Skip to content
Home » சரித்திரம் படைத்த சாமானியர்கள் #4 – நிமல் ராகவன்

சரித்திரம் படைத்த சாமானியர்கள் #4 – நிமல் ராகவன்

அன்றைய விடியல் தமிழ்நாட்டிற்கு ஒரு துயரமான நாளாக அமைந்தது. குறிப்பாக டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மிகவும் துயரமான நாளாகவே இருந்தது. அன்று நாட்டின் பெரும்பாலான செய்தித்தாள்களின் தலைப்புச் செய்தியாக அந்த கோரச் சம்பவம்தான் இடம்பெற்றிருந்தது. அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் அந்த கோரச் சம்பவம் விரிவாக விளக்கப்பட்டுக்கொண்டிருந்தது.

நவம்பர் 15, 2018 நள்ளிரவில் தொடங்கி, நவம்பர் 16, 2018 அதிகாலை வரை நாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் அருகே மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் கரையைக் கடந்தது அந்தப் புயல். சுமார் 45 பேரைக் காவு வாங்கிய அந்தப் புயலால் 30,000க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும், 50 லட்சத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் சாய்ந்தன. ஏறத்தாழ 1 லட்சம் வீடுகள் அழிந்தன. ஏராளமான கால்நடைகள் மாண்டுபோயின. அந்தப் புயலுக்கு இலங்கை நாட்டினர் வைத்த பெயர் ‘கஜா’. சமஸ்கிருதத்தில் கஜா என்றால் யானை என்று பொருள்.

கஜா புயலால் கடுமையாகப் பாதித்த பகுதியில் ஒன்றுதான் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பேராவூரணி. கஜா புயல் எத்தனையோ மரங்களைச் சாய்த்தாலும், இந்தப் பகுதியில் ஒரு விதையை முளைக்கச் செய்தது. அது சாதாரண விதையல்ல. நம்பிக்கை விதை. அந்த நம்பிக்கை விதையின் பெயர் நிமல் ராகவன்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ளது நாடியம் கிராமம். கஜா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட 90 கிராமங்களில் நாடியம் கிராமமும் ஒன்று. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் நிமல் ராகவன். துபாயில் பொறியாளராகப் பணியாற்றிய நிமல், விடுமுறைக்காகத் தனது சொந்த ஊரான நாடியம் வந்தபோதுதான் அந்த கோரச் சம்பவம் அரங்கேறியது.

நவம்பர் 15 அன்று துபாய்க்குத் திரும்பிச் செல்ல வேண்டிய நிமல், கஜா புயல் எச்சரிக்கை காரணமாகத் தனது விடுமுறையை நீட்டித்துக்கொண்டார். ஏற்கெனவே நெடுவாசல் போராட்டத்தில் நிமல் பங்கெடுத்ததால் சில தன்னார்வமைப்புகள் அவருடன் தொடர்பில் இருந்தன. அவர்கள் கஜா புயலைப் பற்றியும் அது ஏற்படுத்தக்கூடிய பாதிப்பைப் பற்றியும் நிமலுக்கு எச்சரித்தனர். அதனால் அதன் பாதிப்பை நன்கு உணர்ந்த நிமல், நவம்பர் 15 அன்று இரவு தன் நண்பர்களுடன் சேர்ந்து கடலோரப் பகுதிகளிலும், ஏரி ஓரங்களிலும் வாழ்ந்துவந்த சுமார் 50 குடும்பங்களை அழைத்து தனது தாத்தா வீட்டில் குடியேற்றினார். இரவு சுமார் 11:30 மணி அளவில் சிறிய தூறலில் தொடங்கி தொடர்ந்து 6 மணி நேரமாகத் தன் கோரத் தாண்டவத்தைக் காட்டியது.

ஒரே இரவில் ஒட்டுமொத்த டெல்டா பகுதியையும் கஜா புயல் புரட்டிப்போட்டது. குறிப்பாக பேராவூரணி பட்டுக்கோட்டைப் பகுதியில் 80 சதவிகித தென்னை மரங்கள் சாய்ந்தன. அங்குள்ள விவசாயிகளுக்குத் தென்னை மரங்கள்தான் வருமானத்தைத் தந்துகொண்டிருந்தன. நிமலின் குடும்பமும் சிறுவயதில் தென்னை மரத்தில் வரும் வருமானத்தைத்தான் நம்பி இருந்தது. அவருடைய தந்தைக்கு மூளையில் கட்டி இருந்தது. அவருடைய மருத்துவச் செலவுக்கும், இவரின் படிப்புச் செலவுக்கும் தென்னை விவசாயம்தான் ஆதாரமாக இருந்தது. இப்படித் தனக்கான வாழ்வாதாரத்தை உருவாக்கிய மண்ணுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார் நிமல் ராகவன்.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணிய நிமல் ராகவன், தனது பொறியாளர் பதவியைத் தூக்கி எறிந்து மக்களுக்காகக் களத்தில் இறங்கி வேலை செய்யத்தொடங்கினார்.

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் தேவை என்று புரிந்துகொண்டார். அவர்களுக்கான உணவு, உடை, மளிகைப் பொருட்கள் வாங்குவதற்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்காக #BounceBackDelta என்ற சமூக ஊடகப் பிரச்சாரத்தை முன்னெடுத்தார். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகளைச் செய்தார்.

புயலால் பாதிக்கப்பட்டவர்களின் உடனடித் தேவையைப் பூர்த்திசெய்த பின்பு அவர்களின் நீண்ட காலத் தேவையை நோக்கி நகர்ந்தார் நிமல். ஒரு காலத்தில் நெற்களஞ்சியமாக இருந்த டெல்டா பகுதி, தென்னைச் சாகுபடிக்கு மாறி இருந்தது. காரணம், தென்னை வளர்ப்பதற்குக் குறைந்த அளவான நீரே போதுமானது. அது தரக்கூடிய வருமானமும் அதிகம்.

மீண்டும் தென்னை வளர்ப்பதற்கு நீண்ட காலம் தேவைப்படும் என்பதால் நெல், கரும்பு, சிறுதானியம் போன்றவற்றைச் சாகுபடி செய்யலாம் என்று முடிவு எடுத்தார். ஆனால் அவற்றைச் சாகுபடி செய்வதற்கு மிக அதிக நீர் தேவைப்படும். டெல்டா மாவட்டம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்னையாக உள்ளதை அவர் உணர்ந்தார். விவசாயத்திலும் மனிதனின் வாழ்வாதாரத்திலும் நீர்நிலைகள் ஆற்றும் பங்கை உணர்ந்த நிமல் ராகவன், நீர்நிலைகளை மேம்படுத்தும் பணியினைக் கையில் எடுத்தார்.

அந்தப் பகுதியில் ஏற்பட்ட தண்ணீர் பற்றாக்குறைக்கான காரணத்தை ஆராய்ந்த நிமல் ராகவன், ஓர் உண்மையைப் புரிந்துகொண்டார். சுமார் 110 டிஎம்சி தண்ணீர் கடல் நீரில் வீணாகக் கலப்பதைக் கண்டுபிடித்தார். சென்னை போன்ற பெரு நகரங்களிலேயே மக்களின் தண்ணீர் தேவையைத் தீர்ப்பதற்கு ஒரு வருடத்திற்கு 5 முதல் 7 டிஎம்சி தண்ணீர் போதுமானது என்றால், கடலில் வீணடிக்கப்படும் நீரின் அளவை நீங்களே புரிந்துகொள்ளலாம்.

இன்னும் எளிய புரிதலுக்காக 1 டிஎம்சி தண்ணீர் என்றால் எவ்வளவு என்பதை வேடிக்கையாகச் சில ஒப்பீடுகளுடன் பார்க்கலாம். சென்னை சேப்பாக்கம் மைதானம் முழுவதும் நீரை நிரப்பினால் அதன் அளவு 1 டிஎம்சி தண்ணீரில் பாதிகூட வராது. நீங்கள் தினமும் இரண்டு வாளி தண்ணீரில் குளித்தீர்கள் என்றால் 1 டிஎம்சி தண்ணீரைத் தீர்ப்பதற்கு உங்களுக்கு 1 கோடி வருடம் தேவைப்படும். இப்படிக் கடலில் வீணாகக் கலக்கும் நீரைச் சேமித்தாலே டெல்டா பகுதி விவசாயத்திற்குத் தேவையான நீரைச் சேமிக்க முடியும் என்பதை உணர்ந்தார்.

எனவே முதற்கட்டப் பணியாக பேராவூரணி ஏரியைத் தூர்வாரும் பணியினை மேற்கொண்டார். ஆனால் ஓர் ஏரியைத் தூர்வாரி மீட்டெடுப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதற்குச் சரியான குழு, திட்டமிடல், செயலாக்கம், நிதி போன்றவை தேவை.

564 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த ஏரியைத் தூர்வாருவதற்காக அந்தப் பகுதியைச் சேர்ந்த 70 இளைஞர்கள் அடங்கிய குழு ஒன்றை உருவாக்கினார். அந்த ஊர் மக்களிடமும் இன்னபிறரிடமும் நிதி திரட்டத் தொடங்கினார். தொடக்கத்தில் அவரது பணிக்குப் பெரும்பாலானவர்கள் எதிர்மறையான கருத்துக்களையே தெரிவித்தனர். ஆனால் அவரது தொடர் முயற்சியால் 32 லட்சம் வரை நிதி திரண்டது. பணமாக மட்டுமல்லாமல், மண் அள்ளும் இயந்திரத்தை இயக்கவும். அதற்கு எரிபொருள் வழங்கவும் அந்த ஊர் மக்கள் முன் வந்தனர். தூர்வாருதல், புனரமைத்தல் போன்ற நடவடிக்கையில் அப்பகுதி இளைஞர்கள் பங்கேற்றனர். 107 நாட்கள் நம்பிக்கையுடன் போராடி பேராவூரணி ஏரியை நிமலும் அவரது குழுவினரும் மீட்டெடுத்தனர். அந்த ஏரி 6000 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கியது. விமல் ராகவன் 25,000 மரக்கன்றுகளை டெல்டா பகுதி முழுவதும் நட்டு அந்தப் பகுதியை மீண்டும் பசுமையாக மாற்றினார்.

அவ்வளவு பரப்பளவு கொண்ட ஏரியைத் தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து தூர்வாரி மீட்டெடுத்தது இந்தியாவிலேயே அதுதான் முதல் முறை. பொதுப்பணித் துறையின் தகவல்படி ஆரம்பத்தில் 350 அடியில் இருந்த நிலத்தடி நீர் தூர்வாரிய பின்பு 50 அடியில் வந்தது. தூர்வாரிய பகுதியிலிருந்து எடுத்த மண்ணை ஏரியைச் சுற்றிக் கரை அமைப்பதற்காகப் பயன்படுத்தினார். இதுவரை அவர் உருவாக்கிய எந்த நீர்நிலைகளிலிருந்தும் ஒரு துளி மண் வெளியே போனதில்லை.

அதன்பிறகு தனது ஊரைத் தாண்டி இருக்கும் பகுதிகளிலும் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக ‘மெகா பவுண்டேஷன்’ என்று ஒரு தன்னார்வ அமைப்பைத் தொடங்கினார். அப்படி அவர் மேற்கொண்ட மற்றுமொரு சாதனை, தமிழ்நாட்டில் மிகவும் வறட்சியான மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தின் தண்ணீர் தேவையைப் பூர்த்திசெய்தது.

நிமல், ஒருநாள் ராமநாதபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபொழுது அங்கு சிறியவர்கள், பெரியவர்கள் என்று வயது வித்தியாசம் இன்றி அனைவரும் தண்ணீர் நிரம்பிய குடங்களைத் தள்ளு வண்டியில் வைத்துத் தள்ளிச் செல்வதைக் கண்டார். விசாரித்தபோதுதான் அப்பகுதி மக்கள் தண்ணீர் தேவைக்காகப் பல கிலோ மீட்டர் தூரம் நடந்துசென்று தண்ணீரைக் கொண்டு வருகிறார்கள் என்பது புரிந்தது. உடனே அவரது மெகா ஃபவுண்டேஷன் களத்தில் இறங்கியது.

மங்களநாதன் கண்மாய், கேணிக்கரை, கொட்டகுடி, ஏர்வாடி, பாண்டுகுடி ஆகிய பகுதிகளில் உள்ள கண்மாய்கள் ஆகியவற்றை உள்ளூர் பொதுமக்களின் உதவியுடன் தூர்வாருவதற்காக மெகா ஃபவுண்டேஷன் தேர்ந்தெடுத்தது. இதற்கான நிதியைத் திரட்டுவதற்காக milaap.org என்ற கிரவுட் ஃபண்டிங்க் தளத்தில் பதிவு செய்தார். அந்தத் தளத்திலிருந்து 40 நன்கொடையாளர்கள் நிதி அளிக்க முன் வந்தனர். ஆனாலும் அந்த நிதி போதுமானதாக இல்லை. பின்பு, நண்பன் பவுண்டேஷன், மதர்ஸ் பார் மதர் நேச்சர் போன்ற அமைப்புகளின் உதவியால் ராமநாதபுரத்தில் உள்ள ஏரிகளைத் தூர்வாரினார் நிமல். அன்று அவர் உருவாக்கிய நீர்நிலைகள் இன்றும் அங்கு 4000 விவசாயிகளுக்குப் பயன் அளித்துக்கொண்டிருக்கிறது.

அதன் பிறகு தமிழ்நாடு மட்டுமல்லாமல், தெலுங்கானா, ஆந்திரா, மேற்கு வங்காளம், கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான், ஹரியானா என்று இந்தியாவில் 17 மாநிலங்களில் நீர்நிலைகளை உருவாக்கியுள்ளார் நிமல். இந்தியா மட்டுமல்லாது, இலங்கை, கென்யா போன்ற வெளிநாடுகளிலும் அந்த மக்களின் தண்ணீர்த் தேவையை நிறைவேற்றுவதற்கு நீர்நிலைகளை உருவாக்கியுள்ளார். இன்றும் கென்யா மக்களால் ‘வா முவா’ அதாவது மழையின் மகன் என்று அன்போடு அழைக்கப்படுகிறார் நிமல். இதுவரை 185 நீர்நிலைகளை உருவாக்கிய நிமல், அந்தப் பணிகளில் ஒன்றில்கூட தோல்வியுறவில்லை. 185 நீர்நிலைகளிலும் இன்றும் நீர்வரத்து இருந்துகொண்டிருக்கிறது என்பதைப் பெருமையுடனும் கர்வத்துடனும் கூறுகிறார்.

பெட்டர் இந்தியா நிறுவனம் வழங்கிய ‘இந்தியாஸ் வாட்டர் வாரியர்’ விருது, டைம்ஸ் நெட்வொர்க் நிறுவனம் வழங்கிய ‘அமேசிங் இந்தியன்ஸ்’ விருது ஆகிய விருதுகளை வாங்கி இருந்தாலும், தான் வாங்கிய மிகப் பெரிய விருதாகத் தன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார் நிமல். தான் உருவாக்கிய நீர்நிலைகளைப் பார்வையிடுவது நிமலின் வழக்கம். அப்படி ஒருநாள் ஓர் ஊரில் தான் உருவாக்கிய நீர்நிலைகளைப் பார்வையிடச் சென்றபோது முதியவர் ஒருவர் கையில் ஒரு பையுடன் அவரைப் பார்க்க வந்தார். எதுவும் பேசாமல் பையிலிருந்து ஒரு தட்டையெடுத்து விமலின் கையில் கொடுத்து, அந்தப் பையில் இருந்த நெல்லைத் தட்டில் வைத்துக் கும்பிட்டு ஒரு வார்த்தை சொன்னார், ‘எப்பொழுதும் விவசாயத்தில் நான் அறுவடை செய்யும் முதல் நெல்லைச் சாமிக்கு வைத்துப் படைப்பது வழக்கம். ஆனால் இம்முறை உங்களுக்கு வைத்துப் படைக்கிறோம். காரணம், இங்கு விவசாயம் செய்ய நீர் கொடுத்த நீங்கள்தான் எனக்குச் சாமி’.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *