நிழலுலக தாதாக்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். செய்திகளில் தாவூத் இப்ராஹிம், சோட்டா ராஜன் என்ற பெயர்கள் அடிபட்டுப் பார்த்திருப்போம். அந்த நிழலுலக நடவடிக்கைகளை மக்களுக்காக எழுதிக் கொண்டிருந்தவர் பத்திரிகையாளர் ஜோதிர்மய் டே.
அன்று ஜூன் 11, 2011. மதியம் 3 மணியளவில் மும்பையிலிருந்து ஜோதிர்மய் டே தன் இருசக்கர வாகனத்தில் காட்கோபார் (அவரது அம்மா வீடு) பகுதியிலிருந்து தனது வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்தார்.
ஹீராநந்தானி கார்டன் பகுதிக்கு அருகே நான்கு பேர் மூன்று இருசக்கர வாகனங்களில் காத்திருந்தனர். அவர் வருவதைப் பார்த்ததும், வாகனங்களில் பின் தொடர்ந்தனர். கைத்துப்பாக்கியால் (.32 காலிபர்) ஐந்து முறை சுட்டனர். தலையில் இரண்டு, நெஞ்சில் மூன்று. சம்பவ இடத்திலேயே விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது இறந்திருந்தார்.
22 ஆண்டு கால இதழியல் வாழ்க்கை. ஒரு பட்டப்பகலில் துப்பாக்கிக் குண்டுகளால் துடிக்கத் துடிக்க பறிபோனது. ஆனால், கொன்றவர்களுக்கு இவர் யார் என்றே தெரியாது. இது ஓர் ஒப்பந்தக்கொலை. எளிதாகச் சொல்வதானால் கூலிப்படையின் கொலை.
கூலிப்படை வைத்துக் கொல்லும் அளவுக்கு யார் இந்த ஜோதிர்மய்? என்ன செய்தார்? ஜோதிர்மய் டே, ஜே டே என்று அழைக்கப்படுவார். சக செய்தியாளர்கள் இவரை ‘கமாண்டர் ஜே’ என்று அழைத்தனர். செய்தியாள்கையில் அவர் காட்டும் கண்டிப்பு காரணமாக அப்படி ஒரு செல்லப்பெயர். 1955இல் அப்போதைய பம்பாயில் பிறந்தவர். இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்தில் இதழியல் பணிகளைத் தொடங்கினார். பின்னர் இந்தியன் எக்ஸ்பிரஸ். இறுதியாக மிட் டே நாளிதழில் குற்றம் மற்றும் புலனாய்வுப் பிரிவு ஆசிரியராகப் பணியாற்றினார். 22 ஆண்டுகளாக மும்பையின் குற்றவுலகைத் தொடர்ந்து விசாரித்தவர். அங்கிருந்துதான் பிரச்னை தொடங்குகிறது.
தாவூத் இப்ராஹிம், சோட்டா ராஜன், அபு சலீம் என மும்பையில் திகிலைக் கிளப்பிய நிழலுலக மனிதர்கள் குறித்து நேரடியாக எழுதியவர் ஜே டே. பல்வேறு புள்ளிகளை இணைப்பதும் குற்றச் சம்பவங்களை விசாரிப்பதும் இவருக்குக் கைவந்த கலை. தொடர்ந்து எழுதிவந்தார்.
மும்பை குற்றவுலகைப் பற்றி இரண்டு புத்தகங்கள் எழுதியுள்ளார். Zero Dial: The Dangerous World of Informers மற்றும் Khallas.
‘இதை எழுதாதீர்கள். உயிருக்கு ஆபத்து வரும் என்று பலர் எச்சரித்தபோதும் உண்மையின் பக்கம் நிற்பதுதான் நம் வேலை என்று சொல்வார். அவர் தன் தைரியமான இதழியலுக்காக உயிரைப் பலி கொடுத்தவர். எங்களுக்கெல்லாம் முன்மாதிரி’ என்று மிட் டே நாளிதழ் குறிப்பிட்டது.
ஆம், தன் தைரியமான இதழியலுக்காக உயிரைக் கொடுத்தபோதும் அவர் நிழலுலகம் பற்றித் தனது அடுத்த நூலை எழுதிக்கொண்டிருந்தார். அதற்கான விசாரணைகள், தரவுகள் திரட்டல் என இயங்கிக்கொண்டிருந்த நேரத்தில்தான் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கொலை எப்படி நடந்தது என்பதை சிசிடிவி காட்சிகள் தெளிவாக்கின. கண்காணிப்பு கேமரா காட்சிகளில் நான்கு பேர் ஜே டேயை அவர் அம்மா வீட்டிலிருந்தே பின்தொடர்வது தெரிந்தது. காட்கோபார் முதல் பவய் வரை திட்டமிட்டுப் பின்தொடர்ந்து, கொன்று முடித்தனர். அடுத்த 16 நாட்களில் (ஜூன் 27) 7 பேரைக் கைது செய்தது காவல்துறை.
சரி, யார் இதைச் செய்தது? இந்தக் கொலையைத் திட்டமிட்டவர் ராஜேந்திர சதாசிவ் என்று காவல் இணை ஆணையர் அரூப் பட்நாயக் செய்தியாளர் கூட்டத்தில் சொன்னார். ராஜேந்திர சதாசிவ் என்பது சோட்டா ராஜனின் இயற்பெயர். இந்தக் கொலைக்காக ரூ.5 லட்சம் கூலியாகக் கொடுக்கப்பட்டது என்றும் கூறினார்.
இந்தியாவின் மிகவும் தேடப்பட்ட நிழலுலகக் கும்பலாளி அவர். அந்தச் சமயம், வெளிநாட்டில் இருந்தார். ஆனால் தொலைபேசியில் இந்த நடவடிக்கைக்கு உத்தரவிட்டிருக்கலாம் என்று காவல்துறை சொன்னது.
சோட்டா ராஜன் ஏன் இவரைக் கொன்றார்? இரண்டு காரணங்கள் சொல்கிறார்கள்.
ஒன்று மிட் டே இதழில் இவர் எழுதிய கட்டுரைகள் ராஜனுக்கு எதிராக இருந்தன. இரண்டு ஜே டேயின் வெளியிடப்படாத புத்தகங்களில் சோட்டா ராஜனை அம்பலப்படுத்தும் தகவல்கள் இருந்தன என்று வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் சொன்னார்கள்.
இதில் இன்னொரு திருப்பமும் உண்டு. ஏஷியன் ஏஜ் நாளிதழின் நிருபர் ‘ஜிக்னா வோரா’ மீதும் குற்றம் சாட்டப்பட்டது. ஜே டே வீட்டு முகவரியும் இருசக்கர வாகனப் பதிவு எண்ணையும் ராஜன் கும்பலுக்குத் தகவல் கொடுத்ததாக அவரும் கைது செய்யப்பட்டார். ஆனால் 2018 இல் நீதிமன்றம் அவரைப் போதுமான ஆதாரம் இல்லை என்று விடுதலை செய்தது.
ஜே டே கொல்லப்பட்ட சில நாட்களில் மும்பையில் நூற்றுக்கணக்கான நிருபர்கள் தெருவில் இறங்கினர். சிலர் உண்ணாவிரதம் இருந்தனர். ‘நிருபர்களுக்கு அரசுப் பாதுகாப்பு கொடுங்கள்’ என்று கோரினர்.
மூத்த நிருபர் பிரசாத் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரினார். மொத்தத்தில் மும்பையின் செய்தியாளர்கள் கூட்டம் இந்தக் கொலையால் அதிர்ந்து போயிருந்தது. ஆனால், சோட்டா ராஜனைக் கைது செய்வது அவ்வளவு எளிதானதல்ல.
சோட்டா ராஜன் ஒன்றும் சாதாரண நிழலுலக மர்ம நபர் கிடையாது. மும்பை நிழலுலகைத் தன் கையில் வைத்திருந்த தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தவர்.
1988 முதல் 27 ஆண்டுகள் இந்தியாவிலிருந்து தலைமறைவாக இருந்தார். ஆஸ்திரேலியா, மலேசியா என பல நாடுகளில் வசித்தார். இந்திய போலீஸ் தேடிக்கொண்டிருந்தது. ஆனால், சட்டத்தின் கண்களிலிருந்து நீண்ட காலத்துக்கு தப்பி இருக்க முடியாது. அந்த நாளும் வந்தது.
2015 அக்டோபர் 25 அன்று அதாவது ஜோதிர்மய் கொல்லப்பட்ட 4 ஆண்டுகள் கழித்து இந்தோனேசியாவின் பாலி விமான நிலையத்தில் பிடிபட்டார். நவம்பர் 6 அன்று இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். அங்கிருந்து டெல்லி திகார் சிறையில் வைக்கப்பட்டார். ஜோதிர்மய் கொலை வழக்கும் விசாரணையில் தொடர்ந்து கொண்டிருந்தது.
ஒரு பத்திரிகையாளர் கொலை வழக்கில் தீர்ப்பு வருவது அரிதினும் அரிதான அதிசயம். ஆனால், அந்த அதிசயம் 2018இல் நடந்து.
ஜே டே கொல்லப்பட்ட 7 ஆண்டுகள் கழித்து 2018 மே 2ஆம் தேதி, மும்பை சிறப்பு நீதிமன்றம் (MCOCA நீதிமன்றம்) தீர்ப்பளித்தது. சோட்டா ராஜனுடன் சேர்த்து 8 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஒருவர் விடுதலை செய்யப்பட்டார்.
ஜோதிர்மய் எழுதிய கட்டுரைகள் மற்றும் எழுதிக் கொண்டிருந்த புத்தகங்களால் ராஜன் கோபமடைந்தார். அதனாலேயே இந்தக் கொலை நடந்தது என்று நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டது. தன் பணிக்காகக் கொல்லப்பட்ட இந்தப் பத்திரிகையாளர் வழக்கில், வரவேற்கத்தக்க தீர்ப்பு கிடைத்தது என்று பத்திரிகையாளர் பாதுகாப்பு மையம், ரிப்போர்ர்டஸ் வித்தவுட் பார்டர்ஸ் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் தெரிவித்தன.
அபூர்வமான ஒரு கொலை வழக்காக இது வரலாற்றில் நிலைபெற்றது.
(தொடரும்)

