடனே விசாரணைக்கு உத்தரவிடுங்கள் எனச் சொல்லி ஹெர்மென் பற்றிய குறிப்புகளைக் கொடுத்தார்.

இது இஸ்ரேலுக்கு நெருக்கடியாகிப்போனது. யாரோ ஒரு யூத வழக்கறிஞர் ஜெர்மனியில் இருந்துகொண்டு ஐக்மேனைக் கைது செய்யக்கோரி அழுத்தம் கொடுக்கிறார். யூதர்களின் தேசம் என மார்த்தட்டிக்கொள்ளும் இஸ்ரேல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நழுவுகிறதே என யாராவது கேட்டுவிடுவார்களோ என்கிற நெருக்கடி.

உடனே மொஸாட் எஃப்ராகிம் ஹாஃப்ஸ்டெட்டர் என்பவரை அழைத்து, அவரிடம் ஐக்மேன் குறித்து விசாரணை மேற்கொள்ளும்படிச் சொல்லியது.

ஹாஃப்ஸ்டெட்டர் நேராக அர்ஜெண்டினா கிளம்பிப்போனார். அங்கு சென்று ஹெர்மெனையும் அவரது மகளையும் சந்தித்து விசாரித்தார். இஸ்ரேலிலிருந்து உளவாளி ஒருவர் வந்திருப்பதை அறிந்த ஹெர்மென், அவரிடம் எரிந்து விழுந்தார். ‘நான் கொடுத்த தகவல்களே ஐக்மேனைக் கைது செய்வதற்குப் போதுமானது. இன்னும் ஏன் தாமதிக்கிறீர்கள்? இன்னும் உங்களுக்கு என்னதான் வேண்டும்?’ கேள்விகளால் துளைத்தார்.

ஹாஃப்ஸ்டெட்டர் அவரிடம் பொறுமையாக எடுத்துக்கூறினார். ‘இங்கே பாருங்கள். இது ஒன்றும் இஸ்ரேல் கிடையாது. ஓர் அர்ஜெண்டினக் குடிமகனை அவரது வீட்டில் புகுந்து நீங்கள் சொல்வதுபோல் எல்லாம் எங்களால் சுலபமாகக் கைது செய்ய முடியாது. விஷயம் கொஞ்சம் கசிந்தாலும் அர்ஜெண்டினா அரசு என்னைக் கைது செய்து களி தின்ன வைத்துவிடும். அதனால் அவசரப்படாமல் யாருக்கும் தெரியாமல் நடவடிக்கை எடுக்க வேண்டியது முக்கியம். உண்மையில் நீங்கள் கொடுத்த ஆதாரங்கள் எங்களுக்குப் போதுமானதாக இல்லை. உங்களால் ஐக்மேனின் அர்ஜெண்டின அடையாள அட்டையை எடுக்க முடியுமா எனப் பாருங்கள். உங்கள் மகளை அனுப்பி முயற்சி செய்யுங்கள். அதில் அவர் ஐக்மேன்தான் என்பது ஊர்ஜிதமாகிவிட்டால் நிச்சயம் இஸ்ரேல் நடவடிக்கை எடுக்கும்.’

ஹாஃப்ஸ்டேட்டர் உத்தரவாதம் கொடுத்துவிட்டு, கையில் செலவுக்கு 130 டாலர்களையும் திணித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். ஹெர்மெனுக்கோ ஆதங்கமாக இருந்தது. என்ன இஸ்ரேல் இப்படிப் பின் வாங்குகிறது? விசாரிக்க வேண்டியது அவர்கள் பொறுப்பல்லவா? கண்கள் தெரியாத நான் எப்படித் தினமும் 10 மணி நேரம் பயணம் செய்து ஐக்மேன் குறித்த தகவல்களைத் திரட்டுவேன்?

ஆனாலும் அவர் தளரவில்லை. எப்படியோ தனக்குத் தெரிந்த சிலரிடம் பேசி ஐக்மேன் தங்கியிருக்கும் வீடு குறித்த விவரங்களைத் திரட்டத் தொடங்கினார். இங்கேதான் சிக்கலாகிப்போனது. அவர் சேகரித்த தகவலின்படி ஐக்மேன் தங்கியிருக்கும் வீடு பிரான்ஸிஸ்கோ ஸிமிட் என்பவரின் பெயரில் இருந்ததாகத் தெரியவந்தது. இதை வைத்து ஐக்மேனின் போலி பெயர்களில் ஒன்றுதான் பிரான்ஸிஸ்கோ என்று ஹெர்மென் முடிவு செய்துவிட்டார். அதனால் அடுத்தடுத்தமுறை இஸ்ரேலுக்குக் கடிதம் எழுதியபோதெல்லாம் பிரான்ஸிஸ்கோதான் ஐக்மேன் என்று எழுதினார்.

இது மொஸாட் தரப்பில் இருந்து விசாரிக்கப்பட்டது. அதில் உண்மையில் பிரான்ஸிஸ்கோ என்பவர் இருக்கிறார் என்றும், ஆனால் அவருக்கும் ஐக்மேன் குறித்து ஹெர்மென் தரும் தகவல்களுக்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்றும் தெரிந்தது. இதையெல்லாம் தாண்டி மொஸாட் களத்தில் இறங்கி விசாரிக்கும்படி இரண்டு ஏஜெண்டுகளை வேறு அனுப்பி இருந்தது. அவர்கள் சென்று பார்த்தபோது அந்தப் பகுதியில் கிளெமென்ட் என்பவரே இல்லை என்று தெரியவந்தது. அவர்கள் திரும்பி வந்து ஹெர்மென் பணத்திற்காகப் பொய்யைப் பரப்பிக்கொண்டிருக்கும் ஆசாமி என்று சொல்லிவிட்டனர்.

ஆனால் ஹெர்மென் பொய்யெல்லாம் சொல்லவில்லை. உண்மையில் மொஸாட் உளவாளிகள் வரும் சமயம் பார்த்து ஐக்மேன் தான் தங்கியிருந்த வீட்டை காலி செய்திருந்தார். அவர் வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்து ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் புதிதாக ஒரு வீடுகட்டிக்கொண்டு குடும்பத்துடன் குடியேறிவிட்டார். இது தெரியாமல் மொஸாட் உளவாளிகள் ஹெர்மென் பணத்திற்காக வதந்தி பரப்புவதாகப் புகார் தெரிவித்துவிட்டனர். இதுவும் ஹெர்மென் மீதான நம்பகத்தன்மையைக் குலைத்தது.

ஒருகட்டத்தில் மொஸாட் தலைவர்கள் ஐக்மேன் விஷயத்தில் ஆர்வம் காட்டுவதையே நிறுத்திவிட்டனர். கண் தெரியாத நபர் சொல்லும் தகவல்களை வைத்துக்கொண்டு இனியும் பைத்தியக்காரத்தனமாகச் சுற்றிக்கொண்டிருக்க வேண்டாம், யாரும் இனி ஹெர்மெனைத் தொடர்புகொள்ளக்கூடாது என்று உளவாளிகளுக்கு அதிகாரப்பூர்வ உத்தரவே கொடுத்துவிட்டனர்.

இதை அறிந்ததும் ஹெர்மென் உடைந்துபோனார். இவ்வளவு பக்கத்தில் வந்து ஐக்மேனைக் கோட்டைவிட்டோமே. இனி என்ன செய்வது? மனதிற்குள் புழுங்கினார். சரி எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்தபோது ஐக்மேன் வேட்டைக்கான உந்துதல் வேறு இடத்திலிருந்து கிடைத்தது.

0

அப்போது உலகம் முழுவதும் தங்கள் சொந்தக் காசைச் செலவு செய்து நாஜிகளைத் தேடி வந்த யூதர்கள் சிலர் இருந்தனர். இவர்களை நாஜி வேட்டையாளர்கள் என்று அழைப்பர். துவியா பிரெய்ட்மென் அவர்களில் ஒருவர். இஸ்ரேலில் வாழ்ந்துவந்த பிரெய்ட்மென் ஐக்மேன் குறித்து கேள்விப்பட்டு செய்தித்தாளில் விளம்பரம் ஒன்றைக் கொடுத்திருந்தார்.‘ஐக்மேன் உயிருடன் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர் குறித்த சரியான தகவல்களைத் தருபவர்களுக்கு 10,000 டாலர்கள் வெகுமதி அளிக்கப்படும்.’

இது துவண்டு கிடந்த ஹெர்மெனுக்கு உற்சாகமூட்டியது. உடனே அவர் பிரெய்ட்மேனுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் ஐக்மேன் இருக்கும் இடம், அர்ஜெண்டினாவில் அவருடைய பெயர் என அனைத்துத் தரவுகளையும் இணைத்தார். கடிதத்தைப் படித்துவிட்டு பிரெய்ட்மென் எப்படியும் தன்னைத் தொடர்புகொள்வார் என்று நினைத்தார். ஆனால் எந்தப் பதிலும் வரவில்லை.

ஹெர்மெனுக்குப் பொறுமை போய்க்கொண்டே இருந்தது. இனி இஸ்ரேலை நம்பி பயனில்லை. அர்ஜெண்டினாவில் இருக்கும் யூதர்களிடமாவது ஐக்மேன் குறித்துத் தெரிவிப்போம் என நினைத்து அங்கு இயங்கி வந்த யூதர்கள் அமைப்பு பலவற்றின் தலைவர்களைச் சந்தித்து விஷயத்தைச் சொன்னார். அப்போதும் ஹெர்மென் விரும்பியதுபோல் எதுவும் நடக்கவில்லை. மாறாக, ஐக்மேன் உயிருடன் இருக்கும் விஷயம் பலருக்கும் தெரியத் தொடங்கிவிட்டது. இதனால் ஹெர்மெனுக்கு இன்னொரு பயமும் வந்தது.

முதலாவது ஐக்மேன் பற்றி பலரும் பேசுவதால் இந்த விஷயம் அவரது காதுகளை எட்டி அவர் தப்பிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இரண்டாவது, பலரும் தாங்கள்தான் ஐக்மேன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்ததாக உரிமை கோரினால் தனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய வெகுமதியும் கிடைக்காமல் போய்விடுமோ என்று பயந்தார். இதனால் பிரெய்ட்மேனுக்கு இறுதியாக ஒரு கடிதம் எழுதினார்.

‘நான் இவ்வளவு மன்றாடியும் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒன்று உங்களுக்கு ஐக்மேனைக் கைது செய்வதால் பலனில்லை என்று அர்த்தம். இல்லையென்றால் உங்கள் யாருக்கும் ஐக்மேனைக் கைது செய்வதில் ஆர்வம் இல்லை என்று அர்த்தம். என் உழைப்பு அனைத்தும் வீணாகிவிட்டதே என்பதைவிட ஒரு குற்றவாளி தண்டிக்கப்படாமல் தப்பிக்கப்போகிறானே என்கிற ஆதங்கத்தில்தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இனி நான் உங்களைத் தொடர்புகொள்ள மாட்டேன்.’

வருத்தத்துடன் எழுதிவிட்டு அத்துடன் இஸ்ரேலுடனான கடிதப் போக்குவரத்தை முடித்துக்கொண்டார். ஆனால் அப்போதுதான் இஸ்ரேலுக்கு மற்றொரு நபரிடம் இருந்து ஒரு துப்பு கிடைத்தது. ஜெர்மனியைச் சேர்ந்த புவியியல் வல்லுநரான கெர்ஹார்ட் கிளாமர் என்பவர் அர்ஜெண்டினாவின் துகுமான் மாகாணத்தில் வசித்து வந்தார். அவர் பணியாற்றி வந்த அதே நிறுவனத்தில் ஐக்மேனும் பணிக்குச் சேர நேர்ந்தது. கிளாமர் ஜெர்மனிக்காரர் என்பதால் ஐக்மேனை உடனடியாக அடையாளம் கண்டுவிட்டார். அத்துடன் ரகசியமாக விசாரித்து உறுதியும் செய்துவிட்டார். இந்தச் செய்தியை அவர் தனது நண்பரான ஒரு பாதிரியாரிடம் சொல்ல, அவர் தேவாலயத் தலைவரிடம் தெரிவிக்க, அங்கிருந்து இஸ்ரேலுக்குத் தகவல் வந்து சேர்ந்தது. இத்துடன் பாவர் மீண்டும் தன் தரப்பிலிருந்து சில அழுத்தங்களைக் கொடுக்க, அதன்பின்தான் மொஸாட் தீவிரமாகத் தேடுவதற்கு முடிவு செய்தது.

0

மொஸாட் உளவாளிகள் அர்ஜெண்டினாவிற்கு வந்தவுடனேயே வேலையைத் தொடங்கினர். உளவாளிகளிடம் ஹெர்மென் கொடுத்த தகவல்கள் அனைத்தும் இருந்தன. அவருடைய உருவம் எப்படி இருக்கும், அவரது குரல் எப்படி இருக்கும், அவருடைய அன்றாடப் பழக்க வழக்கங்கள் என்னென்ன எல்லாத் தகவல்களும் இருந்தன. இதுமட்டுமில்லாமல் ஐக்மேன் குறித்து ஜெர்மனியிலிருந்தும் சில தரவுகளை மொஸாட் திரட்டியிருந்தது. அதில் அவருடைய பிறந்த நாள் எப்போது, திருமண நாள் எப்போது, பெற்றோர்கள் யார் யார் என ஜாதகம் அனைத்தும் இருந்தது.

இதற்காக ஐக்மேனையும் நாம் சாதாரணமாகச் சொல்லிவிட முடியாது. தன்னை ஒருவேளை எதிரிகள் பின் தொடர்ந்தால் தடயங்கள் எதுவும் இருக்கக்கூடாது என்பதற்காகப் பெரும்பாலான ஆதாரங்களை அழித்துவிட்டுத்தான் அவர் ஜெர்மனியிலிருந்து கிளம்பியிருந்தார். குறிப்பாக அவருடைய புகைப்படங்கள் எதுவுமே மொஸாடுக்குக் கிடைக்கவில்லை. அதுதான் உண்மையில் ஐக்மேன் மீதான வேட்டையைத் தாமதப்படுத்தி வந்தது. உளவாளிகளுக்குப் போருக்கு முந்தைய சில தெளிவில்லாத புகைப்படங்கள் மட்டுமே அகப்பட்டன.

ஆனாலும் மொஸாட் விடாமல் தேடியது. டிசம்பர் 1959 அன்று உளவாளிகள் ரிக்கார்டோ கிளமென்ட் என அறியப்பட்ட ஐக்மேனை நெருங்கினர். அவருடைய மகனைக் கண்டுபிடித்துப் பின்தொடர்ந்ததில் ஐக்மேனின் புதிய விலாசம் தெரியவந்தது. உடனே மொஸாட் குழு அவரது வீட்டை நோட்டமிடும் வேலையைத் தொடங்கியது. அந்த வீட்டை எல்லாக் கோணங்களிலிருந்தும் புகைப்படம் எடுத்து உடனுக்குடன் மேலிடத்திற்கு அனுப்பியது.

அதேபோல அவர் இருக்கும் பகுதியிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஐக்மேனின் தினசரி நடவடிக்கைகளையும் மொஸாட் கண்காணித்தது. அதில் கிடைத்த தரவுகளை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது அவர்தான் ஐக்மேனாக இருக்க வேண்டும் என்கிற சந்தேகம் வெகுவாக வலுவடைந்தது. ஆனால் அதுமட்டும் போதாது. அவரைத் தூக்குவதற்கு இன்னும் ஒரே திடமான ஆதாரம் வேண்டும். அதுமட்டும் கிடைத்துவிட்டால் தேதி குறித்துவிடலாம். அதற்காகத்தான் கொக்குபோல மொஸாட் காத்திருந்தது.

அவர்கள் தேடிய ஆதாரம் மார்ச் 21, 1960 அன்று கிடைத்தது. அன்றைக்குப் பொழுது புலர்ந்திருந்தது. ஐக்மேன் பேருந்திலிருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றார். அவரது கையில் ஒரு பூங்கொத்து. ஐக்மேன் மெதுவாக வீட்டின் வாசலருகே வந்து கதவைத் தட்டினார். அவரது மனைவி கதவைத் திறக்க, ஐக்மேன் தன் பின்னால் மறைத்து வைத்திருந்த பூங்கொத்தை எடுத்து அவரிடம் நீட்டினார். மனைவி உற்சாகத்தில் அவரைக் கட்டியணைத்துக்கொண்டார். இருவரும் வீட்டிற்குள் சென்றனர்.

சிறிது நேரத்தில் வீடு விழாக்கோலம் பூண்டது. உள்ளே ஒலிக்கும் இசை தட்டுக்களின் தாளம் வெளியே கேட்டது. சமையலறையிலிருந்து உணவு சமைக்கும் வாசம் வெளி எங்கும் பரவியது. வீட்டினுள் இருந்த அனைவருமே உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

என்ன விஷேஷம் இன்றைக்கு? ஏன் ஐக்மேன் வீட்டில் இப்படியொரு கொண்டாட்டம்? யாருக்காவது பிறந்தநாளா? ஒரு மொஸாட் உளவாளி தன்னிடம் இருந்த தகவல் கோப்பைப் புரட்டினார். திடீரென அவரது முகத்தில் ஒருகணம் அதிர்ச்சி. பின் உதட்டில் சிரிப்பு. கிடைத்துவிட்டது. கிடைத்துவிட்டது. சத்தமில்லாமல் படப்படப்புடன் பேசினார். என்ன கிடைத்துவிட்டது? இவன்தான் ஐக்மேன் என்பதற்கான ஆதாரம் கிடைத்துவிட்டது. இதோ பார் ஐக்மேனின் திருமண நாள் மார்ச் 21. இன்றைக்குத் தேதி மார்ச் 21.

சந்தேகம் தீர்ந்தது. கருமேகங்கள் கலைந்து வானம் தெளிவடைந்ததுபோல் இருந்தது. விஷயம் கேள்விப்பட்டு மொஸாடின் அப்போதைய தலைவர் ஐஸர் ஹரெல்லே அர்ஜெண்டினாவுக்குக் கிளம்பி வந்தார். இந்தமுறை வலையில் சிக்கப்போவது சாதாரண மீன் அல்ல. திமிங்கிலம். எதிலும் பிசிறு ஏற்படக்கூடாது. கவனமுடன் வேலையைத் தொடங்குங்கள் என்று உத்தரவிட்டார்.

ஐக்மேனைத் தூக்கப் பல வழிகளில் திட்டமிடப்பட்டது. வெகு துல்லியமாக ஏற்பாடுகள் நடைபெற்றன. ஐஸர் ஹரெல் இந்தத் திட்டத்திற்காக ஆட்களைப் பொறுக்கி எடுத்தார். எல்லோரிடமும் தனித்தனியாகப் பேசினார்.

‘இதோ பாருங்கள். இதுவரை நாம் செய்த வேலைகளிலேயே இதுதான் சவாலானது. ஆபத்தானதும்கூட. நாம் வெளிநாட்டில் கொலை செய்திருக்கிறோம். கலகம் செய்திருக்கிறோம். ஆனால் இப்போது ஒருவரைக் கடத்தப்போகிறோம். உயிருடன் பிடிக்கப்போகிறோம். அதுவும் சாதாரண ஆள் அல்ல. உலகையே மிரள வைத்த முக்கியப் புள்ளியை. எந்த இடத்திலும் தவறு நிகழ்ந்துவிடக்கூடாது. அதனால் விருப்பம் உள்ளவர்கள் மட்டும் என்னுடன் இணைந்துகொள்ளுங்கள். மற்றவர்கள் விலகிவிடுங்கள். நான் யாரையும் கட்டாயப்படுத்த மாட்டேன்.’

தானாக முன்வந்தவர்களில் சிறந்தவர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். குறிப்பாக அவர்கள் குடும்பத்தினர் யாராவது நாஜிக்களால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதையும் ஐஸர் ஹரெல் உறுதி செய்துகொண்டார். அப்போதுதான் பழிதீர்க்கும் எண்ணமும் சேர்ந்து வேலையைக் கச்சிதமாக முடித்துக்கொடுக்கும் என்பது அவரது கணக்கு.

மொத்தம் 30 பேர் தேர்வு செய்யப்பட்டனர். கடத்தப்போவது 10 பேர். அவர்களுக்கு உதவப்போவது 20 பேர். தொடக்கத்தில் ஐக்மேனை ஏன் சுட்டுக்கொல்லக்கூடாது என்று சில விவாதங்கள் எழுந்தன. ஆனால் ஐஸர் தெளிவாகச் சொல்லிவிட்டார். 60 லட்சம் யூதர்களைக் கொன்று குவித்தவனைப் பார்த்த மாத்திரத்தில் கழுத்தை நெரித்துக் கொன்றுவிடுவதில் எனக்குப் பிரச்னை இல்லை. ஆனால் அவன் உயிரோடு வேண்டும். அவனைத் தூக்கி வந்து உலகத்தின் முன் நிறுத்த வேண்டும். இதன் மூலம் மூன்று பலன்கள் உள்ளன. ஒன்று, இஸ்ரேலின் தீரம் உலக நாடுகளுக்குத் தெரியவரும். இரண்டாவது, இஸ்ரேலின் மீது எல்லோருக்கும் பயம் வரும். மூன்றாவது இஸ்ரேல் என்றைக்கும் சட்டம், நீதியின் பக்கம் நிற்கிறது என்கிற பிம்பம் எழும்பும்.

இப்போது குழு மூன்றாகப் பிரிக்கப்பட்டது. ஒரு குழு அர்ஜெண்டினாவில் இருந்து அவரைக் கடத்தி வருவதற்கு வேண்டிய போலி ஆவணங்கள், விமான டிக்கெட்டுகள், விசாக்கள், மருத்துவ சான்றிதழ்கள், அடையாள அட்டைகள் ஆகியவற்றைத் தயார் செய்யும் வேலையில் இறங்கியது. இன்னொரு குழு ஐக்மேனை நோட்டமிட அர்ஜெண்டினாவிற்குக் கிளம்பியது. மூன்றாவது குழு இஸ்ரேலில் இருந்துகொண்டு கடத்தலுக்குப் பயிற்சி எடுத்தது.

உலகப் போருக்கு முன்பு இருந்தே லத்தின் அமெரிக்கா நாஜிக்களுக்குப் புகழிடம் வழங்கும் நாடாக இருந்தது. அதனால் எதையும் ரிஸ்க் எடுப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. மாட்டினால் சர்வதேச அளவில் இஸ்ரேலின் பெயர் நாறிவிடும். உலகம் முழுவதிலிருந்தும் அரசியல் நெருக்கடி ஏற்படும். அதனால் எல்லாவற்றையும் கூடுதல் கவனத்துடன் செய்தனர்.

ஏப்ரல் இறுதியில் திட்டம் தொடங்கியது. கடத்தலுக்குப் பயிற்சி பெற்ற மொஸாட் உளவாளிகள் அர்ஜெண்டினா வந்து சேர்ந்தனர். இஸ்ரேல் மீது சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக யாரும் அந்நாட்டிலிருந்து வரவில்லை. ஐரோப்பாவிலிருந்து வந்தவர்களும்கூட ஒரே தேசத்திலிருந்து வரவில்லை. எல்லோருக்கும் உலகின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து டிக்கெட் போடப்பட்டிருந்தது.

உளவாளிகள் பியூனஸ் அயர்ஸுக்கு வந்தவுடனேயே பத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வாடகைக்கு எடுத்தனர். ஆனால் ஒரே ஒரு வீட்டில் மட்டும் ஐக்மேனை அடைத்து வைக்கத் திட்டம். மற்ற வீடுகள் பாதுகாப்பிற்காக. அதேபோல பத்துக்கும் மேற்பட்ட கார்களும் வாடகைக்கு எடுக்கப்பட்டன. ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு கார். ஒரே கார் எல்லா இடங்களுக்கும் பயணித்தால் அதன் மேல் கவனம் குவிந்துவிடும். இதைத் தவிர்ப்பதற்காகக் கூடுதல் கார்கள்.

மே 11 அன்று ஐக்மேனைக் கடத்தலாம் என நாள் குறிக்கப்பட்டது. பென்ஸ் தொழிற்சாலையில் பணியாற்றிக்கொண்டிருந்த அவரை வீடு திரும்பும்போது தூக்குவதற்குத் திட்டம். கடத்திக்கொண்டு வாடகை வீட்டிற்கு வந்துவிட வேண்டும். அங்கிருந்து எப்படி இஸ்ரேலுக்குக் கொண்டு வரலாம் என்பதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

கடத்தலுக்காக இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே இரண்டு கார்கள் அவர் வந்திறங்கும் பேருந்து நிறுத்தம் முன்பு காத்திருந்தது.

ஐக்மேன் எப்போதும் இரவு 7.40 மணிக்கு வந்துவிடுவார். அங்கிருந்து அவர் வீட்டுக்குச் செல்லும் பாதையில் புகுந்து கடத்திவிடலாம். யாருக்கும் எந்தச் சந்தேகமும் வராது.

எல்லாம் சரியாக இருந்தது. மணி 7.40 ஆனது. ஆனால் பேருந்தில் ஐக்மேன் வரவில்லை.

சரி அடுத்தப் பேருந்திற்குக் காத்திருப்போம் என்றால் அதிலும் ஐக்மேன் இல்லை. மூன்றாவது பேருந்து? அதிலும் இல்லை.

என்ன ஆனது? மொஸாட் குழம்பிப்போனது. ஐக்மேனுக்கு ஒருவேளை நாம் கடத்தப்போகும் தகவல் தெரிந்துவிட்டதா? அவர் தப்பித்துவிட்டாரா? திட்டத்தைக் கைவிட்டு விடலாமா? பரப்பரப்புடன் அங்கேயே உளவாளிகள் ஆலோசனை செய்தனர். நேரம் போய்க்கொண்டிருந்தது. அங்கேயே நீண்ட நேரம் இருக்கவும் முடியாது. சந்தேகம் வந்துவிடும். என்ன செய்யலாம்? இவ்வளவு தூரம் பாடுபட்டு இப்படிச் சொதப்பிவிட்டதே!

கைக்கடிகாரத்தில் நேரம் 8 மணியை எட்டியபோது சரியாக ஒரு பேருந்து அவர்கள் காத்திருந்த இடத்திற்கு முன் வந்து நின்றது. அந்தப் பேருந்திலிருந்து ஒரே ஒருவர் மட்டும் இறங்கினார். ஒடிந்த தேகம், சோர்ந்த நடை. ஐக்மேன்.

அவர் மெதுவாக நடந்து உளவாளிகள் காத்திருக்கும் இடத்தைக் கடந்து சென்றார். அக்கம் பக்கத்தில் யாரும் இல்லை. மயான அமைதி.

ஒரே ஓர் உளவாளி அவர் பின் பக்கமாகச் சென்று மெல்லிய குரலில் சொன்னார்.

‘ஒரு நிமிடம் அன்பரே…’

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

1 thought on “மொஸாட் #7 – உயிருடன் வேண்டும்!”

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *