ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டையாடினான்
அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டைக் கட்டினான்
மற்றும் ஒருவன் மண்ணிலிருந்து பொன்னைத் தேடினான்
நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான்
இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தைத் தேடினான்
வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆளப் போகிறான்
மனிதனின் தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சி மற்றும் அறிவியல் முன்னேற்றம் குறித்துக் கவியரசர் கண்ணதாசன் மிக எளிமையாகப் புரியும் வகையில் எழுதியிருக்கும் பாடல் வரிகள் இவை. இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருப்பதுபோல் கல்லை ஆயுதமாகப் பயன்படுத்தி வேட்டையாடிய ஆதி மனிதன், படிப்படியாகக் காடுகளை அழித்து விவசாயம் செய்து நாடுகளையும் நாகரிகங்களையும் உருவாக்கினான். கல்லை ஆயுதமாகக் கொண்டு வேட்டையாடிய ஆதி மனிதன், அதன் பிறகு வெண்கலம் மற்றும் இரும்பு போன்ற உலோகக் கருவிகளைப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து, முன்னேறிய முற்போக்குச் சமூகமாக மாறிய வரலாற்றை, தொல்லியலாளர்கள் முக்காலங்களாகப் பிரித்துள்ளனர்.
மனித குலம் கடந்து வந்த வரலாற்றை, அவர்கள் பயன்படுத்திய பொருள்கள் மற்றும் எச்சங்கள் மூலம் அறியும் அறிவியலைத் தொல்லியல் என்கின்றனர். பழங்காலத்தில் மனிதர்கள் பயன்படுத்திய கருவிகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையில் கற்காலம், வெண்கலக் காலம் மற்றும் இரும்புக் காலம் என்கிற முக்காலப் பிரிவு முறை, தொல்லியல் துறையின் மூலமாக உலகிற்குக் கொண்டு வரப்பட்டது.
இந்த முக்காலப் பிரிவு முறையை முதன்முதலில் அறிவியல்பூர்வமாக அறிமுகப்படுத்தியவர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர் கிறிஸ்டியன் ஜர்கென்சன் தாம்சன் ஆவார். 1836ஆம் ஆண்டு வெளியிட்ட புத்தகத்தில் இந்த முக்காலப் பிரிவை முறையை அவர் விளக்கியுள்ளார். டென்மார்க்கின் தேசிய அருங்காட்சியகத்தில் இருந்த ஆயிரக்கணக்கான பழங்காலப் பொருள்களை எவ்விதக் காலவரிசையும் இன்றி மக்கள் குழப்பமாகப் பார்த்து வந்தனர். அப்பொருள்களைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்ற தாம்சன், அவற்றை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட பொருள்களின் (கல், வெண்கலம், இரும்பு) அடிப்படையில், அவை அனைத்தையும் தனித்தனியாகப் பிரித்து அடுக்கினார். இந்த எளிய வகைப்பாடு, மனித நாகரிகத்தின் அடுத்தடுத்த வரலாற்றுப் பரிணாமக் காலங்களைக் காண்பிக்கிறது என்பதைப் பிற்காலத் தொல்லியல் உலகம் ஏற்றுக்கொண்டது.
ஏறக்குறைய 260 கோடி ஆண்டுகளுக்கு முன் தொடங்கி கி.மு. 3300 வரையில் கற்காலம் என்கின்றனர். கற்கள், எலும்புகள் மற்றும் மரங்களைக் கொண்டு மனிதர்கள் கருவிகளைச் செய்த காலம் கற்காலம் ஆகும். இது பழைய கற்காலம், இடைக்கற்காலம் மற்றும் புதிய கற்காலம் எனப் பிரிக்கப்பட்டுள்ளது.
பழைய கற்காலம் என்பது சுமார் 20 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி, கி.மு. 10,000 வரையில் நீடித்த காலமாகும். அக்காலகட்டத்தில், மனிதர்கள் உணவைத் தேடி அலைந்து, விலங்குகளை வேட்டையாடி, இயற்கையான குகைகளில் வாழ்ந்தனர். அக்கால மனிதர்கள் நாடோடிகளாக வாழ்ந்து, காடுகளில் கிடைக்கும் பழங்கள், கிழங்குகளைச் சேகரித்தும், விலங்குகளை வேட்டையாடியும் தங்கள் உணவை உட்கொண்டனர். விலங்குகளை வெட்டவும், இறைச்சியைப் பிரிக்கவும், மரங்களை வெட்டவும், பெரிய மற்றும் கரடுமுரடான கற்களைச் செதுக்கி கருவிகளாகப் பயன்படுத்தினர். அக்காலத்தின் பிற்பகுதியில் மனிதர்கள் நெருப்பை உருவாக்கக் கற்றுக்கொண்டனர். இந்தக் கண்டுபிடிப்பு அவர்களைக் குளிரிலிருந்து பாதுகாக்கவும் உணவைச் சமைக்கவும் உதவியது. அக்கால மக்கள் பாறைகளிலும், குகைகளிலும் விலங்குகள் மற்றும் மனிதர்களின் ஓவியங்களை வரைந்தனர்.
இடைக்கற்காலம் என்பது மனித நாகரிக மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் பழைய கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலகட்டத்தைக் குறிக்கிறது. அக்காலம் தோராயமாகக் கி.மு. 10000 முதல் கி.மு. 6000 வரை நிலவியதாகக் கருதப்படுகிறது. அக்கால மக்கள் அளவில் சிறிய, கூர்மையான மற்றும் நுட்பமான கற்கருவிகளைப் பயன்படுத்தினர். இவை எலும்பு அல்லது மரக் கைப்பிடிகளில் பொருத்தப்பட்டு அம்புகள், ஈட்டிகளாகப் பயன்படுத்தப்பட்டன. மான், பன்றி, ஆடு போன்ற விலங்குகளை மக்கள் வேட்டையாடினர் மற்றும் மீன்பிடித்தலிலும் ஈடுபட்டனர்.
மனிதன் முதன்முதலில் நாயைப் பழக்கித் தன் வேட்டை துணையாகப் பயன்படுத்தத் தொடங்கியது அக்காலகட்டத்தில்தான். இறந்தவர்களின் உடல்களைப் புதைக்கும் சடங்கு முறைகள் அக்காலத்தில் பரவலாகத் தொடங்கின. தமிழகத்தில் இடைக்கற்காலம் குறித்த சான்றுகள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் தேரி மணற்குன்றுகள் பகுதியில் பெருமளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சென்னை, வடமதுரை, மற்றும் பல்லாவரம் போன்ற பகுதிகளிலும் அக்காலத்தைச் சேர்ந்த கருவிகள் கிடைத்துள்ளன.
புதிய கற்காலம் என்பது மனித நாகரிகத்தின் முக்கியத் திருப்புமுனைக் காலம் ஆகும். அக்காலத்தில் மனிதர்கள் வேட்டையாடும் நாடோடி வாழ்க்கையிலிருந்து, விவசாயம் செய்து ஓரிடத்தில் நிலையாக வாழும் முறைக்கு மாறினர். இப்புதிய கற்காலப் புரட்சி, சமூக மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் அடித்தளமாக அமைந்தது. மனிதர்கள் முதன்முதலில் உணவுக்காக நெல், கோதுமை போன்ற தாவரங்களைப் பயிரிடவும், அதற்காக விலங்குகளைப் பழக்கப்படுத்தவும் தொடங்கினர். உணவு உற்பத்தி காரணமாக, மக்கள் குகைகளை விட்டு வெளியேறி நதிக்கரைகளில் வீடுகளைக் கட்டி கிராமங்களாகக் குடியேறத் தொடங்கினர். கற்களைச் செப்பனிட்டு, வழவழப்பாக மெருகூட்டப்பட்ட கற்கோடரிகள் மற்றும் உளி போன்ற கூர்மையான கருவிகளைப் பயன்படுத்தினர். தானியங்களைச் சேமிக்கவும், சமைக்கவும் களிமண்ணால் செய்யப்பட்ட மட்பாண்டங்களைச் சுட்டுப் பயன்படுத்தத் தொடங்கினர். தமிழகத்தில் புதிய கற்காலம் சுமார் கி.மு. 3000 முதல் 1000 வரை நிலவியது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பையம்பள்ளி என்னும் இடத்தில் அக்காலத்தைச் சேர்ந்த தொல்பொருள்கள் மற்றும் சான்றுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பழைய கற்காலத்தில் மனிதர்கள் உணவிற்காக ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அலைந்து திரிந்தனர். புதிய கற்காலத்தில் விவசாயம் செய்யத் தொடங்கியதால், பயிர்களைப் பராமரிக்க ஒரே இடத்தில் நிரந்தரமாக வாழத் தொடங்கினர். இதுவே மனித நாகரிகத்தின் தொடக்கமாகும். பழைய கற்காலத்தின் கனமான கற்கள், இடைக்காலத்தில் சிறிய அம்புகளாக மாறி, புதிய கற்காலத்தில் மரக் கைப்பிடிகள் கொண்ட கோடாரிகளாகவும், அரிவாள்களாகவும் மாறின. மனிதன் இயற்கையாகக் கிடைத்த உணவை மட்டுமே உண்ட நிலை மாறி, புதிய கற்காலத்தில் தனக்குத் தேவையான உணவைத் தானே உற்பத்தி செய்யும் நிலையை அடைந்தான்.
முதன்முதலில் மண்ணால் செய்யப்பட்ட கலங்களைப் பயன்படுத்திய நம் மக்கள் பின்னர் மாழைகளைக் கண்டறிந்த பின், கலங்கள் செய்ய ஏதுவாகத் தேர்வானது வெண்கலம் ஆகும். (பேச்சு வழக்கில் பெரும்பாலும் வெங்கலம் எனச் சொல்லப்பட்டாலும், வெண்கலம் என்பதே சரியான சொல்). நிறத்தைக் குறிக்கும் பண்புப்பெயர்ச் சொல் வெண்மை. வெள்ளை, வெண்மை, வெள்ளி ஆகிய சொற்கள் வெண்மை நிறம் அல்லது ஒளியுடைய என்ற பொருள் தரும் வெள் எனும் அடிச்சொல்லிலிருந்து பிறந்தவை. வெண்நிற மாழைகளைக் கொண்டு செய்யப்பட்ட கலம் வெண்கலம். மாழை என்பது தாதுவைக் குறிக்கும் சொல்லாகும். இன்னும் சொல்லப்போனால் வெண்கலம் என்பது ‘வெண்கலச்செம்பு’ என்ற சொல்லின் சுருக்கமாகும். பிற்காலத்தில் செம்பு தவிர்க்கப்பட்டு, வெண்கலம் என்கிற சொல் நிலைத்துவிட்டது. வெண்கல மாழை என்பது பெருமளவில், சுமார் 85% செம்பு, 15% வெள்ளீயம் போன்றவையும், மிகச் சிறிய அளவில் துத்தநாகம், காரீயம் ஆகியவையும் கலந்து உருவானது.
5000 ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் வெண்கலத்தைக் கண்டறிந்து பயன்படுத்தியுள்ளனர். பாறைகளில் கலந்துள்ள செம்புத்தாதும், வெள்ளீயத் தாதும் இயற்கையான வெப்பம், அழுத்தம் காரணமாக ஒன்று சேர்ந்து வெண்கலம் ஆயிற்று. செம்பைவிட வெண்கலம் கடினமாக இருந்ததைக் கண்டு ஆயுதங்களும் கருவிகளும் செய்ய அதனைப் பயன்படுத்தினர். இவ்வாறு வெண்கலத்தைப் பயன்படுத்தத் தொடங்கிய காலமே வெண்கலக் காலம் எனப்பட்டது. கி.மு. 3300 முதல் கி.மு. 1200 வரை வெண்கலக் காலம் என்கின்றனர். கற்களுக்குப் பதிலாக உறுதியான கருவிகள், ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு, எழுத்து முறைகளும், முதல் நகரங்களும் அக்காலத்தில்தான் தோன்றின.
சங்க இலக்கியங்களான புறநானூறு, நற்றிணை, பெரும்பாணாற்றுப்படை ஆகிய நூல்களில் இரும்பு மற்றும் வெண்கலம் குறித்த தகவல்கள், அவற்றின் பயன்பாடு, கொல்லர்களின் உலைக்களத் தொழில்நுட்பம் போன்றவை மிக விரிவாகப் பாடப்பட்டுள்ளன.
கி.மு. 1200 முதல் கி.மு. 600 வரை இரும்புக் காலம் ஆகும். இரும்பை உருக்கும் தொழில்நுட்பத்தைக் கற்று, அதைவிட வலிமையான கருவிகளைப் பயன்படுத்திய காலம். சமூகத்தில் பெரும் மாற்றங்களையும், பேரரசுகளின் எழுச்சியையும் இது உருவாக்கியது. தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர், கீழடி போன்ற இடங்களில் இரும்புக் காலப் பண்பாட்டின் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த முக்காலப் பிரிவுகளுள் சங்க காலம் என்பது அடிப்படையில் தமிழகத்தின் இரும்புக் காலத்தின் பிற்பகுதி அல்லது முதிர்ந்த வரலாற்றுத் தொடக்கக் காலமாகும். பழைய கற்காலம் மற்றும் புதிய கற்காலம் ஆகியவை மனிதனின் தொடக்கக் காலமாகும். அக்கால மக்கள் வேட்டையாடியும், விலங்குகளை வளர்த்தும், பின்னர் விவசாயம் செய்தும் வாழ்ந்தனர். இவர்களின் தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சியே சங்க காலத்தின் மேம்பட்ட சமூகத்தை உருவாக்கியது. வரலாற்றுக்கு முந்தைய இந்த முக்காலங்களும் சங்க காலமும் பிரிக்க முடியாதபடி தொழில்நுட்பம், கலாசாரம் மற்றும் பொருளாதாரத்தில் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. ஆதிச்சநல்லூர் மற்றும் கொடுமணல் அகழ்வாராய்ச்சிகள், இரும்பு காலப் பண்பாடும், சங்க காலப் பண்பாடும் ஒன்றே என்பதை நிரூபிக்கின்றன.
சங்க காலம் என்பது கி.மு. 300 முதல் கி.பி. 300 வரையிலான (சில புதிய ஆய்வுகளின்படி கி.மு. 800 வரை) காலகட்டமாகும். சங்க இலக்கியங்களான புறநானூறு, அகநானூறு போன்றவற்றில் இரும்பு பற்றிய குறிப்புகளும், கொல்லர்களின் தொழிற்கூடங்கள் பற்றியும் ஏராளமான தகவல்களும் உள்ளன.
சங்க காலத்துத் தமிழர்கள் இரும்பை உருக்கி எஃகு செய்யும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை அறிந்திருந்தனர். இரும்புக் காலப் பெருங்கற்கால மக்களே பின்னர் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் கீழ் ஒருங்கிணைந்த சமூகமாகவும், விவசாயிகளாகவும், வணிகர்களாகவும் மாறி சங்க கால நாகரிகத்தை உருவாக்கினர். வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி, முற்கால மனிதனின் கற்கருவி மற்றும் உலோகக் கண்டுபிடிப்புகளின் தொடர்ச்சியான வளர்ச்சியே சங்க காலத்தின் பிரமாண்டமான நாகரிகமாகவும், வெளிநாட்டு வணிகமாகவும் பரிணமித்திருக்கிறது.
(தொடரும்)

