இன்றைய கணினிமயமாக்கப்பட்ட காலத்தில் தொழில் என்பது பெரும்பாலும் வருவாய் ஈட்டுவதையும் சுயநல இலக்குகளையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. ஆனால், சங்க காலத்தில் தொழில் என்பது வாழ்வாதாரம் சார்ந்ததாக மட்டுமல்லாமல், வாழ்வியலின் ஒருங்கிணைந்த அங்கமாகவும், சமூக ஒற்றுமையின் வெளிப்பாடாகவும், இயற்கையோடு இயைந்ததாகவும் விளங்கியது.
இன்றைய வணிகச் சூழலில் உள்ள போட்டிகள் சங்க காலத்தில் இல்லை. அன்று உழவு மற்றும் நெசவு போன்ற தொழில்கள் சமூகத்தின் முதுகெலும்பாகக் கருதப்பட்டன. சமூகத்தின் உணவு மற்றும் உடைத் தேவைகளை நிறைவேற்றுவதே தொழில்களின் முக்கியக் குறிக்கோளாக இருந்தது. உழவர்கள் உற்பத்தி செய்த தானியங்களைப் பண்டமாற்று முறையில் பிற தொழிலாளர்களுடன் பரிமாறிக்கொண்டனர். இது மக்களிடையே பரஸ்பர நம்பிக்கையை வளர்த்தது.
தற்கால நவீன யுகத்தில் இயந்திரங்களை இயக்குவதையும், மென்பொருள்களை உருவாக்குவதையும் தொழிலாகக் கொண்டுள்ளோம். ஆனால், சங்க காலத்தில் தொழில் என்பது மக்களின் ஒழுக்கம், சமூக ஒற்றுமை, கலாசாரம், மற்றும் ஆன்மிகத்தின் அடிப்படையாகத் திகழ்ந்தது. வருவாய் ஈட்டுவதையும் தாண்டி, பிறருக்கு உதவும் மனப்பான்மையையும், இயற்கையைப் பாதுகாக்கும் பொறுப்புணர்வையும் உள்ளடக்கியதாகவே சங்க காலத் தொழில் முறை இருந்தது. அவ்வாறாக வெறும் வேலையாக அல்லாமல், உன்னதமான வாழ்க்கை முறையாகப் போற்றப்பட்ட சங்க காலத் தொழிலில் வேளாண்மைத் தொழில் சிறப்புற்றிருந்தது.
சங்க காலத்தில் விவசாயம் என்பது குறிப்பிட்ட தனிநபருக்காகவோ, வியாபாரிகளுக்காகவோ மட்டும் செய்யப்படவில்லை. ஒட்டுமொத்த சமூகத்தின் பசியைப் போக்கவும், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தவும் மேற்கொள்ளப்பட்டது.
உழவர்கள் தமக்குக் கிடைக்கும் நெல் மற்றும் பிற தானியங்களை வறுமையில் வாடும் உறவினர்களுக்கும், பாணர்கள், புலவர்கள் போன்றவர்களுக்கும், தன்னை நாடி வரும் விருந்தினர்களுக்கும் பகிர்ந்து அளித்தனர். தமது சொந்த மக்களின் உணவுத் தேவைக்காகவும், சமூகத்தில் உயர்ந்த கௌரவத்துடன் வாழ்வதற்காகவும் விவசாயம் செய்தனர்.
திருக்குறளில் ‘உழவே உலகத்தின் அச்சாணி’ என்று குறிப்பிட்டு, உழவர்கள்தான் மற்ற அனைத்துத் தொழில் செய்பவர்களையும் தாங்கிப் பிடிக்கின்றார்கள் என்று சங்க கால வேளாண்மையின் சிறப்பை உலகிற்குப் பறைசாற்றியுள்ளார் திருவள்ளுவர்.
இத்தகைய சிறப்புமிக்க வேளாண்மை வாழ்வாதாரம் சார்ந்ததாக மட்டுமில்லாது, மிகச்சிறந்த அறிவியல் மற்றும் மேலாண்மை கோட்பாடுகளைக் கொண்ட துறையாகவும் அக்காலத்தில் விளங்கியது. இன்றைய பெருநிறுவன உலகில் பேசப்படும் மேலாண்மை என்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, தமிழர்களால் அவர்களது முதன்மைத் தொழிலான வேளாண்மையில் கையாளப்பட்டுள்ளது. இன்றைய தொழில் மேலாண்மைக்கு முன்னோடியாக அன்றைய விவசாயத் தொழில் மேலாண்மை விளங்கியுள்ளது.
சங்க காலத்தில் வேளாண்மை சமூகத்தின் முதன்மைத் தொழிலாக இருந்தது. உழவர்கள் சமூகத்தில் மிக உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றிருந்தனர். அன்றைய விவசாயத் தொழில் மேலாண்மை என்பது நிலத்தைத் தயார்படுத்துதல், நீர் மேலாண்மை, விதைத் தேர்வு, பூச்சி மற்றும் விலங்கு பாதுகாப்பு என அறிவியல்பூர்வமான பல செயல்முறைகளை உள்ளடக்கியிருந்தது.
நிலத்தைத் தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, விளைச்சலைச் சேமிப்பது வரை அவர்கள் கையாண்ட மேலாண்மை முறைகள் இன்றைய நவீன வேளாண்மைக்கே வியப்பூட்டுபவையாக இருக்கின்றன. சங்க இலக்கியங்களான புறநானூறு, அகநானூறு, கலித்தொகை, பெரும்பாணாற்றுப்படை ஆகியவற்றில் விவசாய மேலாண்மை முறைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன.
சங்க காலத்தில் வேளாண்மையைப் படிநிலைகளாகக் கடைப்பிடித்துள்ளனர்.
முதல் படிநிலை : பயிர் தேர்வு
சங்க கால வேளாண்மையில் நிலத்தை ஆராய்ந்து அதற்கேற்ற பயிரைத் தேர்வு செய்வதை முதல் படிநிலையாக வைத்திருந்தனர். ஒரே வகையான நிலத்தில் அனைத்துப் பயிர்களையும் பயிரிடாமல், நிலத்தின் தன்மைக்கு ஏற்ற பயிர்களைத் தேர்ந்தெடுக்கும் மேலாண்மை அன்றே இருந்திருக்கிறது. மக்களின் வாழ்க்கை முறை, அங்கு நிலவும் சூழல், மற்றும் தொழில்களின் அடிப்படையில் நிலப்பரப்பு என்பது குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என ஐந்திணைகளாக அதாவது ஐவகை நிலங்களாகப் பிரிக்கப்பட்டன.
வயலும் வயல் சார்ந்த இடமும் மருத நிலமாகும். நீர்வளம் மிக்க இப்பகுதியில் முதன்மைப் பயிராகச் செந்நெல், வெண்ணெல் போன்ற நெல் வகைகள் மற்றும் கரும்பு பயிரிடப்பட்டன. செந்நெல் என்பது சிவப்பு நிறத்தில் வளரக்கூடிய பாரம்பரிய நெல் வகையாகும். இந்நெல் மிக நீண்டு வளரக்கூடிய அமைப்பினைக் கொண்டது. இந்நெல்லினைச் சுற்றி வேலி போல் வளரும் கரும்பினை யானை ஒடித்து உண்டாலும் தெரியாத அளவிற்கு மிக அதிக உயரம் வளரக்கூடியது எனச் சீவக சிந்தாமணியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘செந்நெல் அமலை வெண்மை வெள்இழுது’ – சங்க கால மக்கள் மிக வெண்மையான வெண்ணெய்யோடு செந்நெல் சோற்று உருண்டை செய்து (அமலை என்றால் உருண்டை. இழுது என்றால் வெண்ணெய்) உண்டதைக் குறுந்தொகை பாடல் குறிப்பிடுகிறது.
குளத்துப் பாசனத்தில் விளையக்கூடிய, வெண்மையான அரிசியைத் தரக்கூடிய நெல் வகை வெண்ணெல் ஆகும். வெண்ணெல் அரிசியால் செய்யப்பட்ட வெண்சோறு, சங்கக் காலத்தில் மிகவும் உயர்ந்த மற்றும் போற்றப்படும் உணவாகக் கருதப்பட்டது. ‘முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு’ என இதன் சிறப்பைக் குறுந்தொகைப் பாடல் விவரிக்கிறது.
காடும் காடு சார்ந்த இடமும் முல்லை நிலம் ஆகும். செம்மண் பரந்திருப்பதால் ’செம்புலம்’ என்றும் முல்லை நிலம் அழைக்கப்படுகிறது. மானாவாரி நிலங்களான அதாவது மழையை நம்பி இருக்கின்ற நிலங்களான முல்லை நிலத்தில் வரகு, சாமை போன்ற சிறுதானியங்கள் பயிரிடப்பட்டன. செயற்கை நீர்ப் பாசனம் இல்லாமல், இயற்கையான மழை நீரை மட்டுமே நம்பிப் பயிரிடப்படும் பயிர்கள் மானாவாரி பயிர்கள் எனப்படுகின்றன. தமிழ்நாட்டின் புவியியல் சூழலில், குறிப்பாகச் செம்மண் மற்றும் கரிசல் மண் பகுதிகளில் இப்பயிர்கள் பெருமளவில் விளைவிக்கப்படுகின்றன. இவை மழைக்காலத்தின் ஈரப்பதத்தை மட்டுமே பயன்படுத்திக் குறுகிய காலத்தில் வளரக்கூடியவை. அதனால் முல்லை நிலத்தின் முதன்மைப் பயிர்களாக வரகு மற்றும் சாமை போன்றவை பயிரிடப்பட்டன.
மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி நிலம் ஆகும். சரிவான மலைப்பகுதிகளில் ஐவன நெல், தினை, ஏலக்காய், மிளகு போன்றவை பயிரிடப்பட்டன. ஐவன நெல் என்பது மலைப் பகுதிகளில், மனிதர்களின் நீர்ப் பாசனம் இன்றி, முழுக்க முழுக்க மழைநீரையே நம்பி, வானம் பார்த்த பயிராக விளையும் மலைநெல் வகை ஆகும். இது புன்செய் நிலப் பயிராகக் கருதப்படுகிறது.
கடலும் கடல் சார்ந்த பகுதியான நெய்தலில் மீன்பிடித்தல் மற்றும் உப்பு தயாரித்தல் முதன்மை தொழிலாக இருந்தாலும், நமது முன்னோர்கள் பழனம் என்ற தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தி நெல்லையும் மீனையும் ஒரே இடத்தில் சாகுபடி செய்துள்ளனர். மீனும் நெல்லும் ஒரே இடத்தில் சாகுபடி செய்யப்படும் வயலுக்குப் பழனம் என்று பெயர். கடற்கரை ஓரங்களில் உள்ள உப்பளங்கள் அல்லாத நன்னீர் கலக்கும் சதுப்பு நிலப் பகுதிகளில் நீர் தேங்க வைக்கப்பட்டது. இந்நீரில் உப்பைத் தாங்கி வளரக்கூடிய பாரம்பரிய நெல் வகைகளை விதைத்து, அதனுடன் மீன்களையும் வளர்த்துள்ளனர். மீன்களின் கழிவுகள் நெற்பயிருக்குத் தேவையான இயற்கை உரமாக மாறின.
ஐவகை நிலங்களில் பாலை நிலம் பாழ் நிலமாக, அதாவது மணலும் மணல் சார்ந்த நிலமுமாக இருந்ததால் அந்நிலத்தில் முறையான வேளாண்மை செய்யப்படுவதில்லை. இது வறண்ட மற்றும் வெப்பமான நிலப்பகுதியாகும். குறிஞ்சியும் முல்லையும் வேனிலின் வெம்மையால் நல்ல தன்மைகளை இழந்து, பாலை நிலமாக மாறும் என்று பாலை நிலத்தின் இயல்பை சிலப்பதிகாரம் கூறுகின்றது.
‘முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்’ என்ற சிலப்பதிகார அடிகள் விளக்குகின்றன.
இவ்வாறாக ஐவகை நிலங்களையும் ஆராய்ந்து, நிலத்திற்கேற்ற பயிரைத் தேர்வு செய்த பிறகு, உழவுக்கு ஏற்றவாறு அந்நிலத்தைத் தயார்படுத்துதலை வேளாண்மையின் இரண்டாம் படிநிலையாகக் கொண்டிருந்தனர்.
இரண்டாம் படிநிலை : நிலத்தைத் தயார்படுத்துதல்
விதைப்பதற்குமுன் மண்ணைப் பக்குவப்படுத்துவது பயிரின் வேரோட்டத்திற்கு முக்கியம் என்பதை உழவர்கள் அறிந்திருந்தனர். மண்ணைக் கட்டிகளின்றி, ஆழமாக உழுது தூளாக்கினர். மண்ணை நன்றாகக் காயவிட்டு உழுதால் உரம் கூடத் தேவையில்லை என்ற நுட்பத்தைச் சங்க கால மக்கள் அறிந்திருந்தனர்.
திருவள்ளுவர் வேளாண்மை அதிகாரத்தில் 1037ஆம் குறளில் இதனை விளக்கியுள்ளார்.
‘தொடிப்புழுதி கஃசா வுணக்கிற் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.’
தொடி என்றால் ஒரு பலம். கஃசா என்றால் கால் பலம். உணக்குதல் என்றால் உழக்குதல். அதாவது, கலக்குதல், சிதிலமாக்குதல், மிதித்தல் என்று பொருள். காய்ந்த நிலத்தில், ஒரு பலம் மண், காற்பலம் (¼) அளவாகும் வரை உழுதால், அந்த நிலத்தில் ஒரு பிடி அளவு எருக்கூடத் தேவையில்லாமல், பயிர் செழுப்பாய் விளையும் என்கிறார் வள்ளுவர். நிலத்தை நன்றாகப் பொடியாக்கி சூரிய ஒளியில் காயவிடுவதே சிறந்த உரம் என்பது இதன் அறிவியல் மற்றும் விவசாயக் கருத்தாகும்.
நிலத்தைக் கட்டியில்லாமல் புழுதியாகும் வரை பலமுறை ஆழமாக உழ வேண்டும் என்கிற இதே வேளாண்மைத் தொழில்நுட்பத்தைச் சங்க இலக்கியங்கள் பலவாறாகப் பாடுகின்றன.
‘கார்ப்பெயற் கலித்த பெரும்பாட்டு ஈரத்தும்பூமி மயங்கப் பல உழுது வித்தி’
என்கிற புறநானூற்றின் 120ஆம் பாடலில், ‘கார்காலத்து மழையீரத்தில், பூமியில் மண் தன் நிலை மாறிப் புழுதியாகும்படி பலமுறை சால் உழுது விதைத்தனர்’ என்கிறார் புலவர் கபிலர். சால் உழுது என்பது வயலில் ஏர் கொண்டு உழுவதைக் குறிக்கும் சொல்லாகும்.
நிலத்தைப் பலமுறை உழுது செம்மைப்படுத்தும் உழவர்களைச் சங்க இலக்கியம் செஞ்சால் உழவர் என்று போற்றுகிறது.
‘குடிநிறை வல்சிச் செஞ்சால் உழவர்
நடைநவில் பெரும்பகடு புதவில் பூட்டி
பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில்
உடுப்பு முக முழுக் கொழு மூழ்க ஊன்றி’
தம்முடைய குடும்பத்தினருக்குத் தேவையான உணவு எப்போதும் குறையாமல் நிறைந்திருக்கும்படியாக, செம்மையான முறையில் உழவுத் தொழிலைச் செய்யும் உழவர்கள், உழவுத் தொழிலுக்குத் தேவையான சீரான நடையைக் கற்றுத் தேர்ந்த, வலிமைமிக்க பெரிய எருதுகளை ஏர்க் கலப்பையின் நுகத்தடியில் ஒன்றாகப் பூட்டினர். பெண் யானையின் வாயைப் போன்று மடிந்து அகன்று இருக்கிற பெரிய கலப்பையான நாஞ்சில் ஏர்க்கலப்பையின் கொழுவானது, உடும்பின் முகத்தைப்போலக் கூர்மையாக இருக்கும். அந்த ஏரின் கொழு முழுவதுமாக மண்ணுக்குள் புதையுமாறு அழுத்தி, ஆழமாக உழவு செய்தனர் என்று கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய ‘பெரும்பாணாற்றுப்படை நூலில்’ இடம்பெற்றுள்ள இந்த வரிகள், மருத நிலத்தில் பயன்படுத்தப்பட்ட உழவு முறையையும் உழவர்களின் உழைப்புத் திறனையும் விவரிக்கின்றன.
மூன்றாம் படிநிலை : விதைநெல்
தரமான விதைகளே தரமான மகசூலைத் தரும் என்று அறிந்திருந்த சங்க காலத்தினர், விதை மேலாண்மையை மூன்றாம் படிநிலையாகக் கடைப்பிடித்தனர். முதிர்ந்த, பூச்சிகளற்ற ஆரோக்கியமான கதிர்களிலிருந்து விதைகள் தனியாகச் சேகரித்து வைக்கப்பட்டன. இவற்றை விதைக்குற்று அல்லது விதைநெல் என்று பாதுகாத்தனர். சங்க காலத்தில் வறுமை வந்த காலத்திலும் விதைநெல்லை உண்ணக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர் என்று புறநானூற்றுப் பாடல் கூறுகிறது.
‘வாழ்தலின் வரூஉம் வயல் வளன் அறியான்,
வீழ் குடி உழவன் வித்து உண்டாஅங்கு,
ஒருவன் ஆர் உயிர் உண்ணாய் ஆயின்,
நேரார் பல் உயிர் பருகி,
ஆர்குவை மன்னோ, அவன் அமர் அடு களத்தே.’
விதைத்து உண்டு வாழும் வழியறியாத அறியாமை மிக்க உழவன், தான் உண்பதற்குக் கதியில்லாமல் விதைக்க வைத்திருந்த நெல்மணியை உண்பதைப் போன்றது எழினியின் உயிரை நீ (கூற்றுவன்) உண்ட செயல் என்கிறது இப்பாடல். விதை நெல்லை அழிக்கும் உழவனின் அறியாமையை, அதியமான் போன்ற மாவீரனின் உயிரை எடுக்கும் கூற்றுவனின் செயலுக்கு ஒப்பிட்டுப் பாடியிருக்கிறார் அரிசில் கிழார்.
ஆரோக்கியமான கதிர்களிலிருந்து விதைகளைத் தனியாகச் சேகரித்து வைத்தபின் அந்த நெல்லை நேரடியாக விதைக்காமல், தனியாகப் பாத்தி கட்டி நாற்று வளர்த்து, பின் அதை உழத்தியர்கள் வரிசையாக நட்டனர். இதற்கு ‘நாற்றுமுடி நாறல்’ என்று பெயர்.
நான்காம் படிநிலை : நீரைப் பாய்ச்சுதல்
பயிர்களுக்குத் தேவையான நேரத்தில் நீர் பாய்ச்சுவதும், தேவையில்லாத தாவரங்களை நீக்குவதும் நான்காம் படிநிலையாகக் கூறப்பட்டாலும் அதுவே முதன்மைப் பணிகளாக இருந்தன. ஆற்று நீரையும், ஏரி நீரையும் மதகுகள் மூலம் திறந்துவிட்டு, பயிர்களுக்குச் சீராக நீர் பாய்ச்சினர். தேங்கிய நீரைக் கழிக்க வடிகால் அமைப்புகளும் இருந்தன. பயிர்களின் சத்துகளைப் பாழாக்கும் தேவையற்ற புற்களையும் களைகளையும் உழத்தியர்கள் கைகளால் அல்லது சிறிய கருவிகள் கொண்டு நீக்கினர். இதற்கு ‘களைகட்டல்’ என்று பெயர்.
ஐந்தாம் படிநிலை : இயற்கை உரம்
ஐந்தாம் படிநிலையாக இயற்கை உரம் மற்றும் பூச்சி மேலாண்மையைக் கடைப்பிடித்தனர். சங்க காலத்தில் வேதிப்பொருள்கள் இல்லாத தூய இயற்கை வேளாண்மையே நடைபெற்றது. ஆடு, மாடுகளின் சாணம், சாம்பல் மற்றும் எருக்கஞ்செடி போன்ற தழைச் சத்துகள் நிறைந்த தாவரங்களை நிலத்தில் இட்டு மண்ணின் வளத்தை மேம்படுத்தினர். பயிர் சுழற்சி முறையையும் அவர்கள் அறிந்திருந்தனர்.
பறவைகள், காட்டுப் பன்றிகள், கிளிகள் போன்றவற்றிடமிருந்து பயிரைக் காக்க வயல்களின் நடுவே பரண் அமைத்துக் காவல் காத்தனர். பெண்கள் தட்டை மற்றும் குளிரோ போன்ற கருவிகளை ஒலியெழுப்பிப் பறவைகளை விரட்டினர்.
ஆறாம் படிநிலை : அறுவடை
ஆறாம் படிநிலையாக அறுவடை மற்றும் சேமிப்பு மேலாண்மையைக் கடைப்பிடித்தனர். விளைந்த பயிர்களைச் சேதமின்றி அறுவடை செய்து, நீண்ட நாட்களுக்குப் பாதுகாப்பது இறுதி மேலாண்மை படியாகும். கதிர் முற்றியவுடன் அரிவாள் கொண்டு அறுவடை செய்து, அவற்றைப் பிணைகளாகக் கட்டி களத்திற்கு எடுத்துச் சென்றனர். நெற்கதிர்களை மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்து (போரடித்தல்) நெல் மணிகளைத் தனியாகப் பிரித்தனர். பிரித்தெடுத்த நெல் மணிகளை நன்கு உலர்த்தி, ஈரப்பதம் நீக்கி, பெரிய மண்பாண்டங்களான குதிர்கள் அல்லது செங்கற்களால் கட்டப்பட்ட நெற்களஞ்சியங்களில் சேமித்து வைத்தனர். இது பஞ்சம் வரும் காலங்களில் மக்களுக்குப் பயன்படுத்தப்பட்டது.
இப்படிப் படிநிலையாகக் கடைப்பிடிக்கப்பட்ட சங்க கால விவசாய மேலாண்மை என்பது இயற்கையைச் சுரண்டாமல், அதன் சுழற்சியைப் புரிந்துகொண்டு செய்யப்பட்ட ஒரு நிலையான வேளாண்மை ஆகும். நீர்ச் சிக்கனம், தரமான விதைத் தேர்வு, இயற்கை உரம் போன்ற அன்றைய நடைமுறைகள்தான், இன்றைய இயற்கை விவசாயத்திற்கு முன்னோடியாகும்.
நவீன மேலாண்மையில் ஒரு திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பு சந்தை நிலவரம், தரவுகள் மற்றும் எதிர்காலத் தேவைகள் ஆகியவற்றைக் கவனத்தில்கொண்டு திட்டமிடுவது மிக முக்கியம். அன்று சங்க கால வேளாண்மையில் செயற்கைக்கோள் தரவுகள் இல்லை, ஆனால் இயற்கை அறிகுறிகளை வைத்துத் துல்லியமாகத் திட்டமிட்டனர். கார்த்திகை நட்சத்திரத்தில் மழை பெய்யும், மாரி காலத்தில் விதைக்க வேண்டும் போன்ற கால மேலாண்மையை அவர்கள் அணுவணுவாக அறிந்திருந்தனர். ‘ஆடிப் பட்டம் தேடி விதை’ என்பது பிற்காலப் பழமொழி என்றாலும், அதன் வேர் சங்க காலத்திலேயே இருந்தது.
ஒரு நிறுவனத்தின் வெற்றி, ஊழியர்களை எப்படி நடத்துகிறோம் மற்றும் வேலைகளை எப்படிப் பிரிக்கிறோம் என்பதில் உள்ளது. சங்க கால வேளாண்மையில் உழவர்கள், உழத்தியர்கள், களமர்கள் என உழவுத் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கிடையே தெளிவான வேலைப்பகிர்வு இருந்தது.
சங்க காலத்தில் உழவுத்தொழில் செய்வோர் சமூகத்தின் அச்சாணி என்று மதிக்கப்பட்டனர்.
‘சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை’
உழவுத் தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை எண்ணி, பல்வேறு தொழிலுக்குச் சென்றாலும் உலகம் ஏரின் பின்தான் இயங்குகிறது. அதனால் எத்தனை வருத்தம் இருந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானது என்று திருவள்ளுவர் 1031ஆம் குறளில் கூறியுள்ளார். சுருக்கமாகக் கூறின், சங்க காலத்தில் மண்ணையும் மனிதனையும் அடிப்படையாகக் கொண்டு மேலாண்மை இயங்கியது. இன்று தரவுகளையும் தொழில்நுட்பத்தையும் அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. வடிவமும் கருவிகளும் மாறியிருக்கலாமே தவிர, அன்றைய வேளாண்மையில் பயன்படுத்தப்பட்ட திட்டமிடல், உழைப்புப் பகிர்வு, சேமிப்பு போன்ற அடிப்படை மேலாண்மைத் தத்துவங்கள்தான் இன்றைய நவீனப் பெருநிறுவன மேலாண்மைக்கும் அஸ்திவாரமாக விளங்குகின்றன.
அன்று இயற்கையோடு இயைந்து நிர்வகித்தோம், இன்று தொழில்நுட்பத்தின் துணையோடு நிர்வகிக்கிறோம்.
(தொடரும்)

