மக்கள் நல அரசு என்றால் என்ன? மக்களின் நலனை முதன்மையாகக் கருதி, அனைவருக்கும் சம உரிமைகள், சேவைகள் வழங்கும் அரசாங்கத்தையே மக்கள் நல அரசு என்கின்றனர். மக்கள் நலம் பேணும் அரசு என்பது, ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட மக்கள் உட்பட குடிமக்கள் அனைவருக்கும் சமமான உணவு, கல்வி, உறைவிடம், வேலை, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளை உறுதி செய்யும் அரசாக இருக்க வேண்டும்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஏற்பட்ட பொருளாதாரப் பெருவீழ்ச்சியைச் சீர்செய்து குடிமக்களின் சமூக மற்றும் பொருளாதார நல்வாழ்வை மேம்படுத்தப் பல்வேறு நாடுகளில் மக்கள் நல அரசு என்ற கருத்தாக்கம் தோன்றியதாகக் கூறப்படுகிறது. இரண்டாம் உலகப் போர் (1939-1945) முடிவடைந்தபின், ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. போரால் ஏற்பட்ட அழிவுகள், வேலையின்மை மற்றும் வறுமை சமூகச் சீர்குலைவுக்கு வழிவகுத்தன. இவற்றைச் சீர் செய்ய, பிரிட்டன் போன்ற நாடுகளில் வில்லியம் பெவரிஜ் அறிக்கை (1942) அடிப்படையில் மக்கள் நல அரசு உருவாக்கப்பட்டது. வறுமை, நோய், ஏழ்மை மற்றும் வேலையின்மை ஆகிய சமூகப் பிரச்னைகளை அகற்றுவதை முக்கிய நோக்கமாகக்கொண்டு உருவானதே வில்லியம் பெவரிஜ் அறிக்கை. இவ்வறிக்கையே பிரிட்டனின் மக்கள் நல அரசின் அடிப்படையாக அமைந்ததாகக் கூறப்படுகிறது.
மக்கள் நல அரசின் முக்கியக் கோட்பாடுகளாக, வாய்ப்புகளில் சமத்துவம், பொருளாதார வளங்களைச் சமமாக வழங்குதல் மற்றும் குறைந்தபட்ச நல்வாழ்க்கையைத் தங்களால் ஏற்படுத்திக்கொள்ள இயலாதவர்களுக்கு அவ்வாறான வாழ்க்கையினை ஏற்படுத்தித் தருதல் ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தன. இரண்டாம் உலகப்போருக்குப் பின் பல்வேறு நாடுகளால் உருவாக்கப்பட்ட இந்த மக்கள் நல அரசு கோட்பாட்டினை 2000 ஆண்டுகளுக்கு முன்பே அன்றைய சங்ககால மன்னர்கள் தங்களது கடமையாகவே கொண்டு ஆட்சி புரிந்திருக்கின்றனர்.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று சமுத்துவம் பேசிய தமிழ்ச்சமூகம், எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்று வாழ வேண்டுமென்ற கொள்கை உடைய அரசாங்கமாய்த் திகழ்ந்திருந்தது. ஒக்கும் என்ற சொல்லிற்கு நிகரான, ஒத்த, சமமான, போலிருக்கும் அல்லது பொருந்தும் என்று பொருள். ஒவ்வாத என்ற சொல்லிற்குப் பொருந்தாத, சமமில்லாத, அல்லது ஒத்துப் போகாத என்று பொருள்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் (குறள் 972)
பிறப்பினால் சமமான எல்லா உயிர்க்கும் சிறப்பு சமமாகாது, செய்தொழில் வேற்றுமையினால் என்கிறார் வள்ளுவர். இங்கு சிறப்பு என்பது நம்முடைய பெருமை அல்லது மதிப்பைக் குறிக்கும் சொல்லாய்ப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பிறக்கும் பொழுது எல்லோரும் சமமே. நமது பெற்றோரின் தொழில், குடி, பெருமை, புகழ் ஆகியவற்றால் நாம் வேற்றுமை அடைய மாட்டோம். ஆனால் நாம் வாழ்வில் செய்கின்ற செயல்களினால் நமது சிறப்பும் பெருமையும் மாறும். நமது மதிப்பு நாம் செய்யும் தொழிலில் அல்லது செயலில் உள்ள நேர்மையில், உழைப்பில், நேர்த்தியில், செயல் தரத்தில் அடங்கியுள்ளது என்று சமத்துவத்தைப் பேசுகிறார் வள்ளுவர்.
வள்ளுவர் கூறும் இச்சமத்துவத்தை வள்ளுவருக்கும் முந்தைய காலத்திலேயே சங்க இலக்கியத்தில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பாடலின் மூலம் உரைத்திருக்கிறார் கணியன் பூங்குன்றனார். கேளிர் என்ற சொல்லுக்கு உறவினர், சுற்றத்தார், நண்பர்கள் அல்லது அன்பானவர்கள் என்று பொருள். யாதும் ஊரே யாவரும் கேளிர் – உலக மக்கள் அனைவரும் நம் நண்பர்களே அல்லது உறவினர்களே என்கிறார். அன்றைய தமிழ்ச்சமூகம் அனைத்து உயிர்களையும் சமமாய்ப் பாவித்து முற்போக்காய் வாழ்ந்திருந்ததை இதன் மூலம் அறியலாம்.
0
சங்க இலக்கியத்தில் அரசன் என்பவன் தனிப்பட்ட அதிகாரம் கொண்டவனாக அல்லாமல் குடிமக்களின் பாதுகாப்பு, சமூக நீதி, பொருளாதாரம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணும் கடமை கொண்டவனாக இருக்க வேண்டுமென்று சங்கப் பாடல்கள் வலியுறுத்துகின்றன. சமத்துவத்தைப் பேணுவது என்பது குடிமக்கள் அனைவரையும் சமமாய்ப் பாவித்துப் பாதுகாக்கும் அரசனாய் ஆட்சிப் புரிவதைக் குறிக்கிறது.
‘மன் உயிர் காத்த மறு இல் செங்கோல்’ – பதிற்றுப்பத்தில் மன்னரின் குற்றமற்ற, நேர்மையான ஆட்சியைப் போற்றும் பாடல் வரி இது. மன்பது என்ற சொல்லுக்கு அகராதியில் மக்கட்பரப்பு என்பது பொருள். இவ்வரியில் மன் எனும் சொல், மக்களைக் குறிக்கும் சொல்லாய் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மறு என்பதற்குக் குற்றம் என்று பொருள். மறு இல் என்பது குற்றம் இல்லாத எனும் பொருளைக் குறிக்கிறது. குடிமக்களின் உயிரைக் காத்து, நீதி தவறாமல் ஆட்சி செய்த சிறந்த அரசனைக் குற்றமற்ற செங்கோல் உடையவன் எனப் புகழ்கிறது சங்க இலக்கியம்.
‘என்னிழல் வாழ்நர் சென்னிழல் காணாது’ என்பது புறநானூற்றுப் பாடலில் வரும் சொற்றொடர். என்னிழல் வாழ்நர் – என் நிழலில் வாழ்பவர்கள். சென்னிழல் காணாது – செம்மையான அல்லது நேர்மையான அல்லது பாதுகாப்பான நிழல் காணாது.
பாண்டியன் நெடுஞ்செழியன், ‘நான் பகைவர்களை வென்று, அவர்களது முரசைக் கைப்பற்றவில்லை என்றால், என்னுடைய ஆட்சியில் நிழலை நாடி வாழும் குடிமக்கள், என்னைப் பாதுகாப்பற்ற அரசனாகக் கருதி, கொடுங்கோலன் என்று கண்ணீர் சிந்திப் பழிக்கட்டும்’ என்று சபதம் எடுக்கும் சூழலில் இவ்வரி இடம்பெற்றிருக்கிறது. தன்னிடம் அடைக்கலம் புகுந்து, தனது ஆட்சியின் நிழலில் வாழும் குடிமக்களைப் பாதுகாப்பதே அரச கடமை என்பதை உணர்த்துகிறது இப்பாடல்.
‘புலி புறங்காக்கும் குருளைப் போல’ என்பது புறநானூற்றில் போற்றப்படும் உவமையாகும். புலி தன் குட்டியை (குருளை) மிகவும் பாதுகாப்பாக வளர்ப்பதுபோல, ஒரு மன்னன் தன் நாட்டு மக்களைக் காக்க வேண்டும். அவர்களை எந்தவித ஆபத்தும் நெருங்க இயலாத காவலுடன் பாதுகாக்க வேண்டும் என்ற நீதியை இச்சொற்றொடர் கூறுகிறது. இதன் மூலம், குடிமக்களைப் பாதுகாப்பதே ஆட்சியாளனின் கடமை என்பதை வலியுறுத்துகிறது சங்க இலக்கியம். இவ்வகையில் மக்கள் நல அரசின் கோட்பாடான சமத்துவத்துடன் குடிமக்கள் அனைவருக்கும் நல்வாழ்க்கையினை ஏற்படுத்தித் தருவதைச் சங்க காலத்தில் ஆட்சியாளர்கள் தங்களது செங்கோல் ஆட்சியின் கடமையாய் செயல்படுத்தி முற்போக்குச் சமூகமாய் விளங்கியிருக்கின்றனர் என்பதை அறிகிறோம்.
இரண்டாம் உலகப் போரின் அழிவுக்குப் பின்னர் எஞ்சியிருந்த மக்களைக் காக்கவே மக்கள் நல அரசு தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் தமிழ் மன்னர்கள் போர் நிகழும்போதே மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்புரிந்ததாகப் புறநானூறு கூறுகிறது.
பாரதப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலத்தில் போர்க்களத்தில் காயம்பட்ட பலர், தாகத்தாலும் பசியாலும் துயருற்றபோது, போர்வீரர் துயருறுவதைக் கண்டு பொறுக்க மாட்டாமல் அவர்களுக்கு உதவி செய்யுமாறு ஆணையிட்டான் தமிழ் மன்னன் ஒருவன் என்று கூறுகிறது சங்க இலக்கியம்.
அலங்குளைப் புரவி ஐவரொடு சிணைஇ
நிலம் தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருது களத்துஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
அலங்குளைப் புரவி – அசைந்துகொண்டிருக்கும் பிடரி மயிரை உடைய குதிரை (அலங்கு – அசைதல், உளை – பிடரிமயிர், புரவி – குதிரை).
ஐவரொடு – ஐந்து பேரோடு
சிணைஇ – சினந்து
நிலம் தலைக் கொண்ட – நிலத்தைத் தம்மிடமே கொண்ட
பொலம்பூந் தும்பை – பொலம் என்றால் பொன் (தங்கம்), தும்பை என்பது ஒரு வகை மலர். தங்க நிறமுடைய தும்பைப் பூக்களைத் தொடுத்த மாலையைக் குறிக்கும். போருக்குச் செல்லும் வீரர்கள் வெற்றியின் அடையாளமாக இவ்வகை மாலையை அணிவர்.
ஈரைம் பதின்மரும் – (ஈர் + ஐம்பது + இன்மர்) என்றால் நூற்றுவர்.
பொருது களத்து ஒழியப் – பொருதுதல் என்றால் போர் செய்தல், போர் செய்து போர்க் களத்தில் ஒழிய
பெருஞ்சோறு – வெற்றி வேண்டி போருக்குச் செல்லும் வீரர்களுக்கு வழங்கப்படும் பெருவிருந்து.
மிகுபதம் – அதிகமான உணவு.
வரையாது – அளவு கடந்து, வரையறை இல்லாமல்.
கொடுத்தோய் – கொடுத்தவனே
அசைந்து கொண்டிருக்கும் பிடரி மயிரை உடைய குதிரைகளைக் கொண்ட ஐவருடன் சினந்து, பகைத்து அவர்களின் நிலத்தை, நாட்டைக் கவர்ந்துகொண்ட தும்பைப் பூச்சூடிய நூறு பேரும் போரிட்டுக் களத்தில் இறந்து போகும் வரையில், போரிட்டுக் கொண்டிருந்த அனைவருக்கும் பெருஞ்சோறாகிய அதிகமான உணவை அளவில்லாமல் கொடுத்தவனே என்று சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதனைப் புகழ்ந்து குறிப்பிட்டுள்ளார் முதற்சங்கத்துப் புலவராகிய முரஞ்சியூர் முடிநாகராயர். போரில் இரு படைகளும் போர் செய்து மடியும் வரை அவர்களுக்குச் சேர மன்னன் சேரமான் உதியஞ்சேரலாதன் வேண்டிய அளவு உணவு வழங்கியதாலே பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றான் என்று அவனைப் புகழ்ந்து கூறுகிறார் புலவர்.
பாண்டவர் ஐவருடனும் கௌரவர் நூற்றுவர் பொருத போரில், இரு திறத்தாருக்கும் போர் முடியும் வரை உணவளித்து, அக்குடியின் சிறப்பை நிலைநிறுத்திய மன்னனை இப்பாடல் சிறப்பிப்பதாகப் பழைய உரையாசிரியர்கள், இப்பாடலைப் பாரதப் போருடன் ஒப்பிட்டு உரை கூறியிருந்தாலும், பல அறிஞர்களும், கால ஆராய்ச்சியாளர்களும் இதனை ஏற்கவில்லை.
பாண்டவர், கௌரவர், மகாபாரதப் போர் என்பதை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இப்பாடலைப் படித்தாலும், போர்க்களத்தில் போரிட்டுக் கொண்டிருந்த வீரர்களுக்கு, தாகம் என்றவருக்குத் தண்ணீரும், பசித்தவருக்கு உணவும் தொடர்ந்து வழங்க ஏற்பாடு செய்தான். வேண்டியவர் வேண்டாதவர் என்று எண்ணாமல் இரு தரப்பினருக்கும் உதவி செய்தான் எனும் பொருளை இப்பாடல் விளக்குகிறது. இதன் மூலம் சங்க காலத்தில் மன்னர்கள் போர் நிகழும்போதும் மக்களின் தேவையைக் கருத்தில்கொண்டு இயங்கி இருக்கின்றனர் என்பதை அறியலாம்.
சங்க காலத்தில் இருந்த கொடுங்கோல் ஆட்சியாளர்களைப் பற்றியும் அவர்களை மக்கள் கையாண்ட விதத்தைப் பற்றியும் அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.
(தொடரும்)

