Skip to content
Home » பாலஸ்தீனம் #12 – அமெரிக்கா கையில் குடுமி

பாலஸ்தீனம் #12 – அமெரிக்கா கையில் குடுமி

holocaust

செப்டெம்பர் 1, 1939 விடிந்தபோது கிட்டத்தட்ட 20 லட்சம் ஜெர்மன் வீரர்கள் தங்கள் சொந்த நாட்டில் இருந்து கிளம்பி மின்னல் வேகத் தாக்குதல் (Blitzkrieg) நடத்துவதற்காக போலந்துக்குள் நுழைந்திருந்தனர். அலை அலையாக விமானங்களும் அசைந்தாடி வரும் பீரங்கிகளும் போலந்து வீரர்களைத் துவம்சம் செய்தன.

ஹிட்லர் தலைமையிலான நாஜி ஜெர்மனி அப்போதுதான் வேட்டையைத் தொடங்கியிருந்தது. ஹிட்லரின் லட்சியம் அதுவரை உலகம் கண்டிராத மிகச்சிறந்த பேரரசை கட்டமைக்க வேண்டும் என்பதாக இருந்தது. வழியில் தென்படும் தடைகளை எல்லாம் சுக்குநூறாக உடைத்து முன்னேறிக்கொண்டிருந்தார்.

ஜெர்மனியின் பலத்தைக் கண்டு அப்போதைய பேரரசுகளான பிரிட்டனும் பிரான்சும் மிரண்டுபோய் நின்றன. உலகின் மீதான அவர்களுடைய ஆதிக்கம் ஜெர்மனியின் அசுரத்தனமான பாய்ச்சலால் ஊசலாடிக்கொண்டிருந்தது. அதனால் இரு நாடுகளும் வேறு வழியில்லாமல் ஜெர்மனியின்மீது போரை அறிவித்தன. இப்படியாக இரண்டாம் உலகப்போர் தொடங்கியது.

போர் தொடங்கி ஒரு வருடம் நிறைவடைவதற்கு முன்பே பிரான்ஸ் ஜெர்மன் வசம் வீழ்ந்தது. ஹிட்லர் உணர்ச்சி கொந்தளிக்க பேசினார். அடுத்தது பிரிட்டன்தான். இதோ வந்துகொண்டிருக்கிறேன்.

அச்சத்தில் உறைந்துபோனது பிரிட்டன். துணைக்கு பிரான்சும் கிடையாது. ஏதாவது செய்து நம் இருப்பைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று இறங்கியது. ஜெர்மன் புயல் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருந்தது. டென்மார்க், நார்வே, பெல்ஜியம், நெதர்லாந்து என ஐரோப்பாவின் ஒவ்வொரு தேசமும் ஹிட்லரிடம் சரணடைந்துகொண்டிருந்தன.

பிரிட்டனுக்குக் கதி கலங்கிவிட்டது. இதே வேகத்தில் முன்னேறி வந்தால் ஜெர்மனியிடம் நாமும் மண்டியிட்டாக வேண்டும். அதற்குமுன் ஏதாவது செய்தாக வேண்டும். குறிப்பாக மத்தியக் கிழக்கை, அதன் எண்ணெய் வளம் மிக்க எதிர்காலத்தை ஜெர்மனியிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று முடிவு செய்தது.

பாலஸ்தீனத்தில் பிரிட்டன் படைகள் கொண்டு வந்து குவிக்கப்பட்டன. பாலஸ்தீனத் துறைமுகங்களில் பிரிட்டன் வீரர்கள் போர் தளவாடங்களோடு கப்பல்களில் எந்நேரமும் வந்து இறங்கிக்கொண்டே இருந்தனர். ஆனால் எத்தனை வீரர்கள் வந்தாலும் ஜெர்மனியையும் அவர்களின் கூட்டு நாடுகளையும் எதிர்ப்பதற்கு பலம் பத்தாது என்பது மட்டும் பிரிட்டனுக்குத் தெரிந்திருந்தது. உடனடியாக சென்று அரபு நாடுகளின் உதவியை நாடிநின்றது.

போருக்கு ஆதரவு திரட்ட பலவித வாக்குறுதிகளை மத்தியக் கிழக்கில் அள்ளி வீசியது பிரிட்டன். அதில் ஒன்றாகத் தனக்கு அரபு மக்கள் ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில் அனைத்து மத்தியக் கிழக்கு நாடுகளுக்கும் சுதந்திரம் வழங்கப்படும் என்று உறுதியளித்தது.

மற்ற அரபு நாடுகள் என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தன. பாலஸ்தீனர்களோ பிரிட்டனின் வாக்குறுதிகளைத் தூக்கி குப்பையில் கடாசிவிட்டு வேலையைப் பார்க்க போய்விட்டார்கள். இதுபோன்ற கட்டுக் கதைகளைக் கேட்டுக் கேட்டு காதுகள் புளித்துபோய்விட்டன. நிச்சயமாக பிரிட்டனுக்கு எங்களுடைய ஆதரவு கிடையாது என்று சொல்லிவிட்டார்கள். போர் நாட்களிலும் பாலஸ்தீனத்தில் அரபுக் கடைகள் திறந்திருந்தன, விவசாயம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. பிரிட்டன் வீரர்கள் யாராவது வந்தால் அவர்களை விரட்டியடித்தனர் மக்கள். சமீபத்திய புரட்சியை பிரிட்டன் திட்டமிட்டு ஒடுக்கியது அவர்களுக்கு இன்னமும் நினைவில் தங்கியிருந்தது.

சுதந்திர பாலஸ்தீனத்திற்காக ஏற்கெனவே பல உயிர்களைத் தியாகம் செய்திருக்கிறோம். முதல் உலகப்போரே எங்களுக்கு நிறைய பாடங்களைக் கற்றுக் கொடுத்துவிட்டது. இந்தமுறை நாங்கள் ஏன் உனக்கு ஆதரவு தர வேண்டும்? இதுதான் அவர்களுடைய கேள்வி.

நியாயமான கேள்விதான். ஆனாலும் பாலஸ்தீனர்களின் விதி அவர்களை விடுவதாக இல்லை. பிரிட்டன் பாலஸ்தீனர்களைப் பிடித்து கட்டாய ராணுவ சேவைக்குத் தள்ளியது. மக்களுக்கு உணவு தானியங்களைச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி மிரட்டியது. இதனால் வேறு வழியில்லாமல் கிட்டத்தட்ட 9000 பாலஸ்தீனர்கள்வரை பிரிட்டன் ராணுவத்தில் இணைந்து ஜெர்மனிக்கு எதிராகச் சண்டையிடும் நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டனர்.

ஆனால் பாலஸ்தீனர்களின் அரபு உயர் ஆணையத்தின் தலைவரான ஹாஜ் அமின் எல்-ஹுசைனி ஜெர்மனிக்கு ஆதரவாகச் செயல்படத் தொடங்கினார். பாலஸ்தீனத்தில் இருந்து தப்பி பெர்லின் நகருக்குச் சென்ற அவர், அங்கிருந்து கொண்டு நாஜிக்களுக்குத் தன் முழு ஆதரவை வழங்குவதாகப் பரப்புரைகளைச் செய்துவந்தார். பிரிட்டன் அரேபியர்களுக்குத் துரோகம் செய்ததையும், ஜெர்மனி வெற்றிபெறும் பட்சத்தில் அவர்கள் அரபு நாடுகளுக்குச் சுதந்திரம் தர வேண்டும் என்றும் கோரி வந்தார்.

ஹுசைனி செய்வதே சரியென்று மற்ற அரபுத் தலைவர்களும் அவர் வழியையே பின்பற்றினர். ஒட்டுமொத்தமாக ஐரோப்பிய அரசுகளின் உறவைத் துண்டித்துக் கொள்வதைவிட ஜெயிக்கப்போகும் ஜெர்மனியின் பக்கம் நின்று வேண்டியதை சாதித்துக்கொள்ளலாம் என்பது அவர்களுடைய எண்ணமாக இருந்தது. இதனால் பாலஸ்தீனத்தில் ஹுசைனி தொடங்கிய சிறிய கட்சி ஒன்று ரகசியமாகச் செயல்பட்டு பாலஸ்தீனர்களின் ஆதரவை ஜெர்மனியின் பக்கம் திரட்ட முயற்சி செய்துகொண்டிருந்தது. ஆனால் மக்கள் தெளிவாக இருந்தனர். எங்களுக்கு பிரிட்டனும் வேண்டாம், நாஜி ஜெர்மனியும் வேண்டாம். வேண்டியது சுதந்திர பாலஸ்தீனம் ஒன்றே.

பிரிட்டன் கடுப்பானது. பாலஸ்தீனத்தில் இயங்கும் அனைத்து அமைப்புகளையும் தடை செய்தது. மக்கள் ரகசியமாகத் தங்கள் பணியிடங்களில்கூடி எதிர்காலத்தைப் பற்றி பேசும் நிலை ஏற்பட்டது. இந்தச் சமயத்தில்தான் அரபு மாணவர்களின் கூட்டமைப்பு (League of Arab Students) என்ற ரகசிய அமைப்பு ஒன்று ஜெருசலேமில் தொடங்கப்பட்டு பாசிசத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தது. அந்த அமைப்பில் இருந்தவர்கள் முற்போக்கு கருத்துகளை மக்களிடையே விதைப்பதையும், விவசாயிகளுக்கு கல்வியறிவூட்டுவதையுமே தங்கள் கடமையாகச் செய்து வந்தனர்.

இந்தக் கூட்டமைப்பு சில இடதுசாரி சியோனிய அமைப்புகளுடன் இணைந்து பிரிட்டனுக்கு எதிரான போராட்டங்களைத் தொடங்கவும் முயற்சி செய்தது. ஆனால் சியோனியர்கள் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். யூத தேசம் அமைப்பதே எங்களுடைய நோக்கம். அதனை எதிர்க்கும் உங்களிடம் எங்களுக்கு எந்த உறவும் இல்லை.

0

இரண்டாம் உலகப்போரைப் பொறுத்தவரை பாலஸ்தீனத்தில் தங்கள் லட்சியத்தை நிறைவேற்றுவதற்குக் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பாகவே அதனை சியோனியர்கள் கருதினர். அப்போது யூத அமைப்பின் தலைவராக இருந்த டேவிட் பென் குரியன், முதல் உலகப்போர் நமக்கு பால்ஃபர் பிரகடனத்தைக் கொண்டு வந்தது. இரண்டாம் உலகப்போர் நமக்கு யூத தேசத்தைக் கொண்டு வரப்போகிறது என்றார். இதனால் இந்தப் போரைப் பயன்படுத்தி பாலஸ்தீனத்தில் யூதப் பெரும்பான்மையை உருவாக்கும் முனைப்பில் அவர் இருந்தார்.

கணிசமான யூத ஜனத்தொகை இல்லாமல் யூத தேசம் சாத்தியமில்லாதது என சியோனியர்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. நாம் என்னதான் மல்லுக்கட்டி பிரிட்டனிடம் இருந்து பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டைப் பிடுங்கினாலும் குறுகிய மக்கள் தொகையைக் கொண்ட நம்மால் பெரும்பான்மை வகிக்கும் அரேபியர்களை ஆட்சி செய்ய முடியாது. அதற்காகவாவது யூதர்கள் தொடர்ந்து பாலஸ்தீனத்தில் குடியேற வேண்டும் என்று அவர்கள் நினைத்தனர்.

அதனால் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தவுடன் ஐரோப்பாவில் இருந்து விரட்டப்படும் யூதர்களை எப்படியும் பாலஸ்தீனம் கொண்டு வந்துவிட வேண்டும் என்று நினைத்தனர். ஆனால் 1939இல் பிரிட்டன் வெளியிட்ட வெள்ளை இதழ் சியோனியர்களின் அந்தக் கனவுக்குக் கடிவாளம் போட்டது. அத்துடன் போர் தொடங்கியவுடன் அரபு ஆதரவை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்த பிரிட்டன், பாலஸ்தீனத்திற்கு வரும் யூத அகதிகளை எல்லாம் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள வேறு தேசங்களில் குடியமர்த்தப்போவதாக அறிவித்தது. அவ்வளவுதான், யூதர்கள் உடைந்துவிட்டார்கள்.

பிரிட்டனின் அறிவிப்பால் கடுப்பான சியோனியர்கள் அந்தத் திட்டத்தை எப்படியாவது தோல்வியடைய வைக்க வேண்டும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டனர். இதுமட்டுமில்லாமல் அந்த அறிவிப்பால் அவர்களுக்கு வேறு ஒரு சிக்கலும் இருந்தது. இப்போது பாலஸ்தீனத்தில் யூத தேசத்தை அமைப்பதற்கு தடங்கலாக பிற யூதர்களே மாறப்போகிறார்கள் என்று அவர்களுக்குத் தெரிந்தது.

பாலஸ்தீனத்தின் கதவு மூடப்பட்டதால் ஐரோப்பாவில் இருந்து தப்பி வரும் யூதர்களைத் தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கும்படி மற்ற நாடுகளில் இருந்த யூதர்கள் குரல் கொடுக்கத் தொடங்கி இருந்தனர். இது சியோனியர்களுக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இது தொடர்ந்தால் பாலஸ்தீனத்தில் அவர்களுடைய எண்ணிக்கை குறைந்து தங்களுடைய திட்டமே தவிடுபொடியாகிவிடும் என அஞ்சத் தொடங்கினர்.

பென் குரியன் 1938ஆம் ஆண்டே இவ்வாறு ஒரு நிலைமை ஏற்படலாம் எனக் கூறி, அவ்வாறு ஏற்படும்பட்சத்தில் சியோனியர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறியிருந்தார்.

‘யூதர்களுக்கு அகதிகளைக் காப்பாற்றும் வாய்ப்பும் பாலஸ்தீனத்தில் தங்களுடைய தேசத்தை நிறுவும் வாய்ப்பும் கொடுக்கப்பட்டு இரண்டில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்படிச் சொன்னால் அவர்கள் நிச்சயம் தங்கள் ஆற்றலை எல்லாம் பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள யூதர்களைக் காப்பாற்றுவதில்தான் செலவிடுவார்கள். ஆனால் இது சியோனியக் கொள்கைக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். அகதிகள் பிரச்னை அல்லது பாலஸ்தீனப் பிரச்னை என இரண்டையும் பிரியவிடக்கூடாது. அவ்வாறு நடந்தால் அது சியோனியத்தின் இறுப்புக்கே அச்சுறுத்தலாகிவிடும்’ என்றார்.

அதனால் யூததேசம் என்கிற தங்களுடைய லட்சியத்தை அடைய அகதிகள் அனைவரையும் பாலஸ்தீனத்திற்கு மட்டும் வரவழைப்பதிலேயே நாம் முழு உழைப்பையும் செலுத்த வேண்டும் என்றனர் சியோனியர்கள். ஆனால் அப்போதைய சூழலில் ஐரோப்பாவில் இருந்து தப்பிக்க சியோனியர்களின் உதவியை நாடிய யூதர்களின் கதை பேய்க்கு பயந்து பிசாசிடம் மாட்டியதுபோல் ஆனது.

சியோனியர்கள் யூதர்களை பாலஸ்தீனத்துக்குக் கொண்டு வர வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்க, பிரிட்டன் அரசு அதற்கு நேரதிராக அவர்களை பாலஸ்தீனத்திற்குள் நுழையவே விடக்கூடாது என்ற உறுதியுடன் செயல்பட்டு வந்தது. பாலஸ்தீனம், பிரிட்டன் இரு நாடுகளைத் தவிர எங்கே வேண்டுமானாலும் செல்லலாம் என்பதே அதன் எண்ணமாக இருந்தது. சியோனியர்கள், பிரிட்டனின் மோதல்களுக்கு இடையே சிக்கி அப்பாவி யூதர்கள்தான் சீரழிய வேண்டியிருந்தது.

1940ஆம் ஆண்டு 1171 யூதர்கள் சட்டவிரோதமாக இரண்டு கப்பல்களில் பாலஸ்தீனத்துக்குள் நுழைய இருந்தனர். அவர்கள் பாலஸ்தீனக் கடற்கரையை அடைந்த உடனேயே பிரிட்டன் கண்டுபிடித்துவிட்டது. அவர்களைத் தடுத்து நிறுத்தி சைப்ரஸ் நாட்டுக்குத் திருப்பிவிட திட்டமிட்டது. இதற்காக எஸ்.எஸ் பட்ரிசியா என்ற கப்பலையும் ஏற்பாடு செய்தது.

நவம்பர் 25ஆம் தேதி காலையில் சைப்ரஸுக்கு திரும்ப இருந்த யூத மக்கள் ஹைஃபா துறைமுகத்தில் கூட்டமாக நின்றுக்கொண்டிருந்தனர். பாதி பேர் கப்பலில் இருந்தனர். கரையில் அவர்களைச் சோதனையிடும் பணிகள் நடந்துகொண்டிருந்தன. அப்போது தீடிரெனப் பெரும் அதிர்வுடன் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. கூடியிருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் அதிர்ந்துவிட்டனர். என்ன நடக்கிறது என்று எல்லோரும் திரும்பிப் பார்த்தபோது தூரத்தில் நின்றுகொண்டிருந்த பட்ரிசியா சுக்குநூறாக உடைந்து கடலுக்குள் மூழ்கியது. இதில் 250 அகதிகள் உயிரிழந்தனர்.

எப்படிக் குண்டு வெடித்தது? யார் வைத்தது? எதுவும் தெரியவில்லை. ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே சியோனிய அதிகாரிகள் அகதிகள்தான் பிரிட்டனுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கில் பட்ரிசியாவை மூழ்கடித்துவிட்டதாக அறிவித்துவிட்டனர். மேலும் பாலஸ்தீனத்தில் இருந்து விரட்டப்படுவதற்குப் பதில் அவர்கள் அங்கேயே உயிர் விடவும் துணிந்துவிட்டதாகத் தகவல் பரவியது. அந்தத் தகவல் மறுநாள் உலகம் முழுவதும் உள்ள செய்திதாள்களில் தலைப்புச் செய்தியாக வந்திருந்தது. உடனேயே சர்வதேச அளவில் இயக்கங்கள் பிரிட்டனுக்கு எதிராக முழக்கமிடத் தொடங்கின. பிரிட்டன் அரசு மீதமுள்ள அகதிகளை பாலஸ்தீனத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கூக்குரலிட்டன.

உலகம் முழுவதில் இருந்தும் எதிர்ப்பு வந்ததும் பிரிட்டன் வேறு வழியில்லாமல் அவர்களை அனுமதித்தது. ஆனாலும் ஓர் ஆணையத்தை அமைத்து கப்பல் குண்டு வெடிப்புக்கு காரணம் என்ன என்று ஆராய்ந்தது. அதில்தான் உண்மை தெரியவந்தது, கப்பலில் குண்டு வைத்ததே சியோனியர்கள்தான் என்று.

சியோனிய இயக்கத்தின் ஒரு பிரிவான இர்கன் (Irgun) எனும் கமாண்டோ குழுவினரிடம் கப்பலின் என்ஜினைப் பழுது செய்வதற்காகக் குண்டு வைக்கும்படி யூத குடியேற்ற அமைப்பு கேட்டுள்ளது. இதனையடுத்து அந்த கமாண்டோக்கள் வெடிபொருள் நிரப்பும்போது வேண்டிய அளவுக்கும் அதிகமாக நிரப்பிவிட்டனர். இதனால்தான் கப்பலே மூழ்கும் அளவுக்கு வெடிகுண்டு வெடித்துள்ளது.

ஆனால் யூத அமைப்பு இதனை அகதிகளின் ‘கூட்டுத் தற்கொலை’ எனச் செய்தியாக்கி தனக்கு ஆதாயமாகப் பயன்படுத்திக்கொண்டது. பட்ரிசியா எனும் கப்பல் பிரிட்டனுக்கு எதிரான ஆயுதமாகிபோனது.

0

இதன்பிறகு பட்ரிசியா சம்பவம் போன்ற செய்திகள் தொடர்ந்து சர்வதேச கவனத்தைப் பெறத் தொடங்கின. இதுபோன்ற செய்திகளால் சியோனிய இயக்கத்துக்கு அமெரிக்காவில் ஆதரவு பெருகிக்கொண்டே இருந்தது. பிரிட்டன் ஆதரவு நலிவடையும் அதே நேரத்தில் வேறு ஒரு சக்தி வாய்ந்த தேசத்தின் தேவை சியோனியர்களுக்கு இருந்தது. இதற்குத் தோதாக அமெரிக்கா அவர்களுக்கு ஆதரவு வழங்க முன்வந்தது.

அமெரிக்காவுக்கும் ஒரு கனவு இருந்தது. மத்தியக் கிழக்கைக் கைப்பற்ற வேண்டும். அதன் எண்ணெய் வளங்களை அனுபவிக்க வேண்டும் என்று. இதற்குச் சியோனிய அமைப்புகள் உதவும் என்று அந்த நாடு நினைத்தது. அதுமட்டுமில்லாமல் ஐரோப்பாவில் இருந்து தப்பிக்கும் அகதிகள் தொடர்ந்து அமெரிக்காவுக்குள் நுழைந்தவண்ணம் வந்தனர். இதனைத் தடுத்து நிறுத்தி அவர்களை பாலஸ்தீனம் பக்கம் திருப்பிவிடுவதற்கு அமெரிக்கத் தலைவர்கள் சியோனிய நோக்கத்தை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று நினைத்தனர்.

1930களின் பிற்பகுதியில் நாஜிக்கள் தங்களுடைய எல்லைகளை மூடுவதற்கு முன்பே ஆயிரக்கணக்கான ஜெர்மன் யூதர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு விண்ணப்பித்திருந்தனர். அமெரிக்கக் குடியேற்ற அலுவலகமோ குறைந்த கூலியில் அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பணியாற்ற வருபவர்களை மட்டுமே உள்ளே அனுமதிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது. ஆனால் அப்போது அமெரிக்காவிலும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு இருந்ததால் நிறுவனங்களுக்கு வேலையாட்கள் தேவைப்படவில்லை. அதனால் அமெரிக்காவிற்குள் குடிபெயரும் அத்தனை யூதர்களையும் அவர்கள் திரும்பி அனுப்பிக்கொண்டே இருந்தனர்.

மேலும் பொருளாதார மந்தநிலை அமெரிக்காவில் இனவாதத்தையும் யூத இனவெறியையும் சேர்த்தே கிளறிவிட்டிருந்தது. அமெரிக்கா அல்லல்படுவதற்கும், உலகப்போருக்கும் யூதர்களின் எண்ணிக்கையே காரணம் என அமெரிக்க அரசியல் தலைவர்கள் பேசத் தொடங்கியிருந்தனர். இத்தகைய சூழலில் யூதர்களை அமெரிக்காவில் நுழையவிடாமல் தடுப்பதற்கு அவர்களை பாலஸ்தீனத்துக்கு அனுப்பி வைப்பதுதான் அந்தத் தலைவர்களின் ஒரே நோக்கமாக இருந்தது.

இதில் கொடுமை என்னவென்றால் அமெரிக்காவின் இந்தக் கொள்கையை எதிர்த்து உலகம் முழுவதும் இருந்த தலைவர்கள் பேசி வந்த நிலையில், சியோனியர்களோ அமெரிக்கர்களுக்கு ஆதரவாகப் பேசி வந்தனர்.

இந்தச் சமயத்தில் அமெரிக்க பாராளுமன்றம் வேக்னர் மசோதா என்ற ஒன்றை நிறைவேற்றி 10,000 ஜெர்மானிய யூதக் குழந்தைகளை அமெரிக்காவுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று பரிந்துரை வைத்திருந்தது. ஆனால் சியோனியத் தலைவர்களோ இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்கக் குடியேற்றச் சட்டங்களுக்கு ஆதரவாகப் பேசி வந்தனர்.

சியோனியத் தலைவர்களின் முக்கியமானவராக இருந்த ஸ்டீபன் வைஸ் எனும் மதக்குரு, ‘அறிவுள்ள மனிதர்கள் வலுகட்டாயமாக ஒரு நாட்டின் சட்டத்தை மாற்றுவதற்குக் குரல் கொடுக்க மாட்டார்கள். குழந்தைகளா, தேசமா என்று கேட்டால் ஒரு குடிமகனாக முதலில் தேசத்தைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு உதவி கிடைக்கக்கூடாது என்று எழுதியிருந்தால் யார் உதவினாலும் அவர்களுக்கு உதவி கிடைக்காது’ என்று பேசினார்.

இத்தகைய சியோனியத் தீவிரவாதத்துக்கு அமெரிக்க யூதர்களுமே ஆதரவு தெரிவித்து வந்தனர். 1942ஆம் ஆண்டு நியூ யார்க்கில் உள்ள பில்ட்மோர் ஹோட்டலில் சியோனிய மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள பென் குரியன் உட்பட உலகம் முழுவதிலும் இருந்து 600 யூத உறுப்பினர்கள் வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து பாலஸ்தீனத்தில் சுதந்திர யூத தேசம் ஏற்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினர். அதாவது அதுவரை மறைமுகமாகச் சொல்லப்பட்டு வந்த ‘யூத உறைவிடம்’ என்ற வார்த்தை நீக்கப்பட்டு வெளிப்படையாகவே சுதந்திர யூத தேசம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தத் தொடங்கி இருந்தனர். ஹெர்சலுக்குப் பிறகு முதன்முறையாக இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது அப்போதுதான்.

0

பில்ட்மோர் தீர்மானம் நிறைவேறிய அதே ஆண்டில் ஹிட்லரும் ஒரு தீர்மானத்துக்கு வந்திருந்தார். இனி யூதர்களை ஐரோப்பாவில் இருந்து விரட்டக்கூடாது. யூதர்களைத் தேசங்களைவிட்டுத் துரத்தியடித்தது எல்லாம் போதும். அவர்கள் விரட்ட விரட்ட வந்துகொண்டே இருக்கிறார்கள். எல்லா இடங்களிலும் அவர்கள் நோய் பரப்பும் கிருமிகளைப்போல சூழ்ந்துள்ளனர். கிருமிகளை விரட்டினால் மட்டும் உலகை நோய்களில் இருந்து காப்பாற்றிவிட முடியுமா? நோய் ஏற்படுவதைத் தடுப்பதற்கு கிருமிகளை முற்றிலுமாக அழிக்க வேண்டாமா? அதைத்தான் நான் செய்யப்போகிறேன். யூதப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக ஒரு யூதர் விடாமல் கொல்லப்போகிறேன் என்றார் ஹிட்லர்.

இதற்கென்றே தனிப்படைகள் உருவாக்கப்பட்டன. அவர்கள் ஐரோப்பா முழுவதும் தேடியலைந்து எந்த மூலையில் யூதர்கள் ஒளிந்து இருந்தாலும் பிடித்து வந்து வதைமுகாம்களுக்கு அனுப்பினர். இந்த வதைமுகாம்களில் அடுத்த சில ஆண்டுகளில் மட்டும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்கள் கொல்லப்பட்டனர். அதில் அதிக எண்ணிக்கையில் உயிரைவிட்டவர்கள் கிழக்கு ஐரோப்பிய யூதர்கள்.

யூதர்களுக்கு எதிராக திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்ட இனவெறி ஐரோப்பிய சமூகங்களுக்குள் ஊடுருவி இறுதியில் இனப்படுகொலை எனும் தீர்வாகத் தன்னை வெளிப்படுத்தியது.

இந்தக் கொலைவெறி திட்டத்தால் ஐரோப்பிய யூதர்கள் உடனே தப்பிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்பட்டனர். போரின் தொடக்கத்தில் இருந்தே அவர்கள் ரகசியமாகச் செயல்பட்டு சர்வாதிகாரிகத்துக்கு எதிராகப் போராடி வந்தனர். அப்போது மிஞ்சி மிஞ்சிப்போனால் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவோம் என்ற தைரியத்தில்தான் இருந்தனர். ஆனால் இப்போது மாட்டினால் மரணம்தான் என்ற நிலை. ஹிட்லர் இனப்படுகொலைக்கான அறிவிப்பை வெளியிட்ட புதிதில் பல யூதர்களுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. அவர்கள் தப்பிச் செல்வதற்காக ஏறிய ரயில்கள் வதைமுகாம்களுக்கு சென்றபோதுதான் தாங்கள் இறுதி பயணத்தை மேற்கொண்டு இருக்கிறோம் என்று அவர்களுக்குத் தெரிந்தது.

1943ஆம் ஆண்டு வாக்கில் ஹிட்லர் இன அழிப்பு செய்கிறார் என்று தெரிந்தவுடன் சில யூதர்கள் துணிந்து சண்டையிட்டு உயிரிழந்தனர். ஆனால் பெரும்பாலானோர் தப்பித்துச் செல்லவே முயன்றனர். வார்சா போன்ற இடங்களில் இருந்த யூதர்கள் ரகசியமாக செய்திகளை அனுப்பி அமெரிக்காவின் உதவியை நாடினார். ஆனால் போரின் இறுதிகட்டத்தை எட்டும் வரை அமெரிக்கா உதவிக்கு வரவே இல்லை என்பதுதான் உண்மை.

அப்போது ஜெர்மனி முழுவதும் வதைமுகாம்கள் நிறுவப்பட்டிருந்தன. அங்கே செல்வதற்கு ரயில்கள் இயக்கப்பட்டிருந்தன. யூதர்களின் வேண்டுகோள் அமெரிக்கா போர் விமானங்களை அனுப்பி இந்த ரயில்பாதைகளில் குண்டுகளை வீசி தங்கள் பயணத்தைத் தாமதப்படுத்த வேண்டும், தாங்கள் தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதுதான். ஆனால் அமெரிக்கா வெளிப்படியாகவே அவர்கள் வேண்டுகோளை மறுத்து வந்தது. இதுபோன்ற செயல்கள் விமானப்படையின் பணியைத் திசைத் திருப்பிவிடும் என்று மொக்கைக் காரணத்தையும் சொன்னது. அமெரிக்காதான் யூதர்களைக் கைவிரித்தது என்றால் சியோனிய அமைப்பு அவர்களின் முதுகில் குத்தியது.

உரி அவ்னேரி வார்ஷாவில் இருந்து தப்பி வந்த யூதர். பின்நாளில் இஸ்ரேல் அரசியல்வாதியாக இருந்தவர். இவர் வெளிப்படியாக சியோனிய அமைப்புகள் ஐரோப்பிய யூதர்களுக்குச் செய்த துரோகத்தைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

‘போர் நடைபெற்று வந்த நாட்களில் மரணத்தின் வாசலில் வரிசைக் கட்டி நின்ற யூதர்களுக்கு சியோனிய தலைமை எந்த உதவியும் செய்யவில்லை. நூற்றுக்கணக்கான ஹகனா, இர்கூன் வீரர்களை பாராசூட் மூலம் ஜெர்மனிக்குள் அனுப்பியிருக்கலாம். அல்லது பிரிட்டன், அமெரிக்க அரசாங்கத்தையாவது ரயில் பாதைகளைத் தகர்க்கும்படிக் கூறி அழுத்தம் கொடுத்திருக்கலாம். ஆனால் அவர்கள் பாலஸ்தீனத்தை பற்றியே சிந்தித்து வந்தனர்’ என்றார்.

அவர் சொன்னதுபோல சியோனியர்களின் முன்னுரிமை யூதர்களைக் காப்பாற்றுவதில் இல்லை. அவ்வாறு செய்வது யூத தேசம் அமைப்பது பற்றிய தங்களது நடவடிக்கைகளை இரண்டாம்பட்சம் ஆக்கிவிடும் என்று நினைத்தார்கள்.

யூத தேசமா, ஐரோப்பிய யூதர்களுக்கு உதவியா என்று முடிவெடுக்கும் நெருக்கடிக்குத் தள்ளப்படும்போதெல்லாம் சியோனியர்கள் யூத தேசத்தின் பக்கமே நின்றனர். இந்த ஒரு நிலைபாட்டிற்காக ஐந்து லட்சத்திற்கும் மேலான ஹங்கேறிய யூதர்கள் தங்கள் உயிரை விலையாகக் கொடுத்தனர்.

மருத்துவர் ருடால்ஃப் காஸ்ட்னர் பற்றி திரைப்படங்கள், ஆவணப்படங்கள் எல்லாம் உண்டு. ஐரோப்பிய யூதர்களைக் காப்பாற்றிய மகான் என்பதுபோல அமெரிக்க ஊடகங்கள் இவரைச் சித்தரித்துள்ளன. ஹங்கேரியின் தலைகநகரான புடாபஸ்டில் சியோனிய அமைப்பு ஒன்றின் துணைத்தலைவராக இருந்த இவர், நாஜிகளின் படுகொலைகளுக்கு எல்லா வகையிலும் துணை நின்றவர். தொடக்கத்தில் இருந்தே அவர்களுக்கு அத்தனை ஆதரவையும் கொடுத்தவர்.

யூதர்களைக் களையெடுக்கத் தொடங்கிய புதிதில் நாஜி மேலிடம் இவருக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தது. இதுபோன்று யூதர்களை நாங்கள் கொல்லப்போகிறோம். எங்களுக்கு உதவும் பட்சத்தில் உங்களுக்கு ஒருசிலரை மட்டும் காப்பாற்றி பாலஸ்தீனத்துக்கு அழைத்துச் செல்லும் சலுகையை அளிக்கிறோம் என்றது. அவரும் நாஜிக்களின் இந்தக் கொடூரத்துக்கு துணை நிற்க சம்மதித்தார். ஹங்கேறிய யூதர்களை வதைமுகாம்களுக்கு அழைத்துச் செல்வதற்கும் நாஜிக்கள் காஸ்ட்னரைத்தான் தொடர்புகொண்டனர். இதற்குப் பலனாக அவருக்கு வேண்டிய செல்வவளமிக்க, அதிகாரமிக்க 1684 யூதர்கள் பாலஸ்தீனத்துக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் அதற்கு விலையாக 4.76 லட்சம் யூதர்களின் தங்கள் உயிரைவிட வேண்டியது இருந்தது. பின்னாளில் இந்த உண்மை தெரியவந்தது.

0

நாஜி இனப்படுகொலை தொடங்கிய உடனேயே அமெரிக்க சியோனியர்கள் தங்கள் வேலைகளைத் தொடங்கினர். அமெரிக்க அரசியல்வாதிகள், பொதுமக்கள், வியாபாரப் பெருந்தலைகள் என ஒவ்வொருவரையும் தொடர்புகொண்டு ஹிட்லரிடம் இருந்து யூதர்களைக் காப்பாற்ற யூத தேசம் அமைவதே தீர்வு எனப் பரப்புரை செய்தனர்.

இன்றுபோல அன்றைக்கும் அமெரிக்க நிறுவனங்கள், ஊடகங்கள், அரசியல் இயக்கங்கள், தொண்டு இயக்கங்கள் எனப் பல வகை அமைப்புகளில் யூதர்களின் செல்வாக்கே நிலவியது. இதனால் அவர்களுடைய பேச்சு உடனேயே மக்களிடம் சென்று சேர்ந்தது. மக்களும் யூதர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கத் தொடங்கினர்.

அமெரிக்கா அப்போதுதான் உலகப் போரில் குதித்திருந்தது. போரின் முடிவில் எப்படியாவது எண்ணெய் வளம் மிக்க மத்தியக் கிழக்கின் பகுதிகளை பிரிட்டனிடம் இருந்து பிடுங்கிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தது. இதற்கு சியோனியர்களின் பிரிட்டன் எதிர்ப்புச் செயல்பாடுகள் பெரிதாக தங்கள் உதவும் என்று நினைத்தது.

ஐரோப்பாவில் ஹிட்லர் இழைத்துக்கொண்டிருக்கும் குற்றங்களின் பின்னணியில் சியோனியர்களால் பெரும் ஆதரவுகளை தங்கள் நோக்கத்திற்காகத் திரட்ட முடிந்தது. 1944ஆம் ஆண்டு அமெரிக்கத் தேர்தல் நடக்க இருந்தது. அதில் பேசப்படும் விஷயமாக யூத தேசக் கருத்து மாறி இருந்தது. 3000க்கும் மேற்பட்ட யூதரல்லாத நிறுவனங்கள், மத அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள் அனைத்தும் சியோனியர்களுக்கு ஆதரவான தீர்மானங்களை நிறைவேற்றி வந்தன. அப்போது அமெரிக்க காங்கிரஸில் இருந்த 534 உறுப்பினர்களில் 411 பேர் யூத தேசத்துக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். இதில் கொடுமை என்னவென்றால் இதே உறுப்பினர்கள்தான் அமெரிக்காவிற்குள் யூதர்களை விடக்கூடாது என்று தடுத்ததும்.

அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் மக்களிடையே பெருகிவரும் சியோனிய ஆதரவையும், மத்தியக் கிழக்கின் மீதான அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆர்வத்தையும் பரிசிலிக்கத் தொடங்கினார். இந்த ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றால் நிச்சயம் யூத தேசம் அமைவதற்கான அனைத்து ஆதரவையும் தருவேன் என வெளிப்படையாக அறிவித்தார்.

போர் முடிவுறும் காலத்தை நெருங்கியிருந்தது. அமெரிக்க தேர்தலும் முடிந்திருந்தது. இப்போது பாலஸ்தீனத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் சர்வ வல்லமை படைத்த அதிகாரம் அமெரிக்காவிடம் மட்டுமே இருந்தது. அமெரிக்காவோ சியோனியர்களின் பக்கம் இருந்தது.

(தொடரும்)

பகிர:
nv-author-image

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

1 thought on “பாலஸ்தீனம் #12 – அமெரிக்கா கையில் குடுமி”

  1. உங்களின் இந்த வரலாற்று ஆய்வு கட்டுரை மிக அருமை யூத பாலஸ்தீன வரலாறை முழுமையாக புரிந்துகொள்ள முடிகிறது நன்றி

    பணக்கார யூதர்கள் வாழ்வதற்காக ஏழை யூதர்கள் நரபலி கொடுக்கப்படடார்கள் என்று விளங்கி கொள்ளலாமா

    இட்லர் ஏன் யூதர்களை கொள்ள துணிந்தான் அவர்களை விரட்டி அடித்தார்கள் அதற்கான கரு தான் என்ன அதை சற்று விளக்குங்களேன்

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *