மனித குலத்திற்கு இயற்கை கொடையாய் அளித்திருக்கும் அடிப்படையான பொருள் தண்ணீர். பயிர்வளம், இயற்கைவளம், விலங்குவளம் முதலியவற்றைச் செழிக்கச் செய்வதுடன் மனிதனின் அன்றாடத் தேவையில் தவிர்க்க இயலாத ஒன்றாகத் தண்ணீர் இடம் பெற்றுள்ளதை உணர்ந்த பழந்தமிழர்கள் நீர் மேலாண்மையைச் சிறப்புடன் செய்திருந்தனர்.
தம்மிடம் இருக்கும் வளங்களைச் சரியான முறையில் திட்டமிட்டு ஒருங்கிணைத்து இயங்கும் செயல்முறையே மேலாண்மை என்கிறோம். இவ்வகையில் மழைப்பொழிவின் அறிவைப் பெற்றிருந்த பழந்தமிழர்கள், நீரின் தேவையை உணர்ந்து மழைநீரைச் சேகரிக்கும் முறைகளைக் கண்டறிந்தனர். மேலும் பல்வேறு நீர்நிலைகளை உருவாக்கி நிலத்தடி நீரை அதிகப்படுத்தினர். தடுப்பு அணைகள் மூலம் சரியான அளவில் நீர்த்தேக்கங்களை அமைத்தனர்.
தொடக்கத்தில் இயற்கையாக ஓடும் காட்டோடைகளில் இருந்தும், ஆறுகளிலிருந்தும் மட்டுமே தண்ணீரைப் பெற்றுவந்த பழந்தமிழர்கள், நீரைத் தேக்கி வைக்கவும், திசை திருப்பவும், பூமியின் உள்ளே இருந்து வெளிக்கொணரவும் படிப்படியாகக் கற்றறிந்து நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கினர்.
தன்போக்கில் ஓடிக்கொண்டிருக்கும் நீரைத் தேக்கி வைக்கும் முறையைக் குளம், இலஞ்சி, பொய்கை, ஏரி, வாவி, கூவல், குழி எனப் பல்வேறு பெயர்களில் பண்டைத் தமிழர்கள் அழைத்துள்ளனர்.
கடல் அருகே தோண்டி கட்டிய கிணற்றுக்கு ஆழிக்கிணறு என்றும், பலவகை மலர்கள் பூத்து, நீர் நிறைந்திருக்கும் கண்கவர் இயற்கை நீர்நிலையை இலஞ்சி என்றும், ஊரினர் குடிக்க நீர் அளித்து உதவும் நீர்நிலை மற்றும் ஊரார் நீர் முகக்கும் குளம் ஆகியவற்றை ஊருணி என்றும், அடியிலிருந்து நீர் ஊறுவதை ஊற்று என்றும், நீர் ஊறுதலையுடைய குழியை ஊற்றுக் குழி என்றும், எப்போதும் வாய்க்கால் வழியோடும் நீர்நிலையை ஓடை என்றும், நீர் ஓடும் வழியைக் கால்வாய் என்றும், சிறிய ஆழமுள்ள குளத்தைக் குட்டை என்றும், குடைக்கிணற்றைக் குமிழி என்றும், பெருங்கிணற்றைக் கேணி என்றும், மலையில் இயற்கையாய் அமைந்த நீர்நிலையைச் சுனை என்றும், தொண்டை மண்டலப் பகுதியில் உள்ள ஏரியைத் தாங்கல் என்றும், பாண்டி மண்டலப் பகுதியில் உள்ள ஏரியைக் கண்மாய் என்றும், தாமரை முதலிய நீர் தாவரங்கள் உள்ள நீர் நிலையைப் பொய்கை என்றும், ஆற்றிடையே உள்ள அபாயமான பள்ளத்தை மடவு என்றும், ஊற்று நீர் நிரம்பி மிகுதியான நீர் வெளிச் செல்லும் அமைப்பை வாவி என்றும் சங்க காலத்தில் பல்வேறு பெயர்களைக் கொண்டு நீர்நிலைகள் அழைக்கப்பட்டிருக்கின்றன.
சங்க காலத்தில் ஏரிகள் மற்றும் குளங்கள் தற்செயலாக வெட்டப்படாமல், நீரின் கொள்ளளவு அதிகமாகவும், கரை நீளம் குறைவாகவும் இருக்குமாறு ‘எட்டாம் பிறை வடிவில்’ அமைக்கப்பட்டன. ஓடி வரும் மழை நீரினைத் தேக்கிவைத்து, அறையும் பொறையும் அமைந்த பகுதிகளை இணைத்து வளைந்த வடிவிலான நீர்த்தேக்கத்தினை அமைத்திருந்தனர் என்பதைப் புறநானூற்றின் 118ஆவது பாடலின் மூலம் அறிய முடிகிறது.
அறையும் பொறையும் மணந்த தலைய,
எண் நாள் திங்கள் அனைய கொடுங் கரைத்
தெள் நீர்ச் சிறு குளம் கீள்வது மாதோ
கூர் வேல் குவைஇய மொய்ம்பின்
தேர் வண் பாரி தண் பறம்பு நாடே!
அறை என்பது பாறையையும், பொறை என்பது சிறுகுன்றுகளையும் குறிக்கிறது. பாறைகளும் சிறுகுன்றுகளும் கூடிய இடத்தில் எட்டாம் பிறைத் திங்கள்போல் வளைந்த கரையைக்கொண்ட தெளிந்த நீருடைய சிறிய குளம் உடைந்திருப்பதுபோல், கூரிய வேலும் திரண்ட வலியத் தோள்களும் தேர் வழங்கும் வள்ளல் தன்மையும் உடைய பாரியின் குளிர்ந்த பறம்பு நாடு அழிந்துவிடுமோ என்று மேலுள்ள பாடல் கூறுகிறது.
சிறிய குளத்தின் கரை உடைந்து அழிவதைக் கண்ட புலவர் கபிலர், பாரியால் பாதுகாக்கப்பட்ட பறம்பு நாடு, அவனது இறப்புக்குப் பின் பாதுகாவலின்றி அழிவதைக் கண்டு, பறம்பு நாடும் குளத்தின் கரை உடைந்து அழிவதைப்போன்று அழிந்து விடுமோ என்று இப்பாடலின் மூலம் தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பாறைகளையும் சிறுகுன்றுகளையும் கரைகளாகக் கொண்டு குளங்கள் அமைப்பது சங்க காலத்தில் வழக்கில் இருந்திருக்கிறது என்று இப்பாடலின் மூலம் தெரியவருகிறது. பயிர்த்தொழிலுக்கு நிலத்தை அடுத்து நீர்வளம் மிக முக்கியமான ஒன்றாகிறது. ஒரு நாட்டின் வளம் அந்நாட்டின் நீர்வளத்தைக் கொண்டே அமைகிறது. அதனால் சங்க காலத்தில் மக்கள் பயிர்த்தொழிலுக்குக் குறைவிலா நீர்வளம் தேவை என்பதை உணர்ந்திருந்தனர்.
‘அகல்வாய்ப் பைஞ்சுனைப் பயிர் கால்யாப்ப’ என்பது சங்க இலக்கியமான நற்றிணை நூலில் இடம்பெற்றுள்ள புகழ்பெற்ற வரி ஆகும். மலைப் பகுதியில் பெய்த மழையினால் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. அந்த நீரால், அகன்ற வாயையுடைய குளிர்ந்த சுனைகள் அதாவது மலையடிவாரத்தில் உள்ள இயற்கையான நீர்நிலைகள் நிரம்புகின்றன. அந்தச் சுனைகளில் உள்ள நீரைக் கொண்டு, மலையில் விளையும் பயிர்களும் தாவரங்களும் வேரூன்றி, செழித்து வளர்கின்றன என்பது அவ்வரியின் பொருளாகும்.
இதன் மூலம் மழையினால் கிடைக்கும் நீரினையும், அருவிகளிலிருந்து கிடைக்கும் நீரினையும், சுனையில் சேமித்து, பின் அகன்ற வாய்க்கால்களின் மூலம் நீர் பாய்ச்சியுள்ளனர் என்பதை அறியமுடிகிறது.
கால்வாய் என்பது நீர்கொள்வதற்காக வாய்போல் திறக்கும் மதகுகள் அமைந்துள்ள பகுதி. நீர்க்கோள் முடிந்ததும் வாய் மூடிக் கொள்வதுபோல் மதகுகள் மூடிக்கொள்ளும். ஆற்றிலிருந்து, அணைகளிலிருந்து, ஏரி குளங்களிலிருந்து பாசனத்திற்கான தண்ணீர் விடுபட்டுப் பாயத் தொடங்கும் தலைமை வழியே கால்வாய் ஆகும். வாய்க்கால் என்பது கால்வாயிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கிளைவிட்டுப் பிரிந்து கடைமடைவரை சென்று பாத்திக்குள் பாய்வது. நீர்வழிப்பாதையின் கடைசிப் பகுதியான கால் பகுதியைக் குறிப்பது வாய்க்கால். இவ்விதமாகப் பல வகையான நீர்நிலைகளை உருவாக்கிய சங்க காலத்தவர்கள் எவ்விதம் இதனைப் பாதுகாத்துப் பராமரித்தனர் என்றும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
தமிழர்கள் நீர்நிலைகளை உருவாக்குவதில் மட்டுமின்றி அதனை நன்கு பாதுகாத்துப் பராமரிப்பதிலும் சிறந்து விளங்கினர். குளங்களை நீர் நிரம்பும் காலத்தில் பாதுகாப்பது மரபு என்ற கருத்து அகநானூற்றில் காணப்படுகிறது.
துய்அவிழ் பனிமலர் உதிர வீசித்
தொழின்மழை பொழிந்த பானாட் கங்குல்
எறிதரைத் திவலை தூஉம் சிறுகோட்டுப்
பெருங்குளம் காவலன் போல,
அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே
நக்கண்ணையார் என்ற சங்ககாலப் புலவர் அகநானூற்றின் இந்த 252ஆம் பாடலில், கடுமையான மழை பொழியும் நடு இரவினில்கூடத் தூங்காமல், சிறிய கரைகொண்ட பெரிய குளம் உடைபடாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கும் காவலன்போல, என்னை எனது அன்னை பாதுகாத்து வருகிறாள் என்று தலைவி தனது இக்கட்டான நிலை குறித்துத் தோழி மூலம் தலைவனிடம் சொல்வதாக எழுதியிருக்கிறார்.
கடுமையாக மழை பெய்யும்பொழுது குளம் உடைய அதிக வாய்ப்புண்டு. அதனால் அப்பொழுது அக்குளத்தை உடையாமல் பாதுகாப்பது அவசியமாகிறது. உடையும் நிலை ஏற்பட்டால் அதனைத் தடுப்பதும், முடியாதெனில் உரியவரிடம் சொல்லி உரிய ஏற்பாடு செய்வதும் அந்தக் காவலனின் பணியாக வைத்திருப்பதை இப்பாடல் மூலம் அறிய முடிகிறது.
நீர்வரத்துக் கால்வாய்களைச் சரியாக அமைத்தல், தூம்பு மற்றும் கலிங்கு மூலம் நீரைப் பங்கீடு செய்தல், மற்றும் மடையர்கள் மூலம் தொடர்ச்சியான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளுதல் ஆகியவை சங்க காலத்து நீர் மேலாண்மையின் முக்கிய அம்சங்களாகும்.
தூம்பு என்பது பொதுவாக ‘துளை’ அல்லது ‘வழி’ என்று பொருள்படும். ஏரி, குளம், கண்மாய் போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் தேவையையொட்டி வெளியேற அல்லது பாசனத்திற்குத் திறக்க அமைக்கப்படும் துளை அல்லது மதகு வழி ‘தூம்பு’ எனப்படுகிறது. இது நீர்நிலைகளுக்குள் வரும் சேறு மற்றும் வண்டலை வெளியேற்றவும் உதவுகிறது. ‘குமிழித் தூம்பு’ என்பது தமிழ்நாட்டின் பழங்கால ஏரிகளில் நீர் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க மற்றும் ஏரியைத் தூர்வாராமல் பாதுகாக்க அறிவியல் பூர்வமாக அமைக்கப்பட்ட ஒரு கல் அமைப்பு ஆகும்.
கலிங்கு என்பது ஏரி, கண்மாய் மற்றும் ஆறுகளில் நீரின் அளவைக் கட்டுப்படுத்தவும், உபரி நீரை வெளியேற்றவும் கற்களால் கட்டப்படும் நீர்ப்பங்கீட்டு அமைப்பு ஆகும். குத்துக்கற்களை வரிசையாக ஊன்றி, இடைவெளியில் பலகைகளைச் சொருகி நீரின் அளவை மாற்றியமைக்கும்படி அமைக்கப்பட்டிருக்கும்.
மடையன் என்ற சொல்லுக்குச் சமையற்காரன், நீர்மடை திறப்போன் மற்றும் அறிவிலான் ஆகிய பொருள்களை வழங்குகிறது தமிழ் அகராதி. ஏரி மற்றும் கண்மாய்களில் தண்ணீர் நிரம்பியிருக்கும்போது, மதகுகளை (தண்ணீர் திறந்துவிடும் பகுதி), உயிரைப் பணயம் வைத்து நீருக்குள் மூழ்கி திறந்துவிடும் பணியைச் செய்பவர்கள் மடையர்கள் என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்டனர்.
நீர்நிலைகளுக்கு மழைக்காலங்களில் எந்தவிதச் சேதமும் இன்றித் தண்ணீர் வந்து சேர வரத்துக்கால்வாய்கள் முறையாக வெட்டப்பட்டுத் தூர்வாரப்பட்டன. ஏரி நிரம்பியவுடன் உபரி நீர் வெளியேறவும், கரை உடையாமல் பாதுகாக்கவும் உறுதியான கற்களாலான கலிங்குகள் அமைக்கப்பட்டன. ஏரி, குளங்களின் கரைகளில் நீரை வெளியேற்ற மதகுகள் அமைக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக, பழந்தமிழர்களின் தலைசிறந்த தொழில்நுட்பமாகக் குமிழித் தூம்பு விளங்கியது. இதன் மூலம் ஏரியின் அடியில் படியும் வண்டல் மற்றும் கசடுகளை நீக்கிவிட்டு, தெளிவான நீரை மட்டுமே பாசனத்திற்குத் திறக்க முடிந்தது.
சங்க காலத்தில் நீர்நிலைகள் அரசு அதிகாரத்தின் கீழ் இருந்தாலும், அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு மடையர்கள், நீர்க்கட்டியார், மற்றும் குளக்காப்பாளர்கள் போன்ற உள்ளூர் மக்களிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. நீர்நிலைகளைத் தூர்வாருதல் மற்றும் கரைகளைப் பலப்படுத்துதல் ஆகியன மக்களின் கூட்டு முயற்சியாகக் குடிமராமத்து ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட்டன. நீர்நிலைகளை முறையாகப் பராமரித்து நீர்வளத்தைப் பெருக்குவதே ஒரு மன்னனின் தலையாயக் கடமை என்று இலக்கியங்கள் வலியுறுத்துகின்றன.
மழை நீரை ஏரிகள், குளங்களில் சேமித்து வைப்பது பற்றிச் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார்.
இடியுடைப் பெருமழை எய்தா ஏகப்
பிழையாவிளையுள் பெருவளம் சுரப்ப
மழைபிணித்(து) ஆண்ட மன்னவன்
இடியுடன் கூடிய பெருமழை உரிய காலத்தில் பெய்யாமல் போகுதல் என்ற நிலை இல்லாதபடி, எப்போதும் குறையாத விளைச்சலும், பெருவளமும் நாடெங்கும் பெருகி விளங்குமாறு மழைநீரைக் குளங்கள் மற்றும் அணைகளில் தடுத்து, அதன் மூலம் நாட்டைச் செங்கோல் கொண்டு ஆண்ட மன்னன் என்பது இப்பாடலின் பொருளாகும். இதன் மூலம் பழந்தமிழர்கள் நீர்நிலைகளை மிகச் சிறந்த அறிவியல் தொழில்நுட்பத்துடனும், சமூகக் கட்டுப்பாடுகளுடனும் நிர்வகித்துள்ளனர் என்பதை அறிகிறோம். பழந்தமிழர்கள் அணைகள் மூலம் எவ்வாறு நீர் மேலாண்மையை மேற்கொண்டனர் என்பதை அடுத்த பதிவில் காண்போம்.
(தொடரும்)

