Skip to content
Home » நான் கண்ட இந்தியா #3 – டாக்டர் அன்சாரியின் வீடு

நான் கண்ட இந்தியா #3 – டாக்டர் அன்சாரியின் வீடு

டாக்டர் அன்சாரி

டாக்டர் அன்சாரியின் வீட்டுக்கு டார்-எஸ்-சலாம் என்ற பெயர் உண்டு. அப்படியென்றால் சலாமின் இல்லம் என்றும் இஸ்லாமின் இல்லம் என்றும் பொருள். இஸ்லாத்தின் மீது அவருக்கிருந்த நம்பிக்கையை, இந்தப் பெயர் மீண்டும் ஊர்ஜிதப்படுத்துகிறது. சர்வதேச மற்றும் உலகளாவிய அம்சங்கள் பொருந்திய வீடாக அது இருந்தது. நான் அங்கு இரண்டு மாதங்கள் தங்கியிருந்தேன்.

சதுர வடிவப் புல்வெளிப் பரப்பை எதிர்கொண்டபடி எண்கோண வடிவில் இருந்தது சலாமின் இல்லம். எதிர் சாலைகளில், எந்தநேரமும் ஒருவர் காரில் வந்தபடியும் போனபடியும் இருப்பார்கள். சில அடிகள் எடுத்து வைத்தால் பளிங்கு தரையிட்ட மொட்டை மாடிக்குச் செல்லலாம். கீழுள்ள பால்கனியின் அளவுக்கு அது நீள்கிறது. மெஜந்தா நிறப் பானையில் மிகத் தாராளமாய் பூத்துக்குலுங்கிய சிகப்பு, வெள்ளை மற்றும் கத்திரி நிறப் பூக்களால் மார்பிள் மெழுகிய மொட்டை மாடி மிகப் பிரகாசமாய் ஒளிர்ந்தது. தலைக்குமேல் காங்கிரஸ் கொடி பறந்தது.

இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இடம். சலாம் இல்லத்தின் கடந்தகாலப் பெருமைகளை விட, நிகழ்காலச் சிறப்புகளே என்னைப் பெரிதும் ஈர்க்கின்றன. ஒரு மறக்கமுடியாத நாளில் மகாத்மா காந்தியும் இர்வின் பிரபுவும் இங்குதான் சந்தித்தார்கள். அந்த நேரத்தில் நாடாளுமன்றக் குழுவும் நிழல் அமைச்சரவையும் இங்குதான் ஒன்றுகூடின. பண்டைய, இடைக்கால மற்றும் நவீனக் காலங்கள் ஒன்றுசேர்ந்து, பல்வேறுபட்ட ஆளுமைகளின் கருத்துகளும் விருப்பங்களும் சந்தித்து ஒன்றிணைந்த இடம் இது. புதிய போக்குகளைத் திசை மாற்றிச் செலுத்திவிட, இந்த வீடே ஊன்றுகோலானது. எதிர்வரும் சுதந்தர இந்தியாவின் உருவாக்கத்தில், சலாம் இல்லத்தின் பங்கு முக்கிய அடையாளமாக இருக்கும்.

எங்கள் நாட்டில் 1912ஆம் ஆண்டுகளில் சிறப்புற்று விளங்கிய பல்வேறு ஆளுமைகளின் புகைப்படங்களை வரவேற்பறைச் சுவரில் பார்த்தேன். அவர்கள் 1935ஆம் ஆண்டின் இந்தியாவைப் பார்த்தபடி இருந்தார்கள். புகழ்பெற்ற ஆப்கானிகளும் பெர்சியர்களும் அதில் அடக்கம். அண்டை நாட்டுக்கோ மத்தியக் கிழக்குக்கோ மட்டுமன்றி இந்திய முஸ்லிம்களின் சாளரம், தொலைதூரக் கிழக்கிலும் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

சுவரில் மட்டுமல்ல, அறையிலும் கிழக்கு – மேற்கு இருந்தன. கராச்சிப் பெண்கள் மாநாட்டில் கலந்துகொள்ள இருந்த இரண்டு ஆங்கிலேயப் பெண்கள் என்னைச் சந்திக்க வந்திருந்தார்கள். வசீகர முகத்தோற்றத்தில் இருந்த மௌடி ராய்டனும், பிரிட்டானிய நளினம் பொருந்திய கார்பெட் ஆஷ்பியும் மேற்கத்திய அடையாளத்துக்கு ஒருமித்தமானவர்கள் எனச் சொல்ல முடியாது. ஏனெனில் ஆக்ஸ்ஃபோர்டில் கல்வி பெறும் எவரொருவரும் மேற்கத்திய பாவனையில் பாண்டித்தியம் அடையலாம். இந்தியர்களும்கூட மேற்கத்திய சிந்தனையிலும் ஆங்கிலேய மொழியிலும் ஊறியிருந்தார்கள். இந்தியாவில் பிரிட்டன் ஆதிக்கம் ஒருநாள் முடிவுக்கு வரலாம். ஆனால் கலாசாரத்திலும் கல்வியிலும் அதன் செல்வாக்கு ஆழ வேரூன்றி, இனி வரும் எதிர்காலத்தில் இந்தியாவை வளர்த்தெடுக்கும் மகோன்னத சக்தியாக நிலைபெறும்.

0

முற்றத்தின் நடுவில் எனது படுக்கையறை இருந்தது. குளம், நீரூற்று, அதனைச் சுற்றி சில பூந்தொட்டிகள்; சிகப்பு நிறப் பூக்கள் அவ்விடத்தை நிரப்பியிருந்தன. பேகம் அன்சாரியின் அறைக்கதவு உட்பட பல வாயில்கள் அந்த முற்றத்தில்தான் தொடங்கின. அதன் மருங்கே இருள் அகற்றிக் கொண்டு, வேலைக்காரன் ஒருவன் வந்தான். அவன் கையில் ஒரு விளக்கு இருந்தது.

‘சிற்றுண்டி எப்போது?’ என தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் கேட்டான்.

‘ஏழரை மணிக்கு’ என்றேன்.

‘ஓ, வெல்லிங்டன் நேரமா, ஸ்டாண்டர்ட் நேரமா?’ என்றான்.

‘அப்படியென்றால்?’

டாக்டர்.‌ அன்சாரியின் வெளிநாட்டு விருந்தினர்களை உபசரிக்கும் போது, அவன் கற்றுக்கொண்ட ஒன்றிரண்டு ஆங்கில வார்த்தைகளை விரல்விட்டு எண்ணி விநோதமாகப் பேசினான். அவன் சொன்னதைக் காட்டிலும், சைகையால் உணர்த்தியது ஓரளவு புரிந்தது.‌ இந்தியாவில் இரண்டு நேரக் கணக்குகள் இருக்கின்றனவாம். வெல்லிங்டன் நேரக் கணக்கு சாதாரண நேரத்தைவிட அரைமணி நேரம் முன்னோக்கி ஓடும். எதிலும் முன்செல்லத் துடிக்கிறது இந்த மேற்குலகம். இந்த நாட்டில் நேரத்தில்கூட ஒற்றுமை இல்லை என்பது எத்தனை விசித்திரமான செய்தி!

இரவு நேரத்தில் இந்தியாவின் பலவிதமான ஒலிகளைக் கேட்கலாமென படுக்கையில் அமர்ந்தேன். ஆரம்பத்தில் குழந்தைகள் அழுகையும் விநோதமான சிரிப்புச் சத்தமும் கேட்டன. ஆனால் அது நரிகளும் குரங்குகளும் எழுப்பிய கொடூர ஒலி என பின்னர் அறிந்துகொண்டேன். சிறகடிக்கும் சத்தம் கேட்டது. திறந்த ஜன்னலின் வழியே இரண்டு பறவைகள் உள்ளே வந்தன. என் கட்டில் கம்பியின் ஓரத்தில் பவ்யமாக உட்கார்ந்தன. இந்திய வாழ்வின் விசித்திரம் பொருந்திய ஒற்றுமையை உணர்ந்தேன். சாதியின் பெயரால் மக்கள் பிளவுண்டுகிடப்பதில் ஆச்சரியம் இல்லை. அது மட்டுமே இங்கு வெளிப்படையானது.

யோசித்தப்படியே வெகு நேரம் முழித்திருந்தேன். இந்தியாவில் இந்தப் பழக்கம் என்னோடு ஒட்டிக்கொண்டது. ஒவ்வொரு நாளும் குழம்பிப் போனேன். இந்தத் தேசம் அல்லாவின் பட்டறைபோல் தெரிந்தது. அழகும் அருவருப்பும் பொருந்திய கடவுளர்களும், மனிதர்களும், மிருகங்களும் இங்கு வாழ்கிறார்கள். மிகவும் ஒழுங்கீனமான வரிசையில் இந்நாட்டுக் கலைகளும் சிந்தனைகளும் பழமை புதுமை மாறி அடுக்கப்பட்டிருக்கின்றன.

ரஷ்யா பற்றியும் அமெரிக்கா பற்றியும் நேரடியான புரிதல் இருந்தால் போதும், உலகம் செல்லும் பாதையை ஊகித்து உணரலாம் என ஒருகாலத்தில் நினைத்திருந்தேன். ஆனால் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இந்தியாவுக்கும் நிச்சயம் பங்கு இருக்கவேண்டும். அதற்குக் காரணம் அதன் தொன்றுதொட்ட பழங்காலம் அல்ல, கிளைவிட்டிருக்கும் புத்தொளிக் காலம்.

இதே பங்கு சீனாவுக்கும் ஜப்பானுக்கும் பொருந்தலாம். ஆனால் அதை எப்படிச் சொல்வது? வரலாற்றின் செயல்பாட்டைப் பற்றி எந்தவொரு புரிதலும் இல்லாதபோது, அதை எப்படி ஒருவரால் பார்க்கவும் புரிந்துகொள்ளவும் முடிகிறது? இந்தியாவைப் பொறுத்தவரை நான் காணும் அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ள உத்தேசித்தேன். யார் கண்டார்கள், இந்தியாவின் ஒருபாதியாவது என்னால் பதிவு செய்ய முடியும் அல்லவா?

0

ஜாமியாவில் நான் உரையாற்றுவதற்கு முன்னர், ஒய்வெடுக்கவும் ஊர் சுற்றவும் பத்து நாட்களை அன்சாரி வழங்கியிருந்தார். இங்கு அவரைப் பற்றி மேலும் சொல்வது உசிதம்.

அவர் ஐக்கிய மாகாணத்தைச் (இன்றைய உத்தர பிரதேசத்தைச்) சார்ந்தவர். இதைக் குறிப்பிட்டுச் சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு. எதிர்கால இந்தியாவை வழிநடத்தும் ஆற்றல் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்களும் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்களுமே உண்டு என இந்திய அறிவுஜீவிகள் நம்பி வந்தார்கள். எப்படிப் பார்த்தாலும், அன்சாரியின் வாழ்நாள் முழுக்க இந்தியா சுதந்தரம் அடையப்போவதில்லை. இருந்தாலும் இந்தியாவை ஆளப்போகும் ஐக்கிய மாகாண ஆளுமைக்கு இன்னின்ன தகுதிகள் வேண்டுமென அவர்கள் பட்டியல் போட்டிருக்கிறார்கள். தெளிவான பார்வையும் பல்துறையில் வித்தகமும் ஒன்றிணைக்கும் ஆற்றலும் போதுமென இந்திய அறிவுஜீவிகள் நம்புகிறார்கள்.

புனிதர், ஆட்சியாளர், போர்வீரர், நீதிபதி என்று வட இந்தியா முழுக்க சிறப்புற்று விளங்கிய வம்சாவளியில் வந்தவர் அன்சாரி. ஒரு மனிதன் தன் மூதாதையரின் குணங்களைச் சுவீகரித்துக் கொள்வானானால், இறையருள் சிந்தனையும், ஒன்றிணைக்கும் சாமர்த்தியமும், தைரியம் பொருந்திய சட்ட நிபுணத்துவமும் அன்சாரிக்கு ஒருசேரப் பொருந்தும். இதையெல்லாம் தாண்டி அவர் ஒரு மருத்துவர்.

இந்தியக் கலாசாரத்தில் ஆழ வேரூன்றியவர். ஹைதராபாத்தில் தொடக்கக்கல்வி பயின்றார். தன் முதுநிலைப் படிப்புக்காக ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் உதவித்தொகையைப் பெற்று, புகழ்பெற்ற எடின்பர்க் பல்கலைக்கழகத்துக்கு மருத்துவம் படிக்கச் சென்றார். அந்தக் காலத்தில் சேரிங் கிராஸ் மருத்துவமனையில் பயிற்சி பெற அனுமதிக்கப்பட்ட ஒரே இந்தியரும்; லாக் மருத்துவமனையில் பணிபுரிந்த ஒரே இந்தியரும் அன்சாரிதான். இது அவரின் அசாத்தியக் குணங்களையும்; தொழிலில் கொண்ட அக்கறையையும் வெளிக்காட்டுகிறது. மேற்கின் அறிவியல் உலகம் கல்வி புலத்தில் வளர்ச்சியடைந்த வரலாறும் இதில் மறைந்திருக்கிறது.

பண்டைய வைத்திய முறைகள் மலிந்து கிடக்கும் இந்தியாவில், அன்சாரி அரிதான முஸ்லிமாக அடையாளம் காணப்பட்டார். பண்டைய வைத்தியமும் நவீன மருத்துவமும் ஒன்றிணைய முஸ்லிம்களின் பாலமாகச் செயல்பட்டார். இன்றைக்கு இந்தப் பணியை எத்தனையோ பேர் செய்யலாம். ஆனால் இதை முன்னெடுத்தவர் அன்சாரிதான்.

1910இல் டெல்லியில் குடியேறி, அங்கேயே மருத்துவம் பார்த்து வந்தார். பின்னர் 1912இல் பால்கனில் போர் மூண்டதையொட்டி, மீட்புப்பணிக்காக தில்லியிலிருந்து புறப்பட்டு பால்கன் வந்து சேர்ந்தார். இவருக்கு இந்திய செம்பிறைச் சங்கத்தின் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டதை முன்னரே சொல்லியிருந்தேன். இந்தத் துருக்கியப் பயணத்தின் மூலம், அண்டைய கிழக்கு தேசத்துக்கும் இந்தியாவுக்கும் மற்றொரு பாலமாக அவர் மாறினார். இந்தியா திரும்பிய பிறகு 1918இல் கிலாபத் இயக்கம் தொடங்கி, அதில் முக்கியப் பங்கு வகித்தார். கிலாபத் இயக்கத்தை ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் புரிந்துகொள்ளவும் விவரிக்கவும் முடியும். ஆனால் அந்தப் பேச்சு இங்கு தொடர்புடையதல்ல என்பதால் தவிர்க்கிறேன்.

அந்த இயக்கம் இரண்டு முரண்பட்ட விளைவுகளை உண்டாக்கியது: ஒன்று, ஒரு பொதுக் காரணத்தால் இந்து முஸ்லிம்களை ஒன்றிணைத்தது. இரண்டு, மற்றொரு காரணத்தால் அவர்களைப் பிரித்துவைத்தது. இதில் இந்து முஸ்லிம்களை ஒன்றிணைக்கும் முதல் காரணியில் ஈடுபட்டதன் மூலம் மூன்றாவது பாலமாக அன்சாரி உருவெடுத்திருந்தார். இது அவர் அரசியல் வாழ்க்கையில் சொல்லத் தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்தியாவின் முரண்பட்ட வகுப்பினரிடையே சமத்துவமும் ஒற்றுமையும் பேணுவதன் மூலம் குடியுரிமைப் பெறலாம் என அவர் உறுதி பூண்டிருந்தார். இதனைக் கையாள்வதில் சிக்கல் இருந்தாலும், ஒருபோதும் மாற்றிக் கொள்ளவில்லை. ஆத்திரமடைந்த இந்து – முஸ்லிம் வெறியர்களின் ஒட்டுமொத்த அம்புகளுக்கும் இறையானார். ஆளும் வர்க்கத்தோடு முரண்கொள்ள நேர்ந்து, சிறைத்தண்டனை பெற்றார். உடல்நலம் மேலும் குன்றியது. அவர் எதிர்கொண்ட சிக்கல்கள் இதுமட்டுமா? விமர்சனங்களும் சூழ்ச்சிகளும் தீங்கு விளைவிக்கும் நயவஞ்சகமான நுணக்கத்தோடு கிழக்கில் உதித்து தொல்லை செய்தன.

இருந்தபோதும் தன் தேசத்து அறிவார்ந்தோர்களிடையே நம் மதிப்பைப் பெற்றிருக்கிறார். அவர்மீது மாறுபாடு கொண்டோரும் மதித்துப் போற்றுகிறார்கள். அனைத்திந்தியக் கூட்டங்களையும், கட்சி சாராத மாநாடுகளையும் தலைமை தாங்கி நடத்துகிறார். 1935ஆம் ஆண்டு காங்கிரஸ் நிழல் அமைச்சரவையில் உறுப்பினராக இருந்ததே இவரது அரசியல் மற்றும் பொது வாழ்க்கைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இத்தனைக்கும் இடையில் மருத்துவப் பணியை விடாது செய்து வருகிறார். இந்நாட்டின் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்குத் தன் கைப்பட வைத்தியம் பார்த்திருக்கிறார். பண வசதி இல்லாதவர்களுக்குத் தனியாக நேரம் ஒதுக்கி வைத்தியம் பார்க்கிறார். அவர்களின் மூலம் ஈட்டும் லாபத்தைவிட, அதற்கு நேரம் செலவிடுவதையே பெரியது எனச் சொல்வார். உபாதைகளோடு வரும் எவரொருவரும் இந்த வாசலைத் தாண்டும்போது அவதியோடு செல்வதில்லை.‌

அவரின் இடதுசாரி குடும்பத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள, எனக்கருகில் உள்ள திரைச்சீலையை ஓரம் ஒதுக்கி ஆராய வேண்டும். அன்சாரியின் சகோதரர் மகளான பேகம் அன்சாரி தன் சுவீகாரப் புதல்வியோடும் வேலையாட்களோடும் எதிரே உள்ள அறையில் வசித்து வந்தார். புர்கா அணிந்த அசல் முஸ்லிம் பெண் அவர். அரபி, பெர்சியன், உருது மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்ததால், ஓய்வு நேரங்களில் புத்தகம் படிப்பதை வாடிக்கையாகக் கொண்டார். அவரிடம் மார்க்கப் பற்றும் இரக்கக் குணமும் அளவுக்கு மீறி இருந்தன. தன் உறவினர்களைத் தவிர, வேறெந்த ஆடவரையும் ஏறெடுத்தும் பார்க்காத பெண்மணி அவர்.

ஆனால் காந்திக்கு மட்டும் விதிவிலக்கு. தன் பணியாட்களோடு அவர் நடந்துகொள்ளும் முறை, பண்டைய துருக்கியை எனக்கு ஞாபகப்படுத்துகிறது. திரைச்சீலைக்குப் பின்னால், இளம் பெண்கள் பாடம் கேட்கும் சத்தம் அடிக்கடி ஒலிக்கும். யாருக்கும் அஞ்சாமல், தன் சொந்த வீட்டிலிருந்து பாடம் கேட்பதுபோல் சௌகரியமாக படிக்கிறார்கள். ஒவ்வொரு ஆசிரியரும் பாடம் சொல்லும் முறை, இது வகுப்பறைதானா என ஆச்சரியப்படுத்துகிறது.

ஆனால் பேகம் அன்சாரியோடு பொதுமொழியில் உரையாட முடியாமல் போனது. அவர் தன் மகளிடம் சொல்ல, அவர் அதை மொழிபெயர்த்து என்னிடம் விளக்கினார். பேகத்தின் வாழ்க்கை அத்தனை அந்நியமானதாக தோன்றவில்லை. அவர் சொன்ன அரபி, பெர்சிய, உருது மொழி மேற்கோள்களை என்னால் பெருமளவு புரிந்துகொள்ள முடிந்தது. அவர் தங்கியிருந்த பகுதியில் பெரிய வரவேற்பறை ஒன்றும், மற்ற அறைக்கு செல்வதற்கான வாயில்களும் இருந்தன. முகப்பு அறையிலிருந்து வெளியே சென்றால், வானம் பார்த்தபடி இன்னொரு மாடி இருந்தது. தன் தோட்டத்தில் புறாக்களுக்கென ஒரு சிறு வீடு அமைத்திருந்தார். மையல் கூடிய மாலைப் பொழுதில் மாடப்புறாக்களுக்கும் வெள்ளைப் புறாக்களுக்கும் அவர் சோறூட்டும் அழகே தனி. இந்தியர்களுக்கே உண்டான தனிக் குணம் அது.

பேகம் அன்சாரியின் அறை சலாம் இல்லத்தின் கிழக்கில் இருந்தது. அதன் மேற்குப் பகுதியில் பேகத்தின் கணவருக்குப் பங்கு இருந்தாலும், அதில் இவர் சொந்தம் கொண்டாடவில்லை. மற்றவர்கள் உடைமை கொண்டாடியதையும் பேகம் சகித்துக் கொண்டார். அதே சமயம் தன் மகளின் பாதையில் அவர் குறுக்கிடவில்லை. பேகத்தின் மகள் தன் வாழ்வின் அடுக்ககங்களில் இருந்து மெல்ல விடுபட்டுக் கொண்டிருந்தார். ஆட்கள் குறைவாக இருந்தால் மட்டும் உணவருந்த வெளியே வருவார். சாகசம் செய்யும் அமெரிக்கக் குழந்தை போல் தீரமாக கார் ஓட்டுவார். சகஜமாக சேலை கட்டுவார். தன் நாட்டு சமூக, அரசியல், கலாசார விஷயங்களில் நல்ல ஆர்வம் கொண்டிருந்தார். ஒரு முஸ்லிம் பெண்ணை எதிர்கால வாழ்க்கைக்குத் தயார்படுத்தும் ஆரோக்கியமான வழி இது.

‌இன்றைய இந்தியா இது போன்ற முரண்பட்ட பழக்கவழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால், இதன் தலைவிதியைத் தீர்மானிப்பதில் பெண்களின் பங்கு குறித்து அவசரமாக சிந்திக்க வேண்டும். நூற்றாண்டுகளாய் சபிக்கப்பட்ட இந்தியர்கள், தங்கள் நிலையை மாற்ற சரியான நேரம் நோக்கி நகர்கிறார்கள்.

நான் வளர்ந்த வாழ்க்கை முறையை ஜோஹ்ரா மீண்டும் நினைவூட்டினார். கொஞ்சமும் மாற்றமில்லாமல், அந்த வயதில் எனக்கிருந்த எல்லாச் சச்சரவுகளும் அவரைச் சூழ்ந்திருந்தன. 35 ஆண்டுகளுக்கு முந்தைய என் துருக்கிய வாழ்வின் இந்திய வடிவம்தான், ஜோஹ்ரா. பர்தாவுக்கு உள்ளேயும் வெளியேவும் குழுவாகச் செயல்பட முடியாமல், அவரின் தனித்துவ ஆற்றல் குத்தலெடுத்தது.

விலகியிருப்பதிலும் ரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஒரு காலை முக்காடு அணிந்த பர்தாவுக்குள்ளும் மற்றொரு காலைப் புரட்சி மலர் தூவும் விடுதலைக்குள்ளும் ஊன்றி நடப்பது சாத்தியமாகுமா?

சங்கீத மொழியில் சொல்வதென்றால் பர்தாவும் புரட்சியும், மெல்லிசை – ராப் பாடல் போன்றதொரு சேர்க்கை. ஒரு காலில் மெல்லிசைக்கு ஆடுவதும்; மற்றொரு காலில் ராப் பாடலுக்கு ஆடுவதும் கழைக்கூத்தாடியின் பணிநேர்த்தியை எதிர்பார்க்கும். ஆனால் இவ்விரண்டையும் புரிந்துகொள்ள, இதன்மூலம் அப்பெண்ணுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தவறான பாதையில் சென்றால், மீண்டும் திரும்பிவர ஒரு மாற்றுவழி இருக்கிறது.

என்னைப் போலவே ஜோஹ்ராவுக்கும் வரலாறு, இலக்கியம் போன்ற துறைகளில் நல்ல ஆர்வம் இருந்தது. அவை அறிவுப் பசியைத் தீர்ப்பதற்கு மட்டுமன்றி, தன் நிலை உயர்த்தும் அறிவுக் கருவிகள் என அவர் நம்பினார். நான் வியந்துபோகும்படி இந்திய வரலாற்றை மிக நன்றாக உணர்ந்திருந்தார். இளம் பிராயத்துக்கே உண்டான லௌகீகச் சிந்தனைக்கு ஆளாகாமல், தன் உணர்ச்சிகள் தன்னை ஆட்படுத்தாதபடி பக்குவப்பட்டிருந்தார் அந்தப் பெண்மணி.

ஒரு முஸ்லிமாக இருந்ததாலோ என்னவோ தாழ்ந்த மனப்பான்மையும் உயர்ந்த மனப்பான்மையும் இல்லாது, நடுநிலையாக இருந்தார். இஸ்லாமியர்கள் அந்நியர் என்றும், மதச் சிறுபான்மையினர் என்றும், அப்படியிருக்கவே உந்தப்படுகிறார்கள் என்றும் அவர் ஒருபோதும் கருதவில்லை. ஒரு முழுமுதல் இந்திய பிரஜை. தன் பண்டைய வரலாற்றில் ஹுமாயூனுக்கும் பாபருக்கும் அளித்த அதே இடத்தை அசோகருக்கும் வழங்கினார். அந்தப் பெண் தினமும் சந்திக்கும் ஜாமியா பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் தொடர்பே, இந்தப் பார்வையை மெருகேற்றியிருக்கும் என நம்புகிறேன்.

ஒவ்வொரு காலையும் ஜோஹ்ராவின் வருகைக்காக என் அறையில் காத்திருப்பேன். தில்லியில் காணவேண்டிய எல்லா இடத்துக்கும் என்னோடு வந்தாள். புராதனக் கட்டடங்களை அதன் பிரமிக்கதக்க வரலாற்றைச் சொல்லி அறிமுகப்படுத்தினாள். அதில் கொஞ்சம் புனைவுகளும் இருந்தன. ஆனால் அந்தக் கதைகளும் அறிமுகங்களும் இல்லாவிடில் வெற்று கற்குவியலும் கலைப் படிமங்களுமே என் கண்ணில் பட்டிருக்கும் . இந்த இடிபாடுகளுக்குள் வாழ்ந்த எல்லா அசகாயச் சூரக் கதைகளும் ஜோஹ்ராவுக்கு அத்துப்படி.

(தொடரும்)

__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
nv-author-image

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

2 thoughts on “நான் கண்ட இந்தியா #3 – டாக்டர் அன்சாரியின் வீடு”

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *