இந்தியாவில் நடந்த பத்திரிகையாளர் படுகொலைகளில், சசிகாந்த்தின் கொலை வித்தியாசமானது. மற்ற சம்பவங்களைப்போல் மிரட்டல், புகார் என எதற்கும் இதில் இடமில்லை. காலையில் ஒரு செய்தி வெளியாகி, அதன் விளைவாக அன்று இரவுக்குள் நடந்த மரணம் இது. ஒரே நாளில் என்னதான் நடந்தது? யார் இந்த சசிகாந்த்?
மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டம், ராஜாபூர் பகுதியைச் சேர்ந்த செய்தியாளர் சசிகாந்த் வாரிஷே. வயது 48 எனினும் 25 வயதுக்குரிய துடிப்பும் சுறுசுறுப்பும் கொண்டவர் என்று சக நண்பர்கள் மத்தியில் பெயருண்டு. மகாநகர் டைம்ஸ் என்ற மராத்தி மொழியில் வெளியாகும் உள்ளூர் நாளிதழில் பணிபுரிந்து வந்தார். தன் அம்மா, மனைவி, 19 வயது மகன் ஆகியோரோடு அதே ஊரில் வசித்து வந்தார்.
ரத்னகிரி என்பது மகாராஷ்டிராவின் கொங்கண் பகுதியில் உள்ள கடலோர மாவட்டம். அங்கு இந்திய அரசு ஒரு மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை உருவாக்க (Ratnagiri Refinery and Petrochemicals Ltd. – RRPCL) திட்டமிட்டிருந்தது. அருகிலுள்ள பார்சு என்ற கிராமப் பகுதியில் நிறுவ முன்மொழியப்பட்ட அந்தத் திட்டத்திற்காக ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களின் 17 கிராமங்களில் இருந்து மக்கள் இடம்பெயர வேண்டியிருந்தது. மேலும், பெரும் சுற்றுச்சூழல் சேதம் ஏற்படும் என்றும் சூழலியலாளர்கள் தெரிவித்திருந்தனர். இது போராட்டமாகத் தொடர்ந்து கொண்டிருந்தது. இந்தப் போராட்டம் குறித்துத் தொடர்ந்து செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்தார் சசிகாந்த். இதற்கிடையில் நிலம் கையகப்படுத்த ஒரு நிலத்தரகர் மூலம் வேலையைச் செய்துகொண்டிருந்தது உள்ளூர் நிர்வாகம்.
நிலம் கையகப்படுத்தும் பணியில் முக்கியப் பங்கு வகித்த ஒரு நிலத்தரகர்தான் பண்டரிநாத் அம்பேர்கர். இவர், இத்திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்த ஊர் மக்களை மிரட்டுவதாகவும், சட்டவிரோதமாகச் சில நிலங்களைக் கைப்பற்ற முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் வெளியாயின. அதையும் விசாரித்தார். தொடர்ச்சியாக தன் விசாரணை முடிவுகளை பத்திரிகையில் வெளியிட்டும் எழுதி வந்தார். அந்த ஒரு கட்டுரை வெளியாகும் வரையில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது.
2023 பிப்ரவரி 6 அன்று காலை வெளியான கட்டுரையில் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை வெளியாகவில்லை. குற்றசாட்டை நிரூபிக்கும் ஆதாரங்கள் வெளியாகின. தெளிவாகவும் விரிவாகவும் பண்டரிநாத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளைப் படங்களுடனும் பெயர்களுடனும் பட்டியலிட்டது அக்கட்டுரை. ஊர் முழுக்கப் பரவி, பின் வாட்சப் வழியே எல்லைகள் கடந்து பயணிக்கத் தொடங்கியது.
பண்டரிநாத்தின் பார்வையில் படாமலா இருக்கும்? வாட்சப் வழியே வந்து சேர்ந்தது செய்தி. படித்தார். கோபம் கொப்பளிக்க சசிகாந்த்தைத் தேடினார். வேறு வேலையாக வெளியில் வந்திருந்த சசிகாந்த், அருகிலுள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் தனது பைக்குக்கு எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்தார்.
அவ்வளவுதான். விர்ரென்று விரைந்தது பண்டரிநாத்தின் கார். வேகமாக தனது காரைத் திருப்பினார். இரண்டாம் யோசனைக்கே இடமில்லாமல், நேராகச் சென்று சசிகாந்த்தை மோதினார். மோதியதோடு நிறுத்தவில்லை, வாகனத்துக்குள் சிக்கிய சசிகாந்த்தின் பைக்கோடு சேர்த்து சில மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்றது கார். பின் நிறுத்தாமல் அங்கிருந்து தப்பினார்.
எல்லாம் பரபரப்பாவதற்குள் அனைத்தும் முடிந்துவிட்டது. சசிகாந்த்தை முதலில் அருகிலிருந்த சிவில் மருத்துவமனைக்கும், பிறகு நகர மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். பயனில்லை. பின், கோமா நிலையில் கோலாப்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், உடல் உயிரைத் தாங்கும் திறனை இழந்திருந்தது. பிப்ரவரி 7 காலை உயிரிழந்தார்.
சட்டம் தன் கடமையைச் செய்தது. பிப்ரவரி 7ஆம் தேதி மாலையே பண்டரிநாத் கைது செய்யப்பட்டார். மரணத்துக்குக் காரணமான குற்றம் என்று முதலில் குறிக்கப்பட்டது. பின்னர், பிப்ரவரி 8ஆம் தேதி கொலை வழக்கு சேர்க்கப்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய அம்சம், வழக்கமான தண்டனைச் சட்டப் பிரிவுகளுடன் மகாராஷ்டிரா ஊடகவியலாளர்கள் பாதுகாப்புச் சட்டம் 2017இன் கீழும் வழக்கு பதிவு ஆனது (ஏட்டளவிலேனும் சிறப்பான பாதுகாப்பை உறுதி செய்ய நினைத்த சட்டம் இது). இதன்படி, கட்டாயத் தனிப்படையாக, 11 உறுப்பினர்கள் கொண்ட எஸ்ஐடி அமைக்கப்பட்டது. துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை தொடங்கியது.
ஜாமீனுக்காக வழக்குத் தொடர்ந்த பண்டரிநாத்துக்கு மாவட்ட நீதிமன்றமும் மறுப்பு தெரிவித்தது. பாம்பே உயர் நீதிமன்றமும் மறுத்தது. இந்த விசாரணையில், நீதிபதி மாதவ் ஜம்தார், மிகக் கடுமையாகக் கண்டித்ததோடு, ‘குற்றம் சாட்டப்பட்ட நபர் வலுவான அரசியல் தொடர்புகளும் செல்வாக்கும் மிக்கவர். ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை மிரட்ட வாய்ப்பு அதிகம். இந்த வழக்கில் அவரது ஈடுபாடு தெளிவாகத் தெரிகிறது’ என்றும் பதிவு செய்தார்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இது ஓர் அரசியல் கொலை என்று தேசியவாதக் காங்கிரஸ் பேச, அப்போதைய துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ‘இந்த வழக்கில் தவறிழைத்த யாரும் தப்ப மாட்டார்கள்’ என்று பதிலளித்தார். மேலும், இது திட்டமிட்ட கொலைதான் என்று தெரிந்தே இந்த விசாரணை தொடங்கியது. மாநிலம் முழுக்க பேசுபொருளாகவும் ஆனது.
அடடா, மற்ற பத்திரிகையாளர் கொலைச் சம்பவங்களைப் போலல்லாமல், இதில் வேக வேகமாக விசாரணையும் அதில் முன்னேற்றமும் நடக்கிறதே என்று தோன்றலாம். ஆனால் அது உண்மையல்ல.
‘சசிகாந்த்தின் கொலை இந்தத் திட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை நசுக்கும் உள்நோக்கத்தின் விளைவு. இந்தச் சுத்திகரிப்பு ஆலைக்கான நில கையகப்படுத்தலை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று போராடிவந்த மக்களும் அவர்களது அமைப்பும் கூறின. இதற்கிடையில் சசிகாந்த்தும் ஆலை நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றவர்தான், அதனால்தான் இருவருக்குள்ளும் பிரச்னை என்று வதந்திகள் பரவின.
சர்வதேசப் பத்திரிகையாளர் சங்கம், பத்திரிகையாளர் பாதுகாப்புக் கூட்டமைப்பு உள்ளிட்ட உலகளாவிய அமைப்புகள் வழக்கம்போல் கண்டனத்தைப் பதிவு செய்தன. ஆனால், காலையில் செய்தி வரும் அன்றே அந்தச் செய்தியாளர் கொல்லப்படுவார் என்ற சூழல் வழக்கத்துக்கு மாறாக, பேராபத்தை உணர்த்தியது. வழக்கை விட்டுவிடாதீர்கள் என்று அழுத்தம் தந்த இந்த அமைப்புகள், இந்த முறை வழக்கைப் பின் தொடர ஆரம்பித்தன.
தற்போதைய நிலவரப்படி (மே 16, 2026 வரை) பண்டரிநாத் ஜாமின் கிடைக்காமல் இன்னும் காவலில்தான் இருக்கிறார். சொல்லப்போனால், ஜாமீன் கிடைக்கவில்லை. வழக்கு விசாரணை நடக்கிறது. ஆனால், தீர்ப்பு வரவில்லை.
அதேசமயம், எதற்காக இந்தச் செய்திகளை வெளியே கொண்டுவந்தாரோ அந்த ரத்னகிரி ஆலை திட்டம் என்ன ஆனது என்று 2026 மார்ச் வரை தெளிவான தகவல் இல்லை. அரசு இதை மாற்றியிருக்கலாம். அல்லது கிடப்பில் போட்டிருக்கலாம். ஆனால் அதைக் கேள்விக்குட்படுத்திய செய்தியாளர் இன்று செய்தியாக மட்டுமே இருக்கிறார். நம்மோடு இல்லை. நிச்சயம் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கைதான் எஞ்சியிருக்கிறது.
(தொடரும்)

