Skip to content
Home » சங்க இலக்கியம் #8 – வான் முகந்த நீர்

சங்க இலக்கியம் #8 – வான் முகந்த நீர்

மழைப் பொழிவு எவ்வாறு நிகழ்கிறது? மழைப்பொழிவு என்பது வளிமண்டலத்தில் உள்ள நீராவியானது குளிர்ச்சியடைந்து, நீர்த்துளிகளாக மாறி, புவியீர்ப்பு விசையினால் பூமியை வந்தடையும் இயற்கை நிகழ்வாகும். சூரிய வெப்பத்தால் கடல், ஆறு, ஏரி மற்றும் நிலத்தில் உள்ள நீர் ஆவியாகி மேலே செல்கிறது. வளிமண்டலத்தின் உயரமான பகுதியில் உள்ள குளிர்ந்த காற்றால், இந்த நீராவி சிறிய நீர்த் திவலைகளாக மாறி மேகங்களை உருவாக்குகின்றன. இந்த நீர்த் திவலைகள் மேலும் குளிர்வடைந்து, பெரிய நீர்த்துளிகளாக மாறுகின்றன. மேகங்களில் உள்ள நீர்த்துளிகளின் எடை அதிகரிக்கும்போது, புவியீர்ப்பு விசை காரணமாக அவை மழையாகப் பூமியை வந்தடைகின்றன.

மேலும் பூமத்திய ரேகை பகுதிகளில் வெப்பத்தால் காற்று மேலே எழுந்து மழையைத் தருவதும், காற்று மலைகள் மீது மோதி குளிர்வடைந்து மழையாகப் பொழிவதும் மழைப் பொழிவிற்கான பிற காரணிகளாக இருக்கின்றன. மழை மற்றும் நீர் சுழற்சி குறித்த அறிவியல் புரிதல் ஒரே ஆண்டில் ஒரே நபரால் கண்டுபிடிக்கப்பட்டதல்ல. பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு அறிவியலாளர்களின் ஆய்வுகள் மூலம் படிப்படியாகக் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கிரேக்கத் தத்துவஞானி அரிஸ்டாட்டில் கி.மு.350இல் எழுதிய விண்கோளியல் என்ற நூலில், சூரிய வெப்பத்தால் நீர் மேலே சென்று, ஆவியாகி, குளிர்ந்து மீண்டும் மழையாகப் பொழிகிறது என்ற ஆரம்பக்கட்ட கருத்தைக் கணித்திருந்தார். பிரெஞ்சு இயற்கை ஆர்வலரான பெர்னார்ட் பாலிசி என்பவர் 1580ஆம் ஆண்டு, ஆறுகளில் ஓடும் நீருக்கு மழையே முழுமையான காரணம் என்ற நவீன நீர் சுழற்சிக் கோட்பாட்டை முதன்முதலில் முன்வைத்தார். 1674ஆம் ஆண்டு, பிரெஞ்சு விஞ்ஞானி பியர் பெரால்ட் என்பவர் பாரிஸில் உள்ள செய்ன் நதியை ஒட்டிய வடிநிலத்தில் பெய்த மழையையும் ஆற்று நீரையும் கணக்கிட்டு, மழைப்பொழிவு மட்டுமே நதிகள் உருவாவதற்குப் போதுமானது என்பதை முதன்முதலில் அறிவியல் பூர்வமாக நிரூபித்தார்.

இவ்வகையில் அறிவியலில் படிநிலைகளாகக் கண்டுபிடிக்கப்பட்ட நீர் சுழற்சி மற்றும் மழைப் பொழிவு குறித்த அறிவையும் தெளிவையும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பழந்தமிழர்கள் பெற்றிருந்தனர்.

சங்க காலமும் கிரேக்கத்தின் பொற்காலமும் ஏறத்தாழச் சமகாலமே ஆகும். தேல்ஸ் போன்ற ஆரம்பகாலக் கிரேக்கச் சிந்தனையாளர்கள், கடலின் அடியிலிருந்து நிலத்தால் நீர் உறிஞ்சப்பட்டு, பின் அது மலைகளுக்குள் சென்று ஆறுகளாக வெளியேறி மீண்டும் கடலை அடைகிறது என்ற தவறான கருத்தைக் கொண்டிருந்தனர். ஆனால் சங்க இலக்கியத்தில் நீர் சுழற்சி மிகத் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கி.மு. 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கடியலூர் உருத்திரங்கண்ணனார், பட்டினப்பாலையில் பாடிய இப்பாடல், நீர் சுழற்சி என்பது ஒரு தொடர்ச்சியான வட்டம் என்பதை மிகத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.

வான்முகந்த நீர் மழை பொழியவும்
மழைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்
மாரி பெய்யும் பருவம் போல்
நீரின்றும் நிலத்து ஏற்றவும்
நிலத்தினின்று நீர்ப் பரப்பவும்
அளந்து அறியாப் பல பண்டம்.

மேகங்கள் முகந்து சென்ற கடல் நீர் மழையாகப் பொழிகிறது. மலையில் பெய்த அந்த நீர் ஆறுகளாக ஓடி மீண்டும் கடலில் பரவுகிறது. புகார்த் துறைமுகத்தில் பண்டங்கள் கப்பல்களிலிருந்து இறங்குவதும், நிலத்திலிருந்து கப்பல்களுக்கு ஏறுவதும் இந்த மழை நீர் சுழற்சியைப் போன்றது என உவமை கூறுகிறார் புலவர்.

இப்பாடலில் புலவர் நீரியல் சுழற்சியைப் புகார்த் துறையின் ஏற்றுமதி, இறக்குமதிக்கு ஒப்பிடுகிறார். நீரியல் சுழற்சி பற்றிய தெளிந்த சிந்தனை பழந்தமிழர்களிடம் இருந்தது என்பதை இப்பாடல் தெரிவிக்கிறது.

நப்பூதனார் பாடிய முல்லைப்பாடலில், மேகம் கடலில் நீர் பருகி, மேலே எழுந்து சென்று மழையாகப் பொழியும் அறிவியல் காட்சி விவரிக்கப்பட்டுள்ளது.

பனிகடல் பருகி வலன்ஏர்பு
கோடு கொண்டெழுந்த கொடுஞ்செலவு எழிலி
பெரும்பெயல் பொழிந்த

குளிர்ந்த கடல் நீரைக் குடித்துவிட்டு வலப்பக்கமாக உயர்ந்து மலையை நோக்கி எழுந்து வேகமாகச் செல்லும் மேகம் பெருமழையைப் பொழிந்தது என்கிறது இப்பாடல்.

அகநானூறு 183ஆவது பாடலில் கருவூர்க் கலிங்கத்தார் எழுதியுள்ள கீழ்க்கண்ட வரிகள் பண்டைத் தமிழர்களின் நீரியல் சுழற்சி மற்றும் மேகக் கூட்டங்களின் இயக்கம் குறித்த அறிவியல் அறிவைப் பறைசாற்றுகிறது.

பனித்துறைப் பெருங்கடல் இறந்து நீர்பருகிக்
குவவுத்திரை அருந்து கொள்ளைய குடக்கு ஏர்பு
வயவுப்பிடி இனத்தின் வயின்வயின் தோன்றி
இருங்கிளைக் கொண்மூ ஒருங்குடன் துவன்றிக்
காலை வந்தன்றால் காரே

குளிர்ந்த கரைகொண்ட பெரிய கடலின் மீது சென்ற மேகங்கள் அங்கிருக்கும் நீரை ஆவியாகக் குடித்தன. திரண்ட அலைகளைக் கொண்ட கடலின் நீரை அருந்துவதற்கென மேகங்கள் மேற்குத் திசையில் எழுந்தன. கருவுற்றிருக்கும் பெண் யானைகள் கூட்டமாகத் தெரிவதுபோல், மழையைத் தாங்கிய கருமேகங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தோன்றி, பின்னர் ஒன்றாகக் கூடி நெருங்கி விடியற்காலையில் மழையைப் பொழிந்தன.

இதன் மூலம் 2000 ஆண்டுகளுக்கு முன்பு மேலைநாட்டு அறிஞர்கள் கடல் அடியில் நீர் உற்பத்தியாகிறது என்று நம்பிய காலத்தில், தமிழர்கள் நீர் சுழற்சியின் அறிவியலைத் தெளிவாக அறிந்திருந்தனர் என்று அறிகிறோம்.

சங்க இலக்கியத்தில் பருவக் காலங்கள் மற்றும் பருவ மழை குறித்து பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை என்கிற 2 பருவமழைக் காலங்கள் உள்ளன. தமிழ்நாட்டிற்குச் சிறிதளவு மழை கொண்டு வரும் தென்றல், பெருமளவு மழை கொண்டு வரும் கொண்டல் ஆகிய இரண்டைப் பற்றிய செய்திகள் ஏராளமாக உள்ளன. கதிரவனின் வெப்பம், காற்றின் வீச்சு, மேகங்களின் உருவாக்கம், காடுகளின் அமைவு ஆகிய அனைத்து மழைக் கூறுகளையும், காலநிலை பற்றிய அறிவையும் செம்மையாகக் கொண்டு இருந்தவர்களாகப் பழந்தமிழர்களை அறிய முடிகிறது.

பதிற்றுப் பத்தின் 24ஆம் பாடலில் ‘வயங்கு கதிர்’ எனத் தொடங்கும் வரிகள் விண்மீன்கள் மற்றும் கோள்களின் அமைப்பை வைத்து பருவ மழை பொழியும் வாய்ப்பைப் பற்றிப் பழந்தமிழர்கள் கணித்திருப்பதைக் கூறுகிறது.

வயங்கு கதிர் விரிந்து வானகம் சுடர்வர
வறிது வடக்கு இறைஞ்சிய சீர்சால் வெள்ளி
பயங்கெழு பொழுதோடு ஆநியம் நிற்பக்
கலிழுங் கருவியொடு கையுற வணங்கி
மன்னுயிர் புரைஇய வலனேர்பு இரங்கும்
கொண்டல் தண்டளிக் கமஞ்சூல் மாமழை காரெதிர் பருவம்

விளங்குகின்ற கதிரவனின் கதிர்கள் விரிந்து வானமெங்கும் ஒளிவீசி நிற்க, வடதிசைப் பக்கமாகச் சிறிதளவே சாய்ந்துள்ள சிறப்புப்பொருந்திய ‘சுக்கிரன்’ என்னும் கிரகமானது, பயன் பொருந்திய பிற வான கிரகங்களோடு மழை பெய்வதற்கு உரியதான நல்லநாளிலே பொருந்தி நிற்க, நீரைச் சொரியும் மேகத் தொகுதியோடு நாற்றிசையும் பொருந்த கவிந்து, உலகில் நிலைபெற்ற உயிர்களை எல்லாம் காக்கும் பொருட்டாக, வலமாக எழுந்து ஒலிக்கின்ற கீழ் காற்றால் கொணரப்பெற்ற தண்மையான நீர்த்துளிகளைக் கொண்டவும், நிறைசூலைக் கொண்டவுமான கரிய மேகங்கள் எதிர்ப்படுகின்ற கார்காலம்.

இதன் மூலம் சங்கக் காலத்தில் பழந்தமிழர்கள் மழை பற்றியும், மழை வரும் காலங்கள் குறித்தும் மிகச் செறிவான அறிவைப் பெற்றிருந்தனர் என்பதையும், மிக ஆழமான வானியல் அறிவையும் சூழலியல் அறிவையும் பெற்றிருந்தனர் என்பதையும் அறிய முடிகிறது. வெள்ளி எனப்படும் மழைக்கோள் வடக்கில் எழுந்தால் மழை பெய்யும், அதுவே தெற்கில் எழுந்தால் மழை பெய்யாமல் வறட்சி வரும் என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

‘ஐப்பசி மாதம் அழுகைத் தூற்றல், கார்த்திகை மாதம் கனத்த மழை’ என்கிற பழமொழி துளங்கொளி நாள்மீனாகிய கார்த்திகைக் கூட்டத்தின் அமைவினால் வரும் மழை பற்றிய அறிவைச் சுட்டுகிறது. நட்சத்திரங்கள் எனப்படும் நாள்மீன்களும் கிரகங்கள் எனப்படும் கோள்மீன்களும் அமைந்துள்ள முறை பற்றியும், புவியின் சுழற்சியால் ஏற்படும் பருவ காலங்கள் பற்றியுமான அறிவு நிரம்ப இருந்ததை அறிய முடிகிறது.

நிலத்தையும் பொழுதையும் முதற்பொருளாகக் கொண்ட பழந்தமிழர், பெரும் பொழுதாகிய பருவங்களையும் அவற்றின் தன்மைகளையும் ஆய்ந்தறிந்து இருந்தனர்.

கார், கூதிர், பனி எதிர் பருவம் (முன்பனி), வேனில் (இளவேனில், முதுவேனில்), பின்பனி ஆகியன 6 பருவங்கள் ஆகும். இவற்றைப் பெரும்பொழுது என்று அழைத்தனர். கதிரவனைப் பூமி சுற்றி வரும் முறையில் பெரும்பொழுதுகளையும், தன்னைத் தானே சுற்றிவரும் முறையில் மாலை, யாமம் (நள்ளிரவு), வைகறை, விடியல், நண்பகல், எற்பாடு (மாலை மறையும் நேரம், ‘எல்’ என்கிற கதிரவன் ‘படும்’ நேரம்) என்று 6 சிறுபொழுதுகளையும் பிரித்தனர்.

மேற்கத்திய முறையிலும், வடஇந்திய மரபிலும் பருவங்கள் நான்காகவே பிரிக்கப்பட்டுள்ளன. அவை கோடை, குளிர், இலையுதிர், வசந்தம் என்பதாகும். இதன் மூலம் பருவங்கள் பற்றிய மிக நுட்பமான அறிவை தமிழ் மக்கள் கொண்டிருந்தனர் என்பதை அறிய முடிகிறது. அத்துடன் பருவங்களில் பெய்யும் மழை பற்றியும், வறண்ட காலங்களின் தன்மை பற்றியும் அறியும் திறன் பெற்றிருந்தனர் என்பதும் தெளிவாகிறது. காற்றுகளின் தன்மை பற்றிய அறிவும் மிகுந்து இருந்ததைக் காண முடிகிறது. தெற்கிலிருந்து வரும் காற்று தென்றல், வடக்கிலிருந்து வரும் காற்று வாடை, கிழக்கிலிருந்து வரும் காற்று கொண்டல், மேற்கிலிருந்து வரும் காற்றுக் கோடை என்று பிரித்தறியப்பட்டது.

கிழக்குக் கடலில் முகந்து மேற்கே எழுந்து மழையைப் பொழியும் வடகிழக்குப் பருவமழையை, 

குண கடல் முகந்து குடக்கேர்பு இருளி
மண் திணி ஞாலம் விளங்க

என்ற நற்றிணைப் பாடல் விளக்குகிறது.

இவ்வாறாக மழை நீரின் தன்மையைப் பற்றி அறிந்திருந்த பழந்தமிழர்கள், மனிதனின் ஆக்கப்பூர்வமான ஒவ்வொரு செயலுக்கும் தேவையாக நீர் அமைந்திருப்பதை உணர்ந்திருந்தனர். அதனால் நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றைச் சேமித்து வந்துள்ளனர். பழந்தமிழர்கள் எவ்வகையில் எல்லாம் நீரைச் சேமித்திருந்தனர் என்பதை அடுத்த பதிவில் காண்போம்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *