Skip to content
Home » முறிந்த பேனா #20 – ‘வாழ்க மாஃபியாக்கள்’

முறிந்த பேனா #20 – ‘வாழ்க மாஃபியாக்கள்’

‘நில மாஃபியா கும்பலுக்கு ஒரு பெரிய நன்றி. தொடர்ந்து அரசு நிலங்களை விற்பனை செய்யுங்கள். யாராவது ஒரு பத்திரிகையாளர் செய்தி வெளியிட்டால், அவர்மீதும் தொடர்ந்து பொய் வழக்கு போடுங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.’ தன் செய்தியின் எதிரொலியாக, தனக்கு நேர்ந்த அச்சுறுத்தலை தானே எழுதிக் கொண்டிருக்கிறார் இந்தப் பத்திரிகையாளர்.

வழக்கமாக, மரணத்துக்குச் சில நாட்களுக்கு முன்பு எழுதப்படும் செய்தி என்றால், அது கொலைக்குத் தொடர்புடையதாக இருக்கும். ஆனால் இது வித்தியாசமானது. தனக்கு நிகழப்போகும் மரணம் பற்றி முன்கூட்டியே கணித்து எழுதியிருந்தார் சுபம் மணி திரிபாதி. எழுதிய நாள் 14 ஜூன் 2020. முகநூலில் இதைப் பதிவிட்ட 5 நாள்களில் (ஜூன் 19) சடலமாக மீட்கப்பட்டார் சுபம். யார் இவர்? அப்படி என்னதான் நடந்தது?

25 வயதான சுபம் மணி திரிபாதி, உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் கம்ப்பு மெயில் (Kampu Mail) என்ற இந்தி நாளிதழின் உள்ளூர் நிருபராகப் பணியாற்றினார். பெரிய ஊடக நிறுவனத்தின் பெரிய நகர அலுவலகத்தில் அவர் இல்லை. ஆனால் அவர் எழுதியவை அவரைச் சுற்றியிருந்தவர்களுக்கு அவ்வளவு சிறியதாகப் படவில்லை. அரசு நில ஆக்கிரமிப்பு, சட்டவிரோதக் கட்டுமானம், சட்டவிரோத மணல் அகழ்வு ஆகியவை அவரது செய்திகளின் முதன்மை எழுதுபொருட்களாக இருந்தன.

அந்த வரிசையில்தான், திவ்யா அவஸ்தி குறித்தும் எழுத வேண்டி வந்தது. திவ்யா அவஸ்தி, நில வணிகத்தில் ஈடுபட்ட ஒரு உள்ளூர் வணிகர். சட்டவிரோத நில ஆக்கிரமிப்பில் திவ்யா ஈடுபட்டதாகக் கூறப்பட்ட விவகாரத்தைத் தன் செய்திகளில் வெளிப்படுத்தினார் சுபம். இதுதான் பிரச்னையின் அடிப்படை என்று காவல்துறை அறிக்கை தெரிவித்தது. சொல்லப்போனால், கொலை குறித்த அச்சுறுத்தல் அப்போதே சுபம் மனதில் விதைக்கப்பட்டுவிட்டது. காவல்துறை பின்னர் முன்வைத்த குற்றச்சாட்டின்படி, சுபத்தின் செய்திகள் மற்றும் முகநூல் பதிவுகளால் திவ்யா அவஸ்தி மேற்கொண்டதாகக் கூறப்பட்ட சட்டவிரோதக் கட்டுமானம் நிர்வாகத்தால் இடிக்கப்பட்டதும் பகையின் முக்கியக் காரணமாக அமைந்தது.

தனது Kampu Mail செய்திப்பிரிவு தலைவர் ரிதேஷ் ஷுக்லாவிடம் அந்த அச்சுறுத்தல் குறித்து சுபம் ஏற்கெனவே விளக்கியிருந்தார். அதைத்தொடர்ந்து, அவஸ்தி தரப்பு ஆட்கள் வீடுபுகுந்து சுபம்மீது தாக்குதல் நடத்தியதாக அவரது தரப்பில் புகார் எழுந்தது. நினைத்துப் பாருங்கள். ஒரு செய்தி வெளியிட்டதற்காக வீடு புகுந்து உங்களை ஒருவர் தாக்கினால் எப்படி இருக்கும்?

காவல் நிலையத்தில் புகார் அளித்தார் சுபம். புகார் எடுத்துக்கொள்ளப்பட்டது. நடவடிக்கை கிடப்பில் இருந்தது. இதற்குப் பிறகுதான், வீடு புகுந்து தாக்கியது ஒரு தவறான முடிவு என்று அவஸ்தி கூட்டம் உணர்ந்தது. கொலை செய்துவிடுவதே சரி என்றும் முடிவெடுத்தனர். கூலிப்படை மூலம் கொலை செய்ய திட்டமிடப்பட்டது.

காவல்துறையின் செய்திக்குறிப்பின்படி, திவ்யா அவஸ்தி நேரடியாகக் கூலிப்படைக்கு பணம் கொடுக்கவில்லை. மோனு கான் என்பவர் வழியாக அஃப்சர் அகமது, அப்துல் பாரி ஆகியோருக்கு மொத்தம் ரூ.4 லட்சம் கொடுத்து கொலையை நடத்தச் சொன்னதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த நிலையில் 14 ஜூன் 2020 அன்று சுபம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். ஒரு ‘பிரபல நில மாஃபியா’ தொடர்பான சட்டவிரோதக் கட்டுமானம், தன் செய்தியின் காரணமாக நிர்வாகத்தால் இடிக்கப்பட்டதாகவும், அதனால் ஆத்திரமடைந்தவர்கள் தன்னைப் பற்றி மாவட்ட ஆட்சியரிடம் போலி மனு ஒன்றை அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அவர் இந்தியில் எழுதியிருந்ததன் மொழிபெயர்ப்பு வடிவத்தை இங்கு தருகிறேன்.

‘சில நாட்களுக்கு முன்பு, ஒரு நில மாஃபியா நபர் தொடர்பான நிலம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்றிருந்தேன். [பின்] அங்குள்ள சட்டவிரோதக் கட்டுமானங்களை நிர்வாகம் இடித்துக்கொண்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நில மாஃபியா நபர், மூன்றாம் நபர் மூலம் மாவட்ட ஆட்சியரிடம் எனக்கெதிராகப் போலிப்புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்த நில மாஃபியா கும்பலுக்கு ஒரு பெரிய நன்றி. தொடர்ந்து அரசு நிலங்களை விற்பனை செய்யுங்கள். உங்களுக்கு எதிராக ஒரு பத்திரிகையாளர் செய்தி வெளியிட்டால், அவர்மீதும் தொடர்ந்து பொய் வழக்கு போட்டுக்கொண்டே இருங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும், நில மாஃபியா’

ஒரு சாதாரண சமூக ஊடகப் பதிவாகத் தோன்றலாம். ஆனால் அதன் பின்னால் ஒரு வலுவான அச்சுறுத்தல் இருந்தது.ஜூன் 16ஆம் தேதி வெளியிட்ட பதிவில், ‘பெரிய பெரிய கதைகளைச் சுற்றாமல் பொய் வழக்கு போடுங்கள் அல்லது கொலை செய்ய ஒப்பந்தங்களைப் போடுங்கள்’ என்று எழுதினார்.

மரணத்துக்கு முந்தைய இந்த எச்சரிக்கை பொதுவெளியில்தான் இருந்தது. காவல் துறை அதிகாரிகளிடமும் இது சென்றிருந்ததாகத் தகவல். ஜூன் 15 அன்று தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மாநில அதிகாரிகளுக்கு சுபம் கடிதம் அனுப்பியதாக அவரை அறிந்த உள்ளூர் பத்திரிகையாளர் கூறுகிறார். அந்தக் கடிதத்திலும் பின்னர் அவரது சகோதரர் அளித்த புகாரிலும் அதே பத்து சந்தேக நபர்கள் குறிப்பிடப்பட்டதாக சிபிஜே பதிவு செய்துள்ளது. ஒப்பந்தக் கூலிகள் மூலம் கொலை செய்ய வாய்ப்புண்டு என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் சுபத்துக்கு கிடைத்தது பாதுகாப்பு அல்ல. மரணம்.

ஜூன் 19, 2020. சுபம் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். உன்னாவ் மாவட்டத்தின் கங்காகாட் பகுதியில், தூத் மண்டி அருகே, லக்னோ–கான்பூர் நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் வந்துகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் அவரைச் சூழ்ந்தனர்.

என்னவென்று உணர்வதற்குள் சடசடவென சுட்டனர். ஆறு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது; அவற்றில் மூன்று குண்டுகள் தலையில் பாய்ந்ததாக ஆரம்பகால செய்தி அறிக்கைகள் பதிவு செய்தன. சம்பவத்துக்குப் பிறகு சுபம் உயிரிழந்தார்.

அவ்வளவுதான். வீடு புகுந்து தாக்கிய வழக்கை அப்படியே போட்டுவிட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கத் தொடங்கியது சட்டம்.

ஐந்து நாட்களுக்கு முன்பு உயிருக்கு அஞ்சுவதாக எழுதியிருந்த ஒரு பத்திரிகையாளர். அதே ஐந்து நாட்களுக்குப் பிறகு துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையானார். அதே பத்திரிகையாளர் தாக்கப்பட்டதாகவும் கிடப்பில் இருந்தது ஒரு வழக்கு. கூலிப்படையால் கொல்லப்பட வாய்ப்புண்டு என்பதும் முன்பே சொல்லப்பட்டிருந்தது. இன்னும் என்ன செய்திருந்தால் அந்த உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும் என்பதுதான் சுபம் மணி திரிபாதியின் கொலை விவகாரத்தில் இருக்கும் முதல் பெரிய கேள்வி.

சம்பவம் நடந்த அன்றிரவே அவரது சகோதரர் ரிஷப் மணி திரிபாதி காவல்துறையில் புகார் அளித்தார். 188/2020 என்ற வழக்கு எண்ணில் கங்காகாட் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் ஐபிசி பிரிவுகள் 147, 148, 149, 302/34, 120-பி மற்றும் குற்றவியல் சட்டத் திருத்தச் சட்டம் 1932-ன் பிரிவு 7 ஆகியவை இடம்பெற்றிருந்தன. ரிஷப் அளித்த புகாரில் அசார், திவ்யா அவஸ்தி உள்ளிட்ட 10 பேர் பெயரிடப்பட்டிருந்ததையும் சிபிஜே உறுதிப்படுத்துகிறது.

கலவரம், ஆயுதம் ஏந்திய கலவரம், சட்டவிரோதக் கூட்டத்தின் பொதுநோக்கிற்கான பொறுப்பு, கொலை, குற்றச் சதி ஆகிய குற்றங்களுக்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பத்திரிகையாளரின் பேனா நின்ற இடத்தில், சட்டத்தின் பிரிவுகள் எழுதத் தொடங்கின.

ஜூன் 23 அன்று (கொலை நடந்த அடுத்த நான்கு நாட்களிலேயே) அஃப்சர் அகமது, அப்துல் பாரி ஆகிய இருவர் நேரடியாக துப்பாக்கியால் சுட்டவர்களாகவும், ஷாநவாஸ் அசார் சதியில் பங்கு வகித்தவர் என்றும் காவல்துறை கைது செய்தது. அதே நாள் வெளியிடப்பட்ட காவல்துறை அறிக்கையின்படி, உள்ளூர் ரியல் எஸ்டேட் வணிகரான திவ்யா அவஸ்தி, சுபம் திரிபாதியின் கட்டுரைகளுக்கும் ஃபேஸ்புக் பதிவுகளுக்கும் பழிவாங்கும் விதமாக இந்தக் கொலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக கூலிப்படையினருக்கு 4 லட்சம் கொடுக்கப்பட்டதும் காவல்துறை அறிக்கையில் வெளியிடப்பட்டது. ஆனால் அந்தப் பணத்தை திவ்யா அவஸ்தி நேரடியாகக் கொடுத்ததாக அல்ல; மோனு கான் என்ற இடைத்தரகர் வழியாக அஃப்சர் அகமது, அப்துல் பாரி ஆகியோருக்குக் கொடுக்கப்பட்டதாக காவல்துறை குற்றஞ்சாட்டியது.

இதற்கிடையில், சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யாததால் சுபம் மணி திரிபாதியின் மரணத்துக்குப் பிறகான 13ஆம் நாள் காரியத்தைக் கைவிடுவதாகவும், தொடர்ந்து முதலமைச்சர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்போவதாகவும் சுபம் குடும்பம் அறிவித்ததும் சூடுபிடித்தது தேடுதல் வேட்டை. கங்காகாட் காவல் நிலையப் பொறுப்பாளரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் குடும்பத்தினர் முன்வைத்தனர்.

ஜூன் 30 அன்று நடத்த வேண்டிய 13ஆம் நாள் சடங்கை நடத்தமாட்டோம் என்று அறிவித்த அடுத்த நாளே முக்கிய கைது நடவடிக்கைகள் நடந்தன. அதே சமயம் ஒவ்வொரு பத்திரிகையாளர் கொலையின்போது நடத்தப்படும் ஒரு அத்தியாவசியச் சடங்கு தவறாமல் நடந்தது. அவர் ஒரு பத்திரிகையாளரே அல்ல என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அறிவித்தார். மாவட்டத் தகவல் அலுவலரிடம் இவர் ஒரு பத்திரிகையாளர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று காரணமும் சொல்லப்பட்டது.

திவ்யா அவஸ்தி, அவரது கணவர் கன்னையா அவஸ்தி, ராகவேந்திர அவஸ்தி என்கிற ‘ஜீசஸ்’, மோனு கான், சுஃபியான் ஆகியோரைக் குறித்து தகவல் கொடுப்போருக்கு தலா ரூ.10,000 பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தும் தனிப்படைகள் அமைத்தும் தேடியது காவல்துறை. விசாரணையின் ஒரு கட்டத்தில், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்கள், மூன்று நாட்டுத் துப்பாக்கிகள், மூன்று காலி தோட்டாக்கள், நான்கு தோட்டாக்கள் மற்றும் ஒரு i20 கார் ஆகியவற்றையும் காவல்துறை கைப்பற்றியது.

ஜூலை 1 அன்று திவ்யா அவஸ்தியும் அவரது கணவர் கன்னையா அவஸ்தியும் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் முகமது சானு, திப்பு சுல்தான், சந்தோஷ் வாய்பேயி, சுஃபியான் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டதாகப் பதிவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு முன் கைது செய்யப்பட்ட இரு துப்பாக்கிச் சூட்டாளர்களோடு ஷாநவாஸ் அசாரையும் சேர்த்து, அந்தக் கட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்தது. குற்றஞ்சாட்டப்பட்ட மேலும் சிலரைத் தேடும் பணியும் தொடர்ந்தது.

இதற்கிடையில், குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான கன்னையா அவஸ்திமீது செப்டம்பர் 6, 2020 அன்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் தன் தடுப்புக் காவலுக்கு எதிராக அளித்த மனுவை மத்திய அரசும் உன்னாவ் மாவட்ட ஆட்சியரும் பரிசீலிப்பதில் நீண்ட தாமதம் ஏற்பட்டது.

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ரமேஷ் சின்ஹா மற்றும் சரோஜ் யாதவ் ஆகியோர் ஆகஸ்ட் 2021இல் இந்தத் தாமதத்திற்கு போதுமான விளக்கம் இல்லை என்று கண்டு, தடுப்புக் காவல் உத்தரவை ரத்து செய்தனர். ‘பிரதிநிதித்துவங்களை முடிந்தவரை விரைவாகப் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டியது அனைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமை’ என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. மாவட்ட ஆட்சியர் மற்றும் மத்திய அரசு தரப்பில் ஏற்பட்ட ஒட்டுமொத்த தாமதமே தடுப்புக் காவலை ரத்து செய்ய காரணமாக அமைந்தது.

உடனே, சுபம் கொலை வழக்கிலிருந்து கன்னையா விடுவிக்கப்பட்டார் என்று பேச்சு கிளம்பியது. ஆனால், இந்தத் தீர்ப்பை அப்படி பொருள் கொள்ள முடியாது. ரத்து செய்யப்பட்டது தடுப்புக் காவல் மட்டுமே. நடந்து கொண்டிருக்கும் கொலை வழக்கின் குற்றவியல் விசாரணைக்கும் அதற்கும் நேரடிச் சம்பந்தமில்லை. நீதிமன்றமும், வேறு வழக்கில் அவர் தேவைப்பட்டால் விடுதலை செய்ய வேண்டியதில்லை என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது.

அதேபோலத்தான், சுபம் கொலையும் தனி நிகழ்வல்ல. குறிப்பாக, மணல் மற்றும் நில மாஃபியா குறித்து செய்தி எழுதும் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் இயல்பானதாக மாறிக்கொண்டிருக்கிறது. ஒரு மாவட்டத்தில் அதிகாரத்துக்கும் பணபலத்துக்கும் எதிராகச் செய்தி எழுதும் ஓர் உள்ளூர் பத்திரிகையாளரின் பாதுகாப்பு எங்கே இருக்கிறது என்ற பெரிய கேள்வியை இந்த மரணம் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

களச்செய்திகள் எழுதுவதென்பது பாதுகாப்பான கண்ணாடிக் கூண்டுகளுக்குள் அமர்ந்தபடி மேற்கொள்ளப்படும் பணியல்ல. நீங்கள் இன்று எதிர்த்த நபரை நாளை காலை சந்திக்க வேண்டும். பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பை விட ஆபத்தே எப்போதும் நெருக்கமானதாக இருக்கிறது.

சுபத்தின் கொலைக்குப் பிறகு இந்தக் கேள்வி இந்திய எல்லைக்குள் மட்டும் நின்றுவிடவில்லை. யுனெஸ்கோ இயக்குநர் ஜெனரல் ஆட்ரே அசுலே, சுபம் மணி திரிபாதியின் கொலையைக் கண்டித்து, குற்றவாளிகளை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று இந்திய அதிகாரிகளை வலியுறுத்தினார். துப்பாக்கி முனையில் பத்திரிகையாளர்களை மவுனப்படுத்துவதைத் தடுக்க குற்றவாளிகள் நீதிக்கு உட்படுத்தப்படுவது அவசியம் என்றார்.

தேசிய மனித உரிமைகள் ஆணையமும் தானாக முன்வந்து வழக்கைக் கவனத்தில் எடுத்தது. உத்தரப் பிரதேச தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பி விரிவான அறிக்கை கோரியதோடு சுயாதீன அமைப்புகள் மூலம் பாரபட்சமற்ற விசாரணை நடத்தவும் சுபத்தின் குடும்பத்தினருக்கும் சாட்சிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கவும் அறிவுறுத்தியது.

இந்தியப் பத்திரிகைக் கவுன்சிலும் ஜூன் 26 அன்று சம்பவத்தைத் தானாக முன்வந்து விசாரித்தது. அத்துடன், வெறுமனே மாவட்டத் தகவல் அலுவலரிடம் பதிவு இல்லை என்பதற்காக அவரைப் பத்திரிகையாளர் இல்லை என்று சொல்லக்கூடாது என்றும் இந்த அறிக்கை பதிவு செய்தது ஓர் ஆறுதலாக அமைந்தது.

இன்றைய நிலை என்ன? ஆரம்பத்தில் ஜூலை 1, 2020 வரை ஒன்பது பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். பின்னர் விசாரணை தொடர்ந்து விரிவடைந்தது. 2021 பிப்ரவரியில், உத்தரப் பிரதேச அரசு 16 பேரைக் கைது செய்துள்ளதாக என்ஹெச்ஆர்சிக்குத் தெரிவித்தது. அவர்கள் வெவ்வேறு தேதிகளில் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டதாகவும், அலைபேசி அழைப்புகள் உள்ளிட்ட சில முக்கியத் தரவுகளை சிபிசிஐடி சேகரித்ததாகவும் பதிவு செய்தது. எனவே ஒன்பது பேர் கைது என்பது ஜூலை 1, 2020 நிலவரம். இதில் கன்னையா அவஸ்தியின் தடுப்புக் காவல் மட்டும் 2021இல் ரத்து செய்யப்பட்டது. கொலை வழக்கு தொடர்கிறது.

2024 டிசம்பரில் கன்னையா அவஸ்தி சிறையில் இருந்தபோதே உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். வழக்கு தொடர்ந்து நடந்துவருகிறது. 2025 பிப்ரவரி நிலவரப்படி, அரசுத் தரப்பு சாட்சியங்கள் முடிந்து, குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டன. வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியிருந்ததாக அலகாபாத் உயர்நீதிமன்றம் பதிவு செய்தது. இருப்பினும், இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை காத்திருக்கத்தான் வேண்டும்.

ஒரு பத்திரிகையாளரின் மரணத்துக்குப் பிறகு நாம் வழக்கமாகக் கேட்கும் கேள்வி, ‘அவரைக் கொன்றது யார்?’ என்பதுதான். ஆனால், சுபம் மணி திரிபாதியின் வழக்கில் அதைவிட முன்னதாகக் கேட்க வேண்டிய கேள்வி ஒன்று இருக்கிறது.

‘தனக்கு ஆபத்து இருப்பதாக அவர் சொன்னபோது, அவரைக் காப்பாற்றியது யார்?’

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *