இந்தியாவின் ஊரகப் பத்திரிகையாளர் கொலைகளுள் உறையவைக்கும் 3 கொலைகளில் இதுவும் ஒன்று (மற்றவை ஜகேந்திர சிங், முகேஷ் சந்திரகர் கொலைகள்). என்னதான் நடந்தது? யார் இவர்?
பிகாரின் மதுபனி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரமான பெனிபட்டியில் இயங்கி வந்தது பிஎன்என் நியூஸ். அந்த உள்ளூர் பத்திரிகையின் முக்கியமான செய்தியாளர் அவிநாஷ் ஜா. அவிநாஷ் ஜா என்ற பெயரில் எழுதி வந்த இவரது உண்மையான பெயர் புத்திநாத் ஜா. 22 வயது இளைஞர். குடும்பத்தில் மூன்றாவது பிள்ளை. பெனிபட்டியில் ஒரு சிறிய மருத்துவமனை வைத்திருந்தார். அதுதான் முதன்மையான வருமானம். ஆர்வம் காரணமாகப் பத்திரிகையில் பணியாற்றி வந்தார்.
ஊரகப் பத்திரிகைளுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது மிகப்பெரிய ஆயுதம். அந்த வரிசையில், மதுபனி மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த போலி மருத்துவமனைகளைக் கண்டுபிடித்து, அவற்றின் பெயர்களை முகநூலில் அம்பலப்படுத்தி வந்தார் அவினாஷ். இதற்காக, ஆர்டிஐ மூலமாக ஆதாரங்களும் திரட்டினார். தொடர்ந்து தகவல்களை வெளியிட்டு வந்த நிலையில், அரசு சார்பில் கெடுபிடி சோதனைகள் நடந்ததப்பட்டன. இதனைத் தொடர்ந்து சில மருத்துவமனைகள் மூடப்பட்டு பலவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
குறிப்பாக மாஜினி ஜனகி சேவா சதன், ஷிஃபா பாலி கிளினிக், சுதாமா ஹெல்த் கேர், அன்ஷு ஃபர்ஸ்ட் எய்ட் சென்டர், சோனாலி மருத்துவமனை உட்பட பல மருத்துவமனைகள் மூடப்பட்டன. இங்கிருந்துதான் பிரச்னை விரோதமாக சூல் கொண்டது.
போலி மருத்துவமனைகள் மதுபனி மாவட்டத்தில் ஒரு லாபம் கொழிக்கும் தொழில். இதற்காகச் செல்வாக்குள்ள பல்வேறு பெருந்தலைகள் இயங்கி வந்தன. தனி சிண்டிகேட்டாகவே செயல்பட்டு வந்த இந்தப் போலி மருத்துவமனையினர், தொழில் போட்டியில் அவிநாஷ் ஜா செய்யும் வியாபாரத் தந்திரமாகவே அவருடைய பணியைக் கருதினார்.
தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டே இருந்தன என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பின்னர் தெரிவித்தார். ஆனால் மிரட்டல் வரும்போதெல்லாம், யார்
மிரட்டினரோ அவர்களின் சட்டவிரோத மருத்துவமனையை அம்பலப்படுத்துவது அவினாஷின் ஸ்டைல். இதற்காக லட்சக்கணக்கில் பண பேரம் நடந்தும் அதைத் தவிர்த்துள்ளார் அவிநாஷ். தொழிலோ பணமோ என் குறி அல்ல. மக்கள் ஏமாறுவது நிறுத்தப்பட வேண்டும் என்றார். தொடர்ந்து, போலிகளை அம்பலப்படுத்தும் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருந்தது. சாம தான பேதங்கள் முடிந்துவிட்டது, இனி பேசிப் பலனில்லை.
அன்று நவம்பர் 9ஆம் தேதி, இரவு 9 மணி. ஒரு குறுகிய சந்தில் இருந்த வீட்டிலிருந்து பலமுறை வெளியேறுகிறார். தெரு முனையில் நடக்கிறார். மொபைலில் பேசுகிறார். திரும்பவும் வீடு வருகிறார். திரும்பவும் வெளியேறுகிறார். இப்படிப் பரபரப்பாகவே 1 மணி நேரம் அவர் இருந்ததை சிசிடிவி காட்சிகள் உறுதி செய்தன.
கடைசியாக மஞ்சள் சட்டை அணிந்தபடி, வீட்டிலிருந்து 9.58 மணிக்கு வெளியேறுகிறார். லோஹியா சௌக் என்ற பகுதிக்கு அவர் வந்ததும் சிசிடிவிமூலம் உறுதியானது. பின், பெனிபடி காவல் நிலையத்தைக் கடந்து சென்றார். அப்போது அவரைப் பார்த்ததாக ஒரு கடைக்காரரும் தகவல் சொன்னார். அதுதான் கடைசித் தகவல்.
அடுத்த நாள் காலை வீட்டினர் எழுந்தபோது அவர் திரும்பி வந்திருக்கவில்லை. பைக்கூட வீட்டிலேயே இருந்தது. அவரது மருத்துவமனை திறந்திருந்தது. மடிக்கணினி இயங்கிக்கொண்டே இருந்தது. ஆனால் அவர் மட்டும் இல்லை. ஏற்கெனவே மிரட்டல்கள் வந்திருந்த நிலையில், முந்தைய இரவு பதற்றமாகவும் இருந்தார் என்பதை வைத்து, காவல்நிலையத்தில் புகாரளித்தது குடும்பம்.
நவம்பர் 10ஆம் தேதி காலை 9 மணிக்கு அவரது மொபைல் சிக்னலைக் கண்டுபிடித்தது காவல்துறை. பெனிபட்டி காவல் நிலையத்திலிருந்து 5 கி.மீ. மேற்கே, பெட்டூன் என்ற கிராமத்தில் சிக்னல் தெரிந்தது. ஆனால், சிக்னல் மட்டும்தான் அங்கு கிடைத்தது. அவர் கிடைக்கவில்லை. அன்று முழுவதும் தேடியும் கிடைகவில்லை. மறுநாளும் கிடைக்கவில்லை. தேடல் தொடர்ந்தது.
நவம்பர் 12ஆம் தேதி, அவிநாஷின் உறவினர் விகாஸிற்கு ஓர் அழைப்பு வந்தது. ‘பெட்டூன் கிராமம் வழியாகப் போகும் நெடுஞ்சாலையில் ஓருடல் கிடக்கிறது.’ பதற்றத்துடன் சென்று பார்த்தால் பெனிபட்டி-பசைத்தா நெடுஞ்சாலையின் ஓர் அரச மரத்தின்கீழ் சாக்குப்பை ஒன்று கிடந்தது. சாக்குபைக்குள் இருந்தது உடல். முழு உடல் அல்ல. அரைகுறையாக. அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல் எரிக்கப்பட்டிருந்தது. விரலில் இருந்த மோதிரம், காலில் இருந்த ஓர் அடையாளம், கழுத்தில் இருந்த சங்கிலி என இந்த மூன்றையும் வைத்து புத்திநாத் ஜா என்று அடையாளம் கண்டது குடும்பம்.
யார் செய்தது? பின்னணி என்ன? மிரட்டல்களைத் துழாவத் தொடங்கியது காவல்துறை. விசாரணையில் ஒரு முக்கியமான தகவல் வெளியானது. நவம்பர் 9 இரவு 10 மணிக்கு புத்திநாத் ஜா கடைசியாக பேசியது பூர்ணகலா தேவி என்ற ஒரு பெண்ணிடம். ஆனால், நவம்பர் 10ஆம் தேதி நான் ஊரிலேயே இல்லை. என் பெற்றோர் வீட்டில் இருந்தேன் என்று சொன்னார் தேவி. விசாரணையில் மிக எளிமையாக அது பொய் என்று கண்டுபிடிக்கப்பட்டது. தீவிர விசாரணைக்குப் பின்னர் உண்மையை ஒப்புக்கொண்டார். தேவியின் வாக்குமூலம் இதுதான்.
‘நவம்பர் 9, இரவு 10 மணிக்கு அனுராக் ஹெல்த்கேரில் அவிநாஷைச் சந்தித்தேன். இருவரும் வெளியே வந்தபோது அங்கே ஐந்து பேர் காத்திருந்தனர். ரோஷன் குமார், பிட்டு குமார் பண்டித், தீபக் குமார் பண்டித், பவன் குமார் பண்டித், மணிஷ் குமார். அவர்கள் அவிநாஷை கே.கே.சௌத்ரியின் மருத்துவமனை (அருகிலிருந்த மற்றொரு சிறு மருத்துவமனை) பக்கம் இழுத்துச் சென்றனர். நான் அங்கேயே நின்று பார்த்தேன். யாரிடமும் சொல்லவில்லை. மற்றபடி ஏதும் தெரியாது.’
கைதான ஆறு பேரில் ரோஷன் குமார் ஷா ஒரு தனியார் மருத்துவமனையின் உரிமையாளர். பூர்ணகலா தேவி தனியார் கிளினிக்கில் செவிலியர். சட்டவிரோத மருத்துவமனைகளை அம்பலப்படுத்தியதற்காகக் கொல்லப்பட்டார் அவிநாஷ் ஜா என்று குற்றம் சட்டப்பட்டது. ஆனால், வழக்கம்போல இதிலும் காதல், மணமீறிய உறவு என்று கொலைக்குக் கோணங்கள் கற்பித்தன வதந்திகள்.
மதுபனி மாவட்ட எஸ்பி டாக்டர் சத்யபிரகாஷ் பேசியபோது, இந்தக் கொலைக்கு காரணம் ஒரு ‘காதல் முக்கோணம்’ என்றார். அவிநாஷுக்கும் பூர்ணகலா தேவிக்கும் இடையில் உறவு இருந்தது. எனவே, தேவியின் கணவர்தான் இந்தச் சதியை செய்தார் என்றது காவல்துறை. இதைக் கேட்ட குடும்பம் கொதித்தது. அவிநாஷின் அண்ணன் திரிலோக் ஜா நேரடியாக மருத்துவ மாஃபியா கும்பலைக் குற்றம் சாட்டினார்.
பிஎன்என் நியூஸ் தலைமை ஆசிரியர் கன்னையா காஷ்யப் மற்றும் உறவினர் விகாஸ் இருவரும் பத்திரிகையாளர் பாதுகாப்பு மையத்திடம் அனைத்தையும் தெளிவுபடுத்தினர். காவல்துறை சொல்லும் இந்தக் ‘காதல் கதை’ அவர்களது அதிகாரப்பூர்வ அறிக்கையில் இல்லை. வெறுமனே ஊடகங்களுக்கு முன் இப்படிச் சொல்லி பெயரைக் கெடுக்கிறார்கள் என்று அவர்கள் தெரிவித்தனர். அவிநாஷ் ஜா அவரது இதழியல் பணிக்காகவே கொல்லப்பட்டதாக இவர்கள் இருவரும் நம்புகின்றனர். காவல்துறைக்கு ‘காதல்’ தெரிகிறது. மக்களுக்கு உண்மை தெரிகிறது. எஸ்.பி. மன்னிப்பு கேட்கவேண்டும் என்று போராட்டங்களும் நடந்ததன். (அடையாளப் போராட்டங்கள்தான்).
ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் போன்ற சர்வதேச அமைப்புகள் கடுமையான கண்டனத்தோடு அதிர்ச்சியையும் பதிவு செய்தன. நேரடியாக முதலமைச்சரின் பெயரைக் குறிப்பிட்டு நடவடிக்கை கோரின.
‘அவிநாஷ் ஜாவின் கொடூரமான மரணம் அதிர்ச்சியளிக்கிறது. தன் பத்திரிகை நேர்மைக்காகவே அவர் உயிரைக் கொடுத்தார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதில் பிகார் முதலமைச்சர் நீதீஷ் குமார் ஒரு சுயேச்சையான விசாரணையை உத்தரவிட வேண்டும். இந்தியாவில் பத்திரிகையாளர்களுக்கு எதிரான வன்முறைக்கு தண்டனையில்லாமல் போவது இனியும் நிகழக்கூடாது’ என்று கண்டித்தது. ஆனால், அந்தக் கண்டனம் வரும்போது கடந்த 6 மாதங்களில் கொல்லப்பட்ட 5ஆவது பத்திரிகையாளராக அவிநாஷ் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (முன்னதாக ரமண் கஷ்யப், சென்னகேசவுலு, சுலப் ஸ்ரீவஸ்தவா, மனீஷ் குமார் சிங் ஆகியோர் கொல்லப்பட்டிருந்தனர்).
இந்தச் சம்பவம் நடந்த 2021இல் உலகப் பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியா 180 நாடுகளின் வரிசையில் 142ஆவது இடத்தில் இருந்தது. சிபிஜே குளோபல் இம்ப்யூனிட்டி இன்டெக்ஸ் பட்டியலில் 12ஆவது இடம். அதாவது பத்திரிகையாளர் கொலைகளுக்குத் தண்டனை இல்லாமல் போவதில், உலகிலேயே 12ஆவது இடம் பிடித்து மிகவும் பொறுப்பற்ற நாடு என்று பெயரெடுத்திருந்தது. 2025 நிலவரப்படி இந்தியா 13ஆவது இடத்தில் உள்ளது.
இந்த வழக்கு தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது. குடும்பம் நீதிக்காக காத்திருக்கிறது. தன் இறப்புக்கு 24 நாட்கள் முன் அவிநாஷ் எழுதிய வரிகள் இவை. ‘மிரட்டல்கள் வரட்டும். ஆனால், நான் உயிரோடு இருக்கும் வரை போராடுவேன். போராடுவதற்கான கால அவகாசமாகவே தன் வாழ்நாளைக் கருதும் போராளிகளின் மனநிலை இது. நீதிக்கான அவிநாஷின் போராட்டம் தொடர்ந்தபடியே இருக்கிறது.

