Skip to content
Home » முறிந்த பேனா #16 – 50,000 ரூபாய் போதும்

முறிந்த பேனா #16 – 50,000 ரூபாய் போதும்

27 மே 2014 இரவு. ஒடிசாவின் கஞ்சாம் மாவட்டம் கல்லிகோட் பகுதியில் செய்திப் பணியை முடித்துவிட்டு தருண் குமார் ஆச்சார்யா இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அவரது தாயும் மனைவியும் 10 மாதக் குழந்தையும் வழக்கம்போல காத்திருந்தனர். ஆனால் அவர் அன்று வீட்டுக்கு வரவில்லை. மறுநாள் ஊரே அவர் வீட்டுக்கு வந்தது. ஆம், இரவோடு இரவாக, காவல் நிலையத்துக்கு அருகே கழுத்தறுத்துக் கொல்லப்பட்டிருந்தார் தருண் குமார்.

ஏன் இப்படி ஒரு கொடூரக் கொலை? யார் இவர்? என்ன செய்தார்?

ஒரிசா மாநிலம் கல்லிக்கோட் பகுதியில் உள்ள விக்ரம்பூரில் தன் குடும்பத்துடன் வசித்து வந்தவர் செய்தியாளர் தருண். ஒடிய மொழித் தொலைக்காட்சியான ‘கனக்’ டிவியின் பகுதிநேரச் செய்தியாளராகவும் ‘சம்பாத்’ நாளிதழின் செய்தியாளராகவும் பணியாற்றினார். உள்ளூர் முறைகேடுகள், தொழிலாளர் பிரச்சினைகள் மற்றும் சமூக அநீதிகளைத் தொடர்ந்து விசாரித்து செய்தியாக்கி வந்தார். எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால், அந்தக்கட்டுரை வெளியான பிறகு அப்படி இல்லை.

கல்லிகோட் பகுதியில் இருந்த முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் குழந்தைகள் வேலைக்கு அமர்த்தப்பட்டதாக தருண் செய்தி வெளியிட்டார். குழந்தைத் தொழிலாளர் தடைச்சட்டத்தின்படி ஆபத்தான வேலைகளிலொன்றாக முந்திரித்தொழில் பட்டியலிடப்பட்டுள்ளது. பட்டியலில் இல்லை என்றாலும் குழந்தைகள் அனுமதிக்கப்படக்கூடாத பணி அது. ஆனால், இந்தியா முழுவதும் பல்வேறு முந்திரித் தோட்டங்களில், முந்திரி பியித்தெடுக்கும் தொழிற்சாலைகளில் குழந்தைகள் பணியில் அமர்த்தப்படுவது தொடர்ந்து வருகிறது. அத்தகைய ஒன்றைத்தான் தருண் அம்பலப்படுத்தினார்.

அத்துடன், குழந்தைகள் ஆபத்தான சூழலில் பணியாற்றுவதைக் காட்டும் காணொளிக் காட்சி ஆதாரங்களும் அவரிடம் இருந்தன என்று பத்திரிகையாளர் பாதுகாப்புக் குழு பின்நாட்களில் பதிவு செய்தது. செய்தி வெளியாகி ஒரு வாரத்துக்குள், இந்தச் செய்தி தனது வணிகத்தைப் பாதிக்கும் முயற்சி என்று அத்தொழிற்சாலை உரிமையாளர் ஷ்யாம் சுந்தர் பிரஸ்டி கருதினார். வீடியோ ஆதாரம் வெளிவந்தால் இன்னும் பெரிய சிக்கலாகிவிடும் என்பது புரிந்தது.

எனவே, இனிமேலும் தாமதிக்க வேண்டாம் என்று தருணைக் கொல்ல ரூ.50,000 கொடுத்து மூவரை ஏற்பாடு செய்தார் ஷ்யாம். அத்துடன் மூன்று புதிய சிம் கார்டுகளும் வாங்கிக் கொடுத்ததாகக் காவல்துறை விசாரணை அறிக்கை தெரிவிக்கிறது.

தொடக்கத்தில், இந்தக் கொலை குடும்பப் பிரச்சினையால் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது. செய்தியாளர் கொலைகளைக் குடும்பப் பிரச்சினை என்ற கோணத்தில் விசாரிப்பது இந்தியா முழுக்க எழுதப்படாத விதி போலும். தருணின் ஆசிரியர் இது குடும்பப் பிரச்னையாக இருக்கலாம் என்று வாக்குமூலம் தந்ததும் காவல்துறை விசாரணையில் பதிவாகியுள்ளது.

ஆனால், அதே செய்தி டிவியின் முதன்மைச் செய்தி ஆசிரியர், குழந்தைத் தொழிலாளர் தொடர்புடைய கட்டுரைகளால் வந்த மிரட்டல்கள் குறித்துச் சொன்னதோடு தருணின் ஆசிரியருக்கு இது தெரியாது என்றும் பதிவு செய்தார்.

இங்கிருந்துதான் விசாரணை இதழியல் கொலை என்ற கோணத்துக்குத் திரும்பியது. பின்னர் தருணின் தொலைபேசி அழைப்புகள், சந்தேக நபர்களின் கைப்பேசி பதிவுகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டபோது, இது ஒரு திட்டமிட்ட கொலை என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தன.

அதன்மூலம், அடுத்த 12 நாட்களில் பிரஸ்டி மற்றும் அவரது கூட்டாளிகள் மூவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், வழக்கில் இன்னும் கைது செய்யப்பட வேண்டியவர்கள் இருந்தனர். மொத்தம் 6 பேர்மீது குற்ற முகாந்திரம் உறுதி செய்யப்பட்டிருந்தது.

சிவராம் நாயக் என்ற மற்றொரு செய்தியாளரும் குற்றஞ்சாட்டப்பட்டார். இவர்தான் 5ஆவது நபர். தருண் கொல்லப்படுவதற்கு முன்னும் பின்னும் தொழிற்சாலை உரிமையாளர் ஷ்யாமுடன் சிவராம் நாயக் தொலைபேசியில் பேசியதாகக் காவல்துறை கூறியது. சிவராம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தபோதும், பின்னர் ஆதாரங்களின் அடிப்படையில் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். சதித்திட்டத்துக்கு துணையாக இருந்தவரும் இன்னொரு செய்தியாளர் என்பதுதான் இதில் கூடுதல் வேதனை. ஆறாவது நபரான நரசிங்க சரண் பாண்டா என்பவர் தலைமறைவானார். அவரைத் தேடும் பணி தொடர்கிறது.

வழக்கு விசாரணை வழக்கம் போலவே தொடர்ந்தது. சுமார் ஐந்து ஆண்டுகள் நடைபெற்ற வழக்கில் 47 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 2019 ஜூன் 27 அன்று கல்லிகோட் நீதிமன்றம் ஷியாம் சுந்தர் பிரஸ்டி, சிவராம் நாயக், சுரேஷ் சந்திர சாஹு, சந்தோஷ் மொஹரானா, ரமேஷ் ரெட்டி ஆகிய ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது. ஆறாவதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நரசிங்க சரண் பாண்டா தலைமறைவானார்.

குழந்தைத் தொழிலாளர்களுக்காகச் செய்தி எழுதிய தருண், தன் 10 மாதக் குழந்தையைவிட்டு மறைந்தார். வெறும் 50,000 ரூபாயில் அமைதியாக்கப்பட்ட இந்தச் செய்தியாளர் இந்தியாவில் நிலவும் பாதுகாப்பற்ற இதழியல் சூழலுக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக மாறிப்போனார். அவ்வளவுதான்.

முந்திரித்தோப்பில் முடிந்துபோகவிருந்த பிஞ்சுகளின் வாழ்க்கையை, பேனாவால் மாற்ற எண்ணிய மனம்தான் மக்கள்-சார் இதழியலின் அடிப்படை. உண்மை சொல்லும் பேனாக்கள் உடைக்கப்படலாம். ஆனால் உண்மையும் பேனாவும் எப்போதும் இருக்கும்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *