Skip to content
Home » சங்க இலக்கியம் #15 – கஞ்சகாரரும் செம்பு செய்குநரும்

சங்க இலக்கியம் #15 – கஞ்சகாரரும் செம்பு செய்குநரும்

சங்க காலத்தில் வேளாண்மை மற்றும் வணிகத்தைத் தவிர்த்து, மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றும் வகையிலும் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையிலும் பல தொழில்கள் சிறந்து விளங்கின. அவற்றுள் ஆடை நெசவு, உலோகத் தொழில், மண்பாண்டத் தொழில், முத்துக் குளித்தல், சங்கு அறுத்தல், மீன் பிடித்தல், கால்நடை வளர்ப்பு முதலியன முக்கியத் தொழில்களாக இருந்தன.

மனித நாகரிகத்தின் தொடக்கத்திலிருந்தே பல்வேறு பரிணாமங்களைச் சந்தித்து வளர்ந்துள்ள உலோகத் தொழில், சங்க காலத்தில் மிகவும் உன்னதமான நிலையை எட்டியிருந்தது. பழந்தமிழர்கள் இரும்பு, தங்கம், செம்பு, வெண்கலம், வெள்ளி போன்ற உலோகங்களை உருக்கி, பிரித்தெடுத்துப் பயன்படுத்துவதில் உலகிற்கே முன்னோடிகளாகத் திகழ்ந்தனர். மயிலாடும்பாறை, கொடுமணல், ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் நடந்த அகழ்வாய்வுகளும், தொல்காப்பியம், புறநானூறு போன்ற சங்க இலக்கியங்களும் இதற்கு அசைக்க முடியாத சான்றுகளாக உள்ளன.

தொல்காப்பியத்தில் உலோகங்கள் குறித்த நேரடியான தனி அறிவியல் குறிப்புகள் இல்லை என்றாலும், அக்கால மக்களின் உலோகப் பயன்பாட்டை உணர்த்தும் வகையில் பொன், வாள், வேல் போன்ற குறிப்புகள் காணப்படுகின்றன.

‘குடையும் வாளும் நாள்கோள் அன்றி மடையமை ஏணிமிசை மயக்கமுங் கடைஇச்’

மதிலை வளைத்துத் தாக்கும் மன்னன் குடைபிடித்துச் செல்லுதல், வாட்போர் நடத்துதல், நல்ல நாள் பார்த்தல் மற்றும் ஏணி மூலம் மதில் சுவரை ஏறித் தாக்கும் வீரர்கள் செய்யும் வீரச்செயல்கள் ஆகியவை உழிஞைப் போரின் முக்கிய நிகழ்வுகளாகத் தொல்காப்பியம் புறத்திணை இயலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘கணையும் வேலும் துணையுற மொய்த்தலிற்

சென்ற உயிரின் நின்ற யாக்கை

இருநிலந் தீண்டா அருநிலை வகையொடு

இருபாற் பட்டஒருசிறப் பின்றே.’

அம்புகளும் வேல்களும் உடலெங்கும் ஒன்றோடொன்று நெருக்கமாக, இடைவெளியில்லாமல் வந்து பாய்ந்து மொய்த்தலினால் உடலிலிருந்து உயிர் பிரிந்துவிட்ட போதிலும், உடம்பு கீழே விழாமல் அப்படியே நேராக நிமிர்ந்து நிற்கும். காண்பதற்கு அரிய அந்த வீர நிலையின் தன்மையோடு போர் செய்யும் இருதரப்பு வீரர்களுக்கும் பொதுவான ஒப்பற்ற ஒரு தனிச்சிறப்பினை உடையது தும்பைப்போர் என்கிறது தொல்காப்பியப் புறத்திணை இயல் பாடல்.

‘களிற்றொடு பட்ட வேந்தனை அட்ட வேந்தன்

வாளோர் ஆடும் அமலையும்’

தன் பட்டத்து யானையுடனே போர்க்களத்தில் மடிந்து வீழ்ந்த பகை நாட்டு அரசனைக் கொன்ற, வெற்றி வேந்தனுடைய வாள் ஏந்திய போர் வீரர்கள் கூடி ஆடுகின்ற ஆரவாரக் கூத்தும் தும்பையின் ஒரு துறையாகும் என்கிறது தொல்காப்பியப் புறத்திணை இயலின் இப்பாடல்.

மேற்கூறிய தொல்காப்பியப் புறத்திணைப் பாடல்களில் வாள் (இரும்பு/உலோகம்), கணை (அம்பின் உலோகமுனை), வேல் (ஈட்டி) போன்ற ஆயுதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம். இதன் மூலம், தொல்காப்பியர் காலத்தில் தமிழர்கள் இரும்பு மற்றும் பிற உலோகங்களை உருக்கி, கூர்மையான போர்க் கருவிகளாக அவற்றை வடிவமைக்கும் மேம்பட்ட உலோகத் தொழில்நுட்பத்தைக் கொண்டிருந்தனர் என்பதை அறிய முடிகிறது.

சங்க காலத்தில் கருவிகள், போர்க்கருவிகள், ஆபரணங்கள் மற்றும் பாத்திரங்கள் செய்ய இரும்பும் வெண்கலமும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டதைச் சங்கப் பாடல்கள் விவரிக்கின்றன.

இரும்புத் தொழிலுக்கு மிகவும் இன்றியமையாதது உலைக்களமாகும். இரும்பைக் காய்ச்சி அடித்து பொருள்கள் செய்வதற்கு உலைக்களம் பயன்படுகிறது. அறிவியல் வளர்ச்சி பெறாத தொன்மையான காலத்தில், தமிழர்கள் இரும்புத் தாதுக்களைச் சேகரித்துச் சிறிய களிமண் உலையில், தோல் துருத்தியின் உதவியால் இரும்பை உருக்கி வந்திருப்பதை இலக்கியங்களின் வழியாக அறியமுடிகிறது.

உலைக்களம் பொதுவாகப் பூமிக்கு அடியில் அமைக்கப்படுகிறது. இரும்புத் தாதுக்களை உருக்கி எடுப்பதற்காகவும், பின் உருக்கி எடுத்த கட்டிகளைக் கருவிகளாகவோ பொருள்களாகவோ செய்யவும், அக்கட்டிகளை உலையில் சூடாக்கவும் கொல்லுலைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

‘இரும்பு பயன் படுக்கும் கருங் கைக் கொல்லன்

விசைத்து எறி கூடமொடு பொரூஉம்உலைக் கல் அன்ன வல்லாளன்னே’

இரும்புத் தொழிலைச் செய்யும் கரிய வலிமையான கைகளைக் கொண்ட கொல்லன், உலைக்களத்தில் தன் சம்மட்டியினை ஓங்கி வேகமாக அடிக்கும் பட்டடைக்கல்லைப்போல், குதிரைமலைத் தலைவனான பிட்டங்கொற்றன் என்பவன் போரில் பகைவரின் தாக்குதல்களைத் தன்மேல் தாங்கிக் கொண்டு எதிரிகளைத் தாக்கும் வலிமை உடையவன் என்கிறது இந்தப் புறநானூற்றுப் பாடல் வரிகள். இதைப் பாடியவர் உறையூர் மருத்துவன் தாமோதரனார் ஆவார். இதன் மூலம் சங்க காலத்தில் இரும்புத் தொழில் இருந்ததை அறிய முடிகிறது.

இதே போன்று புறநானூற்றில், இரும்பைக் கொண்டு ஓர் உவமைச் சிறப்புமிக்க பாடலை ஐயூர் மூலங்கிழார் பாடியுள்ளார்.

‘கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய இரும்பு உண் நீரினும் மீட்டற்கு அரிது’

இரும்பைத் தீயிலிட்டுக் காய்ச்சி அடிப்பதால், கரிய நிறமும் வன்மையான கைகளையும் கொண்ட கொல்லனின் உலையில், தழலில் காய்ந்து, சிகப்பு நிறமாக மாறிய சுடச்சுடக் காய்ச்சிய இரும்பின் மீது தெளிக்கப்படும் நீர்த்துளி, இரும்பின் வெப்பத்தால் உடனே ஆவியாகி, அதனுள் உறிஞ்சப்பட்டு மறைந்து விடுகிறது. அப்படியாக இரும்பால் உறிஞ்சப்பட்ட நீரை எவராலும் மீண்டும் திரும்ப எடுக்க இயலாது. எப்படி உலைக்களத்தில் காய்ச்சிய இரும்புக்குள் சென்ற நீர், அங்கிருந்து ஒருபோதும் மீளாதோ, அதேபோல உக்கிரப் பெருவழுதியால் கைப்பற்றப்பட்ட கானப்பேரெயில் கோட்டையை வேங்கை மார்பன் மீண்டும் மீட்பது என்பது முற்றிலும் இயலாத காரியம் என்று இப்பாடல் விளக்குகிறது. இழந்த ஒன்றை மீண்டும் அடைவது எத்தனை கடினமானது என்பதை உணர்த்தும் ஆழமான வரிகள் இவை.

இதே போன்று நற்றிணையிலும் இரும்பு உவமையாகக் கையாளப்பட்டிருக்கிறது.

‘இரும்பு செய் கொல்லன் வெவ் உலைத் தெளித்த தோய் மடல் சில் நீர் போல’

இரும்பைக் கொண்டு கருவிகளைச் செய்யும் கொல்லன், இரும்பை உருக்கப் பயன்படுத்தும் கொழுந்துவிட்டு எரியும் வெப்பமான உலையின் வெப்பத்தைத் தணிக்க, பனை ஓலை மடலால் அல்லது பனை இலையால் சிறிதளவு நீரை எடுத்து உலை மீது தெளிப்பான். தெளிக்கப்பட்ட சிறு துளி நீரானது உலையின் பெருநெருப்பை அடக்காது என்றாலும், அந்தக் கணப்பொழுதில் சிறு குளிர்ச்சியைத் தரும். அதுபோல், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியின் பிரிவுத் துயரைத் தோழியின் ஆறுதல் வார்த்தைகள் முழுமையாகத் தீர்க்காவிட்டாலும், தலைவியினுடைய மனத்திற்குச் சிறிய ஆறுதலையும் நம்பிக்கையையும் தருகிறது என்று இரும்பை உவமையாகக் கொண்டு பாடியுள்ளார் புலவர் நற்றமனார்.

சங்க இலக்கியமான பெரும்பாணாற்றுப்படை நூலில் கடியலூர் உருத்திரங் கண்ணனார் உழைப்பாளர்களின் கடின உழைப்பையும், அவர்களின் உடற்கட்டமைப்பையும், ‘இரும்பு வடித்தன்ன மடியா மென் தோல் கருங்கை வினைஞர்’ என்று இரும்புடன் ஒப்பிட்டுச் சிறப்பித்துக் கூறியிருக்கிறார்.

இந்த வரிகள் உழவர்களின் கடின உழைப்பைக் குறிக்கின்றன. வயலில் நாள் முழுவதும் கடுமையாக உழைக்கும் உழைப்பாளர்களின் அல்லது வினைஞர்களின் கைகள் இரும்பைப்போல வலிமையாகவும், கறுப்பு நிறமாகவும் மாறிவிடுகின்றன. ஆனால், அவர்களின் மேனித்தோல் மட்டும் சோம்பலினால் ஏற்படும் சுருக்கங்கள் ஏதுமின்றி, எப்போதுமே மென்மையாகவும் இளமையாகவும் இருக்கிறது. அதாவது, இரும்பு போன்ற கடினமான உழைப்பாளிகளாக இருந்தாலும் அவர்களின் உடலமைப்பு மற்றும் தோல் ஆரோக்கியம் கம்பீரமாகத் திகழ்கிறது என்கிறார் புலவர்.

சங்க காலப் போர்களில் கூர்மையான இரும்பு ஆயுதங்கள் மிக முக்கியப் பங்கு வகித்தன. அவற்றை உருவாக்குவதிலும், போருக்குப் பின் பழுது பார்ப்பதிலும் கொல்லர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இவற்றைக் கூறும் புறநானூற்றுப் பாடல் ஒன்றை ஔவையார் பாடியுள்ளார்.

‘இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டி, கண் திரள் நோன் காழ், திருத்தி, நெய் அணிந்து, கடி மதில் வியன் நகரவ்வே;

அவ்வே, பகைவர் குத்தி, கோடு சிதைந்து, கூர் மழுங்கி, கொல்லன் உலைக்களத்துள்ளனவே’

இவ்வே, இந்த வேல் (தொண்டைமானின் வேல்), மயிலிறகுகளால் அலங்கரிக்கப்பட்டு, அழகிய பூக்களாலான மாலைகளும் அணிவிக்கப்பட்டு, அதன் திரண்ட மற்றும் உறுதியான அடிப்பகுதி (கட்டை) நேர்த்தியாகச் சீரமைக்கப்பட்டு, துருப்பிடிக்காமல் இருக்க நெய் தடவிப் பாதுகாக்கப்படுகிறது. இத்தகைய வேல், காவல் மிகுந்த பெரிய அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், போர்க்களத்தில் உள்ள அதியமானின் வேல்களோ எதிரிகளைத் தாக்கி, நுனிப்பகுதி வளைந்து அல்லது முறிந்து, கூர்மை மழுங்கிப் போய்விட்டது. ஆகையால் அவ்வேல்கள் மீண்டும் கூர்மைப்படுத்துவதற்காகக் கொல்லனின் உலைக்களத்தில் கிடக்கின்றன என்கிறார். இதன் மூலம் அதியமானின் அசாத்தியமான போர்த் திறமையை உணர்த்தி, தொண்டைமானைப் போரிட வேண்டாம் என மறைமுகமாக எச்சரிக்கிறார் ஔவையார்.

ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கும், அதன் எதிர்காலத்திற்கும் சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் என்னென்ன கடமைகள் உள்ளன என்பதை விளக்கும் புகழ்பெற்ற புறநானூற்றுப் பாடலில் இரும்பு வேல் குறித்துக் கூறப்பட்டிருக்கிறது.

‘ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;

வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;

ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.’

குழந்தையைப் பெற்று, அதைப் பேணிக் காப்பாற்றி வளர்ப்பது தாயின் தலையாய கடமையாகும். வளரும் குழந்தைக்கு நல்லொழுக்கங்களைக் கற்றுக் கொடுத்து, அறிவுடைய சான்றோனாக மாற்றுவது தந்தையின் கடமையாகும். போருக்குச் செல்லும் வீரனுக்குக் கூர்மையான வேல் செய்து கொடுப்பது கொல்லனின் கடமையாகும். மக்களுக்கு நற்பண்புகளையும், ஒழுக்கமான வாழ்க்கையையும் நீதி நெறிகளையும் கற்றுக் கொடுத்து வழிநடத்துவது மன்னனின் கடமையாகும். ஒளிரும் வாளினை ஏந்தி, பகைவரின் பெரும் படையை அழித்து, யானையை வீழ்த்திப் போர்க்களத்தில் வெற்றி பெற்றுத் திரும்புவதே ஓர் இளம் வீரனின் கடமையாகும் என்று பாடியிருக்கிறார் சங்ககாலப் பெண்புலவர் பொன்முடியார்.

சங்க காலத்தில் வெண்கலம் என்பது ஆடம்பரப் பொருள்களாகவும், ஒலியெழுப்பும் மணிகளாகவும், பாத்திரங்களாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சிலப்பதிகாரத்தின் புகார்க் காண்டம் இந்திரவிழா ஊரெடுத்த காதை பகுதியில், புகார் நகரத்தின் மருவூர்ப்பாக்கத்து வணிக வீதிகளையும், அங்கு வாழ்ந்த பல்வேறு கைவினைப் பணியாளர்களையும் பட்டியலிடும் இளங்கோவடிகள், ‘கஞ்ச காரரும் செம்பு செய்குநரும்’ என்று குறிப்பிடுகிறார்.

இதில் கஞ்சகாரர் என்பவர் வெண்கலப் பாத்திரங்கள் மற்றும் வெண்கலப் பொருள்கள் செய்யும் கைவினைஞர் ஆவார். தமிழ் அகராதியின்படி ‘கஞ்சம்’ என்ற சொல்லுக்கு வெண்கலம், தாமரை எனப் பல பொருள்கள் உண்டு. உலோகத் தொழிலைக் குறிக்கும்போது இச்சொல் வெண்கலத்தையே குறிக்கிறது. செம்பு செய்குநர் என்பவர் செப்புப் பாத்திரங்கள் மற்றும் செம்பு வேலை செய்பவரைக் குறிக்கிறது.

‘உருவப் பல்பூத் தூஉய், வெண்கால், வெண்கல மணிக் குரல் இயம்ப’ என்கிற முல்லைப்பாட்டில் வெண்கலம் இடம்பெற்றுள்ளது.

அழகிய நிறம்கொண்ட பல வகையான மலர்களைத் தூவி, வெள்ளை நிற நெல்லைச் சொரிந்து, (இங்கு ‘வெண்கால்’ என்பது வெள்ளை நிற நெல்லைக் குறிக்கும். கடவுளுக்கு மலர்களோடு நெல்லையும் சேர்த்து இட்டு வணங்குவது தமிழர் மரபு) வெண்கலத்தால் ஆன மணியின் ஓசை ஒலிக்க என்பது இவ்வரிகளின் பொருள்.

இரும்புப் பொருள்கள் எவ்வாறு தயாரிக்கப்பட்டன என்பதை விளக்கும் உலைக்களக் காட்சிகள் சங்க இலக்கியங்களில் மிகத் துல்லியமாகப் பதிவாகியுள்ளன.

இரும்பை உருக்குவதற்கும், பழுக்கக் காய்ச்சுவதற்கும் மிக அதிகப்படியான வெப்பம் தேவை. இதற்காகக் கொல்லர்கள் ‘துருத்தி’ எனப்படும் உலையில் காற்றைச் செலுத்தும் தோலால் ஆன கருவியைப் பயன்படுத்தினர்.

கொல்லன் தன்னுடைய உலைக்களத்தில் உள்ள தோல் துருத்தியை மிதித்து, அதன் மூலம் காற்றைச் செலுத்தி, நெருப்பை வளர்த்து இரும்பைப் பழுக்கக் காய்ச்சுவான். பின்பு, அதை எடுத்து அரத்தால் தேய்த்துக் கூர்மையாக்குவான் என்று சங்க இலக்கியங்கள் விளக்குகின்றன.

‘ஏழூர்ப் பொதுவினைக்கு ஓரூர் யாத்த

உலை வாங்கு மிதிதோல் போலத்

தலைவரம்பு அறியாது வருந்தும் என் நெஞ்சே.’

இரும்பைக் காய்ச்சிப் பல கருவிகளைச் செய்யும் கொல்லனின் உலைக்களத்தில், காற்று ஊதுவதற்காகத் தோலால் செய்யப்பட்ட துருத்தி பயன்படுத்தப்படும். அந்தத் துருத்தியை ஒரு காலால் மிதித்துக் காற்றை உட்செலுத்தி, மறு காலால் அதை இழுத்து இடைவிடாமல் ஊதிக் கொண்டே இருப்பார்கள். அப்படி ஓர் ஊரில் அமைக்கப்பட்ட அந்தத் துருத்தியானது, 7 ஊர் மக்களின் தேவைகளுக்காகவும் இடைவிடாது ஓய்வின்றி இயங்கிக்கொண்டே இருக்கும். அந்தத் துருத்தியைப்போல், தன் எல்லையற்ற துயரத்தை உணர்ந்துகொள்ளாமல், தனது நெஞ்சமானது தலைவனையே நினைத்து இடைவிடாமல் வருந்துகிறது என்று தலைவி கூறுவதாக அமைந்த குறுந்தொகை பாடல் வரிகள் இவை.

சங்க இலக்கியங்களில் போர்க்கால ஆயுதங்கள் மட்டுமன்றி, அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்கள் மற்றும் விவசாயக் கருவிகள் இரும்பைக் கொண்டு எவ்வாறு செய்யப்பட்டன என்ற குறிப்புகளும் இருக்கின்றன.

கலப்பையின் நுனியில் மாட்டப்பட்டு நிலத்தைக் கிழித்து உழுவதற்குப் பயன்படும் இரும்புப் பகுதிக்குக் கொழு என்று பெயர். உழுது உழுது தேய்ந்துபோன கொழுவை மீண்டும் உலையில் வைத்துச் செப்பனிடுவது குறித்துப் புறநானூறு கூறுகிறது. விவசாயத்தில் களை எடுக்கவும், பாத்தி கட்டவும் பயன்படும் இரும்பு மண்வெட்டி அல்லது களைக்கொட்டு பற்றிய குறிப்பு பெரும்பாணாற்றுப்படையில் வருகிறது. வேர்களில் உள்ள மண்ணைக் கொத்தி எடுக்கவும், நிலத்தைப் பண்படுத்தவும் கூர்மையான இரும்புக் கருவிகளை உழவர்கள் பயன்படுத்தினர் என்பதைப் பல பாடல்கள் கொழு மற்றும் படை போன்ற சொற்களால் குறிக்கின்றன. நற்றிணையிலும் விறகு வெட்டுபவர்கள் கூர்மையான இரும்புக் கோடரியைக் கொண்டு மரங்களை வெட்டும் காட்சிகள் விவரிக்கப்பட்டுள்ளன.

பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்வதற்காக அரிவாள் என்கிற கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களில் அரிவாளைக் குறிக்க இரும்பு என்கிற சொல் வழங்கப்படுகின்றது.

‘இரும்பீர் வடியன்ன உண்கண்’ என்பது கலித்தொகையில் வரும் வரியாகும். இரும்பினால் செய்யப்பட்ட கூர்மையான அரிவாளின் முனையைப்போல், மிகவும் கூர்மையான விளிம்புகளை உடைய மையிட்ட கண்கள் என்று தலைவியின் கண்களின் அழகையும், கூர்மையையும் தோழி விவரிக்கிறாள். அதாவது, தலைவியின் கண்கள் பார்ப்பவரைத் தாக்கும் அளவுக்குக் கூர்மையான மையினைத் தீட்டிய அழகிய கண்களாக இருந்தன என்பதை இத்தொடர் விளக்குகிறது.

‘நெய்பட் டன்ன நோன்காழ் எஃகின்

செல்வத் தந்தை இடனுடை வரைப்பின்’

 எப்பொழுதும் நெய் தடவிப் பாதுகாக்கப்பட்டு மினுமினுப்பாகவும் கூர்மையாகவும், முற்றிய யானையின் தந்தத்தைப் போன்ற உறுதியான கைப்பிடியையும் உடைய வலிமையான, கூர்மையான வேல் (எஃகு) ஏந்திய போர்வீரன் தலைவியின் தந்தை என்கிறது இப்பாடல். இதன் மூலம் எஃகு என்பது வேல் என்னும் பொருளில் சங்க இலக்கியங்களில் வழங்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.

பெரிய மரங்களை அறுக்கவும், சிற்பங்களைச் செதுக்கவும் தச்சர்கள் இரும்பு உளியைப் பயன்படுத்தினர். மதுரைக்காஞ்சி, சிறுபாணாற்றுப்படை போன்ற நூல்கள், கட்டடக் கலை மற்றும் மர வேலைப்பாடுகளில் இக்கருவிகள் பயன்படுத்தப்பட்டதைப் பேசுகின்றன.

பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சியில், இரவு நேரக் காவல் பணியில் ஈடுபடும் காவல் மறவர்களான ஊர் காப்பாளர்கள் எத்தகைய உபகரணங்களுடன், எவ்வாறு தீவிரமாகக் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர் என்பதை இவ்வரிகள் விளக்குகின்றன.

‘கல்லும் மரனும் துணிக்கும் கூர்மைத்

தொடலை வாளர் தொடுதோல் அடியர்,

குறங்கிடைப் பதித்த கூர் நுனைக் குறும்பிடி

சிறந்த கருமை நுண் வினை நுணங்கு அறல்

நிறம் கவர்பு புனைந்த நீலக் கச்சினர்,

மென் நூல் ஏணிப் பல்மாண் சுற்றினர்

நிலன் அகழ் உளியர் கலன் நசைஇக் கொட்கும்

கண்மாறு ஆடவர் ஒடுக்கம் ஒற்றி’

கற்களையும் மரங்களையும்கூட எளிதாக வெட்டி வீசக்கூடிய, கூர்மையான நுனியுடைய தொங்கும் வாளை அணிந்தவர்கள். தோலினால் செய்யப்பட்ட செருப்புகளைத் தங்கள் கால்களில் அணிந்தவர்கள். தங்கள் தொடையின் நடுவே, இடுப்புப் பகுதியில் சொருகப்பட்ட கூரிய முனையுள்ள சிறிய கத்தியான குறும்பிடியை உடையவர்கள். சிறந்த கருமை நிறத்தில், நுட்பமான வேலைப்பாடுகளுடன், நுண்ணிய அலைகளைப் போன்று நெய்யப்பட்ட துணி, தங்கள் கண்களைக் கவரும் வண்ணமாகச் சாயமேற்றிப் புனையப்பட்ட நீல நிறக் கச்சையை இடுப்புப் பட்டையை அணிந்தவர்கள். மென்மையான நூலால் செய்யப்பட்ட ஏணியைத் தங்களது உடலில் பலமுறை சுற்றியிருப்பவர்கள் (திருடர்களைப் பிடிக்கச் சுவர்களில் ஏற இந்த ஏணி பயன்படுகிறது). பூமியைத் தோண்டுவதற்கான உளி போன்ற இரும்புக் கருவிகளை உடையவர்கள். விலைமதிப்பற்ற பொருள்களைத் தேடி அலையும், மாற்று உருவம் கொண்டு ஏமாற்றும் இயல்புடைய திருடர்களின் நடமாட்டத்தை, மறைந்திருந்து கவனித்து அறியும் காவலர்கள் என்பது இவ்வரிகளின் பொருளாகும்.

காவலர்கள் கூர்மையான வாள், தோல் செருப்பு, இடுப்புக் கத்தி, நீல நிற ஆடை, சுவரேறும் ஏணி, நிலம் தோண்டும் உளி ஆகியவற்றுடன் தயாராக உள்ளனர். இரவில் திருடர்களின் நடவடிக்கைகளை மறைந்திருந்து கண்காணித்து, மதுரை நகரின் பாதுகாப்பை இவர்கள் உறுதி செய்கின்றனர் என்கிறார் மாங்குடி மருதனார்.

சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவனான நல்லியக்கோடன் வள்ளல் தன்மையோடும் கம்பீரத்தோடும் தன் தேரில் வருவதை நல்லூர் நத்தத்தனார் குறிப்பிடும்போது, மரத்தேர் செய்யப் பயன்படுத்தப்பட்ட உளியைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

‘கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு

ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு’

அவன் ஏறி வரும் தேரானது, கூர்மையான உளியால் செதுக்கப்பட்ட வலிமையான மரக் குடத்தையும் (மையப் பகுதி), அதைச் சுற்றிய ஆரக்கால்களையும், கூர்மையான இரும்புப் பட்டையையும் (நேமி) கொண்ட சக்கரங்களை உடையது என்கிறார்.

இலக்கியங்கள் மட்டுமின்றி, தமிழக அகழ்வாராய்ச்சிகளும் பழந்தமிழர்களிடம் இருந்த உலோகப் பயன்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளன. கொடுமணல் மற்றும் கீழடியில் இரும்பை உருக்கும் உலைகளும் உலைக்களக் கசடுகளும் பெருமளவில் கண்டறியப்பட்டுள்ளன. ஆதிச்சநல்லூரில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட வெண்கலத்தாலான கிண்ணங்கள், விளக்குகள், மற்றும் விலங்கு உருவங்கள் கிடைத்துள்ளன. இது சங்க காலத் தமிழரின் உலோக வார்ப்புத் திறனுக்குச் சான்றாகும்.

கொடுமணலில் இரும்பை உருக்கப் பயன்படுத்திய சுடுமண்ணால் ஆன வட்ட வடிவ உலைகளும், காற்றைச் செலுத்தப் பயன்படுத்திய சுடுமண் குழாய்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் இரும்புப் பயன்பாட்டின் காலத்தைக் கி.மு. 2172 வரை பின்னோக்கி நகர்த்திய பெருமை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மயிலாடும்பாறை என்கிற இடத்திற்கு உண்டு. இங்கு வீட்டுப் பயன்பாட்டிற்கான இரும்புக் கத்திகள், அம்பு முனைகள் மற்றும் விவசாயக் கருவிகள் கிடைத்துள்ளன. மயிலாடும்பாறையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலமாக, தமிழ்நாட்டில் இரும்புப் பயன்பாடு என்பது சுமார் 4200 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது என்பது அறிவியல் பூர்வமாக நிறுவப்பட்டுள்ளது. இது இந்தியாவிலேயே மிகத் தொன்மையான இரும்புப் பயன்பாட்டுக் காலமாகும்.

கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்ற அகழ்வாய்வுகளில் பத்துக்கும் மேற்பட்ட இரும்புக் கத்திகள், உளிகள், மண்வெட்டிகள், மற்றும் ஆணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கொடுமணல் பகுதியில் வீட்டு உபயோகப் பொருள்களான இரும்புச் சமையல் கரண்டிகள், கத்திகள் மற்றும் இரும்பினாலான வளையல்கள்கூடக் கண்டறியப்பட்டுள்ளன. ஆதிச்சநல்லூரில் வீட்டு உபயோக இரும்புப் பொருள்களோடு சேர்த்து, மிக நேர்த்தியான வெண்கலப் பாத்திரங்கள், வெண்கல வடிகட்டிகள், மற்றும் வெண்கல விளக்குகள் கிடைத்துள்ளன.

சங்கத் தமிழர்கள் உலோகக் கருவிகள் தயாரிப்பில் அடைந்திருந்த மாபெரும் தொழில்நுட்ப வளர்ச்சியையும், அவர்களின் கைவினைத் திறனையும் சங்க இலக்கியங்கள் மிக ஆழமாக உணர்த்துகின்றன. இதன் மூலம் உலோகங்களை உருக்கித் தரம் பிரிப்பதிலும், அவற்றைக் கொண்டு ஆபரணங்கள் மற்றும் கருவிகளை உருவாக்குவதிலும் சங்க காலத் தமிழர்கள் நிகரற்ற ஆற்றல் பெற்றிருந்ததை அறிய முடிகிறது.

 

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *