Skip to content
Home » சங்க இலக்கியம் #16 – உடைபெயர்த்து உடுத்தல்

சங்க இலக்கியம் #16 – உடைபெயர்த்து உடுத்தல்

‘உண்பது நாழி, உடுப்பவையிரண்டே’ என்கிற புகழ்பெற்ற புறநானூற்றுப் பாடல் வரி, உலகெங்கிலும் வாழும் மனிதர்களின் இன்றியமையாத தேவை, உணவும் உடையும் மட்டுமே என்பதை உணர்த்துகிறது.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

இங்கே ‘உடுக்கை’ என்பதற்கு உடை என்று பொருள். ஆடை நழுவும்போது எப்படி நம் கைகள் தானாகச் சென்று அதைப் பிடிக்குமோ, அதைப்போல் நண்பனுக்குத் துன்பம் வரும்போது அவன் கேட்பதற்கு முன்பாகவே அத்துன்பத்தைத் துடைப்பதே உண்மையான நட்பாகும். உடுக்கை இழந்தவன் கைபோல் என்று, விரைந்து வந்து துன்பத்தைக் களையும் நட்புடன் உடையை உவமையாக்கி இருப்பதிலேயே, மானவுணர்வுக்குரிய உடையின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார் வள்ளுவர். அத்தகைய இன்றியமையாத முக்கியத்துவம் வாய்ந்த உடையைத் தயாரிக்கும் நெசவுத் தொழில், சங்க காலத்தில் வேளாண்மைக்கு அடுத்த முக்கியத் தொழிலாக விளங்கியது.

ஆதி காலத்தில் வேட்டையாடுதலையும் உணவு சேகரித்தலையும் அடிப்படையாகக் கொண்ட இனக்குழுக்கள், இயற்கையாகக் கிடைத்த தழை, இலை ஆடைகளையும், மரப்பட்டைகளையும், மான், புலி போன்ற விலங்குகளின் தோல்களையும் கொண்டு உருவாக்கிய ஆடைகளையும் அணிந்துள்ளனர். தையல் கலை அறியப்படுவதற்கு முன்பாக உடலைச் சுற்றிக் கொள்ளும் ஆடைகளே பெரிதும் புழக்கத்தில் இருந்தன. நாளடைவில் மக்கள் தங்கள் நுண்ணறிவின் திறத்தால் பருத்தியின் பஞ்சை நூலாக நூற்று, ஆடையாக நெய்து அணியத் தொடங்கினர்.

0

சங்க இலக்கியத்துக்கு முன்பு தோன்றிய இலக்கண நூலான தொல்காப்பியத்தில் ஆடையைப் பற்றிய குறிப்புக் காணப்படுகின்றது.

‘கூழை விரித்தல் காதொன்று களைதல்
ஊழணி தைவரல் உடைபெயர்த் துடுத்தலொடு
கெழீஇய நான்கே இரண்டென மொழிப’

தொல்காப்பியம் மெய்ப்பாட்டியலில் உள்ள இந்த நூற்பா, காதலில் தோன்றும் மெய்ப்பாடுகளைப் பற்றி விளக்குகிறது. மெய்ப்பாடு என்றால் என்ன? உள்ளத்தில் தோன்றும் மகிழ்ச்சி, துக்கம், பயம் போன்ற உணர்வுகள் உடலசைவு, முகபாவனை, பார்வை ஆகியவற்றின் மூலம் வெளிப்படுவதே மெய்ப்பாடு எனப்படுகிறது. 3000 ஆண்டுகளுக்கும் பழமையான தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம், நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை ஆகிய எட்டு வகை மெய்ப்பாடுகளை விளக்குகிறது. பின்னாளில் வடஇந்திய அழகியல் மரபில் இக்கருத்துடன் ஒப்பிடத்தக்க வகையில் ரசக் கோட்பாடு வளர்ச்சி பெற்று, ஒன்பது ரசங்கள் ‘நவரசம்’ என அழைக்கப்பட்டன.

மேற்கூறிய பாடலில் தலைவியின் மனத்தில் ஏற்படும் காதலின் மிகுதியால், அவளது உடலசைவுகளில் வெளிப்படும் மாற்றங்களை நான்கு மெய்ப்பாடுகளாக தொல்காப்பியர் விவரிக்கிறார் .

‘கூழை விரித்தல்’ என்றால் தலைவியின் உள்ளத்தில் தோன்றும் காம உணர்வால் அல்லது வெட்கத்தால், அவளது கூந்தல் கலைந்து தொங்குவதைத் திருத்துவதுபோல மேலும் கலைத்து விடுதல். ‘காதொன்று களைதல்’ என்றால் நெஞ்சில் எழும் உணர்ச்சியால் ஏற்படும் மெலிவினால், காதில் அணியப்பட்டிருக்கும் தோடு (காதணி) நழுவி விழுவதுபோலத் தோன்றுவதால், அதனைத் திருத்துவதுபோல் கழற்றுதல். ‘ஊழணி தைவரல்’ என்றால் முறையாகத் தான் அணிந்திருக்கும் கைவளை போன்ற அணிகலன்கள் நழுவாமல் இருக்க, அவற்றைச் சரிசெய்வதுபோலத் தடவிக்கொடுப்பது அல்லது இறுக்கிக் கட்டுவது. ‘உடைபெயர்த்து உடுத்தல்’ என்றால் உடம்பின் மெலிவு காரணமாகக் கலைந்துபோகும் ஆடையின் (உடை) நிலையைத் திருத்தி, அதனைச் சரியாக உடுத்திக்கொள்ளுதல்.

மேற்கண்ட நான்கு செயல்களும், தலைவனிடம் தலைவி கொண்டுள்ள அன்பின் காரணமாக வெளிப்படும் மெய்ப்பாடுகளாகத் தொல்காப்பியத்தின் பாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. இப்பாடலில் இடம்பெற்றுள்ள ஆடை பற்றிய குறிப்பின் மூலம் சங்க காலத்திற்கு முன்பே பழந்தமிழர்கள் ஆடையைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்பதையும், நெசவுத்தொழில் குறித்த பழந்தமிழர்களின் அறிவையும் அறிந்துகொள்ள முடிகிறது.

சங்க காலத்தில் மக்கள் உடுத்திய ஆடைகள் அவர்களின் நாகரிகம், தொழில் மற்றும் வாழ்ந்த பருவநிலையை ஆகியவற்றுக்கு ஏற்ப அமைந்திருந்தன.

0

ஆதி காலத்தில் மரப்பட்டையும் விலங்குகளின் தோலும் நெய்யப்படாமலேயே ஆடையாகப் பயன்படுத்தப்பட்டன. சங்க காலத்தில் தழையாடைகள் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டன. இலை தழைகளையும் மலர்களையும் கோர்த்து உருவாக்கப்பட்டதே தழையாடை ஆகும். சங்க இலக்கியங்கள் தழையாடையை ‘தழையணி’, ‘தழையுடை’ ஆகிய சொற்களால் குறிப்பிடுகின்றன. இளம்பெண்கள் தங்களது அடிவயிற்றுப் பகுதியில் (அல்குல்‌ பகுதியில்) தழையணி அணிந்திருந்ததாகக் குறுந்தொகை, அகநானூறு பாடல்களில் குறிப்புகள் உள்ளன. தழைகளை நாரினால் கோர்த்துக் கட்டுவதன்மூலம் உருவாக்கப்படும் தழையாடை ஒரு வகை. தழைகளை மாறுபடத் தொடுப்பதன்மூலம் அதாவது தழைகளைப் பின்னுவதன்மூலம் உருவாக்கப்படுவது மற்றொரு வகை. தலைவி ஞாழல் மரத்தின் தழைகளால் செய்யப்பட்ட தழையுடை அணிந்திருந்தாள் என ஐங்குறுநூற்றுப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாமரத் தழையால் தழையாடை செய்யப்பட்டதாகக் கலித்தொகையில் குறிப்புகள் உள்ளன.

திருவிழாக் காலங்களில் தழையாடை உடுத்திய நெய்தல் நில இளம்பெண்கள் தெருக்களில் மீன்கள் விற்றனர் என்கிற செய்தி அகநானூறு பாடலில் காணக் கிடைக்கிறது. சங்க காலத்தில் தலைவன் தலைவிக்குத் தழையாடை தந்ததைக் கூடலூர் கிழார் அவர்கள் குறுந்தொகை பாடலில் விவரித்துள்ளார்.

மரங்கொல் கானவன் புனந்துளர்ந்து வித்திய
பிறங்குகுரல் இறடி காக்கும் புறந்தாழ்
அஞ்சி லோதி அசையியற் கொடிச்சி
திருந்திழை அல்குற்குப் பெருந்தழை உதவிச்
செயலை முழுமுதல் ஒழிய அயல
தரலை மாலை சூட்டி
ஏமுற் றன்றிவ் வழுங்க லூரே.

மலைவாழ் கானவன் ஒருவன், காட்டில் இருந்த மரங்களை வெட்டிச் சாய்த்து, நிலத்தைத் தூய்மைப்படுத்தி, தினைப் புனம் (விளைநிலம்) ஒன்றை உருவாக்கினான். அதில் செழித்து வளரக்கூடிய இறடி (தினை) விதைகளை விதைத்தான். அப்புனத்தில் விளைந்து நின்ற அழகிய கதிர்களை உடைய திணையைப் பறவைகளிடமிருந்து காக்கும் பொறுப்பை, அழகிய மெல்லிய கூந்தலையும் கொடி போன்ற சாயலையும் உடைய குறமகள் (தலைவி) ஏற்றாள். தினைப் புனத்தைக் காத்துக்கொண்டிருந்த தலைவியைக் கண்டு, அவள்மேல் தலைவன் காதல் கொண்டான். தன் காதலின் அடையாளமாக, அவள் அணிந்து கொள்வதற்காக அசோக மரத்தின் தளிர்களால் ஆன தழையாடையை அவளுக்குப் பரிசாக அளித்தான். தலைவிக்குத் தழையாடை செய்வதற்காக அவன் அசோக மரத்தின் கிளைகளையும் இலைகளையும் மொத்தமாகப் பறித்துவிட்டான். இதனால் அந்த அசோக மரம், இலைகள் அனைத்தையும் இழந்து, மொட்டை மரமாக நின்றது. அவனுடைய அன்பை ஏற்றுக்கொண்ட தலைவி, அவனுடையவள் ஆனாள். புனக் காவல் முடிந்து வீடு திரும்பிய பின்னர், தன் காதலனைப் பிரிந்த துயரத்தாலும், அவனையே எப்போதும் நினைத்துக் கொண்டிருந்ததாலும், உடல் மெலிந்து அவள் வாடினாள். தலைவியின் இந்த மெலிவுக்குக் காரணம் அவளது காதல் நோய் என்பதை அறியாத அவளது தாயும் ஊர் மக்களும், அவளை முருகக் கடவுள் பிடித்துக் கொண்டதாகத் தவறாக எண்ணினர். அவளது நோயைத் தீர்ப்பதற்காக, அசோக மரத்தை விட்டுவிட்டு அதற்கு மாற்றாகிய அரளிப் பூவை அவளுக்கு மாலையாகச் சூட்டி முருகாற்றுப் படுத்தும் வெறியாட்டு விழாவை நடத்துகின்றனர். இந்தச் சூழ்நிலையில் தோழி, ‘தலைவியின் இந்த நிலைக்குக் காரணம் தலைவனின் அன்புதான்’ என்ற உண்மையை வெளிப்படுத்தி, வெறியாட்டைத் தடுத்து நிறுத்துகிறாள்.

இதன் மூலம் சங்க காலத்தில் தலைவன் தலைவிக்குத் தழையாடை தருவது வழக்கிலிருந்ததை அறிய முடிகிறது.

0

மரப்பட்டைகளை உரித்து, அவற்றை மென்மையாக்கி ஆடையாக உடுத்தும் பழக்கம் மலைவாழ் மக்களிடையே இருந்தது. மரத்திலிருந்து உரித்தெடுக்கப்படும் மெல்லிய பட்டைகளை ஆடையாகப் பயன்படுத்துவதே மரவுரி எனப்படும். முசுக்கட்டை, அத்தி, ஈரப்பலா போன்ற மரங்களின் உட்பட்டைகளைத் தண்ணீரில் ஊறவைத்து, அதன்பிறகு அவற்றை மரச்சுத்தியால் மெல்லத் தட்டி மிருதுவாக்கி, மென்மையான துணிபோல ஆக்கி, இடுப்பிலும் உடலிலும் அணியக்கூடிய வகையில் ஆடையாக மாற்றினர். இராமாயணத்தில் இராமன், சீதை, இலக்குமணன் ஆகியோர் வனவாசத்தின்போது மரவுரி அணிந்ததாக இலக்கியங்கள் கூறுகின்றன. மேலும், முனிவர்களும் துறவிகளும் காட்டு வாழ்க்கையின் அடையாளமாக இதனைத் தரித்தனர்.

‘மரனா ருடுக்கை மலையுறை குறவர்’ என்பது நற்றிணையில் வரும் புகழ்பெற்ற தொடராகும். ‘மரத்தின் பட்டையிலிருந்து பெறப்படும் நாரால் செய்யப்பட்ட ஆடையை உடுத்திய மலையில் வாழும் குறவர்’ என்பது இதன் பொருள். இதன்மூலம் சங்க காலத்தில் இருந்த மரவுரி பயன்பாட்டை அறிய முடிகிறது.

0

கலிங்க நாட்டிலிருந்து புடவைகளும் ஆடைகளும் சங்ககாலத்தில் தமிழகத்துக்கு வந்துள்ளன. கலிங்க நாடு என்பது தற்கால ஒடிஷாவையும் ஆந்திரப் பிரதேசத்தின் வடக்குப் பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தது. கலிங்க நாட்டிலிருந்து வந்த பருத்தி ஆடைகளுக்குத் தமிழர்கள் ‘கலிங்கம்’ என்று பெயரிட்டனர். கலிங்க நாட்டிலிருந்து வந்த பட்டு ஆடைகளைத் தமிழர்கள் ‘நூலாக் கலிங்கம்’ என்று குறிப்பிட்டனர். கலிங்கத் தேசத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஆடைகளுக்குக் ‘கலிங்கம்’ என்ற பெயர் ஏற்பட்டது. பின்னாளில், கலிங்க நாட்டுத் துணிகளைக் குறித்த இந்தப் பெயர், பருத்தி ஆடைகளுக்கெல்லாம் பொதுப்பெயராக வழங்கத் தொடங்கியது.

ஊருண் கேணிப் பகட்டிலைப் பாசி
வேர்புரை சிதாஅர் நீக்கி நேர்கரை
நுண்னூற் கலிங்கம் உடீஇ

வறுமையினால் வருந்திய புலவர் ஒருவர் அதியமான் நெடுமான் அஞ்சியின் மகனான பொகுட்டெழுனி என்னும் சிற்றரசனிடம் சென்றார். புலவர் அணிந்திருந்த ஆடை தண்ணீரில் மிதக்கும் பாசியைப்போல அழுக்கேறிக் கிடந்ததைக் கண்ட அரசன், அப்புலவருக்கு நுண்ணிய நூலாலான கலிங்க ஆடையைக் கொடுத்து அணியச் செய்தான் என்கிறது ஔவையார் பாடிய இந்தப் புறநானூற்றுப் பாடல் வரிகள்.

மேலும் புறநானூற்றில், ‘ஒண்பூங் கலிங்கம்’ என்கிற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒளிமிக்க, பூ வேலைப்பாடுகள் அல்லது மலர்களைப் போன்ற மென்மையான அழகைக்கொண்ட ஆடை என்பது இதன் பொருளாகும்.

பாம்பு உரி அன்ன வடிவின, காம்பின்
கழை படு சொலியின் இழை அணி வாரா,
ஒண் பூங் கலிங்கம் உடீஇ

பாம்பின் சட்டை போன்ற வடிவத்தைக் கொண்டதும், மூங்கிலின் உள்பகுதியில் இருக்கும் மெல்லிய தோல் போன்றதும், நெசவு நூலின் இழைகளே வெளியில் தெரியாத அளவுக்கு மிக நுண்ணியதாக நெய்யப்பட்டதுமான ஒளிமிக்க மெல்லிய பூவண்ண ஆடையை உடுத்தி என்பது இவ்வரிகளின் பொருளாகும்.

கடையேழு வள்ளல்களில் ஒருவரான பேகன் எனும் குறுநில மன்னன் மயிலுக்குப் போர்வையைக் கொடையாக அளித்த செய்தியைக் கூறும் பாடலில் கலிங்கம் என்கிற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்

காட்டு மயிலுக்கு ஆடை அல்லது போர்வையை வழங்கிய, அரிய ஆற்றலும் அழகுமுடைய, ஆவியர் என்னும் பழங்குடி இனத்தின் தலைவன், பெரிய மலைகளையுடைய நாட்டிற்குத் தலைவனாகிய பேகன் என்பது இப்பாடல் வரிகளின் பொருளாகும்.

மன்னன் பேகன் பொதினி மலைச் சாரலில் உலாச் சென்றுகொண்டிருந்தபோது காட்டில் மயில் ஒன்று தனது தோகையை விரித்து ஆடிக்கொண்டிருந்ததைக் கண்டான். மயில் பொதுவாக மேகத்தைக் கண்டு மகிழ்ச்சியில்தான் தோகை விரித்து ஆடும். ஆனால் பேகன் அந்த மயில் மழைக்காலக் குளிரால் நடுங்கி அழுகிறது என்று தவறாக எண்ணினான். மயிலுக்கு ஆடை தேவையில்லை என்று தெரிந்திருந்தும், அதன் துயர் துடைக்க வேண்டும் என்ற அவனது எல்லையற்ற இரக்கக் குணத்தினால், தான் அணிந்திருந்த விலை மதிப்பற்ற பட்டாடையை (போர்வையை) அந்த மயிலுக்குப் போர்த்தி மகிழ்ந்தான். கைம்மாறு கருதாமல், ஒரு பறவைக்காகத் தன் அரச ஆடையைக் கொடுத்த இச்செயல் அவனுக்குத் தமிழ் வரலாற்றில் அழியாப் புகழைத் தேடித்தந்தது.

0

நெசவுத்தொழிலின் உற்பத்திக்கு மூலப்பொருள் பருத்தியாகும். நூல் நூற்பும் நெசவும் சங்க காலத்தில் பரவலாகப் பயிலப்பட்ட கைவினைத் தொழில்களாக இருந்தன. நெசவுத் தொழிலைப் பலர் முழுநேரத் தொழிலாக மேற்கொண்டனர். கூடுதலாக, கிராமப்புறங்களில் விவசாயிகள் நெசவை, பகுதி நேரத் தொழிலாகவும் செய்து வந்தனர். பெண்கள் தங்கள் ஓய்வு நேரத்தைப் பருத்தி நூல் நூற்பதில் செலவிட்டனர். இரவு நேரங்களில்கூட திரி விளக்கின் மங்கலான ஒளியில் நூற்பைத் தொடர்ந்தனர். நெசவுத் தொழிலின் முக்கிய மையங்களாக மதுரையும் உறையூரும் திகழ்ந்தன. பருத்தித் துணிகளுக்காக இந்நகரங்கள் நன்கு அறியப்பட்டிருந்தன.

சங்க இலக்கியத்தில் நெசவுத்தொழில் செய்யும் பெண்களைக் குறிக்கப் ‘பருத்திப்பெண்டிர்’, ‘ஆளிற்பெண்டிர்’ போன்ற சொற்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆளிற் பெண்டிர் தாளிற் செய்த
நுணங்கு நுண்பணுவல் போல

என்று நற்றிணையில் இடம்பெற்றுள்ள இப்பாடல், கபிலர் இயற்றியது. கணவனை இழந்த ஆதரவற்ற மகளிர், தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்காக விடாமுயற்சியோடு உழைத்துப் பஞ்சைத் தூய்மைப்படுத்தி, மிக மெல்லியதாக, நேர்த்தியாக நூல் நூற்றுப் பனுவலாக (பஞ்சுத் திரளாக) மாற்றுவார்கள் என்கிறது நற்றிணையின் இப்பாடல் வரிகள். இதன் மூலம் சங்க காலத்தில் கணவனை இழந்த பெண்கள் நூல் நூற்று வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது.

‘பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன’ என்பது புறநானூறு பாடலில் இடம்பெற்றுள்ள ஓர் உவமை ஆகும். பருத்தி நூற்கும் பெண்கள் நுண்ணிய நூலை நூற்பதைப் போன்றது என்பது இதன் பொருள்.

சங்க கால மக்கள் பருத்திப் பஞ்சை அதன் கொட்டையிலிருந்து பிரித்தெடுக்க வில்லினைப் பயன்படுத்தியுள்ளனர். பின்னர், பருத்திக் கொட்டையை நீக்கிப் பஞ்சைத் தூய்மை செய்யும்போது, பஞ்சின் புறத்தோலினையும் எஞ்சி நிற்கும் கொட்டையினையும் தூசுகளையும் நீக்குவதற்காக அவற்றை நன்றாகப் புடைத்த செய்தியும் காணப்படுகிறது.

தொன்று படு துப்பொடு முரண் மிகச் சினைஇக்
கொன்ற யானைச் செங் கோடு கழாஅ,
அழி துளி பொழிந்த இன் குரல் எழிலி,
எஃகுறு பஞ்சிற்று ஆகி, வைகறைக்
கோடு உயர் நெடு வரை ஆடும் நாட

பழமையான வலிமையோடு, தன்னை எதிர்த்த கொடிய புலியோடு போரிட்டு மிகுந்த சினத்துடன் அதனைக் கொன்ற யானையின் தந்தங்களில் (கோடு என்றால் தந்தம்) படிந்த செங்குருதிக் கறையைச் சுத்தமாகக் கழுவி போக்க, மிக மிகுதியாகப் பூமி குளிரும்படி பொழிந்த மழை மேகமானது, வில்லால் அடித்துத் தூய்மையாக்கப்பட்ட வெண் பஞ்சைப்போல் மாறிய (மழையைப் பொழிந்ததால் மேகம் கறுப்பு நிறம் மாறி வெண்மையாகிவிட்டது) விடியற்காலைப் பொழுதில், சிகரங்கள் உயர்ந்த நீண்ட மலைகளில் உலாவி விளையாடும் நாட்டின் தலைவனே என்பது இந்த நற்றிணைப் பாடலின் பொருளாகும்.

ஊர்முது வேலிப் பார்நடை வெருகின்
இருட்பகை வெரீஇய நாகுஇளம் பேடை
உயிர்நடுக் குற்றுப் புலாவிட் டரற்றச்
சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த
பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்து

பழமையான வேலி அமைந்த அந்த ஊரில், இரவில் இரை தேடித் திரியும் காட்டுப்பூனை (வெருகு) ஒன்று வந்தது. இருளில் திரியும் அந்தக் காட்டுப்பூனையைக் கண்டு அஞ்சி, உயிர் பதைபதைத்து நடுங்கியது ஓர் இளமையான பெட்டைக்கோழி. தன் உயிரே போவதுபோல நடுங்கி, தன் வாயில் கவ்வியிருந்த புழுவைக் கீழே போட்டுவிட்டு அது அலறிக் கத்தியது. அந்தக் கோழியின் அலறலைக் கேட்டு, இரவில் பஞ்சு நூற்றுக்கொண்டிருந்த பருத்திப் பெண், கோழிகளைக் காப்பதற்காக எழுந்தாள். கையில் சிறிய தீச்சுடரை ஏந்திய விளக்கொளியுடன் அப்பெண் அங்கே வந்தாள். அந்த வெளிச்சத்தைக் கண்டதும் கோழியும் அச்சம் நீங்கி அமைதியடைந்தது என்கிறது இந்தப் புறநானூற்றுப் பாடல். இதன்மூலம், பருத்திப் பெண்டிர் இரவு நேரங்களில்கூட நூல் நூற்றுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

பட்டுத் துணிகள் பட்டிழைகளால் நெய்யப்பட்டு, அவற்றின் ஓரப்பகுதிகள் சிறு முடிச்சுகளுடன் தயாரிக்கப்பட்டன. பூ நூற்கும் கலையும்கூட அறியப்பட்டிருந்தது. உயர்குடிமக்கள் இவ்வகை ஆடைகளின் முக்கிய வாடிக்கையாளர்களாக இருந்துள்ளனர்.

0

நெசவுத் தொழிலின் பரந்துபட்ட துணைத் தொழிலாகச் சாயத்தொழில் விளங்கியது.

துணி விற்பவர்கள் துணிகளைத் தேவையான நீளத்திற்குக் கத்தரித்து, துண்டுகளாக விற்பனை செய்தனர். இவ்வாறு கத்தரிக்கப்பட்ட துணிகள் ‘அறுவை’ அல்லது ‘துணி’ என விற்பனையின்போது அழைக்கப்பட்டன. இத்தகைய துணிகளை விற்பவர்கள் ‘அறுவை வணிகர்’ என்றும், அவை விற்பனை செய்யப்பட்ட இடங்கள் ‘அறுவை வீதி’ என்றும் அழைக்கப்பட்டன. மதுரையிலும் பிற பெரிய நகரங்களிலும் இருந்த தையலர்கள் ‘துன்னகாரர்’ என அழைக்கப்பட்டனர்.

இதன்மூலம், தங்கள் தேவை, வாழும் சூழல், பொருளாதார நிலை ஆகியவற்றுக்கு ஏற்ப பல்வேறு வகையான ஆடைகளைச் சங்க கால மக்கள் அணிந்துள்ளனர் என்பதையும், சங்க காலத்தில் துணிகளை நெய்யும் தொழில் சிறப்பாக நடைபெற்றுள்ளது என்பதையும் அறிய முடிகிறது.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *