புனேவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஹடாப்சர் நகரம், மிகவும் பரபரப்பான தொழில் நகரம். எண்ணற்ற தொழில் பூங்காக்களைக் கொண்ட நகரம். புகழ்பெற்ற பூனா போர் இங்குதான் நடைபெற்றது. கோவிட் பெருந்தொற்றுத் தடுப்பு மருந்தான கோவிஷீல்ட் தயாரித்த சீரம் நிறுவனமும் இங்குதான் அமைந்துள்ளது. அந்த ஹடாப்சரின் புறநகர் பகுதியான ஹாவேலியில், புகழ்பெற்ற வசந்த்தாதா சர்க்கரை நிறுவனத்திற்கு அருகில் அமைந்துள்ளது ‘சன்மதி பால் நிகேதன்’ என்ற ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம்.
ஆனந்த் மகாதேவன் என்ற திரைப்பட இயக்குநர், அந்த அம்மையாரைப் பார்ப்பதற்காக அங்கு வந்திருந்தார். ஆதரவற்ற குழந்தைகளால் மாயி (அம்மா) என்று அன்புடன் அழைக்கப்படும் அந்த அம்மையாரின் பெயர் சிந்துதாய் சப்கல். ஆனந்த் மகாதேவன், தான் ஓர் இயக்குநர் என்றும், ஒரு நாளிதழில் உங்களைப் பற்றிய செய்தியைப் படித்தபின் உங்களது வாழ்க்கையைத் திரைப்படமாக எடுக்க விரும்புவதாகவும் சிந்துதாய் சப்கலிடம் தெரிவித்தார். முதலில் சிந்துதாய் இதற்கு மறுப்பு தெரிவித்தார். ஆனால் ஆனந்தின் தொடர் வற்புறுத்தலாலும், அதீத அன்பாலும் ஒப்புக்கொண்டு தன் கதையைச் சொல்லத் தொடங்கினார்.
நவம்பர் 14,1948இல் மகாராஷ்டிரா மாநிலம் வர்தா மாவட்டத்தில் பிறந்தவர் சிந்துதாய் சப்கல். மிகவும் வறுமையான குடும்பம். அவரது தந்தை மாடு மேய்க்கும் தொழிலாளி. சிறுவயதில் இருந்தே படிப்பில் ஆர்வம்கொண்ட சிந்துதாய், வறுமையின் காரணமாக 4ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். தனது 12வது வயதில் 32 வயதான ஸ்ரீஹரி சப்கலுக்குத் திருமணம் செய்துகொடுக்கப்பட்டார். குழந்தை திருமணமே கொடுமை. இதில் அவரது கணவர் மேலும் அவரை அடித்துச் சித்திரவதை செய்தார். காடுகளில் விறகுகளையும், உரத்திற்காக மாடுகளின் சாணத்தையும் சேகரிக்கும் வேலையில் ஈடுபட்டார் சிந்துதாய்.
அந்தக் காலத்தில் அப்பகுதியில் ஏராளமான மாடுகள் இருந்தன. அந்த மாடுகளின் காய்ந்த சாணங்கள் உரத்திற்காகப் பயன்பட்டன. அங்குள்ள மக்கள் சாணங்களைச் சேகரித்து வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் அதற்காக அம்மக்களுக்கு எவ்வித கூலியும் வழங்கப்படவில்லை. வனத்துறையினர் அந்தப் பகுதியின் ஜமீன்தாரின் உதவியோடு அந்தச் சாணங்களை ஏலத்தில் விற்றனர். அந்தப் பணத்தில் ஒரு பங்கு ஜமீன்தாருக்குத் தரப்பட்டது. இதைக் கண்டு மனம் நொந்த சிந்துதாய், இதற்கு ஒரு முடிவுகட்ட எண்ணினார்.
‘நீதி வேண்டும், நீதி வேண்டும். ஏழைகளுக்கு நீதி வேண்டும். கூலி வேண்டும், கூலி வேண்டும். உழைப்பிற்குக் கூலி வேண்டும்’ எனச் சில பெண்களையும், ஏழை மக்களையும் கூட்டிக்கொண்டு வனத்துறைக்கும், ஜமீன்தாருக்கும் எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது போராட்டம் மாவட்ட ஆட்சியரை அந்தக் கிராமத்திற்கு வரவைத்தது. போராட்டத்தின் உண்மைத் தன்மையையும், அவர்களது கோரிக்கையின் நியாயத்தையும் உணர்ந்த மாவட்ட ஆட்சியர், அந்தக் கிராமத்திற்கு ஆதரவாகவும் வனத்துறைக்கும் ஜமீன்தாருக்கும் எதிராகவும் உத்தரவைப் பிறப்பித்தார். வனத்துறையின் மூலம் வந்த வருமானத்தை இழந்து, ஊர் மத்தியில் அவமானப்பட்டார் ஜமீன்தார். இதனால் சிந்துதாய் சப்கலைப் பழிவாங்க எண்ணினார்.
20 வயது வரை 3 குழந்தைகளைப் பெற்றெடுத்த சிந்துதாய், தனது 20ஆவது வயதில் 4வது குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டிருந்தார். அவர் நிறைமாதமாக இருந்தபோதுதான் நடந்தது அந்தக் கொடூரச் சம்பவம். ஜமீன்தாரின் தூண்டுதலின் பேரில் சிந்துதாயின் கணவனான ஸ்ரீஹரி சப்கல், சிந்துதாயைச் சந்தேகப்பட்டு அடித்துத் துன்புறுத்தி மாட்டுத் தொழுவத்தில் எறிந்தான். உயிர்போகும் நிலையில் இருந்த சிந்துதாய் அங்கு ஓர் உயிரை ஈன்றெடுத்தார். மாட்டுத் தொழுவத்தில் பிறந்தது அவரது பெண் குழந்தை. கல்லைப் போன்ற உறுதியான மனம்கொண்ட சிந்துதாய், அருகிலுள்ள கல்லை எடுத்து தன் தொப்புள் கொடியை அறுத்தெறிந்து, பின் மயங்கி விழுந்தார்.
0
கணவனால் விரட்டியடிக்கப்பட்ட சிந்துதாய், கை குழந்தையோடு மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தின் சிகல்தாரா எனும் ஊரில் தஞ்சம் புகுந்தார். பசியின் கொடுமை அவரை வாட்டி எடுத்தது. தனக்காக இல்லாவிட்டாலும் தன் குழந்தையின் பசியைப் போக்கவேண்டும் என்பதற்காகப் பிச்சை எடுக்கத் தொடங்கினார். ரயில் நிலையம், பேருந்து நிலையம், கோயில்கள் எனப் பல இடங்களில் பாடல்கள் பாடி பிச்சை எடுத்தார். ஆனால் அந்தச் சூழ்நிலையிலும் தான் பிச்சை எடுத்த காசை வைத்து அவர் ஒருநாளும் தனியாக உணவு உண்டதே இல்லை.
உடன் இருக்கும் பிச்சைக்காரர்களை அழைத்து அவர்களுக்கும் சேர்த்து உணவு வழங்குவார். அந்தப் பிச்சைக்காரர்கள் அவருக்கு உறவாகவே மாறிப்போனார்கள். அவர்கள்தான் சிந்துதாய்க்குப் பாதுகாப்பாக இருந்தார்கள். பல நேரங்களில் அவர் தனது தற்காப்பிற்காக இரவுப்பொழுதைச் சுடுகாட்டில் கழித்தார். இதனால் சிலர் அவரைப் பேய் என்றுகூடக் கருதினார்கள். அந்தக் கடினமான காலங்கள்தான் சிந்துதாய் சப்கலுக்கு அவரின் வாழ்க்கைக்கான நோக்கத்தை உணர்த்தியது.
பசியின் கொடுமையை நன்கு உணர்ந்த சிந்துதாய், பசியால் வாடும் அனைவருக்கும் உணவளிக்க முடிவெடுத்தார். தான் அதுவரை பிச்சை எடுத்துச் சேமித்த பணத்தில் 1986ஆம் ஆண்டு சிகல்தாராவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கினார். அங்கு ஓர் இல்லம் அமைத்து ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுத்து அவர்களுக்குத் தாயாக முடிவெடுத்தார். இதன் விளைவாக அவர் அனைவராலும் மாயி (அம்மா) என்று அன்போடு அழைக்கப்பட்டார். தனது குழந்தைக்கும், தான் தத்தெடுத்து வளர்க்கும் குழந்தைகளுக்கும் இடையே பாகுபாடு வந்துவிடக்கூடாது என்பதற்காக, தன் சொந்த மகளை பூனேவில் ஓர் ஆசிரமத்திற்குத் தத்துக்கொடுத்தார்.
சிந்துதாய், 1050க்கும் அதிகமான ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்தார். அந்தக் குழந்தைகளில் பலர் மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், முனைவர் பட்டம் பெற்றவர்களாகவும் உள்ளனர். சொந்த மகள் உட்பட இவர் வளர்த்தெடுத்த பலர் இவரைப் போன்றே ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம் அமைத்துப் பல குழந்தைகளை வளர்த்து வருகின்றனர்.
ஒருநாள் 70 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் சிந்துதாயின் ஆசிரமத்திற்கு வந்தார். தன் மங்கிய பார்வையால் சிந்துதாய் சப்கலைத் தேடினார். எதிரே வந்த சிந்துதாயைக் கண்டவுடன் அந்த நபர் அவரது காலில் விழுந்து கதறி அழுதார். தன் வாழ்நாளில் யாரால் அதிகம் கொடுமைப்படுத்தப்பட்டாரோ, தான் நிறைமாதமாக இருந்தபொழுது யாரால் அடித்து மாட்டுத்தொழுவத்தில் தூக்கி எறியப்பட்டாரோ அதே கொடுமைக்கார கணவன்தான் அப்போது அவர் காலில் விழுந்து கதறிக்கொண்டிருந்தது. மனம் வருந்தி வந்த கணவனிடம், தான் இனி ஒரு தாய் மட்டுமே என்று கூறி அவரைத் தன் பிள்ளையாக ஏற்றுக்கொண்டார் சிந்துதாய். அதன்பின் அவர் ஆசிரமத்திற்கு யார் சென்றாலும் அவரது கணவரைத் தன் மூத்த பிள்ளை என்றே அறிமுகப்படுத்தினார்.
தன் கதை முழுவதையும் சிந்துதாய் சொல்லி முடித்தவுடன், சில நிமிடங்கள் அந்த அறை முழுவதும் நிசப்தம் நிலவியது. அவரது கதையை இமைக்காமல் கேட்டுக்கொண்டிருந்த இயக்குநர் ஆனந்த் மகாதேவனின் கண்களில் கண்ணீர் வடிந்துகொண்டிருந்தது. சிந்துதாய் சப்கலின் பாதங்களை மட்டும் தொட்டு வணங்கிவிட்டு எதுவும் சொல்லாமல், சொல்லமுடியாமல் அங்கிருந்து சென்றுவிட்டார் ஆனந்த் மகாதேவன்.
2010ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி ‘மீ சிந்துதாய் சப்கல்’ என்னும் தலைப்பில் சிந்துதாயின் வாழ்க்கை வரலாறு மராத்தி மொழித் திரைப்படமாக வெளியானது. ஆனந்த் மகாதேவன் இயக்கத்தில், தேஜஸ்வினி பண்டிட், ஜோதி சண்டேக்கர் ஆகியோர் நடிப்பில் வெளியான அத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றிபெற்று, 4 தேசிய விருதுகளையும் வென்றது.
2010இல் இங்கிலாந்தின் லண்டன் மாநகரில் நடைபெற்ற 54வது லண்டன் திரைப்பட விழாவில் உலக பிரிமியருக்கான பிரிவில் ‘மீ சிந்துதாய் சப்கல்’ திரைப்படம் திரையிடப்பட்டது. அதன்பின் சிந்துதாயின் புகழ் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆற்றிய தொண்டிற்காக 750க்கும் மேற்பட்ட விருதுகளை அவர் வாங்கியுள்ளார். குறிப்பாக 2013ஆம் ஆண்டு ‘நேஷனல் அவார்ட் ஃபார் ஐகானிக் மதர்’ என்ற விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற முதல்நபர் இவர்தான். மகாராஷ்டிரா மாநில அரசு, குழந்தைகள் மற்றும் பெண்களின் நலன் சார்ந்த சமூகப் பணிக்காக வழங்கும் ‘அஹில்யாபாய் ஹோல்கர் விருதை’ இவருக்கு வழங்கியது. 2012ஆம் ஆண்டு ரிலையன்ஸ் அறக்கட்டளை வழங்கிய ‘ரியல் ஹீரோஸ்’ விருது, 2013ஆம் ஆண்டு சமூக நீதிக்கான ‘அன்னை தெரசா’ விருது, 2017ஆம் ஆண்டு உலக மகளிர் தினத்தன்று இந்தியாவின் அன்றைய குடியரசுத் தலைவர் ராமநாத் கோவிந்த் அவர்கள் வழங்கிய ‘நாரி சக்தி புரஸ்கார்’ விருது போன்ற விருதுகளைப் பெற்ற அவர், 2021ஆம் ஆண்டு சிறந்த சமூக சேவைக்கான பத்மஸ்ரீ விருதையும் பெற்றார்.
தன் வாழ்வில் எண்ணற்ற இன்னல்களையும் கொடுமைகளையும் சந்தித்தாலும் ஆயிரக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகளுக்குத் தாயாக வாழ்ந்த சிந்துதாய் சப்கல், ஜனவரி 4, 2022 அன்று மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் தனது 73வது வயதில் மாரடைப்பால் இந்த உலகத்தைவிட்டு நீங்கினார். மரணம் என்பது அவரது பூத உடலுக்குத்தான் அன்றி அவரது புகழுக்கும் அவரது தொண்டுக்கும் அல்ல.
(தொடரும்)

