Skip to content
Home » நான் கண்ட இந்தியா #12 – ஜாமியா உரைகள் 1

நான் கண்ட இந்தியா #12 – ஜாமியா உரைகள் 1

ஜாமியாவில் நான் சொற்பொழிவாற்றிய கருத்தரங்கிற்கு எட்டு பேர் தலைமை தாங்கியிருந்தனர். அதில் நான்கு பேர், இந்து. நான்கு பேர், முஸ்லிம். அவர்களைப் பற்றி சுருங்கச் சொல்வது, இந்தியாவைப் பற்றி விரிவாய் புரிந்துகொள்ள உதவும் என நினைக்கிறேன். சரோஜினி நாயுடு பற்றி உங்களுக்கு முன்பே சொல்லிவிட்டேன். ஜாமியாவில் மகாத்மா காந்தியின் இருப்பு, இன்னும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. இங்கு அவர் பற்றி இன்னும் சில செய்திகள் சொல்கிறேன்.

அன்றைக்கு குளிர் அதிகமாய் இருந்ததால் அடுப்புக்கரி வைத்து நெருப்பு மூட்டியிருந்தோம். தீயின் கதகதப்பைச் சுற்றி காந்தி ஒரு மெத்தையில் அமர்ந்திருந்தார். அரங்கில் இருந்த மக்கள் கூட்டமும் மேடையில் இருந்த விருந்தினர் கூட்டமும் வைத்த கண் வாங்காமல் காந்தியை உற்றுப்பார்த்தன. அந்த இடம் ஆழமான அன்பினாலும் உற்சாகமூட்டும் ஆன்மிக உணர்வினாலும் நிரம்பியிருந்தது. முன் எப்போதையும்விட, காந்தி இப்போது புத்தர் சாயலுக்கு நன்றாகப் பொருந்தியிருந்தார்.

தொலைதூர தேசம் ஒன்றின் வரலாற்றுக் கால நிகழ்வுகளைப் பற்றி நான் பேசிக்கொண்டு இருந்தாலும் என் மனம் வேறு ஒன்றில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது. நான் பிரக்ஞை இழந்து‌, மதாத்மா காந்தி என்ற மகோன்னத மனிதரைச் சுற்றிச் சுற்றி வந்தேன்.

கற்பனையான கதைகள் புனைந்து அதை வரலாற்றில் நிலைநிறுத்தும் போக்கு உலகம் முழுதும், எல்லாக் காலகட்டங்களிலும் ஒரே மாதிரியாய் இருந்திருக்கிறது. சராசரி மனிதரைவிட காந்தி எனக்கு ஆயிரம் மடங்கு பெரிதாகத் தோன்றினார். சராசரி மனிதர்களைக் காட்டிலும் மகோன்னத மனிதர்கள் வேறுபடுவது அவர்களின் மனநிலை மற்றும் எண்ணவோட்டங்களின் குணாதிசயங்களால்தான்.

தன் அகங்காரத்தை மக்கள் மீது முத்திரை குத்தி, மரணத்திற்கு அழைத்துச் செல்லும் உத்தி மாவீரன் நெப்போலியனை நமக்கு நினைவுப்படுத்தலாம். ஏனென்றால் இந்த வகைப்பட்ட மனிதர்களுக்கு அதிகாரத்தின் மீதான ருசிகர ஆசையும் சராசரி மனிதனுக்கு உண்டான நயவஞ்சக எண்ணமும் இருப்பது இயல்பு. அந்தகைய ஒருவரால் உலகையே தன் உள்ளங்கையில் வைத்திருக்க முடியும்.

ஆனால் நெப்போலியன் வகையறாக்களைச் சமூகத்தின் உயர்ந்த இடத்தில் வைத்திருப்பது முக்கியம். கிரீடங்களும் சிம்மாசனங்களும் கொடுத்து கௌரவப்படுத்த வேண்டும். பொன்னான வாய்ப்பை நழுவவிட்டு சாதாரண மனதராய் வாழ அவர்கள் ஆசைப்படுவதில்லை. இந்தப் பெரிய மனிதர்கள் அதிகாரத்தின் அடக்குமுறையால் துவண்டுபோகும் போது, சாமான்ய மக்கள் அவர்களைக் கைவிட்டு அடுத்தவரிடம் தங்கள் விசுவாசத்தை பொழிய ஆயத்தமாவார்கள். ‘மன்னர் இறந்துவிட்டார். மன்னர் புகழ் வாழ்க’ என்று கோஷம் எழுப்புவார்கள்.

சாதாரண மனிதன் எத்தனை எளிமையாய் இருந்தாலும் அவனை நம்மால் புரிந்துகொள்ள முடியாமல் முரண்பாடு கொள்ள நேர்கிறது. அகந்தை மேலோங்கி, ரத்தவெறிப் பிடித்து, மோகனத் தன்மையோடு நடந்துகொள்ளும் அதே மனிதனிடம் ஏதோ ஒரு மூலையில் அன்பு இருக்கிறது. காயப்பட்டோருக்குக் கண்ணீர் சிந்தும் இதயம் இருக்கிறது. தன் சக மனிதர்களைக் கரைசேர்க்கும் உன்னதமான அக்கறை இருக்கிறது.

மகாத்மா காந்தி என்ற அசாதாரண மனிதரை இயேசு மற்றும் புத்தரின் பிரதிநிதியாய் அவரின் சீடர்கள் அடையாளம் காண்கிறார்கள். இவர்கள் எல்லோரும் பூமியில்தான் வாழ்ந்தார்களா என்று வியக்கும்படி நீண்ட நெடிய பழங்கால மரபைச் சார்ந்திருக்கிறார்கள். நாம் வாழும் காலத்திலும், நபிகள் மற்றும் துறவிகளுக்குப் பிறகான காலத்திலும்கூட சாதாரண மக்களை நல்வழிப்படுத்த இப்படியொரு பெருங்கூட்டத்தைக் கட்டியெழுப்பும் தலைமைப் பண்பு நிறைந்த ஒருவரை இன்றளவும் காணோம்.

ஒருவேளை புதிய சகாப்தத்தின் தொடக்கமாக மகாத்மா காந்தி இருப்பாரா? இல்லையென்றால் அவர் ஏன் லட்சக்கணக்கான மக்களால் நேசிக்கப்பட்டு, பொருள்முதல்வாதம் பேசும் அறிவுஜீவிகளால் கொண்டாடப்படுகிறார்? மனிதகுலத்தின் அப்பழுக்கற்ற தன்மை குறித்து எனக்கிருந்த நம்பிக்கையை காந்தி மீண்டும் உயிர்ப்பிக்கிறார்.

மகாத்மா காந்தி மட்டுமல்ல, பழைமை வாய்ந்த இந்திய மரபின் பிரதிநிதியாய் யார் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும் அன்பும் கருணையும் கொண்ட அந்த மனிதருக்கு, உலகமே நன்றிக்கடன் செலுத்த ஆசைப்படுகிறது. காந்தி விஷயத்தில் அவருக்கு அப்படியொரு அங்கீகாரம் கிடைத்ததாய் தெரியவில்லை. மாறாய் பலமுறை துன்புறுத்தப்பட்டிருக்கிறார்.‌

இரவொளி வீசும் அந்த அரங்கு முழுதும் சகோதரத்துவ நெறி காற்றைப்போல பரவியிருந்தது. நம்முள் இருளடித்துக்கிடந்த மனிதப் பண்புகளை, இந்தப் பலவீனமான மனிதர் ஒளிகூட்டி நெறிப்படுத்துகிறார்.

‘தீராத ரணத்திலும் வேதனையிலும் மடிந்து போகிறவர்கள், உலகின் கண்களுக்கு உண்மையான கதாநாயகர்களாய் தெரிகிறார்கள்’ என்று உரைகளுக்குப் பின் பேசுகையில் அவர் சொன்னார். ‘வேதனையில்லாமல் இந்த உலகில் பிறப்பு இல்லை. மாறுபடும் உலகில் மாறுபாடு அடைந்த ஓர் உருகும் பானையைத்தான் நாம் இன்று பார்க்கிறோம். இந்தியாவும் துருக்கியும்‌ சிறிய அரும்புள்ளியாய் இருக்கும் இந்தப் பூமியில் என்ன நடந்துவிடப் போகிறது? ஆனால் நான் கவனித்தவரை ஒன்று நம்புகிறேன், இந்தியாவும் துருக்கியும் சொன்னதை செய்யும் ஆற்றலுக்கு தன்னை பலப்படுத்திக் கொண்டால், அவர்களுக்குப் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது.’

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் துருக்கி நாட்டு சுதந்திரத்திற்காக நிபந்தனையின்றி உயிர் துறந்த அந்நாட்டு ஏழை எளிய மக்களுக்கு அவர் செய்த அஞ்சலி இது. காந்தியின் பேச்சில் இந்து – முஸ்லிம் ஒற்றுமைக் குறித்த கருத்தாடல் மிக வெளிப்படையாக தெரிந்தது.

‘நமது ரத்தத்தின் ரத்தமாய் கலந்துவிட்ட சகோதரர்கள்’ என்று முசல்மான்களைச் சொன்ன காந்தி, ‘இவரின் வருகையால் இந்து முஸ்லிம் ஒற்றுமையில் பிரிக்க முடியாத பிணை ஏற்படும்’ என்று என்னைக் குறிப்பிட்டுச் சொன்னார். இந்த உலகில் இப்பேர்பட்ட புகழுரைக்கு எவராலும் பாத்திரமாக முடியாது. ஆனால் என்ன செய்வது, இந்தியாவில் உள்ள இந்து முஸ்லிம் இளைஞர்கள்தான் இந்தக் கனவை நனவாக்க வேண்டும்.

அடுத்ததாய் டாக்டர் பகவான் தாஸ் பற்றிச் சொல்கிறேன். பிறப்பால் அவர் ஓர் இந்து. உயரமான மெலிந்த தேகம் உடையவர். நீண்ட வெள்ளை முடியும் தாடியும் வைத்திருக்கிறார். அவரின் வெளிறிப் போன சருமமும் மென்மையான தேகமும் நீண்ட விரதங்களைக் கடைபிடிப்பவர் என்று எண்ணத் தூண்டுகிறது. தனக்கு மட்டுமே தெரிந்த ஒன்றைத் தூர வெளியில் வெறித்துப் பார்ப்பது போன்ற சுபாவம்.

அவரோடு நாம் பேசினாலும் நாம் பேசுவதை அவர் கவனித்துக் கொண்டிருந்தாலும் சதாகாலமும் ஏகாந்தத்தில் இறைவனோடு சஞ்சரிக்கிறார். அவர் முகபாவனையும் அதற்கேற்றாற் போல் மாறுகிறது. ஆன்மிகத்தோடு தொடர்பு இல்லாத ஒருவர்மேல் இப்பேர்பட்ட அபிப்பிராயம் தோன்றுவது சற்றே வேடிக்கையானது.

இறையியல் அனுபவத்தில் உண்மை இருக்கிறதா, இல்லை சுய மயக்கம் இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அதில் ஏதோ ஓர் உணர்வு இருக்கிறது. உறவினர்களைப் பிரிந்து, நிர்வாண கோலம் பூண்டு, ஆன்ம வழியில் கவனம் செலுத்துகின்ற சராசரி இந்தியத் துறவியைப் போல் பகவான் தாஸ் இல்லை. நான் சந்தித்த மிக நேர்த்தியான மனிதர்களில் ஒருவர் அவர்.

வெள்ளை நிற ஆடையும், அதற்கேற்ப வெள்ளை நிற காலணியும் போட்டுக் கொண்டு, தூய வெள்ளைத் தலைப்பாகை அணிந்து, கழுத்தைச் சுற்றி காஷ்மீரி மஃப்ளரைச் சுருட்டிக்கொண்டு துருக்கியில் தடைசெய்யப்பட்ட பழைய மடம் ஒன்றைச் சார்ந்த இந்நாட்டு ஷேக் போலக் காட்சியளிக்கிறார். உண்மையில் இவர் கிழக்குப் பகுதியைச் சார்ந்த துறவி என்று நினைக்கிறேன்.

செய்தியைச் சொல்பவர் யாராய் இருந்தாலும் அறிவுடையதாய் இருந்தால் அணைபோடாமல் ஏற்றுக்கொள்கிறார். இந்திய, சீனப் படிப்புகளில் மட்டுமல்ல அரேபிய, பெர்ஷியப் பாடங்களிலும் நுண்ணிய அறிவுடையவர். சர்வ சாதாரணமாய் இந்து மத நூல்களை மேற்கோள் காட்டுவது போல குரானிலிருந்து மெஸ்நேவியிலிருந்தும் மேற்கோள்களைக் கையாள்கிறார்.

பகவான் தாஸின் வியக்கத்தக்க அறிவுலகம் (அறிவியல் நுட்பத்தையும் கைதேர்ந்து படித்து வருபவர்) மாய பிம்பம் நிறைந்த மதங்களைச் சுற்றி இயங்குகிறது. அரசியல் மதத்தை விட்டு விலகும்போது, அது தன் மனிதத்

தன்மையை இழந்து விடுகிறது என்பது இவர் வாதம். மதம் தனி ஒருவனின் நடைமுறையைப் பாதிக்காவிட்டால், அதனால் யாதொரு பயனும் கிடையாது என்று பகவான் தாஸ் நம்புகிறார். இது தொடர்பாக நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.

அவரைப் பொறுத்தவரை ‘மதங்கள்’ கிடையாது. ‘மதம்’ மட்டும்தான் உண்டு. இதை மெய்ப்பிக்க வேண்டி உழைக்கிறார். ‘அனைத்து மத ஒற்றுமையின் அத்தியாவசிய தேவை’ என்று அவர் எழுதிய மிகப் பிரமாதமான புத்தகமொன்று ஏராளமான தரவுகளின் அடிப்படையில் இயற்றப்பட்டது.

இவர் வன்மையான சீர்திருத்தவாதியோ களத்தில் இறங்கும் செயல்பாட்டாளாரோ கிடையாது. மாறாய் தன் எழுத்துகளின்மூலம் மக்களிடம் உரையாடலை ஏற்படுத்தி, மானுடச் சமூகத்தை அசைத்துப் பார்க்கிறார். எல்லா வகைப்பட்ட மனிதர்களும் உலகில் இருக்கிறார்கள். இவர் போன்ற வகையறாக்கள் பொதுவெளியில் தெரிவதில்லை என்றாலும் சமூகப் பங்களிப்பில் அத்தியாவசியமான தேவையைப் பூர்த்தி செய்கிறார்கள்.

நான் இந்தியா வந்து சென்ற பிறகு, ‘கோமாளியும் அவள் மகளும்’ என்றொரு புத்தகத்தை எழுதினேன். டாக்டர் பகவான் தாஸைப் பார்ப்பதற்கு அந்த நாவலில் வரும் ‘வெஃபி எஃபென்டி’ போல தெரிகிறார். வெஃபி எஃபென்டி தனிப்பட்ட ஒருவரை மனிதிலிறுத்தி உருவாக்கிய பாத்திரம் அல்ல, சிறு வயதிலிருந்தே நான் கேட்டறிந்த பல டெர்விஷ்களை முன்னிறுத்தி உருவாக்கிய படைப்பு. பகவான் தாஸ் இந்திய தேசிய காங்கிரஸின் பிரதிநிதி. தனக்கு வழங்கப்பட்ட மேசையில் பூலாபாய் தேசாய்க்கு அருகில் அமர்ந்திருந்தார்.

அப்போதைக்கு பூலாபாய் தேசாய்தான் இந்திய தேசிய காங்கிரசின் பாராளுமன்ற தலைவர். எனது சொற்பொழிவு தொடரில் தலைமை தாங்கியிருந்த இறுதி இந்துவும் அவர்தான்.

பம்பாயில் புகழ்பெற்ற வழக்கறிஞர்களில் ஒருவராய் அறியப்படும் இவர் கைநிறைய சம்பாதித்தார். அரசியலுக்குப் புதுமுகமாய் இருந்தாலும், கட்சியின் தலைவர் பதவியில் ஓராண்டு காலம் பணி செய்திருக்கிறார். 1935ம் ஆண்டின் மிதமான அரசியல் நிலையைக் காரணமாய் கொண்டு அவருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டிருந்தாலும், சந்தேகத்திற்கு இடமின்றி திறன் பெற்ற மனிதர்தான்.

இத்தனை இருந்தும் அவரிடம் எனக்கு ஒரு அற்ப விஷயத்தில் குழப்பம் இருந்தது.‌ துருக்கியில் பாய் என்பதைப் பெயரின் முன்னொட்டாகவும் பின்னொட்டாகவும் பயன்படுத்துவது மரபு. அவரைப் பழம்பெரும் ஜாம்பவான் என்று நினைத்துக் கொண்டிருந்த நான், முதல் சந்திப்பிலேயே அந்தச் சந்தேகத்தை கேட்டுவிட்டேன்.

‘உங்கள் பெயருக்கு என்ன அர்த்தம்?’

‘கடைசியாக எஞ்சியவன். எனக்கு முன்பு பிறந்த எல்லோரும் இறந்துவிட்டதால், என் தாய் தந்தையர் எனக்கு இந்தப் பெயர் வைத்துவிட்டார்கள்’ என்றார்.

அப்படியென்றால் நீங்கள் ‘டர்முஷ்’ என்று சொல்லுங்கள். அனடோலியாவில் குழந்தைகளை இழந்த பெற்றோர் தன் கடைசிக்கு வரவுக்கு ‘டர்முஷ்’ என்று பெயர் வைப்பது வழக்கம். அதற்கும் ‘எஞ்சிய குழந்தை’ என்றே பொருள்.

பெயரைத் தாண்டி, அவரது செயல்பாடுகளும் அனடோலியர்போலதான் இருந்தது. தேவையானவற்றை அற்பமானவற்றிலிருந்து பிரிக்கும் அசாதாரண திறன் பெற்றிருந்தார். அதிகம் பேசமாட்டார். ஆனால் பேசும் பேச்சில் வெளிப்படைத் தன்மையும் நிதானமும் இருக்கும். மறந்தும்கூட எதிரிகளைத் தவறாகப் பேசமாட்டார்.

விவரிக்க முடியாத ஒரு நிறத்தில் நெருக்கமான மேல் அங்கியும் காந்தி குல்லாயும் அணிந்திருந்தார். வெள்ளைநிற சுதேசிய துணி அவரை ஒரு தீவிர தேசியவாதியாகவும் ஐரோப்பிய மேலங்கி அவரை மேற்கத்திய சித்தாந்தியாகவும் அடையாளப்படுத்தியிருக்கும். இவரது விஷயத்தில் ஆடை ஒன்றே இவர் சார்ந்த கட்சியைப் பேசுகிறது. மறைந்துபோகும் வழக்கத்தோடும் இயக்கத்தோடும் இவரை ஒருகாலும் தொடர்புபடுத்த முடியாது. பூலாபாய், எல்லா காலத்திற்குமான இந்தியர்.

இயற்கையாகவே அவர்மேல் அந்த அம்சங்கள் முத்திரை குத்தப்பட்டுள்ளன. அவரின் மென்மையான சிநேகக் கண்களில் இமைகள் வண்ணம் இழந்து இருக்கின்றன. மக்கள் கவனத்திலிருந்து விலகிக் கொள்ளும் அனைத்துமட்ட மனிதராக நான் அவரைப் பார்க்கிறேன். இது ஒருவகையில் எதிர்பாராமல் நடப்பது. அவரிடம் அனடோலியன் சாயல் அதிகமாய் இருந்தது.

குறைந்திருந்தது சமமாய் இருந்தது என்று சொல்வதற்கு அப்பால், அதை எந்தவகையிலும் விவரித்துத் கூற முடியாது. அது ஒருபோதும் உயரவோ தாழவோ இல்லை. மேலும் அவர் வார்த்தைகள் எவ்வித சங்கேதத்துடனும் ஒத்துப் போகவில்லை. அவரது தொனியும் எண்ணமும் மிதமான தன்மையில் ஒரு மயக்கமான கண்ணியத்தை பூலாபாய்க்கு ஏற்படுத்தியது.

அவர் சுதந்திர இனத்தைச் சேர்ந்தவர் என்று ஒருவர் நினைக்கலாம்.

உண்மையில் அவர் இழந்தால், சுதந்திரத்தைக் குறிக்கும் சமநிலை இன்னும் பலப்படும். இப்படித்தான் நான் பூலாபாயை அடையாளம் காண்கிறேன். லாபி அரசியல் சண்டைகள் எனக்கு அதிகம் பிடிக்காது என்பதால், இந்தியப் பாராளுமன்றம் பற்றி நான் அதிகம் பேசவில்லை. அவர் பேசுவதைக் கேட்கத்தான் அங்குச் சென்றேன்.

(தொடரும்)

__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

1 thought on “நான் கண்ட இந்தியா #12 – ஜாமியா உரைகள் 1”

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *