அன்று 13 மே 2016. இரவு 8:30 மணி. வழக்கமாக இந்த நேரத்தில் அவர் வெளியே செல்லமாட்டார். அன்று ஓர் அழைப்பு வந்தது. அதன்பின், அவசர வேலை என்று கூறிவிட்டு வெளியே சென்றார், திரும்பி வரவேயில்லை.
பிகார் மாநிலம் சிவான் ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள பால் மண்டி பகுதியில், ராஜ்தேவ் ரஞ்சன் சென்று கொண்டிருந்தார். திடீரென மோட்டார் சைக்கிளில் வந்து குறுக்கிட்டுத் தடுத்தனர் இருவர். அதற்கு மேல் எந்தப் பேச்சும் இல்லை. நெருக்கமான தூரத்திலிருந்து 9mm கைத்துப்பாக்கியால் சுட்டனர். ஒரு குண்டு நெற்றியில். மற்றொன்று கழுத்தில்.
24 ஆண்டுகால இதழியல் வாழ்வை முடித்து வைக்க இரண்டு தோட்டாக்கள் போதுமானவையாக இருந்தன. இதழியலுக்காகக் கொலை செய்யப்பட்டவர்கள் பட்டியலில் இவர் பேரும் இணைந்து கொண்டது. ஆனால், இந்த வழக்கு மற்ற வழக்குகளைப்போல அல்ல. இதழியலால் பாதிக்கப்பட்ட தேர்தல்கால அரசியலின் கூட்டணிக் கொலை வழக்கு. எழுத்துக்கு இருக்கும் ஆற்றல் தாங்காமல் கழுத்துக்குக் கத்தி அல்ல; நெற்றிக்கு தோட்டா வந்த கதை இது.
யார் இவர்? ஏன் இப்படியொரு கொலை?
பிகார் மாநிலம் சிவான் மாவட்டத் தலைநகரில் அமைந்துள்ள மகாதேவ் மிஷன் குடியிருப்புப் பகுதியில் தன் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தவர் பத்திரிகையாளர் ராஜ்தேவ் ரஞ்சன். 1994ஆம் ஆண்டு இந்துஸ்தான் நாளிதழுக்குக் களத்தகவலராகச் சேர்ந்தார். தொடர்ந்து 24 ஆண்டுகளாக சிவான் மாவட்டத்தின் அரசியலையும் குற்றங்களையும் இடைவிடாது கவனித்தும் எழுதியும் வந்தவர். அதிலும் குறிப்பாக, 7 ஆண்டுகள் அந்நாளிதழின் சிவான் மாவட்ட செய்திப் பிரிவின் தலைவராகப் பொறுப்பு வகித்து, 6 செய்தியாளர்கள் கொண்ட குழுவையும் நிர்வகித்தார்.
இவரது கட்டுரைகளில் பெரும்பாலும் நுணுக்கமான செய்திகளை வெளிக்கொண்டு வருவதில் பெயர்பெற்றவை. பிகார் மாநிலத்தில் 2004 முதல் 2016 வரை நடந்த அரசியல் கொலைகள், கடத்தல்கள், சாதி அடிப்படையிலான படுகொலைகள் என சிவான் மாவட்டத்தின் இருண்ட காலகட்டத்தை அவர் தொடர்ந்து ஆவணப்படுத்தினார். சில ஆபத்தான கட்டுரைகளை அவரின் பெயருக்கு பதிலாக வேறு தளங்களில் புனைபெயர்களில் வெளியிட்டார். பாதுகாப்புக்காகச் செய்தியாளர்கள் பொதுவாக பயன்படுத்தும் ஓர் இயல்பான உத்திதான் அது.
அதேசமயம், உள்ளூரிலிருந்து நாளிதழுக்கு விளம்பரங்களைக் கொண்டுவரும் வேலையும் செய்து வந்தார். இதற்காக அனைத்துத் தரப்பு அரசியல் பிரமுகர்களுடனும் நல்ல அணுக்கமான தொடர்பில் இருந்தார்.
பிரச்னை என்ன?
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது ஷஹாபுதீன் சிவானின் பாகுபலி என்று அழைக்கப்பட்டார். ராஜ்தேவ் ரஞ்சன் அவர்மீது குற்றம் சாட்டும் விதமான கட்டுரைகளை வெளியிட்டிருந்தார். கொலையாவதற்கு ஒரு மாதம் முன்பு, ஒரு கட்டுரையை வெளியிட்டார். ஷஹாபுதீன் சிறையில் இருந்தபோதே, மற்றொரு அரசியல்வாதியான அப்துல் கபூர் (பிகார் மாநில அமைச்சர்) உட்பட இருவர் சிறைக்குள் சந்தித்து உணவருந்தியதைப் புகைப்படத்துடன் அம்பலப்படுத்தினார்.
மேலும் ‘ஜெயிலில் இருந்தபடியே மகா கத்பந்தன் கூட்டணியின் வேட்பாளர்களை ஷஹாபுதீன் தீர்மானிக்கிறார்’ என்றும் எழுதினார். மகா கத்பந்தன் கூட்டணி என்பது பிகார் மாநிலத் தேர்தலில் அமைக்கப்பட்ட ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைமையிலான கூட்டணி. இதில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இணைந்திருந்தன. அத்துடன் ‘சிவான் மாவட்டத் தேர்தலைத் திரைக்கு பின்னால் இருந்து பாகுபலிகள் கட்டுப்படுத்துகிறார்கள்’ என்ற தலைப்பில் இன்னொரு கட்டுரையும் வெளியிட்டார்.
இதற்கு முன் இதுபோல பல கட்டுரைகள் வெளியிட்டுள்ளார், எனினும் தேர்தல் சமயம் என்பதால் இந்தமுறை கூடுதலான கவனமும் வெளிச்சமும் கிடைத்தது. தான் எப்படியும் ஒருநாள் கொல்லப்படுவோம் என்று ராஜ்தேவ் அறிந்திருந்தாரோ என்னவோ, மனைவி ஆஷா தேவியிடம் இப்படிச் சொல்லியிருந்தார். ‘ஷஹாபுதீனே தயாரித்த ஒரு கொலைப் பட்டியல் இருந்தது. அந்தப் பட்டியலில் என் பெயர் ஏழாவது இடத்தில் இருக்கிறது.’ அவருக்கு அந்தப் பட்டியலும் தெரிந்திருந்தது. தனக்கு முன்பு கொல்லப்பட்டவர்களைப் பற்றியும் தெரிந்திருந்தது என்று அவரது மனைவி பின்னர் தெரிவித்தார்.
சிவான் மாவட்டத்தில் ஒரு செய்தியாளர் கொல்லப்பட்ட செய்தி ஒட்டுமொத்த பிகாரிலும் பரவியதோடு பாட்னா, வாரணாசி, லக்னோ, ராஞ்சி உள்ளிட்ட நகரங்களில் எல்லாம் செய்தியாளர்கள் தெருவில் இறங்கி போராட ஆரம்பித்தனர். பிகார் முதல்வர் நிதீஷ் குமார் இதற்காக ‘கடும் வேதனை’ தெரிவித்தார். சிபிஐ விசாரணை வேண்டுமா என்பது ‘இன்றே முடிவெடுக்கப்படும்’ என்றார். சட்டம் தன் கடமையைச் செய்தது.
காவல்துறை சிசிடிவி மூலம் முதலில் ஆதாரங்களைச் சேகரித்தது. பின் சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து கைத்துப்பாக்கி, இரண்டு வெடிமுனைகள், மூன்று மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன.
ஜூன் 2 அன்று லடான் மியான் என்பவர் (ஷஹாபுதீனின் நெருங்கிய கூட்டாளி என்று அறியப்பட்டவர்) தானாகவே நீதிமன்றத்தில் ஆஜராகி, தனக்கு இதில் எந்தத் தொடர்புமில்லை என்று மறுத்தார். ஆனால், அதற்கு முன்பே, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் விசாரணையின்போது, இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருந்தது ஷஹாபுதீன்தான் என்று சொன்னார்கள்.
ஏற்கெனவே கைது செய்யப்பட்ட இருவரோடு சேர்த்து, உபேந்திர குமார் சிங், ஜிதேந்திர குமார் சிங், ஷாசாத் ஆலம், வித்யா சாகர் ஆகிய ஆர்ஜேடி கட்சி உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர். கடைசியாக, துப்பாக்கி சுடுவதில் வல்லவரான முன்ஷி மியான் பிரதாப்பூரில் கைது செய்யப்பட்டார். ஷஹாபுதீன் சிறைக்குள் இருந்ததால், அவரைக் காவலில் எடுத்து விசாரித்தது காவல்துறை.
ஆனால், ‘இதுவரை ஷஹாபுதீனின் நேரடி அல்லது மறைமுக ஈடுபாட்டிற்கான ஆதாரம் இல்லை. கண்டால் நடவடிக்கை எடுப்போம்’ என்று சிவான் மாவட்ட எஸ்பி சௌரப் குமார் ஷா ஊடகங்களுக்குச் சொன்னார். சுமார் 14 நாட்கள் விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார் ஷஹாபுதீன்.
ஆனால், இது நேரடியாக குற்றத்தை மறைக்கும் செயல் என்று பத்திரிகையாளர்கள் மீண்டும் போராடினர். அதன் விளைவாக, வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. விசாரணை நடந்துகொண்டிருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் 6 பேருக்கும் அப்போது ஜாமீன் மறுத்தது. சிபிஐ விசாரணைக்காக 6 மாதம் அவகாசம் கேட்ட நிலையில் 3 மாத அவகாசமே கொடுக்கப்பட்டது. வேக வேகமாக விசாரணை நடந்தது.
ஏற்கெனவே வேறொரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்தவர் ஷஹாபுதீன். இப்போது இந்தக் கொலை வழக்கும் சேர்ந்து கொண்டது. ஆனால், விசாரணையின் போக்கில் இப்படி ஒரு சம்பவத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை.
2021இல் கொரோனா இரண்டாம் அலையின்போது நோய்த்தொற்றால் இறந்தார் ஷஹாபுதீன். வேறு வழியின்றி ராஜ்தேவ் ரஞ்சன் கொலையில் அவர்மீதான தனிப்பட்ட விசாரணை முடிவுக்கு வந்தது. ஆனால் கைது செய்யப்பட்ட மற்ற நபர்கள்மீதான வழக்கு தொடர்ந்து வந்தது. 2018இல் தொடங்கிய நீதிமன்ற விசாரணை மெதுவாக முன்னேறி கொலை நடந்து 9 ஆண்டுகள் கழித்து 2025ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு சொன்னது. விஜய் குமார் குப்தா, சோனு குமார் குப்தா, ரோஹித் குமார் சோனி ஆகிய மூன்று பேர் குற்றவாளிகள் என்று உறுதி செய்யப்பட்டது. துப்பாக்கிச் சூட்டை நடத்திய இருவரும் அதற்கு நேரடியாக திட்டம் தீட்டித் தந்தவரும் என மூவருக்கு தண்டனை. அதுபோக, லடான் மியான் உட்பட மீதமுள்ள மூன்று பேரும் போதிய ஆதாரம் இல்லை என்று விடுதலை செய்யப்பட்டனர். ஏழாவது சந்தேக நபர் வேறொரு வழக்கிலும் அவருக்கிருக்கும் தொடர்புக்காக தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.
ஒரு பத்திரிகையாளர் கொலை வழக்கில் 9 ஆண்டுகள் கழித்து வந்தது தீர்ப்பு. ஆனாலும் முழுமையான திருப்தி தருவதாக இல்லை. ‘இந்த விடுதலையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்’ என்று சிபிஐயின் சிறப்புப் பொது வழக்கறிஞர் ராஜேஷ் துபே பத்திரிகையாளர் பாதுகாப்பு மையத்திடம் பேசியபோது சொன்னார்.
பத்திரிகையாளர்களை வன்முறையின் மூலம் கட்டுப்படுத்த நினைக்கும் நபர்களுக்கு ஆதரவாக, ஓர் ஆபத்தான செய்தியைச் சொல்கிறது இந்தத் தீர்ப்பு. பிகார் அரசும் மத்தியப் புலனாய்வு அமைப்பும் ராஜ்தேவ் ரஞ்சனுக்கு நீதி தேடுவதைத் தொடர வேண்டும். அவரின் குடும்பத்தை பாதுகாக்க வேண்டும் என்றார் சிபிஜே அமைப்பின் இந்திய பிரதிநிதி குணால் மஜும்தார்.
ஆறு சந்தேக நபர்களில் மூவருக்கு தண்டனை. மூவர் ஆதாரம் இல்லை என்பதால் விடுதலை என்கிறது வழக்கின் தீர்ப்பு. மூலக் காரணமாக இருந்து திட்டமிட்டவர் என்று சொல்லப்பட்ட ஷஹாபுதீன் தீர்ப்புக்கு 4 ஆண்டுகள் முன்பே இறந்துவிட்டார். இதில் பாதி நீதியைத்தான் பார்க்க முடிகிறது என்கிறார்கள் பிகார் பத்திரிகையாளர்கள்.
தி காரவன் இதழுக்காகச் செய்தியாளர் ஒருவர், ராஜ்தேவின் மனைவி ஆஷா தேவியைச் சந்தித்தார். அவருக்கு ராஜ்தேவ் ரஞ்சனை உலகம் மறந்தது ஏற்புடையதாக இல்லை. ‘டெல்லியில் ஊடகம் வேறு விதமாக இருக்கிறது. சிவானில் நடப்பது டெல்லி மக்களைப் பாதிக்காது போலும். என் கணவர் பணிபுரிந்த அதே இந்துஸ்தான் நாளிதழ் ஷஹாபுதீனின் ஜாமீன் செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்டது. ஆனால் நான் நீதிக்காக உள்துறை அமைச்சரைச் சந்தித்த செய்தி ஒரு வரிகூட இல்லை’ என்று வேதனை தெரிவித்தார். ஏனெனில் அந்தச் சந்திப்பு நடந்த அதே மாலைதான் ஷஹாபுதீன் ஜாமீனில் வந்த செய்தியும் வெளியானது.
அதேசமயம், ராஜ்தேவ்மீது ஊள்ளூர் பத்திரிகையாளர்கள் வைக்கும் விமர்சனமும் கவனிக்கத்தக்கது. விளம்பரங்களைத் தங்கள் நாளிதழுக்குக் கொண்டு வருவது, அதற்கென கமிஷன் வாங்குவது என்றிருந்த சாதாரண நபர்தான் அவர். 15% கமிஷன் என்கிற கணக்கு சிவான் மாவட்டம் முழுக்க இருக்கும் பழக்கம்தான். அவர் ஒன்றும் இதழியலுக்காக உயிர்விட்ட போர் வீரனெல்லாம் கிடையாது என்ற பேச்சும் உண்டு.
அதுபோக, சிறைக்குள் நடந்த சந்திப்பின் புகைப்படத்தை அவர் சிரமப்பட்டு வெளியே கொண்டுவரவில்லை. ஏற்கெனவே ஷஹாபுதீன் தரப்பு இணையத்தில் பதிவேற்றியதுதான் அது என்றும் தெரிவித்தனர். படத்தைப் பதிவேற்றிவிட்டு நீக்கிவிட்டார்கள். பின் ராஜ்தேவ் முயன்று அதைப் பெற்றார் என்கிறார் மனைவி.
மேலும் பாஜக எம்பி ஒம் பிரசாத் யாதவுடனான அவரது நட்பும் பெரிதாகப் பேசப்பட்டது. அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஆஷா தேவியின் சந்திப்பை ஏற்பாடு செய்ததும் ஓம் பிரசாத்தான். இவற்றைக் குறிப்பிட்டு அவர் ஒரு பாஜக ஆதரவாளர் என்று முத்திரை குத்தும் முயற்சிகளும் நடந்தன. இப்படி விளம்பரம் வாங்கிக்கொடுத்து அதிலிருந்து வருமானம் பார்க்கும் செய்தியாளர்கள் நிறைய பேர் இங்கு உண்டு என்பது அவர்களின் வாதம்.
பொதுவாகவே ஸ்ட்ரிங்கர்கள்மீது இப்படி ஒரு விமர்சனம் வைக்கப்படுவதுண்டு. ஆனால், உள்ளூர் ஸ்ட்ரிங்கர்களும் தாலுகா செய்தியாளர்களும் இருக்கும் நிலை இன்று வரை பத்திரிகை உலகில் பேசப்படாத பக்கங்கள்தான். மிக எளிதாகப் பணத்தேவையின் பொருட்டு முடிவெடுப்பதற்கு ஏதுவாகவே அவர்களது சம்பளங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. நிறுவனங்களின் பணிப் பாதுகாப்பெல்லாம் இவர்களுக்குப் பொருந்தாது. ஏதாவது சிக்கலாகி இவர்கள் இறந்தால் நிறுவனங்கள் எந்த விதத்திலும் இவர்களுக்கு உதவாது. ராமன் காஷ்யப் என்ற களத்தகவலர் செய்தி சேகரிக்கப்போன இடத்தில் வன்முறைக்குப் பலியானார். அவரது இறப்புக்குக்கூட அந்த நிறுவனத்தின் சார்பில் யாரும் வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இப்படி ஒரு சூழலில்தான் உள்ளூருக்குள் மட்டுமே 24 ஆண்டுகள் செய்தியாளராக (நிறுவனத்தின் பணியாளராக) இயங்கி வந்தார் ராஜ்தேவ் ரஞ்சன்.
சிபிஐ மேல்முறையீடு செய்யப் போகிறது. அது இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? 9 ஆண்டுகள் ஆகியே ஒரு பாதி தீர்ப்புக்கு வந்தோம். மீதி பாதிக்கு இன்னும் எத்தனை ஆண்டுகளோ? பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப்பட்டால் அதில் தீர்ப்பு வருவது என்பதெல்லாம் அத்திப்பூ சம்பவம். அதிலும் இப்படியான வழக்குகள் இடிபட்ட இடியாப்பங்கள்.
13 மே 2016இல் கொல்லப்பட்ட ராஜ்தேவ் ரஞ்சன் வழக்கில் நீதி பாதியும் பாதி நீதியுமாய் நீண்டுவரும் நிலையில், அதே நாளில் ராஜ்தேவ் ரஞ்சனுக்கு முன்பாக ஜார்க்கண்ட்டில் கொல்லப்பட்டார் மற்றொரு பத்திரிகையாளர். ஒரே நாளில் இருவர். அவர் வழக்கு என்ன ஆனது?
(தொடரும்)

