Skip to content
Home » முறிந்த பேனா #13 – ‘உங்கள் கட்டுரையில் தவறு இருக்கிறது!’

முறிந்த பேனா #13 – ‘உங்கள் கட்டுரையில் தவறு இருக்கிறது!’

2017, நவம்பர் 21. மதியம் 11:30 மணி. அன்றுதான் பத்திரிகையாளர் சுதீப் தத்தா பௌமிக், முதல்முறையாக அந்த வளாகத்துக்குள் நுழைகிறார். திரிபுரா மாநிலம், அகர்தலாவிலிருந்து 25 கிமீ தொலைவில் அமைந்துள்ள (திரிபுரா அரசின் துணை ராணுவப் படையான) திரிபுரா ஸ்டேட் ரைஃபிள்ஸ் படையின் இரண்டாம் பட்டாலியன் தலைமையகம் அது. தோளில் ஏகே 47 துப்பாக்கிகளைத் தூக்கிய வீரர்களின் கடுமையான பாதுகாப்பு வளையத்தில் இருந்த அந்த வளாகத்துக்குள் அவர் நடந்து சென்றார்.

ஏனெனில், அழைத்தது அதே பட்டாலியனின் தளபதிதான். ‘உங்கள் கட்டுரையில் தவறான தகவல் இருக்கிறது. நேரில் வந்து எங்களுக்கு விளக்கம் சொல்லுங்கள்’ என்று தளபதியிடமிருந்து அழைப்பு. அதை நம்பித்தான் அங்கு போனார்.

ஆனால், விளக்கம் சொல்லப் போனவர், வீடு திரும்பவேயில்லை. பிறகுதான் தெரிந்தது, துப்பு துலக்கிய பத்திரிகையாளரிடம் தங்கள் துப்பாக்கி வழியாக விளக்கம் கேட்டுவிட்டார்கள் என்று. இந்தியா முழுவதையும் உலுக்கிய கௌரி லங்கேஷ் கொலை நடந்து 2 மாதங்களில், இந்த மாநிலத்தில் மட்டும் நடைபெறும் இரண்டாவது பத்திரிகையாளர் கொலை இது.

ஏகே 47 துப்பாக்கியால் சுடப்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதே அவர் உயிரிழந்திருந்தார். பாதுகாப்புப் படையினருக்கும் பத்திரிகையாளருக்கும் இடையில் என்ன பிரச்னை? யார் இவர்? கொலை செய்யும் அளவுக்கு என்ன செய்தார்? எல்லாம் கட்டுரைகளால்தான். இதழியலுக்கான விலையாக இவரது உயிரையே வாங்கிவிட்டன அவர் எழுத்துக்கள்.

சுதீப் தத்தா பௌமிக், வயது 50. அகர்தலாவைச் சேர்ந்தவர். வங்காள மொழி நாளிதழான ஸ்யந்தன் பத்ரிகாவிலும், அதே பகுதியில் இருந்தபடி ‘வான்கார்ட்’ தொலைக்காட்சியிலும் நிருபராகப் பணியாற்றியவர். இருபது ஆண்டுகள் புலனாய்வு இதழியல் செய்தவர். அதிலும் குறிப்பாக காவல்துறையிலும் துணை ராணுவப் படைகளிலும் நடக்கும் ஊழல்களை அம்பலப்படுத்துவதுதான் இவரது தனிச்சிறப்பு.

‘யாரும் செய்யத் துணியாத – காவல்துறை ஊழலை விசாரிக்கும் – வேலையை, இருபது ஆண்டுகளாகச் செய்தவர் அவர்’ என்று அவர் பணியாற்றிய பத்திரிகையின் ஆசிரியர் சுபல் குமார் டே பெருமிதத்துடன் நினைவுகூர்கிறார். ஆனால், அந்த இதழியல்தான் அவரது உயிருக்கும் இறுதி முடிவை எழுதியது.

13 நவம்பர் 2017 அன்று ஸ்யந்தன் பத்ரிகாவில் ஒரு கட்டுரை வெளியானது. திரிபுரா ஸ்டேட் ரைஃபிள்ஸ் (டிஎஸ்ஆர்) இரண்டாம் பட்டாலியனின் தளபதி தபன் தெபர்மா ஆணை மீறல்களில் ஈடுபட்டிருப்பதாகவும், அங்குக் கணக்கில் காட்டப்படாத நிதி முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் ஆதாரங்களுடன் வெளியிட்டு குற்றம்சாட்டியது அக்கட்டுரை. ஒரு கட்டுரையோடு நிறுத்தவில்லை அந்த ஒரு வாரத்தில் மட்டும் நான்கு கட்டுரைகள் தொடர்ச்சியாக, ஆதாரங்களுடன் வெளியாயின.

கட்டுரைகள் வெளியானதும் பட்டாலியன் தளபதியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ‘உங்கள் கட்டுரை குறித்து விளக்கம் கேட்க விரும்புகிறேன். நேரில் வந்து விளக்கம் அளியுங்கள்’ என்றார் தளபதி.

அந்த அழைப்பைப் பற்றி பின்நாட்களில் ஸ்யந்தன் பத்ரிகா ஆசிரியர் சுபல் குமார் டே சொன்ன வார்த்தைகள் இன்றும் ஒலிக்கின்றன. ‘தளபதிதான் அவரை அலுவலகத்துக்கு வரச் சொன்னார். அந்த அழைப்புதான் அவரின் உயிரைப் பறித்தது.’

அழைப்பை ஏற்று, 21 நவம்பர் 2017 அன்று மதியம் 11:30 மணிக்கு பட்டாலியன் தலைமையகத்துக்குச் சென்றார் சுதீப். உள்ளே என்னதான் நடந்தது? காவல்துறை இதனைத் திருட்டு என்ற கோணத்தில் விவரித்து அறிக்கை வெளியிட்டது. திரிபுரா வடக்கு சரக காவல்துறை துணைத்தலைவர் அரிந்தம் நாத், பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்த செய்தி இது.

‘அந்தப் பத்திரிகையாளர், 2ஆம் பட்டாலியன் கமாண்டரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, கழிவறைக்குச் செல்ல அனுமதி கேட்டிருக்கிறார். பின்னர் கழிவறையிலிருந்து அவர் திரும்பியபோது, தனது மேசையிலிருந்த முக்கியமான கடிதத்தின் உரையை எடுத்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். சுதீப் அதை மறுக்கவே, அவரைச் சோதனையிடுமாறு தனது பாதுகாவலரிடம் கூறியிருக்கிறார் தபன் தெபர்மா. ஆனால், அதைப் பத்திரிகையாளர் சுதீப் தடுக்கவே, அதன் தொடர்ச்சியாக நடந்தவற்றின் விளைவாக, அந்தப் பாதுகாவலரின் பணிக்கான ஏகே-47 துப்பாக்கியால் சுட்டுள்ளார்.’

இந்த விளக்கத்தைப் பத்திரிகையாளர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. உண்மையை வெளியிடுமாறு தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. பாதுகாவலர் நந்தகோபால் ரியாங் அன்றே கைது செய்யப்பட்டார்.

ஆனால், ஸ்யந்தன் பத்ரிகா ஆசிரியர் இதன் மற்றொரு பரிமாணத்தை வெளியிட்டார். ‘இது ஒரு திட்டமிட்ட கொடூரமான கொலை. அந்தத் தளபதி அழைத்தார். இவர் போனார். அங்கு வாக்குவாதம் மூண்டது. பின்னர், மெய்க்காவலரிடம் சுடச் சொல்லி அந்தத் தளபதிதான் உத்தரவிட்டார்’ என்றதோடு பத்திரிகையாளர்களுக்கும் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

இந்த இரண்டில் எது உண்மை என்று தெரிய வேண்டுமே. ‘ஒரே ஒரு கேள்விதான். ஆயுதம் ஏந்திய வீரர்கள் நிறைந்த, ஏகே 47 துப்பாக்கிகள் உலவும் ஒரு ராணுவ வளாகத்துக்குள், விளக்கம் கேட்கப்பட வந்த ஒரு நிருபர் தளபதியின் மேஜையிலிருந்து உறையைத் திருடினார் என்பது நம்பத்தகுந்ததாக இல்லை’ என்று பிரசார் பாரதி உள்ளிட்ட பத்திரிகையாளர் அமைப்புகள் தெரிவித்தன. அதே சமயம் தளபதியின்மீது சந்தேகம் வலுத்தது. தளபதி மறுநாள் கைது செய்யப்பட்டார்.

நீதியின் முதல் அடி இதில் வேகமாகவே விழுந்தது. நவம்பர் 21 அன்றே மெய்க்காவலர் நந்தகோபால் ரியாங் கைது. மறுநாள், நவம்பர் 22 தளபதி தபன் தெபர்மாவும் கைது. அத்துடன் நிற்கவில்லை. சதிக்குற்றச்சாட்டின்கீழ் இருவருக்கும் பத்து நாள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டது.

ஆனால், வழக்கும் கைதுகளும் முடிவடையவில்லை. கட்டுரையில் தொடர்புடையோர், சதியில் தொடர்புடையோர் என்று கைது நடவடிக்கை தொடர்ந்தது. நவம்பர் 24 அன்று தலைமைக் காவலர் அமித் தெபர்மா, துப்பாக்கி வீரர் தர்மேந்திர குமார் சிங் உட்பட மொத்தம் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

திரிபுரா கொந்தளித்தது. நவம்பர் 23 அன்று மாநிலம் முழுவதும் கடைகள் மூடின. வாகனங்கள் நின்றன. பள்ளிகள் அடைபட்டன. மத்தியப் புலனாய்வு விசாரணை வேண்டும், முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக நாள் முழுவதும் போராட்டம் அறிவித்தது. காங்கிரஸ் கட்சி 24 மணி நேரப் போராட்டம் அறிவித்தது.

ஆனால் எல்லாவற்றையும்விட அதிகம் பேசப்பட்டது வேறொன்று. திரிபுராவின் பல நாளிதழ்கள் அன்று தங்கள் தலையங்கப் பக்கத்தை வெறுமையாகவே வெளியிட்டன. ஒரு வரிகூட இல்லை. வெறும் வெள்ளைப் பக்கம். என்ன சொல்வது? என்ற கேள்விக்கு, சொற்களைவிட அந்த வெறுமை சத்தமாகப் பேசியது. அந்த வெற்றுத் தலையங்கமே கோபத்தின் குரல்.

இந்தியப் பத்திரிகை மன்றம் தானாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியது. ‘ஊடக உலகின் தளப் போர்வீரர்களான களச்செய்தியாளர்கள் ஒவ்வொருவராக சத்தமின்றி ஆக்கப்படுகிறார்கள். இது மிகவும் ஆபத்தான போக்கு’ என்று மூத்த பத்திரிகையாளர் மிருணாள் பாண்டே அல் ஜஸீராவிடம் சொன்னார்:

2018 மார்ச்சில் திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்தது. அதன் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று, சாந்தனு பௌமிக், சுதீப் தத்தா பௌமிக் ஆகிய இருவரின் கொலைகளையும் மத்தியப் புலனாய்வுக் குழு விசாரிக்கும் என்பதே. அதன்படி, ஜூன் 2018இல் புதிய முதல்வர் பிப்லப் குமார் தேவ் அந்த வாக்குறுதியை நிறைவேற்றினார். இரண்டு வழக்குகளையும் மாநிலச் சிறப்பு விசாரணைக் குழுவிடமிருந்து சிபிஐ எடுத்துக்கொண்டது. (சுதீப் தத்தா கொலை, திரிபுராவில் இரண்டு மாதங்களுக்குள் நடந்த இரண்டாவது நிருபர் கொலை. முதலாவது, சாந்தனு பௌமிக். 20 செப்டெம்பர் 2017 அன்று அகர்தலாவுக்கு அருகே கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்).

பிறகு என்ன ஆனது? 2023 பிப்ரவரியில் கொலை நடந்து ஆறு ஆண்டுகளுக்குப் பின் திரிபுரா உயர் நீதிமன்றம் தளபதி தபன் தெபர்மாவுக்கு ஜாமீன் வழங்கியது. சிபிஐ அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது. பின் ஜாமீன் ரத்தானது. மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். தற்போது விசாரணை நீள்கிறது.

2017 நவம்பரில் நடந்த கொலைக்கு இன்று வரையிலும் சிபிஐ விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. நீதிக்காகக் குடும்பம் இன்னும் காத்திருக்கிறது. ஒரே மாநிலத்தில் ஒரே ஆண்டில், வெறும் 30 கிமீ இடைவெளியில் இரண்டு குடும்பங்கள் இதழியலுக்காகத் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து நிற்கிறது. நிச்சயம் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கைதான் இன்னும் இந்தக் காத்திருப்பை நியாயப்படுத்துகிறது.

திரிபுராவின் நாளிதழ்கள் அன்று வெற்றுத் தலையங்கம் வெளியிட்டன. சொற்கள் தேவையில்லை என்பதைக் குறிப்பதாகப் பலர் சொன்னார்கள். ஆனால், சொல்லொணாத வலி என்பதை எப்படித்தான் சொல்வது? அந்த வெற்றுப் பக்கம் இன்னும் நிரம்பவில்லை. தீர்ப்பு வரும் நாளில் அது நிரம்பும். நீதி கிடைத்தது என்ற வெற்றிச் செய்திதான் அந்த வெற்றுப்பக்கத்தில் இன்னும் எழுதப்படாமல் எஞ்சியிருக்கும் ஒரே வரி.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *