அதோ அந்தச் செங்கல் சூளை அருகில் யாரோ ஒரு மனிதன் கவிழ்ந்து கிடக்கிறான். அருகில் சென்று பார்த்தால் மூச்சுப் பேச்சு இல்லை. யார் இது? ஐயோ… நம் மாவட்டச் செய்தியாளர் சுலப் ஸ்ரீவாஸ்தவா! தனக்குப் பாதுகாப்பு இல்லை என்று மாநில டிஜிபிக்கும் பிரதமருக்கும் நேற்றுதான் கடிதம் எழுதினார். இன்று கொலையுண்டு கிடக்கிறார். அப்படி என்ன செய்தார் இந்தச் செய்தியாளர்? 13 ஜூன் 2021 அன்று இரவு சுலப் ஸ்ரீவாஸ்தவாவின் உடலைக் கண்டவர்களுக்கு இப்படித்தான் தோன்றியிருக்கும். ஏன்? என்னதான் நடந்தது?
சுலப் ஹனுமான் பிரசாத் ஸ்ரீவாஸ்தவா, உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் சர்தார்புர் மேற்கு பகுதியில் வாழ்ந்தவர். ABP News மற்றும் ABP கங்கா சேனல்களுக்கான பிரதாப்கர் மாவட்ட நிருபர் அவர். தொடக்கத்தில் 6 ஆண்டுகள் மஹுவா டிவியில் பணிபுரிந்த இவர், பின் ஏபிபிக்கு வந்தார். சிறுவயதிலிருந்தே இதழியலில் ஆர்வம் கொண்ட இவர் அதே இதழியல் துறையைச் சார்ந்த ரேனுகா என்பவரை மணம் செய்துகொண்டார்.
பிரதாப்கர் என்பது உத்தரப் பிரதேசத்தின் ஒரு சிறிய மாவட்டம்தான். அங்கு சட்டவிரோத மது விற்பனை குழுக்கள் பரவலாக இயங்கின. அந்தக் குழுக்களும் காவல்துறையும் அமைதியாகக் கைகோத்து, அமோகமாகத் தொழில் நடத்தி வந்தனர். ஏறக்குறைய அம்மாவட்டத்தின் இயல்புகளில் ஒன்றாக மாறிப்போன இந்தக் ‘காவல்-கள்ளச்சாராய’ கூட்டணி குறித்து யாரும் வெளியே பேசமாட்டார்கள். ஆனால், சுலப் பேசினார். அங்கிருந்துதான் பிரச்னை தொடங்கியது.
ஜூன் 9 ஆம் தேதி சுலப் ஸ்ரீவாஸ்தவா ஒரு செய்தியை வெளியிட்டார். பிரதாப்கர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் குழுக்கள் குறித்த செய்தி அது. மிகத் தெளிவான விவரங்களுடன், ‘யார் நடத்துகிறார்கள்? எங்கே நடக்கிறது? யார் அனுமதிக்கிறார்கள்? அதற்கான விலை என்ன? எப்படிப் பரிமாற்றம் நடக்கிறது?’ என விவரமாக தொலைக்காட்சியில் அம்பலப்படுத்தினார்.
அடுத்த சில நாட்களில் அடையாளம் தெரியாத பலரிடமிருந்து மிரட்டல் அழைப்புகள் வரத் தொடங்கின. நாளுக்கு நாள் அச்சுறுத்தல் அதிகரிக்க, குடும்பமும் பயப்படத் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அழுத்தத்தில் இருந்த அவர், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கடைசியில்தான் காவல்துறையில் புகாரளிக்க முடிவெடுத்தார்.
ஜூன் 12 அன்று பிரயாக்ராஜ் மண்டல கூடுதல் டிஜிபிக்கு விரிவான புகார் கடிதம் எழுதினார். ‘என்னை யாரோ தினமும் பின் தொடர்கிறார்கள். அந்தச் சாராய கும்பல் என்னைத் தாக்க திட்டமிடுகிறது என்று தெரிய வந்தது. இது என் குடும்பத்தையும் பாதிக்கும். தயவுசெய்து என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாக்குமாறு கோருகிறேன்’ என்று கேட்டுக்கொண்டது அந்த அறிக்கை.
கடிதத்தைப் பெற்றுக்கொண்டது காவல்துறை. ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. ஒருவேளை எடுக்க முயற்சித்திருக்கலாம். ஆனால் அடுத்த 24 மணி நேரத்துக்குள் இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
ஜூன் 13 இரவு சுலப் ஸ்ரீவாஸ்தவா லால்கஞ்ச் பகுதியில் காவல்துறை நடவடிக்கை குறித்து செய்தி சேகரித்துவிட்டு நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அதன் பிறகு காத்ரா மேதினிகஞ்ச் பகுதியில், ஒரு செங்கல் சூளைக்கு அருகே சில தொழிலாளர்கள் ஒரு மனிதரைச் சாலையில் பார்த்தார்கள். அவரின் தொலைபேசியிலிருந்து நண்பர்களுக்கு அழைத்து தகவல் சொல்லிவிட்டு, ஆம்புலன்சில் அனுப்பினர். ஆனால், கொண்டு வரும்போதே அவர் இறந்திருந்ததை மருத்துவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
சாலையில் உள்ள நீர் பிடிக்கும் பம்பு மோதி மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்து இறந்தார் என்று காவல்துறை உடனடியாக அறிவித்தது. ஆனால் உடலைப் பார்த்தவர்களுக்கு ஒன்று புரிந்தது. முகத்தில் காயங்கள் இருந்தன. ஆடைகள் பாதியாகக் கிழிந்திருந்தன. அதுபோக பின்னாட்களில் செய்திகளில் வெளியான புகைப்படங்களில் அந்தக் காயங்கள் தெளிவாகத் தெரிந்தன. ‘சாதாரண விபத்தில் இப்படிக் காயம் ஏற்படாது’ என்று ஐயத்தை வெளிப்படுத்தினார்கள் பல நிருபர்கள். மனைவி ரேணுகா ஸ்ரீவாஸ்தவா தெளிவாகச் சொன்னார்: ‘இது விபத்தல்ல. அவரை மிரட்டியவர்கள் செய்தது.’
உடல் கூராய்வு நடந்தது. அதன் பிறகு காவல்துறை தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. ‘விபத்து’ என்று சொன்ன அதே காவல்துறை, ‘இனி குற்றவியல் விசாரணை தொடங்குகிறோம்’ என்று அறிவித்தது.
இதில் நகைப்பே அடையாளம் தெரியாத நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதுதான். ‘அடையாளம் தெரியாத நபர்கள்’ மீது வழக்கு என்றால், டிஜிபிக்கு எழுதிய கடிதத்தில் அவர் யாரைக் குறிப்பிட்டார் என்று விசாரிக்கவில்லையா? அந்தக் கடிதம் டிஜிபி அலுவலகத்தில்தான் இருந்தது. ஆனால் என்ன ஆனது என்று இன்றும் விடை தெரியவில்லை.
காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி எனப் பல கட்சிகளின் தலைமைகள் குரல்கொடுத்தன. வழக்கம் போலவே, சர்வதேச அமைப்புகள் கண்டித்தன. குறிப்பாக, சர்வதேச பத்திரிகையாளர் பாதுகாப்பு மையம், ‘அனைத்து மிரட்டல்களும் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். இந்த விமரிசனச் செய்திக்கு மரண தண்டனை கிட்டக்கூடாது’ என்று தெரிவித்தது.
உத்தரப் பிரதேசத்தின் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌர்யா வருத்தம் தெரிவித்தார். அவ்வளவுதான். விசாரணை என்ன ஆனது என்ற கேள்விக்கு பதிலில்லை. விசாரணை என்ன ஆனது என்றும் தெரியவில்லை. இப்படி ஒரு சூழலில் இந்த வழக்கின் நிலை குறித்துத் தேடும்போது, நமக்குக் கிடைத்த அண்மைத் தகவல் இதுதான்.
உத்தரப் பிரதேச காவல்துறை டிஜிபி முகுல் கோயலிடம் விசாரணை நிலை குறித்து அறிய சிபிஜே அமைப்பு தொடர்பு கொண்டது. ஆனால், பதில் வரவில்லை. கடந்த மார்ச் 2025 வரை சிபிஜேயின் பதிவேட்டில் இந்த வழக்கு உறுதி செய்யப்படாதது என்றே வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது, எந்த முன்னேற்றம் குறித்தும் தகவல் இல்லை என்று பொருள்.
தெளிவாகச் சொல்வதானால், யார் கைது செய்யப்பட்டார்கள் என்று தெரியவில்லை. தீர்ப்பு வந்ததா என்று தெரியவில்லை.
சுலப் ஸ்ரீவாஸ்தவா (ஜூன், உ.பி.), சென்னகேசவலு (ஆகஸ்ட், ஆந்திரா), ராமன் கஷ்யப் (அக்டோபர், உ.பி.) என 2021இல் மட்டும் மூன்று இதழியலாளர்கள் கொல்லப்பட்டனர். மூவரும் தங்கள் மாவட்டங்களில் மட்டுமே அறியப்பட்டவர்கள். மூவரும் அதிகாரத்திற்கு எதிராக எழுதியவர்கள். மூன்று வழக்குகளிலும் தீர்ப்பு இன்னும் இல்லை.
(தொடரும்)

