Skip to content
Home » முறிந்த பேனா #15 – அடையாளச் சிக்கல்

முறிந்த பேனா #15 – அடையாளச் சிக்கல்

ராஜ்தேவ் ரஞ்சன் கொல்லப்பட்ட 24 மணி நேரத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள சத்ராவில் கொல்லப்பட்ட இன்னொரு பத்திரிகையாளரின் கதை இது. அழிவாயுதங்களைக் கீழே போட்டுவிட்டு அறிவாயுதமான பேனாவை, படைக்கலமாக்கிக் கொண்டவர் என்று இவரைப் பற்றி பலரும் சொல்வதுண்டு. ஆனால், அடையாளச் சிக்கல் என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு உதாரணமாக அவர் வாழ்க்கை அமைந்துவிட்டது.

12 மே 2016. வியாழக்கிழமை இரவு. சத்ராவிலுள்ள தேவாரியா கிராமம். தன் வேலைகளை முடித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் அந்தச் செய்தியாளர். தேவாரியா ஊராட்சி மன்ற அலுவலகத்தைக் கடந்தபோது, மறைந்திருந்த சிலர் திடீரெனப் பாய்ந்து துப்பாக்கியால் சுட்டனர். மூன்று குண்டுகள் உடலில் பாய்ந்தன. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்துவிட்டது.

உடனுக்குடன் இரண்டு கொலைகளா? நாடு முழுக்க அதிர்வலைகள் கிளம்பின. அப்போதைய தகவல் தொடர்பு அமைச்சர் அருண் ஜெட்லி இந்த இரு கொலைகளையும் கண்டித்து ட்விட்டரில் பதிவிட்டார்: ‘சிவானில் ராஜ்தேவ் ரஞ்சன், சத்ராவில் அகிலேஷ் பிரதாப் சிங் ஆகிய பத்திரிக்கையாளர்களின் கொலைகளைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். சுயேச்சையான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கவேண்டும்.’

பத்திரிகையாளர் பாதுகாப்பு கமிட்டி, சர்வதேச பத்திரிகையாளர் மையம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் கடுமையாகக் கண்டித்தன. ஆனால் அனைத்தையும் காணாமலடிக்க காவல்துறையின் அறிக்கை போதுமானதாக இருந்தது. கொஞ்சம் சிக்கலான வழக்குதான். ஆனால், ஒதுக்கிவிட முடியாத அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வழக்கும்கூட.

மூன்று ஊர், மூன்று பெயர்.

ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் தன் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார் பத்திரிகையாளர் இந்திரதேவ். சத்ராவில் அவரை அறிந்தவர்கள் இந்திரதேவ் யாதவ் என்றழைத்தனர். ஆனால், அவரது இயற்பெயர் அகிலேஷ் பிரதாப் சிங். பிகார் மாநிலம் பராச்சட்டி (Barachatti) பகுதியைச் சேர்ந்தவர்.

இளம் வயதிலேயே மாவோயிஸ்ட் இயக்கத்தில் ஈடுபட்டு, அப்பகுதியின் கமாண்டர் நிலையில் இருந்தார். பின்னர் அந்த வாழ்க்கையை விட்டு, ஜார்க்கண்டுக்குக் குடிபெயர்ந்து சத்ராவில் இயங்கி வந்த டாசா (Taaza) தொலைக்காட்சியில் 2011இல் மாவட்ட நிருபராகப் பணியாற்றத் தொடங்கினார். அதே சமயத்தில், என்டிபிசிக்கான மின் கடத்துக் கம்பிவடங்கள் இணைக்கும் பணிகளையும் செய்து வந்தார். நேரடி ஒப்பந்ததாரராக அல்லாமல், சார்-ஒப்பந்தக்காரராக இதனைச் செய்து வந்தார். பத்திரிக்கையும் ஒப்பந்த வேலையும் இணைந்த ஒரு பணிவாழ்க்கை.

முன்பு மாவோயிஸ்ட் இயக்கத்தில் இருந்ததால் மாநிலம் முழுக்கப் பரவியிருந்த குழுக்கள் குறித்துத் தெளிவாக இவரால் எழுதமுடிந்தது. புனைப்பெயர்களில் ஒளிந்து வாழ்பவர் என்னும் விமரிசனத்தைச் சந்தித்திருக்கிறார். மரணத்துக்குப் பிறகும் இந்திரதேவ், அகிலேஷ் பிரதாப் என்று மாறி மாறி அவரைக் குறிப்பிட்டதும் இந்தக் குழப்பத்தால்தான். யார் இறந்தார் என்பதே தெளிவாக இல்லாத ஒரு விநோதமான நிலை உண்டானது.

ஒரு செய்தியாளராக சத்ரா மாவட்டத்தில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்து வந்தார். அவர் தந்தைக்கு இதில் விருப்பமில்லை. சுயமாகத் தன் மகன் தொழில் செய்ய வேண்டும் என்று விரும்பினார். இதுவே இரு பணிகளை அவர் மேற்கொள்ள வைத்தது. அந்த வகையில், வருவாய் ரீதியாக நல்ல முன்னேற்றம் கண்டது குடும்பம்.

இதுவே பின்னால் கேள்விகளையும் எழுப்பியது. ‘நான் மூன்று தசாப்தங்களாக இதே தொழிலில் இருக்கிறேன், ஒரு தேசிய இந்தி நாளிதழின் நிரந்தர பணியாளராகவும் ஆகிவிட்டேன். இன்னும் என் பெயரில் ஒரு துண்டு நிலம் கூட வாங்க முடியவில்லை. அன்று வாடகை அறையில் வசித்த இவர், எப்படி வீடு நிலமென சொத்து வாங்கினார்?’ என்று பெயர் வெளியிட விரும்பாத உள்ளூர் பத்திரிக்கையாளர் ஒருவர் நியூஸ் லாண்டரியில் அப்போது கேள்வி எழுப்பினார்.

எந்தவொரு பத்திரிகையாளர் கொலையின்போதும் அவர்மீது குற்றம் கற்பிப்பது அல்லது அவர் ஒரு பத்திரிகையாளரே இல்லை என்று சொல்வது ஒரு வழக்கமான நடைமுறைதான். ஆனால் இந்த முறை இவரது மாவோயிஸ்ட் தொடர்புகளால் அவர் உள்விரோதம் காராணமாகக் கொல்லப்பட்டார் என்று செய்திகள் பரப்பப்பட்டன.

சத்ரா மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அஞ்சனி குமார் ஜா, இதை மறுக்கவும் இல்லை, உறுதிப்படுத்தவும் இல்லை. அவரது கூற்றுப்படி, ‘சிலர் இவரது கடந்தகால மாவோயிஸ்ட் தொடர்பு பற்றி எங்களிடம் தகவல் தந்திருக்கிறார்கள். ஆனால் இதற்கு ஆவணப்பூர்வ சாட்சியம் எதுவும் இல்லை. தற்போதைக்கு எங்கள் கவனம் கொலைக்கான காரணத்தையும் குற்றவாளிகளையும் கண்டுபிடிப்பதில்தான் இருக்கிறது’ என்று அவர் தெரிவித்தார்.

விசாரணை தொடர்ந்தது. கைதுகள் நடந்தன. மாவட்ட எஸ்.பி., மே 17ஆம் தேதி கொடுத்த அறிக்கை இதுதான். ‘இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூவர் தலைமறைவாக உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் நேரடியாகச் சுட்டவர். மீதமுள்ளவர்களைக் கைது செய்ய நாங்கள் தேடுதல் நடத்தி வருகிறோம். இந்தக் கொலை, சத்ரா மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டிஎஸ்பிசி உறுப்பினர் முகேஷ் கஞ்சுவின் உத்தரவின் பேரிலேயே நடத்தப்பட்டது. அவரது இரு கூட்டாளிகளும் இதில் ஈடுபட்டிருந்தனர்.’

இந்த மூவரில், ஒருவர் சூரஜ் சாவ். சிமாரியா தொகுதியின் அப்போதைய சட்டமன்ற உறுப்பினரின் வலது கரமாக அறியப்பட்டவர். இதைக் காவல் துறை உறுதிப்படுத்தியது. ஆனாலும், அவருக்கு இந்தக் கொலையில் எந்தத் தொடர்பும் இல்லை என்று காவல் துறை தெளிவாகக் கூறிவிட்டது.

ஒரு கவனிக்கத்தக்க முரண் இங்கே எழுகிறது. அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் கஞ்சு பாஜகவைச் சேர்ந்தவர். இவரது சொந்த சகோதரர் பிரஜேஷ் கஞ்சுதான் டிஎஸ்பிசி அமைப்பின் முக்கிய உறுப்பினர்.

ஒரு பக்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர். மறுபக்கம், அவரது சொந்த சகோதரர் நடத்தும் ஆயுதம் தாங்கிய அமைப்பு. இந்த முரண்பாட்டாலேயே கணேஷ் கஞ்சு இந்த வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். வழக்கில் இன்னும் முழுமையான தீர்ப்பு வெளியாகவில்லை.

இந்திரதேவ் கொல்லப்பட்டதற்கு அடுத்த நாளே, பிகார் மாநிலம் சிவானில் இந்துஸ்தான் நாளிதழின் பணியகத் தலைவர் ராஜ்தேவ் ரஞ்சனும் சுட்டுக் கொல்லப்பட்டார். சிபிஜேயின் ஆசியப் பிரிவு மூத்த ஆய்வாளர் சுமித் கல்ஹோத்ரா இதைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டார். ‘பத்திரிக்கையாளர்கள் கொலை வழக்குகளில் காவல் துறை விசாரணை நடத்துவது நல்லதுதான். ஆனால் கைது இல்லாமல், கடும் தண்டனை இல்லாமல் நடக்கும் விசாரணைகள், தவறான செய்தியைத்தான் அனுப்புகின்றன.’ கடந்த பத்து வருடங்களில் இந்தியாவில் பணி தொடர்பாக நடந்த 11 பத்திரிக்கையாளர் கொலைகளில் ஒன்றில்கூட முழுமையான தண்டனை கிடைக்கவில்லை என்று தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்திரதேவ் கொலை குறித்து நியூஸ் லாண்டரி நிறுவனம் நடத்திய விசாரணையின்படி, இந்திரதேவ் கொல்லப்படுவதற்குச் சில மணி நேரம் முன்பு தாமோதர் பள்ளத்தாக்கு கழகம் (டிவிசி) ஒப்பந்தங்களுடன் தொடர்புடைய பீர்பால் என்பவருடன் சேர்ந்து சாப்பிட்டிருந்தார். இருவரும் அமைதியாகப் பிரிந்தனர். சாப்பிட்ட சில மணி நேரங்களில், இந்திரதேவ் சுட்டுக் கொல்லப்பட்டார்.

காவல் துறை பீர்பால் மற்றும் அவரது தொழில் கூட்டாளி ஜமான் ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்தது. ஆனால், கொலைக்கும் இவர்களுக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை என்று காவல்துறை சொன்னது. பெயர் வெளியிட விரும்பாத பத்திரிகையாளர் ஒருவர் மூலம், இந்தக் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதமும் வாகனமும் மீட்கப்பட்டது.

‘அவர் மிகவும் அன்பான மனிதர். ஆனால் அவர் பத்திரிக்கை வேலை காரணமாக கொல்லப்பட்டார் என்று நான் நினைக்கவில்லை. அப்படிப்பட்ட மிரட்டல்கள் எதுவும் அவருக்கு வந்ததாக எனக்குத் தெரியவில்லை’ என்று இந்திரதேவை நன்கறிந்தவரும் காஷிஷ் நியூஸ் தளத்தின் செய்தியாளருமான அஜீத் சின்ஹா தெரிவித்தார்.

இதே கருத்தை காவல்துறைக் கண்காணிப்பாளரும் ஒத்துக் கொண்டார். ‘பணம் தொடர்பான பகையா, தனிப்பட்ட பகையா, அல்லது இதழியலுக்கான கொலையா என்பது தெரியவில்லை. குடும்பத்தினர் தற்போது பேரதிர்ச்சியில் இருக்கிறார்கள். அவர்கள் மனநிலை தேறிய பின்னரே விசாரணை முடியும்.’ காவல்துறை அறிக்கையும் இதையே எதிரொலித்தது.

நீதிமன்ற விசாரணை தொடர்ந்து வருகிறது. தீர்ப்புக்காகக் குடும்பமும் காத்திருக்கிறது. ஆனால், சர்வதேச அமைப்புகள் இந்த வழக்கிலிருந்து தங்கள் கண்டனக் குரலையும் தொடர் கவனிப்புகளையும் கைவிட்டுவிட்டன. அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பிருந்ததே அதற்குக் காரணம் எனலாம்.

பத்திரிக்கையாளர், ஒப்பந்ததாரர், ஆயுதம் தாங்கிய போராட்டக்குழுவின் முன்னாள் பொறுப்பாளர் என முரண்பட்ட அடையாளங்கள் ஒரே இடத்தில் இணைந்திருப்பது ஒருபோதும் பொருந்தாது. அப்படி இருந்தால் அவரது கொலை ‘பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல்’ என்றாலும் பட்டியலில் இருந்தே அழிக்கப்பட்டுவிடும். தனித்த நேர்மையும் பக்கச்சார்பின்மையும்தான் ஒரு பத்திரிகையாளரின் வாழ்வை மெய்யாகவே பாதுகாக்கும் அரண்கள். இதுதான், ஒவ்வொரு பத்திரிகையாளருக்கும் இந்திரதேவ் கொலைச் சம்பவம் விட்டுச்சென்ற செய்தி.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *