Skip to content
Home » சங்க இலக்கியம் #13 – நாளங்காடி அல்லங்காடி

சங்க இலக்கியம் #13 – நாளங்காடி அல்லங்காடி

காடுகளை அழித்து நாடாக்கி, அரசாட்சியை நிலைநிறுத்திய தமிழர்களின் அடுத்த ஆகச்சிறந்த பரிணாம வளர்ச்சி வணிக மேலாண்மை. தங்களின் தேவைக்கும் அதிகமாக உணவு உற்பத்தி பெருகியபோது, பண்டமாற்று முறை உருவானது. அதுவே பின்னாளில் முறையான சந்தைகளாகவும் கடல் கடந்த பன்னாட்டு வணிக மேலாண்மையாகவும் கிளைத்து வளர்ந்தது.

பொருள்களை உற்பத்தி செய்து, அவற்றை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் அல்லது பரிமாற்றம் செய்யும் எந்தவொரு பொருளாதார நடவடிக்கையும் வணிகம் எனப்படும். ஒரு நாடு செழிப்புடன் விளங்க, உழவும் வணிகமும் செழிப்புற்று இருக்க வேண்டும். அவ்வாறு இருந்ததால்தான் சங்க காலத்தைப் பொற்காலம் எனச் சங்க இலக்கியங்கள் போற்றுகின்றன.

இனக்குழுச் சமூகமாக மனிதர்கள் வாழத் தொடங்கியபோது காலத்திற்கும் நாகரிக வளர்ச்சிக்கும் ஏற்றவாறு அவர்களின் தேவைகளும் மாறத் தொடங்கின. மனிதர்களின் செயல்பாடுகள் ஒரு குடும்பத்தை அல்லது குழுவைச் சார்ந்ததாக இருந்தபொழுது அவர்களுக்கான தேவைகள் குறைவாக இருந்தன. எப்பொழுது பிற குழுக்களுடன் போராடி தமது பலத்தை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை உருவானதோ அப்பொழுது அரசாங்கம் உருவாக்கப்பட்டு, அவர்களது நடவடிக்கைகளும் விரிவடைய ஆரம்பித்தன. இதன் காரணமாகப் பொருள்களை வாங்கவும் கொடுக்கவும் தேவை ஏற்பட்டபோது பண்டமாற்று முறையை உருவாக்கிப் பயன்படுத்தினர்.

தங்கள் பகுதிகளில் உற்பத்தி செய்யும் பொருள்களில் தேவைக்குப் போக மிஞ்சியிருப்பதைப் பிற பகுதியில் உற்பத்தியாகும் பொருள்களுடன் பண்டமாற்று செய்தனர். இவ்வாறாகச் சில பகுதிகளில் சிறிது சிறிதாக நடைபெற்ற பண்டமாற்றம், மக்கள் பெருக்கம் காரணமாக வணிகப் பொருள்களுக்கு ஏற்பட்ட தேவையாலும், உபரி உற்பத்தியாலும் பெருமளவில் நடைபெறத் தொடங்கியது. இவற்றின் வளர்ச்சி பண்டமாற்று வணிகமாகப் பரிணமித்தது. அதுவே பின்னர் நாணயமுறை வணிகமாக வளர்ச்சியடைந்தது.

சங்க காலத்தவர்களின் வணிகத் திறன்களில் துறைமுகங்களின் அமைப்பு, கப்பல் போக்குவரத்து அறிவு, சந்தை மேலாண்மை, வணிகக் குழுக்களின் ஒருங்கிணைப்பு, பொருள்களைத் தரம் பிரித்தல், விலை நிர்ணயம் மற்றும் வணிக நெறிமுறைகள் ஆகியவை அடங்கும்.

‘கொள்வதூஉம் மிகைகொளாது கொடுப்பதூஉம் குறைகொடாது’

பட்டினப்பாலை நூலில் இடம்பெற்றுள்ள இவ்வரிகள் பண்டைய காலத் தமிழ் வணிகர்களின் நேர்மையான வணிக முறைமையையும் நடுநிலைமையையும் குறிக்கின்றன.

கொள்வதூஉம் மிகைகொளாது என்றால் பிறரிடம் ஒரு பொருளை வாங்கும்போது, அதன் உண்மையான அளவுக்கு அதிகமாகவோ, தகுதிக்கு மீறியோ வாங்க மாட்டார்கள். கொடுப்பதூஉம் குறைகொடாது என்றால் அந்தப் பொருளை மற்றவர்களுக்கு விற்கும்போது, சிறிதும் குறையாமல், நேர்மையான அளவைக் கொடுப்பார்கள்.

பிறர் பொருளையும் தம் பொருளையும் சமமாக மதித்து, லாபத்திற்காக ஏமாற்றாமல் நடுநிலையான அளவில் பழந்தமிழர்கள் வர்த்தகம் செய்திருந்தனர் என்று இவ்வரிகள் இயம்புகின்றன. காவிரிப்பூம்பட்டினத்தின் வணிகர்கள் எவ்வாறு நேர்மையாக வியாபாரம் செய்தனர் என்பதை விளக்கும்போது, புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய கணினிமயமாக்கப்பட்ட உலகத்தில், படித்து முடித்துவிட்டு வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை செய்வதும், டாலரிலும் யூரோவிலும் பணம் ஈட்டுவதும் பெருமையாகவும், வாழ்வின் லட்சியமாகவும் கருதப்படுகின்றன. ஆனால் உலகமயமாதல் குறித்தும் பொருளாதாரத்திற்காகப் புலம்பெயர்தல் குறித்தும் தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்துள்ளனர். இதனை ஔவையாரின் கொன்றை வேந்தன் நூலில் இடம்பெற்றிருக்கும் ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்ற வாக்கியத்தின்மூலம் அறியலாம்.

பண்டைத் தமிழ் மக்கள் உலகின் தலைசிறந்த கடலோடிகளாக விளங்கி, கடல் கடந்து வணிகம் செய்து பெரும் செல்வத்தையும் புகழையும் ஈட்டியுள்ளனர் என்பதை இவ்வரி உணர்த்துகிறது. மேலும் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு, அலை வீசும் கடலைக் கடந்து வெளிநாடுகளுக்குச் சென்றாவது விடாமுயற்சியுடன் உழைத்து செல்வத்தைத் தேடவேண்டும் என்று அனைத்துக் காலத்திற்குமான ஆழமான கருத்தையும் இவ்வரி உணர்த்துகிறது.

சங்க காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் அயல்நாட்டினரோடு கொண்டிருந்த தொடர்பைப் பட்டினப்பாலை என்னும் பத்துப்பாட்டு இலக்கியம் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.

‘பல் ஆயமொடு பதிபழகி
வேறு வேறு உணர்ந்த முதுவாய் ஒக்கல்
சாறுஅயர் மூதூர் சென்றுதொக்கு ஆங்கு
மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும்
முட்டாச் சிறப்பின் பட்டினம்’

ஆயம் என்றால் நண்பர்கள், கூட்டம் என்பது பொருள். பல் ஆயமொடு என்றால் பல வகையான சுற்றத்தாருடன் அல்லது கூட்டத்தினருடன், தாம் சென்ற புதிய ஊரைப் பழக்கிக்கொண்டு, வெவ்வேறு குடியில் பிறந்த உயர்ந்த, அறிவு முதிர்ந்த சுற்றத்தாரை உடைய, திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்ற பழமையான அந்த ஊரில் ஒன்று திரண்டதுபோல், பல வகையான மொழிகள் பேசப்படுகின்ற பழி இல்லாத நல்லநாடுகளிலிருந்து தம் நாட்டைவிட்டுப் பெயர்ந்து வந்த வெளிநாட்டு மக்கள், உள்ளத்தால் கலந்து இன்பமாக வாழ்கின்ற குறைவில்லாத சிறப்புகளை உடையது காவிரிப்பூம்பட்டினம் என்பது இப்பாடலின் பொருளாகும்.

பிற நாட்டிலிருந்து பலமொழிகள் பேசக் கூடியவர்களும் தமிழகத்திற்கு வந்து இங்குள்ளவர்களிடம் ஒன்றாகக் கலந்து, இனிதாக வாழும் நகரமாகக் காவிரிப்பூம்பட்டினம் விளங்கியிருக்கின்றது என்பதை இப்பாடல் மூலம் அறிய முடிகிறது. பிறநாட்டிலிருந்து வந்து தமிழகத்தில் வாழ்ந்தவர்களைச் சங்க இலக்கியம் யவனர்கள் என்றும் மிலேச்சர்கள் என்றும் குறிப்பிடுகின்றது. இதனை முல்லைப்பாட்டு என்கிற இலக்கியம் எடுத்துக்காட்டுகின்றது.

இந்தியா வந்து வணிகம் செய்த கிரேக்கர்களில் சிலர் தமிழ் அரசர்களிடம் நன்றியுணர்வு மிக்கவராய் விளங்கினர். அவர்களைத் தமிழ் அரசர்கள் தம் மெய்க்காப்பாளராக அமர்த்திக்கொண்டனர். தூய தமிழ் மொழி புரியாத, திருத்தமான உச்சரிப்பு இல்லாத அவர்களின் இயல்பை முல்லைப் பாட்டு நூலில் நப்பூதனார் அவர்கள், ‘உடம்பின் உரைக்கும் உரையா நாவின் படம் புகு மிலேச்சர்’ என்று குறிப்பிடுகின்றார்.

தமிழ்மொழி தெரியாதவர்களாகவும் பிறமொழி பேசுபவர்களாகவும் இருந்ததால், அவர்கள் வாயால் பேச முடியாதவர்கள்போல் இருந்தனர். எனவே, அவர்கள் தமது எண்ணங்களை உடல் அசைவுகள் மூலமாகவே வெளிப்படுத்தினர். அதனை நாவால் உரைக்காமல் உடம்பால் உரைக்கும் என்று கூறுகிறார். படம் என்பதற்குச் சட்டை அல்லது கவசம் என்று பொருள். உடலை முழுமையாக மறைக்கும் மேல்சட்டை, ஆடை அணிந்திருந்த மிலேச்சர்கள், அரசிக்கு அருகில் காவலாக இருந்தனர் என்கிறது இப்பாடல்.

இந்த மிலேச்சர் என்கிற சொல் சங்க காலத்தில் மட்டுமல்லாது 20ஆம் நூற்றாண்டிலும் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. மகாகவி பாரதியார் அவர்கள் ‘பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி’ என்ற பாடலில், ‘வேத நூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர் பாதமும் பொறுப்பளோ பாரத தேவி!’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில், ஆங்கிலேயரின் அந்நிய ஆட்சியை எதிர்த்துப் பாடியபோது பாரதியார் இச்சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். இந்தியக் கலாசாரம் மற்றும் கொள்கைகளை மதிக்காத, அவற்றை இழிவுபடுத்தும், வெளிநாடுகளிலிருந்து வந்து நாட்டை அடிமைப்படுத்திய அந்நியர்களின் கொடுங்கோல் ஆட்சியைத் தாங்கிக்கொள்ள முடியாத பாரத மாதாவின் வேதனையை பாரதியார் இவ்வரிகளில் வெளிப்படுத்தியுள்ளார். ஆகையால் மிலேச்சர் என்ற சொல் பாரத நாட்டைச் சாராத அந்நியர்கள் அல்லது அந்நிய மொழியைப் பேசுபவர்களைக் குறிக்கும் சொல்லாக அனைத்துக் காலங்களிலும் புழக்கத்தில் இருந்திருப்பதைக் காண முடிகிறது.

சங்க காலத்தில் வணிகம் நடைபெற்ற இடங்கள், அங்காடி என்று அழைக்கப்பட்டன. மதுரைக் காஞ்சி போன்ற நூல்கள் அன்றைய வணிகச் சிறப்பை விவரிக்கின்றன. பகல் நேரத்தில் செயல்படும் சந்தைகள் நாளங்காடி என்று அழைக்கப்பட்டன. அல் என்பது ‘இல்லை’ அல்லது ‘அல்லாத’ எனும் எதிர்மறைப் பொருளைத் தரும் சொல்லாகக் குறிப்பிடப்பட்டாலும், அல் என்பதற்கு இரவு என்ற பொருளும் உண்டு. அல்லும் பகலும் என்ற சொற்றொடர் இரவையும் பகலையும் குறிப்பதுபோல் அல்லங்காடி என்ற சொல், இரவு நேரத்தில் செயல்படும் இரவுச் சந்தைகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டன.

மதுரை மாநகரின் பகல் நேர அங்காடி பற்றியும், அங்கு விற்கப்படும் பொருள்களின் மிகுதி பற்றியும் மதுரைக் காஞ்சி பின்வரும் வரிகளில் கூறுகிறது.

‘மழை கொளக் குறையாது, புனல் புக மிகாது,
கரை பொருது இரங்கும் முந்நீர் போலக்
கொளக் கொளக் குறையாது தரத் தர மிகாது,
கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி
ஆடு துவன்று விழவின் நாடு ஆர்த்தன்றே,
மாடம் பிறங்கிய மலி புகழ்க் கூடல்
நாள் அங்காடி நனந்தலைக் கம்பலை’

முகில்கள் நீரை எடுத்துக் கொண்டாலும் கடல் குறைவதில்லை. பல ஆறுகள் வந்து சேர்ந்தாலும் கடல் பொங்கி வழிவதில்லை. இதைப்போலவே, மதுரை நாளங்காடியில் மக்கள் எவ்வளவு பொருள்களை வாங்கிக்கொண்டு சென்றாலும் பொருள்களின் இருப்பு குறைவதில்லை. பல வியாபாரிகள் புதிய பொருள்களைக் கொண்டுவந்து விற்றாலும் கடைவீதி நிரம்பி வழிவதில்லை. இத்தகைய வளங்கள் நிறைந்த பகல் நேரத்து நாளங்காடியின் பரந்த இடங்களில் (நனந்தலை என்றால் அகன்ற இடத்தில்), வியாபாரிகளும் வாங்குபவர்களும் பேசும் பேச்சுகளால் எழும் ஓசையானது (கம்பலை என்றால் ஆரவாரம் அல்லது பெருங்கூட்டம்) கடல் ஒலிபோல எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்று மதுரை மாநகரின் நிலையான மற்றும் பிரமாண்டமான வணிகப் பெருக்கைக் குறிப்பிடுகிறது இப்பாடல்.

இரவு நேர அங்காடியான அல்லங்காடியைப் பற்றி சிலப்பதிகாரத்தின் மதுரைக்காண்டம் பகுதியில் இளங்கோவடிகள் அழகாக விவரித்துள்ளார்.

‘மன்னுயிர் ஊட்டும் மாலை வாரமும் துன்னுயிர் அவிர்சுடர்
துளங்கு இருள் அகற்றி அல்லங்காடி அழிவுஇன்று விளங்கும்’

உலகத்தில் நிலைபெற்றுள்ள அனைத்து உயிர்களுக்கும் இரவுக்கான உணவை அளிக்கும் மாலைக் காலம் வந்துவிட்டது. அந்த மாலை நேரத்தில், மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளில் ஏற்றி வைக்கப்படும் விளக்குகளின் பிரகாசமான ஒளியானது, அசைகின்ற இருளை விரட்டுகிறது. இருள் நீங்கி விளக்குகள் ஒளிரும் அந்த இரவு நேரத்திலும், மதுரையின் இரவுச் சந்தையான அல்லங்காடியானது மக்கள் கூட்டத்தோடும், வணிகச் சிறப்போடும் சுறுசுறுப்பு குறையாமல் அழிவின்றி விளங்கித் தோன்றுகிறது என்கிறது இப்பாடல்.

ஆவணம் அல்லது அங்காடி என்பது சில்லறை வணிகம் செய்யும் கடைத்தெரு ஆகும். பண்டகசாலை என்பது பண்டங்களைப் பத்திரமாகச் சேமித்து வைத்திருக்கும் இடம். இப்பொழுது கிடங்கு என்கிறோம். தமிழர்கள் கடல்வழியாக மரக்கலங்களைப் பயன்படுத்திப் பிற நாட்டினரோடு வணிகத்தில் ஈடுபட்டனர். கடலுக்கும் சங்க காலத்தமிழருக்குமான உறவு நெருக்கமானது. அதனால்தான் கடல் குறித்தும், மரக்கலம் குறித்தும் பல சொற்கள் வழங்கி வந்திருக்கின்றன.

கடலைக் குறிப்பிடுவதற்குப் பரவை, ஆழி, புணரி, ஆர்கலி, முந்நீர் போன்ற சொற்களும்; ஓடம், கலம், மரக்கலம், தோணி, மிதவை, கப்பல், நாவாய், மரம், திமில், அம்பி முதலிய மரக்கலத்தைப் பற்றிய சொற்களும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. நாட்டின் கரையோரங்களுக்குச் செல்வதற்கு ஓடங்களையும், அயல்நாட்டின் வணிகத்திற்கு நாவாய்களையும் பயன்படுத்தி உள்ளனர். வாய்நீரில் கிடக்கும் நாக்குபோல், நுனி குறுகி நீரில் ஓடும் கலத்தை நாவாய் என்று அழைத்தனர்.

வெளியிலிருந்து நகருக்குள் வரும் பொருள்களுக்கு வரி வாங்கும் வழக்கம் இருந்துள்ளது. உல்கு என்பது வரி. அதனையே பின்னாளில் சுங்கம் என வழங்கினர். அரசனுடைய ஆட்களே நடுநிலையிலிருந்து சுங்கம் வாங்குவார்கள். யாரும் அவர்களை ஏமாற்றிவிட முடியாது. இதனை பட்டினப்பாலையின் பாடல் வரிகள் குறிப்பிடுகின்றன.

‘மாகாவிரி மணம் கூட்டும்
தூஊ எக்காத் துயில் மடிந்து
வால் இணர் மடல் தாழை
நல்லிறைவன் பொருள் காக்கும்
தொல்லிசைத் தொழில் மாக்கள்
காய் சிதைத்த கதிர்ச் செல்வன்
தேர் பூண்ட மாசு போல
வைல் தோறும் அசைவின்றி’

சுங்கம் வசூலிப்பதில் அவர்கள் எப்படி உண்மையாக நடந்துகொண்டார்கள் என்பதை இப்பாடலின் பொருள் விளக்குகின்றது. பெரிய காவிரியாறு கொண்டுவந்து சேர்த்த நறுமணமுடைய மணல் மேட்டில் சுங்க அதிகாரிகள் நள்ளிரவில் உறங்கினாலும், வெள்ளிய கொத்துக்களையுடைய (தாழம்பூவின் நடுவில் காணப்படும் வெண்மையான மகரந்தக் கொத்துகளைக் குறிக்கிறது) மடல் தாழைகள் நிறைந்த சோழ மன்னனின் செல்வமாகிய பண்டங்களைக் காவல் காக்கும் பழமையான சுங்கக் காவல் தொழிலைச் செய்யும் அதிகாரிகள், வெப்பத்தை உமிழும் சூரியனின் தேரில் பூட்டப்பட்ட குதிரைகள் சோர்வடையாமல் ஓடுவதுபோல், பண்டகசாலைகள் நிறைந்த ஒவ்வொரு இடத்திலும் சிறிதும் சோர்வின்றி விழிப்போடு இருப்பார்கள். சுங்கம் வாங்குவோர் நள்ளிரவிலே காவிரியாற்று வெள்ளம் சூழ்ந்த மணல் மேட்டிலே உறங்கும்போதுகூட தங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாயிருப்பர். அரசனுடைய பண்டகசாலைத்தெருவில் குவிந்திருக்கும் அப்பண்டங்களைப் பிறர் கவராமல் பாதுகாப்பதிலே வல்லவர்களான அவர்கள் சளைக்காமல் வாங்க வேண்டிய சுங்கங்களை வாங்கிக்கொண்டே இருப்பார்கள் என்கிறார் புலவர்.

பண்டகசாலையின் சிறப்பைக் கூறிய புலவர் பண்டங்கள் எப்படிக் குவிகின்றன என்பதைப் பற்றியும் கூறுகிறார். அந்நிய நாடுகளிலிருந்து பல பண்டங்கள் கப்பல் வழியாக வந்து காவிரிப்பூம்பட்டினத்திலே இறக்குமதி செய்யப்படுகின்றன. பல பண்டங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வெளியே அனுப்புவதற்காகக் குவிந்து கிடக்கும் பண்ட மூட்டைகளின் மேல் சோழனுடைய புலி முத்திரையிடப்பட்டுக் கிடக்கின்றன. புலி முத்திரையிடப்பட்ட பண்டங்கள்தான் வெளியே போக முடியும். இது அவர்களின் வணிக மேலாண்மையைக் காட்டுகின்றது.

‘செல்கதில் நுழையாச் செழுநகர் வரைப்பின்
செல்லா நல்லிசை அமரர் காப்பின்
நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டு
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்’

பகைவர்கள் எளிதில் நுழைந்து தாக்க முடியாதபடி, செழிப்பான பெரிய மதில்களைக் கொண்ட நகரம் காவிரிப்பூம்பட்டினம். அழியாத புகழைக்கொண்ட காவல் தெய்வங்களால் காக்கப்படும் நகரம். கடலில் கப்பல்கள் வழியாகக் கொண்டுவரப்பட்ட தாவி ஓடும் குதிரைகள், தரைவழியாகக் காளை மாடுகளின் கால்களால் இழுத்துவரப்பட்ட கரிய மிளகு மூட்டைகள், வடக்கே உள்ள இமயமலையில் விளைந்த மாணிக்கம் போன்ற மணிகளும், பொன்னும், மேற்கே உள்ள பொதிகை அல்லது குடகு மலையில் விளைந்த சந்தன மரமும், அகில் மரமும், தெற்கே உள்ள கடலிலிருந்து எடுக்கப்பட்ட முத்துகளும், கிழக்கே கடலில் எடுக்கப்பட்ட பவளங்களும், கங்கை நதியிலிருந்து கொண்டுவரப்பட்ட பொருள்களும், காவிரியாற்றின் மூலம் விளைந்த நெல் முதலான விளைப்பொருள்களும், இலங்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட தானியங்களும், காழகத் தீவான பர்மா பகுதிகளிலிருந்து வந்த ஆடைகளும், இவ்வாறு பெறுவதற்கு அரியவையும், பெரிய அளவுடையவையுமான பொருள்கள் வியாபாரத்திற்காக வந்து குவிந்தன. இந்தச் செல்வங்கள் அனைத்தும் ஒன்று கலந்திருக்கும் அகன்ற பெரிய கடைத்தெருக்கள் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்தன என்கிறது இப்பாடல் வரிகள்.

வணிகம் சிறந்த புகார் நகரத்திலே சிறந்த வணிகர்கள் பலர் வாழ்ந்திருந்தனர்.

‘நெடு நுகத்துப் பகல் போல
நடுவு நின்ற நன்னெஞ்சினோர்
வடுவஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடி
கொள்வதூஉம் மிகை கொளாது
பல் பண்டம் பகர்ந்து வீசும்
தொல் கொண்டித் துவன்று இருக்கை‘

என்று கருத்தாழமிக்க வரிகளில் அவர்களின் சிறப்பைப் பாடியிருக்கிறார் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.

நீண்ட நுகத்தடியில் தைத்திருக்கும் நடு ஆணிபோல் நடுநிலைமையோடு வாழும் நல் நெஞ்சத்தை உடையவர்கள் சங்க கால வணிகர்கள். பழிக்கு அஞ்சி உண்மையே பேசுவார்கள். தம்முடைய பொருளையும் பிறருடைய பொருளையும் ஒரு தன்மையாகவே எண்ணுபவர்கள். பொருளை வாங்குவோரிடம் அளவுக்கு மேல் அதிகமாக வாங்கமாட்டார்கள். தாங்கள் கொடுக்கும் பண்டத்தையும் குறைத்துக் கொடுக்காமல் வணிகம் செய்பவர்கள் எனப் பட்டினப்பாலை கூறுவதிலிருந்து அக்கால வணிகர்களின் வணிக மேலாண்மையை அறிய முடிகின்றது.

சங்க காலப் புலவர்களில் சிலர் வணிகத்தைத் தொழிலாகக் கொண்டிருந்தனர் என்பதை அவர்களின் பெயர்களைக் கொண்டு அறியமுடிகிறது.

சான்றாக, கூல வணிகன் சீத்தலைச் சாத்தனார் என்ற பெயரின்மூலம் தானிய வகைகளின் வாணிபத்தையும், அறுவை வணிகன் இளவேட்டனார் என்னும் பெயரின் வாயிலாக ஆடை வாணிபத்தையும், மதுரை பண்ட வாணிகன் இளநத்தனார் என்ற பெயரிலிருந்து பலசரக்கு வாணிபத்தையும், மதுரைப்பெருங்கொல்லனார், உறையூர் இளம்பொன் வாணிகன் சாத்தங்கொற்றனார் முதலிய பெயர்களின் வழி அவர்கள் செய்த வாணிபத்தையும் அவர்களில் சிலர் பெரும் புலவர்களாகவும் இருந்தனர் என்பதையும் அறியமுடிகிறது.

இதன் மூலம் சங்க காலத்தில் உள்நாட்டு வணிகமும், அயல்நாட்டு வணிகமும் சிறப்புற்று விளங்கி இருந்ததை அறிகிறோம்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *