Skip to content
Home » முறிந்த பேனா #19 – விபத்து என்னும் இரட்டைக்கொலை

முறிந்த பேனா #19 – விபத்து என்னும் இரட்டைக்கொலை

சில மரணங்கள் விபத்துகளாக மாற்றியெழுதப்படுகின்றன. சில மரணங்கள் கொலைகளாகப் பதிவாகின்றன. இரண்டுக்கும் நடுவில் சில மரணங்கள் சிக்கிக்கொண்டுவிடுகின்றன. அவற்றை இன்னதென்று வகைப்படுத்துவது கடினமானதாக இருக்கிறது. எடுத்துக்காட்டுக்கு நவீன் நிஷ்சல், விஜய் சிங் ஆகியோரின் இரட்டைக் கொலை.

25 மார்ச் 2018 இரவு. பிகாரின் போஜ்பூர் மாவட்டம். அர்ரா–சசாரம் நெடுஞ்சாலையில், கர்ஹானி காவல் நிலைய எல்லைக்குள் ஒரு மோட்டார் சைக்கிளில் இருவர் சென்று கொண்டிருந்தனர். இருவருமே பத்திரிகையாளர்கள். ஒருவர் இந்தி நாளிதழான தைனிக் பாஸ்கருக்குக் களத்தகவலராகப் பணியாற்றிய நவீன் நிஷ்சல். அவருடன் சென்ற விஜய் சிங் உள்ளூர் செய்தித்தாளில் பங்களித்து சுயாதீனமாக இயங்கி வந்தவர். திடீரெனப் பின்னால் வந்த எஸ்யூவி ரக கார் ஒன்று அவர்களின் இருசக்கர வாகனத்தை மோதியது. இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

முதல் பார்வையில் அது ஒரு சாலை விபத்துபோலத் தெரிந்திருக்கலாம். ஆனால் சம்பவம் நடந்த விதமும் அதற்கு முன்பு நடந்த நிகழ்வுகளும், குடும்பத்தினரின் குற்றச்சாட்டுகளும் அந்த மரணத்தைச் சுற்றி வேறு பல கேள்விகளை எழுப்பின. காரணம், இந்தக் கொலையின் பின்னணியில் ஒரு வாக்குவாதம் இருந்தது. அதற்கும் முன்பு சில செய்திகள் இருந்தன. அத்துடன் ஓர் உள்ளூர் அரசியல்வாதி இருந்தார். இந்தச் சம்பவங்களின் முகமாகத்தான் அந்த கார் இருந்தது.

நவீனின் சகோதரர் ராஜேஷ் சிங், இது விபத்து அல்ல; திட்டமிடப்பட்ட கொலை என்று காவல்துறையில் புகார் அளித்தார். முதலில் விபத்து என்று முடிவுசெய்யப்பட்டு பின்னர் கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டது. ஹர்ஷு அவரது மகன் டப்லூ மற்றும் மேலும் நான்கு பேர்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

காரை ஓட்டியவர் யார்? முகம்மது ஹர்ஷு, இயற்பெயர் அஹமது அலி. அவர் முன்னாள் ஊர்த் தலைவர் என்று செய்திகளில் குறிப்பிடப்படுகிறார். ஆனால் உண்மையான முன்னாள் கிராமத் தலைவர் அவரது மனைவி சஹீதா பர்வீன்தான். கர்ஹானி கிராமத்தின் முன்னாள் கிராமத் தலைவர். ஹர்ஷு அந்த அதிகாரத்தின் நிழலில் செயல்பட்டவர் மட்டுமே.

இந்தியாவின் பெரும்பாலான பெண் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் நிலை இப்படித்தான் இருக்கிறது. இது தவறென்றே தெரியாமல் இன்னும் தலைவர்களின் கணவரிடம் கோரிக்கை வைக்கும் மக்களும் நம் நாடு முழுக்க உண்டு.

சரி, அந்த இரவு என்னதான் நடந்தது? நவீன் நிஷ்சலுக்கும் முகம்மது ஹர்ஷுவுக்கும் இடையே முன்பே வாக்குவாதம் ஏற்பட்டிருந்ததாகக் காவல்துறை தெரிவித்தது. நவீன் வெளியிட்ட செய்திகளின் விளைவாக ஏற்பட்ட மோதல் அது. ஒரு பாக்குக் கடையில் அந்த வாக்குவாதம் நடந்ததாகவும், அதற்குப் பின்னர்தான் நவீனும் விஜயும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டதாகவும் விசாரணையில் கூறப்பட்டது.

‘அப்பா பாக்கு வாங்க போயிருந்தார். அங்கே ஒருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. திரும்பி வரும்போது ஹர்ஷு ஓட்டிய ஸ்கார்பியோ வண்டி அவரை மோதியது. அதன் பின்னால் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இருந்தன. அவற்றில் ஒன்றில் ஹர்ஷு சம்பவ இடத்திலிருந்து தப்பினார். இது ஒரு சதி.’

நேரில் பார்த்த சாட்சியான நிகில் என்பவரது கூற்று இது. அதன்படி ஹர்ஷு காரை ஓட்டி மோதினார். மோதிய பின் அந்த இடத்திலிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ஏறி இருவரும் (ஹர்ஷுவும் அவரது மகனும்) தப்பினர் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், காவல்துறையின் அறிக்கையில் இந்த விவரம் தனியாக உறுதிப்படுத்தப்படவில்லை.

நில ஆக்கிரமிப்பு மற்றும் குழந்தைத் திருமணம் தொடர்பாக நவீன் எழுதிய சில செய்திகளால் ஹர்ஷு அதிருப்தியில் இருந்ததாகச் சக பத்திரிகையாளர்கள் கூறினர். இதனால்தான் சம்பவம் ஒரு விபத்து அல்ல; முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக சந்தேகம் வலுவானது. ஆனால் அந்தக் குற்றச்சாட்டு குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் மக்களின் கூற்று என்பதையும், அதை அப்போது காவல்துறை இறுதி முடிவாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

காவல்துறை அறிக்கையின்படி, நவீனையும் விஜயையும் மோதிய கார் ஹர்ஷுவுக்குச் சொந்தமானது என்றும், அவரே அதை ஓட்டியதாகவும் காவல்துறை தெரிவித்தது. அப்போது ஹர்ஷுவின் மகன் டப்லூவும் வாகனத்தில் இருந்தார். வாகனம் மோதியதில் நவீனும் விஜயும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர் அந்த வாகனம் தீக்கிரையானது.  ஆனால் அதை யார் எரித்தார்கள் என்பதில் இரண்டு வெவ்வேறு தகவல்கள் உள்ளன.

ஹர்ஷுவும் அவரது கூட்டாளிகளும் ஆதாரங்களை அழிப்பதற்காகவே வாகனத்துக்குத் தீ வைத்துவிட்டு தப்பியதாகக் கூறுகிறது ஒரு தரப்பு. சம்பவத்திற்குப் பின் கோபமடைந்த கிராமவாசிகளே போராட்டத்தின்போது வாகனத்தைப் பறிமுதல் செய்து எரித்ததாகக் கூறுகிறது மறு தரப்பு. இரண்டு தகவல்களுமே அன்றைய செய்தி அறிக்கைகளில் இடம்பெற்றுள்ளன; ஆனால், காவல்துறை அறிக்கையின்படி ஹர்ஷுவே அந்த காரை எரித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கார் எரிக்கப்பட்ட பிறகுதான் மக்கள் போராடிய சம்பவம் நடைபெற்றது என்றும் அறிக்கை தெரிவித்தது.

அதாவது, வாகனம் தீக்கிரையானதுடன் சம்பவம் முடிந்துவிடவில்லை. நவீனும் விஜயும் உயிரிழந்த செய்தி அப்பகுதியில் பரவியதும் மக்கள் சாலையில் திரண்டனர். இருவரின் உடல்களுடன் மாநில நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தி, குற்றம்சாட்டப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். சாலை மறியல் நடைபெற்றது; அத்துடன், கிராமவாசிகள் ஹர்ஷுவின் வீட்டையும் சேதப்படுத்தினர். இந்தச் சம்பவம் பிகார் அரசியலிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

எதிர்க்கட்சியாக இருந்த ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் பாய் பீரேந்திரா கடுமையாக விமர்சித்தார்: ‘நிதீஷ் குமார் ஆட்சியில் நமது ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகமே பாதுகாப்பாக இல்லை. குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று கோருகிறோம்.’ இதற்கு ஆளும் ஜனதா தளம் (ஐக்கியம்) கட்சியின் செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார், ‘முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுவிட்டது. யார் சம்பந்தப்பட்டவர்களாக இருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது’ என்று  பதில் கொடுத்தார். அந்தச் சமயம், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ‘மோசமடைந்துவரும் சட்ட ஒழுங்கு நிலைமை’ குறித்து விவாதம் எழுப்புவதாக அறிவித்தனர்.

முதலில் இது ஒரு விபத்து என்று கூறிய போஜ்பூர் காவல் கண்காணிப்பாளர் அவ்காஷ் குமார், பின்னர் இந்தச் சம்பவம் கொலையா, விபத்தா என்பதை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டதாகத் தெரிவித்தார். அர்ரா பகுதியின் துணைக் காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் தலைமையில் அந்த விசாரணை நடைபெற்றது.

முதல் தகவல் அறிக்கையில் மொத்தம் 6 பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஹர்ஷு, அவரது மகன் டப்லூ, மேலும் நான்கு பேர். கைது நடவடிக்கை இரண்டு கட்டங்களாக நடந்தது. முதல் கட்டத்தில் மூன்று பேர் (ஹர்ஷு உட்பட) மறுநாளே கைது செய்யப்பட்டனர். இரண்டாவது கட்டத்தில் மீதமுள்ள மூன்று பேர் (ஹர்ஷு மகன் டப்லூ உட்பட) மார்ச் 28 அன்று நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அனைவர்மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 302ஆவது பிரிவின்கீழ் கொலைக் குற்றச்சாட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டனர்.

செய்திக்கும் கொலைக்கும் இருந்த தொடர்பு என்ன? இதுதான் நவீன் நிஷ்சல் மரணத்தின் மிக முக்கியமான கேள்வி. நவீன் உள்ளூர் செய்திகளைச் சேகரித்து வந்த பத்திரிகையாளர். தைனிக் பாஸ்கரின் செய்தியாளராக இருந்த அவர், அரசியல் மற்றும் உள்ளூர் நிர்வாகம் தொடர்பான செய்திகளை வெளியிட்டார். குழந்தைத் திருமணம் மற்றும் ஹர்ஷுவின் நிலப் பிரிவுகளில் இருந்த பங்கு தொடர்பான செய்திகளும் நவீனின் சமீபத்திய செய்திப் பணியில் இடம்பெற்றிருந்தன.

இந்தச் செய்திகளால் ஹர்ஷு கோபமடைந்ததாகச் சொல்லப்படுகிறது. கொலைக்கு முன்பாக, நவீனை ஹர்ஷு அச்சுறுத்தியதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை காவல்துறை அதிகாரி அவ்காஷ் குமார் உறுதிப்படுத்தவில்லை; அந்த மிரட்டல் குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்தார்.

2019 ஏப்ரலில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் ADJ-6 திரிபுவன் யாதவ் அமர்வு) இவர்களது ஜாமீன் மனுக்களை நிராகரித்தது. அன்றிலிருந்து 5 ஆண்டுகள் கழித்து வெளியான ஃப்ரீ ஸ்பீச் கலெக்டிவ் அறிக்கையின்படி, இன்னும் அக்குடும்பங்கள் நீதிக்காகக் காத்திருப்பதாகத் தெரிய வந்தது.

நவீன் நிஷ்சல் மட்டுமல்ல அவருடன் இறந்த விஜய் சிங்கும் உள்ளூர் அளவில் எழுதிவந்த பத்திரிகையாளர்தான். ஒரு சிறிய நகரத்தின் சாலையில் நடந்த இந்த மரணம், அங்கிருந்த இரண்டு குடும்பங்களின் வாழ்க்கையை மட்டும் மாற்றவில்லை. சிறிய நகரங்களில் செய்தி சேகரிக்கும் ஒவ்வொரு பத்திரிகையாளரின் பாதுகாப்பையும் கேள்விக்கு உட்படுத்துகிறது. உடன் சென்றதற்காகவே இன்னொரு பத்திரிகையாளரும் கொல்லப்படுவார் என்பது எவ்வளவு பெரிய அச்சுறுத்தல்?

இந்திய அதிகாரிகள் இந்த மரணங்களை முழுமையாக விசாரித்து, நோக்கம் என்ன என்பதைத் தீர்மானிக்கவேண்டும் என்று வலியுறுத்தியது பத்திரிகையாளர் பாதுகாப்பு மையம்.

முழுமையாக தண்டனையின்மை நிலவும் வழக்குகளில் ஒன்றாக இந்த வழக்கை சிபிஜே தன் தரவுத்தளத்தில் பதிவு செய்திருக்கிறது. வழக்குப்பதிவு செய்வதும், தேவையிருப்பின் கைது செய்வதும் இயல்பான சட்ட நடவடிக்கைகள். ஆனால் பத்திரிகையாளர் கொலைச் சம்பவங்களில் இந்தக் குறைந்தபட்ச எதிர்வினைக்கே போராட வேண்டி இருக்கிறது. போராட்டத்தின் முடிவில் கைது நிகழ்ந்தால் அதுவே நீதி கிடைத்தது போன்ற தோற்றத்தை உருவாக்கிவிடுகிறது. ஆனால் உண்மையாகவே வழக்கின் நிலை என்பது நீதிமன்றப் போக்கின் அடிப்படையில்தான் பார்க்கப்பட வேண்டும்.

ஹர்ஷுவும் டப்லூவும் இந்திய தண்டனைச் சட்டம் 302ஆம் பிரிவின்கீழ் வழக்கு எதிர்கொள்கிறார்கள். 2019இல் ஜாமீன் மறுக்கப்பட்டது. இன்று வரை எந்த தண்டனையும் கிடையாது. 2018இல் நடந்த கொலைக்கு 2026 வந்த பிறகும் தீர்ப்பு இல்லை.

இந்தச் சம்பவத்தில் புரிந்துகொள்ள முடியாதது இதுதான். ஒரு மோட்டார் சைக்கிள் மோதியது உறுதி. இரண்டு பத்திரிகையாளர்கள் உயிரிழந்தது உண்மை. அதற்கு முன்பு வாக்குவாதம் நடந்தது என்பதும் காவல்துறை விசாரணையில் பதிவானது. குற்றம் சாட்டப்பட்ட நபர் நவீனின் செய்திப் பணியால் அதிருப்தியில் இருந்ததாகவும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த இரவு நடந்தது திட்டமிட்ட கொலையா அல்லது விபத்தா என்பது மட்டும் இன்னும் உறுதியாகவில்லை!

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *