புதுவை மாநிலத்தில் கிடைத்திருக்கக்கூடிய பல்லவத் தடயங்கள் விரல்விட்டு எண்ணக்கூடியனவே. அதில் குறிப்பிடத்தக்க பாகூர் செப்பேடுகள் குறித்தான விவரங்கள் குறித்து கடந்த பதிவில் பேசினோம். பல்லவராட்சி-சோழராட்சிகளுக்கு இடைப்பட்ட சிலஆண்டுகள் – கி.பி.960-966 ஆறாண்டுகள் – இராஷ்டிரகூடர்களின்கீழ் இந்தப்பகுதிகள் இருந்தன. இதற்கு ஆதாரமான கல்வெட்டுகள் பாகூர், திருவாண்டார் கோயில் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே கிடைத்துள்ளன. மாநிலத்தில் வேறெந்தப் பகுதிகளிலும் கிடைக்கவில்லை.
சோழர்காலத் தடயங்கள் புதுவை மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் கோயில்கள், கல்வெட்டுக்கள், சிற்பங்களின் வாயிலாகப் பரவியிருக்கின்றன. அதிலும் குறிப்பாக, இங்குள்ள திருபுவனை, மதகடிப்பட்டு, திருவாண்டார்கோயில் ஆகிய இடங்களைச் சொல்லலாம். இம்மூன்று ஊர்களும் விழுப்புரம்-புதுவை நெடுஞ்சாலையில் அருகருகே அமைந்திருக்கின்றன. ஒருகாலத்தில் இம்மூன்று ஊர்களுமே ஒரேபெயரில், ‘திரிபுவன மாதேவிச்சதுரவேதி மங்கலம்’ என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்திருக்கின்றன. இங்கிருக்கும் கோயில்களும் அங்குள்ள கல்வெட்டுக்களும் நமக்கு ஏராளமான கதைகளை, வரலாற்று விவரங்களைச் சொல்கின்றன.
அதுமட்டுமல்ல தஞ்சைப் பெரிய கோயிலுக்குச் செல்லவேண்டிய நந்தியொன்று விதி வசத்தால், சாராயக்கடை ஓரத்தில் இன்றுவரை படுத்திருக்கும் தகவலையும் இந்தப் பகுதியில் நாம் பார்க்க, பேசப்போகிறோம்!
திருபுவனை
இங்குள்ள வரதராஜப் பெருமாள் கோயில், முன்பு வீரநாராயண விண்ணகரம் என்று அழைக்கப்பட்டது. தற்போது, தோதாத்ரி நாதர் அல்லது தோதாத்ரி பெருமாள் கோயில் என்று அழைக்கப்படுகிறது. சோழர்காலக் கோயில் கட்டடக்கலைக்குச் சிறந்த எடுத்துக் காட்டாக இருப்பது. முதலாம் பராந்தகச் சோழன் காலத்தில் எடுக்கப்பட்டது. வீரநாராயணன், பராந்தகனின் பட்டப்பெயராகும். இவ்வூரின் பழைய பெயர் ‘திரிபுவன மாதேவிச் சதுரவேதி மங்கலம்’. திருபுவன மாதேவி, பராந்தகரின் பட்டத்தரசிகளுள் ஒருவர். இங்கிருந்த கோக்கிழானடிகள் பேரேரி, இன்னொரு பட்டத்தரசியின் பெயரால் அமைந்திருந்தது.
இன்றும் வழிபாட்டில் இருக்கும் வரதராஜப்பெருமாள் கோயில், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் மரபுச்சின்னமாக விளங்குகிறது. இக்கோயிலில் இருக்கும் இராமாயண, பாரத குறுஞ்சிற்பங்கள் நம் கண்களையும் கருத்துக்களையும் கவர்வதாக இருக்கின்றன.
கல்வெட்டுக்களின் கலைக்களஞ்சியமாகத் திகழ்கிறது திருபுவனை வரதராஜப் பெருமாள் கோயில். புதுவை மாநிலத்திலேயே அதிகக் கல்வெட்டுக்கள் இங்குதான் இருக்கின்றன. இந்தக் கல்வெட்டுக்களின் எண்ணிக்கை 188. இக்கல்வெட்டுக்களை இந்தியத் தொல்லியல் களஆய்வுத்துறையினர் 1919-ல் படியெடுத்திருக்கின்றனர். புதுச்சேரியில் இயங்கிவரும் கீழ்த்திசை நாடுகள் ஆய்வுப் பள்ளியும், பிரெஞ்சிந்திய ஆய்வு நிலையமும் இக்கோயிலில் பல புதிய கல்வெட்டுக்களைக் கண்டறிந்து 2006-ல் வெளியிட்டிருக்கிறது. இக்கோயிலில் முழுமைபெறாத துண்டுக் கல்வெட்டுக்களும் ஏராளமாக இருக்கின்றன. இவை பெரும்பாலும் கி.பி.12-ம் நூற்றாண்டுக்கு உரியவையாகும். முழுமைபெற்ற பல்வேறு கல்வெட்டுக்களின் மூலம் நமக்குத் தெரியவரும் அரிய தகவல்கள் வருமாறு.
12 சேரிகள்: இங்குள்ள முதலாம் இராஜேந்திரனின் 6-ம் ஆட்சியாண்டு (கி.பி.1018) கல்வெட்டு இப்பகுதியில் பட்டர்களுக்கான 12 சேரிகள் (கோயிலில் பணியாற்றிய பிராமணர்களுக்கான குடியிருப்புகள்) இருந்ததை நமக்குச் சொல்கிறது. இவர்கள் பணிபுரிந்த கோயில் விஷ்ணுக் கோயில் என்பதால் சேரிகளின் பெயர்கள் அனைத்தும் விஷ்ணுவின் பெயர்களையே கொண்டிருக்கின்றன.
அந்தச் சேரிகளின் பெயர்கள் வருமாறு: கேசவச் சேரி, மாதவச்சேரி, கோவிந்தச் சேரி, விஷ்ணுச் சேரி, மதுசூதனச் சேரி, திரிவிக்கிரமச் சேரி, வாமனச் சேரி, ஸ்ரீதரச் சேரி, ஹ்ருஷிகேசச் சேரி, பத்மநாப் சேரி, தாமோதரச் சேரி, நாராயணச் சேரி.
மேலும் இங்கிருக்கும் கல்வெட்டுக்களில் பரகேசரிச் சேரி, மதுராந்தகச் சேரி, இராஜகேசரிச் சேரி, வீரேசோழச் சேரி, சிங்களாந்தகச் சேரி போன்ற குடியிருப்புப் பெயர்கள் காணப்படுகின்றன. கோயிலில் பணிபுரியும் பிராமணர் குடியிருப்புப் பகுதிகளுக்கு விஷ்ணுவின் பெயர்களும், அரசாங்கத்தின் முக்கிய அலுவலர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அரசர்களது பட்டப்பெயர்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.
திருப்பதிகம் பாடுவோர்க்கு: 21.04.1019 திங்கட்கிழமை பகல் வேளையில், திருபுவன மாதேவிச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறி மக்கள், ஊர் நடுவில் இருக்கும் ஸ்ரீவீர நாராயண விண்ணகர் ஆழ்வார் கோயிலிலுள்ள முடிகொண்ட சோழன் திருமண்டபத்தில் கூடினர். அப்போது, கோயிலில் திருப்பதிகம் பாடுவோர் மூன்று பேருக்கு நிலம் வழங்குவதென்று அவர்கள் முடிவுசெய்தனர்.
அடிசில் உண்ண: 18 நாட்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் அடிசில் உண்பதற்கு, நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. இராஜேந்திர சோழனின் 29-ம் ஆட்சியாண்டில் மிதுனம், விசாகம், ஞாயிற்றுக்கிழமை, கி.பி. 14.06.1041 அன்று இதற்கான அனுமதியைப் பெருங்குறி மக்கள் வழங்கியிருக்கின்றனர். அடிசில் – சோறு, சமைத்த உணவு.
திருபுவனை வேதக்கல்லூரி: முதலாம் இராஜாதிராஜனின் 30-ம் ஆட்சியாண்டில் மீனம், உத்தரம், புதன்கிழமை (02.03.1048 அன்று) பொறிக்கப்பட்டுள்ள மேற்காணும் கல்வெட்டு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். திருபுவனையில் அப்போது இயங்கிவந்த வேதக்கல்லூரி குறித்த விவரங்களைச் சொல்கிறது இந்தக் கல்வெட்டு.
திருபுவனை வேதக்கல்லூரியில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 260. இவர்களுக்கான ஆசிரியர்கள் 12 பேர். இங்கு ரிக், யஜுர், சாம வேதங்கள், சத்யாஜாதம், வாஜஸ்நேயம் போன்ற வேதங்கள் ஓதப்பட்டன. வேதாந்தம், மீமாம்ஸை, வியாகரணம் ஆகியவற்றுக்கு வியாக்கியானங்கள் தரப்பட்டன. மனு சாத்திரம், ரூபாவதாரம் (இலக்கணம்) கேட்பிக்கப்பட்டன. இராமாயண, மகாபாரதம் வாசிக்கப்பட்டன. வேதங்களை ஓதுவோர், ஓதுவிப்போர், கேட்போர், கேட்பிப்போர் எனப் பலருக்கும் ஆண்டொன்றிற்கு 12,000 கலம் நெல்லும் எழுபத்திரு வேலி நிலங்களும் வழங்கப்பட்டன. இவற்றிற்கு வரிவிலக்கும் அளிக்கப்பட்டன.
திருவாய்மொழி விண்ணப்பம் செய்வான் ஒருவன். ரிக் வேதம் ஓதுவிப்பார் மூவர். யஜுர் வேதம் ஓதுவிப்பார் மூவர்… என இங்கு பணியாற்றியவர்களைப் பட்டியலிடும் கல்வெட்டு, மாபாரதமும் ஸ்ரீராமாயணமும் வாசிப்பான் ஒருவன் எனக்குறிப்பிடுகிறது. இரண்டையும் ஒருவரே வாசித்திருக்கிறார்.
இதுபற்றி சொல்லும் வரலாற்று ஆசிரியர் கே.ஏ.நீலகண்டசாஸ்திரி, ‘..பாரதமும் இராமாயணமும் பாடமாகக் கற்பிக்கப்பட்டதைக்காட்டிலும், திரளான பொதுமக்களுக்கு கதாகாலேஷேபம் போல விரிவுரையாக எடுத்துச் சொல்லப்பட்டிருத்தல் வேண்டும்’ என்று தெரிவித்திருக்கிறார்.
கம்ப இராமாயணத்துக்கு முன்னதாகவே, தமிழ்மண்ணில் இராமாயணம் எனும் காப்பியம் ஏற்படுத்தியிருந்த தாக்கத்தை திருபுவனைக் கல்வெட்டின் மூலமும் சிற்பங்களின் மூலமும் நாம் அறியமுடிகிறது.
பல்லவர் காலத்தில் (கி.பி.9-ம் நூற்றாண்டு) பாகூரில் வேதக்கல்லூரி நடந்து வந்ததை பாகூர் செப்பேடுகள் மூலம் அறிந்தோம். சோழராட்சியில் முதலாம் இராஜேந்திரன் காலத்தில் (கி.பி.1012-1044) விழுப்புரம் மாவட்டம், எண்ணாயிரத்தில் 340 மாணவர்கள், 14 ஆசிரியர்களுடன் மிகப்பெரிய வேதக்கல்லூரி நடந்திருக்கிறது.
100க்கும் மேற்பட்ட ஊர்களும் கோயில்களும்: இங்கிருக்கும் முதலாம் இராஜாதிராஜனின் (கி.பி.16.12.1051) கல்வெட்டு, இப்பகுதியில் அந்நாளில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள், அவற்றிற்கு வழங்கப்பட்ட நிலங்கள் குறித்த விவரங்களைச் சொல்கிறது. இதில், திருவக்கரை, மொசுகுளத்தூர், ஆநன்குளப்பாக்கம், திருவான்பாக்கம், ஆன்மூர், காடெறிப்பாக்கம், ஆறைய் மாம்பாக்கம், அமணாற்றூர், குட்டக்கரை ஆலத்தூர், வயலூர், திரும்பெரும் பாக்கம், அனங்கனூர், திருமுடவன்பள்ளி, நெரியநல்லூர், நல்லூர், ஆழியூர், மருதூர், அருகூர், கழுமருதம், தென்மருதப்பாக்கம், வள்ளபாக்கம், நல்லாற்றூர், எமலம், சாத்தமங்கலம், கருக்குளப்பாக்கம், அழிசுபாக்கம், அயிற்றூர், மேல்பாடியூர், கீழைக் குமாரமங்கலம், ஸ்ரீகுறுங்குடி, திருவையொத்தி, ஸ்ரீஈஸ்வர நவக்கிராமம், உருவாற்றூர், அரியல்பாக்கம், புளியட்டி குளத்தூர், பகண்டை பாக்கம், நறையூர், வழுதவூர், ஒழுகறை, வானூர், இலுப்பையூர், தெங்கம்பாக்கம், பாலைப்பாடி, இறுமெலூர், குளமங்கலம், மாத்தூர், மதுராந்தக மங்கலம், பெருங்கலூர், மணற்பாக்கம், எயிற்றூர், நெட்டைப்பாக்கம் போன்ற ஊர்களும் அங்கிருந்த சிவன், விஷ்ணு, துர்க்கை, ஐயனார் கோயில்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.
இவற்றில் திருவக்கரை, நல்லாத்தூர், ஆழியூர், வழுதவூர் (வழுதாவூர்), ஒழுகறை, வானூர், நெட்டைப்பாக்கம் (நெட்டப்பாக்கம்) போன்ற ஒருசில ஊர்களைத் தவிர பல ஊர்களை இன்று நம்மால் அடையாளங்காண இயலவில்லை.
உடைபட்ட ஏரியை அடைத்தவருக்குச் சிறப்பு: திருபுவனையில் கோக்கிழானடிகள் பெயரில் பெரிய ஏரி ஒன்று இருந்திருக்கிறது. கோக்கிழானடிகள், பராந்தகச் சோழனின் மனைவியருள் ஒருவராவார். இதேபோல், இவ்வரசனின் பட்டப்பெயரால் அமைந்த ஸ்ரீவீரநாரயணப் பேரேரியைச் சிலர் உடைத்து விட்டனர். இந்த உடைப்பை, இப்பகுதி அதிகாரியான உத்தமச்சோழ விழுப்பரையன் சரி செய்து கொடுத்திருக்கிறார்.
அவரது செயலைப் பாராட்டவும், அவருக்குச் சிறப்பு செய்யவும் பெருங்குறி மக்கள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, தானியம், நிலங்களை அளக்கும் மரக்கால், துலாக்கோல் ஆகியவற்றிற்கு அவரதுப் பெயரிட்டு இம்முறையிலேயே கோயிலில் அளக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
ஏரிக்கரையைப் பாழ் செய்தான் என்ற பொருளில் ‘ஏரி வயிற்றில் குத்திவிட்டா னெனக்’ குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தத் தீர்மானம் முதலாம் குலோத்துங்கனின் 9-ம் ஆட்சியாண்டு, கர்க்கடகம், அபரபக்ஷம், நவமி, ரோகினி, வியாழக்கிழமையன்று (கி.பி. 25.7.1079) நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மதுராந்தகப் பேரேரி எனும் ஏரியும் இங்கு இருந்திருக்கிறது.
குலோத்துங்க சோழ சரிதை: முதலாம் குலோத்துங்கனின் 27வது ஆட்சியாண்டு, கர்க்கடகம், பூர்வபக்ஷம், துவிதீய, பூரம், புதன்கிழமை (கி.பி. 23.07.1096) பொறிக்கப்பட்ட கல்வெட்டு முக்கியத் தகவல் ஒன்றைப் பதிவுசெய்துள்ளது. மான குலாசனிச் சேரியைச் சேர்ந்த திருநாராயண பட்டனான கவி குமுதசந்திர பட்டன் என்பவர், அரசன் பெயரில் எழுதிய குலோத்துங்க சோழ சரிதை எனும் காவியத்தைத் தாங்களும் கேட்க என்று அரசன் ஆணையிட, சபைப் பெருமக்களும் கேட்டுக் கவிஞனுக்கும் அவன் வர்கத்தாருக்கும் வரிச்சலுகையுடன் நிலம்வழங்கிய செய்தியைச் சொல்கிறது இக்கல்வெட்டு. ‘தாங்களும் கேட்க’ என்று அரசன் சொல்வதன் மூலம், முன்னதாக அவர் கேட்டிருக்கிறார் என்பதை அறியமுடிகிறது. குலோத்துங்க சோழ சரிதை, மறைந்துபோன தமிழ்நூல்களில் ஒன்று என வரலாற்று ஆசிரியர் மயிலை சீனி.வேங்கடசாமி தெரிவித்துள்ளார்.
கலப்பு சாதிகள்: முதலாம் குலோத்துங்கனின் 27-ம் ஆட்சியாண்டு கி.பி.1099 கல்வெட்டு, பாரசவர் எனும் கலப்பு சாதியினரைக் குறிப்பிடுகிறது. பிராமண ஆணுக்கும் சூத்திர பெண்ணுக்கும் பிறந்த இவர்கள் கூத்தாடும் தொழில் செய்து வந்தனர். இதேபோல், விக்கிரமசோழனின் 9-ம் ஆட்சியாண்டு (கி.பி.1127) கல்வெட்டு, ஆயோகவர் எனும் மற்றொரு கலப்பு சாதியினரை அறிமுகப்படுத்துகிறது. பிராமணப் பெண்ணுக்கும் வைசிய ஆணுக்கும் பிறந்தவர்கள் இவர்கள். இப்படியான ஆயோகவரை, விழுப்புரம் மாவட்டம், பெருமுக்கல், முக்தியாலேசுவரர் கோயிலில் இருக்கும் விக்கிரம சோழனின் 7வது ஆட்சியாண்டுக் (கி.பி.1125) கல்வெட்டும் குறிப்பிடுவது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.
மண்ணின் மைந்தருக்கே: வேலைவாய்ப்புகளில் மண்ணின் மைந்தருக்கே முன்னுரிமை எனும் முழக்கம், 21-ம் நூற்றாண்டில் வலுப்பெற்றுள்ளது. ஆனால், இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே உள்ளூர் பணிகளில் உள்ளூராருக்கே முன்னுரிமை எனும் வேலைத்திட்டத்தை முன்வைத்துள்ளது திருபுவனையில் இருக்கும் கல்வெட்டு. முதலாம் குலோத்துங்கனின் 43-ம் ஆட்சியாண்டு (கி.பி. 11.12.1113) கல்வெட்டு, பட்டவிருத்தி, கிடைப்புறம் உள்ளிட்டவைகளில் பணிசெய்ய உள்ளூரில் இக்காரியங்களில் நல்லாராய் இருப்பவர்களையே பணியமர்த்த வேண்டும் என்றும், அப்படி அமர்த்தாமல் புறவூர்களில் இருந்து பணியமர்த்துபவர்கள் அரசு ஆணையை மறுத்தவர்கள் எனவும் மகாசபையினர் அறிவித்தனர்.
எருமைக்கடா- வண்டிகள் உதவி: முதலாம் குலோத்துங்கன் காலத்தில் (கி.பி.12-ம் நூற்றாண்டு) இப்பகுதியில் தூர்ந்து கிடந்த ஏரிக்குப் பிள்ளை சோழகோனார் என்பவர், குலோத்துங்க சோழன் கற்படை எனும் பெயரில் கல்லால் ஆன கரை கட்டியிருக்கிறார். இதற்காக அவருக்கு வீரநாராயண வளநாடு, கரிகாலசோழ வளநாடு, மதுராந்தக வளநாடு, பரகேசரி வளநாடு, உத்தம சோழ வளநாடு உள்ளிட்ட நாட்டினரும், அணைக்கரைப் பள்ளிகள், மன்றாடிகள் உள்ளிட்டப் பலரும் எருமைக் கடாக்களையும் வண்டிகளையும் தந்து உதவி இருக்கின்றனர்.
வில்லிப் பெரும்படையினர்: இங்கிருக்கும் முதலாம் குலோத்துங்கனின் 43-ம் ஆட்சியாண்டுக் (கி.பி. 11.12.1113) கல்வெட்டு, ஜனநாதத் தெரிந்த வில்லிப் படைக்கு முதலித்தனம் செய்வோர் கோயிலில் திருப்பணிகள் செய்வதற்கு நிலம் கொடுத்ததையும் அதற்கான வரிகளைத் தாங்களே செலுத்த ஒப்புக்கொண்டதையும் தெரிவிக்கிறது. ‘ஜனநாதன் என்பது முதலாம் இராசராச சோழனின் பட்டப்பெயர்களுள் ஒன்று. வில்லிப் பெரும்படை, விற் போர் வீரர்களைக் குறிக்கும். இராசராசன் பெயரில் விற் படை அமைந்திருந்தமையும் நாட்டுப் பெயர்கள், ஊர்ப்பெயர்கள் போலவே படைப் பிரிவுகளுக்கும் மன்னர் பட்டப்பெயர்களை இடும் வழக்கத்தையும் இது காட்டுகிறது என்கிறார் ‘புதுச்சேரி மாநிலக் கல்வெட்டுக்கள்’ நூலின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் கோ.விஜயவேணுகோபால்.
(தொடரும்)
Sir certain names my opinion.
அழிசுபாக்கம் abishegapakkam
நறையூர் dutch records of pondicherry mention nariyaur present venkatanagar area. Colloquial this place still referrerd as narimedu
காடெறிப்பாக்கம் katterikuppam