Skip to content
Home » முறிந்த பேனா #17 – மண்ணெண்ணெய் மாஃபியா

முறிந்த பேனா #17 – மண்ணெண்ணெய் மாஃபியா

நிச்சயமற்ற இரவுகளுக்கு மீனவப் பணியும் ராணுவப் பணியும் உதாரணம் என்று சொல்வார்கள். ஆனால் இந்தியாவில் இதழியலும் அப்படித்தான் என்பதை அழுத்தமாகச் சொல்கின்றன பத்திரிகையாளர் கொலைகள்.

25 நவம்பர் 2014. இரவு. ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டம், சிலகலூரிப்பேட்டை பகுதி. தன் செய்திப் பணிகளை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார் 53 வயது பத்திரிகையாளர் எம்.வி.என். சங்கர். வீட்டுக்கு அருகே வந்தபோது மூவர் அவரை வழிமறித்தனர்.

இரும்புக் கம்பிகளாலும் தடிகளாலும் சரமாரியாகத் தாக்கினர். நிலைகுலைந்து விழுந்த சங்கர், மறுநாள் (நவம்பர் 26ஆம் தேதி) உயிரிழந்தார். உயிர் பிழைக்கக்கூடாதென்று நடந்த தாக்குதல் தான் அது. அப்படி என்ன செய்தார் சங்கர்?

தெலுங்கு நாளிதழான ‘ஆந்திர பிரபா’வில் மூத்த நிருபராகப் பணியாற்றியவர் சங்கர். உள்ளூர் பத்திரிகையாளர் மன்றத்தின் கவுரவத் தலைவராகவும் இருந்தார். மனைவியும் ஒரு மகளும் என குடும்பத்துடன் வாழ்ந்து வந்த சங்கருக்கு இதழியல்மீது பெருவிருப்பம்.

அதிலும் குறிப்பாக, பெரிய பெரிய அரசியல் தலைவர்களைப் பேட்டி காண்பதைவிட, உள்ளூருக்குள் உதவும் இதழியலை முதன்மையாக எண்ணிச் செயல்படுவர். உள்ளூர் விவகாரங்களைத் தோலுரிப்பதே தொழிலாகக் கொண்டு நீண்ட காலமாகச் செயல்படுவர். ஆனால், இந்த முறை விசாரித்த செய்தியின் வீரியம் கூடுதலாக இருந்தது. ஏழைகளுக்காக ஒதுக்கப்பட்ட உணவுப் பொருட்கள் எங்கே செல்கின்றன என்பதைக் கண்டுபிடித்ததே இந்தமுறை அவரது புலனாய்வின் பொருள்.

பொது விநியோகத் திட்டத்தின்கீழ் ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டிய மண்ணெண்ணெய் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கருப்புச் சந்தைக்குத் திருப்பப்படுவதை சங்கர் ஆதாரங்களுடன் தொடர்ந்து எழுதினார். அத்துடன், தவறுகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட விற்பனையாளர்களின் பட்டியலைத் தயாரித்து, நடவடிக்கை எடுக்குமாறு குண்டூர் காவல்துறையிடமும் புகார் அளித்திருந்தார். இதழியலைக் கடந்த பணிதான் என்றாலும் உள்ளூர்வாசியாக, பத்திரிகை மன்றத்தின் பொறுப்பு வகிக்கும் பெரிய மனிதர் என்ற அளவில் இதைச் செய்திருக்கக் கூடும்.

மேலும், அரிசி ஆலைகளில் நடந்த ஊழல், ஊரின் சூதாட்டக் கூடங்கள் மற்றும் பிற சட்டவிரோதச் செயல்பாடுகள் குறித்தும் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தார் சங்கர். மக்களுக்கான பொருட்கள் மாற்றப்படுவது யாருக்கு? எல்லாம் யாருடைய கைகளுக்குச் செல்கின்றன?

எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லப்படவில்லை. மாறாக, அவர் கொல்லப்பட்டார். மூத்தப் பத்திரிகையாளர் கொல்லப்பட்டார். கொந்தளித்தது குண்டூர் இதழியல்துறை. உள்ளூர் பத்திரிகைகள் வெற்றுத் தலையங்கம் வெளியிட்டன. சர்வதேச அமைப்புகள் வழக்கம்போல் கண்டித்தன. குற்றமிழைத்தவர்கள் யாராயினும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி அறிக்கைகள் ஆளுக்கொரு பக்கம் அனுப்பினர்.

அன்றைய ஆந்திர உள்துறை அமைச்சர் நிம்மகாயல சின்ன ராஜப்பா இந்தக் கொலையை விசாரிக்க ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரவிட்டார். அத்துடன் தேசிய மனித உரிமைகள் ஆணையமும் இந்தக் கொலை தொடர்பாக 2605/18/5/2014 என்ற பதிவு எண்ணில் வழக்கைப் பதிவு செய்தது. அவ்வளவுதான். நீதி கிடைக்குமென்ற நம்பிக்கைக்குக் கொஞ்சம் ஆறுதல் கிடைத்ததும் அமைதியானது வழக்கு. விசாரணையின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஏதும் வெளிவரவில்லை.

2015 ஜனவரியில் இந்தியப் பத்திரிகைக் கவுன்சிலின் உண்மை கண்டறியும் குழு சிலகலூரிப்பேட்டைக்குச் சென்றது. வழக்கு பதிவு செய்யப்படது உண்மைதான். ஆனால், கைது ஏதும் நடைபெறவில்லை. உள்ளூர் பத்திரிகையாளர்களின் அழுத்தத்துக்குப் பிறகு, தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட கிஷோர் பாபு, விஜயகுமார் ஆகிய இருவரையும் காவல்துறை வழக்கில் சேர்த்தது. பின்னர் விஜயகுமார் கைது செய்யப்பட்டார்.

பத்திரிகைக் கவுன்சில் குழுவின் வருகைக்குப் பிறகே, கிஷோர் பாபுவும் கைது செய்யப்பட்டார். ஆனால், விசாரணையின் பின்னணியில் உள்ளூர் அரசியல்வாதிகள் மூலகாரணமாக அறியப்பட்டனர்.

வெங்கல ராயுடு, திம்மாபுரம் முன்னாள் ஊராட்சித் தலைவர் பி. சீனிவாச ராவ் ஆகிய அரசியல் பிரமுகர்கள் கொலையின் பின்னணியில் இருந்ததாகச் சில உள்ளூர் பத்திரிகையாளர்கள் பத்திரிகைக் கவுன்சிலிடம் குற்றஞ்சாட்டினர்.

சங்கரின் செய்திகள் காரணமாக அவர்கள் பகை கொண்டிருந்ததாகவும், அரசியல் செல்வாக்கால் வழக்கில் அவர்கள் பெயர் சேர்க்கப்படவில்லை என்றும் கூறினர்.

ஆனால் காவல்துறை இதனை மறுத்ததுடன், புதிய ஆதாரம் கிடைத்தால் சம்பந்தப்பட்டவர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படுவார்கள் எனத் தெரிவித்தது.

இவை எதுவும் நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட வாதங்களோ, தரவுகளோ அல்ல. இந்திய பத்திரிகையாளர் மன்றத்தின் உண்மை அறியும் குழுவின் விசாரணையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மட்டுமே.

எனில் இந்த வழக்கில் நீதியின் பயணப்பாதை என்ன என்ற கேள்விக்கு சொற்பமாகவே பதில்கள் கிடைக்கின்றன.

காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ததாகப் பத்திரிகைக் கவுன்சில் உறுதிப்படுத்துகிறது. ஆனால் கிடைத்த பொதுப்பதிவுகளில் எஃப்.ஐ.ஆர் எண், காவல் நிலையம், இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகள், குற்றப்பத்திரிகை எண் அல்லது நீதிமன்ற வழக்கு எண் இடம்பெறவில்லை.

2016 ஏப்ரலில் ஒரு சந்தேக நபர்மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதாக குண்டூர் காவல் கண்காணிப்பாளர் சிபிஜேயிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதன் மேலதிக விவரங்கள் வெளியிடப்படவில்லை. 2019ஆம் ஆண்டின் சிபிஜே ஆய்வறிக்கை, வழக்குப் பதிவுக்குப் பிறகு இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை எனக் குறிப்பிட்டது.

பத்திரிகையாளர் கொலைச் சம்பவங்களில் விசாரணை நிலை, வழக்கின் நிலையை சிபிஜே வகைப்படுத்திப் பட்டியலிடும். அந்த வகையில், (2026 ஜூன் வரை) இந்த வழக்கு ‘முழுமையான தண்டனையின்மை’ என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டு கேள்விகளில் தொடங்கி முடிகிறது இந்தக் கதை. பொதுமக்களின் அத்தியாவசியப் பொருட்களை திருடியது யார் என்று சங்கர் கேட்டார். சங்கரின் உயிரைப் பறித்தது யார் என்று பத்தாண்டுகளுக்குப் பிறகும் நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். முதல் கேள்விக்குப் பதிலாக அவர் கொல்லப்பட்டார். இரண்டாவது கேள்விக்குப் பதிலாக இன்னும் மௌனம் மட்டுமே மிச்சமிருக்கிறது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *